ஆங்கில மூலம் : பாரதி முகர்ஜி
தமிழாக்கம் : அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
எனக்கு முன்பின் தெரிந்திராத ஒரு பெண் என் வீட்டு சமையலறையில் இந்திய முறைப்படி தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு அறிமுகமில்லாத பல பெண்கள் சமையலறையில் இருந்தார்கள் – தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டும் மோதிக்கொள்ளாமல் இங்கும் அங்கும் சாதுர்யமாக நகர்ந்து கொண்டும். அவர்கள் கதவுகளைத் தாமாகவே திறந்து கொண்டார்கள், என்னை எதுவும் கேட்காமலேயே சாமான்கள் வைக்கும் அறையில் சாமான்களைத் தேடி எடுத்துக் கொண்டார்கள். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு அன்னையர் தினத்தன்றோ அல்லது விக்ரமும் நானும் களைத்திருக்கும்போதோ சிறு வயதில் என் மகன்கள் எங்களுக்காக பெரிய, கோணல் மாணலான ஆம்லெட்டுகளைத் தயாரித்துத் தந்தது நினைவிற்கு வருகிறது. அப்போது அவர்கள் செய்வது எதுவுமே காதில் விழாதது போல நான் படுத்திருப்பேன்.
இந்தோ – கனடா சங்கத்தின் பொருளாளரான டாக்டர் ஷர்மா என்னை வரவேற்பறையை நோக்கி இழுத்துச் சென்றார். எனக்கு பணத்தட்டுப்பாடு ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள விரும்பினார். அப்போதுதான் நிலவறையிலிருந்து காலி கண்ணாடி டம்ளர்களும் கோப்பைகளும் நிறைந்த தட்டை எடுத்துக் கொண்டு வந்த அவருடைய மனைவி அவரைக் கடிந்து கொண்டாள்.
“இதுபோன்ற சாதாரண விஷயங்களுக்கு திருமதி பாவேயை தொந்தரவு செய்யாதீர்கள். எந்நேரமும் பிறந்து விடலாம் என்பது போல அவளுடைய வயிறு பூதாகரமாக பெருத்திருந்தது. கனமான பொருட்களை தூக்குவதை அவள் தவிர்க்க வேண்டும் என்றேன்.
அவள் சிரித்துக் கொண்டே “ஷைலா, இது ஐந்தாவது” என்றாள். எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்த பதின்ம வயது பையனின் கழுத்துப்பட்டையை பிடித்து நிறுத்தினாள். அவன் கேட்டுக் கொண்டிருந்த வாக்மேனை தலையிலிருந்து கீழே இறக்கினான். அவளுடைய நான்கு குழந்தைகளில் ஒருவனாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லோருக்குமே ஒரே மாதிரியான கூம்பிய நசுங்கிய நெற்றி. அதிகார பூர்வமான எண் என்ன என்று அவள் அவனிடம் அதட்டலாகக் கேட்டாள். அவன் மறுபடியும் தலையில் வாக்மேனை மாட்டிக் கொண்டான் ” எதை எதையோ சொல்லி மழுப்புகிறார்கள் அம்மா. அது ஒரு விபத்தாகவோ அல்லது தீவிரவாத வெடிகுண்டு சம்பவமாகவோ இருக்கலாம் என்று சொல்கிறார்கள்”
காலையிலிருந்து பையன்கள் “சீக்கிய வெடிகுண்டு சீக்கிய வெடி கொண்டு” என்றே அனத்திக் கொண்டிருந்தார்கள். ஆண்கள், அந்த வார்த்தையை வாயால் சொல்லாமல், ஆமோதிக்கும் விதமாக தலையைக் குனிந்து கொண்டார்கள். திருமதி ஷர்மா அந்த வார்த்தையை கேட்டு நெற்றியைப் பிடித்துக் கொண்டாள். விண்வெளி சிதிலங்களை அல்லது ரஷ்ய லேசர்களை பற்றிப் பேசுவதை இந்த மட்டிலாவது நிறுத்தினார்களே!
