எஸ்.பி.பி யின் கொஞ்சல் குரலை கேட்டுக்கொண்டு, எஸ் எம் எஸ் அனுப்பும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் நம்மிடையே ஏராளம். தொடர்கதையில் ‘அடுத்த வாரம்…’ போடுவதை போல, சர்வ சாதாரணமாய், ‘ஃபேஸ் புக்கில் இரவு சந்திப்போம்’, அல்லது, ஓர்கூட்டில் அல்லது டிவிட்டரில் தொடர்கிறார்கள். நண்பர்கள் அதிகம் இருப்பதை காட்டிக் கொள்ள, மற்றும் மின் அரட்டை அரங்கம் நடத்த இந்த இணைய சமாச்சாரங்கள் மிக தேவையாக நினைக்கிறோம். இந்த ஜந்துக்களால் சில நன்மைகள் இருந்தாலும், கூடவே சில அந்தரங்க அபாயங்களும் நாம் அறியாமலே நம்மை தொடர்கின்றன. நண்பரை பற்றி உங்களுக்கு தெரிந்த அளவுக்கு, நண்பரின் நண்பரின் நண்பரை பற்றித் தெரியுமா? இது சமூக வலையமைப்பு மென்பொருளின் (Social Networking software) தீயமுகம். இது போன்று பல மின்னணு அந்தரங்க சமரசங்கள் (electronic privacy compromises) பற்றிய அலசலே இக்கட்டுரையின் நோக்கம்.
கூகிள், ஆப்பிளிடம் சரணம்
மார்ச் 1, 2010 : ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவி மிக பிரபலமடைந்த நிலையில் அதன் பாதுகாப்பின்மை அனவருக்கும் பிடிபட தொடங்கியுள்ளது. டைகர் ஸ்கிரிப்ட் என்ற மென்பொருள் வந்துள்ளது. அனுப்பி 30 வினாடிக்குள் ஒரு செய்தியை படித்தபின் (படித்தவ்ரிடம், அனுப்பியவரிடம்) அழித்துவிடலாம். இது டைகர் உட்ஸ் காதல் விவகாரத்திலிருந்து வந்த குறும்பு மென்பொருள்! அந்தரங்கம் யாவுமே, இப்படி இப்படி!
சிங்கார சென்னையில் நடக்கும் ஒரு கற்பனை 2013 உரையாடல்:
கபாலி: “சர்யான தொயில் தெரியாத கத்துகுட்டியாக் கீற. ஒன் ரோதன தாங்கல சிங்காரம். பெயில் குட்து வெளில கொண்டுவரதுக்குள்ள பெண்டு நிமிருதில்ல”.
சிங்காரம்: “மன்னிச்சுகண்ணே. அப்பால இது மாரி நடக்காது. சூடம் மேல சத்தியம்!”
கபாலி: ”பெரிய சத்தியம் பண்ற மூஞ்சியப் பாரு. செய்ர திருட்டுத் தொயில்ல சுத்தம் வேணும்டா. எதுக்குடா உனக்கெல்லாம் ஒரு தொட கம்பூட்ட்ரு அப்றம் கைபோனு.குடுத்து ரெய்னிங் வேற?’
சிங்காரம்: ”மெய்தாண்ணே. அந்த கூகிள் என்னது – ஸ்டீர்ட் வ்யூ சரியா புரியல. வயக்கம் போல தொயில் செய்யப் போய் மாட்னது என் தப்புதான். மன்னிச்சு விடுண்ணே!”
கபாலி: “யார்ரா, கம்ப்யூட்டர் கண்ணாயிரத்தை. வரச் சொல்லு. இனிமே தொயிலுக்கு யார் போனாலும் ஸ்டீர்ட் வ்யூ பாத்து, சரியான சந்து வயியா போய் அள்ளிகினு வரனும், சரியா. சிங்காரம், நம்ம குமாரப் பாரு.. போன தப, சரியா ஸ்டீர்ட் வ்யூ பாத்து, அந்தம்மா நகைகடத்தனமா இருந்தத கவனிச்சு, சுட்டியா அள்ளினா பாரு. புத்தி யூஸ் பன்னு தலைவா.. ”.
