Site icon சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

இல்லாதவனின் வீடு

இந்த முறை ரொம்ப நாள் கழித்து வந்தேன். ஓரிரு மாதங்களாக நான் அங்கு வந்திருக்கவில்லை. சென்ற முறை வந்தபோது 12B-யில் புதிதாகக் குடி வந்திருந்தவளைக் காரிடாரில் பார்த்து “வணக்கம்” சொன்ன கணத்திலிருந்து என் மனம் அந்தக் காரிடாரையே வலம் வந்து கொண்டிருந்தது. நான்கு நாட்கள் முன் ஓரிரவு அங்கு வந்தேன். பகல் வாட்ச்மேன் செல்வத்தின் மனைவி மங்களம் அபார்ட்மெண்டுக்கு அதன் உரிமையாளரின் பெயரில் வந்திருந்த தபால்களைக் கொடுத்தாள். செல்வம் சீக்கிரம் தூங்கச் சென்றுவிட்டான் என்றாள். இரவு வாட்ச்மேன் பத்து மணி வாக்கில் வருவான்.

பன்னிரண்டாம் மாடி ஒரு நடுவண் திறந்தவெளியைச் சுற்றி அமைந்திருந்தது. ஒவ்வொரு மாடியிலும் அந்த வளாகத்தைச் சுற்றி ஒரு காரிடார் வளைந்து ஓடும். முழு வட்டமான வளைவு அல்ல. 12A வீட்டோடு அந்தக் காரிடர் முடிந்துவிடும். அந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவர் ஓர் அரை வட்டத்தை லேசாக நீட்டித்து நிறுத்தி விட்டார். அந்த அரை வட்டத்தின் முட்டுச்சந்து நீட்டிப்பில், மற்றவர்களின் பார்வையில் இருந்து ஒதுங்கி அமைந்திருந்தது என் வீடு 12A. என் கதவைத் திறந்தால் நேர் எதிரே 12Bஇன் கதவு.

ஆனால் அது மட்டுமல்ல — என் சமையலறை ஜன்னலும் அந்த நடுவண் வளாகத்தையே நோக்கியிருந்தது. அந்தப் பெருவெளி ஒரு விசித்திரமான ஒலியியல் அமைப்பைக் கொண்டது. நடு முற்றத்தில் எழும் சிறு ஒலியும் காற்றில் மிதந்து என் சமையலறைக்குள் வந்து விழும். எதிர் வீட்டின் கதவு எனக்குச் சொன்னது ஒரு சமூகக் கதை. சமையலறை ஜன்னல் எனக்குச் சொல்லக் கூடியதோ இன்னொரு அந்தரங்கக் கதை. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் நாள் முழுதுமான கதையை என்னால் சொல்லி விட முடியும். காலையில் பால்கனி போன்ற தோற்றம் பூணும் காரிடார், மாலையில் ஹாலின் கதவருகே, இரவில் விளக்கு அணையும் நேரம். இரண்டு ஜன்னல்கள், ஒரு வளாகம், நடுவில் வெறும் காற்று.

12B-யைக் கடந்தபோது காரிடாரில் புதிதாக வைக்கப்பட்டிருந்த சில பூந்தொட்டிகளைப் பார்த்தேன். ஒரு நீல நிற சங்குபுஷ்பம் அப்போதுதான் மலர்ந்திருந்தது. அதன் இதழ்களில் இன்னும் ஈரமிருந்தது போலத் தோன்றியது. உள்ளே விளக்கெறிந்து கொண்டிருந்தது. 12A-வைத் திறந்ததும் வழக்கமாக வரும் அந்த மூடிய அறையின் வாசனை — நீண்ட நாட்களாகக் காற்று புகாத, தூசி படிந்த, மரச்சாமான்களின் மந்தமான வாசனை என்னை வரவேற்றது. சமையலறையில் இருந்த ஜன்னலின் திரையை மெதுவாக விலக்கினேன். வேறு கோணத்தில் எதிர் அபார்ட்மெண்டின் கதவையும், அதன் ஜன்னலையும் பார்க்க முடிந்தது. எதிர் வீட்டு ஜன்னல் பாதி திறந்திருந்தது. இப்போது எதிர் வீட்டிலிருந்து சற்று சத்தமாக இசை ஒலிக்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு பழைய ஆங்கில இசை. காற்றில் அதன் தாளம் மட்டும் அதிர்வாக என் அறைக்குள் வந்தது.

