நைஜீரிய தேசபக்தர், ஓகோனி தேசியவாதி, ஆப்பிரிக்க சுற்றுச்சூழல் இயக்கத்தின் தந்தை, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர், தொலைக்காட்சித் தயாரிப்பாளர் என நைஜீரியாவின் பன்முகத்தன்மை கொண்ட ஒரு வரலாற்று நாயகர் கென் சரோ-விவா. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் நைஜீரியாவின் நைஜர் டெல்டா பகுதிவாழ் ஓகோனி (Ogoni) பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நிலத்தில் நடந்த சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராகவும் கென் சரோ-விவா போராடினார். சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பெருநிறுவனச் சுரண்டலுக்கு எதிரான ஓகோனி மக்களின் அமைதியான போராட்டத்திற்கு வழிகாட்டுவதற்காக, கென் சரோ-விவா மகாத்மா காந்தியின் அகிம்சை எதிர்ப்புத் தத்துவத்திலிருந்து ஆழ்ந்த உத்வேகம் பெற்றார். ஓகோனி நிலப்பகுதியில் ஷெல் (Shell) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட கச்சா எண்ணெய் எடுப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட கடுமையான சுற்றுச்சூழல் மாசடைவுக்கு எதிராக ஒரு அகிம்சைப் போராட்டத்தை அவர் முன்னெடுத்தார். ஆதலால், அவர் ‘நைஜீரிய காந்தி’ என்று பரவலாகப் போற்றப்படுகிறார். நைஜீரியாவின் முக்கிய வருவாய்.
ஆதாரமான எண்ணெய் தொழில், நைஜர் டெல்டா பகுதியில் ஏற்படுத்திய பேரழிவுகரமான தாக்கங்களை அவர் வன்மையாக எதிர்த்தார். மேலும், எண்ணெய் இலாபத்தில் ஓகோனி மக்களுக்கு அதிக இழப்பீட்டுப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரினார். நைஜீரிய இராணுவ ஆட்சிக்கும் ஆங்கிலோ-டச்சு பெட்ரோலிய நிறுவனத்திற்கும் எதிராக வலுவாகக் குரல் எழுப்பினார். தங்கள் மக்களின் குடிமை, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகளுக்காக அகிம்சை வழியில் மக்களை அழைத்துச் சென்று துணிச்சலுடன் போராடினார். தானும் ஓகோனி மக்களும் சந்திக்கும் அசௌகரியங்கள், துன்புறுத்தல்கள், கைதுகள், தடுப்புக்காவல், ஏன் மரணம் கூட, மில்லியன் கணக்கான மக்களின் கொடுங்கனவை முடிவுக்குக் கொண்டுவருவதற்குச் செலுத்த வேண்டிய சரியான விலை என்று கருதினார். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் மனித உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் உயிரையே தியாகம் செய்தார்.
இளமை வாழ்க்கை
1941 அக்டோபர் 10ஆம் நாள் கெனுலே சரோ-விவா, நைஜீரியாவின் போர்ட்-ஹர்கோர்ட்டுக்கு அருகிலுள்ள போரி என்ற இடத்தில், வனக் காவலரான தலைவர் ஜிம் விவா மற்றும் அவரது மூன்றாவது மனைவி விடு ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். அவரது தந்தையின் சொந்த ஊர் ஓகோனிலாந்தில் உள்ள பென் ஆகும், அதன் மக்கள் ஓகோனி மொழியின் கானா வட்டார மொழியைப் பேசுபவர்கள். சரோ-விவா தனது குழந்தைப் பருவத்தில் ஒரு ஆங்கிலிக்கன் குடும்பத்தில் வளர்ந்தார். போரியில் உள்ள ஒரு பழங்குடியினர் அதிகாரசபை பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார், பின்னர் உமுவாஹியாவில் உள்ள அரசு கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். ஒரு சிறந்த மாணவராகத் தன்னை நிரூபித்தார். வரலாறு மற்றும் ஆங்கிலத்தில் பலப் பரிசுகளை வென்றார். இடைநிலைக் கல்வியை முடித்து, நைஜீரியாவில் இபாடான் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படிப்பதற்கு அவருக்கு உதவித்தொகை கிடைத்தது. அங்கு கல்வி மற்றும் பண்பாடு துறைகளில் அவர் கொண்டிருந்த மிகுதியான ஆர்வத்தால் 1963 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் துறைசார் பரிசுகளை வென்றார். கனோ, பெனின், இலாரின் மற்றும் லாகோஸ் ஆகிய இடங்களில் நாடகங்கள் நடத்தி வந்த ஒரு பயண நாடகக் குழுவுடனும், பின்னர் நாட்டிங்ஹாம் பிளேஹவுஸ் நாடகக் குழுவுடனும் இணைந்து சிறிது காலம் பணியாற்றினார். லாகோஸ் பல்கலைக்கழகத்திலும், பின்னர் நசுக்காவில் உள்ள நைஜீரியா பல்கலைக்கழகத்திலும் கற்பித்தல் உதவியாளராகவும் நசுக்காவில் ஆப்பிரிக்க இலக்கிய விரிவுரையாளராக அவர் பணி செய்தார். நைஜீரிய உள்நாட்டுப் போர் வெடித்தபோது, அவர் மத்திய அரசை ஆதரித்து, அப்பகுதியை விட்டு தனது சொந்த ஊரான போரிக்குச் செல்ல வேண்டியிருந்தது.(Roy Doron; Toyin Falola, Ken Saro-Wiwa, Ohio University Press, 2016, p.50) உள்நாட்டுப் போரின் போது, அவர் மத்திய அரசின் கொள்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஓகோனி தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பழைய ரிவர்ஸ் மாநிலத்தில் ஒரு ஆணையராக அவர் நியமிக்கப்பட்டார். ரிவர்ஸ் மாநிலத்தின் தலைநகரான போர்ட்-ஹர்கோர்ட்டுக்கு அவர் மேற்கொண்ட பயணத்தில், கிழக்கு நோக்கிச் சென்ற பெருந்திரளான அகதிகளைக் கண்டார். அதனை “பார்ப்பதற்கு ஒரு சோகமான காட்சி” என்று அவர் விவரித்தார். (‘Ken Saro-Wiwa (1941-1995)’, Ogoni News.com, January 7, 2022) அவர் வந்தடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அருகிலுள்ள போனி மத்தியப் படைகளிடம் வீழ்ந்தது. அவரும் அவரது குடும்பத்தினரும் பின்னர் போனியில் தங்கினர். லாகோஸுக்குத் திரும்பிச் சென்று லாகோஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு பதவியை ஏற்றுக்கொண்டார், ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை, ஏனெனில் அவர் மீண்டும் போனிக்கு அழைக்கப்பட்டார். 1966ஆம் ஆண்டு அவர் மரியா குக்பெரே என்பவரை மணந்தார். இவர்களுக்கு கென் வைவா உட்பட ஐந்து குழந்தைகள் பிறந்தனர். கென் வைவா பிற்காலத்தில் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
1970களின் முற்பகுதியில், சரோ-விவா ரிவர்ஸ் மாநில அமைச்சரவையில் வட்டார கல்வி ஆணையராகப் பணியாற்றினார். ஆனால், ஓகோனியின் தன்னாட்சிக்கு ஆதரவு அளித்ததால் 1973ஆம் ஆண்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 1970களின் பிற்பகுதியில், சில்லறை மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டு, ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும் விளங்கினார். 1977ஆம் ஆண்டு சரோ-விவா அரசியலமைப்புச் சபைக்கு ஓகோனி தொகுதியின் பிரதிநிதியாகப் போட்டியிட்டார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் தோல்வியடைந்தார். 1987ஆம் ஆண்டு புதிதாகப் பதவியேற்ற இப்ராஹிம் பாபங்கிடாவால், நாட்டின் ஜனநாயக மாற்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு, அவர் மீண்டும் அரசியலில் நுழைந்தார். ஆனால், நாடு ஜனநாயகத்திற்குத் திரும்புவதற்கான பாபங்கிடாவின் திட்டங்கள் நேர்மையற்றவை என்று உணர்ந்ததால், விரைவில் பதவி விலகினார். சரோ-விவாவின் உணர்வுகள் சரியானவையாகவே இருந்தன. ஏனெனில், தேவை ஏற்பட்டபோதிலும், பாபங்கிடா அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகாரத்தைக் துறக்கடத் தவறினார். 1993ஆம் ஆண்டு ஒரு குடிமை அரசாங்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதான நைஜீரியாவின் பொதுத் தேர்தலை பாபங்கிடா ரத்து செய்தார். இது பெரும் மக்கள் எழுச்சியைத் தூண்டியதுடன், இறுதியில் அதே ஆண்டில் அவர் பதவி விலக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.(‘June 12 presidential election was annulled to prevent coup-Babangida’, The Guardian, 06 August 2021)
படைப்புகள்
1980களில், சரோ-விவா எழுத்து, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பில் கவனம் செலுத்தினார். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் எனப் பல்துறை சார்ந்த எனப் பல்வேறு வடிவங்களில் 27க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்கப் படைப்புகளை அவர் வழங்கினார். அவரது ஆரம்பகால படைப்புகள் பெரும்பாலும் நைஜீரிய சமூகத்தின் எதிர்-பிம்பத்தை சித்தரிக்கும் நையாண்டி காட்சிகளாக இருந்தன. எனினும், அவரது பிற்கால எழுத்துக்கள் நையாண்டியை விட சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி போன்ற அரசியல் பரிமாணங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டன. அவரது முக்கியப் படைப்புகளுள் சில :
- (1971) டிரான்சிஸ்டர் ரேடியோ(The Transistor Radio) நைஜீரியாவின் நகர்ப்புறப் போராட்டங்களைச் சித்தரிக்கும் ஒரு புகழ்பெற்ற நையாண்டி நாடகமாகும்.
- (1985) போர்க்காலப் பாடல்கள்’(Songs in a Time of War) என்பது அவரது முதல் புதினமாகும். இது நைஜீரிய சமூகத்தில் நிலவிய ஊழலைக் கேலி செய்தது. இதன் மூலம் அவர் மிகப்பெரிய பார்வையாளர்களைச் சென்றடைந்தார்.
- (1985) சோசாபாய், எ நாவல் இன் ராட்டன் இங்கிலீஷ்(Sozaboy: A Novel in Rotten English) என்பது அவரது மிகவும் பிரபலமான மற்றும் பியாஃப்ரா உள்நாட்டுப் போர் புதினமாகும். 1967 முதல் 1970 வரையிலான நைஜீரிய உள்நாட்டுப் போரின் போது இராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஒரு அப்பாவி இளம் கிராமத்து வீர இளைஞன் மீது ஏற்படுத்திய சீரழிக்கும் விளைவை விவரிக்கிறது.கதாநாயகனின் மொழி தரமற்ற ஆங்கிலத்தில் அல்லது சரோ-விவா “அழுகிய ஆங்கிலம்” என்று அழைத்ததில் எழுதப்பட்டது. மேலும் நைஜீரியாவின் இராணுவ ஆட்சியில் நிலவிய அரசியல் ஊழல் மற்றும் ஆதரவை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.
