Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

முக்கடன்கள், ஐவகை வேள்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள்

இந்து சமயங்கள் தனிமனிதனை முன்னிருத்துகின்றன என்பதையும், தனிமனித வளர்ச்சி மற்றும் சுதந்திரத்துக்கு அவை மிக அதிக முக்கியத்துவம் தருகின்றன என்பதையும் சென்ற மூன்று பகுதிகளில் எழுதியிருந்தேன்.
இந்தப் பகுதியிலும் இதே பொருளைத் தொடர்ந்து பேசப்போகிறோம்- ஆனால், இதில் இந்து சமயங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் உரிய மூன்று அடிப்படை கோட்பாடுகளைப் பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு மனிதனும் செலுத்த வேண்டிய முக்கடன்கள், நிறைவேற்ற வேண்டிய ஐந்து யாகங்கள், மேற்கொள்ள வேண்டிய தீர்த்த யாத்திரைகள்- கடன்கள், யாகங்கள், யாத்திரைகள்- இவையே அந்த மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்.
பல மதங்களிலும் யாத்திரை செல்லும் வழக்கம் உண்டு. ஆனால் எவற்றைப் புனிதமான இடங்களாகக் கருதி யாத்திரை செல்கிறார்கள் என்பதுதான் இந்து சமயங்களில் மேற்கொள்ளப்படும் யாத்திரையில் உள்ள தனித்தன்மை. பொதுவாக, பல மதங்களிலும் அந்த மதத்தைத் தோற்றுவித்தவரோடு தொடர்புடைய இடங்கள், அல்லது அந்த மதத்தில் பிரதான முக்கியத்துவம் கொண்ட வழிபாட்டுத் தலங்கள்தான் யாத்திரை செல்லும் இடங்களாக இருக்கும். ஆனால் இந்து சம்பிரதாயங்களில் பல்வகைப்பட்ட ஏராளமான இடங்கள் புனிதமாக கருதப்படுகின்றன. அது மட்டுமல்ல, நதிகள், மலைகள், விலங்குகள் என்று இயற்கையில் உள்ளவையும் புனிதமாக வழிபடப்படுகின்றன.
குறிப்பிட்ட சில புனித நதிகளில் நீராடுவது, தொலைவில் உள்ள மலைக்குச் சென்று கிரிவலம் வருவது போன்ற விஷயங்களும் இந்து மரபில் திருத்தல யாத்திரைகளாகக் கருதப்படுகின்றன என்பது விஷயம் தெரியாதவர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

ருண த்ரயம்

ஒவ்வொரு மனிதனும் ரிஷிகளுக்கு, கடவுளர்களுக்கு, மூதாதையர்களுக்கு என்று மூன்று கடன்களைச் செலுத்தவேண்டிய கடமையோடு பிறக்கிறான் என்பது இந்து கலாசாரத்தின் பண்டைய நம்பிக்கைகளில் ஒன்று. வேதங்களின் அங்கமான தைத்திரிய சம்ஹிதை இப்படிச் சொல்கிறது-

“எது பிறக்கிறதோ, அது பிறக்கும்போது மூன்று கடன்களைக் கொண்டதாய் பிறக்கிறது, ரிஷிகளுக்கு பிரமச்சரியத்தையும், தெய்வங்களுக்கு யாகங்களையும் பித்ருக்களுக்கு வம்சத்தையும் அளித்தாக வேண்டும்”

