நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன் மிதவை என்னும் நாவலில் தான் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வேலை தேடி பம்பாய் வந்த கதையைச் சொல்கிறார். அதில் தான் சந்திக்க நேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வெளி வேஷங்களையும், சாதி உணர்வுகளையும் பற்றி கொஞ்சம் விரிவாகவே எவ்வித தயக்கமின்றி கேலியுடன் தான் எழுதுகிறார்.
கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களில் தான் (அதைக் கதை என்பதா, இல்லை சிறுகதை என்பதா, அல்லது குறிப்புகள் என்பதா, எந்த வகைப்படுத்தலுக்கும் இயைவதாக, ஆனால் அதே சமயம் முழுவதும் அந்த வகைப்படுத்தலுக்கு அடங்காததாக இருப்பவை), ஒவ்வாத உணர்வுகள் என்ற தொகுப்பில் அவற்றைப் பார்க்கலாம், அவருடைய நடையும், எழுத்து பெறும் வடிவமும், கிண்டலும், சுய எள்ளலும் தனி ரகமானவை. தன்னைச் சுற்றியிருக்கும் வாழ்வை, நடை முறையை, மதிப்புகளை, சமூகத்தை அவர் செய்யும் கிண்டல், அதில் அவரது சுய எள்ளலும் சேர்ந்தது, எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும் ரகம். இன்றைய தமிழ் சமூகத்தின் மதிப்புகளின் அது எதையெல்லாம் தன் வெற்றியாகக் கருதி வியக்கிறதோ அந்த அலங்கோலங்கள், கீழ்த்தரங்கள், ஆபாசங்களையெல்லாம் மதிப்புகள், வாழ்க்கைத் தர உயர்வு, வெற்றி என்று சொல்லிப் பெருமைப் பட்டூக் கொள்வது, தமிழ் மொழியையே கொச்சைப்படுத்துவதும் ஆபாசமாக்குவதும் ஆகும். கோபிகிருஷ்ணன் தனக்கென தனி ஒரு நடையையும், எழுத்து வடிவையும், உருவாக்கிக்கொண்டுள்ளார், தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் பாணியில் சமூகத்தைக் கிண்டல் செய்வதற்கு. அவர் போல ஒரு நடை, எழுத்து பாணி, கிண்டல், அவரதேயான ஒரு பார்வை கொண்ட இன்னொரு எழுத்தாளர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரைப் பற்றிய எதுவும் அவரது தனித்துவத்தையே சொல்லும்.
அந்தப் பத்திரிகை தன் பாராட்டுக்கும் இத்தகைய எதிர்வினை வரும் என்று எதிர்பார்த்திருக்குமா என்ன?
அம்பை அதிகம் எழுதுபவரில்லை. கிட்டத்தட்ட பத்து வருடகால இடைவெளிக்குப் பிறகு “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்று அவரது சிறுகதைகளின் தொகுப்பு வெளிவந்தது. அவரது எழுத்து சிறுகதை என்ற வடிவத்தில் தான் இருக்கும் என்பதில்லை. Fable, tale, அல்லது ஒரு சாதாரண கதையாடல் என்று பல வடிவங்களிலும் அவரது திறமையைக் காட்டும் தொகுப்பு இது. அத்தோடு அவரது பலதரப்பட்ட அனுபவங்களையும், நிகழ்விடங்களையும், அமெரிக்க நகரம் ஒன்றின் லத்தீன் அமெரிக்க குடியிருப்பிலிருந்து, தமிழ் நாட்டின் தென்கோடியில் இருக்கும் ஒரு கிராமம் வரை, காணலாம். இத்தொகுப்பின் கதைகளில் ஒரு கலவையாகத் தான் நாம் சந்திக்கும் மனிதர்களும். இருப்பார்கள். இன்றைய தமிழில் அம்பை ஒருவர் தான் ஒரு உண்மையான பெண்ணிய எழுத்தாளர். அவருடைய சீற்றம் அவர் உதட்டிலிருந்து உதிர்வதில்லை. அவரது ரத்த நாளங்களில் ஓடும் ஒன்று. அவர் ஒருத்தரிடம் தான் பெண்ணிய சீற்றம், அனுபவமாக வெளிப்பட்டு கலையாக மாற்றம் பெற்றுள்ளது.
