ஒரு சிறிய விதையாகத் தொடங்கிய செயற்கை நுண்ணறிவு இன்று வேரூன்றி, பல கிளைகளாகப் பரந்து விரிந்திருக்கும் ஒரு பிரம்மாண்ட மரமாக வளர்ந்திருக்கிறது. மருத்துவம், கல்வி, அறிவியல், வணிகம், விவசாயம், போக்குவரத்து எனப் பல துறைகளில் தனது தடத்தைப் பதித்துவிட்ட AI, இப்போது கலை மற்றும் பொழுதுபோக்கு உலகிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
மனிதர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் தொடங்கி, கட்டுரைகள் எழுதுவது, ஓவியங்கள் வரைவது, இசையமைப்பது, குரல்களை உருவாக்குவது, காணொளிகளைத் தயாரிப்பது என அதன் திறன்கள் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன. அந்தப் பயணத்தின் அடுத்த முக்கியமான இலக்கு சினிமா!
தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறினாலும், பழைய தொழில்நுட்பத்தின் அனுபவத்தையும் தரத்தையும் உடனடியாக மிஞ்சிவிட முடியாது என்பதற்கு நம் கைப்பேசி கேமராவே ஓர் உதாரணம். இன்று கைப்பேசியில் மிக அழகான புகைப்படங்களையும் காணொளிகளையும் எளிதாகப் பதிவு செய்ய முடிகிறது. இருந்தாலும், பெரிய சென்சார்கள், பலவகை லென்ஸ்கள், ஒளியைக் கட்டுப்படுத்தும் வசதி போன்றவற்றால் தொழில்முறை கேமராக்கள் இன்னும் தனித்துவம் பெற்றிருக்கின்றன. அதுபோன்ற ஒரு மாற்றத்தின் தொடக்கத்தில்தான் AI திரைப்படமும் நிற்கிறது.
ஒரு திரைப்படத்தை உருவாக்கக் கதை, திரைக்கதை, நடிகர்கள், படப்பிடிப்புத் தளம், ஒளிப்பதிவு, இசை, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு எனப் பல நிலைகள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கு AI இன்று உதவத் தொடங்கியிருக்கிறது.
Google Veo, Runway, Kling AI, Hailuo AI போன்ற கருவிகள் மூலம் சில வரிகளில் காட்சியை விவரித்தாலே காணொளிகளை உருவாக்க முடிகிறது. ஒரு புகைப்படத்துக்கு உயிரூட்டவும், கதாபாத்திரங்களின் அசைவுகள், கேமராவின் நகர்வு, வெளிச்சம், காட்சியின் சூழல் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் முடிகிறது. பின்னணி இசை, குரல்கள், ஒலிவிளைவுகள், மெய்நிகர் கதாபாத்திரங்கள் ஆகியவற்றையும் உருவாக்க முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு AI காணொளிகளில் முகங்கள் மாறுவது, கைகளில் விரல்கள் கூடுதலாகத் தோன்றுவது, உடல் அசைவுகள் இயல்பாக இல்லாதிருப்பது போன்ற குறைகள் இருந்தன. இப்போது அவை பெருமளவு குறைந்துள்ளன. இருப்பினும், ஒரே கதாபாத்திரம் பல காட்சிகளில் ஒரே தோற்றத்துடன் இருப்பது, இயல்பான முகபாவனைகள், காட்சிகளின் தொடர்ச்சி போன்றவற்றில் இன்னும் சவால்கள் நிறைந்துள்ளன.
ஒரு காட்சியை அழகாக உருவாக்குவது வேறு. அந்தக் காட்சியை ஒரு கதையின் தேவைக்கேற்பச் சரியான இடத்தில் பயன்படுத்துவது வேறு. இரண்டாவது பணிக்கு மனிதர்களின் கலை உணர்வும் வழிகாட்டுதலும் இன்னும் அவசியமாக இருக்கின்றன.
AI திரைப்பட வளர்ச்சியில் சீனா தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, Microdramas எனப்படும் குறுந்தொடர்கள் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.சில நிமிடக் காட்சிகளைக் கொண்ட இத்தொடர்களைக் கைப்பேசியில் எளிதாகப் பார்க்க முடியும். காதல், குடும்பம், பழிவாங்குதல், மர்மம், வரலாறு, கற்பனை எனப் பல வகைகளில் அவை தயாரிக்கப்படுகின்றன.
இந்தத் துறையில் AI நுழைந்த பிறகு தயாரிப்பு முறை வேகமாக மாறியுள்ளது. சீனாவில் 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியான குறுந்தொடர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை முழுமையாக AI மூலம் உருவாக்கப்பட்டவை என்று China Netcasting Services Association வெளியிட்ட தகவலை Channel NewsAsia தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் Douyin தளத்தில் 2,21,900 AI குறுந்தொடர்கள் மற்றும் அனிமேஷன் தொடர்கள் பதிவேற்றப்பட்டதாகவும், அவற்றில் 1,055 மட்டுமே பத்து கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து, தொழில்நுட்பம் படைப்புகளை உருவாக்குவதை எளிதாக்கலாம். ஆனால் பார்வையாளர்களைக் கவர நல்ல கதையும் தரமும் அவசியம் என்பது தெளிவாகிறது.