சற்று மிகையான உரையாடல்தான். ஆனால் கூகிள் ஸ்டீர்ட் வ்யூ (Street View – Google Maps) மிகவும் சர்ச்சைக்குரிய மென்பொருள். ஒரு இடத்திற்கே போகாமல், அந்த இடத்தின் முகவரி மட்டுமே இருந்தால், காரின் மூலம் அந்த வீதியில் பயனித்தால், எப்படி இருக்கும் என்று விடியோவே இருந்த இடத்திலிருந்தே பார்க்கலாம். ஒரு முகவரியின் எல்லாப் பக்கங்களிலும் என்னவென்ன கட்டிடங்கள் மற்றும் நில அமைப்புகள் இருக்கின்றன என்று பயன திட்டமிட உருவாக்கப்பட்ட மென்பொருள். நான் மேலே சொன்ன திருட்டு விஷயத்திற்கும் சத்தியமாக திட்டமிடலாம். ரொம்ப கவலை வேண்டாம். இன்னும் இந்திய நகரங்கள் ஸ்டீர்ட் வ்யூவில் வரவில்லை. ஆனால், உங்களின் அந்தரங்கம் எப்படி எப்படியோ பறிபோக வாய்ப்புள்ளது.
பொதுவாக மின்னணு அந்தரங்க சமாச்சாரங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம் அல்லது அறியாமலிருக்கிறோம். ‘அந்தரங்கமாவது மண்ணாங்கட்டியாவது’ என்று சன் கணினி நிறுவனத்தின் அந்நாளைய தலைவர் ஸ்காட் மெக்நீலி 15 வருடங்கள் முன் சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்று அதுவே வியாபாரம், சமூகம், தனியார் தொடர்பு, அரசியல் மற்றும் மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. நம் அரசியல் சட்டம் இயற்றியவர்கள் நம்முடைய அந்தரங்கத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள். இன்று பயங்கரவாதத்தை காரணம் காட்டி அரசாங்கங்களும் அத்து மீற சட்ட வியூகங்கள் ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகின்றன. இதனால் சாதாரண மனிதர்கள் அவர்கள் அறியாமலே பாதிக்கப்படுகிறார்கள்.
ஆரம்ப அசட்டுத்தனம்
மனிதர்கள் ஆப்பிரிக்காவில் உருவானவர்கள் என்ற தியரிப்படி பார்த்தால், நமக்கு ஆப்பிரிக்கர்கள் உறவுக்காரர்கள் தானே? 90 களில் அப்படி எனக்கு பல ஆப்பிரிக்க உறவுக்காரர்கள். கேள்வியே படாத ஆப்பிரிக்க தேசத்தில் சர்வாதிகாரி பல கோடி டாலர்கள் சொத்தை அனுபவிக்காலமல் மண்டையை போட, அவரின் சொத்தை அனுபவிக்க 50/50 முறையில் எனக்கு திடீரென்று நெருக்கமான ஆப்பரிக்கர் ஒருவர் என் அமெரிக்க டாலர் வங்கி கணக்கு எண்ணை அன்புடன் மின்னஞ்சலில் கேட்பார். இவர்கள் கேட்கும் விதம் மிகவும் உண்மையானதாக ஆரம்பத்தில் தோன்றும். அடுத்த நாளே, இன்னொரு ஆப்பிரிக்க தேச சர்வாதிகாரி மண்டையைப் போட, இன்னொருவர் உங்களது நெருக்கமான உறவினராக துடிப்பதைப் பார்த்து உஷாராகி விடுவீர்கள். பிறகு, உங்களுக்கு மனதில் தோன்றும் கேள்வி, ‘இவர்களுக்கு என் மின்னஞ்சல் முகவரி எப்படி கிடைத்தது?’. இது ஆரம்ப கால அந்தரங்க தாக்குதல். ஒரு இணைத்தள சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பட்டியலை திருடிவிட்டால், இப்படி ஒரு பொது மின்னஞ்சலை அனுப்புவது எளிது. ஏமாந்தவர்களிடம் சுருட்டலாம். ஆனால் இன்று இது ஒரு பெரிய தொழிலாகி பல மடங்கு இயக்கத்திறமையுடன் செயல்படத் தொடங்கிவிட்டன.