(தைத்திரிய சம்ஹிதை, VI. 3. 10. 5). பண்பாட்டுக் கல்வி பெறுதல், யாகங்கள் செய்தல், குழந்தை பெற்றுக் கொள்ளுதல் முதலானவை ஆன்மீக கடமைகளாகக் கருதப்படுகின்றன.
இந்த நம்பிக்கை பரவலாக முக்கடன்கள் அல்லது ருண த்ரயங்கள் என்று அறியப்பட்டாலும், மகாபாரதம் நான்காம் கடன் என்று இன்னொன்றும் சொல்கிறது. அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து, அன்புடன் இருந்துதான் நாம் அவற்றுக்குச் செலுத்த வேண்டிய கடனைத் தீர்க்க முடியும் (மகாபாரதம், ஆதி பர்வம், 120. 17-20). மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் அதிதிகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய கடன் என்று ஐந்தாவதாக ஒன்றும் சேர்க்கிறது (37.17)
இரண்டாம் கடனும் மூன்றாம் கடனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கல்வி பயின்று முடித்து குறிப்பிட்ட ஒரு வயதுக்கு வரும் மாணவன் யாகங்கள் செய்தாக வேண்டும், இந்த யாகங்களில் சிலவற்றில் அவனது மனைவியும் உடன் நிற்க வேண்டும். ரிஷிகளுக்கு பிரமச்சரியத்தை அளித்து, தெய்வங்களுக்கு யாகங்களை அளிக்கும் பருவத்தை எட்டும் மாணவன் திருமணம் செய்து கொள்வது அவசியமாகிறது. அதன்பின்னரே, மூன்றாம் கடனான, “பித்ருக்களுக்கு வம்சத்தையும் அளிப்பதை” அவன் நிறைவேற்ற முடியும். இந்து சம்பிரதாயங்களில் மூத்தோருக்கு மரியாதை அளிப்பது, முன்னோர்களுக்கு பிண்டம் அளிப்பது போன்றவையும் அவசியமாகக் கருதப்படுகின்றன. எனவே இவற்றைச் செய்பவனுக்கு நேரடி வாரிசு இருக்க வேண்டும்.
மேலும், இந்தக் மூன்று கடன்களுக்கு சமய நோக்கமற்ற வேறொரு காரணமும் இருக்கக்கூடும் – குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பைத் தன் தந்தையிடமிருந்து மகனோ மகளோ ஏற்றுக்கொள்ளும் வகையில், அவனது மகன் மற்றும் மகளுக்குப் பயிற்சி அளித்து உதவுவதற்காகவும் இந்த சம்பிரதாயங்கள் நடைமுறையில் இருக்கலாம்.
இரண்டாம் கடனும் மூன்றாம் கடனும் பொதுவாகச் சில விமரிசனங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆசிரம அமைப்பில் முதல் நிலையான மாணவ பருவத்திலிருந்து நான்காம் நிலையான சந்நியாச பருவத்துக்கு நேரடியாகச் செல்லும் சுதந்திரத்தை வலியுறுத்துபவர்களே இந்த விமரிசகர்கள். ஆசாரிய சங்கரரது நிலைப்பாடும் இதுவே. ஆனால், இதை மறுப்பவர்கள், முன்னோர்களுக்கும் தெய்வங்களுக்கும் உரிய கடனைச் செலுத்தாதவர்கள் மோட்சத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று சொல்கின்றனர். எனவே மிக இளம் வயதில் துறவு மேற்கொள்ளும் பாலசந்நியாசம் சாஸ்திர விரோதமானது என்பது இவர்களது நிலைப்பாடு.

பஞ்சமகா யக்ஞங்கள்

இந்து சமய பண்பாட்டின்படி தொல்காலம் தொட்டே தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்படும் ஐந்து கடமைகளும் பஞ்சமகா யக்ஞங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் யாகங்கள் என்று சொல்ல முடியாது, இவை அனைத்தும் அக்னி வளர்த்து ஆகுதி அளிப்பவை அல்ல. ஆனாலும் அவை யக்ஞங்கள் என்று அழைக்கப்பட காரணம், இந்து மதத்தைச் சார்ந்தவனின் வாழ்வில் அவற்றுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதுதான்.
இவை முறையே