சம்பத் தன் இடைவெளி நாவலில், தன்னை அறியாதே தன்னை நெருங்கி வந்து கொண்டிருந்த மரணத்தை எழுதியதாகவே தோன்றுகிறது. மரணத்தைப் பற்றிய தன் அறிவு பூர்மான சிந்தனைகளுக்கு ஒரு இலக்கிய வடிவம் சிருஷ்டித்துக்கொண்டிருக்கும் போது, பல வருடங்களாக தன் மனத்தில் அலையாடிக்கொண்டிருந்த மரண பய பிரமைகளுக்கும் ஒரு உருக்கொடுத்து விட்டதாகவே தோன்றுகிறது. அந்நாட்களில், மரணம் பற்றிய சிந்தனைகளும் டாஸ்டாவ்ய்ஸ்கியும் தான் அவர் மனத்தையும் சிந்தனைகளையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. இதன் காரணமாகவே அவர் நண்பர்களிடையே கேலிக்கும் ஆளானார். அது அவருக்குத் தெரிந்தே இருந்தாலும் அவர் அது பற்றிக் கவலைப் பட்டவரில்லை. இடைவெளி நாவலே அந்நாட்களில் அவரது மரணத்தைப் பற்றிய பிரமைகளுக்கும், அறிவார்த்த அலசலுக்கும் ஆன இலக்கியப் பதிவு தான். இந்நாவலின் அச்சுப் பிரதிகளை சரிபார்த்து அனுப்பிய சில நாட்களுக்குள் இரத்தக் கொதிப்பில் மூளை நாளங்கள் வெடித்து மரணமடைந்தார். இடைவெளி தான் அவரது முதலும் கடைசியுமான எழுத்தும், நாவலும்.
லா.ச.ராமாம்ருதம் ஒரு தனி ரகமான எழுத்தாளர். அவருடைய தனக்குள்ளேயே சுருங்கி வாழும் பழம் சம்பிரதாயங்கள் கொண்ட ஹிந்து குடும்பம். மதப் பற்றும், கடவுள் பக்தியும், கொண்ட குடும்பம். அவர்கள் எப்போதும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மன இறுக்கத்துடன் வாழ்பவர்கள். தங்களையும் காயப்படுத்திக்கோண்டு சுற்றி இருப்போரையும் காயப் படுத்தும் குணம் கொண்டவர்கள். கோபம், அன்பு, குடும்பப் பாசம் எல்லாவற்றிலும் அவர்கள் அறிந்தது எப்போதுமே முறுக்கேறிய தீவிரம் தான். அது கொடூரமாக, பயங்கரமாக வெடித்துச் சிதறும் தீவிரம். லா.ச.ராமம்ருதம் நம் காலத்திய நவீன எழுத்தாளர் தானா, அல்லது புராணங்களையும் மாயைகளையும் சிருஷ்டிப்பவரா என்று திகைக்கத் தோன்றும். பாற்கடல் அவர் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் பாத்திரங்களைப் பற்றிய குறிப்புகளையும் கொண்ட தொகுப்பு தான். அவரது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுக்கு நீளும் உறவினரைப் பற்றியவை இந்த சம்பவங்களும் குறிப்புகளும். இதை அவரது சுய சரிதக் கோவை என்றும் சொல்லலாம். அல்லது சிறுகதைத் தொகுப்பு என்றும் சொல்லலாம். அவர் கதைகளாக வெளியிட்டுள்ள வற்றின் சம்பவங்களையும், பாத்திரங்களையும் மனதில்கொண்டு அவற்றின் மூலம் எங்கு என்று தேடிச்சென்றால், அந்த மூலங்களை பாற்கடலில் நாம் சந்திக்கலாம். இம்மனிதர்களும், அவர்கள் குணங்களும் சம்பவங்களும் தான் அவரது கதைகளின் சிருஷ்டிக்கு ஆதார உத்வேகிகளாக இருந்துள்ளனர். ஆக பாற்கடலை அவரது கதைகளுக்கான மூலமாகவும் துணை நூலாகவும் கொள்ளலாம்.