- (1985–1990) 150 அத்தியாயங்களாக ஒளிபரப்பான அவரது மிகவும் பிரபலமான ஒரு நையாண்டித் தொலைக்காட்சித் தொடரான ’பாசி & கம்பெனி’ (Basi and Company), சுமார் 3 கோடி பார்வையாளர்களுடன் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொலைக்காட்சித் தொடரில் அவர் நடித்தார். லாகோஸில் எளிதாக செல்வம் ஈட்டுவதற்கான அவரது தேடலை மையமாகக் கொண்ட நகைச்சுவைத் தொடர் இது. மேலும், இது ஆப்பிரிக்காவில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகவும் இருந்தது.
- (1986) மலர்க்காடு(A Forest of Flowers) நைஜீரியாவின் சமூக யதார்த்தம், காலனித்துவத்திற்குப் பிந்தைய ஏமாற்றம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை ஆகியவற்றை ஆராயும் சிறுகதைகளின் தொகுப்பு.
- (1988) ஜெப்ஸின் கைதிகள் (Prisoners of Jebs) உலகளாவிய அரசியல், பாசாங்குத்தனம் மற்றும் ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு ஆகியவற்றைக் குறிவைக்கும் ஒரு நையாண்டிப் புதினம்.
- (1995) ஒரு மாதமும் ஒரு நாளும்: ஒரு தடுப்புக்காவல் நாட்குறிப்பு (A Month and a Day: A Detention Diary) என்பது நைஜீரிய இராணுவ சர்வாதிகாரத்தால் அவர் சிறைபிடிக்கப்பட்டதையும், ஷெல் போன்ற பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவுக்கு எதிராகப் போராடிய ஓகோனி மக்களின் உயிர்வாழ்விற்கான இயக்கத்தில் (MOSOP) அவர் ஆற்றிய தலைமைப் பங்களிப்பையும் பற்றிய ஒரு அழுத்தமான தனிப்பட்ட பதிவாகும்.
- (2018) மௌனம் துரோகமாக அமையும்: கென் சரோ-விவாவின் இறுதி எழுத்துக்கள் (Silence Would Be Treason: The Last Writings of Ken Saro-Wiwa) 1995ஆம் ஆண்டு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, மரண தண்டனை கைதியாக இருந்தபோது சரோ-விவாவால் அயர்லாந்து மதபோதகரான சகோதரி மஜெலா மெக்காரனுக்கு இரகசியமாக எழுதப்பட்ட கடிதங்கள் மற்றும் கவிதைகளின் தொகுப்பாகும்.
அரசியல் நையாண்டி, எளிய மக்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிரான குரல் ஆகியவை அவரது படைப்புகளின் முதன்மையான அடையாளங்களாகும். அவரது படைப்புகள் முழுவதிலும், எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழிற்துறை ஏழை ஓகோனி விவசாயிகளின் காலடியிலிருந்தே செல்வங்களைச் சுரண்டி, அதற்குப் பதிலாக அவர்களை மாசுபடுத்தி, உரிமைகளைப் பறித்துச் சென்றதை கண்டனம் செய்வதாக இருந்தது.
ராயல் டச்சு ஷெல்
1885ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், ஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடுகள், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ரஷ்யா, ஸ்வீடன், நார்வே மற்றும் துருக்கி (உதுமானியப் பேரரசு) ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்ட பெர்லின் உடன்படிக்கைக்குப் பிறகு, நைஜீரியா பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. ஆனால், 1901ஆம் ஆண்டுதான் பிரிட்டிஷ் படைகள் ஓகோனிலாந்திற்கு வந்தன. கலாச்சார வேறுபாடுகள் ஓகோனி மக்களின் எதிர்ப்பிற்கு வழிவகுத்தன. ஆனால், பிரிட்டிஷ் படைகளை எதிர்க்கும் அளவுக்கு அவர்கள் வலிமையாக இல்லாததால், இறுதியாக 1914ஆம் ஆண்டு ஓகோனி மக்கள் அடிபணிய நேரிட்டது. பிரிட்டிஷார் நைஜீரியாவை ஹௌசா-ஃபுலானி, யோருபா மற்றும் இக்போ என மூன்று முக்கிய இனக்குழுக்களாகக் கருதினர். ஓகோனி மக்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட சிறிய இனக்குழுக்களை அவர்கள் புறக்கணித்தனர். டெல்டா பகுதியின் மற்ற அனைத்து குழுக்களாலும் ஓகோனி மக்கள் அவமதிக்கப்பட்டனர். பெரும்பாலும் சமூக ஏணியின் அடிமட்டத்தில் வைக்கப்பட்டனர்.
நைஜர் டெல்டா பகுதியில் சுமார் 500,000 ஓகோனி மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட பகுதிகளில் ஒன்றான நைஜர் டெல்டாவில், பெருநிறுவனங்களின் சுரண்டலால் பழங்குடி மக்களும் இயற்கையும் மிகுந்த அளவில் பாதிக்கப்பபட்டனர். 1958ஆம் ஆண்டு ராயல் டச்சு ஷெல் நிறுவனம் எண்ணெய் கண்டுபிடித்து, சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை உறிஞ்சியது. இதனால், இந்தப் பகுதியில் வாழ்ந்துவந்த விவசாயிகள் மற்றும் மீனவர்களைக் கொண்ட ஓகோனி மக்களுக்கு, மாசடைந்த சுற்றுச்சூழலைத் தவிர வேறு எதுவும் பெரிதாகக் கிடைக்கவில்லை. ஷெல் உட்பட்ட பன்னாட்டு எண்ணெய் சுரண்டல் கம்பெனிகள், பெட்ரோலை உறிஞ்சி எடுத்தமையால், எண்ணெய்க்கசிவு, கழிவுகளால் மண்வளம், நீர்வளம் வீழ்ச்சி, மீனினம் அழிப்பு, சாயம், மீன்பிடித்தொழில் அழிப்பு, மண்ணரிப்பு, காடு அழிப்பு, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் வீழ்ச்சி, நச்சுப்பொருட்கள் வெளியேற்றம், சுற்றுச்சூழல் அழிப்பு, நீர், நிலம், காற்று என அனைத்து வாழ்வாதாரங்களும் அழிப்பு, மக்களின் வாழ்வாதாரம் சீரழிவு, வேலையின்மை, வருமான இழப்பு, வறுமை, நோய், விபச்சாரம், மக்கள்தொகைப் பெருக்கம் என அம்மக்களை வேதனையும் சோதனையும் ஆட்கொண்டது.எண்ணெய் கசிவுகள் மற்றும் அமில மழையால் வளமான விவசாய நிலங்கள் மாசடைந்த வயல்களாக மாறின. கட்டுப்பாடற்ற எண்ணெய் கசிவுகளால், சேற்றுக் குட்டைகள் நிலப்பரப்பில் ஆங்காங்கே காணப்பட்டன. ஏறக்குறைய அனைத்து மீன்களும் வனவிலங்குகளும் அழிந்துவிட்டன. இதற்கிடையில், ஷெல்லின் 5,000 நைஜீரியப் பணியாளர்களில், 100க்கும் குறைவான வேலைகளே ஓகோனி மக்களுக்குக் கிடைத்தன.(‘Ken Saro-Wiwa’, The Goldman Environmental Prize, https://www. goldmanprize. org ›)
எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் எடுக்கும்போது வெளியிடப்படும் வாயுவில் பெரும்பாலானவற்றை ‘எரித்துச் சாம்பலாக்குவதில்’ நைஜீரியா பெயர் போனது. இது ஆப்பிரிக்காவின் வருடாந்திர எரிவாயு நுகர்வில் 40 சதவீதத்திற்குச் சமமாகும். பெரும்பாலும் கிராமங்களுக்கு அருகில் நிகழும் இந்த எரிவாயு எரிப்புகள், நைட்ரஜன் டை ஆக்சைடு, பென்சீன், டோலுயீன், சைலீன் மற்றும் டையாக்சின்கள் போன்ற நச்சு இரசாயனங்களை வெளியிட்டன. ஷெல் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்கள், மோசமாகப் பராமரிக்கப்படும் குழாய்கள், கிணறுகள் மற்றும் போதுமான சுத்திகரிப்பு முயற்சிகள் இல்லாததால் ஏற்படும் எண்ணெய் கசிவுகளுக்குக் காரணமாக இருந்தன. இவை நைஜர் டெல்டாவில் வசிக்கும் 3 கோடி மக்களில் பெரும்பாலான மக்களின் உடல்நலத்தையும் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கின. எனவே, இவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் தள்ளப்பட்டனர்.
ஓகோனி மக்கள் உரிமைகளுக்கான இயக்கம் (MOSOP)
ஓகோனி மக்கள் உரிமைகளுக்கான இயக்கம், மொசொப் (Movement for the Survival of the Ogoni People – MOSOP) என்பது நைஜீரியாவின் நைஜர் டெல்டா பகுதியில் வாழும் பழங்குடி சிறுபான்மையினரான ஓகோனி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அகிம்சை சிவில் அமைப்பாகும். இது ஓகோனி பெண்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்துப் பிரிவினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல அடிப்படை அமைப்புகளுக்கான ஒரு குடை அமைப்பாகும். இந்த இயக்கம், ஓகோனி மக்களின் உரிமைகளையும், அவர்களின் கலாச்சாரத்திற்கான அங்கீகாரத்தையும் நிலைநாட்ட வன்முறையற்ற அகிம்சை வழிகளைப் பயன்படுத்தியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 3,00,000 ஓகோனி மக்களைத் திரட்டி ஒரு அமைதியான போராட்டத்தை நடத்தியது. ஓகோனிலாந்தில் ஷெல் நிறுவனத்தின் செயல்பாடு இனி வரவேற்கப்படாது என்று மொசொப் அறிவித்தது. அதன் ஆர்ப்பாட்டங்கள் பயனுள்ளதாக அமைந்தன. ஷெல் நிறுவனமானது கென் சரோ-விவா மற்றும் மொசொப் குறித்து நைஜீரிய அரசாங்கத்திடம் மீண்டும் மீண்டும் தனது கவலைகளை எழுப்பியதுடன், அவர்களைத் தங்கள் நிறுவனத்திற்கு எதிரான பொருளாதாரத் தாக்கங்களைக் கொண்டுவரும் ஒரு அச்சுறுத்தலாக சித்தரித்தது.
