Site icon சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026

குற்றலைகள்

துடிப்பும், அறிவுச் செருக்கும் எக்கணமும் ஒழிந்திராத அந்த முகத்தில் திடீரென கவிந்த வாட்டத்திற்கு நான் எழுப்பிய கேள்வியே காரணமாக இருக்கவேண்டும்.

ஆனால் அச்சந்தர்ப்பத்தில் பிறிதொன்றை கேட்கவும் தோன்றியிருக்கவில்லை. நான் மட்டும் அல்ல, கல்லூரியில் பொன்மலர் மேடத்திடம் பாடம் கற்ற எவராயினும், இக்கோலத்தில் அவரைக் காண நேர்ந்தால் அதையே கேட்டிருப்பார்கள்.

“என்ன இப்படி வத்திட்டீய?”

தொளதொளவென இருந்த ரவிக்கையையும், அத்துமீறுவதைபோல் துருத்திக்கொண்டிருந்த கழுத்தெலும்புகளையும், ஒட்டிப்போய் குழிந்திருந்த கன்னங்களையும் கண்டு வேதனையுற்று அந்த விசாரிப்பை நான் எய்தியபோது அவரது உச்சந்தலை வகுட்டில் நான்கைந்து வேப்பம்பூக்கள் விழுந்தன.

காமராஜர் சாலையில் நின்றபடி நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த ஐந்து நிமிடமும் நான் அந்தப் பூக்களையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன். ரத்தக்கொதிப்பு மற்றும் உறக்கமின்மையினால் கலங்கிச் சிவந்து, வீக்கம்கொண்டிருந்த அந்த விழிகளை எதிர்கொள்ளவே சங்கடமாக இருந்தது.

இரண்டொரு முறை தற்செயலாக அதைச் சந்திக்க நேர்ந்தபோது அவற்றில் எஞ்சியிருந்த கூர்மை என்னை நடுக்குறச் செய்தது. மயிர்கற்றைகள் திரைபோல் விழுந்திருக்கும் எனது நெற்றிப்பரப்பைத் துளையிட்டு சித்தத்தின் அடியாழங்களை அகழ்ந்தெடுக்க முனைவதைப்போல் இருந்தது அந்தப் பார்வை.

இந்த முகத்தை, இப்படி ஓர் தருணத்தை அஞ்சித்தான் இரண்டு ஆண்டுகளாய் ஒதுங்கி ஒதுங்கி வாழ்ந்திருந்தேன்.

நிகழ்ந்ததை எவராலும் தடுத்திருக்க முடியாது, இறைவன் சித்தம், தலைவிதி போன்ற சாக்குபோக்குகளைக் கொண்டு அந்த வடுவைப் போர்த்தியபோதிலும் அதன் இருத்தலை மறந்துவிட முடியவில்லை.

நடுச்சாமத்தில், நவம்பர் மாத மழையில் தொப்பலாக நனைந்தபடி தூத்துக்குடி புறவழிச் சாலையில் இவருடன் நின்றுகொண்டிருந்ததும், பளீரென வெட்டிய மின்னலில் தெரிந்த அந்த முகத்தில் அக்கணம் படர்ந்திருந்த மிரட்சியும் கண்முன் வந்துபோனது. வகுப்புகளில் என்னை அத்தனை துச்சமாக நடத்தியவர், பகை முற்றிப்போன சில தருணங்களில் எனது உயரத்தையும், உடல் பருமனையும், இயல்பான மூர்க்கத்தையும் கருத்தில்கொள்ளாமல், நான் வளர்ந்த செல்வாக்குள்ள ஆண் என்பதையும், தான் துணையென எவரையும் பெற்றிருக்காத பெண் என்பதையும் முற்றிலுமாக மறந்து என் சட்டையைப் பிடித்து இழுத்து வகுப்பிலிருந்து வெளியேற்றியவர் அந்த இரவில் கடுமையாக ஒருசொல் கூட பேசியிருக்கவில்லை. மாறாக, தழுதழுத்த குரலில், “இது உன் தப்பில்ல” என்று சொல்லி, ஆறுதலாக என் தோளை இருமுறை தட்டிவிட்டு ஆட்டோவில் ஏறிச் சென்றிருந்தார்.

“பழைய இரும்பு, பழைய பேப்பர், பழைய பிளாஸ்டிக் நல்ல விலைக்கு வாங்கப்படும்” என்று ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்தபடி ஒரு வண்டி கடந்துசென்றது.

