கணிப்பொறியில் ’கவின் கார்த்திகா ஆல்பம்’ என்று பெயர் சூட்டியிருந்த ஃபோல்டரைத் தொட்டுத் திறந்தான் நாராயணன். அதில் ஆயிரத்து நூற்றியிருபத்தாறு படங்கள் இருந்தன.
“அவசரமில்லாம ஒன்னொன்னா பார்த்து ஆல்பத்துக்குத் தேவையான படங்கள ரெண்டு பேருமா செலக்ட் பண்ணுங்க. புடிச்ச படங்களுடைய நெம்பரை இந்தத் தாள்ல வரிசையா குறிச்சி குடுங்க”
ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து புதுமண ஜோடியின் பார்வையில் படும் வகையில் மேசையில் இருந்த மெளஸ்க்கு அருகில் வைத்துவிட்டுத் திரும்பி நடந்தான் நாராயணன். “தேங்க்ஸ்” என்றபடி இருவரும் அருகருகே இரண்டு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தனர். கல்யாணக்களை அவர்கள் முகத்தில் நிறைந்திருந்தது. இருவருமே ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்திருந்தனர்.
தன் மேசையை நோக்கித் திரும்பிய நாராயணனை “சார், ஒரு நிமிஷம் இங்க வரீங்களா?” என்று அழைத்தாள் பத்மா. கல்லா மேசையில் இருந்த கணிப்பொறியின் முன்னால் அவள் அமர்ந்திருந்தாள். “ஒன் செக்கெண்ட்” என்று சொல்லிக்கொண்டே பத்மாவை நோக்கிச் சென்றான் நாராயணன்.
“முத்தியால்பேட்டை வெட்டிங் ஆல்பத்துல மாப்பிள்ளையும் பொண்ணும் ஜோடியா இருக்கறமாதிரியான படத்தைத்தான் முதல் படமா வைக்கணும்னு சொல்லியிருந்தாங்க. ஒரு பன்னெண்டு படங்களை பார்த்துப் பார்த்து செலெக்ட் பண்ணி வச்சிருக்கேன். நீங்க ஒருதரம் பார்த்து பொருத்தமா எது இருக்கும்னு சொன்னீங்கன்னா, அந்த படங்களுக்கு மட்டும் பேக்ரவுண்ட் ஒர்க் வேலையை ஆரம்பிச்சிடலாம்”
நாராயணன் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்து ஒவ்வொரு படமாக இரண்டு,மூன்று முறை திரையில் நகர்த்தி நகர்த்திப் பார்த்தான். கடைசியாக நான்கு படங்களைத் தேர்ந்தெடுத்து “இதுக்கு மட்டும் பேக்ரவுண்ட் ஒர்க் செஞ்சி வைங்க. சாயங்காலம் பார்ட்டி வரும்போது இந்த நாலை மட்டும் காட்டுங்க. அவுங்களுக்கு எது புடிக்குதோ அதை ஆல்பத்துல வச்சிடலாம்” என்றான்.
நாராயணன் அங்கிருந்து நகர்ந்தபிறகு பத்மா தன் வேலையைத் தொடங்கினாள். நாராயணன் தன் மேசைக்குத் திரும்பி கணிப்பொறியைத் தொட்டு விட்ட இடத்திலிருந்து தன் வேலையைத் தொடர்ந்தான். நேரம் ஓடியதே தெரியவில்லை. ”ஆல்பத்துக்காக செலெக்ட் செஞ்ச படங்களுடைய நெம்பர்ங்கள இதுல வரிசையா எழுதியிருக்கோம்” என்ற குரல் கேட்ட பிறகே அவன் திரும்பினான். அவனுக்கு எதிரே புதுமண ஜோடி நின்றிருந்தது.
”அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா? சூப்பர்” என்று பாராட்டியபடி அந்தத் தாளை வாங்கி எண்களைப் பார்த்துக்கொண்டே எழுந்தான் நாராயணன்.
“இந்த நெம்பர்ல உள்ளதை மட்டும் தனியா ப்ரின்ட் எடுத்து ஆல்பமாக்கினா போதும். எல்லாமே மேட்ஃபினிஷிங்கா இருக்கணும். அது ரொம்ப முக்கியம். மறந்துடாதீங்க”
மாப்பிள்ளை சொன்ன குறிப்பை அந்தத் தாளிலேயே ஓரத்தில் எழுதியபடி “சரி” என்று தலையசைத்தான் நாராயணன்.
”மொத்தம் நூத்தி இருபது படங்கள் வருது. எல்லாத்தையும் ஒரே ஆல்பமா செய்யமுடியுமான்னு முயற்சி செஞ்சி பாருங்க. ஒருவேளை ஆல்பத்தை கையில புடிச்சி பிரிக்கறதுக்கும் பொரட்டிப் பார்க்கறதுக்கும் கஷ்டமா இருக்கும்னா ரெண்டு ஆல்பமாக்கிடலாம்”
“முதல்ல ப்ரின்ட் எடுக்கற வேலையை முடிச்சிக்கலாம். ஒரு ஆல்பமா, ரெண்டு ஆல்பமா எது பொருத்தமா இருக்கும்ங்கறத அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்”
“நல்லது. அதைத்தான் நானும் சொல்லணும்னு நெனச்சேன். அம்பது அறுபது வருஷம் கழிச்சி எடுத்துப் பார்த்தாலும் அந்த ஆல்பம் புத்தம் புதுசா இருக்கணும். அதுதான் முக்கியம். உங்க கல்யாணத்துக்குன்னு சொந்தமா ஒரு ஆல்பம் போட்டிருப்பீங்கல்ல. இதையும் அந்த மாதிரி சிரத்தையா செஞ்சிக் குடுங்க” என்றாள் மணமகள்.
