வீனஸ்!.
அந்த இளம் குதிரை, தாய் மடொன்னாவை இழந்த நாளிலிருந்து யாரையும் அண்ட விடாமல் முரண்டுப் பிடித்ததால் டத்தோ1 லிம் மிகவும் கலங்கம் கொண்டார். ஹீன ஸ்வரத்திலேயே தனது உயிரவஸ்தையைக் குட்டிக்குத் தாய் எப்படியோ கடத்திவிட்டிருக்க வேண்டும்! தாயின் மரணத்தையே அசைப் போட்டுக்கொண்டிருப்பதுபோல் குட்டி, பற்களை நெறித்தப்படி மூக்குத் துவாரங்கள் விரிய, பெரு மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. விலங்குப் பராமரிப்பில் ‘whale eye’ என்று சொல்லப்படும் கண்களின் வெள்ளையைக் காட்டித் தன் பதற்றத்தை வெளிப்படுத்தியது. ஓரிடத்தில் நிற்பதில் ஆபத்திருப்பதுபோல் பட்டிக்குள்ளேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. வால், ‘விர்’ ‘விர்’ரென்று காற்றை அடித்து சங்கடத்தைக் காட்டியது. சரியாகச் சாப்பிட மறுத்தது! டத்தோ, தூரத்தில் நின்றுக்கொண்டு கவலையுடன் வீனஸ்சைக் கண்காணித்தார். கண்ணெதிரிலேயே திடுக்கிடச் செய்த சத்தத்துடன் எதிர்க்கொண்டத் தாயின் மரண ஓலம், ஆறாதக் காயத்தை ஏற்படுத்தியிருக்குமோ என்று அச்சம் கொண்டு மருகினார். காலம் எனும் சிகிச்சை தரும் பலனுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தார்…
* * *
டத்தோ லிம், பணி செய்து பொருளீட்ட வேண்டிய அவசியமில்லாத ஒரு பிறவிப் பணக்காரர்! நண்பர்களின் சகவாசத்தால் குதிரைப் பந்தயத்தின் பரம ரசிகரானார். ஆரம்பத்தில் சிங்கப்பூர், ஈப்போ, பினாங்கு, கோலாலம்பூர் என்று சூதாடி வந்தவருக்கு ஒரு கட்டத்திற்குமேல், வெறும் அநாமதேயச் சூதாடியாய் இருப்பது சலிப்பைத் தந்தது. ஒரு குதிரையை வாங்கிப் பயிற்றுவித்து, பந்தயத்தில் இறக்கிப் பணம் பண்ணும் கிளர்ச்சிக்கு ஆளானார்.
நாட்டின் தலை சிறந்த பயிற்றுனர்களில் ஒருவரான ‘Hans Van Breukelen’-னிடம் மூன்று வருடங்கள் துணைப் பயிற்றுனராக நேரடிப் பயிற்சி எடுத்து, மலேசியக் குதிரைப் பந்தய சம்மேளனத்தின் சான்றிதழைப் பெற்றார். வான் புருக்லீனின் ஆலோசனையின் பேரில் பந்தயக் குதிரையை வாங்க ஆஸ்திரேலியா சென்று, அவரின் நண்பரான பீட்டரைச் சந்தித்தார். பீட்டர் பரிந்துரைச் செய்த பெண் குட்டியைப் பார்த்தார். ‘Stallion’ என்று சொல்லப்படும் ஆண் குதிரைகள் வேகமாக ஓடக்கூடியவையாக இருந்தாலும் மூர்க்கத்தனம் அவற்றின் பிறவிக்குணமென்பதால் தவிர்த்தார்.
பந்தயக் குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய அதன் பரம்பரை. குருதிவழி, ஆற்றல், சுபாவம் யாவற்றையும் வான் புருக்லீன் ஏற்கனவே தெளிவாக விளக்கியிருந்தார். கபில நிறம், நெற்றிப் பொட்டில் நட்சத்திர அடையாளத்தில் வெள்ளையாய் ஒரு பொட்டு! டத்தோவிற்கு அக்குட்டியை மிகவும் பிடித்துப் போனது. அது, ‘Frankel’ என்ற குதிரையின் குருதிவழியில் வந்த பரம்பரை என்று பீட்டர் ஆர்வத்துடன் விதந்தோதிய போது, அதன் சிறப்பை இவர் அறிந்திருக்கவில்லை!. அக்குட்டியை அதிக விலைக்கு விற்க முயலும் யுக்தியோ என்று சந்தேகம் கொண்டார். ஆனால், பங்குபெற்ற 14 போட்டிகளிலும் முதலாவதாகவே வந்து, வாகைச் சூடிய ‘Frankel’-லின் சாதனையை அறிந்த பின்னரே டத்தோவிற்கு அந்த ‘Thoroughbred flat horse’2-ன் கீர்த்தி புரிந்தது. அவரைப் போலவே அதுவும் ஏப்ரல் மாதத்தில் பிறந்திருப்பது தெரிந்ததும் உடனே அதன்மேல் பிரத்தியேக நேசம் பிறந்தது. அந்த ‘Filly’3-யை எப்படியும் வாங்கிவிடுவதென்று தீர்மானித்துக்கொண்டார்.
