முந்தைய பகுதி
வெயிலில் வேப்ப மரங்கள் அசைவற்று நின்றன. சற்று தூரத்தில், மரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தின் நடுவே கட்டிடம் ஒன்று தென்பட்டது; காவல் மாடங்கள், சுவர்கள், கொத்தளங்கள் கொண்ட புத்தம் புது கோட்டை. எங்களை போல் சுற்றுலா பயணிகள் பலரும் சென்று சேரும் இடம் அது. பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அருங்காட்சியகம்.
கட்டிடத்திற்கு வெளியே இருந்த ஒரு சிறு அறையில் ஆள் நடமாட்டம் தென்பட்டது. அதற்குள் எட்டி பார்த்து, அப்பொழுது தான் தனது உணவு டப்பாவை திறக்க போன ஒருவரிடம், அருங்காட்சியத்திற்குள் போகலாமா என்று கேட்டோம். அறையின் உள்ளே இருந்தவர் எங்களை சற்று சலிப்புடன் பார்த்தார். அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, டப்பாவை மூடி விட்டு, எங்களை உள்ளே அழைத்து சென்றார்.
அருங்காட்சியகம் குளிர்ந்திருந்தது. பகல் வெளிச்சத்திலிருந்து உள்ளே கசியும் மென் ஒளிக்குப் பழகிய எங்கள் கண்களை முதலில் வரவேற்றது வீரபாண்டிய கட்டபொம்மனின் கருங்கல் சிலை. அரியணையில் அமர்ந்து, நிலத்தில் ஊன்றிய வாளின் மீது கை வைத்து கொண்டு, மிடுக்காக நம்மை எதிர்கொள்ளும் அவர் உருவத்திற்கருகே நின்று படம் எடுத்து கொள்ளலாம் என்றார் எங்களுடன் வந்தவர். படம் எடுத்து கொண்டோம். வாருங்கள் என்று சொல்லி வரிசையாக சுவரில் வைக்கப்பட்டிருந்த சித்திரங்கள் முன்னே நின்று பேச ஆரம்பித்தார்.
பல வருடங்களாக சொல்லி சொல்லி பழகிய வரிகள் தடங்கலின்றி அவர் வாயில் இருந்து உருண்டோடி வந்தன. ‘முயல் ஒன்று நாயை துரத்திய இந்த இடத்தை கண்ட கட்டபொம்மனும் அவரின் தம்பி ஊமைத்துரையும் இந்த இடம் வீரம் விளைஞ்ச பூமி என்றறிந்து கோட்டையை உருவாக்கினார்கள். அதோ அந்தக் கோட்டை அது’ என்று சொல்லி வண்ணப்படத்தின் தொடுவானில் வரையப்பட்டிருந்த கோட்டையை சுட்டினார். திருச்செந்தூர் முருகனை கட்டபொம்மன் வணங்குவது, தந்தை ஜகவீரர் மகன் வீரபாண்டியனுக்கு முடி சூடுவது, கட்டபொம்மன் தொண்ணூற்றாரு கிராமங்களுக்கு நீதி சொல்வது என்று படங்களும் வர்ணனைகளும் தொடர்ந்தன.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் இப்படி தான் இருந்தார் என்று நம்மை ஆணித்தரமாக நம்பவைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் ஏற்படுத்திய மன பிம்பம்தான் காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த எல்லா சித்திரங்களிலும் கட்டபொம்மனின் உருவம் சிவாஜி கணேசனை போலவே இருப்பதாகத் தோன்றியது. ‘என்னோடு வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா’ என்ற வசனம் வேறு மனதிற்குள் மந்திரம் போல் ஓடிக்கொண்டிருந்தது. சுவற்றில் சித்திரமாக தொங்கிய ஜாக்சன் துரை வேறு மாதிரி அல்லவா இருப்பார் என்று திரைப்படத்தில் வரும் ஜாவர் சீதாராமனை நினைத்து கொண்டேன்.
அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தோம். எங்களால் தாமதமான பகல் உணவை சாப்பிட விரைந்தவரை தடுத்து
‘சார், இங்க ஜக்கம்மா கோவில் எங்கே இருக்கு?’ என்று கேட்டோம். அவர் அவசரமாக கை காட்டிய இடத்தில் சிறு வெள்ளை கோபுரம் ஒன்று மரங்களுக்கு மேலே எட்டி பார்த்தது. நன்றி என்று சொல்வதற்குள் அறைக்குள் சென்று விட்டார்.
**
‘இந்த அம்மனை கும்புடாம எந்த வேலையும் தொடங்க மாட்டாரு, கட்டபொம்மு. அத்தனை சக்தி இந்த அம்மாவுக்கு’ கற்பூர தட்டை நீட்டிய பூஜாரி சொன்னார். சிறு சந்நிதிக்குள்ளே ரோஜா மாலையும், மஞ்சள் சேலையுமாக, வீர ஜக்கம்மாள் உருவம். குங்குமம் சாத்தப்பட்ட அவள் முகத்தில் ஒரு சிறு புன்னகை.
‘இந்தப் பகுதிய சேந்தவங்க, எந்த ஊருல இருந்தாலும் சரி, சித்திரை திருவிழாவிற்கு இங்க வந்திடுவாங்க, குலத்தை காக்குற தேய்வமாச்சே’. பூஜாரி நகர்ந்து சென்றார்.
சந்நிதிக்குள்ளே, அமமன் சிலை அருகில், ஒரு வலசைக் கூடை ஒன்று அலங்காரங்களோடு வைக்கப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து மக்கள் இங்கே புலம் பெயர்ந்த போது அவர்கள் கூடவே வந்த தெய்வம் இந்தக் கூடையும், ஜக்கம்மாவும்.
ஒரு வினாடி என் கண் முன்னே கி ரா வின் கோபல்ல கிராமத்து மக்கள் தோன்றி மறைந்தனர். நான் நிற்கும் கரிசல் பூமியில் அவர்களின் நினைவு எப்படி வராமல் போகும். ஐந்து கொட்டை பாக்குகளையும், அரை கட்டு வெற்றிலையும், வெள்ளை புகையிலையும் சேர்த்து வாயில் குதப்பும் கோவிந்தப்ப நாயக்கரும்; கருப்பட்டியும் தயிரும் மட்டும் உண்டு, சுவற்றில் சாய்ந்தவாறே கோபல்ல கிராமத்தின் கதை சொல்லும் மங்கத்தாயாரு அம்மாளும், எங்கோ பக்கத்தில் தான் இருப்பார்கள் என்று தோன்றியது.
கோவிலுக்கு வெளியே நீண்ட தாழ்வாரம் போல் இருந்த மண்டபத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் ஒன்றை ஒன்று முட்டி விளையாடிக் கொண்டிருந்தன. நீண்ட கழி தூணில் சாய்ந்து நிற்க, மண்டபத்தின் கோடியில் முதியவர் ஒருவர் கையை தலைக்கு அடியே வைத்து உறங்கிக் கொண்டிருந்தார். சற்று தூரத்தில் புதர்களும், மரங்களும் மண்டியிருந்த இடத்தில் மறைந்திருந்த செம்போத்து ஒன்று தன் இருப்பை தெரியப்படுத்தியது. அமைதி, வெயிலைப் போல, எல்லாவற்றிலும் படர்ந்து மயக்கியது.
ஆனால், சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் நின்றிருந்த இந்த இடம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. புகையும், கந்தகத்தின் நெடியும், கூக்குரல்களும், ஓலங்களும் காற்றை நிறைத்தன. பீரங்கியின் குண்டுகள் மோதி நிலத்தை அதிர வைத்தன. சிதைக்கப்பட்ட உடல்களில் இருந்து வழிந்த ரத்தம் மண்ணோடு கலந்து செஞ் சகதியாக நிலமெங்கும் வியாபித்திருந்தது. ஹைதர் அலி, திப்பு சுல்தான், கர்நாடக போர்கள் என்று பல இன்னல்களில் மாட்டியிருந்த ஆங்கிலேயர்களுக்கு, இன்னொன்றும் சேர்ந்து கொண்டது. பாளையக்காரர்கள்.