தன் மக்கள் மீது சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏற்படும் விளைவுகளை விவரித்து, மொசொபின் தலைவர் டாக்டர் கேரிக் பாரில் லெட்டன், 1991ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், “நிலங்கள், ஓடைகள் மற்றும் சிற்றோடைகள் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் மாசடைந்துள்ளன; வளிமண்டலம் எப்போதும் ஹைட்ரோ கார்பன்கள், கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றால் நிரம்பியுள்ளது; கடந்த 33 ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் எரிவாயு சுடர்களின் (gas flares) கொடூரமான நடுக்கத்தை பல கிராமங்கள் அனுபவித்து வருகின்றன. அமில மழை, எண்ணெய் கசிவுகள் மற்றும் வெடிப்புகள் இங்கு சாதாரணமாகிவிட்டன; இத்தகைய கட்டுப்பாடற்ற சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சீரழிவின் விளைவாக, ஓகோனி மக்கள் விவசாயம் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்; ஒரு காலத்தில் கிழக்கு நைஜர் டெல்டாவின் உணவுப் பண்டகசாலையாக இருந்த ஓகோனி மக்கள், உணவின்றி தவிக்கின்றனர்; ஒரு காலத்தில் புரதத்தின் பொதுவான ஆதாரமாக இருந்த மீன், இப்போது அரிதாகிவிட்டது; எங்கள் ஓடைகள் மற்றும் சிற்றோடைகளின் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத மாசுபாட்டின் காரணமாக, மீன்களை மிகவும் ஆழமான மற்றும் கடலோரப் பகுதிகளில் மட்டுமே பிடிக்க முடிகிறது; ஆனால் அதற்கு ஓகோனி மக்கள் தயாராக இல்லை; அனைத்து வனவிலங்குகளும் இறந்துவிட்டன; சூழலியல் வேகமாக மாறி வருகிறது. பொதுவாக, வான்வழி வேர்களைக் கொண்ட கண்டல் மரம், நண்டுகள், நத்தைகள், சேற்றுத் தாவிகள், சிப்பிகள், மட்டிகள், இறால்கள் மற்றும் பல கடல் உயிரினங்களுக்கு இயற்கையான மற்றும் உகந்த வாழ்விடத்தை வழங்கி வந்த இந்த இடம், தற்போது படிப்படியாக அறியப்படாத மற்றும் பயனற்ற தாவரங்களால் ஆக்கிரமிக்கப்ப்பட்டு வருகிறது; ஹைட்ரோ கார்பன் நீராவி, கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு நிறைந்த வளிமண்டலத்தால் உருவாகும் சுகாதார அபாயங்கள் எண்ணற்றவை” என்று குறிப்பிட்டார். ஓகோனி பகுதியில் பல்தேசிய எண்ணெய் நிறுவனங்களின் (முக்கியமாக ஷெல் நிறுவனம்) செயல்பாடுகளால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சூழல் பேரழிவையும், அதன் காரணமாக ஓகோனி பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் எவ்வாறு சீரழிந்தது என்பதையும் உலகிற்கு எடுத்துரைக்கவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
கென் சரோ-விவா இதை ஒரு ‘சூழலியல் போர்’ என்று அழைத்தார். மேலும், அவர் கூறியதாவது: “ஓகோனி நாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது… எண்ணெய் தேடலுடன் சேர்ந்து எண்ணெய் வெடிப்புகள், கசிவுகள், எண்ணெய் படலங்கள் மற்றும் பொதுவான மாசுபாடு ஆகியவை ஏற்படுகின்றன… கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் நைஜீரியாவில் எரிவாயுவை எரித்து வருவதால், அமில மழை பெய்து வருகிறது… ஒரு காலத்தில் டெல்டாவின் தானியக் களஞ்சியமாக இருந்த பகுதி இப்போது வளமற்றதாகிவிட்டது. சுற்றிலும் காண்பதெல்லாம், உணர்வதெல்லாம் மரணம்தான். பூர்வீக ஓகோனி மக்களுக்கு எதிரான போரில் சுற்றுச்சூழல் பேரழிவு ஒரு கொடிய ஆயுதமாக இருந்து வருகிறது”. (Statement of the Ogoni people to the Tenth Session of the Working Group on Indigenous Populations, Palais Des Nations, Geneva, 28 July 1992) நைஜீரிய அரசும் சர்வதேச முதலாளிகளும் சர்வதேச முதலாளித்துவம் விதித்த புனிதமான கோட்பாடான “கூட்டுச்சேர்; தேச எல்லை, மொழி, இனம் பாராமல் கொள்ளை அடி” என்பதை அப்படியே பின்பற்றியதுதான் நைஜீரியா சீரழிந்துபோனதற்கு காரணம். அதே சர்வதேச விதிகளின் அடுத்த விதியான “ஈவு இரக்கம் அனைத்தையும் குழிதோண்டிப் புதை: எதிர்க்குரல்களை ஒடுக்கு, அடிப்படை மனித உரிமைகளை மீறு, அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடு, ராணுவத்தையும் காவல்துறையினரையும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்து, தேவைப்பட்டால் உயிரை எடுத்துவிடு” போன்ற அனைத்தையும் ஒன்றுவிடாமல் நைஜீரிய அரசும் சர்வதேச முதலாளிகளும் திட்டமிட்டு நடத்தினர். (‘மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் – கென் சாரோ-விவா (பாகம் 2)’, வேலிகளுக்கு அப்பால்… ஜூன் 29, 2012)
ஓகோனி உரிமைகள் மசோதா
ஓகோனி உரிமைகள் மசோதா (Ogoni Bill of Rights) என்பது நைஜர் டெல்டா பகுதியில் வாழும் சிறுபான்மைப் பழங்குடி சமூகமான ஓகோனி மக்கள் அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகளைக் கோரி 1990 அக்டோபர் மாதம் நைஜீரிய அரசிடம் சமர்ப்பித்த ஒரு வரலாற்று ஆவணமாகும். நைஜீரியாவில் உள்ள ஓகோனி இனத் தலைவர்களும் மக்களும் ஒன்றுகூடி, சமீப காலங்களில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளிவந்த மிக முக்கியமான பிரகடனங்களில் ஒன்றான ஓகோனி உரிமைகள் மசோதாவில் 1990 ஆகஸ்ட் மாதம் கையெழுத்திட்டனர். இந்த மசோதா ஓகோனி மக்கள் உரிமைகளுக்கான இயக்கத்தின் சார்பில் கென் சரோ-விவா மற்றும் ஓகோனி தலைவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவின் மூலம், ஓகோனி மக்கள் நைஜீரிய அரசின் மீதான தங்கள் விசுவாசத்தை வலியுறுத்திய அதே வேளையில், ஒரு இனமாகத் தங்கள் சுதந்திரத்திற்கு உரிமை கோரினர். இந்த சுதந்திரத்தை பிரிட்டிஷ் காலனித்துவம் முதலில் மீறி, பின்னர் அக்டோபர் 1960ஆம் ஆண்டு வேறு சில நைஜீரிய இனக் குழுக்களிடம் ஒப்படைத்திருந்தது. நைஜீரிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் முன்வைக்கப்பட்ட இந்த உரிமைகள் மசோதா, ஓகோனி விவகாரங்களின் அரசியல் கட்டுப்பாட்டை ஓகோனி மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும், ஓகோனி வளர்ச்சிக்காக ஓகோனி பொருளாதார வளங்களைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்த உரிமை வேண்டும் என்றும், அனைத்து நைஜீரிய தேசிய நிறுவனங்களிலும் ஓகோனி மக்களுக்கு உரிமையின் அடிப்படையில் போதுமான மற்றும் நேரடிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஓகோனி சுற்றுச்சூழலையும் சூழலியலையும் மேலும் சீரழிவிலிருந்து பாதுகாக்கும் உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இது நைஜீரிய அரசாங்கத்திற்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் எதிரான வன்முறையற்ற போராட்டத்தின் அடையாளமாகத் தொடங்கியது. இந்த மசோதா, ஓகோனி மக்களுக்குக் கிடைத்த சமூக சேவைகளின் பற்றாக்குறை, அவர்களின் அரசியல் புறக்கணிப்பு மற்றும் ஷெல் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகளை முன்னிலைப்படுத்தியது.
1960 அக்டோபர் 1ஆம் நாள் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு ஓகோனி மக்களுக்குத் திரும்ப அளிக்கப்பட்டிருக்க வேண்டிய உரிமைகள், கடந்த முப்பது ஆண்டுகளில் நைஜீரியாவின் பெரும்பான்மை இனக் குழுக்களால் அபகரிக்கப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால், ஓகோனி மற்றும் அதுபோன்ற சிறுபான்மை இன மக்களுக்கு நரக வாழ்க்கையாக மாறிவிட்டது. முப்பது ஆண்டுகால நைஜீரிய சுதந்திரம், நைஜீரியாவின் பெரும்பான்மை இனக் குழுக்களின் தலைமையின் மோசமான தன்மையையும் அவர்களின் கொடுமையையும் கோடிட்டுக் காட்டியது. ஏனெனில் அவர்கள் தேசத்தை இன மோதல், படுகொலை, போர், சர்வாதிகாரம், சீரழிவு மற்றும் உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத தேசிய வளங்களின் நம்பமுடியாத வீணடிப்பு ஆகியவற்றில் மூழ்கடித்து, பிறந்த மற்றும் பிறக்காத நைஜீரியர் தலைமுறையினரை நிரந்தரக் கடனாளிகளாக மாற்றிவிட்டனர். (Ken Saro-Wiwa, Foreword to Ogoni Bill Of Rights, Presented to the Government and People of Nigeria, October 1990, Port Harcourt 24/12/91)
ஓகோனி உரிமைகள் மசோதா திறமையற்ற உள்நாட்டு காலனித்துவத்தை முற்றிலுமாக நிராகரித்து, நைஜீரியாவில் ஒரு புதிய ஒழுங்கிற்கு அழைப்பு விடுத்தது; அந்த ஒழுங்கில் ஒவ்வொரு இனக் குழுவும் அதன் விவகாரங்களுக்கு முழுப் பொறுப்பைக் கொண்டிருக்கும்; நைஜீரியாவின் பல்வேறு மக்களிடையேயான போட்டி நேர்மை மற்றும் நியாயமானதாக இருக்கும்; இதன் மூலம் அமைதியான சகவாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்.