குதிரைகள், ஒரு வருடத்தின் எந்த மாதத்தில் பிறந்திருந்தாலும் அந்த வருடத்தின் ஜனவரியில் பிறந்ததாகவே வயது கணக்கிடப்படும் என்பதால் பீட்டர் வயதைச் சொன்னபோது, டத்தோ கணித்திருந்தது சரியாகவே இருந்தது.
டத்தோ லிம், ஒரு தீவிர கத்தோலிக்கர். குதிரைக்கு ‘மடொன்னா’ என்று பெயரிட்டு முறையாகப் பயிற்சியளித்துப் பந்தயத்திற்குத் தயார் செய்தார். அவ்வப்போது வான் புருக்லீனும் உதவிக்கு வந்தார்.
பொதுவாக, இரண்டு வயதில் ‘Maiden Race’ என்று அறியப்படும் கன்னிப் பந்தயத்திற்கு குதிரைகள் தயாராகிவிடும். டத்தோ, அவசரம் கொள்ள விரும்பவில்லை. மேலும் ஒரு வருடம் எடுத்துக்கொண்டு மூன்றாவது வயதிலேயே மடொன்னாவைக் களமிறக்கினார். சூதாடத் தொடங்கியக் காலத்திலிருந்தே பினாங்குத் திடல் அவருக்கு அதிர்ஸ்டகரமானதாக இருந்ததே இல்லை. கணிசமான அளவிற்குப் பணத்தை இழந்த இடமாகவே இருந்தது. எனினும், மடொன்னாவைப் பினாங்கிலேயே அறிமுகம் செய்தார். தடைகளை உடைக்க விரும்புவது அவரின் சுபாவமாக இருந்தது.
புதிய குதிரை! பயிற்றுனரும் அறிமுகமில்லாதவர்! சூதாடிகள் யாருமே மடொன்னாவின்பால் அக்கறை காட்டவில்லை. டத்தோவோ, குதிரைக்குக் கிடைக்கப் போகும் அனுபவமே பிரதானமெனக் கருதியதால் அதைப் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளவில்லை..
அன்றையப் பந்தயத்திற்கு வந்த அனைவருமே பிரமித்துப் போயினர். ஓர் அநாமதேயக் குதிரையாய் ஓடினாலும், ஐந்து குதிரைகள் இடைவெளி வித்தியாசத்தில் ஒன்றாவதாக வந்தது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உடனடியாக மடொன்னா மற்றும் பயிற்றுனரின் தகவல்களைத் தெரிந்துகொள்ளப் பலரும் பரபரத்தனர்.
“Dato, your filly hecked up by five lengths in the final furlong, man!” என்று வான் புருக்லீன் பாராட்டி, ஆச்சரியப்பட்டுப் போனதை இவரால் மறக்கவே முடியவில்லை.
குதிரைப் பந்தய வட்டாரத்தில் மடொன்னா உடனடியாகப் பிரபலமானது. இரண்டே வருடங்களில் கிளாஸ் 4, கிளாஸ் 3, கிளாஸ் 2 என்று முன்னேறி, பணம் கொழிக்கும் கிளாஸ் 1 பந்தயத்திற்குத் தேர்வானது!
“‘Frankel’-ன் குருதிவழி ஆற்றல் அப்படியே தெரிகிறது டத்தோ” என்று வான் புருக்லீன் வியந்து போனார். அவரின் வாய் முகூர்த்தம் பலித்ததுபோல் மடொன்னாவும் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்தது. ஏழு வருடங்களுக்கு -தனது 10வது வயதுவரை- பங்குபெற்ற பந்தயங்களிலெல்லாம் ஆச்சரியப்படத்தக்கச் சாதனைகளை எட்டியது. 2008-ல் தனது 7-வது வயதில் ‘Tengku Gold Cup, Selangor Gold Cup, Piala Mas Sultan Selangor Cup’ ஆகிய பந்தயங்களில் ஒன்றாவதாக வந்து ‘Triple Crown’ பட்டத்தையும் வென்று, சரித்திரம் படைத்தது.