  1. பிரம்ம யக்ஞம் – பிரம்மத்துக்கு அளிக்கப்படும் யாகம்
  2. தேவ யக்ஞம் – தெய்வங்களுக்கு அளிக்கப்படும் யாகம்
  3. பூத யக்ஞம் – அனைத்து உயிர்களுக்கும் அளிக்கப்படும் யாகம்,
  4. பித்ரு யக்ஞம் – மூதாதையர்களுக்கு அளிக்கப்படும் யாகம்,
  5. மானுஷ்ய யக்ஞம் – மனிதர்களுக்கு அளிக்கப்படும் யாகம்

என்று ஐவகைப்படும்.
வேதங்கள் முதல் நவீன சாஸ்திரங்கள் வரை பஞ்சமகா யக்ஞங்கள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் செய்ய வேண்டிய நாற்பது சம்ஸ்காரங்களில் கௌதம ரிஷியும் மனுவும் இவற்றையும் சேர்த்துக் கொண்டிருப்பது பஞ்ச மகா யக்ஞங்களின் தாக்கத்தை உணர்த்துகிறது.
பிற யாகங்களிலிருந்து தினமும் செய்யப்பட வேண்டிய இந்த பஞ்ச மகாயாகங்கள் எப்படி வேறுபடுகின்றன என்றால், இந்த ஐந்தையும் செய்வதில் எந்த பலனும் இல்லை, மிகவும் துவக்க நிலையில் உள்ள உயிர் முதல் சக மனிதர்கள், மூதாதையர்கள், தெய்வங்கள், பரப்பிரம்மம் என்று உலகில் உள்ள அனைத்தையும் நேசிப்பதன் வெளிப்பாடாகவே இவை அமைந்திருக்கின்றன என்பதுதான்.
பிரம்ம யக்ஞம் என்பது, சமய நூல்களைக் கற்பது, பிறருக்குக் கற்றுத் தருவது, புனித மந்திரங்களைச் சொல்வது போன்ற சமயச் சடங்குகள். தர்ப்பணமும் ஒரு பிரம்ம யக்ஞம் என்று சிலர் சொல்கின்றனர்.
தேவ யக்ஞம் என்பது பிரம்மத்தை பல்வேறு தெய்வ வடிவில் வழிபடுவதும், ஹோமம் வளர்த்து வழிபடுவதும் என்று சொல்லப்படுகிறது.
பூத யக்ஞம் என்பது நாய்கள், காகங்கள், எறும்புகள், பூச்சிகள் முதலானவற்றோடு உணவைப் பகிர்ந்து கொள்ளுதல்.
பித்ரு யக்ஞம் என்பது மறைந்தவர்களுக்கு ஆகுதி அளித்தல். தர்ப்பணம், பிண்ட தானம், ஸ்ரார்த்தம் முதலானவை பித்ரு யக்ஞங்கள்.
மனுஷ்ய யக்ஞம் என்பது அதிதிகளை வரவேற்றல். வீட்டைவிட்டு வெளியே சென்று அதிதிகளை வரவேற்று, அவர்களுக்கு அன்னம், தண்ணீர். ஆசனம் முதலியவை அளித்து கௌரவித்து, ஓய்வெடுக்கவும் உறங்கவும் தக்க இடம் கொடுத்து, அவர்களை அருகில் நின்று உபசரித்து, அவர்களோடு சற்று தொலைவு வரை சென்று வழியனுப்புவது என்று மனுஷ்ய யக்ஞம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்து சமயத்தில் தீர்த்த யாத்திரைகள்