**
பாளையக்காரர்கள் ஒரு விதத்தில் குறுநில மன்னர்கள் போல தான். அவர்கள் ஆண்டு வந்தது பெரும் நிலப்பரப்புகள் அல்ல. நூறு கிராமங்களோ அல்லது அதற்கு குறைந்ததாகவோ தான் இவற்றின் விஸ்தீரணம் இருக்கும். அந்தப் பகுதியை ஆளும் பெரிய மன்னர்களுக்கு இந்தப் பாளையக்காரர்கள் கப்பம் கட்ட வேண்டும். 18 ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி மற்றும் அதை சார்ந்த பல பாளையங்கள் ஆற்காடு நவாபின் கீழே இருந்தன. பின்னர் கிழக்கிந்திய கம்பெனியிடம் வாங்கிய கடனை அடைக்க இந்தப் பகுதிகளை கம்பெனியிடமே கொடுத்து விட்டார் நவாப். அப்படி தான் பாஞ்சாலங்குறிச்சி என்ற பாளையம் ஆங்கிலேயர்களின் அதிகாரத்திற்குள் வந்தது.
பாஞ்சாலங்குறிச்சி ஏறக்குறைய 90 கிராமங்கள் அடங்கிய சிறிய பாளையம் தான். மண்ணும் செங்கலும் வைத்து கட்டப்பட்ட அதன் கோட்டையே 500 அடிக்கு 300 அடி விஸ்தீரணம் தான். இந்தியாவின் பல நிலப்பரப்புகளை, பெரும் கோட்டைகளை, பலம் பொருந்திய சாம்ராஜ்யங்களை வளைத்து போட்ட ஆங்கிலேயர்களுக்கு இது ஒரு பொருட்டாகவே இருந்திருக்கக் கூடாது. ஆயினும், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த சிறிய பாளையம் அவர்களுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்தது.
பல ஆண்டுகளாக கிஸ்தி, திரை, வரி, வட்டி போன்ற விவகாரங்களால் பாஞ்சாலங்குறிச்சியில் நெருப்புக்கங்குகள் புகைந்து கொண்டிருந்தன. 1798 ஆம் ஆண்டு கட்டபொம்மனுக்கும் ஆட்சியாளர் காலின் ஜாக்சனுக்கும் ஏற்பட்ட உரசலால் இவை பற்றிக் கொண்டு, பிற பாளையக்காரர்களையும் தூண்டி, தெற்கு தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரும் தீயாக கொழுந்து விட்டு எரிந்தது. இந்தக் கொந்தளிப்பின் மையம் பாஞ்சாலங்குறிச்சி. இதை அடக்க வந்த மேஜர் பேனர்மேன் தலைமையிலான படை 1799 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகை இட்டது. கோட்டை சீக்கிரம் விழுந்து விடும் என்று நினைத்த ஆங்கிலேயர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கட்டபொம்மனின் மண் கோட்டை சரியவில்லை.
விரக்தியில் பாளையங்கோட்டையில் இருந்து ஆறு பௌண்டு எடையுள்ள குண்டுகளை வீசும் பீரங்கிகளை தருவித்தார் பேனர்மேன். முடிவில் இந்தக் கனரக பீரங்கிகளின் தொடர் தாக்குதலினால் கோட்டை சரிந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் கைதியாக்கப்பட்டு பின்னர் கயத்தாறில் தூக்கிலடப்பட்டார். ஆனால், ஆங்கிலேயர்களுக்கு பிரச்சனை ஓயவில்லை. அது, வீரபாண்டியனின் தம்பி ஊமைத்துரையின் தலைமையில் தொடர்ந்தது.