நான் அந்த வீட்டில் – 12A-வில் – தங்கியிருந்தது யாருக்கும் ஆச்சரியமாக இருக்கவில்லை. வீடு என் பெயரில் இல்லை; ஆனால் அது ஒரு பிரச்னையாகவும் இருக்கவில்லை. சொந்தக்காரர் — என் தூரத்து மாமா ராதாகிருஷ்ணன் — துபாயில் இருந்தார், இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை மட்டும் வருவார். வீட்டைப் “பராமரிக்க” நான் இருக்கிறேன் என்று கட்டிடத்தில் எல்லோருக்கும் தெரியும். வாட்ச்மேன் செல்வம் காலையில் என் கதவு தட்டி பேப்பர் தருவான். செக்யூரிட்டி ரிஜிஸ்டரில் என் பெயரே இருந்தது, “கேர்டேக்கர்” என்ற குறிப்புடன்.

மாதத்துக்கு ஓரிரு முறை என்றுதான் ஆரம்பத்தில் இருந்தது. கடந்த ஓராண்டாக நான் அடிக்கடி வருவதையும் நாட்கணக்கில் அங்கு தங்கியிருப்பதையும் யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. கேள்வியும் கேட்கவில்லை — இப்படிக் காலி வீடுகளைப் பார்த்துக் கொள்பவர்கள் இந்தக் கட்டிடத்தில் நான் ஒருவன் மட்டும் இல்லை. அனுமதி இருந்தது. திறவுகோல் இருந்தது. யார் கேட்டாலும் சொல்ல ஒரு காரணமும் இருந்தது. இதைச் சொல்வது என் கதைக்கு அவசியமா என்று தெரியவில்லை. ஆனால் அது இருந்தது, ஒரு சின்ன உண்மையாக, யார் கேட்பதற்கும் காத்திராத ஒரு விவரமாக.

மூன்று வருடங்களுக்கு முன் என்னைப் பிரிந்து, என் காதலை ஏற்காமல் போன கமலாவை என்னால் மறக்க முடியவில்லை. — 12B-க்கு புதிதாக வந்தவள் என்று நினைத்தேனா? இல்லை, அது தவறு. அவள் எப்போதுமே அங்குதான் இருந்தாள். அவள் சிரிப்பின் உரப்பு, யாரேனும் சொல்வார்களோ என்று கவலைப்படாத அவளின் வாளிப்பு, மறைக்க வேண்டிய ஒன்றாக அவள் ஒருபோதும் நினைக்காத அவளின் உடல், ஜன்னல் திறந்தபடி ஆடை மாற்றும் தன்னம்பிக்கை, மாலைக் காற்றை நெடுநேரம் முகரும் அவளின் கொண்டாட்டவுள்ளம்… நாங்கள் நெருக்கமாக இருந்த காலம் மிகக் குறுகியது. ஆனால் அவளுக்கு அது ஒரு பருவம் மட்டும், எனக்கோ அது வாழ்க்கை. அவள் அதை எளிதாக மறந்துவிட்டாள். நான் மறக்கவே இல்லை. அவள் தனியாக இருக்கிறாளா, அல்லது அவளுக்கு வேறு துணை உள்ளதா – பழைய காதலனுக்கே உரிய இயல்பான ஆர்வம் என்னை உந்தித் தள்ளியது.

முதல் நாள் — வியாழக்கிழமை. கமலா காலை பால்கனியில் காரிடாரின் செடிகளுக்குத் தண்ணீர் வார்ப்பாளா என்று பார்த்தேன். நான் என் தேநீர் கோப்பையுடன் சமையலறை ஜன்னலில் நின்றிருந்தேன் — அவளுக்குத் தெரியாத, எனக்கு மட்டும் தெரிந்த ஒரு சடங்காக ஆக்கிக்கொள்ளும் பாவனையில். அந்தச் செடிகளுக்கு அவள் தண்ணீர் ஊற்றும்போது, அவள் கைகளின் அசைவு எவ்வாறு இருக்கும்! — அதே கைகள் வேறு ஓர் சமயத்தில் வேறு விதமாக அசைந்திருக்கின்றன, வேறு ஒரு மூடிய அறையில். அன்று அவள் வரவில்லை. முந்தைய நாள் இரவு பூத்திருந்த சங்கு புஷ்பம் செடியிலேயே வாடத் தொடங்கியிருந்தது. பன்னிரெண்டாம் மாடியின் ஏதோ ஒரு வீட்டின் தொலைபேசி அழைப்புமணி மிக அருகில், விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அது என் காதுக்குள்ளேயே ஒலிப்பது போல இருந்ததால், காதுக்குள் விரலை விட்டுச் சுத்தம் செய்து கொண்டேன்.