அதை ஓட்டிக்கொண்டிருந்த கிழவரையும், கையில் அணிந்திருந்த கடிகாரத்தையும் ஒருநொடி பார்த்துவிட்டு நிமிர்ந்த பொன்மலர் மேடம், “மனோ எப்படி இருக்கான்?” என்று கேட்டார்.

எனக்கு திக்கென்றிருந்தது. பிறகு ஒருவித அசட்டையுடன் அவ்வுணர்வைப் புறந்தள்ளிவிட்டு குரலை சரிசெய்துகொண்டேன்.

“பிள்ள பிறந்ததுமே இது ஒப்பேறாதுன்னு ஒத்த கால்ல நின்னுட்டா மகேஸ்வரி”

“ஓ!”

“தம்பி வீட்டுல கடக்கான்… அவன் கோழிப் பண்ணை நடத்துதான்… ஒத்தாசையாவும் இருக்குமுன்னு கொண்டு விட்டாச்சு…”

“…”

“உடம்பும் கொஞ்சம் எப்படியோ… ஏதோ தோல் வியாதின்னு நெனக்கேன்… சும்மாவே அவளுக்கு ஆகாது… இதுல சொறியும் சிரங்குமா இது லாந்தரத பாத்ததும் நெலையா நின்னுட்டா…”

வறட்சியும், வரிப்பள்ளங்களுமாய் இருந்த கீழுதட்டை ஈரப்படுத்திக்கொண்டு, “பாவம்!” என்று முணுமுணுத்தார் பொன்மலர் மேடம்.

திடீரென உடம்பில் ஆங்காங்கே ஊறலெடுப்பதைப்போல் ஒரு உணர்வு வந்தது. இடக்கையை விரல்களால் நிரடியபடி மெல்ல அவரை ஏறிட்டேன். உச்சந்தலையில் குடிகொண்டிருந்த பூக்கள் அனைத்தும் உதிர்ந்துவிட்டிருப்பதைக் கண்டபோது கால்கள் இரண்டும் ஏனோ பரபரத்தன. மூச்சை இழுத்துவிட்டபடி தலைதாழ்த்திக்கொண்டேன்.

மனோ பரிதாபத்திற்குரியவன்தான். ஆனால் தடைகளை மீறி, தயக்கங்களைக் களைந்து அவனை உடன் வைத்துக்கொள்ளும் அளவிற்கு என்னுள் பிரியம் இருக்கவில்லை. நன்றிக்கடனின் பொருட்டும், பாவத்திற்கு அஞ்சியும்தான் அவனை அந்த இரவிற்கு பிறகும் வீட்டில் வைத்திருந்தேன். அவனை அறவே வெறுத்த மகேஸ்வரியை சமாதானம் செய்து அவனை ஏற்றுகொள்ளவைத்ததும் அவற்றை கருதித்தான். ஆனால் மகள் பிறந்ததும் எல்லாம் மாறிவிட்டது.

ஒருமுறை தொட்டிலில் கிடந்த மகளை மும்முரமாய் அவன் மோப்பம் பிடித்துக்கொண்டிருப்பதை கண்ட மகேஸ்வரி இரண்டு கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு, “வீல்!!” என அலறினாள்.

பயந்துபோன மனோ, செய்வதறியமல் ஆக்கிரோஷமாய் பற்களைக் காட்டினான்.

குளியலறையில் இருந்து விரைந்தோடி வந்த எனக்கு தொட்டிலில் கிடக்கும் குழந்தை அருகே பற்களைக் காட்டியபடி நின்றுகொண்டிருந்த மனோவைக் கண்டு உடம்பெல்லாம் ஆடிப்போனது.

மறுநாள் ஆற்றங்கரைக்குச் செல்லலாம் என ஆசைகாட்டி ஏமாற்றி, அவனை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தச்சநல்லூரில் இருக்கும் தம்பியின் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது மனதோரத்தில் லேசாய் வலியெடுக்கத்தான் செய்தது. சகோதரனாய், மகனாய், தோழனாய் பாவித்து எத்தனை கொஞ்சினாலும் நான் மிருகம் என்பதை மறந்துவிடாதே என்று நெற்றியில் அடித்தாற்போல் அது உணர்த்திய இரு சம்பவங்களை மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்த்து ஆறுதலடைய முயன்றேன். ஆனால் உற்சாகமாய் தலையை வெளியே நீட்டி வெளிக்காற்றை சுவாசித்தபடி வந்துகொண்டிருந்தவனின் வெள்ளந்தியான விழிகள், நான் மறக்கநினைக்கும் என்னுடைய முகம் ஒன்றை எனக்கே பிரதிபலித்து உடல் குறுகச்செய்தது.