அடுத்த கட்ட தாக்கம்
நிறைய பூச்சாண்டி காட்டியாகிவிட்டது. சற்று பேயையே சந்திப்போமே!
இருமுக ராட்சசன்
இந்த அந்தரங்க பிரச்சினைக்கு இரு முகங்கள் : 1) தனிப்பட்ட அந்தரங்கம் 2) பொது அந்தரங்கம்.
தனிப்ப்ட்ட அந்தரங்கத்தில் பல விஷயங்களை உள்ளன. உங்களது உறவுகள், பொருளாதார, மற்றும் மருத்துவ விஷயங்கள். இதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? பொதுவாக, தனியார் நிறுவனங்கள், உங்கள் அந்தரங்கத்தை உபயோகித்து பல பொருட்களை நீங்கள் விரும்பாமலே வாங்க வைப்பதில் முயற்சி செய்யலாம். உங்கள் மருத்துவ அந்தரங்கங்களை அறிந்து சில மருத்துவ வசதிகள் உங்களுக்கு மறுக்கப் படலாம். உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் அரசாங்க எண்ணை பயன்படுத்தி உங்களுக்கு மிக பெரிய நிதி இழப்பு ஏற்படலாம்.
அதென்ன பொது அந்தரங்கம்? அரசாங்கம் ச்ம்மந்தப்பட்ட ரகசியங்கள், பயங்கரவாத விஷயங்கள், பொது இடங்களில் உங்கள் நடத்தை விவரங்கள். இதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? பயங்கரவாதத்தை காரணம் காட்டி, உங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படலாம். பொது ஒழுங்கு என்ற பேரில் அரசாங்கம் உங்களை தர்மசங்கடப் படுத்தலாம். பயங்கரவாதத்தினால். விமான நிலயங்களில், தனிப்பட்ட தேடல்கள் சற்று அந்தரங்கத்தை உதாசீனப்படுத்துவதை இன்று நாம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டோம்.
பாதுகாப்பு வேண்டுமா அல்லது அந்தரங்கம் வேண்டுமா என்ற கேள்வி எழும்போது, பாதுகாப்பே நமக்கு பெரிதாகப் படுகிறது. பொது நலன் வேண்டுமா அல்லது அந்தரங்கம் வேண்டுமா என்ற கேள்வி எழும்போது, பொதுநலனே நமக்கு பெரிதாகப் படுகிறது. அதே போல, பயங்கரவாத ஒடுக்க்மும் தனி மனித உரிமைகளும் வைத்துப் பார்த்தால், தனி மனித உரிமைகள் மறக்கப்படுகின்றன. நிறைய பணம் கொடுத்து மென்பொருள் வேண்டுமா அல்லது விளம்பர வரவால் உருவான இலவச மென்பொருள் வேண்டுமா? இலவச மென்பொருளின் விலை உங்கள் அந்தரங்கம் என்று கூகிள் இன்று ஒப்புக் கொள்கிறது.
மின்னணு அந்தரங்கம் என்பது ஒரு விஸ்தாரமான துறை. இதை நாம் இரு முகங்களாக பிரித்தாகிவிட்டது. தனிப்பட்ட அந்தரங்க பகுதியில், சில தொழில்நுட்பங்களை அலசுவோம்: 1) RFID என்ற நுட்பம். இது நுகர்வோர் பொருள் வாங்கும் வழக்கங்களை மாற்றும் முயற்சி. இத்தொழில்நுட்பத்திற்கு ஒரு பொது அந்தரங்க தாக்கு முகமும் உண்டு. 2) ஆரோக்கிய அந்தரங்கம். மரபணு சோதனைகள் மற்றும் காப்புரிமை பற்றி அலசுவோம் 3) Phishing என்ற நிதி மோசடி செய்யும் அந்தரங்க தாக்குதல்கள்.
