Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

சிந்தனைச்சோதனைகள்

ஒரு புறம் Large Hadron Collider, International Space Station போன்ற பல பில்லியன் டாலர்களை விழுங்கிவிட்டு மெல்ல எழுந்து நிற்கும் சோதனைகளும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காசு பணம் ரொம்பத்தேவை இல்லாத வெறும் சிந்தனையை மட்டுமே உபயோகிக்கும் பல சுவையான சோதனைகளும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை இந்த தொடரில் கொஞ்சம் அலசுவோம். நீங்கள் நிச்சயம் சில சோதனைகளைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தொடப்போகும் அத்தனை சோதனைகளையும் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்காதவரை, சில நாட்களாவது உங்கள் தூக்கத்தை கெடுத்த புண்ணியத்தை நான் தேடிக்கொள்வேன்.

தள்ளுவண்டி சோதனை
ஒரு ரயில் தடம். அதில் உருண்டோடி வந்து கொண்டிருக்கிறது ஒரு டிராலி வண்டி. வண்டியில் ஓட்டுனர் யாரும் இல்லை, பயணிகளும் இல்லை. அது பாட்டுக்கு எப்படியோ ப்ரேக் கழண்டு போய் ஓடி வந்து கொண்டு இருக்கிறது. அருகிலிருக்கும் கட்டுப்பாட்டு அறையில் தனியாக பணி புரியும் நீங்கள் இதைப்பார்த்து விடுகிறீர்கள். இது என்ன ரகளை? இதை நிறுத்தியாக வேண்டுமே என்று நீங்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது, வண்டி ஓடி வந்து கொண்டிருக்கும் பாதையில் காது கேட்காத ஐந்து பேர் அதே திசையில் நடந்து போய் கொண்டிருப்பதையும் பார்க்கிறீர்கள். நீங்கள் ஏதாவது செய்து தொலைக்காவிட்டால், வண்டி இன்னும் ஒரு நிமிடத்தில் அவர்கள் மீது மோதி அந்த ஐவரையும் கொல்லப்போவது உறுதி.

நல்ல வேளையாக உங்களிடம் அந்த வண்டியின் ரயில் தடப்பாதையை மாற்றி விடும் ஒரு லீவர் (Lever) அல்லது ஸ்விட்ச் இருக்கிறது. அப்பாடா என்று ஒரு பெருமூச்சுடன் அதை தட்டிவிடப்போகும்போது அந்த மாற்றுப்பாதையில் காது கேட்காத ஒரே ஒரு மனிதர் நடந்து போய்க்கொண்டிருப்பதை பார்க்கிறீர்கள். எனவே ஸ்விட்ச்சை தட்டினால் வண்டி மாற்றுப்பாதைக்கு திரும்பி ஓடும்போது அந்த ஒருவர் கொல்லப்படுவது நிச்சயம். ஒரு சில வினாடிகளுக்குள் நீங்கள் முடிவு எடுத்து செயல்பட்டாக வேண்டும். வண்டியின் பாதையை மாற்றி விடுவீர்களா மாட்டீர்களா?

இந்தக்கேள்வியை உலகின் பல பகுதிகளில் பல்வேறு பின்னணிகள் கொண்ட ஆயிரக்கணக்கானவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பதில்சொன்ன எல்லோரும் (சுமார் தொண்ணூறு சதவீதத்தினர்), நிச்சயம் ஸ்விட்ச்சை தட்டுவேன், ஐந்து பேருக்கு பதில் ஒருவர் கொல்லப்படுவது மேல் என்றே பதில் அளித்திருக்கிறார்கள்.