அதைக் கேட்டதும் நாராயணனுக்குச் சிலிர்த்தது. ஒருகணம் உடல் ஒடுங்கி ஒரு மெல்லிய அதிர்வு ஏற்பட்டு அடங்கியது. ஆட்காட்டி விரலால் நெற்றியைத் தேய்த்தபடி கூச்சத்தோடு குனிந்து மேசையிலிருந்த ஒரு ரெஜிஸ்டரை இருந்த இடத்திலிருந்து எடுத்து சிறிது தொலைவில் நகர்த்திவைத்தவனாக “இன்னும் எனக்கு மேரேஜ் ஆகலை மேடம்” என்று மெல்லிய குரலில் தெரிவித்தான்.
அவள் உடனே வெட்கத்துடன் நாக்கை மடித்துக் கடித்துக்கொண்டாள். “அதனால என்ன? இன்னும் கொஞ்ச நாள்ல ஆகுமில்ல? அப்ப உங்களுக்குன்னு ஒரு ஆல்பம் தயாரிப்பீங்க இல்லயா, அந்த மாதிரி அட்டாச்மெண்ட்டோட செய்ங்க” என்றபடி அனைவருடைய கவனத்தையும் ஆல்பத்தின் பக்கம் திருப்பினாள் மணமகள்.
“ஒரு கொறையும் இல்லாம செஞ்சிக் கொடுக்கறேன் மேடம். எமரால்ட் ஸ்டுடியோவுக்கு எப்பவும் கஸ்டமர்ஸ் திருப்திதான் ரொம்ப ரொம்ப முக்கியம்” என்று சிரித்தான் நாராயணன். அவன் மனத்துக்குள் ஏதோ ஒரு பறவை சிறகடித்துப் பறப்பதுபோல இருந்தது.
”நீங்க குறிச்சி வச்சிருக்கிற வரிசையிலயே போட்டோஸ் வச்சிடலாமில்லையா?” என்று அவனாகவே ஒரு உரையாடலைத் தொடங்கினான்.
“ஆமாமாம். அந்த வரிசையிலயே இருக்கட்டும். அப்பதான் நல்லா இருக்கும். எதையும் மாத்தவேணாம்” என்றாள் மணமகள். தொடர்ந்து “எந்த பேப்பர்ல ப்ரிண்ட் போடுவீங்க? மாடல் காட்டறீங்களா?” என்று கேட்டாள்.
நாராயணன் சுவரோரமாக இருந்த ப்ரின்ட்டரின் அடுக்கிலிருந்து ஒரு தாளை மட்டும் எடுத்துவந்து கொடுத்தான். மணமகள் அதை வாங்கி அதன் முனையைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். பிறகு உதட்டைப் பிதுக்கியபடி அந்தத் தாளை மாப்பிள்ளையிடம் நீட்டினாள். அவனும் அந்தத் தாளை வாங்கி ஒரு கணம் தொட்டுப் பார்த்தான். பிறகு நாராயணனிடம் “இந்தப் பேப்பர் எத்தனை ஜி.எஸ்.எம்? அம்பதா? எழுபதா?” என்று கேட்டான்.
“இல்லை இல்லை. நூறு ஜி.எஸ்.எம்.” என்றான் நாராயணன்.
“ப்ளீஸ். நூறு போதாது. நீங்க இருநூறு ஜி.எஸ்.எம்.லயே ப்ரிண்ட் போடுங்க. உறுதியா இருக்கணும். அதுதான் முக்கியம். காஸ்ட் டிஃபரன்ஸ் பத்தி கவலைப்படவேணாம். கூடுதலா என்ன செலவாகுதோ அதை நாங்க குடுத்துடறோம்.”
நாராயணன் அதையும் தன்னிடம் இருந்த தாளில் குறித்துக்கொண்டான்.
“படத்துடைய சைஸ் எப்படி இருக்கும்?” என்று கேட்டாள் மணமகள். நாராயணன் சுவரையொட்டி இருந்த அடுக்கில் ஃப்ரேம் போட்டு வைத்திருந்த சில மாதிரிப்படங்களை எடுத்து அவர்கள் முன்னால் வைத்தான்.
“ஆல்பத்துல வைக்கற படங்களுக்கு பதினஞ்சி இருபது சைஸ்தான் பொருத்தமா இருக்கும் மேடம். அதைவிட குறைச்சா போஸ்ட்கார்ட் மாதிரி ஆயிடும். பெரிசாக்கினா நோட்புக் மாதிரி ஆயிடும்”
இருவரும் ஒரு நிமிடம் தமக்குள் பேசிக்கொண்டனர். பிறகு “சரி, நீங்க சொல்ற சைஸே இருக்கட்டும். எல்லாரும் வழக்கமா எட்ஜ்ல கட்டம் கட்டி வெள்ளையா இடம் விடறமாதிரி எதையும் விடவேணாம். முழு அளவுலயும் படமே இருக்கணும். அப்பதான் அழகா இருக்கும்” என்றான் மணமகன்.
நாராயணன் புன்னகைத்தவாறே அதையும் குறித்துக்கொண்டான்.
“கலெக்ட் பண்ணறதுக்கு எப்ப வரலாம்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் மணமகள்.
“நீங்க வரவேணாம் மேடம். ஆல்பத்தை நானே கொண்டுவந்து வீட்டுல கொடுக்கறேன். இப்ப சிஸ்டத்துல நீங்க பார்த்த எல்லாப் படங்களையும் ஒரு பென் ட்ரைவ்ல போட்டு கொண்டுவந்து கொடுக்கறேன். அது உங்களுக்கு எங்க ஸ்டுடியோ கிஃப்ட்”
“சரி” என்றுபடி இருவரும் திரும்பி மிக இயல்பாக கைகளைக் கோர்த்தபடி நடந்து படியிறங்கிச் சென்றார்கள். நாராயணனின் பார்வை அவனையறியாமல் அவர்கள் மீது பதிந்து திரும்பியது.