ஓகோனி உரிமைகள் மசோதா சர்வதேச சமூகத்திடம் பின்வரும் கோரிக்கை விடுத்தது:
- திருடப்பட்டச் சொத்தான நைஜீரிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்துவது,
- ஓகோனியில் எரிவாயுவை எரிப்பதை நிறுத்துமாறு ஷெல் மற்றும் செவ்ரான் நிறுவனங்களை வலியுறுத்துவது,
- ஓகோனி மக்களின் சுயநிர்ணயம் மற்றும் தன்னாட்சி உரிமைகளை மதிக்குமாறு நைஜீரியா நடுவண் அரசாங்கத்தை வலியுறுத்துவது,
- 1958 முதல் ஓகோனியிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்க்கு வசூலிக்கப்பட்ட அனைத்து உரிமத்தொகைகளையும் சுரங்க வாடகைகளையும் செலுத்துமாறு நைஜீரியாவின் நடுவண் அரசாங்கத்தை வலியுறுத்துவது,
- ஓகோனி எண்ணெய் வளங்களைச் சுரண்டுவதன் மூலம் திருப்பிச் செலுத்தப்படும் அனைத்துக் கடன்களையும் நைஜீரியாவின் நடுவண் அரசாங்கத்திற்கு வழங்கும் கடன்களையும் நிறுத்துமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை வலியுறுத்துவது,
- ஓகோனி மக்களுக்கு அவசர மருத்துவ மற்றும் பிற உதவிகளை வழங்குவது,
- ஐக்கிய நாடுகள் சபை, ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு மற்றும் காமன்வெல்த் நாடுகள் ஆகியவற்றின் விதிகள் மற்றும் நெறிமுறைகளை நைஜீரியாவின் கூட்டாட்சி அரசாங்கம் கடைப்பிடிக்கச் செய்வது, இல்லையெனில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் அல்லது அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் என்பதை வலியுறுத்துவது,
- ஓகோனி மக்கள் அனுபவிக்கும் மனிதாபிமானமற்ற நிலையை மேலும் ஊக்குவிக்கவே உதவியும் கடனும் வழிவகுக்கும் என்பதால் நைஜீரியா கூட்டாட்சி அரசாங்கத்திற்கு உதவி மற்றும் கடன் வழங்குவதை நிறுத்துமாறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களை வலியுறுத்துவது,
- நைஜீரியாவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் இனப்படுகொலையிலிருந்து பாதுகாப்பு தேடும் அனைத்து ஓகோனி மக்களுக்கும் அரசியல் அகதி அந்தஸ்து வழங்குமாறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களை வலியுறுத்துவது,
- ஓகோனி சுற்றுச்சூழலையும், ஓகோனி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத்தையும் சீரழித்ததற்காக, ஷெல் மற்றும் செவ்ரான் நிறுவனங்கள் ஓகோனி மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஓகோனி மக்கள், 1990 அக்டோபர் 2 அன்று, ஓகோனி உரிமைகள் மசோதாவை நைஜீரியக் கூட்டாட்சிக் குடியரசின் ஜனாதிபதி ஜெனரல் இப்ராஹிம் பாபங்கிடா மற்றும் ஆயுதப் படைகளின் ஆளும் குழு உறுப்பினர்களிடம் சமர்ப்பித்தனர்.பல தசாப்தங்களாக ஷெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணெய் அகழ்வால் பாழடைந்த தங்களின் விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், ஓகோனி நிலத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வருவாயில் நியாயமான பங்கை அந்த மக்களின் வளர்ச்சிக்கு வழங்கவும், ஓகோனி மக்கள் தங்களின் அரசியல், கலாச்சார மற்றும் சமூக விவகாரங்களைத் தாங்களே நிர்வகிக்கும் தன்னாட்சி உரிமை பெறவும் இந்த உரிமை மசோதா கோரியது. ஓகோனி விவகாரங்களின் அரசியல் கட்டுப்பாட்டை ஓகோனி மக்கள் கொண்டிருக்கவும், ஓகோனி வளர்ச்சிக்காக ஓகோனி பொருளாதார வளங்களைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தவும், அனைத்து நைஜீரிய தேசிய நிறுவனங்களிலும் ஓகோனி மக்களுக்கு உரிமையான போதுமான மற்றும் நேரடிப் பிரதிநிதித்துவம், மற்றும் ஓகோனி சுற்றுச்சூழலையும் சூழலியலையும் மேலும் சீரழிவிலிருந்து பாதுகாக்கும் உரிமை ஆகியவற்றை மசோதாவானது வலியுறுத்தியது.
ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகும் ஓகோனி உரிமைகள் மசோதாவின் நியாயமான கோரிக்கைகளைப் பற்றி விவாதிப்பதற்காக மக்கள் கோரிய சந்திப்பை ஜனாதிபதி வழங்க வில்லை. ஓகோனி உரிமைகள் மசோதாவில் குறிப்பிடப்பட்ட அவர்களின் கோரிக்கைகள் யாவும் நியாயமானவை, நேர்மையானவை, அவர்களின் பிரிக்க முடியாத உரிமை மற்றும் உலகளாவிய நாகரிக விழுமியங்களுக்கு இசைவானவை ஆகும். 1990 அக்டோபர் 2 முதல், அரசாங்கம் ஓகோனி மக்களை மேலும் ஓரங்கட்டும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பிறப்பித்தது. இதன் மூலம் அவர்களுக்கு அரசியல் சுயாட்சி, இயற்கை வளங்களுக்கான உரிமைகள், மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கான உரிமைகள், அனைத்து நைஜீரிய தேசிய நிறுவனங்களிலும் போதுமான பிரதிநிதித்துவம், மேலும் அவர்களின் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலை மேலும் சீரழிவிலிருந்து பாதுகாப்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டன.(Ogoni Bill of Rights, https://bebor.org › uploads › 2012/09 › p.9)
வெளிநாட்டு பெட்ரோலிய நிறுவனங்கள் மீது சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்துவதில் தயக்கம் காட்டியதற்காக கென் சரோ-விவா நைஜீரிய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். ஓகோனி மக்களின் உரிமையுள்ள வளங்கள், மற்ற நைஜீரிய சமூகங்கள் மற்றும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் பங்குதாரர்களின் தனிப்பட்ட சுகபோகத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் உறிஞ்சி எடுக்கப்பட்ட வேளையில், அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு, மெல்ல மெல்ல ஒழிக்கப்பட்டு, முற்றிலுமாகச் செயலற்றுப் போயினர். இந்த அநீதிகள் தொடரும் வரை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம், காமன்வெல்த் செயலகம், ஆப்பிரிக்க மனித மற்றும் மனித உரிமைகள் ஆணையம், ஐரோப்பிய சமூகம் மற்றும் தங்கள் தேசிய இனத்தைப் பாதுகாப்பதில் பங்கு வகிக்கும் பிற அனைத்து சர்வதேச அமைப்புகளிடமும் தங்கள் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்த, ஓகோனி மக்கள், தங்களின் உயிர்வாழ்விற்கான இயக்கத்திற்கு அங்கீகாரம் அளித்தனர். நைஜீரியக் கூட்டாட்சிக் குடியரசின் அரசாங்கம், 1960ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, மனித உரிமைகளை முற்றிலும் புறக்கணித்து அவமதிக்கும் வகையில், சுயநிர்ணயத்திற்கான அரசியல் உரிமைகள், வளங்களுக்கான பொருளாதார உரிமைகள், மொழி மற்றும் கலாச்சாரத்தை காப்பதான கலாச்சார உரிமைகள், மற்றும் கல்வி, சுகாதாரம், அடிப்படை வீட்டு வசதி மற்றும் தேசிய நிறுவனங்களில் உரிமை அடிப்படையிலான பிரதிநிதித்துவம் ஆகியவற்றுக்கான சமூக உரிமைகளை மறுத்து வந்தது. நைஜீரியா அரசு, ஓகோனி மக்களின் மண்ணிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பெட்ரோலியத்திற்காக, சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எண்ணெய் உரிமத்தொகையையும் சுரங்க வாடகையையும் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச் செலுத்த மறுத்தது. சுமார் 10 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், 5 லட்சம் பேர் கொண்ட ஒரு இனச் சிறுபான்மையினராகிய ஓகோனி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு தவறியது. பெரும்பான்மை இனக் குழுக்களின் வாக்குரிமையும் இராணுவ பலமும் ஒவ்வொரு கட்டத்திலும் ஓகோனி மக்களுக்கு எதிராக ஈவிரக்கமின்றிப் பயன்படுத்தப்பட்டன. ஷெல் (டச்சு/பிரிட்டிஷ்) மற்றும் செவ்ரான் (அமெரிக்கன்) ஆகிய பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள், கூட்டாகச் சேர்ந்து சுற்றுச்சூழலையும் சூழலியலையும் கடுமையாகச் சீரழித்தன. மக்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தின. மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டுப் பகுதிகளுக்கு வழக்கமாக வழங்கும் வேலைவாய்ப்பையும் சலுகைகளையும்கூட வழங்க மறுத்தன. சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்காமலும், நைஜீரிய சுதந்திரத்தின்போது செய்யப்பட்ட மௌன உடன்படிக்கையை ஒத்திருக்காமலும் இருந்த இராணுவ ஆட்சியால் திணிக்கப்பட்ட 1979 மற்றும் 1989 ஆம் ஆண்டு அரசியலமைப்புகளில், உரிமைகளையும் வளங்களையும் அபகரிக்கும் செயல் நிறுவனமயமாக்கப்பட்டிருந்தமையால், மக்கள் நீதிமன்றங்களில் இழப்பீடு கோர முடியவில்லை.
ஓகோனி மக்கள் உரிமைகளுக்கான இயக்கம் என்பது ஓகோனி மக்கள் தங்கள் நிலத்தையும் அதன் வளங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காகப் போராடியது. ஆனால், அவர்கள் அரசால் அடக்கி ஒடுக்கப்பட்டனர். ஓகோனி மக்கள் உரிமைகளுக்கான இயக்கம் நீதி மற்றும் ஜனநாயக, வன்முறையற்ற மாற்றத்திற்கான ஆதரவு அளித்தது. ஓகோனியின் மனித மற்றும் இயற்கை வளங்களில் உள்ள அனைத்து “பங்குதாரர்களும்” சமமான பங்காளிகளாக அமைதியையும் செழிப்பையும் அனுபவிக்கக்கூடிய ஒரு எதிர்காலத்திற்காக இயக்கம் பாடுபட்டது. (‘Movement for the Survival of the Ogoni People (MOSOP)’,https://www.escr-net.org › member ›)
1990 நவம்பர் மாதம் கென் சரோ-விவா, “நைஜர் டெல்டாவில் உருவாக இருக்கும் போர்” என்ற தலைப்பில் நைஜீரியாவின் சண்டே டைம்ஸ் ஆசிரியருக்கு ஒரு கட்டுரை எழுதினார். அது வெளியிடப்படவில்லை. அது, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மற்றும் தனது ஓகோனி மக்களுக்கும் நைஜர் டெல்டாவின் பிற இனக்குழுக்களுக்கும் எண்ணெய் வருவாயில் நியாயமான பங்கு வேண்டும் என்பதான அவரது பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்தியது. மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களும் அரசும் உள்ளூர் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், டெல்டாவில் வன்முறை வெடிக்கும் என்ற அவரது எச்சரிக்கையை இராணுவ அரசாங்கம் நிராகரித்தது. சர்வாதிகார ஆட்சியும், பெரிய இனக்குழுக்கள் சிறிய இனக்குழுக்களை ஆதிக்கம் செலுத்துவதும் டெல்டா மக்களை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை சரோ-விவா கண்டார். “நானும் ஓகோனி மக்களும் சந்திக்கும் இடையூறுகள், துன்புறுத்தல்கள், கைதுகள், தடுப்புக்காவல், ஏன் மரணம் கூட, மில்லியன் கணக்கான மக்களின் கொடுங்கனவை முடிவுக்குக் கொண்டுவருவதற்குச் செலுத்த வேண்டிய சரியான விலையே ஆகும்” என்று அவர் கூறினார் .அவர் உடனடித் தீர்வைக் கோரியபோதிலும், தனது போராட்டமுறைகளில் மகாத்மா காந்தி மற்றும் மார்ட்டின் லூதர் கிங்கின் அகிம்சைப் பாரம்பரியத்தைத் தழுவினார். நைஜர் டெல்டா பகுதியில் ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு குழுவான மெண்ட்(MEND) அமைப்பைச் சேர்ந்த கோபமடைந்த இளைஞர்கள் தங்கள் துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு, அரசாங்கத்துடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு சரோ-விவா வலியுறுத்தினார்.ஆயினும், அதிகார வர்க்கம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுச் சதியால் அவர் மீது அவதூறுகள் சுமத்தப்பட்டு, இறுதியில், மிகக் கடுமையான தண்டனையாக மரணத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். (Ike Okonta, ‘The prophecy of Saro-Wiwa’, The Guardian, Sat November 11, 2006)
நைஜீரியர்கள் வாழ்வா சாவா தேர்தல்களுக்குத் தயாராகிய வேளையிலும், எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையிலும், புவி வெப்பமயமாதல் எனும் அச்சுறுத்தல் அனைவரையும் சூழ்ந்திருக்கும் வேளையிலும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் குடிமக்களும் சரோ-விவா தனது இறுதி நேரங்களில் உரைத்த வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. ” “என் பிரபுவே, நாம் அனைவரும் வரலாற்றின் முன் நிற்கிறோம்; “நான் ஒரு அமைதி விரும்பி, சிந்தனையாளர்; வளம் நிறைந்த மண்ணில் வாழும் என் மக்களின் இழிவான வறுமையைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தவன்; அரசியல் புறக்கணிப்பாலும் பொருளாதார நசுக்கலாலும் வேதனை அடைந்தவன்; அவர்களின் உன்னதமான பாரம்பரியமான நிலம் பாழாக்கப்படுவதைக் கண்டு சீற்றம் கொண்டவன்; அவர்களின் வாழ்வதற்கான உரிமையையும் கண்ணியமான வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க ஆவல் கொண்டவன்; மேலும், இந்த நாடு முழுவதற்கும் ஒரு நேர்மையான மற்றும் நீதியான ஜனநாயக அமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பவன்; நான் முழுமையாக நம்பும், மிரட்டவோ அச்சுறுத்தவோ முடியாத ஒரு கொள்கைக்காக, எனது அறிவுசார் மற்றும் பொருள்சார் வளங்களையும், என் உயிரையே அர்ப்பணித்துள்ளேன்.”