மீண்டும் கொந்தளித்தது திருநெல்வேலி சீமை. இம்முறை கர்னல் மேக்காலே தலைமையில் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்த ஆங்கிலேயர்கள் அதிர்ச்சியடைந்தனர். இரண்டாண்டுகளுக்கு முன் அவர்களால் அழிக்கப்பட்ட கோட்டை முன்பை விட கூடுதல் மெருகோடு நின்று கொண்டிருந்தது. வெல்லம், மண், பனஞ்சாறு, வைக்கோல் போன்றவற்றை கொண்டு ஆறு நாட்களில் கோட்டையை எழுப்பினான் ஊமைத்துரை என்று இந்த நிலத்தின் கதைகள் கூறுகின்றன.
மீண்டும் தாக்குதல்கள் தொடங்கின. கோட்டையை போலவே ஊமைத்துரையின் வீரர்களும் புது உத்வேகத்துடன் போரிட்டனர். கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டிருந்த ஆங்கிலேயர்கள் மீது கொரில்லா தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பீரங்கிகளால் கோட்டையில் எவ்வளவு ஓட்டைகள் விழுந்தாலும் அதன் வழியாக ஆங்கிலேயர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. அதிலிருந்து புற்றீசல் போல் கிளம்பி, பேய்களைப் போல் கூச்சலிட்டுக்கொண்டே, இருபதடி நீளம் கொண்ட ஈட்டிகளால் தாக்கும் ஊமைத்துரையின் வீரர்களை எங்களால் சமாளிக்கவே முடியவில்லை என்று இந்தப் போரின் குறிப்புகளை எழுதிய ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் வெல்ஷ் குறிப்பிட்டிருக்கிறார்.
கடைசியாக, பாஞ்சாலங்குறிச்சியை அழிப்பதற்கு மெட்ராஸ், மலபார், ஆற்காடு, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து ராணுவம் கொண்டு வரப்பட்டது. இவர்களோடு சேர்ந்து தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மற்றும் எட்டயபுரத்தின் படைகளும் சேர்ந்து கொண்டன. இந்த கூட்டு தாக்குதலின் விளைவால் 1801 ஆம் ஆண்டு மே மாதம் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை விழுந்தது.
சென்ற முறை போல் இல்லாமல் இந்த முறை கோட்டையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும், உக்கிரத்தோடு, மிகக் கச்சிதமாக நிர்மூலமாக்கப்பட்டன. நிலம் உழப்பட்டு ஆளியும், ஆமணக்கும் விதைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே அரசாங்கப் பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டது. இடிந்து போன கோட்டையின் முன்பு ஊமைத்துரை தூக்கிலிடப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சி பாழ் நிலம் ஆனது.
**
அழிந்து போன இந்தக் கோட்டையின் அடித்தளங்கள் ஜக்கம்மா கோவிலுக்கு அருகே இருக்கின்றன. மண் மேடிட்டிருந்த இந்தப் பகுதியை 1970 களில் தொல்துறை அகழ்ந்தெடுத்தது. ஏறக்குறைய நூற்றியெழுபது ஆண்டுகளுக்கு பிறகு கோட்டையின் சில பாகங்கள் வான் பார்த்தன. வெளி வந்த பகுதிகள் சில தான். அவற்றின் பயன்பாடுகளை பற்றி அங்கிருந்த பதாகை அறிவித்தாலும், மதிய வெயிலில், சதுரமும், செவ்வகமுமாய் காட்சியளித்த அடித்தளங்களை, மேடைகளை, ராஜ தர்பார், சமையலறை, கல்யாண மண்டபம் என்று உருவகப் படுத்தி கொள்வது சற்று சிரமமாகத் தான் இருந்தது.