அடுத்து நாடகம் பற்றிச் சொல்லவேண்டும். இதில் நம் கவனத்தை வேண்டுபவை, எழுபதுகளில் பார்த்தவற்றின் தொடர்ச்சியைத் தான் எண்பதுகளிலும் பார்க்கிறோம். இவற்றை நாடகப் பிரதி என்று சொல்வதற்கு பதில் மேடைத் தயாரிப்புக் குறிப்புகள் என்று சொல்ல வேண்டும். எதுவும் அதன் முழுமையில் நாடகப் பிரதியாகக் காணவில்லை. ந. முத்துசாமியின் நற்றுணையப்பன் (அல்லது கடவுள்) சில அடிகள் முன்னெடுத்த ஒன்று. இருப்பினும் தன்னில் முழுமை கொண்ட ஒரு நாடக இலக்கியத்தை மேடையேறும் முன்னே ஒரு அனுபவத்தை வாசகனுக்குத் தரும் ஒன்றை இனித்தான் நாம் காணவேண்டும்.
கவிதை என்று எடுத்துக்கொண்டால், நிறைய கவிதைகள் எழுதப்படுகின்றன. இந்த மலையென குவிந்துள்ளது நம்மைத் திகைத்து மூச்சு முட்ட வைக்கின்றது. ஆனால் இந்தக் குவியலில் பெரும் பகுதி கவிதை என்ற தகுதி பெறுபவை அல்ல. சொல்ல வந்ததிலும் சொல்லும் முறையிலும், இரண்டிலும் தான். காவி உடை ஒரு மனிதனை சன்னியாசியாகவோ ஞானியாகவோ ஆக்குமானால், துண்டிக்கப்பட்ட வாக்கியங்களும், சிறு சிறு சொற்கூட்ட வரி அடுக்குகளும் நிச்சயம் கவிதைகளாகும் தான். அறுபதுகளின் சிருஷ்டிப் பெருக்கு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வடிந்து விட்டதாகவே தோன்றுகிறது.
விமர்சனம் பக்கம் திரும்பினால், இப்போது பெரும்பாலோரைப் பிடித்து ஆட்டி வரும், பவிஷும், ஃபாஷனுமான ஸ்ட்ரக்சுரலிஸ்ம்- போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸம் பற்றித் தான் பேசவேண்டும். இலக்கிய விமர்சனம், எண்பதுகளில் கல்வியாளர்களால் அபகரிக்கப்பட்டு தன் சுய வாழ்வை இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். சில வருஷங்களுக்கு முன் பல்கலைக் கழகங்களில் மொழி இயல் மாணவர்களாகவோ, லெக்சரர்களாகவோ இருந்தவர்கள் எல்லாம் இப்போது மொழீயியல் வல்லுனர்களாக, பேராசிரியர்களாக பதவி பெற்றுவிட்டவர்கள். அவர்கள் சிறிது கால சுய முன்னேற்றப் பயிற்சிக்குப் பிறகோ, மொழியியலில் புழங்கிய காரணத்தாலோ தம்மைத் தாமே ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளாக, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளாக உயர்த்திக்கொண்டு விட்டார்கள். ஆக இப்போது இலக்கிய விமர்சன உலகு, இந்தமொழியியல் வல்லுனர்களின் இறுகிய கைப்பிடியில் அகப்பட்டுக்கொண்டுள்ளது. ஸ்ட்ரக்சுரலிஸ்ட்டுகள். போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் எல்லாம் விமர்சனம் என்று சொல்லிக் கொட்டும் துறைசார்ந்த வார்த்தைகளின் புகைமூட்டத்தால், அது மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இது ஒரு வித இரைச்சல் பெருகி, சூழல்கெட்ட நிலை. (noise pollution) பயங்கர விளைவு தான். முன்னால் தம் இயல்பான அழகுணர்வு பிறப்பித்த விமர்சனம் கிட்டத்தட்ட கடாசி எறியப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த ஸ்ட்ரக்சுரலிஸ்ட் வகையினரின் சித்தாந்த பூர்வமான, பாடபுத்தகப் பாங்கில் எழுதப்பட்ட விளக்க நூல்களும், பழங்கால விருத்தி உரை போன்ற கட்டுரைகளும் கொஞ்சம் வெளிவந்துள்ளன. இந்த விளக்க உரைகள் கிட்டத்தட்ட பத்து வருட காலம் தொடர்ந்து வந்தாலும், ஸ்ட்ரக்சுரலிஸ் மதத்திற்கு புதிதாக தம்மை ஞானஸ்னானம் செய்து கொண்டவர்களின் விளக்கங்களில் புதிதாக மதம் மாறியவர்களின் ஆவேசம் கொதித்துத் தளும்பிய போதிலும் அவற்றில் எதுவும் முன்னர் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றின் இலக்கிய மதிப்பிற்கு ஏதும் ஸ்ட்ரக்சுரலிஸ்ட் சேர்க்கை என புதிய பரிமாணத்தையோ மதிப்பையோ தந்துவிடவுமில்லை, தம் ஸ்ட்ரக்சுரலிஸ்ட் அலசலால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் அதன் பீடத்திலிருந்து இறக்கிவிடவுமில்லை. எந்த ஒரு புதிய படைப்பின் இலக்கியத் தகுதியையும் தம் ஸ்ட்ரக்சுரலிஸ்ட் அணுகலால் தீர்மானித்து விடவுமில்லை. இவர்களுடைய ஸ்ட்ரக்சுரலிஸ்ட் கணினியிலிருந்து ஏற்கனவே ப்ரொக்ராம் செய்யப்பட்ட கட்டுடைப்புக்குப் பின் கணினி வெளித்தள்ளும் அலசல் முடிவுகளின் அச்சுப் பிரதி, அந்தப் படைப்பின் அழகியல் மதிப்பிட்டைத் தந்ததுமில்லை. ஆக, இந்த ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் போடும் இரைச்சலும் புகை மூட்டமும் எதற்காக, என்று தெரிவதில்லை.