1967 வாக்கில் அருகிலுள்ள படத்தில் காணப்படும் பிலிபா ஃபுட் (Philippa Foot) உருவாக்கிய இந்தக்கதையில் சிறிய மாறுபாடுகளை ஏற்படுத்தி கேள்வியை திரும்ப கேட்பது சுலபம். இந்தவகையில், ஸ்விட்ச்சை தட்டி பாதையை மாற்றி ஒருவரை பலி கொடுக்கும் வாய்ப்பை எடுத்துவிட்டு, அதற்கு பதில் அந்த வண்டிக்கும் நடந்து போய் கொண்டிருக்கும் ஐவருக்கும் இடையே உள்ள ஒரு பாலத்தில் நீங்கள் நின்று இதைப்பார்த்துக்கொண்டு இருப்பதாக கொள்வோம். இப்போது வண்டியை நிறுத்தி அந்த ஐவரையும் காப்பாற்ற உங்களுக்கு இருக்கும் ஒரே வழி பாலத்தின் மேல் உட்கார்ந்து சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரு குண்டு மனிதரை பிடித்து அந்த வண்டியின் பாதையில் தள்ளி விடுவதுதான். அவர் பாலத்தில் இருந்து உங்களால் தள்ளி விடப்பட்டு அந்த ரயில் பாதையில் விழும்போது வண்டியால் இடித்துக்கொல்லப்படுவார். ஆனால் அந்த நிகழ்வே ஒரு தடையாக மாறி அந்த வண்டியை மேலே ஓட விடாமல் நிறுத்தி முன்னால் போய் கொண்டு இருக்கும் ஐவரையும் காப்பாற்றிவிடும். நீங்கள் அந்த மனிதரைப்பிடித்து வண்டியின் பாதையில் தள்ளி விடுவீர்களா?

கேள்வி இப்படி மாறும்போது பெரும்பாலோருக்கு தயக்கம் வந்து விடுகிறது. பதிலளிப்பவர்கள் ஆணோ பெண்ணோ, வயதானவர்களோ வயது குறைந்தவர்களோ, பணக்காரர்களோ ஏழைகளோ, படித்தவர்களோ படிக்காதவர்களோ, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களோ இல்லாதவர்களோ, அமெரிக்காவில் வாழ்பவர்களோ ஆப்பிரிக்க பழங்குடியினரோ, எல்லோரும் பொதுவாக பாலத்தில் உட்கார்ந்து இருப்பவரை பிடித்து தள்ள மாட்டேன் என்றுதான் சொல்கிறார்கள். வெறும் லாஜிக்கை மட்டும் கொண்டு யோசித்தால், இரு நிலைமைகளிலும் ஒருவரைக்கொன்று ஐவரை காப்பாற்றுகிறோம். அப்படி இருக்கும்போது இந்த மன மாற்றம் ஏன்? ஆய்வில் பங்குகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தவர்களிடம் ஏன் இந்த மனமாற்றம் என்று கேட்டால் பெரும்பாலருக்கு ஏன் என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவர்கள் கொடுத்த விடைகளில் அவர்களுக்கு சந்தேகமோ மனத்தடுமாற்றமோ ஏதும் இல்லை. தத்துவ நிபுணர்கள் முதல் கதையில் ஐந்து பேரோ அல்லது ஒருவரோ கொல்லப்படுவது நிச்சயம் என்பதுதான் காரணம் என்கிறார்கள். இரண்டாவது கதையில், பாலத்தின் மேல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மனிதருக்கும் நிகழப்போகும் விபத்துக்கும் எந்த சம்பந்தமும் முதலில் இல்லை. நீங்கள் பிடித்து தள்ளும்போதுதான் அந்த தொடர்பு வருகிறது. எனவே ஐந்து பேரை காப்பாற்றுவோம் என்றாலும் விபத்துக்கு தொடர்பில்லாத ஒருவரை அதற்காக பலி கொடுப்பது சரியல்ல என்று பொதுவாக எல்லோரும் நினைப்பதாக தெரிகிறது.