பாஞ்சாலங்குறிச்சி போரில் ஏறக்குறைய ஆயிரம் பேர் மடிந்திருக்கலாம் என்று சில கணக்குகள் உண்டு. நம் தரப்பிலிருந்து போரிட்டவர்களில் வீரபாண்டியன், ஊமைத்துரை, வெள்ளைய தேவன் போன்ற மிகச் சிலரின் பெயர்கள் தான் இன்று நமக்கு தெரிந்திருக்கிறது. அதுவும் இந்த நிலத்தில் முளைத்த கதைகளின் வாயிலாகத் தான் அவர்களை பற்றிய சில விவரங்கள் கிட்டியுள்ளன. போரில் மாண்ட பிற தளபதிகள், வீரர்கள் போன்றவர்களைப் பற்றி எந்த விவரமும் இல்லை. இவர்களின் வீர தீர செயல்களும் மண்ணோடு புதைந்து விட்டன. ஆனால், ஆங்கிலேயரின் தரப்பில் கொஞ்சம் கூடுதல் தரவுகள் இருக்கின்றன.
கோட்டையின் சிதிலங்களில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் போரில் மடிந்த நாற்பத்தி நாலு ‘கும்பினியர்களின்’ கல்லறைகள் உள்ளன. ஒரு பொட்டல் காட்டில், ஆங்காங்கே புதர்கள் மண்டியிருந்த காம்பௌண்ட் சுவர் அடைத்த ஒரு சிறு பகுதிக்குள், பாஞ்சாலங்குறிச்சி போரில் மடிந்த வீரர்களும், ஆங்கிலேய அதிகாரிகள் சிலரும், மீளா தூக்கத்தில் உள்ளனர்.
கல்லறையில் பதிக்கப்பட்டுள்ள வாசகங்கள் தெளிவாகவே தெரிகின்றன. ஒரு கல்லில் அங்கே அடக்கம் செய்யப்பட்ட சில வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. Campbell, Spalding, Egan போன்ற பெயர்களை வாசிக்க முடிகிறது. மற்றொன்றில், சாகசம் புரிந்த ஒரு அதிகாரியின் விவரம் தென்படுகிறது:
Here lie the remains of Doughlas W. Gilchrist Lieutenant of His Majesty’s 74th regiment. This gallant youth who had not attained his one and twentieth year was killed on the Twenty First of January 1801 in the breach of the fort of Ponjelancourchy. In the moment of victory by his death His Majesty’s service lost an officer of great enterprise and promise sincerely beloved and lamented.
கருந் திட்டுகள் பூசிய காம்பௌண்ட் சுவருக்கு அருகே இருந்த ஒரு மரத்தின் நிழலில் நின்றேன். என் முன்னே ஒரு அணிவகுப்பு போல் வரிசையாக இருந்த கல்லறைகள் கானலில் அலையாடின. சில கல்லறைகளில் காரை உதிர்ந்து, உள்ளே இருந்த செங்கல் கற்கள் இடையே செடிகள் முளைத்திருந்தன.
யார் இந்த டக்லஸ் கில்க்ரிஸ்ட்? இங்கே ஏன் வந்தான்? இங்கே யார் இருக்கிறார்கள் அவனுக்கு? ஊமைத்துரையை நேரில் கண்டானா? இவனை கொன்றவன் யார்? கொத்து கொத்தாக மனித உயிர்களை பலி வாங்கிய களத்தில் ஒருவனின் பெயர் தெரிந்ததால் எத்தனை கேள்விகள்? இதில் எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காது என்று தெரிந்தும் மனதில் கேள்விகள் தோன்றிய வண்ணமே இருந்தன. அங்கிருந்து நகரும் பொழுது ஒன்று மட்டும் புரிந்தது. குளிர் உறைய வைக்கும் நிலத்தில் பிறந்து, பல கடல்கள் தாண்டி வந்து, தனது இருபதியோராவது வயதில், புழுதியை கிளப்பும் உஷ்ணக் காற்று வீசும் பாஞ்சாலங்குறிச்சியில் இறக்க வேண்டும் என்பது இவனின் விதி. அவ்வளவு தான்.