பக்தியும் சிரத்தையும் உள்ள ஒருவன் தன் சமயத்தில் விதிக்கப்பட்டுள்ள புனித தலமொன்றுக்கு மேற்கொள்ளும் பயணம் யாத்திரை என்று சொல்லப்படுகிறது. உலகில் அனைத்து சமயங்களிலும் உள்ளவர்கள் புனிதம் என்று கருதப்படும் இடங்களுக்கு தங்கள் வாழ்நாளில் பல யாத்திரைகள் மேற்கொள்கின்றனர். கிருத்தவர்கள் ஜெருசலேமுக்கும் பௌத்தர்கள் கயைக்கும் செல்ல வேண்டும் என்று பல நியதிகளும் உண்டு. இதில் இந்து சமயமும் விலக்கல்ல. ஆனால் இங்கு என்ன விசேஷம் என்றால் இந்து சமயங்களில் ஓர் இந்து சென்று வர வேண்டிய திருத்தலங்கள் அல்லது யாத்திரைத் தளங்கள் ஏராளம் உண்டு. இவற்றில் பல எந்த ஒரு தெய்வம் அல்லது புனிதருடனும் தொடர்பு கொண்டதாக இல்லாமல் இருக்கலாம். ஒவ்வொரு தலத்துக்கும் தனக்கே உரிய தெய்வங்கள், தொல்கதைகள் இருப்பதே வழக்கு. இத்தகைய யாத்திரைகள் தீர்த்த யாத்திரைகள் என்று அழைக்கப்படுகின்றன. தீர்த்தம் என்பது திருத்தலம் என்றும் பொருட்படும்.