பொது அந்தரங்க பகுதியில், சில தொழில்நுட்பங்களை அலசுவோம்: 1) ஒட்டுக் கேட்தல். உங்களுக்கு தெரியாமல் உங்கள் உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதன் விளைவுகளை ஆராய்வோம் 2) மெய் வருடல் தொழில்நுட்பம் – இதை பையோமெட்ரிக் வருடல் (biometric scanning) என்றும் சொல்வார்கள். 3) விடியோ கண்காணிப்பு. இத்தொழில் நுட்பத்தால் வரும் அந்தரங்க மீறல்களை அலசுவோம்.
மிக புத்திசாலித்தனமாக நம் அந்தரங்கங்கள் இவ்வாறு பறி போவதை எத்தனை பேர் உணருகிறோம்? சமீபத்தில், ஒரு இந்திய குடும்பத்தின் இணைய உபயோக முறை என்க்கு மிகவும் வினோதமாக பட்டது. குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் ஒரே மின்ஞ்சல் முகவரி. வீட்டிலிருந்தும், அலுவலகத்திலிருந்தும் அண்ணன், தங்கை என்று அனைவரும் ஒரே கடவுக்சொல் (password) உபயோகிக்கிறார்கள்! குடும்பத்தில் ரகசியங்கள் ஏதும் இல்லை என்று பெருமை வேறு. இவர்கள் மின்னஞ்கல் உடைக்கப்பட்டால், குடும்பமே தெருவில் வந்தது போல அல்லவா?
மின்னணுவியல் துறத்தல்
சொல்லி வைத்தாற்போல் இன்னொரு கடைக்காரர் பயணப்பை ஒன்றை என்க்கு வேறு விலையில் தொடங்கி விற்கப் பார்த்தார். என்க்கு சந்தேகம், ‘என் நெத்தியில் பயணப்பை வாங்குபவன் என்று எழுதி ஒட்டியிருக்கிறதா?’. எப்படி இவர்கள் என்னை துரத்துகிறார்கள்? விட்டால் போதுமென்று செளக்கின் வேறு பகுதிக்கு விரைந்தேன்.
முதலில் இந்த RFID எப்படி வேலை செய்கிறது? பொருளின் மேலே ஒரு நுண்ணிய மின்னணு சிப் மற்றும் ஆண்டெனா அடக்கம். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிப்பட்ட எண் – இதை ‘டேக்’ (Tag) என்று அழைக்கிறார்கள். இந்த Tag ஐப் படிக்க ஒரு படிக்கும் மின்னணு கருவி (RFID electronic reader) தேவை. இதில் உள்ள வசதி என்னவென்றால், ஒரு நூறு அடி வரை தள்ளியிருந்தவாறு படிக்கும் மின்னணு கருவி Tag ஐப் படித்துவிட முடியும். இதனால் பல அன்றாட வேலைகள் சுலபமாகிறது. கால்நடை, நுகர்வோர் பொருட்கள், மற்றும் தயாரிப்பு சம்மந்தமான கச்சா பொருட்களை நிர்வகிப்பது எளிதாகிறது. பட்டை குறியீடு போலல்லாமல், பல பொருட்களை ஒரே நேரத்தில் படிககவும் முடியும்.
முதன்மையான பயனை நீட்டி வேறு விதத்தில் பயன்படுத்த முற்படுகையில் வந்தது வினை. இந்த நுட்பம் விற்பனையாளர்களின் கனவு. உதாரணத்திற்கு, ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டில் பல முக்கிய இடங்களில் படிக்கும் கருவிகளை வைத்துவிட்டால், உங்களின் வாங்கும் முறைகள் நீங்கள் அறியாமலே பதிவு செய்யப்படலாம். பொருட்கள் ஒவ்வொன்றிலும் Tag உள்ளதால், அதை நீங்கள் எடுக்கும் போது எளிதாக பதிவு செய்யலாம். அந்த நிறுவனத்தின் கிரெடிட் கார்டு உங்களிடம் இருந்தால் கேட்கவே வேண்டாம். எந்த பொருட்களின் மேல் நாட்டம் கொண்டு வாங்காமல் விட்டீர்கள் என்று உங்கள் வாங்கும் ஜாதகமே விற்பனையாளர் கையில்.