“என் பிரபுவே, நாம் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம், ஏனெனில், நமது செயல்களால் நமது நாட்டை இழிவுபடுத்தி, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளோம்; நாம் தரம் தாழ்ந்தவற்றை ஏற்றுக்கொண்டு, இரட்டைத் தரங்களை ஒப்புக்கொள்ளும்போது, வெளிப்படையாகப் பொய் சொல்லி ஏமாற்றும்போது, அநீதியையும் அடக்குமுறையையும் பாதுகாக்கும்போது, நமது வகுப்பறைகளைக் காலி செய்கிறோம், நமது மருத்துவமனைகளை இழிவுபடுத்துகிறோம், நமது வயிற்றைப் பசியால் நிரப்புகிறோம்; மேலும் உயர்ந்த தரங்களைக் கடைப்பிடிப்பவர்கள், உண்மையைத் தேடுபவர்கள், நீதி, சுதந்திரம் மற்றும் கடின உழைப்பை மதிப்பவர்களாகிய நம்மை அடிமைகளாக ஆக்கிக்கொள்ளத் தேர்தலில் தேர்ந்தெடுக்கிறோம். இங்கு நடக்கும் இந்தக் காட்சி, பிறக்கப்போகும் தலைமுறையினரால் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப்படும் என்று நான் கணிக்கிறேன். ஒகோனி மக்களையும், நைஜர் டெல்டா மக்களையும், நைஜீரியாவின் ஒடுக்கப்பட்ட இன சிறுபான்மையினரையும் இப்போது எழுந்து நின்று, தங்கள் உரிமைகளுக்காக அச்சமின்றியும் அமைதியாகவும் போராடுமாறு நான் அழைக்கிறேன். வரலாறு உங்கள் பக்கம் இருக்கிறது. கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார்.” (Ernest Ogunyemi, ‘Remembering the Speech That Ken Saro-Wiwa Wasn’t Allowed to Read at His Execution’, Open Country Mag, December 26, 2020, https://opencountrymag.com ›)
சரோ-விவாவின் குடிமை உரிமைகள் போராட்டங்களின் தனிச்சிறப்பு வன்முறையற்ற மற்றும் அமைதிவழி நடவடிக்கையாகும், இதற்காக, அவர் காந்தியை உத்வேகமாகக் கொண்டார். குடிசைகள் மற்றும் ‘அமில மழையால் உலோகக் கூரைகள் அரிக்கப்பட்ட பழமையான பள்ளிகளுக்கு’ அருகில் எரிவாயு தொடர்ந்து எரிக்கப்படுவதும், எரியூட்டப்படுவதும் போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு திரைப்படத்தை அவர் உருவாக்கினார். அந்தத் திரைப்படம், ஓகோனி விவசாய நிலங்களையும் கிராமங்களையும் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்து செல்லும் உயர் அழுத்த எண்ணெய் குழாய்களையும் சித்தரித்தது. சரோ-விவாவின் வன்முறையற்ற அணுகுமுறையின் மூலம், நைஜர் டெல்டாவின் நிலைமை, குறிப்பாக, ஒகோரி நிலத்தின் நிலைமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்த்தது. (Lanre Olaolu Amodu, ‘Niger Delta Crises and the Gandhi Philosophy of Conflict Resolution, SOPHIA, An African Journal of Philosophy and Public Affairs, Vol.9, No.2, April 2007, p.108)
1992 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் வன்முறையற்ற மோதல் தீவிரமடைவதற்கு முந்தைய ஆண்டுகளில், கென் சரோ-விவாவும் மொசாப் அமைப்பும் சர்வதேச அரசு சாரா அமைப்புகளின் ஆதரவைப் பெற முயன்றனர். ஆரம்பத்தில், மொசாப் அமைப்பு பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்புடன் (UNPO) இணைந்தது. இது ஊடகங்கள் மூலமாகவும், ஐக்கிய நாடுகள் சபையுடனான சந்திப்புகள் மூலமாகவும் மொசாப் அமைப்புக்கு அதிக சர்வதேச கவனத்தைப் பெற உதவியது. 1993ஆம் ஆண்டில் ஐ.நா.வின் பழங்குடி மக்கள் ஆண்டு நெருங்கியபோது, ஓகோனி உரிமைகள் மசோதாவில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்காக மொசாப் அமைப்பு போராட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டது.
1992ஆம் ஆண்டு, இரண்டு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், பதிலளிக்காத தேசிய அரசாங்கத்தை இலக்காகக் கொண்டு மோதல் தீவிரமடைந்தது. அதற்குப் பதிலாக, அப்பகுதியில் செயல்படும் மூன்று எண்ணெய் நிறுவனங்களான ஷெல், செவ்ரான் மற்றும் நைஜீரிய தேசிய பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் மீது தனது கவனத்தைச் செலுத்த மொசாப் முடிவு செய்தது. இவ்விரண்டில், ஷெல் நிறுவனத்திற்கே அப்பகுதியில் மிகப்பெரிய பங்கு இருந்தது, எனவே அதுவே மொசாப்பின் முதன்மை இலக்காக இருந்தது. ஓகோனி மக்களுக்கு 10 பில்லியன் டாலர் இழப்பீடு மற்றும் உரிமத் தொகை வழங்க வேண்டும் என்றும், அத்துடன் ஓகோனி பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எதிராக மூன்று நிறுவனங்களும் நடத்திடும் வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரி அந்த நிறுவனங்களுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்தது. ‘தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக ஓகோனி மக்களைத் திரட்டி விரிவான மக்கள் எதிர்ப்பை முன்னெடுப்போம்’ என்று மொசாப் அச்சுறுத்தியது. இந்த அச்சுறுத்தலுக்கு வெளிப்படையாக பதிலளிக்கும் விதமாக, சமீபத்தில் தொடர்ச்சியான இராணுவப் புரட்சிகளையும், ஓகோனி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கொந்தளிப்பான தேர்தல்களையும் சந்தித்திருந்த நைஜீரிய அரசாங்கம், எண்ணெய் உற்பத்தியில் ஏற்படும் அனைத்து இடையூறுகளும் தேசத்துரோகமாகத் தண்டிக்கப்படும் என்று அறிவித்ததுடன், அனைத்து பொதுக் கூட்டங்களுக்கும் சபைகளுக்கும் தடை விதித்தது.
Friends of the Earth Czech Republic protests after death of Ken Saro-Wiwa, 1996
மரணதண்டனை
1992ஆம் ஆண்டு நைஜீரிய இராணுவ அரசாங்கம் சரோ-விவாவை விசாரணையின்றி பல மாதங்கள் சிறையில் அடைத்தது. சரோ-விவா 1993 முதல் 1995 வரை பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார். இது ஒரு சர்வதேச, வன்முறையற்ற மற்றும் ஜனநாயக அமைப்பாகும். இதில் மொசாப் ஓர் உறுப்பினராகும். இதன் உறுப்பினர்கள் பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் மற்றும் அங்கீகரிக்கப்படாத அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் தங்களின் மனித மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், தங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தங்களைப் பாதிக்கும் மோதல்களுக்கு வன்முறையற்ற அகிம்சை வழி தீர்வுகளைக் காணவும் ஒன்றிணைந்தனர். 1993 ஜனவரி 4 ஆம் நாள் ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள சுமார் 300,000 ஓகோனி மக்கள், ராயல் டச்சு/ஷெல்லின் துணை நிறுவனமான நைஜீரியாவின் ஷெல் பெட்ரோலியம் டெவலப்மென்ட் கம்பெனி(SPDC)யால் தங்கள் நிலத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். எண்ணெய் வருவாயில் பங்கு மற்றும் அரசியல் சுயாட்சியைக் கோரி அவர்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தினர். ஆனால், நைஜீரிய அரசாங்கம் ஓகோனி மக்களின் இந்த அணிதிரட்டலுக்குக் கொடூரமான அடக்குமுறையால் பதிலளித்தது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இராணுவ ஆக்கிரமிப்பில், 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் வீடற்றவர்களாகவும், அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர்.ஏராளமானோர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுக் கூட்டங்களுக்குத் தடை இருந்தபோதிலும், 1993 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபை உலகப் பழங்குடியின மக்களின் சர்வதேச ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டின் தொடக்கத்தில், மொசாப் அமைப்பு ஒரு மாபெரும் அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்தது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓகோனி மக்கள் பங்கேற்றனர். ஜனவரி 4ஆம் நாள் நடைபெற்ற பேரணி மற்றும் ஓகோனிலாந்து முழுவதும் நடந்த பல பொதுக்கூட்டங்களின் ஒரு பகுதியாக, ஓகோனி போராட்டக்காரர்களும் கிரீன்பீஸ் அமைப்பின் பார்வையாளர்களும் சுற்றுச்சூழலின் அடையாளமாகப் பச்சைக் கிளைகளை ஏந்தி நின்றனர். ஓகோனிலாந்தில் உள்ள ஓகோனி மக்களில் ஐந்தில் மூன்று பங்கிற்கும் அதிகமானோர் ஒன்று கூடிய நிலையில், போராட்டத் தலைவர்களும் போராட்டக்காரர்களும் சுற்றுச்சூழலுக்கான தங்களின் அடிப்படை உரிமைகளையும், சுயநிர்ணய உரிமையையும் கோரினர். இந்த நிகழ்வு அன்று முதல் ‘ஓகோனி தினம்’ என்று குறிப்பிடப்படுகிறது. முதல் ஓகோனி தினத்திற்குப் பிறகு, ஓகோனி உரிமைகள் மசோதாவிற்கும் ஷெல் எண்ணெய்க்கு எதிரான எதிர்காலப் போராட்டத்திற்கும் ஆதரவளிக்கும் பொருட்டு, மொசாப் அமைப்பு ‘ஒரு நைரா ஓகோனி வாழ்வாதார நிதி’யை ஏற்படுத்தியது. இதில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பங்களித்தனர். மொசாப் அமைப்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துதல் மற்றும் மேலும் பல எதிர்ப்புக் கூட்டங்களை நடத்துவதன் மூலம் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
1993 ஜனவரியில் கோபமடைந்த போராட்டக்காரர்கள் ஒரு ஷெல் ஊழியரைத் தாக்கியபோதிலும், மொசாப்பின் அனைத்து நடவடிக்கைகளும் வன்முறையற்றவையாகவே இருந்தன. ஜனவரி 4 போராட்டம் மற்றும் மாதம் முழுவதும் நடந்த தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, ஷெல் எண்ணெய் நிறுவனம் அப்பகுதியிலிருந்து தற்காலிகமாக வெளியேறியது. இது அப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் பெட்ரோலியத்தின் அளவைப் பெருமளவில் குறைத்ததுடன், 1993ஆம் ஆண்டு அப்பகுதியில் செயல்படும் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை 200 மில்லியன் டாலர்கள் அளவுக்குக் குறைத்தது.