தீர்த்த யாத்திரையின் வரலாறும் பொருளும்

சன்னிதிகள், கோவில்கள், இறைஞானிகளின் அவதார தலங்கள் போன்றவற்றைத் தவிர மலைகள், வனங்கள், நதிகளும் இந்து சமயத்தில் புனிதமாகக் கருதப்படுகின்றன. எனவே அவையும் திருத்தலங்களாக வழிபடப்படுகின்றன.
மிகவும் பழமை வாய்ந்த வேதங்கள் தொட்டு பல்வேறு புனித தலங்கள், நதிகள், வனங்கள் மற்றும் மலைகள் இந்து சமய நூல்களில் விவரிக்கப்படுகின்றன. தீர்த்தம் என்று சொன்னால், புனிதமான ஒரு நதி அல்லது கடல் அல்லது குளம் என்று நீர்நிலையை ஒட்டிய திருத்தலம் என்று பொருள்படும். க்ஷேத்ரம் வேறு தீர்த்தம் வேறு. க்ஷேத்ராடனம் என்பது நீர்நிலையை ஒட்டியதாக இல்லாத வேறொரு திருத்தலத்துக்கு மேற்கொள்ளப்படும் யாத்திரை. தீர்த்தங்களும் க்ஷேத்ரங்களும் வேத காலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான தர்ம சாஸ்திரங்களில் விவரிக்கப்படுகின்றன.
ரிக் வேதத்தில் புனித நதிகள் குறிப்பிடப்படுகின்றன. உடலின் நோய்கள் மட்டுமல்லாமல் பாபங்களையும் அவை சுத்திகரிப்பதாய் போற்றப்படுகின்றன. சரஸ்வதி, சரயு, சிந்து என்ற மூன்று நதிகளும் தெய்வீகத் தன்மை கொண்ட தாய்கள் என்று வேதங்களில் வழிபடப்படுகின்றன.
தெய்வங்கள் அனைத்தும் நீர்நிலைகளில் இருப்பதாக தைத்திரிய சம்ஹிதை குறிப்பிடுகிறது. புண்ணியங்களை மட்டுமல்லாமல் மகிழ்ச்சியையும் நதிகள் அளிக்கின்றன என்று அதர்வ வேதம் சொல்கிறது.
நேரடியாக தீர்த்தங்களையும் க்ஷேத்ரங்களையும் பேசாத போதும், தர்ம சாஸ்திரங்கள் மலைகள், வனங்கள், நதிகளைப் புனிதம் என்று போற்றுகின்றன. கௌதம, பௌதாயன, வசிஷ்ட தர்ம சாஸ்திரங்கள் எல்லா மலைகள், நதிகள், குளங்கள், ஆசிரமங்கள், கோசாலைகள், கோயில்களும் பாபத்தைப் போக்கும் என்று சொல்கின்றன. ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், பிரம்மாண்ட புராணம் இவ்விரண்டும் புனித மலைகள் என்று நீண்ட ஒரு பட்டியலிடுகின்றன. வேதங்களும் புராணங்களும் புனித வனங்களைக் குறிப்பிடுகின்றன. இவை தவிர, தீர்த்தங்களையும் க்ஷேத்ரங்களையும் பேசும் புராண இலக்கியமும் அதன் பின்வந்த இலக்கியங்களும் திவ்யதேசங்கள், கோவில்கள் என்று யாத்திரை மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தலங்கள் எவை, அந்த அளவு பொருட்படுத்தப்பட வேண்டாதவை எவை என்று விரிவாக விவாதிக்கின்றன.
மேற்கண்ட விஷயங்களைப் பார்க்கும்போது, பண்டைக்காலம் தொட்டே இந்துக்கள் தீர்த்த யாத்திரைகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. வாழ்நாளில் எவ்வளவு தீர்த்த யாத்திரை மேற்கொள்ள இயலுமோ அவ்வளவு தலங்களைத் தேர்ந்தெடுத்து பயணிக்கும்படி ஒவ்வொரு இந்துவுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. சாதி, தேசம் வர்ண வேறுபாடு கடந்து அனைவரும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ள முடியும்.
பல சாஸ்திரங்கள் தீர்த்த யாத்திரை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை விவரிக்கின்றன. தனியாகவோ அல்லது குடும்பத்தாருடனோ அல்லது நண்பர்களுடனோ யாத்திரை மேற்கொள்பவர்கள், பயணம் கிளம்புவதற்கு முந்தைய தினம் உண்ணா நோன்பிருந்து, புலன் நாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் நீண்ட நேரம் கவனம் செலுத்தி மனதை நெறிபடுத்த வேண்டும். இவையெல்லாம் யாத்திரையின் அனைத்து பயன்களையும் பெற விரும்புபவர்களுக்குச் சொல்லப்படுபவை. புதிய ஒரு அந்நிய இடத்தில் எதிர்கொள்ள வேண்டிய பல்வகைப்பட்ட சூழ்நிலைகளை சமநிலை குலையாமல் அணுக உதவுவதை இந்த வழிமுறைகள் நோக்கமாகக் கொண்டிருக்கக்கூடும்.
யாத்திரைத் தலத்தை அடைந்ததும் பின்வரும் செயல்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது- ஸ்நானம் அல்லது குளியல், ஜபம் அல்லது நாமசங்கீர்த்தனம் – உபதேசம் பெற்ற மந்திரத்தையோ இஷ்டதெய்வத்தின் பெயரையோ ஜெபித்தல், ஹோமம் அல்லது அக்னிக்கு ஆகுதியளித்தல், முண்டனம் அல்லது மொட்டை போடுதல், ஸ்ராத்தம் அல்லது மறைந்த மூதாதையர் மற்றும் நண்பர்களுக்கு வழிபாடு செலுத்தல், தானம் அல்லது ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவி செய்தல்.
இவற்றுள் மொட்டை போட்டுக் கொள்வதையும் மூதாதையர் வழிபாட்டையும் தன்விருப்பத்துக்கு விட்டுவிடலாம் என்று சில சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. சில சாஸ்திரங்கள் ஹோமம் பற்றி பேசுவதேயில்லை. நவீன யாத்திரிகர்கள், மரணத்தைத் தவிர பிற சமயங்களில் இந்த மூன்றையும் தவிர்த்து விடுகின்றனர்.
யாத்திரை முடிந்து வீடு திரும்பும்வரை ஒருவன் தன் எண்ணம், செயல், வாக்கு முதலானவற்றில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஜெபங்களை முறை தவறாமல் தொடர வேண்டும். கோவில்களில் வழிபட்ட அத்தனை சாதுக்களையும் தெய்வங்களையும் அங்கு அறிந்துகொண்ட தலபுராணங்களையும் இறை உரைகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தீர்த்த யாத்திரையின் நோக்கம்