* * *
அன்று, வழக்கம்போல் மிகுந்த ஆற்றலைக் கோரும் பந்தயத்திற்குப் பின்னர், மடொன்னா ‘spelling’4-ல் இருந்தபோது, டத்தோவிற்கு திடீரென்று ஒரு யோசனை உதித்தது. ‘இந்த ஓய்வை இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்திக்கொண்டால்..?’. இயல்பாகவே பந்தயக் குதிரைகளின் ஆற்றல் 10-வது வயதிலிருந்து குறையத் தொடங்குவதை ஆய்வுகள் நிரூபித்திருந்தன. மடொன்னாவை இனி, மிகுந்த ஆற்றலைக் கோராத குதிரையேற்றப் பயிற்சிக்குப் பயன்படுத்திக்கொள்வது அதற்குக் காட்டும் காருண்யமாக அவருக்குப் பட்டது. மேலும், பிரசவத்திற்குப் பின்னர், குதிரைகள் பந்தயத்தில் பங்குபெறக் கூடாதக் கட்டுப்பாடும் இருந்தது. தஞ்சோங் ரம்புதானில் இருந்த ‘Ipoh National Stud Farm’-மிற்கு கொண்டு சென்று, நாட்டின் பிரசித்திப் பெற்ற பொலி குதிரையான ’Dolphin Street’-டுடன் மடொன்னாவை இனச்சேர்க்கைச் செய்வித்தார்.
கருத்தரித்திருந்த காலங்களில் எந்த மருத்துவத் தேவையின் தாமதத்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடலாகாது என்ற எச்சரிக்கையில் டத்தோ, ஒர் ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவரை பிரத்தியேகமாக வரவழைத்து, இரண்டாண்டுகளுக்குப் பணியில் அமர்த்திக்கொண்டார்.
ஒரு வருட கர்ப்பக் காலத்திற்குப் பின்னர், மாடொன்னா ‘வீனஸ்’சை ஈன்றெடுத்தது!. குட்டி, அச்சு அசல் மடொன்னாவைப் போன்றே இருந்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அடுத்த மூன்று மாதங்களுக்குத் தாயின் பரிபூரண கண்காணிப்பிலேயே வீனஸ் வளர்ந்தது.. சர்வகாலமும் தாயுடனேயே இருந்து, நினைத்தப் பொழுதெல்லாம் தாய்ப்பால் குடித்து உரம் பெற்றது. முதலிரண்டு மாதங்களில் அதன் தாகசாந்தி நாளுக்கு 70 முறையாக உச்சத்தை எட்டியது. மூன்றாவது மாதத்திலிருந்து பால் சுரப்பு குறைந்தபோது, வீனஸ் பசி தாங்காமல் தாயின் உணவை மெல்ல அசைப் போடத் தொடங்கியது.
டத்தோ, மடொன்னாவை இப்போது, ‘Alice Smith’ என்ற அனைத்துலகப் பள்ளியில், மாணவர்களின் குதிரைச் சவாரிக்கு வாடகைக்கு விட்டு பராமரித்து வந்தார்.
* * *
அது, தூறல் போட்டுக்கொண்டிருந்த ஒரு மாலை வேளை!. மணி, ஆறு இருக்கும்!.
டத்தோ, பட்டியில் வீனஸ்சிற்கு சிஷ்ருஷை செய்வதில் மூழ்கியிருந்தார்.
‘Horse Float’ எனும் தனியார் போக்குவரத்து நிறுவனம், பள்ளியில் பயிற்சி முடிந்த மடொன்னாவைக் குதிரை லாயத்திற்குக் கொண்டு வந்திருந்தது. அதன் பணியாளர்கள் அனுபவசாலிகள். கைகளுக்குக்கூட கண்கள் இருப்பதுபோல் அவர்களின் பணி அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். வண்டியின் பின்பக்கக் கதவுகள் திறக்கப்பட்டன. குதிரை இறங்க வசதியாக சாய்வு தளம் பொருத்தப்பட்டது. மடொன்னா, அயர்ச்சியுடன் கீழே இறங்கத் தொடங்கியது. விசேஷக் கவனத்தைக் கோராத வழக்கமான நடைமுறை! பணியாளர்கள் சற்றே அசட்டையாக இருந்துவிட்ட அடுத்த விநாடி, தனது மூன்றாவது அடியை சாய்வு தளத்தின் விளிம்பில் வைத்துச் சரிந்ததால், வலது முன்னங்கால் ‘படக்’கென்று முறிந்து, குதிரை ‘பொத்’தென்று சாலையில் விழுந்தது. வலி தாங்க முடியாமல் மடொன்னா கத்திய கனைப்பு உயிரைப் பிழிந்தது. குதிரையின் பரிதாபமான ஹீனக் குரல் கேட்டு டத்தோ, பதறியடித்துக்கொண்டு லாரியிடம் ஓடி வந்தார். அவரின் கண்கள் ஒரு கணம் குருடாகிப் போயின! மடொன்னா, எழ முடியாமல் எஞ்சிய கால்களை உதறித் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க இருதயமே நின்றுப் போனது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். வீனஸ்சிற்கும் தாயின் வேதனைப் புரிந்ததுபோல் எதிர்க் குரல் எழுப்பிக் கத்தியபடி, தனது லாயத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. சுற்றுக்கு ஒரு முறை நின்று, தாயின் பக்கம் பார்த்து, தாங்கவொண்ணா வேதனைத் தோய்ந்த குரலைக் கொடுத்து உறவாடியது.