முதல் ஓகோனி தினத்தின் வெற்றி மற்றும் ஷெல் நிறுவனத்தின் வெளியேற்றத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, நிலையற்ற தேசிய அரசாங்கம் ஓகோனி மக்களின் செயல்பாடுகளை வலுக்கட்டாயமாக அடக்கத் தொடங்கியது. 1993 ஏப்ரல் மாதம் 10,000 ஓகோனி மக்கள் பங்கேற்ற ஒரு போராட்டத்தின் மீது, ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பத்து போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். அரசாங்கம் ஓகோனி பகுதிக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் அனைத்து சாலைகளையும் மூடியதுடன், முழு கிராமங்களையும் அழிக்கத் தொடங்கியது. டிசம்பரில், போர்ட் ஹார்கர்ட்டில் வசித்து வந்த ஓகோனி மக்களை அரசாங்கம் படுகொலை செய்தது. மேலும், 1994ஆம் ஆண்டு உயிர்ப்பு(Easter) ஞாயிறன்று, அஃபாமைச் சுற்றியுள்ள ஓகோனி கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அங்கு குடியிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையில் மோட்டார் குண்டுகளும் நேட்டோ தோட்டாக்களும் பயன்படுத்தப்பட்டதாகப் பிற்கால விசாரணையில் தெரியவந்தது. 1994ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் நடுப்பகுதிக்குள், 30 கிராமங்கள் அழிக்கப்பட்டிருந்தன.
ஜூலை 30 அன்று நைஜீரிய அரசாங்கம் அப்பகுதியிலிருந்து அனைத்து ஓகோனி காவல்துறையினரையும் அகற்றியது. ஐந்து நாட்களுக்குப் பிறகு அரசாங்கம் இதனை ஓகோனி மற்றும் அடோனி மக்களுக்கு இடையேயான இன மோதல் என்று விவரித்தாலும், நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி இந்த மோதல் புனையப்பட்டது என்றும், “அடோனி” வீரர்கள் அடோனி மொழியைத் தவிர வேறு ஒரு மொழியைப் பேசிக்கொண்டிருந்தனர் என்றும் தெரியவந்தது. ஓகோனி கிராமங்கள் மீதான தொடர் தாக்குதல்களில் சுமார் 750 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30,000 பேர் வீடுகளை இழந்தனர். இருந்தபோதிலும், அப்பகுதி முழுவதும் பரவலான போராட்டங்கள் தடையின்றி தொடர்ந்தன. மேலும், 1994ஆம் ஆண்டு UNPO உலக ஓகோனி வாரத்தை ஏற்பாடு செய்தது. நாட்டிற்குள் அடக்குமுறை அதிகரித்ததால், ஓகோனி போராட்டத்திற்கான சர்வதேச ஆதரவும் அறிவும் தொடர்ந்து வளர்ந்தன.
சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகளைத் தொடங்குமாறும், கடந்தகால சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் மொசாப் எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. 1993ஆம் ஆண்டு சரோ-விவா பலமுறை கைது செய்யப்பட்டார். 1993 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் கென் சரோ-விவா மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக, கிரீன்பீஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள் அவரது விடுதலைக்காக சர்வதேசப் பிரச்சாரங்களை முன்னெடுத்தன. “சரோ-விவாவை சிறைப்படுத்தியது, நைஜர் பகுதியின் மனசாட்சியைச் சிறைப்படுத்தியது போன்றது” என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியது. இருப்பினும், மொசாப் இயக்கத்திற்குள் இருந்த கருத்து வேறுபாடுகள், அதன் தலைவர் கென் சரோ-விவாவுக்கும் மற்ற இயக்கத் தலைவர்களுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தியிருந்தன. 1994 மே 21 அன்று, சரோ-விவா வெளிநாட்டில் இருந்தபோது, அவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நான்கு ஓகோனி தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நான்கு ஓகோனி தலைவர்களின் மரணத்திற்குப் பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டின் பேரில், நைஜீரிய அரசாங்கம் 1994 மே மாதம் ஒரு அரசியல் பேரணியில் சரோ-விவா மற்றும் எட்டு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு, பல மாதங்களுக்கு எந்தக் குற்றச்சாட்டும், சட்டப் பிரதிநிதித்துவமும், மருத்துவப் பராமரிப்பும் இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இறுதியில் சரோ-விவாக்கு சட்டப் பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டது. இந்த விசாரணை பரவலாகக் குறைபாடுடையதாகவும் நியாயமற்றதாகவும் கருதப்பட்டது, மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகவும் இருந்தன. ‘நானும் என் சகாக்களும் மட்டும் விசாரணையில் இல்லை. ஷெல் நிறுவனமும் இங்கே விசாரணையில் உள்ளது… உண்மையில், அந்நிறுவனம் இந்தக் குறிப்பிட்ட விசாரணையைத் தவிர்த்துவிட்டது. ஆனால், அதன் நாள் நிச்சயம் வரும். மேலும், இங்கே கற்றுக்கொண்ட பாடங்கள் அதற்குப் பயனுள்ளதாக அமையக்கூடும், ஏனெனில், நைஜர் டெல்டாவில் அந்நிறுவனம் நடத்திய சூழலியல் போர் விரைவில் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதிலும், அந்தப் போரின் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படும் என்பதிலும் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை’ (Ken Saro-Wiwa – Biography, hndinenglish.com, May 27, 2022) என்று சரோ-விவா அறிவித்தார். ஷெல் நிறுவனம் சாட்சிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், நைஜீரிய இராணுவ அரசாங்கத்துடன் இரகசியமாகச் சந்திப்புகளை நடத்தி வந்ததாகவும் ஆதாரங்கள் தெரிவித்தன. சரோ-விவாவுக்கு எதிராக அரசாங்கம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகளால் கண்டிக்கப்பட்ட ஒரு சிறப்புத் தீர்ப்பாயத்தின் விசாரணையில், கொலைகளில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்ட குற்றத்திற்காக சரோ-விவா குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். நான்கு ஓகோனி மூத்த குடிமக்களின் மரணத்தை சரோ-விவா திட்டமிட்டு அரங்கேற்றியதாகப் பொய்யானதொரு குற்றச்சாட்டுக்குப் பின்னர், அபாச்சா அரசாங்கம் ஆட்டா தீர்ப்பாயத்தை அமைத்தது. அபாச்சா ஆட்சியால் விவாவின் வழக்கறிஞர் நீண்டகாலமாகத் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட பின்னர், நீதிபதி ஆட்டா, சரோ-விவா மற்றும் எட்டு ஓகோனி ஆர்வலர்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக அவர்களைக் குற்றவாளிகள் என அறிவித்து, 1995, அக்டோபர் 31 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. (Ken-Saro Wiwa Killer Judge Becomes Acting Chief Judge Of Nigeria’, https://saharareporters.com › 2011/03/16 › Mar’16, 2011) தீர்ப்பாயத்தில் அவர் ஆற்றிய உரையில்: “நான் அமைதியை விரும்புவன்; சிந்தனையாளர்; வளம் நிறைந்த நிலத்தில் வாழும் என் மக்களின் இழிவான வறுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தவன்; அரசியலில் புறம் தள்ளப்பட்ட்டதாலும் பொருளாதார நசுக்கலினாலும் வேதனையடைந்தவன்; அவர்களின் நிலம், அவர்களின் உன்னதமான பாரம்பரியம் அழிக்கப்பட்டதால் கோபமடைந்தவன்; அவர்களின் வாழ்வதற்கான மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமையைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ளவன்; மேலும், அனைவரையும் மற்றும் ஒவ்வொரு இனக்குழுவையும் பாதுகாத்து, மனித நாகரிகத்திற்கான சரியான உரிமையை நம் அனைவருக்கும் வழங்கும் ஒரு நியாயமான மற்றும் நீதியான ஜனநாயக அமைப்பை இந்த நாடு முழுவதற்கும் கொண்டுவரத் தீர்மானித்தவன்; நான் முழுமையாக நம்பும் ஒரு நோக்கத்திற்காக எனது அறிவுசார் மற்றும் பொருள் வளங்களையும், என் உயிரையும் அர்ப்பணித்துள்ளேன்; அதிலிருந்து என்னை மிரட்டவோ அச்சுறுத்தவோ முடியாது… இங்கு நான் எதிர்கொள்ளும் பொய்க் குற்றச்சாட்டுகளிலிருந்து நான் நிரபராதி என்பதாலும், எனது முழுமையான உறுதியாலும், நான் ஓகோனி மக்களை அழைக்கிறேன். நைஜர் டெல்டா மக்களும், நைஜீரியாவின் ஒடுக்கப்பட்ட இன சிறுபான்மையினரும் இப்போது எழுந்து நின்று, தங்கள் உரிமைகளுக்காக அச்சமின்றியும் அமைதியாகவும் போராட வேண்டும்” (‘Remembering the Speech That Ken Saro-Wiwa Wasn’t Allowed to Read at His Execution’, Open Country Mag, https://opencountrymag.com › Culture, Dec’ 26, 2020) என்று அழைப்பு விடுத்தார்.
சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக நடத்தப்பட்ட ஒரு இராணுவத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்குப் பிறகு வழங்கப்பட்ட மரண தண்டனையை உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தச் சம்பவம் குறித்து அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர், இது ஒரு “போலியான விசாரணை, தவறான தீர்ப்பு மற்றும் அநீதியான தண்டனை” என்று கடுமையாகச் சாடியதோடு, இதனை ஒரு “நீதித்துறைப் படுகொலை” (Judicial Murder) என்றும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலா, நைஜீரியாவின் முன்னாள் இராணுவத் தலைவரான சானி அபாச்சாவிடம் கென் சரோ-விவாவை மன்னிக்குமாறு மன்றாடினார். 1995ஆம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டின் போது, கென் சரோ-விவாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நைஜீரிய அரசுக்கு மண்டேலா கடுமையான சர்வதேச அழுத்தங்களைக் கொடுத்தார். ஆனால், ஜெனரல் சானி அபாச்சாவின் இராணுவ அரசாங்கம் சர்வதேச வேண்டுகோள்களை மீறி, முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், ஆதாரமற்றதாகவும் பரவலாகக் கருதப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், 1995 நவம்பர் 10ஆம் நாள் தெற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு சிறை வளாகத்தில், கென் சரோ-விவா மற்றும் 8 ஓகோனி தலைவர்களுக்கும் (ஒட்டுமொத்தமாக ‘ஓகோனி ஒன்பது பேர்’-Ogoni Nine) மரணதண்டனை விதிக்கப்பட்டது. அமைதியான முறையில் தீர்வுகாண முயன்ற போதிலும், அரசாங்கத்தாலும் எண்ணெய் நிறுவனங்களாலும் (குறிப்பாக ஷெல் நிறுவனம்) அவர் ஒடுக்கப்பட்டு, இறுதியில் நைஜீரிய இராணுவ அரசாங்கத்தால் ஓகோனி ஒன்பது பேரும் நவம்பர் 10 அன்று தூக்கிலிடப்பட்டனர். கலவரத் தடுப்புக் காவல்துறையினரும் பீரங்கிகளும் இந்த மரணதண்டனையை மேற்பார்வையிட்டன. தூக்குக் கயிற்றை முத்தமிடுவதற்கு முன் சரோ விவா நீதிமன்றத்தில் முழங்கிய வார்த்தைகள் வரலாற்றில் அழியாதவை: “நான் தனிப்பட்ட முறையில் இறக்கலாம். ஆனால் என் எண்ணங்களும், இந்த இயக்கமும் ஒருபோதும் சாகாது. ஷெல் நிறுவனம் இந்த நிலத்தில் நடத்திய இனப்படுகொலைக்கு ஒருநாள் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”
கென் சரோ-விவா தலைமையிலான ஓகோனி ஒன்பது பேரில், பரினெம் கியோபெல், ஜான் குபுய்னென், பரிபோர் பெரா, ஃபெலிக்ஸ் நுவாடே, பால் லெவுலா, சாட்டர்டே டோபி, நோர்டு ஈவோ மற்றும் டேனியல் க்போகோ ஆகியோர் அடங்குவர். அப்பட்டமான நியாயமற்ற விசாரணைக்குப் பிறகு அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். கொலையில் ஈடுபட்டதாகத் தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர்கள், உண்மையில் நைஜர் டெல்டாவின் ஓகோனிலாந்து பகுதியில் ஷெல் நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தியால் ஏற்பட்ட பேரழிவு தாக்கத்தை எதிர்த்ததாலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்தக் கொலை உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நைஜீரியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் வழிவகுத்தது. அவர்களின் மரணதண்டனை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது ‘சட்டத்திற்குப் புறம்பான கொலை’ எனப் பரவலாகக் கண்டிக்கப்பட்டதுடன், சுற்றுச்சூழல் அநீதி மற்றும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் உலகளாவிய சின்னமாகவும் மாறியது. (வெடேலி சிபெலுஷி, ‘நைஜீரியாவில் செயற்பாட்டாளர் கென் சரோ-விவா மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்புக் கோரினார்’, பிபிசி, 13 ஜூன் 2025)
நன்கு திட்டமிடப்பட்ட ஒரு பிரச்சார இயந்திரம், கவனக்குறைவானவர்களையும் அறிவுத்திறனில் சோம்பேறிகளானவர்களையும் எப்படி எளிதில் தன் பக்கம் திருப்ப முடியும் என்பதற்கு சரோ-விவா சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏனெனில், பிரச்சாரம் என்பது பகுத்தறிவை அல்ல, உணர்ச்சிகளையே ஈர்க்கிறது. ஒரு செயற்பாட்டாளராக இருப்பது கொலை செய்வதற்கான உரிமம் என்பது போல, அந்தக் குற்றத்தின் விவரங்கள் பலரால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டன. ஓகோனி மக்களின் உயிர்வாழ்விற்கான இயக்கத்தின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, நைஜீரியாவின் இராணுவ அரசாங்கம் நடத்திய கொடூரமான நடவடிக்கையின் உச்சகட்டமாகவே இந்த மரணதண்டனைகள் அமைந்தன. ஓகோனி மக்களின் ஆதரவாளர்கள், உலகெங்கிலும் உள்ள நைஜீரிய தூதரகங்கள் மற்றும் ஷெல் அலுவலகங்களுக்கு முன்பாக எதிர்ப்புப் பேரணிகளை நடத்தினர். பல உலகத் தலைவர்கள் எண்ணெய் தடை, பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுத விற்பனைக்குத் தடை விதிக்க அழைப்பு விடுத்தனர். ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் கிரீன்பீஸ் போன்ற அமைப்புகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. நைஜர் டெல்டாவில் ஒரு எரிவாயு ஆலை மற்றும் குழாய் அமைப்பதற்காக 100 மில்லியன் டாலர் கடன் மற்றும் 80 மில்லியன் டாலர் பங்கு ஒப்பந்தத்தை முன்மொழிந்திருந்த சர்வதேச நிதிக் கழகம், இந்த மரணதண்டனைகளைத் தொடர்ந்து தனது முன்மொழிவை ரத்து செய்தது. சரோ-விவாவின் மரணமும் அவரது குணநலன்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக மாறின. அவரது மரணம் சர்வதேச அளவில் பெரும் சீற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
ஓகோனி மக்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தில், சரோ-விவா மற்றும் பிற ஓகோனி தலைவர்களின் மரணதண்டனையே கடைசி முக்கிய நிகழ்வாக இருந்தது. இருப்பினும், 1995 முதல் ஓகோனி தினத்தின் ஆண்டுவிழாவில் ஆண்டுதோறும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. அவை இன்றும் ஓகோனி மக்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன. ஓகோனி ஒன்பது பேர் நடத்திய போராட்டங்கள், புதைபடிவ எரிபொருள் தொழிற்துறையால் காலநிலை, மக்களின் வாழ்க்கை, சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு ஏற்படும் பேரழிவுகரமான பாதிப்புகள் மற்றும் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் தொடரும் வறுமை ஆகியவற்றின் மீது உலகளாவிய கவனத்தை ஈர்த்தன. ஓகோனி பகுதியில் எண்ணெய் எடுப்பதற்கான செயல்பாட்டு உரிமம் ஷெல் நிறுவனத்திடம் இன்னும் இருந்தாலும், அதன் ஆலைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மேலும், துளையிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டுமானால் ஒரு புதிய நிறுவனத்தைக் கண்டறிய வேண்டும் என்று 2008ஆம் ஆண்டு நைஜீரிய அரசாங்கம் கூறியது. இந்தப் போராட்டத்தின்போது ஓகோனி மக்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்தபோதிலும், அவர்களின் தொடர் மற்றும் தீவிரமான அமைதிப் போராட்டங்களின் விளைவாக, 1993ஆம் ஆண்டில் ஷெல் நிறுவனம் ஓகோனி நிலப்பகுதியிலிருந்து தனது எண்ணெய் எடுக்கும் பணிகளை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டு வெளியேற வேண்டியதாயிற்று. இது ஓகோனி மக்களின் மிக முக்கியமான வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனால், அதற்காக அவர்கள் கொடுத்த விலை மிக அதிகம். இன்றும் தங்களின் நிலத்தை முழுமையாகச் சுத்தப்படுத்தவும், முழுமையான அரசியல் நீதிக்காகவும் ஓகோனி மக்களின் அமைதிவழிப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சமரச தீர்வு
1996ஆம் ஆண்டு தொடங்கி, அரசியலமைப்பு உரிமைகளுக்கான மையம் (CCR), எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல் (ERI), ஷோன்பிரன், டிசிமோன், செப்லோ, ஹாரிஸ் & ஹாஃப்மேன் நிறுவனத்தைச் சேர்ந்த பால் ஹாஃப்மேன் மற்றும் பிற மனித உரிமை வழக்கறிஞர்கள், நைஜீரியாவில் ஷெல் நிறுவனத்தின் மீது கூறப்படும் மனித உரிமை மீறல்கள் அதாவது, உடனடி மரணதண்டனை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, மனிதாபிமானமற்ற நடத்தை மற்றும் தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றில் பொறுப்பேற்கச் செய்வதற்காக தொடர்ச்சியான வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் ராயல் டச்சு ஷெல் மற்றும் அதன் நைஜீரிய செயல்பாட்டின் தலைவரான பிரையன் ஆண்டர்சன் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டன. சர்வதேச மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நிறுவனம் ஆப்பிரிக்க நாட்டில் இழைத்த அநீதிக்கு, அமெரிக்க நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கலாம் என்பதற்கு முதல் உதாரணமாக இருப்பதால் இவ்வழக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் 2009 ஜூன் மாதம் விசாரணை தேதியை நிர்ணயித்தது. 2009 ஜூன் 9 அன்று, விசாரணை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சட்ட நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர, எண்ணெய் நிறுவனமான ஷெல் 15.5 மில்லியன் டாலர் (9.6 மில்லியன் பவுண்டுகள்) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. விசாரணை தொடங்குவதற்கு முந்தைய நாள் எட்டப்பட்ட இந்தத் தீர்வு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒப்புக்கொண்ட மிகப்பெரிய இழப்பீட்டுத் தொகைகளில் ஒன்றாகும். இந்த இழப்பீட்டுத் தொகையின் அளவை, சர்வதேச நிறுவனங்கள் தங்களின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கச் செய்வதற்கான ஒரு படியாக மனித உரிமைகள் சட்ட வல்லுநர்கள் கருதினர்.
1996ஆம் ஆண்டு இந்த வழக்கைத் தொடங்கிய, அரசியலமைப்பு உரிமைகளுக்கான மையத்தின் வழக்கறிஞரான ஜென்னி கிரீன், “ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மீது மனித உரிமை மீறல்களுக்காகக் குற்றம் சாட்டிய முதல் வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு காலத்தில் அனுபவித்து வந்த தண்டனையின்மையுடன் இனி செயல்பட முடியாது என்பதை இந்தத் தீர்வு உறுதிப்படுத்துகிறது” என்று கூறினார். தூக்கிலிடப்பட்ட ஓகோனி ஒன்பது பேரின் உறவினர்களை முக்கியமாகக் கொண்ட 10 மனுதாரர்களுக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் இடையே மூன்று வாரங்களாக நடந்த தீவிரப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த எண்ணெய் நிறுவனமும், அதன் நைஜீரிய துணை நிறுவனமான ஷெல் பெட்ரோலியம் டெவலப்மென்ட் நிறுவனமும், 1990களில் தெற்கு நைஜீரியாவை உலுக்கிய வன்முறையில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி, தங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து நிராகரித்து வந்தன. ஓகோனி நிலத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்தத் தொகையைச் செலுத்துவதாக அந்நிறுவனம் கூறியது. “எங்கள் பெயரைத் தூய்மைப்படுத்த நீதிமன்றத்திற்குச் செல்ல நாங்கள் தயாராக இருந்தபோதிலும், ஓகோனி மக்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவதே சரியான வழி என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ஷெல் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மால்கம் பிரிண்டெட் கூறினார்.