“என்ன நாராயணன் சார்? உங்க சொந்த ஆல்பம் எப்ப தயார் பண்ணப் போறீங்க?”
கணிப்பொறியில் ஏதோ ஒரு படத்தைத் திருத்திக்கொண்டிருந்த பத்மா புன்னகை படர்ந்த முகத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
நாராயணன் அவள் பக்கமாகத் திரும்பி வெட்கத்துடன் சிரித்தான். “என்னமோ தெரியலை, இன்னைக்கு நான் எல்லாருக்கும் ஒரு விளையாட்டுப் பொம்மையாயிட்டேன் போல” என்றான்.
“சாரி சார். நான் சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க”
“ஓ.கே. ஓ.கே” என்றபடி மணமக்கள் கொடுத்துவிட்டுச் சென்ற தாளை எடுத்துக்கொண்டு கணிப்பொறியின் பக்கம் சென்றான். தாளில் குறிக்கப்பட்டிருந்த எண்களுக்குரிய படங்களை மட்டும் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்து தனியே தொகுத்தான்.
பத்மா “மேகம் தெரண்டு மழை வர்ரதுமாதிரி ஒருத்தவங்க வாழ்க்கையில கல்யாணம் தெரண்டு வர்ரதுக்கும் ஒரு கணக்கு உண்டுன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க” என்றாள். “அந்தக் கணக்கை சாதாரண மனுஷனால ஒருபோதும் புரிஞ்சிக்க முடியாது”
“ஓ” என்றான் நாராயணன்.
”இப்ப வந்துட்டு போனாங்களே இந்தப் பொண்ணும் புள்ளையும் யாருன்னே நமக்குத் தெரியாது. கல்யாணத்துல படம் புடிக்க அவுங்க நம்ம ஸ்டுடியோவைத் தேடி ஏன் வரணும்? இந்தப் பாண்டிச்சேரியில இருபது முப்பது ஸ்டுடியோங்க இருக்குது. எல்லாத்தயும் விட்டுட்டு அவுங்க ஏன் இந்த எமரால்ட் ஸ்டுடியோவுக்கு வந்து ஆர்டர் கொடுக்கணும். ஏதோ ஒரு கணக்குதான் அவுங்கள இந்தப் பக்கம் தள்ளிடுச்சி.”
“அது சரி. எல்லாத்தையும் நமக்கு சாதகமா பார்க்கறதுக்கு நல்லாதான் இருக்குது” என்று சிரித்தான் நாராயணன். அவனுக்கு அவள் சொல்ல வரும் விஷயம் புரியவில்லை. ஆனால், அவள் சொன்னதைக் கேட்டபோது அவன் உடல் சிலிர்த்தது.
அவனால் அந்த இடத்தில் அவளோடு தொடர்ந்து உரையாடியபடி அமர்ந்திருக்க முடியவில்லை. ”எரநூறு ஜி.எஸ்.எம். பேப்பர் ஸ்டாக்ல இல்லை. நான் நேரு ஸ்ட்ரீட் வரைக்கும் போய் ஒரு கட்டு வாங்கிட்டு வரேன்” என்றபடி எழுந்து வெளியே சென்றான்.
“வண்டி எடுக்கலையா?”
“கொஞ்ச தூரம்தான, நடந்தே போயிட்டு வரேன். மாணிக்கம் அண்ணன் போன்ல கூப்ட்டா விஷயத்தை சொல்லுங்க”
கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு படியிறங்கி தெருவில் நடக்கத் தொடங்கினான். இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் சீறிப் பறந்தபடி இருந்தன. விதவிதமான ஹார்ன் சத்தங்கள். முற்றிலும் புதிய முகங்களுக்கு நடுவில் நடக்க நடக்க பதற்றம் குறைந்தது.
மணமகளைப்போல அறிமுகமற்றவர்கள் மட்டுமல்ல, ஒருசில அறிமுகமான ஆட்கள் கூட அவனைத் திருமணமானவன் என்றே நினைத்தார்கள். அவனுடைய தோற்றம் எப்படியோ அந்த எண்ணத்தை அவர்களிடம் உருவாக்கியது. அதை அவனால் தடுக்கமுடியவில்லை.
எல்லோருக்கும் இருப்பதுபோல தன்னுடைய அம்மாவும் அப்பாவும் உயிருடன் இருந்திருந்தால் ஒருவேளை தனக்கும் திருமணம் நடந்திருக்கலாம் என்று அடிக்கடி அவன் நினைத்துக்கொள்வான். அவன் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். கிரிவலம் செய்வதற்காக திருவண்ணாமலைக்குச் சென்று திரும்பிய இருவரும் ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அதற்குப் பிறகு அவனை வளர்த்தது, படிக்கவைத்தது எல்லாமே அவன் அப்பாவைப் பெற்ற ஆயாதான்.
ப்ளஸ் டு முடித்ததும் அவனாகவே படிப்பை நிறுத்திவிட்டான். கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடருமாறு ஆயா சொன்னதை அவன் கேட்கவில்லை.