இது ஏதோ கவைக்கு உதவாத கதை என்று நினைக்க வேண்டாம். நிஜ வாழ்வில் பலமுறை பல விதங்களில் இந்தக்கேள்வி தலையை காட்டும் வழக்கம் உண்டு. உதாரணமாக அமெரிக்கா ஜப்பானின் மீது அணு குண்டை வீசியபோது அதற்கு சொல்லப்பட்ட காரணம் அப்படி ஒரிரு ஜப்பானிய ஊர்களை அழிப்பதன் மூலம் மதம் பிடித்து அலைந்த ஜப்பானை ஒடுக்கி உலகையே காப்பது என்பதுதான். அந்த வாதம் சரியா தவறா என்று இங்கே விவாதிக்க வரவில்லை. இந்த சிந்தனைச்சோதனைக்கும் உலகில் நிகழும் மிகப்பெரிய சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன். அந்த அணு குண்டு வீச்சு ட்ராலியை மாற்றுப்பாதைக்கு அனுப்புவதற்கு சமமாக சொல்லப்பட்டது. அதே குண்டை ஜப்பானுக்கு பதில் இரண்டாம் உலகப்போருக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத இன்னொரு நாட்டின் மீது வீசி, ஜப்பானுக்கு பயத்தை உண்டாக்கி போரை நிறுத்த முயல்வது பாலத்தின் மீது வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் மனிதரை தள்ளி விடுவதற்குச்சமம். முடிவு ஒரே விதமாய் அமைந்தாலும் அதை எப்படி சென்றடைகிறோம் என்பதும் முக்கியம் என்ற கொள்கையை இது வலியுறுத்துகிறது. இன்னொரு உதாரணம் இதயமாற்று, சிறுநீரகமாற்று (இன்னும் உங்களுக்கு பிடித்த மூன்று பாகங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்) அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் இறந்து விடுவார்கள் என்ற நிலையில் உள்ள ஐந்து நோயாளிகளைக்காப்பாற்ற நல்ல உடல் நிலையில் இருக்கும் ஒருவரைக்கொன்று அவரது உடல் பாகங்களை பொருத்தி ஐந்து நோயாளிகளை பிழைக்க வைப்பது நியாயமா? இதனால்தான் அந்த காலத்தில் வந்த நாயகன் படத்து “நாலு பேருக்கு நல்லது செஞ்சா, அதற்காக செய்யற எந்த காரியமும் நல்லதுதான்” வசனத்தை எல்லா சமயங்களிலும் ஒப்புக்கொள்ள முடிவதில்லை.

இந்த ட்ராலி கதையை இன்னும் பலவிதங்களில் மாற்றலாம். ஐந்து பேருக்கு பதில் இருவரையோ அல்லது ஒரே ஒருவரையோ அந்த முதல் பாதையில் நடக்க வைக்கலாம். வளர்ந்த ஆண்களுக்கு பதில் பெண்களையோ குழந்தைகளையோ ஒரு பாதையில் மட்டுமோ அல்லது இரு பாதைகளிலுமோ மாற்றலாம். சூழ்நிலைகளை மாற்றும்போது. கிடைக்கும் பதில்கள் மாறினாலும், பதில் சொல்பவர்கள் எடுக்கும் முடிவின் விகிதாசாரம் எல்லா நாட்டு, மதத்து, இன, மொழி, வயது மக்களிடையேயும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இந்த ஒற்றுமையை சுட்டிக்காட்டி, மனித சமூகத்திற்கு தர்மத்தை போதிக்க மதங்களோ, கடவுள் கண்ணைக்குத்தும் பயமோ அவசியம் இல்லை, நமக்குள் எது நியாயம் என்கிற தெளிவு இயற்க்கையாகவே இருக்கிறது என்ற ஒரு கருத்தையும் முன் வைத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே இந்த கதையைச்சொல்லி உங்களுக்கு கிடைக்கும் பதில்களை நீங்கள் அட்டவனைப்படுத்தி பார்க்கலாம்.

