Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

கவிதைகள்

குறவன் சுட்ட பறவை



பொருளற்றுப்போவதின்
பொருள்தேடுமொருவனை
பேதையென்பதா
பித்தனென்பதா
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
சூன்யத்தில் சுவடுகள் பதிக்க
மூச்சுமுட்ட முயலுமொருவனை
மூர்க்கனென்பதா
முட்டாளென்பதா
யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆலமரத்திலிருந்தன
ஆயிரம் பறவைகள்
ஒன்றைச் சுட்டான் குறவன்
எஞ்சியவைகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

வசமானதென்ன?

அறியுமுன் நிகழ்ந்திருக்கும்
கருவறையில்
புதியதொரு உயிரின் வரவு
தன்னிச்சையாய் நிகழும்
நந்தவனத்தில்
அரும்பு மலரும் தருணம்
ஆழிப்பேரலை வருகுதென்று
அறிவிக்கலாம்
நிற்குமா நில்லென
ஏவுகணைகள் சூன்யவெளியில்
உளவறிந்தது
எறும்புவாயுணவு
உடலம் சடலமாகுமுன்
உயிர்ப்பறவை
சிக்கும் வலைகளில்லை
வசமானதுதான் என்ன?
லாவண்யா

Exit mobile version