பாபங்களும் தீவினைகளும் நீங்கும் என்பதும், புண்ணியம் சேரும் என்பதுமே தீர்த்த யாத்திரை மேற்கொள்வதற்கான மிகப்பெரும் காரணமாக இருக்கிறது. உடலையும் உள்ளத்தையும் சுத்திகரித்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியடைவது தீர்த்த யாத்திரை மேற்கொள்வதற்கான அடுத்த காரணமாக இருக்கிறது.
பண்டைக்காலங்களில் மிகவும் மோசமாகப் பிளவுபட்டிருந்த அரசுகளாக இருந்த தேசத்தை ஒன்றுபட்ட தேசமாகக் காண உதவிய பல காரணங்களில் தீர்த்தயாத்திரைகளும் ஒன்றாக இருந்திருக்கலாம். நவீன காலத்திலும்கூட வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போன்ற பிழைபுரிதல்களைக் களைய உதவும் கிரியா ஊக்கிகளாக இவைச் செயல்படுகின்றன.
இயல்பாகவே நாம் தீர்த்த யாத்திரையில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். தங்களையே மையமாகக் கொண்ட குறுகிய வட்டத்துக்கு வெளியே செல்ல, குறுங்குழு மனப்பான்மையைக் கடந்து நோக்க உதவும் தூண்டுதலை தீர்த்த யாத்திரைகள் அளிக்கின்றன. தங்களுக்குத் தெரிந்ததைக் காட்டிலும் பல உண்மைகள் உலகில் இருக்கின்றன என்ற விரிவான பார்வை கிட்டுகிறது. நடைமுறை அனுபவத்தையொட்டி தம் குழந்தைகளுக்கு அற மதிப்பீடுகளையும் ஆன்மீக விழுமியங்களையும் கற்றுக் கொடுக்க பெற்றோர்களுக்கும் தீர்த்த யாத்திரைகள் உதவுகின்றன.
புண்ணியம் பெற மட்டுமல்ல, பிராயசித்தமாகவும் தீர்த்த யாத்திரைகளை சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. பழைய காலத்தில், பாரத் பரிகிரமா என்ற பெயரில் இந்தியாவெங்கும் விரவியுள்ள எண்ணற்ற புண்ணிய தலங்களுக்கு பாதயாத்திரை செல்வது பொதுவான வழக்கமாக இருந்திருக்கிறது. சரியான உணர்வோடும் பக்தியுணர்வோடும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. மந்திரங்கள், தீர்த்தங்கள், குரு, தெய்வம், ஜோதிடன் மருத்துவன் ஆகிய விஷயங்களை ஒருவன் எந்த மனநிலையில் அணுகுகிறானோ அதுவே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று ஒரு பழமொழியும் இந்தியாவில் உண்டு.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற திருத்தலங்களில் பொதுப் பட்டியல் இது