ஹைன்ஸின் திண்டாட்டம்
ஹைன்ஸ் ஒரு சாதாரணத்தொழிலாளி. வருடம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறான். அவன் மனைவிக்கு ஒரு வினோதமான புற்றுநோய். மிகவும் அவதிப்படுகிறாள். ஒன்றும் செய்யாவிட்டால் இரண்டு மாதங்களில் இறப்பது உறுதி என்கிறார் டாக்டர். ஊர் உலகம் பூராவும் தேடியதில் திருமதி ஹைன்ஸ்ஸை முற்றிலும் குணப்படுத்தவல்ல புதிய மருந்தொன்று இருப்பது தெரிய வருகிறது. மருந்தின் விலையோ பத்து லட்சம். ஹைன்ஸ் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

1. மருந்தின் விலை அவ்வளவு அதிகமாகவும் ஹைன்ஸின் சம்பளம் அவ்வளவு குறைவாகவும் இருப்பது கடவுள் விதித்த விதி. எனவே திருமதி ஹைன்ஸை சாக விட வேண்டியதுதான். முடிந்த அளவு அவள் உயிரோடு இருக்கும் வரை சிரமப்படாமல் மட்டும் ஹைன்ஸ் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. தினமும் மருந்து கம்பெனியிடம் விலையை குறைக்கச்சொல்லி மன்றாட வேண்டும்.

3. பாங்கிலிருந்து கடன் வாங்கி மருந்தை வாங்க வேண்டும்.

4. மனைவிக்கு உயிராபத்து என்ற நிலையில் அந்த மருந்தை பெற ஹைன்ஸுக்கு வேண்டிய உரிமை இருக்கிறது. எனவே எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் மருந்து கம்பெனியின் கதவை உடைத்து உள்ளே சென்று மருந்தை திருடிக்கொண்டு வந்து விட வேண்டும். பின்னால் சிறை தண்டனை கிடைத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5. திருட வேண்டியதுதான். அதற்கப்புறம் சிறை தண்டனையாவது, ஒன்றாவது? தப்பித்து எங்காவது ஓடி விட வேண்டும்.

6. இந்த வழிகள் எதுவும் சரியில்லை. வேறு ஏதாவது வழி ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும்?

லாரன்ஸ் கோல்பெர்க் என்ற அமெரிக்கர் கேட்ட இந்த கேள்விக்கு உங்கள் விடை ஒன்றிலிருந்து ஐந்தை நோக்கி வரவர நீங்கள் சம்பிரதாயமான தார்மீக சிந்தனைகளில் இருந்து விடுபட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். சட்டத்தை மதிக்காமல் நாம் எல்லோரும் நம் இஷ்டத்திற்கு எப்போதும் நடப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல என்றாலும், குழந்தைப்பருவத்திலிருந்து முதியவர்களாக வளரும்போது நாம் ஒன்றுக்குப்பின் ஒன்றாக, விதிகளை மதிப்பது, அடுத்தவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது, ஊரோடு ஒத்து வாழ்வது, சட்டங்களை எதிர்க்க வேண்டிய அவசியம் நேர்ந்தாலும் மனிதகௌரவத்தை மதித்து நடப்பது போன்ற நிலைகளை மனதளவில் வளர்ந்தடைகிறோம் என்பது கோல்பெர்கின் கருத்து.