ஒரு விநாடியில் அந்த இடமே களேபர பூமியாகிப் போனது! எல்லோருமே ஏதோ ஒரு குரலில் வேதனையைச் சொல்லி அழுதனர். டத்தோ, மீண்டும் மீண்டும் ‘ஓ, ஜீசஸ்!..’ என்று கர்த்தரிடம் முறையிட்டு அழுதார். மடொன்னா, வேதனையில் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கச் சித்திரவதையாய் இருந்தது. பணியாளர்கள் பயந்து நடுங்கி, டத்தோவைப் பார்க்கும் திராணி இல்லாமல் கைகளை உதறிக்கொண்டுத் தவித்தனர்.
இனி, செய்வதற்கு இருந்தது ஒரே சிகிச்சைதான். கருணைக் கொலை! டத்தோ, கனத்த மனதுடன் அதற்குத் தயாரானார். வீனஸ்சை வேறு ஸ்தலத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவது நல்லதென்று பட்டது. ஆனால், அருகில் யாரையும் அண்டவிடாமல் அச்சுறுத்தும் தோரணையில் அது, காதுகளை நிமிர்த்திக்கொண்டுத் திரிந்தது. அருகில் செல்ல யாரும் துணியவில்லை.
மடொன்னா, தனக்கொரு உடனடி விமோசனம் வேண்டி பரிதாபமாய் யாசித்துக்கொண்டிருந்தது. கடந்துகொண்டிருந்த விநாடிகளின் நரக வேதனையைக் கால்கள் காட்டித் துடித்தன! வழக்கமாக, கருணைக் கொலையைக் கால்நடை மருத்துவரே செய்வார். டத்தோ, தன் கையாலேயே மடொன்னாவின் வேதனையை முடித்து வைக்க விரும்பி, மருத்துவரிடம் அனுமதி கேட்டுக் கெஞ்சினார். மருத்துவர், இக்கொலையில் பிரதானமாக உறுதிசெய்யப்பட வேண்டிய உடனடி மயக்கமும், மரணமும் பற்றி விலக்கி, அதற்கானத் துல்லியமான இடத்தை நெற்றிப் பொட்டில் சுட்டிக் காட்டி, அரைமனதுடன் உடன்பட்டார்.
டத்தோ ஆயத்தமானார்! அதைச் செய்து முடிக்க அவருக்கு ஓர் உந்துதல் தேவைப்பட்டது. சிதைந்து கிடந்த காலைப் பார்த்தார். துவண்டு, உயிரற்றுக் கிடந்தது. மற்ற மூன்று கால்களோ விமோசனம் வேண்டிக் கெஞ்சித் துடித்துக்கொண்டிருந்தன. மனது திடப்பட்டது! நடுங்கிக்கொண்டிருந்த விரல்கள் ஒரு நிதானத்திற்கு வந்தன. துப்பாக்கி, நெற்றியைக் குறி பார்த்தது!
‘விசையை யார் அழுத்தியது?..’
திராணியற்று, தூரமாய் விலகிப் போன டத்தோவின் செவிகளில் அந்த வெடிச் சத்தம் கேட்டபோது, உடல் அதிர்ந்து குலுங்கியது. அடுத்த அடியை வைக்கமுடியாமல் ஸ்தம்பித்து நின்றார்!
வெடிச் சத்தத்தால் தனது இனத்தின் அன்னிச்சைச் செயலான ‘fright ang flight’ -க்கு உட்பட்ட வீனஸ், பீதியுற்று, கனைத்துக்கொண்டே பட்டிக்குள்ளேயே வட்டமடிக்கத் தொடங்கியது.