ஒருநாள் வீராம்பட்டினத்தில் வசிக்கும் நண்பனைச் சந்தித்துவிட்டு கடற்கரை ஓரமாக வேடிக்கை பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான். பொங்கிப்பொங்கி வந்து முன்னோக்கிச் செல்லமுடியாமல் திரும்பும் அலைகளைப் பார்த்தபோது ஒரு காரணமும் இன்றி வருத்தமாக உணர்ந்தான். அப்போது, மணல் சரிவாகக் காட்சியளிக்கும் பகுதியில் ஒரு படப்பிடிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. உடனே அந்த இடத்துக்குச் சென்று நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அது ப்ரீ வெட்டிங் ஷூட் என்பது புரிந்தது. குடை போல வடிவமைக்கப்பட்டிருந்த இரண்டு ஃபில்டர்களை கைக்கு ஒன்றாகப் பிடித்தபடி ஒரு பையன் மணமக்களை ஒட்டி நடப்பதையும் எதிர்ப்புறத்தில் கேமிராவோடு நின்றுகொண்டு ஒருவர் படம் பிடிப்பதையும் அவன் பார்த்தான்.
குடை வைத்திருந்தவனைப் பார்த்து “இன்னும் உயரமா தூக்கிப் புடி” என்று கேமிராக்காரர் சத்தமாகச் சொன்னார். அவர் எதிர்பார்த்த உயரம் அவனுடைய சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவன் தவிப்பதைப் பார்த்ததும் நாராயணன் தானாகவே அந்தப் பக்கமாக நடந்துசென்று அவனிடமிருந்து குடையை வாங்கி போதுமான உயரத்தில் தூக்கிப் பிடித்தான். அவனுடைய உயரமான உடல்வாகு அதற்கு இசைவாக இருந்தது. கேமிராமேன் திருப்தியுற்றவராக மணமக்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்தார்.
இருட்டு கவியும் வரைக்கும் அந்தப் படப்பிடிப்பு நடைபெற்றது. எல்லா உபகரணங்களையும் திரட்டி உறையிலிட்டு வண்டியில் ஏற்றும் வரைக்கும் நாராயணன் அந்தக் குழுவுக்கு உதவியாக இருந்தான்.
“எந்த ஊரு தம்பி நீ? வீராம்பட்டினமா?”
“இல்லைண்ணே. நெல்லித்தோப்பு. எனக்குத் தெரிஞ்ச ஒரு கூட்டாளியைப் பார்க்கறதுக்காக இங்க வந்தேன்”
ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக்கேட்டு நாராயணனைப்பற்றிய எல்லா விவரங்களையும் அவர் தெரிந்துகொண்டார். புறப்படும் சமயத்தில் ”இந்த ஷூட்டிங் தொழிலுக்கு பொறுமைதான் ரொம்ப ரொம்ப முக்கியம். அடுத்து ஒரு தரம் சொல்றத சட்டுனு புரிஞ்சிகிட்டு நடக்கணும். ரெண்டும் உங்கிட்ட இருக்குது. ஸ்டுடியோவுக்கு வரியா?” என்று கேட்டார்.
தனக்கென ஒரு வாசல் அப்படி எதிர்பாராத ஒரு தருணத்தில் திறக்கும் என நினைத்திராத நாராயணன் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றான்.
“வீட்டுல பெரியவங்க யாரு இருக்காங்க?”
“ஆயா மட்டும்தான் சார்”
“அம்மா அப்பா?”
“இல்லை சார். ஒரு ஆக்சிடெண்ட்ல ரெண்டு பேரும் போயிட்டாங்க”
“சரி, ஆயாகிட்ட கலந்து பேசிட்டு நாளைக்கு காலையில பத்து மணிக்கு எமரால்ட் ஸ்டுடியோவுக்கு வா”
“எந்த இடம் சார்?”
“எமர்லாட் ஸ்டுடியோ தெரியாதா? நேரு ஸ்ட்ரீட் பக்கத்துல ரங்கப்பிள்ளை தெருவுக்கு வந்து ஸ்டுடியோ பேரச் சொல்லி கேளு. வழி சொல்வாங்க”
அவர் தன் கைப்பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார். அதைப் பார்த்தபோதுதான் அவருடைய பெயர் மாணிக்கம் என்று தெரிந்துகொண்டான்.
அன்று இரவு ஆயாவிடம் நடந்ததையெல்லாம் ஒரு கதை சொல்வதைப்போல முழுமையாகச் சொன்னான். “படிக்கறதவிட வேலைக்குப் போவறதுதான் உனக்கு புடிச்சிருக்குதா? இப்படித்தான் நடக்கணும்னு உன் தலையில எழுதியிருந்தா நான் எப்படி தடுக்கமுடியும்? போ. போ. மகராசனா போய் சேரு. எங்க இருந்தாலும் நல்லவன்னு பேர் எடு” என்றாள் ஆயா.
அடுத்தநாள் காலையில் எமரால்ட் ஸ்டுடியோவுக்குச் சென்றான். அவனுடைய சுறுசுறுப்பும் வேகமும் மாணிக்கத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. ஷூட்டிங் வேலைகளையும் ஸ்டுடியோ வேலைகளையும் கேமிராவைக் கையாளும் நுட்பங்களையும் படிப்படியாக அவனுக்குச் சொல்லிக்கொடுத்தார் மாணிக்கம். பத்து வருஷ காலத்தில் எமரால்ட் ஸ்டுடியோ அவனுக்குக் குருகுலமாக மாறிவிட்டது.
மெட்ராஸ் பேப்பர் மார்ட் கடையில் பேப்பர் வாங்கிக்கொண்டு திரும்பினான் நாராயணன். தெருமுனையில் இருந்த டீக்கடையில் நின்று ஒரு டீ குடித்தான். கடையைவிட்டுப் புறப்படும்போது இருந்த பரபரப்பு அடங்கியதுபோல இருந்தது.
கதவைத் தள்ளிக்கொண்டு கடைக்குள் நுழைந்தபோது ரங்கசாமி மாமா உட்கார்ந்திருப்பதைக் கண்டு திகைத்தான். அம்மாவுடைய பெரியப்பா மகன் அவர். ஒருநாளும் ஸ்டுடியோ பக்கம் வராத அவர் எந்தக் காரணத்துக்காக வந்திருப்பார் என எதைஎதையோ நினைத்துக் குழம்பினான். காலம்காலமாகப் பேசிப் பழகியவரைப்போல அவர் பத்மாவுடன் எதைப்பற்றியோ உற்சாகமுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“எப்ப வந்தீங்க மாமா?” என்று கேட்டபடியே அருகில் வந்தான் நாராயணன்.