ஒருநாள் வகுப்பில் அனைவர் முன்னிலையிலும், பொத்தான்கள் பெயர்ந்துவிழும் அளவிற்கு ஆக்கிரோஷமாய் என் சட்டையை இவர் பற்றியிழுத்தததையும், ஒரே நொடியில் உச்சம்தொட்ட ஆங்காரத்தில் நான் இவரது கையை பலமாக தட்டிவிட்டு பற்களைக் கடித்துக்கொண்டு அருகிலிருந்த மரக்கதவை டமாரென அறைந்ததையும், துளிச் சலனமின்றி என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இவர் சட்டென தனது செருப்புகளைக் கழற்றபோனதையும், அன்றைய இரவில், மிகையான போதையில், ஒரு கத்தி மற்றும் சில கற்களை மஞ்சப்பை ஒன்றினுள் போட்டுகொண்டு ஆறாம் குறுக்குத் தெருவினுள் மனோவையும் கூட்டிக்கொண்டு உலா வந்ததையும் பற்றி எண்ணுவதை நான் கைவிட்டு வெகுநாட்கள் ஆகியிருந்தன. தெருமுனையில் நின்ற கம்பத்தில் மனோவைக் கட்டிவிட்டு, திருட்டுப் பூனையைப்போல் அடியெடுத்துவைத்து, அன்று பொன்மலர் மேடத்தின் வீட்டின் முன் நின்று சுற்றிமுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கே திடீரென விளக்கு ஒன்று எரிந்ததையும், சட்டென பதறிப்போன நான் அங்கிருந்து விழுந்தடித்து ஓட்டம்பிடித்ததையும், வீட்டை அடைந்த பிறகே மனோவைக் குறித்து எண்ணியதையும், திரும்பி வந்தபோது ஐந்தாறு வெறிபிடித்த தெருநாய்கள் சூழ குறுகியபடி இவன் நின்றுகொண்டிருந்ததையும் அப்போது நினைத்துப் பார்த்தபோது நெஞ்சம் எடைகொண்டது.

அறவே முன்யோசனை இன்றி நான் செய்யத் துணிந்திருந்த அந்த மூர்க்கமான செயலைப் பற்றி அறிந்தவர் இவனைத் தவிர எவருமில்லை. ஆதலால், முன்கோபமும் முரட்டுத்தனமும் முற்றிப்போன ஆண்கள் வாழும் குடும்பத்தில் நான் ஒருவனே விதிவிலக்கு என்று திட்டவட்டமாக நான் உருவாக்கியிருந்த பிம்பத்திற்கு எந்தவித பாதகமும் ஏற்பட்டுவிடவில்லை.

பொன்மலர் மேடம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவராக நிலத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். அவர் பின்னால் இருந்த காம்பவுண்ட் சுவரில் சிகப்பு எழுத்துக்களால், “கர்த்தர் எனக்காக யாவையும் செய்துமுடிப்பார்” என்று எழுதப்பட்டிருந்தது. பக்கவாட்டில் இருந்த கீதா ஹோட்டலில் பூரி பொறியும் மணத்துடன், இடப்புறம் இருந்த ஆட்டுக்கொட்டாயின் வைக்கோல் மணம் சேர்ந்துகொண்டு விநோத உணர்வுகளைக் கிளர்த்தியது. அன்புநகர் வரசித்தி விநாயகர் கோவில் ஒலிபெருக்கி திடீரென மணி எட்டு ஆகிவிட்டதை அறிவித்ததும் தனது ஒரு பாதத்தை கிழக்குப்புறம் தான் செல்லவேண்டிய திசைநோக்கி நகர்த்தி என் பக்கம் பார்த்தார் அவர்.

உரையாடல் அந்தரத்தில் தொங்குவதை விரும்பாத நான் சட்டென அவரின் அம்மாவைப் பற்றி விசாரித்தேன்.

பெரிதாய் பேச்சு இல்லை என்றும், அசைவுகள் கூட பெரும்பாலும் மட்டுப்பட்டுவிட்டது என்றும் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் சொன்ன அவர், அவர்களை நிரந்தரமாக கவனித்துக்கொள்ள தாதி ஒருவரை ஏற்பாடுசெய்திருப்பதாகவும் சொன்னார்.