திருத்தலம் மூலவர் இடம்
சோம்நாத் சோம்நாத் மகாதேவ் குஜராத்
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆந்திர பிரதேசம்
உஜ்ஜையின் மகாகாலேஷ்வர் மத்திய பிரதேசம்
ஓம்காரேஷ்வர் ஓம்காரேஷ்வர் மத்திய பிரதேசம்
கேதர்நாத் கேதாரேஷ்வர் உத்தர்கண்ட்
பிரஹ்ம்பூர் பீமேஷவ்ர் குஜராத்
வாரணாசி விஸ்வநாதர் உத்தர பிரதேசம்
நாசிக் த்ரயம்பகேஸ்வரர் மகாராஷ்டிரா
பார்லி ஸ்ரீவைத்யநாதர் ஆந்திர பிரதேசம்
துவாரகா ஸ்ரீகிருஷ்ணர் குஜராத்
துவாரகா ஸ்ரீநாகேசவரர் குஜராத்
ராமேஸ்வரம் இராமநாதர் தமிழ் நாடு
எல்லோரா குஷ்மேஷ்வர் மகாராஷ்டிரா
சிதம்பரம் நடராஜர் தமிழ் நாடு
திருச்சிராப்பள்ளி ஜம்புலிங்கேஸ்வரர் தமிழ் நாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தமிழ் நாடு
ஸ்ரீ காலஹஸ்தி காளத்தீஸ்வரர் ஆந்திர பிரதேசம்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் தமிழ் நாடு
அயோத்யா ஸ்ரீராமர் உத்தர பிரதேசம்
ஹரித்வார் ஸ்ரீகங்கா மா உத்தரகண்ட்
மதுரா ஸ்ரீகிருஷ்ணர் உத்தர பிரதேசம்
அமர்நாத் அமரேஸ்வரர் காஷ்மீர்
புவனேஸ்வர் லிங்கராஜர் ஒரிசா
தஞ்சாவூர் பிருஹதேச்வரர் தமிழ் நாடு
கும்பகோணம் கும்பேஸ்வரர் தமிழ் நாடு
சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி தமிழ் நாடு
சென்னை கபாலீஸ்வரர் தமிழ் நாடு
திருநெல்வேலி நெல்லையப்பர் தமிழ் நாடு
பிள்ளையார்பட்டி பிள்ளையார் தமிழ் நாடு
திருச்சி உச்சிப்பிள்ளையார், தாயுமானவர் தமிழ் நாடு
திருவையாறு பஞ்சநதீஸ்வரர் தமிழ் நாடு
திருவாரூர் தியாகராஜர் தமிழ் நாடு
காஞ்சிபுரம் காமாஷி அம்மன் தமிழ் நாடு
திருநாராயணபுரம் (மேலக்கோட்டை) திருநாராயணர் தமிழ் நாடு
சோளிங்கர் யோக நரசிம்மசுவாமி தமிழ் நாடு
கன்னியாகுமரி பகவதி அம்மன் தமிழ் நாடு
விஜயவாடா கனகதுர்கா ஆந்திர பிரதேசம்
கிர்னார் தத்தாத்ரேயர் குஜராத்
கிர்னார் கோரக்நாதர் குஜராத்
கிர்னார் அம்பா தேவி குஜராத்
கோலாப்பூர் மகாலட்சுமி மகாராஷ்டிரா
நைமிசாரணியம் லலிதா தேவி உத்தர பிரதேசம்
அமர்கண்டக் நர்மதா தேவி சத்தீஸ்கர்
விஜயநகர் விருபாகஷர் கர்நாடகா
சித்திரகூடம் ஸ்ரீராமர் மத்திய பிரதேசம்
பிருந்தாவனம் ஸ்ரீகிருஷ்ணர் உத்தர பிரதேசம்
குருக்ஷேத்ரம் ஸ்தானேஷ்வர் மகாதேவ் ஹரியானா
அலகாபாத்/ பிரயாகை பேணி மாதவ் உத்தர பிரதேசம்
கயை கதாதரர் பீகார்
பூரி ஸ்ரீ ஜகன்னாதர் ஒரிசா
மதுரை மீனாட்சியம்மன் தமிழ்நாடு
பந்தர்பூர் ஸ்ரீ விட்டலர் மகாராஷ்டிரா
சிருங்கேரி சாரதா தேவி கர்நாடகா
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் தமிழ் நாடு
பத்ரிநாத் பத்ரிநாராயணர் உத்தராகண்ட்
புஷ்கர் ஸ்ரீ பிரம்மர் ராஜஸ்தான்
பத்ராசலம் ஸ்ரீராமர் ஆந்திரபிரதேசம்
திருப்பதி ஸ்ரீ வேங்கடேஸ்வரர் ஆந்திரபிரதேசம்
குவஹாத்தி காமாக்ஷி அசாம்
திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் கேரளம்
கொல்கத்தா மகாகாளி மேற்கு வங்கம்
நாத் த்வாரா ஸ்ரீநாதர் ராஜஸ்தான்
மவுண்ட் அபு காளிகா தேவி ராஜஸ்தான்
மிதிலா சீதா தேவி பீகார்
ஆலந்தி ஞானேஸ்வர் மகாராஷ்டிரா
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கேரளம்
உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கேரளம்
பழனி முருகன் தமிழ் நாடு
சுவாமிமலை சுவாமிநாதன் தமிழ் நாடு
மன்னார்குடி ராஜகோபால சுவாமி தமிழ் நாடு
சுசீந்திரம் ஆஞ்சநேயர் தமிழ் நாடு
சபரிமலை ஐயப்பன் கேரளம்
மும்பை மும்பா தேவி மகாராஷ்டிரா
மும்பை சித்தி விநாயகர் மகாராஷ்டிரா
திருச்சூர் வடக்கநாதர் கேரளம்
கோட்டயம் ஏட்டுமானூர் கேரளம்
எர்ணாகுளம் பூர்ணத்ரயிஷர் கேரளம்
வேளூர் மகாதேவர் கேரளம்
கொல்லூர் மூகாம்பிகை கர்நாடகா
பங்களூரு கவி கங்காதேச்வர் கர்நாடகா
அகோபிலம் ஸ்ரீ நரசிம்மர் ஆந்திர பிரதேசம்
அன்னவரம் சத்யநாராயனர் ஆந்திர பிரதேசம்
அனகபள்ளி கோடிலிங்கேஸ்வரர் ஆந்திர பிரதேசம்
விசாகபட்டினம் வராகலட்சுமி நரசிம்மச்வாமி ஆந்திர பிரதேசம்
கொலாபா பல்லால விநாயகர் மகாராஷ்டிரம்
புனே பீமஷங்கர் மகாராஷ்டிரம்
ராம்டெக், நாக்பூர் ஸ்ரீ ராமர் மகாராஷ்டிரம்
ஜெய்பூர் கோவிந்த தேவ்ஜி ராஜஸ்தான்
உதய்பூர் ஏகலிங்நாத் ராஜஸ்தான்
அம்ரிட்ஸர் லட்சுமிநாராயணர் பஞ்சாப்
பாட்டியாலா காளி தேவி பஞ்சாப்
ஜம்மு வைஷ்ணோதேவி ஜம்மு காஷ்மீர்
ஜம்மு ரகுநாத்ஜி ஜம்மு காஷ்மீர்
காங்க்ரா ஜ்வாலாமுகி ஜம்மு காஷ்மீர்
ருத்ரபிரயாகை திரியுக்நாராயண் உத்தரகண்ட் 