மடொன்னாவிடமிருந்து பிரிவின் முனகலைப்போல் துயரம் சொட்ட ஒலித்த ஹீனக் குரல்,
‘தாய், இறுதியாய் சேயிடம் வைத்தப் புகாரோ?’
* * *
காலம், தன் சிகிச்சையைச் செவ்வனே செய்துக் காட்டியது. மூன்று மாதங்கள் கடந்திருந்தன. டத்தோவின் பொறுமை வீண் போகவில்லை!. வீனஸ்சை நெருங்க முயன்ற முயற்சி இப்போது மெல்லப் பலனளிக்கத் தொடங்கியது. அதனிடம் கண்ட புதிய மாற்றங்கள் ஒரு பயிற்றுனராக அவருக்குத் தெம்பை ஊட்டின. வீனஸ்சின் பார்வையில் கனிவு தெரிந்தது. கருவிழியைச் சுற்றி வெள்ளைப் படராதது அதன் நிதானப் போக்கைக் காட்டியது. சுவாசம் சீரான கதியில் வந்தது. பின்னங்கால் ஒன்றை மெல்ல மடக்கிக்கொண்டு, மற்ற மூன்று கால்களில் நின்றதில் அதன் சாந்தம் தெரிந்தது. டத்தோ, மேலும் அருகில் சென்றபோது வீனஸ், அவரின் ஸ்பரிசத்திற்கு ஏங்கித் தவித்ததுபோல் தலையை நீட்டியது. டத்தோ, தலை; கழுத்து; நெற்றி; உடல் என்று தடவிக்கொடுத்து, ‘ஐ மிஸ் யூ வீனஸ்’ என்று கொஞ்சி, அணைத்துக்கொண்டார்.
* * *
அன்று, வீனஸ் 1600 மீட்டர் ‘Maiden Special Weight (MSW) Race’-ல் ஓடவிருந்தது.
மடோன்ன இறந்து 2 வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் பந்தயத்தில் இறங்குவது டத்தோவிற்குப் புதிய அனுபவமாய்ப் பட்டது. பதற்றமாக இருந்தது! பந்தயத்திற்கான நடைமுறைகள் யாவுமே புதியதாகவும், வித்தியாசமாகவும் இருப்பதுபோல் பிரமைத் தட்டின!
பந்தயத்திற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்னதாக ‘groomers’5, பங்குபெறும் குதிரைகளைத் தடுப்புகள் கொண்ட ஒரு கூடாரத்தினுள் தனிமைப்படுத்தி வைத்தனர். அங்கே தயாராகக் காத்திருந்த ‘pre race blood collection’ குழுவினர் குதிரைகளின் ரத்தத்தைச் சேகரித்துச் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
‘Saddling yard’6-டிற்குள் கொண்டு செல்வதற்கு முன்னர் கால்நடை மருத்துவரும், ‘paddock steward’7-ம் ஒவ்வொரு குதிரையின் ஆரோக்கியத்தையும், தயார்நிலையையும் உண்ணிப்பாக கவனித்தனர். ஈக்களை விரட்டியடிக்கும் குதிரையின் தலையசைவு மற்றும் சீரான நடையில் பிரத்தியேகக் கவனம் செலுத்திக் கண்காணித்தனர்.
பந்தயத்திற்கு அரை மணி நேரமிருக்கையில், குதிரைகள் பிறை வடிவிலிருந்த ‘saddling yard’-ல் தனித்தனி தடுப்பிற்குள் கொண்டு செல்லப்பட்டன. அந்த அறைகளில் CCTV காமிராக்கள் பொருத்தப்பட்டு குதிரைகள் யாவும் கூர்ந்து கவனிக்கப்பட்டன. ஜட்ஜும், ‘Stipendary steward’8-ம் ஜோக்கியை சேணத்தோடு ஒன்றாக எடை பார்க்கும் கருவியின் மேல் நிற்கவைத்து, எடையைக் குறித்துக்கொண்டு, சேணத்தை மீண்டும் பயிற்றுனரிடம் கொடுத்தனர். அவர், அதைக் குதிரைக்கு அணிவித்தார். ஜோக்கிகள், சூதாடிகள் பார்க்க, சேணம் அணிவிக்கும் முற்றத்திற்கு முன்னே இருந்த வெற்றிடத்தில் குதிரைகளைத் தவ்வு நடையில் வரிசையாக நடக்க வைத்து, அவற்றின் ஆயத்தத்தை எல்லோருக்கும் காட்டினர்.