நான் தலையை மட்டும் சரியென்பதைப்போல் அசைத்தேன்.

அகவை முதிர்ந்து, உடலும் மனமும் தளர்ந்துவிட்டிருந்த அந்த அம்மாவின் பொருட்டு நடந்திருந்த பல்வேறு நிகழ்வுகளில் டெய்சி சம்பவமே இறுதியானது.

அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. நோபுள் தெருவில் இருந்த வாடகை வீட்டில் மனோவுடன் வசித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் உச்சிப்பொழுதில், முகமெல்லாம் வியர்த்து வடிய, கலங்கிய விழிகளுடன் வீட்டுக் கதவைத் தட்டியிருந்த பொன்மலர் மேடத்தின் கைகளில் சுருண்டுப் படுத்திருந்தது டெய்சி. அதற்கு ஒருவாரம் முன்பு அவர்களை மைதானத்தில் வைத்து யதேச்சையாக சந்தித்தபோதுதான் அவர்கள் வாங்கியிருந்த நாய்குட்டியைப் பற்றி மிகவும் சந்தோஷமாக பகிர்ந்துகொண்டிருந்தார்.

“என்ன, வெளியத்தான் போக முடியறதில்ல… கொஞ்ச நேரத்துல வீட ரெண்டாக்கி போட்டுருது… அம்மாக்கு அது பிடிக்கறதில்ல… உங்களுக்கு ஒரு பேத்தி இருந்தா பொறுத்துக்க மாட்டீங்களான்னு விளையாட்டா சொல்லிக்கிட்டாலும், அவங்களுக்கு உடம்புக்கு முடியறதில்ல” என்று இடையில் அவர்கள் சொன்னதற்கு, “என் வீட்டில பின்னாடி நிறைய இடம் கடக்கு… அப்படி அவசரமா வெளிய போகறப்ப இங்க கூட விட்டுட்டு போங்க… ஏற்கனவே மனோ இருக்கறதுனால, குட்டிக்கு தேவையான எல்லாமே இங்கயே இருக்கு… சுத்தமாவும் இருக்கும்” என்று நான் அளித்திருந்த மறுமொழியை நம்பித்தான் வந்திருக்கிறார் என்று நினைத்தேன்.

ஆனால் சற்றும் எதிர்பார்த்திராத வகையில், “மதன், டெய்சிய நீ வளக்க முடியுமா?” என்கிற கேள்வியை அவர்கள் முன்வைத்தபோது ஒருகணம் அதிர்ந்துபோயிருந்தேன் நான்.

அவர்களது அம்மாவிற்கு இதை சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், இதனால் உருவாகும் உளைச்சலே அவர்களது உடல்நலத்தை மேலும் மோசமாக்கிவிடுமோ என்றும் தான் அஞ்சுவதனால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அதே சமயத்தில் ஆசையாய் வாங்கிய ஜீவனை எவரோ முகம் தெரியாதவர்களிடம் ஒப்படைக்க தனக்கு மனமில்லை என்றும், இங்கே வளர்ந்தால் தனக்கு தோன்றும்போதெல்லாம் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றும் சொன்னார். மேலும் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும், தேவையை விட அதிகமாக தான் கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

பொன்மலர் மேடத்தின் அம்மாவின் மீது எனக்கு அத்தனை நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. அவர்கள் வீட்டில் பதிவாகவும், என் வீட்டில் பகுதி நேரமாகவும் வேலை செய்துவரும் எஸ்தரிடம் இருந்து நான் பல தகவல்களை அறிந்துவைத்திருந்தேன். மெத்தப் படித்தவரான அவரது அப்பாவிற்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்பட்டவரே மேடத்தின் அம்மா. அவருக்கு இணையாக கல்வி கற்றிருந்த தனது முதல் மனைவியுடன் இவர்களை ஒப்பிட்டு உதாசீனப்படுத்துவதே அவரது முதன்மை குணமாக இருந்தது. முதல் மனைவியின் மூலமாக பிறந்த மேடத்தின் அக்காவிற்கு இணையாக மேடமும் படித்தபோதுதான் அவருக்குள் கொஞ்சம் கரிசனம் எட்டிப்பார்த்திருக்கிறது. ஆனால் அது நெடுங்காலம் நீடித்திருக்கவில்லை. கனடாவில் வேலைசெய்துகொண்டிருந்த ஒருவரை மணம்செய்துகொண்டு மூத்த மகள் கிளம்பிய கொஞ்ச காலத்திலேயே அவர் மறைந்துபோயிருந்தார்.