வில் ஸ்மித் துரத்தப்படுதல் ஒன்றுமில்லை
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் உல்கிலேயே மிகப் பெரிய நில எல்லை. மிக அதிக பன்னாட்டு வியாபாரம் நடக்கும் எல்லையும் இதே. வேலை காரணமாய் இரு நாடுகளிலிருந்தும் எல்லை நகரங்களில் வசிப்போர் எல்லையை நாள்தோரும் கடக்கிறார்கள். அமெரிக்கர்களுக்காக ஒரு வசதியை சில எல்லை மாநிலங்கள் கொண்டு வந்தன. அமெரிக்கர்கள் தன்னிச்சையாக இந்த வசதியை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு எல்லை கடவை எளிதாகும். அதாவது, கார்களில் லைஸன்ஸ் தகடில் RFID பொருத்திவிட்டால், எல்லையில் நிற்கவே வேண்டாம். நூறு அடிக்கு முன்னமே நீங்கள் வருவதை எல்லை ஏஜண்ட் படிக்கும் கருவியில் படித்து, உங்களை கடக்க விடுவார். விளைவுகளை அறியாமல், பல அமெரிக்கர்கள் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டார்கள். இத்தனை வசதி வாய்ந்த விஷயத்தில் என்ன விளைவு இருக்க முடியும்?
பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை முக்கிய ஆணவங்களுக்கு கொண்டு வர திட்டம் தீட்டி வருகின்றன. பல பாதுகாப்பு வல்லுனர்கள் புதிய ஆணவங்களின் பாதுகாப்பின்மையை சுட்டிக்காட்டுவதுடன் தகர்த்தியும் காட்டியுள்ளார்கள். இங்கிலாந்து, மற்றும் ஜெர்மனீய பாஸ்போர்டுகள் இதில் அடக்கம். இந்த ஓட்டைகள் பல நாடுகளை RFID ஐ தழுவுவதிலிருந்து குறைக்கக் காணோம். உதாரணமாக மலேசியா 25 மில்லியன் தேசிய கார்டுகளை அதன் குடிமக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. கதார் அரசு இப்படிப்பட்ட ஒரு கார்டில் விரல் ரேகையுடன் வழங்கத் தொடங்கியுள்ளது. சீனா மிகப் பெரிய RFID திட்டம் ஒன்று தொடங்கியுள்ளது – அதன் 130 கோடி குடிமக்களுக்கும் மின்னணு கார்ட் வழங்குவது திட்டத்தின் குறிக்கோள்.
மற்ற நாடுகள் அமெரிக்கா போலல்லாமல் ஓரள்வுக்கு பாதுகாப்புடன் உள்ள நியத்துடன் (ISO 14443) RFID நுட்பத்தை உபயோகிக்கின்றன. சீன அரசுடைய கெடுபிடி சற்று அதிகம். அந்த கார்டில் மற்ற நாட்டைவிட விவரம் அதிகம். உங்கள் பெயர், பாலினம், மதம், குழந்தைகளின் எண்ணிக்கை, தொலைபேசி எண், வேலை நிலை எல்லாம் பதிவு செய்யப்படும். ஜனங்களின் எல்லா விவரங்களையும், அவர்களது நடவடிக்கைகள் மற்றும் இயக்கத்தை இப்படி கண்காணித்த வண்ணம் இருக்கிறது. எங்கே அந்தரங்கம்?
அரசாங்கங்கள் இதைக் கட்டுப்படுத்த அதிகம் நடவடிக்கை எடுப்பதில்லை. தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சட்டங்களும் சரியாக நிறுவப்படவில்லை. இன்நிலையில் RFID நுட்பத்தால் தனியொருவர் அந்தரங்கம் மிகவும் பாதிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது.
ஆரோக்கிய அந்தரங்கம்
வளர்ந்த நாடுகளில் தனி நபரின் ஆரோக்கியம் மிகவும் அந்தரங்கமான ஒன்று. நம் கலாச்சாரம் சற்று வேறுபட்டது. உதாரணம், 2002 ல் வந்த ‘பஞ்ச தந்திரம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நாயராக வரும் ஜெயராமின் மகனுக்கு இருதயத்தில் ஓட்டை என்று படம் முழுவதும் நகைச்சுவை என்ற பேரில் ஊருக்கொல்லாம் தம்பட்டம் அடிப்பது நம் கலாச்சாரம். சமுதாய சூழலில் மற்றவர்களுக்கு வந்துள்ள நோய்களை பற்றி அதிகம் வம்படிக்கிறோம்.