வர்ணனையாளர் முனைப்புடன் தனது வர்ணனையைத் தொடங்கினார். பங்குபெரும் குதிரைகளின் சிறப்புகள் விவரிக்கப்பட்டன. அவர் மூச்சு விடாமல் பேசியத் தோரணை, சூதாடிகளைப் பந்தயத்திற்குள் ஆகர்ஷித்துக் கொண்டது. வினஸ்சைப் பற்றிச் சொல்லும்போது அதன் தாய் மடொன்னாவைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. தாயின் கீர்த்தியே வீனஸ்சின் அடையாளமாகிப் போனது.
போட்டி ஆரம்பிக்க 15 நிமிடங்கள் இருந்தன!
ஜோக்கிகள், குதிரைகளுடன் தமக்குரிய தடுப்பிற்குள் அணிவகுத்து நின்றனர். ‘Silks’ என்று அறியப்பட்ட ஜோக்கிகள் அணிந்திருந்த அங்கிகள், குதிரை உரிமையாளரின் அடையாளங்களாக பொருள்பட்டன! வீனஸ்சின் ஜோக்கியான வேலு, டத்தோவின் அடையாளமான நீல நிற அங்கியை அணிந்திருந்தார்.
பார்வையாளர்கள் கூடம் சூதாடிகளால் நிரம்பி வழிந்தது. டத்தோ கடிகாரத்தைப் பார்த்தார்.
மின்சார விசை அழுத்தப்பட்டது! தடுப்பின் இரும்புக் கதவுகள் திறக்கப்பட்டன!, குதிரைகள் சீறிப் பாய்ந்துகொண்டு ஓடத் தொடங்கின. வர்ணனையாளர் பந்தயத்தை வர்ணிக்கத் தொடங்கினார்.
‘அவரும் குதிரைகளோடு சேர்ந்து ஓடுகிறாரா என்ன?’
“பந்தயம் ஆரம்பமாகிவிட்டது நேயர்களே! குதிரைகள் ஓடத் தொடங்கிவிட்டன. காலையில் மழை பெய்திருந்ததால் திடல் ‘good to firm’ கண்டிஷனில் இருக்கிறது. இது மாத்தா ஹரிக்கும், பூமிபுத்ரிக்கும் சாதமான நிலையென்பதை நீங்கள் அறிவீர்கள்! நினைவிருக்கட்டும் நேயர்களே!. மாத்தா ஹரிதான் இன்றைய ‘NAP’9. ஆமாம் நேயர்களே அப்படித்தான் தெரிகிறது. அந்த இரண்டு குதிரைகள்தாம் ‘Head to head’ -ஆக முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஓ மை காட்!. ஐந்தாவதாக ஓடிக்கொண்டிருக்கும் சன் ரைஸ்சிற்கு என்ன ஆனது? மெல்ல பின் தாங்கி, இறுதியில் பந்தயத்திலிருந்தே வெளியாகிவிட்டதே! இமைகளைச் சிமிட்டகூட நமக்கு அவகாசமில்லை நேயர்களே! எந்த விநாடியிலும் எந்த நிலைமையும் மாறலாம்! ஜோக்கிகள் இப்போது ‘Turning for home’10-ல் தமது குதிரைகளைச் செலுத்தி, வெற்றியை நிலைநாட்டிக்கொள்ள முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். ஒன்றாவதாக மாத்தா ஹரி! இரண்டாவது பூமிபுத்ரி! மூன்றாவதாக… ஆ, என்ன ஆச்சரியம்! வீனஸ் எங்கிருந்து இப்படி பாய்ந்தோடி வந்தது? எல்லா ஜோக்கிகளும் வேலியை ஒட்டி நேர்க்கோட்டில் ஓடிக்கொண்டிருக்க, வீனஸ் அதிரடியாக நீள்வட்டமெடுத்து எல்லா குதிரைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒன்றாவதாக அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறது! ஓ மை காட்! இந்த சாகசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை!. வீனஸ்? ஓ, ஆமாம்! வீனஸ், ‘Triple Crown’ பட்டத்தை வென்ற மடொன்னாவின் வாரிசு அல்லவா! ”
‘ஜீசஸ்! முதலாவதாக ஓடுவது!’
டத்தோ, ஒரு கணம் மடொன்னாவைப் பார்ப்பதுபோல் கண்கள் சொக்கிப் போனார். வீனஸ்தான் ஒன்றாவதாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் பின்னாலேயே ‘மாத்தா ஹரி’ வந்தது. எல்லோரும் பரபரப்புடன் தாம் பணம் கட்டியிருந்த குதிரையை ஊக்குவித்துக் கத்தி, ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். டத்தோவும் வெறிப் பிடித்தவர்போல் வினஸ்சின் பெயரைக் கத்திக்கொண்டு குதித்தார். மாத்தா ஹரி எந்த நிமிடத்திலும் வினஸ்சை எட்டிவிடும் வேகத்தில் வந்துக்கொண்டிருந்தது. இரண்டில் எதுவும் வெற்றி பெற்றுவிடும் வெறியில் முன்னேறிக் கொண்டிருந்தன. எஞ்சியிருந்த தூரத்தைக் கடக்க ஒரு நொடி போதுமா?.