தூக்கிலிடப்பட்ட சரோ-விவாவின் மகனான கென் விவா ஜூனியரின் நீதிக்கான 14 ஆண்டுகால போராட்டத்திற்கு இந்தத் தீர்வு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. மற்ற மனுதாரர்களில் ஒருவரான கரலோலோ கோக்பாரா, 1993ஆம் ஆண்டு ஷெல் குழாய்த்திட்டத்திற்காகத் தனது கிராமம் புல்டோசரால் இடிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியபோது, நைஜீரியப் படைகளால் சுடப்பட்டு ஒரு கையை இழந்தார்.15.5 மில்லியன் டாலர் தீர்வுத் தொகையில், 5 மில்லியன் டாலர், நைஜர் டெல்டாவில் கல்வி மற்றும் பிற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஓகோனி கோகானா மொழியில் ‘முன்னேற்றம்’ என்று பொருள்படும் ‘கீசி’ (Kiisi) என்ற அறக்கட்டளையை அமைக்கப் பயன்படுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், ஓகோனியைச் சேர்ந்த ஒன்பது பேரின் குடும்பத்தினர், அவர்களைப் பிடித்துத் தூக்கிலிடுவதற்காக ஷெல் நிறுவனம் இராணுவ அரசாங்கத்துடன் சதி செய்ததாகக் குற்றம் சாட்டினர். ஓகோனி போராட்டக்காரர்களின் கொலைகள் மற்றும் சித்திரவதைகளை நிகழ்த்துவதற்காக இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது உட்பட, தொடர்ச்சியான பிற மனித உரிமை மீறல்களிலும் ஷெல் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது.அந்த நிறுவனம் நைஜீரிய இராணுவத்திற்கு வாகனங்கள், ரோந்துப் படகுகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியதாகவும், கிராமங்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிட உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சட்ட நடவடிக்கையின் ஆதரவாளர்கள், ஷெல் நிறுவனம் விசாரணையிலிருந்து விலகியிருப்பது, ஒருவேளை விசாரணை தொடர்ந்திருந்தால் முன்வைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆதாரங்களைக் குறித்து அந்நிறுவனம் கவலை கொண்டிருந்ததைக் காட்டுவதாகக் கூறினர். ஆயில் சேஞ்ச் இன்டர்நேஷனல் அமைப்பின் இயக்குநர் ஸ்டீபன் க்ரெட்ஸ்மேன், “தங்களுக்கு எதிரான வழக்கு மிகவும் வலுவானது என்பதை ஷெல் அறிந்திருந்ததால் அவர்கள் தங்கள் பணபலத்தால் விசாரணையிலிருந்து தப்பித்துக்கொண்டனர்” என்று கூறினார்.
நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், ஷெல் நிறுவனம் 1994ஆம் ஆண்டு எழுதிய ஒரு கடிதமும் அடங்கியிருந்தது. அதில், நைஜீரிய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு தங்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காகப் பணம் செலுத்த அந்நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்தது. அந்தப் படைப்பிரிவு, கொரோகொரோ கிராமத்திலிருந்து அந்நிறுவனத்தின் தீயணைப்பு வண்டிகளில் ஒன்றை மீட்டிருந்தது. அக்கால அறிக்கைகளின்படி, இந்த நடவடிக்கையால் ஓகோனி இனத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றும் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.. “நன்றியுணர்வின் வெளிப்பாடாகவும், எதிர்காலப் பணிகளில் தொடர்ந்து சாதகமான அணுகுமுறையைத் தொடர்வதற்கான ஊக்கமாகவும்” இந்த இழப்பீட்டைச் செலுத்துவதாக ஷெல் நிறுவனம் எழுதியிருந்தது.
இந்தத் தீர்வு மற்ற பன்னாட்டு நிறுவனங்களிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என மனித உரிமை வல்லுநர்கள் கருதினர். ஓகோனி தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி வழக்கறிஞரான அந்தோனி டிகாப்ரியோ, இது “நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகள் ஒரு சமூகத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை தீவிரமாகக் கருத்தில் கொள்ள ஊக்குவிக்கும்; இல்லையெனில், ஒரு வழக்கை எதிர்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று கணித்தார். ஓகோனி ஒன்பது பேரின் மரணதண்டனைகள் “சோகமான நிகழ்வுகள்” என்ற தனது கருத்தை ஷெல் நிறுவனம் வலியுறுத்தியது. “அவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு அன்றைய அரசாங்கத்தை இணங்க வைக்க முயன்றதாக” அது கூறியது. (Pilkington, ‘Shell pays out $ 15.5m over Saro Wiwa killing’, The Guardian, 8 June 2009) 2011ஆம் ஆண்டு , ஐக்கிய நாடுகள் சபை அப்பகுதியைச் சுத்தம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் (931 மில்லியன் யூரோக்கள்) செலவாகும் என ஒரு மதிப்பீடு அறிக்கையை வெளியிட்டது. அனைத்து சேதங்களையும் அகற்ற 30 ஆண்டுகள் ஆகும். ஷெல் நைஜீரியாவின் செய்தித் தொடர்பாளர் இகோ வெலி, தூய்மைப்படுத்தும் பணி குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை விளக்கினார். “முடிந்தவரை விரைவில் நடவடிக்கைகளைச் செயல்படுத்த நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்; நாங்கள் உதவ விரும்புகிறோம்; மேலும், தீர்வின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம்” என்று அவர் கூறினார். இதை பல ஓகோனி மக்கள் சந்தேகித்தனர். மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், எண்ணெய் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை முழுமையாகச் சுத்தம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியது. (Adrian Kriesch/c.k., “Ken Saro-Wiwa executed 20 years ago”, https://www.dw.com, Nov’ 09, 2015) 13 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு அதே டச்சு நீதிமன்றம், நைஜர் டெல்டாவில் பரந்த விவசாய நிலங்களையும் மீன்பிடி நீர்நிலைகளையும் மாசுபடுத்தியதற்காக நைஜீரிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு ஷெல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அந்த நிறுவனம் நூறு மில்லியன் டாலர்களுக்கும் மேலாக செலுத்த ஒப்புக்கொண்டது.(‘Ogoni nine: Nigerian widows lose case against oil giant Shell’, https://www.bbc.com › March 23, 2022)
அங்கீகாரம்
உள்ளூர் அல்லது சர்வதேச சட்டங்களை மீறும் பெருநிறுவனங்கள், உடந்தையாக இருக்கும் அல்லது திறனற்ற அரசாங்கத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளும்போது, அவற்றை பொறுப்பேற்கச் செய்வதற்கான உந்துதலே சரோ-விவாவின் மிக முக்கியமான பங்களிப்பாகும். (Roy Doron, Toyin Falola and Laura Seay, “The complex life and death of Ken Saro-Wiwa”, The Washington Post, July 29, 2016) மொசோப் அமைப்பும் அதன் நிறுவனர் கென் சரோ-விவாவும், தங்கள் மக்களின் குடிமை, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகளுக்காக வன்முறையற்ற முறையில் போராடிய முன்மாதிரியான தைரியத்திற்காகவும் அவரது தியாகம் மற்றும் சுற்றுச்சூழல் போராட்டத்திற்காகவும் 1995-ஆம் ஆண்டு உலக புகழ்பெற்ற கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (Goldman Environmental Prize) மற்றும் ‘ரைட் லைவ்லிஹுட் விருது’ (Right Livelihood Award) வழங்கப்பட்டது. அவரது செயல்களுக்கான ஒரு நினைவகம் 2006ஆம் ஆண்டு லண்டனில் திறந்து வைக்கப்பட்டது. நைஜீரிய எழுத்தாளர்கள் சங்கம், உரைநடைக்கான கென் சரோ-விவா பரிசை வழங்கி வருகிறது, மேலும் அவர் ‘மை ஹீரோ ப்ராஜெக்ட்’ மூலம் எழுத்தாளர் நாயகனாகப் பெயரிடப்பட்டுள்ளார். ஆம்ஸ்டர்டாமில் அவர் பெயரில் ஒரு தெரு உள்ளது. இன்று உலகளவில் சுற்றுச்சூழல் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் மிக முக்கிய அடையாளமாக அவர் கருதப்படுகிறார். அவர் இறந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025ஆம் ஆண்டு கென் சரோ-விவா மற்றும் அவருடன் தூக்கிலிடப்பட்ட மற்ற தலைவர்களின் தியாகத்தை அங்கீகரித்து, நைஜீரிய அதிபர் போலா டினுபு (Bola Tinubu), மரணத்திற்குப் பின் மன்னிப்பு வழங்கியதுடன், அவர்களுக்கு தேசிய கௌரவங்களையும் வழங்கினார். நாட்டின் ஜனநாயகத்திற்கு “சிறப்பான பங்களிப்புகளை” ஆற்றிய “நாயகர்களை” இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன என்று டினுபு கூறினார். சரோ-விவாவுக்கு ‘கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்’ விருது வழங்கப்பட்டது. ஓகோனி ஒன்பது பேரின் மன்னிப்பு மற்றும் கௌரவங்கள் குறித்த செய்திகள் கொண்டாடப்பட்டாலும், சில ஆதரவாளர்கள் மன்னிப்பு என்பது குற்றத்தைக் குறிப்பதாக உணர்ந்து, அவர்களை முழுமையாக நிரபராதி என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள், அவர்களைக் குற்றமற்றவர்கள் என்று அரசாங்கம் முழுமையாக அறிவிக்க (Exoneration) வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர்.
சரோ-விவா நைஜர் டெல்டாவின் விடுதலைக்காகப் போராடிய உலகப் புகழ்பெற்ற அமைதி ஆர்வலர் ஆவார். அகிம்சை வழியில் நீதி, மனித உரிமைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கண்ணியத்திற்காகத் தங்கள் உயிரையே தியாகம் செய்த மாபெரும் ஆளுமைகளாக, கென் சரோ-விவா மகாத்மா காந்தியுடன் இணைத்துக் கூறப்படுகின்றார். கென் சரோ-விவாவும் அவரது சகாக்களும் செய்த ஒரே குற்றம், சிறந்த சுற்றுச்சூழல் நடைமுறைகளைக் கோரியதும், ஓகோனி பிரதேசங்களின் அழிவுக்கு இழப்பீடு கேட்டதும்தான். கென் சரோ-விவா தனது உயிரையே விலையாகக் கொடுத்தார், ஆனால், அவரது தன்னலமற்ற குணம் தொடர்ந்து உலக சுற்று சூழலியல் ஆர்வலர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது. அவர் கூறினார்: “நானும் ஓகோனி மக்களும் அனுபவிக்கும் சிரமங்கள், துன்புறுத்தல்கள், கைதுகள், தடுப்புக்காவல், ஏன் மரணம் கூட, மில்லியன் கணக்கான மக்களின் கனவுக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குச் சரியான விலையாகும்.” கென் சரோ விவா என்ற கலகக் குரல் ஒடுக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், அவர் விதைத்த சுற்றுச்சூழல் நீதி மற்றும் மனித உரிமைக்கான போராட்ட வீரியம் இன்றும் உலகம் முழுவதும் வாழும் பூர்வகுடி மக்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாகத் திகழ்கிறது. கென் சரோ-விவாவின் புகழ்பெற்ற வரிகளில் ஒன்றான, “நான் உயிருடன் இருப்பதை விட இறந்த பிறகு அதிக ஆபத்தானவன்” என்ற கூற்றுக்கு இணங்க, சுற்றுச்சூழல் நீதிக்கான உலகளாவிய போராட்டங்களில் இன்றும் அவர் ஒரு மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்படுகின்றார்.