சீனாவின் இந்த முயற்சிகளில் முக்கியமான மைல்கல்லாக Sanxingdui: Future Past என்ற அறிவியல் புனைகதைத் திரைப்படம் அமைந்துள்ளது. 2026 அக்டோபர் 23 அன்று சீனத் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், முழுமையாக AI மூலம் உருவாக்கப்பட்டு வணிகத் திரையரங்குகளில் வெளியான சீனாவின் முதல் முழுநீளத் திரைப்படமாகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டது. ஏறத்தாழ 100 பேர் கொண்ட குழு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியதாகவும், தயாரிப்புச் செலவு 10 மில்லியன் யுவானுக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தொழில்நுட்ப ரீதியாகப் புதிய முயற்சியாக இருந்தாலும், படத்தின் தொடக்க வரவேற்பு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. முதல் நாள் முன்பதிவு வருவாய் 80,000 யுவான் மட்டுமே இருந்ததாக AFP செய்தி வெளியிட்டது. AI மூலம் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடிகிறது என்பதற்காகவே ரசிகர்கள் அதைப் பார்க்க வருவார்கள் என்று சொல்ல முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
இந்தியத் திரையுலகும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கன்னடத்தில் உருவான LOVE YOU திரைப்படம், AI மூலம் கதாபாத்திரங்கள், காட்சிகள், பாடல்கள், வசனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களை உருவாக்கிய முயற்சியாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியில் விவேக் அஞ்சாலியா உருவாக்கிய NAISHA திரைப்படம், AI கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காதல் கதையாக அமைந்துள்ளது. Runway, Kling, Pika Labs போன்ற கருவிகள் இதன் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் உருவான NIGHTFALL: THE KOCHI INVASION அறிவியல் புனைகதைத் திரைப்படமும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முயற்சிகளில் ஒன்று. இதற்கிடையில், இந்தியப் புராணக் கதையையும் நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் CHIRANJEEVI HANUMAN – THE ETERNAL திரைப்படமும் உருவாகி வருகிறது.
குறும்படங்களிலும் AI படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவை ஒட்டி நடத்தப்பட்ட Cinema AI Hackathonல் My Red Crayon என்ற இந்திப் படம் சிறந்த AI திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.
இந்தியாவில் உருவாகும் இத்தகைய படைப்புகள் அனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்தவை அல்ல. சில முழுமையாக AI மூலம் உருவாக்கப்படுகின்றன. சிலவற்றில் AI ஒரு துணைக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்தியத் திரையுலகிலும் இந்தத் தொழில்நுட்பம் புதிய படைப்புப் பாதைகளைத் திறக்கத் தொடங்கியுள்ளது.
ஹாலிவுட்டும் AI தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்கவில்லை. பிரபல இயக்குநர் Darren Aronofskyன் Primordial Soup நிறுவனம், Google DeepMind உடன் இணைந்து AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய குறும்படங்களை உருவாக்கியுள்ளது. நேரடி படப்பிடிப்புக் காட்சிகளுடன் AI காட்சிகளை இணைப்பது போன்ற முயற்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆனால், இந்த வளர்ச்சி திரைப்படத் துறையில் பணிபுரியும் எழுத்தாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
2023ம் ஆண்டு அமெரிக்காவில் Writers Guild of America (WGA), SAG-AFTRA சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தங்களில் AI பயன்பாடு முக்கியப் பிரச்சினையாக இருந்தது. AI மூலம் திரைக்கதைகளை உருவாக்குவது, நடிகர்களின் முகத்தையும் குரலையும் அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது, அவர்களின் நடிப்பை டிஜிட்டல் வடிவில் மீண்டும் உருவாக்குவது போன்றவை குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். அதன்பிறகு உருவான ஒப்பந்தங்களில் எழுத்தாளர்களுக்கும் நடிகர்களுக்கும் AI தொடர்பான சில பாதுகாப்புகள் இடம்பெற்றன. ஒப்புதல், உரிய இழப்பீடு, டிஜிட்டல் உருவத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் உரிமை ஆகியவை முக்கியத்துவம் பெற்றன.
