Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

கவிதைகள் – அம்ருதா ப்ரீதம்

என் விலாசம்
இன்று,
என் வீட்டின் மேலிருந்து
இலக்கத்தை அகற்றிவிட்டேன்
தெருவின் பெயரையும் சுத்தமாய் அழித்து விட்டேன்
உன்னை என்னிடம் அழைத்து வரக்கூடிய
பெயர்பலகைகளையும் வழிகாட்டிகளையும் நீக்கிவிட்டேன்.
இருந்தாலும், என்னை நீ கண்டுபிடித்தே தீரவேண்டுமெனில்
ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள
ஒவ்வொரு கதவையும் தட்டு
ஒவ்வொரு நாட்டிலும்.
ஒரு சுதந்திரமான ஆன்மாவை எங்கு கண்டாலும்
என்னக் கண்டுவிட்டாயென அறிந்துகொள்.
இது ஒரு சாபம்
​இது ஒரு வரமும் கூட.​
 

ஒரு வெற்றிடம்

இரண்டே நாடுகள் இருந்தன
ஒன்று எங்களை நாடுகடத்தியது
இன்னொன்றை, நாங்கள் ஒதுக்கிவிட்டோம்.
வெற்றுவானத்திற்கு கீழ்
நான் மழையில் நடுங்கிக்கொண்டு நின்றிருந்தேன்,
அவன் நொறுங்கிபோனபோது.
பின், ஒரே மடக்கில்
வருடங்களின் துயரத்தை முழுங்கி
அவன் என்னிடம் வந்து, கையைப் பற்றினான்
வா, என்றான், ஒரு வெற்றிடம் உண்டு
நாம் அங்கே அடைக்கலம் பெறலாம்
ஒரு சின்ன இடைவெளி
உண்மைக்கும் பொய்மைக்கும்  நடுவில்.

 
சுய தரிசனம்
என் படுக்கை காத்திருக்கிறது உனக்காக
வா, உன் ஆடைகளைக் களை
பாதணிகளையும்
அவற்றை அந்த முக்காலி மேல் வை.
இப்போது உன் உடலையும் களைந்துவிடு
பயப்படாதே
ஒவ்வொர் இடத்துக்குமுண்டு அதனதன் விதிகள்.

Exit mobile version