இவ்வாறு, பொதுவாக ஆரோக்கிய மற்றும் நோய்களைப் பற்றி பேசுவதன் விளைவுகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படுவதில்லை. 1990 களில் மனித மரபணுத் திட்டம் (human genome project) இந்த வழக்கங்களை மாற்றும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை தந்தது. பல தீர்க்க முடியாத நோய்களின் காரணம் மரபணு கோளாறுகள் என்பதை இன்று நாம் அறிவோம். அமெரிக்கா போன்ற நாடுகளில் (இந்தியாவிலும் இது நகர்புறங்களில் தொடங்கி விட்டது) ஆரோக்கியத்துக்குக் கவனிப்பு வேண்டுமானால் ஆரோக்கியக் காப்புரிமை தேவை. பொதுவாக, காப்புரிமை கொடுப்பதற்காக சில பல ஆரோக்கியம் பற்றிய கேள்விகளை உங்களிடம் ஒரு ஆலோசகர் கேட்பார். உங்களின் பதில்படி (உங்களின் நினைவாற்றலைப் பொருத்து) காப்புரிமையின் சட்ட திட்டங்கள் முடிவெடுக்கப்படும். இதில் ஆலோசகர் முக்கியமாக ஆராய்வது உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகள் பற்றியே (Preexisting conditions). உதாரணத்திற்கு, உங்களுக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்தால், அது காப்புரிமைக்குள் அடங்காது. அந்த இருதய நோயை காப்புரிமையில் சேர்க்க அதிக கட்டணம் (premium) கட்ட வேண்டும்.
சில அரிதான நோய்கள் முழுவதும் குணப்படுத்த முடியாமல் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு இன்னமும் சவாலாக இருக்கின்றன. இவைகள் பெரும்பாலும், மரபணுக் கோளாறுகள் (genetic disorders). உதாரணம், CF என்று அழைக்கப்படும் Cystic Fibrosis மற்றும் MD என்று அழைக்கப்படும் Muscular Dystrophy போன்ற நோய்கள். தமிழ் சினிமாவில் வரும் ரத்தப் புற்றுநோய் (Leukemia) இதில் உண்டா என்று அனாவசிய ஆராய்ச்சி வேண்டாம்! ஒருவருக்கு மரபணு சோதனை (genetic test) செய்தால், அவருக்கு இவ்வகை மரபணுக் கோளாறு வர வாய்ப்புண்டா என்று சொல்லிவிட முடியும். மேல்வாரியாக பார்த்தால் இது நல்ல முன்னேற்றம். இன்று 2000 க்கு மேற்பட்ட மரபணுச் சோதனைகள் கருவிலிருந்து தாத்தா வரை செய்கிறார்கள். இவ்வகைச் சோதனைகளால், சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமல்லாமல், அவருடைய குழந்தைகள், பேரன் பேத்திகள் அனைவருக்கும் நோய் வர வாய்ப்புண்டா என்றும் சொல்லிவிடலாம்.
இந்த மரபணுப் பரிசோதனை அறிக்கை யாரிடம் இருக்க வேண்டும் என்பது மிக சர்ச்சைக்குரிய விஷயம். காப்புரிமை நிறுவனத்திடம் அறிக்கை கிடைத்தால், குடும்பத்திற்கே மருத்துவக் காப்பு மறுக்கப்படலாம். வேலை தேடும் கம்பெனியிடம் கிடைத்தால், வேலையே மறுக்கப்படலாம். இது ஒரு வகை மரபணுப் பாகுபாடு (genetic discrimination) உருவாகும் அபாயம் உள்ளது. இன்றைக்கு இது பெரிய பிரச்சினையில்லை. ஆனால் வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில், சீக்கிரத்தில் இது விஸ்வரூபம் எடுக்கலாம். மருத்துவ அந்தரங்கம் மிகவும் சீரியஸான விஷயம்.