இரண்டாம் நாள். மாலை பொழுது சாயும்போது, 12B கதவின் அடியில் வெளிச்சம் எதுவும் தெரிகிறதா என்று பார்த்தேன். நான் அதற்கு முன் எத்தனை மாலைகள் அந்த வெளிச்சத்தைப் பார்த்திருக்கிறேன்? — அது எப்போது இப்படி ஒரு வழக்கமாக மாறியது? நான் என் நாற்காலியை ஜன்னலுக்கு அருகில் இழுத்துப் போட்டேன். வெளியே கட்டிடத்தின் இயல்பான சத்தங்கள் — லிஃப்ட் மோட்டார் இயங்கும் முனகல், கீழே முற்றத்தில் விளையாடும் குழந்தைகளின் தூரத்து குரல், யாரோ ஒருவர் தொலைக்காட்சி பார்க்கும் மந்தமான ஒலி. அந்த வளாகத்தின் நடுவே இருள் மிக மெதுவாக இறங்கத் தொடங்கியது. ஒவ்வொரு ஜன்னலும் ஒரு தனித்த விளக்காக எரிந்தது, தன் கதையைச் சொல்லியது. எதிர் வீடு மட்டும் முற்றிலும் அணைந்திருந்தது. இருளுக்குள் உறைந்திருந்தது.

மூன்றாம் நாள். காரிடாரில் ஒரு வித்தியாசமான வாசனை வரத் தொடங்கியது — மெல்லிய, ஆனால் அருவருப்பான வாசனை. அழுகலின் ஆரம்பக் கட்ட வாசனை அது. “குழாய் அடைப்பு,” என்று சோதிக்க வாட்ச்மேன் செல்வம் மாடிக்கு வரக்கூடும் என்று எதிர்பார்த்தேன். மதியம் அவன் பேப்பர் தரும்போது, என் முகத்தைப் பாராமல், “எதுக்கு எப்பப் பார்த்தாலும் இப்படி ஜன்னல் கிட்ட நிக்கிறீங்க?” என்று கேட்டான். அவன் குரலில் ஒரு விசித்திரமான நடுக்கம் இருந்தது போலத் தோன்றியது. நான் ஏதோ சொன்னேன், அவன் சட்டென்று திரும்பிப் போய்விட்டான்.

அறைக்குள் திரும்பியபோதுதான் கவனித்தேன், நான் பருகிய தேனீர்க் கோப்பைகள் கழுவப்படாமல், எண்ணிக்கையில் அதிகமாக அறையின் பல மூலைகளில் கிடந்தன. அவற்றையெல்லாம் எடுத்து வந்து சமையலறைத் தொட்டியில் போட்டு ஒவ்வொன்றாகக் கழுவினேன். கைகள் நடுங்கின. மீண்டும் தேனீர்ப் பருகலாமென்று பார்த்தால் பால் தீர்ந்து போயிருந்தது. எப்போது பால் தீர்ந்தது என்று யோசித்துப் பார்த்தேன், நினைவுக்கு வரவில்லை. அடுத்த நாள் காலை வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். என் வாசல் கதவு பூட்டப்படாமல் திறந்து கிடந்தது. அதனருகில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு சற்று நேரம் உட்கார்ந்தேன். காரிடாரின் வாசனை இப்போது பலமாக அடிக்கத் தொடங்கியது. நான் அப்படியே நாற்காலியிலேயே கண்ணயர்ந்தேன். கனவில் கமலாவின் உரத்த சிரிப்பு மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

நான்காம் நாள். வாசனை இப்போது காரிடார் முழுவதும் நிறைந்து, காற்றில் கனத்து நின்றது. கீழே பதினொன்றாம் மாடியில் வசிக்கும் கல்லூரி ஆசிரியர் லிப்டில் கூடவே வந்தார். அவர் தன் மூக்கைப் பொத்திக்கொண்டு அந்த வாசனை பற்றி என்னிடம் கேட்டார். “12Bலேர்ந்து மூன்று நாளா யாரும் வெளியே வரலையாம்,” என்று லிப்டில் எங்களுடன் இருந்த மங்களம் எனக்குப் பின்னால் நின்று பதில் சொன்னாள். அவள் என் முகத்தைப் பார்க்கவே இல்லை.