“அரைமணி நேரமா உனக்காக உக்கார்ந்திருக்கேன். இதோ அஞ்சி நிமிஷத்துல வந்துருவாரு, பத்து நிமிஷத்துல வந்துருவாருன்னு இந்தப் புள்ள சொல்லிட்டே இருந்ததால நானும் இப்படியே உக்காந்திட்டேன்”
“எதாவது முக்கியமான வேலையா கடைத்தெரு பக்கமா வந்தீங்களா மாமா?”
“கடைத்தெருவுல எனக்கு என்னப்பா முக்கியமான வேலை இருக்குது? அதையெல்லாம் உங்க அத்தை பார்த்துக்கும். நான் உன்னைப் பார்த்து ஒரு விஷயம் பேசிட்டுப் போவலாம்னுதான் வந்தேன்”
அவர் எதைப்பற்றிப் பேசுகிறார் என்பது புரியாமல் குழப்பத்துடன் அவருடைய முகத்தைப் பார்த்தான் நாராயணன்.
“இதைச் சொல்லணும்னு நான் நாலு நாளா வீட்டுக்கு நடையா நடக்கறேன். நான் வர நேரத்துல நீ வீட்டுலயே இருக்கறதில்லை. நீ இருக்கற நேரத்துல என்னால வரமுடியறதில்லை. இன்னிக்கும் காலையில வீட்டுக்குத்தான் போனேன். பெரியம்மாதான் உக்காந்திருந்தாங்க. நீ காலையிலயே சீக்கிரமா கெளம்பி போயிட்டன்னு சொன்னாங்க”
“என்ன விஷயம் மாமா?”
“வில்லியனூருல சிவன் கோயில் தெருவுக்குப் பின்னால ஒரு ஊட்டுல பொண்ணு பார்க்க போயிருந்தமே ஞாபகமிருக்குதா?”
இப்படி அவர் திடுதிப்பென்று அந்த விஷயத்தைத் தொடங்குவார் என்று அவன் நினைத்தே பார்க்கவில்லை. எப்படியாவது அவரை கடைக்கு வெளியே அழைத்துச் சென்று பேச்சைத் தொடரவேண்டும் என்று பரபரத்தான். ஆனால் அவனுடைய உடலசைவுகளையோ சைகைகளையோ எதையுமே அவர் பொருட்படுத்தவே இல்லை. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுவதுபோல அவரிடமிருந்து சொற்கள் கொட்டிக்கொண்டே இருந்தன.
”அண்ணன்காரன் பெங்களூருல இருக்கறான். அவன் லீவுல வரும்போது நம்ம வீட்டுக்கு வந்து பேசிட்டு அப்பறமா முடிவெடுக்கலாம்னு சொல்லி வச்சிருந்தாங்களே, ஞாபகம் இருக்குதா?”
இனி அவரைக் கட்டுப்படுத்தவே முடியாது என்பது புரிந்ததும் சோர்வோடு அவர் முகத்தையே பார்த்தபடி நின்றான் நாராயணன்.
“அதுக்கு அவசியமே இல்லாம போயிடுச்சி இப்ப. நாலு நாளைக்கு முன்னால என்ன செல்லுல கூப்ட்டு விஷயத்தைச் சொன்னாங்க”
நாராயணன் எந்தப் பதிலையும் சொல்லாமல் அவர் சொல்வதைக் கேட்டபடி நின்றான்.
”போன வாரம் அந்த ஊர் லட்சுமி கல்யாண மண்டபத்துக்குப் போயிருந்தியா?”
“ஆமாம் மாமா. அந்தக் கல்யாணத்துல படம் புடிக்கற ஆர்டர நம்ம ஸ்டுடியோவுக்குத்தான் கொடுத்திருந்தாங்க. ஏன்? இப்ப என்ன அதுக்கு?”
“அதுக்கு ஒன்னுமில்லை. அங்க பொண்ணு மாப்பிள்ளையை அங்கங்க நிக்கவச்சி படம் புடிக்கறத அந்த வீட்டுப் பொண்ணு பார்த்திருக்குது போல. பொண்ணு பிள்ளை பின்னால நீ குடைவிளக்குகளைப் பிடிச்சிட்டு நிக்கறதயும் ஓடறதயும் இங்க இருக்கறதத் தூக்கி அங்க வைக்கறதையும் அங்க இருக்கறததைத் தூக்கி வந்து இங்க வைக்கறதையும் பார்த்துட்டு அதுக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சாம். வீட்டுக்கு வந்ததுமே, ஸ்டுடியோவுல கேமிராமேனா இருக்காருன்னுதான சொன்னீங்க, அங்க பார்த்தா எல்லாருக்கும் எடுபுடி மாதிரி ஓடி ஓடி வேலை செய்யறாரு, வேணாம்னு சொல்லிடுங்கப்பான்னு அவுங்கப்பாகிட்ட சொல்லிச்சாம்.”
அதைக் கேட்டதும் என்ன சொல்வதென்று புரியாமல் ஒருகணம் அமைதியாக இருந்தான். இப்படி முதலில் ஏற்கப்பட்டு பிறகு மறுக்கப்படுவது ஒரு தொடர்கதையாகவே அவன் வாழ்வில் மீண்டும் மீண்டும் நடந்துவந்தது. ”போனா போவட்டும் விடுங்க மாமா? இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். அவன் கட்டுப்பாட்டை மீறி அவனுடைய சிரிப்பில் கசப்பு வெளிப்பட்டுவிட்டது. நாராயணனுக்கு அவர் எழுந்துபோனால் போதும் என்று சலிப்பாக இருந்தது. ஆனால் அந்த முனைப்பே இல்லாமல் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
“ஆயாகிட்ட இதைப்பத்தி எதையாவது பேசனீங்களா?” என்று அவசரமாகக் கேட்டான் நாராயணன்.