ஆளுயர ஒட்டடைக் குச்சியைக் கையில் பிடித்தபடி, கூரையைப் பார்த்துக்கொண்டே, “அதுக்கு பிறவு இந்த அம்மா ஒரேடியா சீக்குவந்த கணக்கா ஆயிட்டு… மாசம் ஒருமுறை ஏதாச்சு ஒன்ன சொல்லி ஆஸ்பத்திரி கூட்டிட்டு போவச் சொல்லும்… உங்களுக்கு ஒண்ணுமில்லம்மான்னு படிச்ச டாக்டர் சொன்னாலும் இது கேக்காது…” என்று சொல்லிவிட்டு, தரையில் ஊர்ந்தோடிய சிலந்தி ஒன்றை பாதத்தால் மிதித்து நசுக்கியபடி, “அதுவும் மேடத்துக்கு ஏதாச்சு நல்லது கூடி வாரப்ப, வரன் கிரன்னு ஏதாச்சு தட்டுப்படுதப்பல்லாம் ஏதோ சொல்லிவச்ச கணக்கா அது ஏறக்குறைய படுத்த படுக்கையாவே ஆயிரும்… என்ன ராசியோ!” என்று எஸ்தர் சொல்லியிருந்ததை அப்போது நினைத்துக்கொண்டேன்.

டெய்சி என் வீட்டின் உறுப்பினர் ஆனது மனோவுக்கு சற்று வருத்தம்தான். முதல் இரண்டு நாட்களுக்கு அவன் சரியாக சாப்பிடவில்லை. சொல்லியிருந்ததைப்போலவே இரு தினங்களுக்கு ஒருமுறை அதைப் பார்க்க வந்தார் பொன்மலர் மேடம். புழக்கடையில் இருந்த சிறிய அறை ஒன்றில் அதனுடன் அரைமணி நேரம் அமர்ந்து விளையாடிவிட்டு சிரித்த முகமாய் வீட்டிற்குச் செல்வார். மனரீதியாக அவரை ஏதேதோ துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருந்த என் மூலமாக அவர்களுக்கு கொஞ்சம் ஆசுவாசம் அமைந்திருப்பதைக் காணும்போது எனக்கும் நிறைவாகத்தான் இருந்தது.

ஆனால் அந்த நிறைவு அத்தனை விரைவாக, அவ்வளவு கோரமான விதத்தில் சிதைவுறும் என்று நான் எண்ணியிருக்கவேயில்லை. குளியலறையில் உடைந்துபோய் ஒழுகிக்கொண்டிருந்த குழாய் ஒன்றிற்கு மாற்றை வாங்குவதற்கென்று நான் சென்று வந்திருந்த அந்த பதினைந்து நிமிடம் அத்தனை பெரிய குரூரத்தை விளைவித்திருந்தது.

அன்று நான் வீட்டிற்கு வந்தபோது மனோ ஒரு ஓரத்தில் சோர்ந்துபடுத்திருந்தான். நேராக குளியலறை சென்று வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தபோது மேடம் வந்திருந்தார்.

அவரை உள்ளே அமரச்செய்துவிட்டு டெய்சியைத் தேடி புழக்கடை சென்றேன். எத்தனை அழைத்தும் அது வரவில்லை. பின்னர் மேடமே பின்புறம் வந்து அதனை செல்லமாக எப்படி எப்படியெல்லாமோ கூப்பிட்டுப் பார்த்தார். அதன் ஓசைகூட எழாததை நான் அப்போதே உணர்ந்தேன். அங்கே நின்றபடியே சுற்றிமுற்றி பார்த்தேன். வெளியேறும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது எனக்குள் நிம்மதியை விதைத்தது. அது உள்ளேதான் எங்கேயோ இருக்கவேண்டும்.

சட்டென ஒரு யோசனை தோன்றியதும், “மேடம், ஒரு நிமிசம்… இதோ வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு மச்சிப்படி ஏறினேன். அங்கே தங்கியிருந்த ஏட்டு அழகிரியின் மனைவியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, அவர்கள் வீட்டைச் சுற்றி நான்கு திசைகளிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் பதிவுசெய்திருந்த காட்சியை, அங்கிருந்த கணினித் திரையில் அலசிப் பார்த்தேன்.