முழுக் கட்டிடத்தின் விஷயமாக இது மாறப் போகிறது என்று எனக்குத் புரிந்தது. இதுவரை நான்கு நாட்களாக நான் ஒரு ஜன்னலுக்குப் பின்னால் காத்திருந்தேன். இனி காத்திருக்க முடியாது.

லேசாக மங்கத் தொடங்கிய மாலை ஆறு மணிக்கு 12B கதவை நெருங்கினேன். கைப்பிடியைத் தொட்டேன். அது சுலபமாகத் திறந்தது — பூட்டப்படாமல் இருந்தது. உள்ளே காரிருள். மணம் இப்போது சகிக்க முடியவில்லை, நுரையீரலை அடைத்தது. ஹாலின் நடுவில் கமலா கிடந்தாள். முகம் பக்கவாட்டில், கண்கள் பாதி திறந்து நிலை குத்தியிருந்தன. ரத்தம் தரையில் ஒரு பெரிய கறுத்த வட்டமாக உலர்ந்திருந்தது; விளிம்புகள் பழுப்பு நிறத்திலும் நடுப்பகுதி கிட்டத்தட்ட கருப்பாகவும் மாறியிருந்தன.

நான் அதிரவில்லை. கத்தவும் இல்லை. அதை நான் பின்னால்தான் உணர்ந்தேன்.

கீழே ஓடினேன். செல்வத்தை அழைத்தேன். என் குரல் நடுங்கியது, அது உண்மையாகவே நடுங்கியதா, அல்லது என் நடிப்பா, எனக்கே தெரியவில்லை.

விரைவிலேயே போலீஸ் வந்தது. 12A-வின் வாசலில் நின்றுகொண்டே என்னை விசாரித்தார்கள். கேள்விகள் சுருக்கமாக இருந்தன.  நான் சொன்ன  எதையும் அதிகாரி எழுதிக் கொள்ளவில்லை. திருப்பிக் கேட்கவும் இல்லை.  கட்டிடத்துக்குள் வருவோரின் தகவல்களை செல்வம் வழக்கமாகப் பதிவு செய்யும் ரிஜிஸ்டரைப் புரட்டிக்கொண்டிருந்த அதிகாரி இதைக் கேட்டது நன்கு என் நினைவிருக்கிறது –

“எத்தனை வருஷமா கேர்டேக்கர்?”

“மூன்று வருடமா,” என்றேன். என் சட்டைப்பையில் எதையோ தேடினேன். அதில் எதுவும் இல்லை. 

இம்முறையும் அவன் பதிலைக் குறித்துக் கொள்ளவில்லை. என் முகத்தைப் பார்க்காமல், ஒரு பிளாஸ்டிக் கவரிலிருந்து ஓர் அடையாள அட்டையை எடுத்து என் முன் நீட்டினான்.

அட்டையில் இருந்த முகம் கமலாவின் முகம் அல்ல.

நான் அதைப் பார்த்தபடி நின்றேன். சொல்ல எதுவும் இல்லை.

இன்னொருவன் மெல்லிய குரலில் ஏதோ சொன்னான். பிறகு, என்னிடம் கேள்வி கேட்ட அதிகாரியிடம் தன் கைத்தொலைபேசியின் திரையைக் காட்டினான். அதிகாரி அந்தத் திரையையும் என் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

வேறு இரண்டு போலீஸ்காரர்கள் என் தோள்களைப் பிடித்தார்கள். கைகளை முறுக்கி வளைத்தார்கள். காப்பை மாட்டினார்கள்.

12B வாசல் அருகே மங்களம் கையில் துடைப்பத்துடன் நின்றிருந்தாள். என்னைப் பார்க்கவில்லை.

Exit mobile version