“இல்லப்பா நாராயணா. நான் ஒரு வார்த்தை கூட இதைப்பத்தி பெரியம்மாகிட்ட சொல்லலை. உங்கிட்டதான் இதைப்பத்தி மொதமொதல்ல பேச்சையே ஆரம்பிக்கறேன்”
“சரி. அப்படியே இருக்கட்டும். நீங்க வீட்டுக்குப் போங்க. நான் அப்பறமா வந்து பாக்கறேன்”
”என்னைப்பத்தி நெனச்சா எனக்கே அவமானமா இருக்குது நாராயணா. நம்ம சொந்த வகையறாவுல ஒரு இருபது பேருக்காவது நான் சம்பந்தம் பார்த்து நல்லபடியா முடிச்சி வச்சிருக்கேன். என் சொந்தப் புள்ள மாதிரி நீ. உனக்குத் தோதா ஒரு பொண்ண உன் முன்னால கொண்டுவந்து நிறுத்தமுடியலை. எல்லாப் புள்ளைங்களும் முதல்ல ம்னு சொல்லிட்டு கடைசியில ம்ஹூம்னு சொல்லிடுதுங்க. இந்தக் காலத்துப் புள்ளைங்களையே புரிஞ்சிக்க முடியலை. அந்தக் கடவுள் உன்ன சோதிக்கறானா, என்ன சோதிக்கறானான்னே தெரியலை”
கதவைத் திறந்துகொண்டு “ஒரு ஃபோட்டோ எடுக்கணும்” என்றபடி ஒரு ஜோடி உள்ளே வந்தது. அக்கணமே “வாங்க வாங்க” என்று அவர்கள் பக்கமாகச் சென்றான் நாராயணன். “பையை அங்க வச்சிட்டு உள்ள போங்க. உள்ள கண்ணாடி, பவுடர்லாம் இருக்குது” என்றபடி படம் பிடிக்கும் அறையைக் காட்டினான். அவர்கள் பின்னாலேயே சென்று சுவரில் இருந்த ஸ்விட்ச்களைப் போட்டான். அறைமுழுக்க வெளிச்சம் நிறைந்தது.
“எந்த மாதிரி படம் வேணும்?”
“ரெண்டு பேருக்கும் தனித்தனியா வேணும். பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும்”
“சரி. அதுக்கு மூன்றைக்கு நால்றை சைஸ். தலை கலைஞ்சிருக்கு பாருங்க. நிதானமா சரிபண்ணிட்டு ரெடியாகுங்க”
சொல்லிவிட்டு சுவரோரமாக நிறுத்தி வைத்திருந்த கேமிரா ஸ்டாண்டை எடுத்துச் சென்று கூடத்தில் வைத்து அதன் மேற்பரப்பில் கேமிராவை நிறுத்திப் பொருத்தினான்.
முதலில் அந்தப் பெண் திரைக்கு அருகில் சென்று நின்றாள். அளவான வெளிச்சம் அவள் முகத்தில் விழும்வகையில் நிறுத்தி படம் எடுத்தான் நாராயணன். அடுத்து அந்த இளைஞனின் படத்தையும் எடுத்தான். பிறகு இருவரையும் அழைத்து கேமிராவில் பதிவாகியிருக்கும் அவர்களுடைய படங்களைக் காட்டினான். அவர்கள் திருப்தியாக தலையசைத்தனர்.
“ஒரு அஞ்சி நிமிஷம் உக்காருங்க. ப்ரின்ட் போட்டு கொடுக்கறேன்”
கேமிராவிலிருந்து பென் டிரைவுக்கு மாற்றிவந்து கணிப்பொறித் திரையில் ஒளிரச் செய்து பின்னணியைப் பிசிறில்லாமல் தூய்மையாக்கிவிட்டு வெண்ணிறமாக்கினான் நாராயணன். பக்கத்தில் நின்றிருந்த பெண் “ஏன் சார்? பின்னணியை முழுக்கமுழுக்க வெள்ளையா மாத்தறீங்க?” என்று கேட்டாள். “பாஸ்போர்ட்டுக்கு ஒயிட் பேக்ரவுண்ட்லதான் போட்டா இருக்கணும். அதான் ரூல்ஸ்” என்று பதில் சொன்னபடி ப்ரிண்ட் கொடுத்தான். ஒரு அட்டையில் எட்டு படங்கள் வந்தன. அனைத்தையும் அளவாக நறுக்கி ஒரு காகித உறையில் போட்டு அவர்களிடம் கொடுத்தான்.
“பணம்?” என்றபடி பர்சை எடுத்தான் இளைஞன். “அங்க, அந்த மேடத்துகிட்ட கொடுங்க” என்று பத்மாவின் பக்கம் கைகாட்டி அனுப்பிவைத்தான் நாராயணன். அவர்கள் பணம் கொடுத்துவிட்டு வெளியேறினர்.
மாமா எதற்காகவோ எழுந்து செல்ல மனமில்லாமல் அந்தக் கூடத்திலேயே அமர்ந்திருப்பதைப் பார்க்க வருத்தமாக இருந்தது.
“ஒரு நேரம் வந்தா எல்லாம் தானா நடக்கும்னு நீங்கதான சொல்வீங்க மாமா? இப்ப எதுக்கு மனசு சங்கடப்படறீங்க? எதையும் வீணா மனசுக்குள்ள நெனச்சி குழப்பிக்காம வீட்டுக்குப் போங்க” என்று நிதானமான குரலில் சமாதானமாகச் சொல்லி புறப்படவைத்தான்.