வீட்டைவிட்டு நான் வெளியேறும்போது புழக்கடையில் டெய்சி இருந்திருக்கிறது. பந்தை தனது மூக்கினால் தள்ளியபடியும், பின்னர் அதை தானே துரத்தி எடுத்து மிதித்து விளையாடியபடியும் அது ஆனந்தமாகத்தான் இருந்தது. நான்கு கால்களையும் பரப்பி அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மனோவை அது ரொம்ப நேரத்திற்கு சட்டைசெய்யவேயில்லை. பந்து விளையாட்டு சலித்ததும் நட்புடன் வாலை ஆட்டியபடியே அது மனோவை நெருங்கியதும், ஒரே பாய்ச்சலில் பாய்ந்த மனோ அதன் மெல்லிய கழுத்தைக் கவ்வி, வெறியுடன் பலமுறை ஆட்டி வீசியது. பிளவுபட்ட டெய்சியின் கழுத்திலிருந்து ரத்தம் கருநிறமாய் கசிவது அந்தக் காட்சியில் அத்தனை துல்லியமாய் தெரிந்தது.

மெல்ல நடந்து, மீண்டும் அதன் கழுத்தைப் பற்றித் தூக்கி, உச்சக்கட்ட வக்கிரத்துடன் குதறி ஆட்டி அது வீசுவதையும், கந்தலாடையைப்போல் அந்த நாய்க்குட்டி காம்பவுண்ட் சுவர் தாண்டி வெளிப்பக்கமாக விழுவதையும் கண்டு, “அய்யோ!” என நான் திரும்பியபோது, அருகே முகம் வெளிறி நின்றுகொண்டிருந்த பொன்மலர் மேடம் கணினி வைக்கப்பட்டிருந்த மேசை விளிம்பைப் பற்றிக்கொண்டு லேசாய் தள்ளாடினார்.

“ஏதோ வீல்ன்னு சத்தம் கேட்டுச்சு தம்பி… சரி ரெண்டும் ஏதோ விளையாடுதுங்கன்னு நெனச்சு நானும் கவனிக்காம விட்டுட்டேன்… இங்கன அடுப்படில வேற…” என்று ஏட்டு அழகிரியின் மனைவி சொன்னதற்கு நான் செவி கொடுப்பதற்குள் விடுவிடுவென படியிறங்கி ஓடினார் பொன்மலர் மேடம்.

நான் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.

புறவாசல் கதவைத் திறந்துகொண்டு காம்பவுண்ட் சுவரைச் சுற்றிவந்த மேடம் அங்கிருந்த குப்பைக் குவியலை கைகளால் துழாவினார். அவர் முகம் இறுகிப்போய் இருந்தாலும், உடம்பில் ஒருவித துரிதம் தெரிந்தது. தலைப்பின்னல் தளர்ந்து மயிர்கற்றைகள் முகத்தை முழுதாக மறைப்பதை அவர் பொருட்படுத்தவேயில்லை. மூச்சிரைக்க இயங்கிக்கொண்டிருந்தவர், சருகுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளின் அடியில் பிணமாய் கிடந்த டெய்சியை கையில் எடுத்தபிறகே ஓய்ந்தார்.

பொசுபொசுவென இருந்த அதன் ரோமத்தில் அழுக்கும் ரத்தமும் கறையாய் படிந்திருந்தது. கழுத்திலிருந்த இருவிரல் தடிமன் உள்ள காயத்தை ருசித்துப் பார்க்கத் துடித்தலைந்தன ஈக்கள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அக்கணத்தில் அவர்கள் என்ன சொன்னாலும் செய்யவேண்டும், எதை அளித்தாலும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதைத் தவிர என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை.

அரை மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தோம். திடீரென வானில் மின்னல் வெட்டி, இடி முழங்கியதும் விதிர்த்து நிமிர்ந்த மேடம், “தூத்துக்குடி பைபாஸ்ல எனக்கொரு லேண்ட் இருக்கு மதன்… அங்கயே புதைச்சுரலாம்… கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்டார். நடந்ததை ஏற்றுக்கொண்டு விட்டதைப்போல் அவர் குரல் மிகவும் நிதானமாக இருந்தது.

நான் சரியென்று தலையசைத்தேன்.