பாரத புனித நதிகள்

நதி மூலம்
கங்கை கங்கோத்ரிi
யமுனை யமுனோத்ரி
சரஸ்வதி ஷிவாலிக் மலைத்தொடர்கள், இமாலயம்
சிந்து கைலாஷ், இமாலயம்
கோதாவரி பிரம்மகிரி, திரயம்பகேச்வரர்
நர்மதை அமர்கண்டக்
காவிரி தலைக்காவிரி, குடகு
தாமிரபரணி / பொருணை அகஸ்தியர் கூடம், தமிழ்நாடு
தபதி சதாபூர் மலைத்தொடர்கள், விந்திய மலைகள்
கிருஷ்ணா சாகிய மலைகள், மகாபலேஷ்வர்
மகாநதி, சிகாவா, ராய்பூர், மத்திய பிரதேசம்
சரயு குமான் மலைகள்
பிரம்மபுத்ரா மானசரோவர், திபெத்

 
 
முக்கடன்கள், ஐவ்வகை வேள்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட நூல்களைப் படித்துத் பயன் பெறலாம்-

  1. P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.
  2. Kashinatha Shastri Agase (Ed.) Taittirya Samhita, 9 vols, 1914, Pune: Anandasrama Sanskrit Series.
  3. S. Sukthankar, et.al. (Eds.) Mahabharata, 1959, Pune: Bhandarkar Oriental Research Institute.
Exit mobile version