“போறேன் போறேன்” என்றபடி பெருமூச்சு விட்டபடி மாமா எழுந்தார். நான்கு பக்கச் சுவர்களிலும் ஆங்காங்கே அலங்காரமாகத் தொங்கிக்கொண்டிருந்த படங்களைப் பார்த்தார். ஒருபக்கம் குழந்தைகளின் படங்கள். இன்னொரு பக்கம் கல்யாண ஜோடிகளின் படங்கள். மற்றொரு பக்கத்தில் இயற்கைக்காட்சிகள். பிறிதொரு பக்கத்தில் சாமி படங்கள். ஒவ்வொரு படத்தையும் நிதானமாகக் கவனித்த மாமா “இத்தன சாமிங்க தொங்குது. நடக்கறது எல்லாத்தையும் பார்த்துகிட்டுதான இருக்குது. எதாவது ஒன்னாச்சிம் கண்ணு தெறந்து நல்ல வழியைக் காட்டணும்” என்று முனகியபடி அடியெடுத்து வைத்தார்.
பத்மாவை நெருங்கியதும் மாமா அவளிடம் “கவலைப்படாத கண்ணு. வர கார்த்திகைக்குள்ள உன் கழுத்துல தாலி தொங்கும். நான் சொல்றது நடக்குதா இல்லையான்னு பார்த்துட்டே இரு” என்று சொல்லிவிட்டு கதவைத் திறந்துகொண்டு வெளியேறினார்.
ஏதோ நீண்டதொரு உரையாடலின் தொடர்ச்சியாக அந்த வார்த்தைகளை பத்மாவிடம் சொல்லிவிட்டு வெளியேறும் மாமாவைக் குழப்பத்துடன் பார்த்தான் நாராயணன். அதே குழப்பத்துடன் பத்மாவையும் பார்த்தான். மெதுவான குரலில் “உங்ககிட்ட ஏதாச்சும் பேசிட்டிருந்தாரா?” என்று கேட்டான்.
பத்மா புன்னகைத்தபடி ஆமாம் என்பதுபோல தலையசைத்தாள்.
நாராயணன் உடனே பதற்றமடைந்தான். “நல்ல மனுஷன்தான் எங்க மாமா. ஆனா சூழல் சந்தர்ப்பம் தெரியாம ஏதேதோ பேசுவாரு. தப்பா நினைச்சிக்காதீங்க”
“ஐயையோ. நீங்க நெனைக்கறமாதிரியெல்லாம் அவர் ஒரு வார்த்தை கூட தப்பா பேசலை. என் கதையைக் கேட்டு எனக்கு ஆறுதலா, மனசுக்கு நிம்மதி குடுக்கற மாதிரிதான் பேசனாரு.”
“என்ன சொல்றீங்க நீங்க? எங்க சொந்தத்துல அவரை லொடலொடனு சம்பந்தாசம்பந்தம் இல்லாம பேசறவருன்னு கிண்டல் பண்றவங்கதான் அதிகம்.”
“அது எதுவும் எனக்குத் தெரியாது. என்கிட்ட நல்லாதான் பேசனாரு. எங்க குடும்பத்தைப் பத்தி ரொம்ப அக்கறையோடு விசாரிச்சாரு. கைரேகையைப் பார்த்து ஜோசியம்லாம் சொன்னாரு.”
என்ன சொன்னாரோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டானே தவிர, பத்மாவிடம் எதையும் கேட்கவில்லை நாராயணன். ஒருபக்கம் கேட்கும் ஆர்வம் எழுந்தாலும் மறுபக்கம் உருவான அச்சத்தால் அமைதியாக தன் மேசைக்குச் சென்றான்.
சொல்வதற்கு ஏதேனும் இருந்தால் அவளாகச் சொல்லட்டும் என நினைத்தான் நாராயணன். அவன் அமைதியையும் குழப்பத்தையும் முகம் சிவக்க விலகிச் செல்வதையும் ரசித்தாள் பத்மா. ஏதாவது தேவையென்றால் அவனாகவே கேட்கட்டும் என நினைத்தாள்.
சில நிமிடங்கள் இருவருமே தத்தம் கணிப்பொறித் திரையில் மூழ்கியிருந்தனர்.
பத்மா மெதுவாக “உங்கள பத்தியும் உங்க ஆயாவைப்பத்தியும் கூட உங்க மாமா சொன்னாரு” என்று தொடங்கினாள்.
“என்னைப் பத்தியா?” என்று திகைப்போடு கணிப்பொறித் திரையிலிருந்து பார்வையை விலக்கி பத்மாவைப் பார்த்தான் நாராயணன். “என்ன சொன்னாரு?” என்று கேட்பதற்குள் அவன் தொண்டை வறண்டுவிட்டது.
“ஏழெட்டு லட்ச ரூபாய் சேர்த்து, சொந்தமா கேமிராங்கள வாங்கி ஸ்டுடியோ ஆரம்பிக்கப் போறேன்னு அடிக்கடி சொல்வீங்களாமே. மகாலட்சுமி ஸ்டுடியோன்னு பேர் கூட செலெக்ட் பண்ணி வச்சிருக்கீங்களாமே, உண்மையா?”