“நேயர்களே, அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. முதல் பந்தயமாக இருந்தாலும் யாருமே எதிர்ப்பார்த்திராத ஒரு பர்ஃபோர்மன்சை வீனஸ் காட்டியிருக்கிறது. ஓ மை காட்! என்னால் நம்பவே முடியவில்லை! Venus is a stayer like her mother. The energy she had for the ‘final kick’ is unbelievable! I’m absolutely gobsmacked!” வர்ணனையாளர் தன்னை மறந்து வர்ணித்துக்கொண்டிருந்தார்.
டத்தோ வெற்றிக் களிப்பில் திக்கு முக்காடிப் போனார். வான் புருக்லீன், “டத்தோ, மடொன்னா மீண்டும் பிறந்துவிட்டது.. Venus has a tremendous turn of foot over the last 100 meters” என்று கையைக் குலுக்கி மனதாரப் பாராட்டிவிட்டுச் செல்லும்போது தவறாமல், முதல் மூன்று இடங்களில் வரப்போகும் குதிரைகளைச் சரியாக கணித்து,‘Trifecta Bet’ 11கட்டியிருந்த பந்தயச் சீட்டை பரவசத்துடன் டத்தோவிடம் காட்டிவிட்டுச் சென்றார். வீனஸ், மடொன்னாவின் வாரிசு என்ற நம்பிக்கையில் ‘Win Bet’ 12 பந்தயம் கட்டியவர்களெல்லாம் ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் வாயடைந்துப் போய், தமது பரிசுப் பணத்தை கணக்குப் போடத் தொடங்கிவிட்டனர். இன்னும் சிலர், ‘Place Bet’ 13 கட்டியும் வெற்றி பெற்றிருந்தனர்.
* * *
டத்தோ, நிலைக்கொள்ள முடியாமல் பரபரப்புடன் வீனஸ்சிற்காக லாயத்தில் காத்திருந்தார்.
‘Horse Float’ வாகனம் வந்தது. டத்தோ பக்கத்திலேயே இருந்து, ஊழியர்களின் நடவடிக்கைகளை உண்ணிப்பாகக் கவனிக்கலானார். அவர்கள், மிகுந்த கவனத்துடன் தமது பணிகளைச் செய்யலாயினர். வண்டியின் பின்பக்கக் கதவைத் திறந்தனர். மிகவும் எச்சரிக்கையுடன் தடத்தின் வழியாக வீனஸ்சை சாலைக்குக் கொண்டு வந்தனர். முதல் பந்தயம்! பந்தயக் களைப்பு வினஸ்சின் தோற்றத்தில் தெரிந்தது. வியர்வையாக வெளியாகிய உடல் நீர்மமும், அதனால் ஏற்பட்ட ‘Electrolyte’ குறைப்பாடும் அதன் உடல் உஸ்ணத்தை அதிகரிக்கச் செய்திருந்தது. மூட்டுகளின் அழற்சி மற்றும் தசைகளின் விறைப்பு வீனஸ்சின் நடையில் தெரிந்தது. வேலையாள், உடனடியாக குதிரையை லாயத்திற்கு கொண்டுச் சென்று, அதன் மேல் குளிர்ந்த நீரைக் கொட்டி, உடல் உஸ்ணத்தை முதலில் குறைத்தான். கால்களின் முட்டிகளில் ‘Ice pack’-க்குகளைக் கட்டி, மூட்டுகளின் அழற்சியைத் தணித்தான். தொடர்ந்து, சமசீர் உணவு கொடுக்கப்பட்டது.
பந்தயம் ஓடிய குதிரைகளை -காயங்கள் ஏதும் ஏற்பட்டிராதப் பட்சத்தில்- 3 -லிருந்து 6 வாரங்களுக்கு கட்டாயமாக ‘spelling’-ல் இருக்க வைப்பது எல்லா பயிற்றுனர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டிய ஒரு பொது விதி! டத்தோ, நான்கு வாரங்களுக்கு வீனஸ்சை கட்டாய ஓய்வில் வைத்துவிட்டு, ஐந்தாவது வாரத்திலிருந்து சில எளிமையான பயிற்சிகளை அளிக்க ஆயத்தமானார்.
பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னர், வீனஸ்சின் வெற்றியைக் கொண்டாட அவருக்கு ஆவலாய் இருந்தது. ‘வெற்றிச் சவாரியைச் செய்து வருடங்கள் ஆகிவிட்டனவே!’ குதிரையின் தலையைத் தன் நெஞ்சோடு அணைத்து, ‘வீனஸ், மீண்டும் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னர், வா!. ஒரு சுற்று வெற்றி ஊர்வலம் போய் வருவோம்..’ என்று அதன் காதில் ஓதி, பயிற்சித் திடலுக்கு அழைத்துச் சென்றார். நெற்றியைத் தடவிக்கொடுத்து கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்தினார். ‘உன் தாயின் கீர்த்தியைக் காப்பாற்றிவிட்டாய் வீனஸ்!’ என்று மெச்சினார். பின்னர், நிதானமாக அதன்மேல் ஏறி அமர யத்தனித்தார். ஆனால், அந்த வெற்றிச் சவாரிக்கு தான் இன்னும் ஆயத்தமாக இல்லையென்பதுபோல் வீனஸ், உடனே மிரண்டுக் கனைத்து, நகர்ந்து, விலகியது! டத்தோ, ஒரு கணம் தன் நிதானத்தை இழந்து, பிடிமானத்தை விட்டு, குதிரையின் உயரத்திலிருந்து ‘தொப்’பென்று உட்கார்ந்த வாக்கில் தரையில் விழுந்தார். பாவம், அறுபதை நெருங்கித் தளர்ந்து போயிருந்த உடம்பு! இடுப்பெழும்பு உடைந்து போனது! அசையவே முடியாதபடிக்கு உயிர் போகும் வேதனை தாங்காமல் துடிதுடித்துப் போனார். உரக்கக் குரல் கொடுத்து யாரையாவது அழைக்கவும் சக்தி இல்லாமல் அப்படியே உட்கார்ந்தபடி வலியில் புலம்பத் தொடங்கினார்.
வீனஸ், மிரட்சி தணிந்து நிதானத்திற்கு வந்ததும் எசமானின் உயிர் வதையை ருசிக்க முனைவதுபோல் கால், இடுப்பு, நெஞ்சு, முகமென்று முகர்ந்து பார்த்து, உதட்டால் ருசித்துக் கொண்டது. கரிய விழிகள் அவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.
கண்களிரண்டும் எதையோ கண்டதுபோல் பளபளத்து மின்னத் தொடங்கின!
எசமானின் பிராண அவஸ்தை சகிக்கவில்லை போலும்! வீனஸ், உடலைத் திருப்பிக்கொண்டு, தோதான தூரத்தில் ஆயத்தமாக நின்றது.
அடுத்த விநாடி, ‘அம்மா..’வை அழைத்து அபயம் கோர முடியாமல், ‘க்’ என்ற விக்கலில் உயிரின் அவஸ்தை உடனே அடங்கிப்போக, டத்தோவின் உடல் சரிந்து, ‘பொத்’தென்று தரையில் விழுந்தது..
அடிக்குறிப்பு
(1)டத்தோ – மாகாண சுல்தான்கள் தமது பிறந்த நாளன்று அரசாங்கம் பரிந்துரைத்தவருக்கு வழங்கும் பட்டம்
(2) Thoroughbred flat horse – கலப்பிலா தூய இனப் பந்தயக் குதிரை
(3)‘Filly’ – பெண் குதிரைக்குட்டி
(4)‘spelling’ – பந்தயத்திற்குப் பின்னர் குதிரைக்குக் கொடுக்கப்படும் ஓய்வு
(5)‘groomers’ – குதிரை பராமரிப்பாளன்
(6)‘Saddling yard’ – சேணம் அணிவிக்கும் முற்றம்
(7)‘paddock steward’ – குதிரைப்பந்தயக் காப்பாளன்
(8)‘Stipendary steward’ – சம்பளம் பெறும் நிர்வாகி
(9)‘NAP’ – வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள குதிரை. (Best bet of the day)
(10)‘Turning for home’ – பந்தய முடிவு எல்லையை நோக்கி நீளும் நேர் ஓடுதளம்.
(11)‘Trifecta Bet’ – முறையே முதல் மூன்று இடங்களை சரியாக கணித்து விளையாடும் பந்தயம்.
(12)‘Win Bet’ – குறிப்பிட்ட குதிரைதான் முதலாவதாக வரும் என்று கணித்து பந்தயம் கட்டுவது.
(13)‘Place Bet’ – குறிப்பிட்ட குதிரை முதலாவது அல்லது இரண்டாவதாக வரக்கூடும் என்று பந்தயம் கட்டுவது.
