1.மாயக் கூடாரம்
“கூரையுமில்லை,
மெய்யுமில்லை;
பாசாங்குப் பகலொளியும் நிலவொளியும்
புனையப்பட்ட பொய்களே!”
எக்காளமிட்டபடி
மாயங்களின் கூடாரத்தை
வேரோடு பெயர்த்தெறிந்து
மண்ணோடு மண்ணாக்கினாள்
காற்றெனும் கொற்றவை!
ஏன்? எதற்கு? எப்படி?
வினாக்களின் கூர்முனைகள்
தைத்துக்கொண்டிருக்க,
ஏறெடுத்தும் பார்க்காதிருந்தாள்
அப்பெருந்தேவி!
வினாக்கள் ஒவ்வொன்றாய்
உதிர்ந்த பின்பே
துலங்கியது
எல்லையற்ற வெளி.
திசைகளைக் கிழித்துக்கொண்டு
முகிழ்த்தெழுகின்றன
அறிதலுக்கு அப்பாலான
எண்ணற்ற சாத்தியங்கள்!
கொற்றவை எப்போதுமே
கல்நெஞ்சக்காரிதான்!
கூடாரங்களைச் சிதைத்த பின்னரே
பிரம்மாண்டங்களைக்
காட்டித் தருவாள்.
2. மெல்லுடலி
மையச் சுடரின் நீட்சிகள்
திசையற்ற பெருங்கடலில்
எங்கெங்கோ மிதந்தலைகின்றன.
பிறர் சாயல் ஏற்க மறுத்துத் திரும்பும்
என் நீட்சிகளை
மெல்ல அணைத்துக்கொள்கிறேன்.
நீளும் கரங்கள்
ஒவ்வொன்றும் எனதே.
ஆனால் —
அவை நானல்ல!
எண்கர மெல்லுடலி நான்!
என் கரங்களின் நடனத்தை
எடைபோடும் கண்களுக்கு,
ஆழ்கடல் இருளில்
தனித்தொளிரும் என் உட்கரு
எங்ஙனம் புலப்படும்?