அதைக் கேட்டதும் எல்லோரிடமிருந்தும் மறைத்துவைத்திருந்த ஒரு ரகசியத்திட்டம் வெளிப்பட்டுவிட்டதுபோல வெட்கத்துடன் ஒருகணம் கண்களை மூடிக்கொண்டான். அவன் முகம் சிவந்தது. பிறகு மெல்ல கண்களைத் திறந்து அவளைப் பார்த்து நிதானமான குரலில் “ஆமாம். அப்பதான சொந்தக் கால்ல நிக்கறவன்னு ஊரு உலகத்துல ஒரு மரியாதை இருக்கும். ஊரு உலகத்தைக் கூட விடுங்க. நமக்கே நம்மபத்தி அப்பதான ஒரு மரியாதை, தன்னம்பிக்கை எல்லாம் உருவாகும். அதுல ஏதாவது தப்பு இருக்குதா என்ன?” என்று கேட்டான். பிறகு அவள் விழிகளை ஆவலோடு பார்த்தான்.
”ஓரு தப்பும் இல்லை” என்றாள் பத்மா. “உங்க ஆயா வீட்ட வித்து உங்களுக்குத் தேவையான பணத்த எடுத்துக்கச் சொன்னாங்களாம். நீங்கதான் அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு வீராப்பா சொல்லிட்டீங்களாம்”
“வீராப்புக்காக சொல்லலை. மனசாரதான் சொன்னேன். எங்க ஆயா இந்த ஊருக்கு கல்யாணம் பண்ணிகிட்டு வந்த நாள்லேர்ந்து வாழ்ந்துவரக்கூடிய வீடு அது. அதையும் வித்துட்டா அவுங்களுக்குப் போக்கிடம்னு என்ன இருக்குது?”
“ஏன் நீங்க காப்பாத்த மாட்டீங்களா?”
“நான் காப்பாத்துவேன். எனக்கு அந்த சக்தி இருக்குது. என்னால அவுங்கள ராணி மாதிரி வச்சிக் காப்பாத்தமுடியும். ஆனா அது வேற. அவுங்க தன்னுடைய வீட்டுல வாழற கெளரவம்ங்கறது வேற. ரெண்டுக்கும் இருக்கற வித்தியாசம் உங்களுக்குப் புரியலையா?”
“நல்லாவே புரியுது”
இமைகளை மூடி ஒருகணம் தலையசைத்துவிட்டு புன்னகைத்தாள் பத்மா.
“புரிஞ்சிகிட்டே அப்புறம் எதுக்கு இந்தக் கேள்வியைக் கேக்கறீங்க?”
“என்ன பதில் வருதுன்னு பார்க்கத்தான். இன்னொரு கேள்வி பாக்கி இருக்குது. கேக்கட்டுமா?”
“கேளுங்க, கேளுங்க. ஆனா எதுக்கு இந்த டெஸ்ட்னுதான் புரியலை”
“குருவி மாதிரி நாலு லட்ச ரூபாய் சேத்துட்டீங்களாம். இன்னும் ரெண்டுமூனு லட்சம் சேர்ந்துட்டா உங்க லட்சியவாழ்க்கையைத் தொடங்கிடலாம்னு சொன்னீங்களாமே”
நாராயணன் வெட்கம் படர்ந்த பார்வையோடு அவளைப் பார்த்து புன்னகைத்தபடி ஆமாம் என்பதுபோலத் தலையசைத்தான்.
“உங்க லட்சியத்தைப் புரிஞ்சிகிட்டு யாராவது அந்தப் பணத்தை உங்களுக்குக் கொடுத்தா வாங்கிக்குவீங்களா?”
“என்ன விளையாடறீங்களா நீங்க? ஒரு ரூபாயா, ரெண்டு ரூபாயா? ரெண்டுமூனு லட்சம்ங்க. இந்தானு தூக்கி யாரு குடுப்பாங்க இந்தக் காலத்துல”
பத்மா நாராயணனின் விழிகளை ஒருகணம் நேருக்கு நேராகப் பார்த்தாள். பிறகு புன்னகை படர்ந்த முகத்துடன் அமைதியான குரலில் “நான் தரேன். உங்க லட்சியத்துக்கு ஆதரவா நான் நிக்கறேன்” என்றாள்.
பத்மாவின் சொற்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள நாராயணனுக்கு ஒரு கணம் தேவைப்பட்டது. அதன் பொருள் புரிந்ததும் பத்மாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து புன்னகைத்தான். அவன் மனம் மலர்ந்துவிட்டது. உடல் சிலிர்த்தது. ஒருகணம் அவன் கண்கள் கலங்கின.
நீண்ட நேரம் பத்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை நினைத்து திடீரென ஒரு வெட்கம் அவன் நெஞ்சில் தோன்றியது. சட்டென திரும்பி மேசைமேல் வைத்திருந்த ஏதோ ஒன்றைத் தேடுவதுபோல சாமான்களை அங்குமிங்கும் புரட்டினான். ஆனால் மெய்மறந்த உணர்வால் எழுந்து முகத்தில் தன்னிச்சையாகப் படர்ந்த புன்னகையை அவனால் மறைக்கமுடியவில்லை.
அவன் உடலசைவுகளை ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்தாள் பத்மா. ”என்ன பதிலையே காணோம். உங்க மகாலட்சுமி ஸ்டுடியோ லட்சியம் இனிமே நம்ம ரெண்டு பேருக்குமான லட்சியம். சரியா?” என்று ஆவலோடு அவனைப் பார்த்துக் கேட்டாள் பத்மா.
நாராயணன் சிரித்தபடி தலையைத் திருப்பி “இந்தப் பக்கம் வாங்க. நூத்தி இருபது ப்ரிண்ட் எடுக்கணும். அப்பத்தான் இந்தக் கல்யாண ஆல்பம் வேலை முடியும்” என்று சம்பந்தமில்லாமல் எதையோ சொன்னான்.
அதைக் கேட்டதும் பத்மா புன்னகைத்தாள். அந்தப் புன்னகை மாறாமலேயே ப்ரின்ட்டரை நோக்கிச் சென்றாள்.