சூழ்நிலையை கொஞ்சம் மாற்றி மருந்து தேவைப்படுவது ஆளை சாகடிக்கும் புற்றுநோய்க்கு அல்ல, அவருக்கு அடிக்கடி வரும் தலைவலியை போக்குவதற்கு என்றால்? அதையும் தாண்டி திருமதி ஹைன்ஸ்சுக்கு வியாதி ஒன்றும் இல்லை. இந்த புதிய மருந்து அவரை சாதாரண மூடில் இருந்து ஒரு நல்ல குஷி மூடிற்க்கு மாற்றி வைத்திருக்கும் என்றால்? நீங்கள், “இதென்ன கேள்வி? அத்யாவசிய தேவைகளுக்கும் பொழுதுப்போக்கு தேவைகளுக்கும் வித்யாசம் இல்லையா?”, என்று கேட்கலாம். உதாரணமாக பசியை போக்க ஒரு ஏழை சாப்பாடு திருடுவதை சுலபமாக மன்னிக்கலாம் ஆனால் பணம் உள்ள ஒருவர் தன்னிடம் நாலு கார்கள் இருக்கும்போது இன்னொரு காரை நூறு கார் வைத்திருக்கும் இன்னொரு அதிபணக்காரரிடமிருந்து திருடினால் கூட மன்னிக்க முடியாது என்பதல்லவா உலக நியதி? இந்தச்சிந்தனை சிதறலுக்கு சமீபத்திய உதாரணம் ஒன்று உண்டு. அமெரிக்க சுகாதார காப்பீடுகள் (Healthcare Insurance Policies) பெண்களுக்கு கருத்தடை மாத்திரை வழங்க வேண்டுமா இல்லையா என்றொரு விவாதம் நடந்து கொண்டிருந்தது. தேவை இல்லை என்று சில நிறுவனங்கள் வாதாட, வழங்க வேண்டும், அது பெண்களின் ஆரோக்யத்திற்கு அவசியம் என்று வாதிட்ட பெண்கள் பலர், இதே காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ஆட்சேபனையும் எழுப்பாமல் ஆண்களுக்கு மட்டும் பல வருடங்களாக வையாக்ரா (Viagra) வழங்கி வருவதை சுட்டி காட்டி ஏன் இந்த பாரபட்சம் என்று வினவினார்கள். இது தாராளவாத Vs பழமைவாத.(Liberal Vs Conservative) விவாதம் என்று நினைக்கத்தோன்றினாலும் கூட, இந்தக்கேள்விகளுக்கும் ஹைன்ஸின் திண்டாட்டத்துக்கும் ஒரு தொடர்பு இருப்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

சுகாதார காப்பீடுகள் வைத்திருக்கும்போது மனிதர்கள் இந்தத்திண்டாட்டத்தின் எதிர்முனையில் மாட்டிக்கொண்டு தடுமாறுவதும் உண்டு. வாழ்வின் இறுதிக்காலத்தில் மருத்துவமனையில் நெருங்கிய உறவினர் ஒருவர் சிகிச்சை பெறும்பொழுது, காப்பீடு அல்லது பண வசதி இருப்பதால் உலகில் இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களையும் உபயோகித்து, வாழ்வின் தரம் (Quality of Life) குறைந்தாலும் அவர் வாழ்நாட்களை எப்படியாவது நீட்டிக்க முயற்சிப்பது சரியா அல்லது முடிந்த அளவு நோயாளியை வலிகள் ஏதும் இல்லாமல் சுகமாக வைத்திருந்து,   அமைதியாக இறக்க விடுவது சரியா என்பது இன்று பல மருத்துவமனைகளில் தினமும் எதிர்கொள்ளப்படும் கேள்வி. உயில் எழுதுவதையே கூட சற்று அமங்கலமான காரியமாக நம் சமுதாயத்தில் பலர் நினைத்தாலும், அதற்கு மேல் ஒரு படி போய், நம்மால் சுயமாக மருத்துவ முடிவுகள் எடுக்கமுடியாத நிலையில், இந்த சிகிச்சைகள் அளிக்கலாம், இந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கக்கூடாது (உதாரணமாக, DNR: Do Not Resuscitate) என்ற சுயவிருப்பங்களை விளக்கமாக முன்கூட்டியே வாழ்வுயில் (Living Will) ஒன்றில் நாம் எழுதி வைப்பது நம் உறவினர்களை இத்தகைய திண்டாட்டங்களில் இருந்து காப்பாற்றும்.

(தொடரும்)

படங்கள்: நன்றி நியூயார்க் டைம்ஸ்

Exit mobile version