எனவே இந்த வீணான அயற்சி தரும் வேலையை விட்டு, பொருள் தரும் அர்த்தம் தரும் பக்கம் திரும்பினால், நம் பார்வைக்குப் படுவன இரண்டு முக்கியமான முயற்சிகள். ஒன்று ஞானியின் மார்க்ஸிஸமும் தமிழ் இலக்கியமும், என்னும் இலக்கிய விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு. இரண்டாவது எஸ்.வி. ராஜதுரையின் ரஷ்ய புரட்சியின் இலக்கிய சாட்சியம். இரண்டு பேருமே ,பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தாம் கொண்டிருந்த இறுகிய சித்தாந்த நிலைப்பாட்டிலிருந்து விலகி வெகு தூரம் வந்து விட்டனர் ஞானி முந்தைய இலக்கிய வாழ்வில் தாம் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி தயாரித்துத் தந்திருந்த பழம் கம்யூனிஸ்ட் கோட்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக உதறிவிட்டு இப்போது அவ்வப்போது தானே தேவைக்கேற்ப தன் சொந்த தயாரிப்பிலான மார்க்ஸிஸ இலக்கியக் கோட்பாட்டைக் கொண்டுள்ளார். இதற்கு அவரைத்தவிர வேறு எங்கும் அங்கீகாரம் கிடையாது. இதில் அவரது தாராளமனமும் சிந்தையும் செயல் படுவது வாஸ்தவம் தான். அதில் தமிழ் இலக்கியத்தின் ஆரம்ப கால பக்தி யுக இலக்கியத்தையும், வேதகாலத்திலிருந்து தொடங்கி, இன்றைய ஜே. கிருஷ்ணமூர்த்திவரை அனைத்து இந்திய சிந்தனை வளம் முழுதையும் அவரது மார்க்ஸீய இலக்கிய பார்வை தன்னுள் அடக்கிக் கொள்கிறது. இதை நான் கேலியாகச் சொல்லவில்லை. நிச்சயமாக இல்லை. அவருடைய மார்க்சிஸமும் தமிழ் இலக்கியமும் என்ற இலக்கிய விமர்சனக் கட்டுரைத் தொகுப்பில் மங்கலான தெளிவற்ற சிந்தனைப் போக்குகளும் உள் முரண்களும் நிறைந்திருக்கக் காணலாம். இச்சிந்தனைகளிலும் பார்வைகளிலும் தெரியும் ஞானியின் தாராளமன சிந்தனைப் போக்கை நான் மதிக்கிறேன். அது தாங்கிவரும் மார்க்ஸிஸ் லேபிளையும் மீறி.