டெய்சியுடன் அவர் ஆட்டோவில் முன்செல்ல, எனது பைக்கில் நான் அவர்களைப் பின்தொடர்ந்தேன். வழக்கமாய் நான் வெளியில் கிளம்பும்போது தலையை மட்டுமாவது உயர்த்திப் பார்க்கும் மனோ அன்று என்னை சட்டைசெய்திருக்கவில்லை.

ஆனால் நள்ளிரவுக்கு மேல் சோர்ந்துபோய் நான் வீடு திரும்பியபோது எப்போதும்போல உற்சாகமாக ஓடிவந்து என் மேல் பாய்ந்தான் அவன். என் உடலோடு அவன் உடலை ஒட்டிவைத்துக்கொண்டு உள்ளே புகுந்துவிட முயல்பவனைப்போல் தனது முழு எடையையும் என் மேல் செலுத்தினான். காதருகே அவனது மூச்சுக் காற்றை கேட்ட நான் ஒருகணம் அதிர்ந்துபோனேன். சட்டென என்னுள் ஒருவித விசையும், விலக்கமும் புகுந்துவிட்டிருந்தது. இரண்டு கைகளால் அவன் உடம்பை இறுகப் பற்றி, உடம்பின் ஒரு அங்கத்தைப் பிய்த்து வீசுவதைப்போல பற்களைக் கடித்தபடி அவனை வசமாகத் தள்ளினேன். அதை ஒருவித விளையாட்டு என்று கருதி மீண்டும் பாய காலெடுத்துவைத்தவனை எனது அதிபயங்கரமான கூச்சல் ஸ்தம்பிக்கச் செய்தது. மீண்டும் ஒருமுறை கழுத்து நரம்புகள் புடைக்கக் கத்திவிட்டு, தரையை பலமாக பலமுறை அறைந்தேன். பிறகு அதே விசையுடன் என் தலையை அடித்துக்கொண்டேன்.

மனோ தலையை ஒருபுறமாக திருப்பி என்னைப் பார்த்துவிட்டு, ஒரே ஒருமுறை, “லொல்!” என்று குரைத்துவிட்டு அகன்று சென்று படுத்துக்கொண்டான்.

வேளாவேளைக்கு சோறு போட்டாலும் எனக்கும் அவனுக்குமான உறவில் நிரந்தரமான கீறல் ஒன்று அதன்பிறகு விழுந்துவிட்டிருந்தது.

நான் அவனிடம் விலக்கம் காட்டுவதை கவனித்த எஸ்தர் ஏதேதோ புத்திமதி சொல்லிப் பார்த்தாள். இந்தப் புறக்கணிப்பை அஞ்சித்தான் அது அந்தக் கொலையை செய்தது என்றும், உகந்தவர்களிடம் முறையிடுவதற்கு பதிலாக பலம்குன்றியவர்களை தண்டிக்கும் மனப்போக்கு மனிதர்களைப்போலவே விலங்குகளிடமும் உண்டு என்றும் விளக்கிச் சொன்னாள்.

ஆனால் எத்தனை முயன்றாலும் முறிந்தது முறிந்ததாகவேதான் இருந்தது. அந்தப் பிஞ்சுக் குட்டியை அத்தனை வெறியுடன் அவன் வேட்டையாடியதைக் கண்ட பிறகு, என்னிடம் அவன் காட்டும் குழந்தைபோன்ற பாவனைகள் அனைத்தும் வேஷம்போல் தோன்ற ஆரம்பித்திருந்தது. அபத்தமான சிந்தனை என்று புரிந்தபோதிலும் அதனை ஏற்றுக்கொண்டு மாற்றமடைய உள்ளிருக்கும் ஏதோ ஒன்று தயக்கம் காண்பித்தது.

அன்று தனது பணிகளை முடித்தபிறகு வெகுநேரம் மனோவுடன் அமர்ந்து, அதன் நெற்றியை வருடியபடி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள் எஸ்தர்.