AI சில பணிகளை விரைவாகவும் குறைந்த செலவிலும் செய்யத் தொடங்கியிருப்பதால், குறிப்பாகச் சிறிய தயாரிப்பு நிறுவனங்களிலும் குறுந்தொடர் தயாரிப்பிலும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதே நேரத்தில், AI காட்சிகளைத் திருத்துதல், டிஜிட்டல் கதாபாத்திரங்களை வடிவமைத்தல், காட்சித் தொடர்ச்சியைப் பராமரித்தல் போன்ற புதிய பணிகளும் உருவாகலாம். எனவே, இது வேலைகள் மறையும் மாற்றம் மட்டுமல்ல. வேலை செய்யும் முறையும் மாறும் காலகட்டமாக இருக்கலாம்.
AI திரைப்பட வளர்ச்சியுடன் எழும் மற்றொரு முக்கியமான கேள்வி காப்புரிமை. AI கருவிகள் ஏராளமான திரைப்படங்கள், புகைப்படங்கள், இசை, எழுத்துகள் போன்ற தரவுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய படைப்புகளை உருவாக்குகின்றன. அப்படியென்றால், அந்த மூலப் படைப்புகளின் உரிமையாளர்களிடம் அனுமதி பெறப்பட்டதா? அவர்களுக்கு உரிய அங்கீகாரமோ இழப்பீடோ வழங்கப்படுகிறதா?
ஒரு நடிகரின் முகம், குரல் அல்லது நடிப்பைப் போல AI மூலம் உருவாக்கினால் அதற்கான உரிமை யாருக்கு? அவருடைய அனுமதி இல்லாமல் அவரது டிஜிட்டல் உருவத்தைப் பயன்படுத்தலாமா? இவை உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் கேள்விகள். தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு இணையாகச் சட்டங்களும் நெறிமுறைகளும் உருவாக வேண்டிய அவசியம் இருக்கிறது.
அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் AI திரைப்படத் தயாரிப்பில் இன்னும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். பெரிய முதலீடு இல்லாமல் சிறிய குழுக்களும் தனிநபர்களும் கற்பனைத் திரைப்படங்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம். பார்வையாளர்களின் விருப்பத்திற்கேற்பக் கதைகளையும் முடிவுகளையும் மாற்றும் தனிப்பயன் பொழுதுபோக்கும் உருவாகலாம். AI நடிகர்கள், மெய்நிகர் கதாபாத்திரங்கள் ஆகியவையும் திரையுலகில் அதிக இடம் பெறக்கூடும்.
2025ம் ஆண்டு அறிமுகமான Tilly Norwood என்ற மெய்நிகர் நடிகை ஹாலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது செய்திகளில் வெளிவந்தது. AI நடிகர்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா, உண்மையான நடிகர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக AI நடிகர்களை உருவாக்க முடிகிறது என்பதற்காக உண்மையான கலைஞர்களின் முகத்தையும் குரலையும் அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தலாம் என்று பொருளல்ல.
செயற்கை நுண்ணறிவு சினிமா உலகிற்குள் நுழைந்திருப்பது ஒரு தற்காலிகப் பரபரப்பு மட்டுமல்ல. திரைப்படம் உருவாக்கப்படும் முறையையே மாற்றக்கூடிய ஒரு முக்கியமான தொழில்நுட்ப மாற்றம். இது புதிய படைப்பாளிகளுக்கு வாய்ப்புகளைத் திறக்கிறது; அதே நேரத்தில் வேலைவாய்ப்பு, காப்புரிமை, கலைஞர்களின் உரிமைகள், படைப்புகளின் தரம் போன்ற பல கேள்விகளையும் எழுப்புகிறது.
ஒரு திரைப்படத்திற்குத் தேவையான காட்சிகள், குரல்கள், இசை, கதாபாத்திரங்கள் என அனைத்தையும் உருவாக்கும் திறனை AI ஒருநாள் பெற்றுவிடலாம். ஆனால், ஒரு கதையை உணர்ந்து, அதன் வழியாக மனிதர்களின் மகிழ்ச்சி, வலி, காதல், இழப்பு ஆகியவற்றை நம் மனதுக்குள் கொண்டு செல்லும் திறனை அது பெறுமா?
இப்போது கதை சொல்லும் முறையே மாறிக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தில் மனிதன் தொழில்நுட்பத்தால் மாற்றப்படுவானா, அல்லது அதனுடன் இணைந்து இன்னும் புதிய படைப்புலகை உருவாக்குவானா?
ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் பிரம்மாண்டமான காட்சிகளிலோ, தத்ரூபமான கதாபாத்திரங்களிலோ மட்டும் இல்லை. படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும், அதன் ஏதோ ஒரு காட்சி நம்முடன் பயணிக்கிறதே, அதுதான் கலையின் வெற்றி. பாச மலர், மூன்றாம் பிறை, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற கலைப்படைப்புகள் ஏற்படுத்திய தாக்கங்களைப் போல AI படங்களால் முடியுமா?
இதற்கான விடையை எதிர்காலத் திரையுலகமே சொல்லப்போகிறது.