ஆனால் எஸ் வி ராஜதுரை, கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரர் என்று எனக்கு நினைப்பு. ஆனால் அவர் கட்சி அலுவலக கட்டிடத்துக்கு வெளியே தான், ஆனால் அதன் சுற்றுச் சுவருக்குள்ளேயே நடை பழகிக்கொண்டிருப்பார். அவ்வப் போது கட்சி அறிவிக்கும் பார்வைக்கும் நிலைப்பாட்டிற்கும் தன் ஒப்புதலையும் பிரகடனம் செய்துகொண்டிருப்பார். கட்சியின் கோட்டைச் சுவர்கள் சரியத் தொடங்கின. மெதுவாகவும், பின்னர் வேகமாகவும், படிப் படியாகவும். அந்தச் சரிவின் ஒவ்வொரு படிநிலையிலும் ராஜதுரை கட்சியுடனான தன் மாறுபட்ட பார்வையை, தன் தளரும் சிந்தனையை இன்னும் கொஞ்சம் தளரவிட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் சோஷலிஸ் கோட்பாட்டில் தன்க்குள்ள தளரா நம்பிக்கையையும் வெளிப்படுத்துவார். எந்த சமயத்தில் அவர் கட்சிக் கோட்பாட்டைத் தான் சொல்கிறாரா இல்லை தன் விலகிய சிந்தனை நிலையைச் சொல்கிறாரா என்று சொல்வது கடினம். அவருக்கே அது கடினமாகத் தான் இருக்க வேண்டும். ஆக, இருவருக்குமே அவரவரது தமது தீவிர சோஷலிஸ் கொள்கை விஸ்வாசத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்கள் விஸ்வசிப்பதாகச் சொல்லும் சித்தாந்தமோ அவ்வப்போது மாறும், மாறி இறுகிய நிலை கொள்ளும். . ஆனால் பரிதாபம், அவர்களது போப் தன் பதவியைத் துறந்து விட்டார். வாடிகனோ காலியாகி சிதைந்தும் உருக்குலைந்தும் விட்டது. ஆனால் இப்போதும் ராஜதுரை மிகுந்த உறுதிப்பாட்டுடன் பிரகடனம் செய்வது, மார்க்ஸிஸம் என்றைக்கும் மாறாத அழியா நிரந்த உண்மை என்றும், அதன் போஷகர்கள் தான் அந்த சித்தாந்தத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் என்றும் பிரகடனம் செய்வார். அடுத்தடுத்து வெளிவரும் அவரது புத்தகங்கள் அவரது மாறிவரும் சித்தாந்த பார்வையை பதித்துச் செல்கின்றன். அவரது சமீபத்திய புத்தகமான, ரஷ்ய புரட்சி – இலக்கிய சாட்சியம், கம்யூனிஸ்ட் ரஷ்யாவில் அரசுக் கட்டுப்பாட்டை மீறி மாறுபட்ட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் நாடு கடத்தப்பட்டார்கள், அல்லது சிறைபிடிக்கப்பட்டு சைபீரியாவின் வதை முகாம்களில் மிகுந்த காலத்தில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்கள் அல்லது இந்த மண்ணிலிருந்தே நிரந்தரமாக நீக்கப் பட்டார்கள். அவர்களது வாழ்க்கையும் எழுத்துக்களூம் பற்றியது தான் ரஷ்ய புரட்சி – இலக்கிய சாட்சியம். எஸ் வி ராஜதுரை கூரியமதியும், நுட்பமான அலசல் பார்வையும், நிறைந்த படிப்பும் கொண்டவர் தான் சந்தேகமில்லை. ஆனால் இவை அத்தனையும், மனித சரித்திரத்தின் கால வோட்டத்தில் மார்க்ஸிஸ சிந்தனையும் ஒரு கட்டத்தில் வரம்பு கட்டிய நிலை தான் என்பதை அவருக்கு உணர்த்தத் தவறி விட்டன. இரண்டாவதாக, அவரது ஆளுமையின் அறிவார்த்த பரிமாணத்தின் விசாலத்துக்கு ஈடு சொல்லும் குணத்ததல்ல அவரது ஆளுமையின் தேடிக் காண வேண்டிய அழகுணர்ச்சி. அதோடு அவரது அறிவார்த்த பரிமாணம் செலாவணி அற்றுவிட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு சித்தாந்தம் ஒன்றின் இறுகிய பிடிப்பில் கைகால்களை இழந்து முடமாகியது. ஞானி, எஸ் வி. ராஜதுரை இருவருமே, தமக்கு உண்மையானவர்கள். தம் சிந்தனை நேர்மை கொண்டவர்கள். தாம் நம்பிக்கை கொண்டவற்றுக்கும் உண்மை யானவர்கள். இவர்கள் காலத்திய ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் போன்றல்ல. ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளோ மாறாக, மற்றவர்களைப் பயமுறுத்த, வியந்து வாய் பிளக்கச் செய்ய சீருடையாக தம் ஸ்ட்ரக்சுரலிஸ் படிப்பை அணிந்து நடை பழகுகிறவர்கள்.
