Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

கவிதைகள்

திரும்பத் திரும்ப

ஒட்டி நின்றிருந்த லாரியின்
சக்கரத்தை விட
ஓரடி உயரம் குறைவான

பள்ளி சீருடை
பாதி கசங்கிய நிலையில்
காலணிகள் ஏதுமின்றி

சாலையைக் கடக்க
காத்திருந்த சிறுவன்

கடந்து கொண்டிருக்கிறான்
ஒவ்வொரு சிக்னலிலும்.

oOo

அகத்தின் அழகு

இன்னொரு நாளின்
தொடக்கம்.

எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.

இவனின் கை அசைப்பிற்கு
எதிர்வினை ஏதுமின்றி
எதிர்ப்பட்ட முகமொன்றில்
அத்தனை இறுக்கம்.

உற்றுப் பார்க்கையில்
சற்று முன் இறக்கி வைத்த
என் முகம்.

oOo

விடுதலை

விட்டு விடுதலையாகி
வீழ்ந்து கிடந்த
சிட்டுக் குருவியின்
சிறகொன்றில்
தத்திக்கொண்டிருந்தது
ஒரு ஈ.
இப்படி ஒரு தொடக்கம்
எந்த ஒரு
நாளுக்கும்
கவிதைக்கும்
இல்லாமல் போகக்
கடவதாக.

oOo

Exit mobile version