பிறகு வாசலில் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த என்னிடம், “எல்லாம் விதி… என்னத்த சொல்ல… வயசு நாப்பத கடந்தாச்சு, இன்னும் கல்யாணம் காட்சின்னு ஒண்ணுத்தையும் காணல… துணையா இருக்குமேன்னு ஒரு உசுர வாங்கிவச்சா, அது பொறுக்கல அந்த கிழவிக்கு… மோளுது, பேளுதுன்னு ஒரே கூச்சல்… அதுக்கும் ஏதோ தெரிஞ்சுருக்கு… என்கிட்ட சட்டுனு ஒட்டிக்கிட்டு வாலாட்டுத சீவன், அவகள பாத்தா மட்டும் சீறிக்கிட்டு போவும்… இக்கினியூண்டு கடந்துட்டு இது போன போக்கும் கொஞ்சநஞ்சம் இல்ல… அதுக்குன்னு நெருப்பள்ளியா கொட்டுவா ஒரு மனுசி? ஆமா சார்… மேடம் இல்லாதப்ப இது என்னத்த செஞ்சுச்சுன்னு தெரியல… நான் வேலைக்கு வந்து பாக்கேன், வீடெல்லாம் ஒரே எரிஞ்ச குப்பையா கடக்கு… அப்பறம்தான் தெரியுது… கிழவி கம்ப கொண்டு மிரட்ட போனதுக்கு அது பல்ல காட்டிட்டு சீறிட்டு வந்திருக்கு, அந்தால இவ பக்கத்துல சுருட்டி கடந்த தினமலர பக்கம் பக்கமா பிச்சு, சுருட்டி, உருண்டையாக்கி, நெருப்பு கொளுத்தி, பந்து கணக்கா அதை பாத்து வீசிருக்கா… நல்ல வேளைக்கு மேல படல… அது என்ன செய்யன்னு தெரியாம பீரோவுக்கு அடியலவும், கட்டிலச் சுத்தியும், படியிறங்க தெரியாம முட்டிமோதி கீழ உருண்டும் தவிச்சு போயிருக்கு… மேடம் வந்ததும் விஷயத்த கேட்டு நடுங்கி போயிட்டு… நான் தலையிட வேண்டாமேன்னு அடுக்களைக்கு போயிட்டேன்… கோவத்துல மேடம் என்ன செஞ்சுச்சுன்னு தெரியல, திடீருன்னு, “எட்டி எஸ்தர் என்ன இவ கொல்ல வாரா பாருட்டி… எட்டி!! கொல்லுடி, கொன்னு போட்டுரு… எனக்கு தேவைதான்…!” ன்னு கிழவி கத்துதா… நான் போய் பாக்கறப்ப நாய்க்குட்டியை கையில தூக்கிட்டு விடுவிடுன்னு மேடம் தெருவுல இறங்கி போயிட்டு!” என்றாள்.

டெய்சியின் கோரமான சாவைக் கண்டு கெட்டித்துப்போயிருந்த நான் சட்டென உருகி அவளுக்காக கண்ணீர் சிந்தியது அப்போதுதான்.

பின்புறம் இருந்த வீட்டின் சுவரோரம் பாவப்பட்டிருந்த புற்கள் மற்றும் செடி வகைகளுக்கு தற்போக்கில் நீர் தெளிக்கும் கருவி சட்டென இயங்கத் துவங்கியதும், “மேடம்” என்று அழைத்து அவரை நகன்று நிற்கச் சொன்னேன்.

அவ்வசைவினால் இயல்புக்குத் திரும்பியவர், “ஒகே மதன்… நான் வரேன்… பாக்கலாம்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒருமுறை என் நெற்றியைப் பார்த்தார்.

நான் சற்று பதற்றத்துடன், “ஒகே ஒகே மேம்… ஹெல்த் பாத்துக்கங்க… எதாச்சு ஹெல்ப்னா கேளுங்க” என்றேன்.

பொன்மலர் மேடம் லேசாய் முறுவல் செய்தார்.

“அம்மாவ கேட்டதா சொல்லுங்க…”

அவர் தனது கைப்பையை உடம்போடு ஒட்டிவைத்துக்கொண்டு, “மனோவ அப்படியே விட்டிராத… அதுக்கென்ன தெரியும்? நமக்குள்ள இல்லாததா? ம்? அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தார்.

நான் ஒருகணம் அதிர்ந்தேன்.

பின்னர் அவர் முழியில் நான் எதிர்நோக்கியிருந்த உணர்வுகள் ஏதும் இருக்காததை நினைவுகூர்ந்து நிம்மதி பெருமூச்சுவிட்டேன்.

பையில் கிடந்த செல்போனை எடுத்து நோண்டியபடி நெற்றியை மூடியிருந்த முடிக்கற்றையை அசட்டையாக கோதியபோது விரலிடுக்குகளின் ஊடாக வேப்பம்பூ ஒன்று சறுக்கி தரையில் விழுந்தது.

Exit mobile version