உணவருந்தும் அறையில் இரண்டு வானொலி பெட்டிகள் ஒலித்துக் கொண்டிருந்தன. அவை வெவ்வேறு வானொலி நிலையச் செய்திகளை ஒலிபரப்பிக் கொண்டிருந்தன. என் மகன்களின் படுக்கை அறையிலிருந்து தான் யாரர் அவற்றை கீழே கொண்டு வந்திருக்க வேண்டும்! முன் வாசல் தோட்டத்தின் வழியாக குசும் குளியல் ஆடையில் ஓடி வந்த அந்த நொடியிலிருந்து நான் அவர்களுடைய அறைக்குள் நுழையவில்லை. அவளைப் பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தது. நான் கதவைத் திறந்துஅவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன்.
வாசிப்பறையில் இருந்த பெரிய டிவியில் அமெரிக்க சேனல்களும் கேபிள் சேனல்களும் மாறி மாறி திருப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
“இந்த மத போதகர்களால் எப்படி ஒன்றுமே நிகழாதது போல நடந்து கொள்ள முடிகிறது?” யாரோ வெறுப்புடன் வசை பாடிக் கொண்டிருந்தார்கள். நாம் அந்த அளவு முக்கியமானவர்கள் இல்லை என்று நான் அவரிடம் சொல்ல விரும்பினேன். “பார்வையாளர்களையும் நீல ஆடையும் அழகான வெள்ளை தாடியும் கொண்ட மத போதகரையும், நீல வானுக்கு கீழே வரிசையாக நிற்கவைக்கப்பட்டு இருக்கும் பனை மரங்களையும் பாருங்கள். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்பது உங்களுக்கு புரிந்துவிடும்”
தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. டாக்டர் ஷர்மா பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். “நாங்கள் அவரோடு தான் இருக்கிறோம். ஆம். டாக்டர் தூக்க மாத்திரை கொடுத்திருக்கிறார். ஆமாம் ஆமாம், மாத்திரை வேலையை செய்கிறது” மாத்திரைகளால் மட்டுமே இந்த அமைதியை விவரித்து விட முடியுமா என்று நான் நினைத்தேன். அமைதி அல்ல, காதடைக்கும் மௌனம். நான்
நிதானம் இழக்காமல் இருந்தேன். ஆனால் ஒருபோதும் ஒடுக்கப்பட்டல்ல. ஒலி என்னை வந்தடைய முடியும், ஆனால் என் உடல் பதற்றத்தில் இறுகி அலறத் தயாராக இருந்தது. என்னைச் சுற்றிலும் அவர்களுடைய குரல்களை என்னால் கேட்க முடிந்தது. என் மகன்களும் விக்கிரமும் ஓலமிடுவதை என்னால் கேட்க முடிந்தது – “அம்மா… ஷைலா” அவர்களுடைய ஓலங்கள், ஹெட்ஃபோனை போல, வேறெந்த சத்தமும் என் காதில் விழாமல் சூழ்ந்து கொண்டு, என்னை தனிமைப்படுத்தின.
வெந்நீர் சுட வைத்துக் கொண்டிருக்கும் பெண்மணி திரும்பத் திரும்ப தன் கதையை சொல்லிக் கொண்டிருந்தாள். “எனக்குத்தான் முதலில் தகவல் தெரிந்தது. என் உறவினர் ஹலிஃபாக்சிலிருந்து காலை 6:00 மணிக்கு முன்பே தொலைபேசியில் அழைத்தார். நம்ப முடிகிறதா உங்களால்? அவர் காலை பிரார்த்தனைக்காக விழித்தபோது, மருத்துவப் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த அவருடைய மகன், ஒரு ராக் சேனலில், விமானத்திற்கு ஏதோ நடந்து விட்டதை பற்றி கேட்டு அவரிடம் சொல்லியிருக்கிறான். முதலில் அது, பூதாகரமான அழிப்பானால் அழிக்கப்பட்டது போல, ரேடாரிலிருந்து மறைந்து விட்டதாகச் சொன்னார்களாம். அவனுடைய தந்தை தான் என்னை அழைத்தார். என்னவோ நடந்துவிட்டது என்றால் என்ன அர்த்தம்? விமானம் கடத்தப்பட்டு விட்டதா என்று அவரிடம் கேட்டேன். இதுவரையில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை. எதற்கும் உன் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துப் பார். ஏனெனில் அவர்களில் பலர் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்திருக்கலாம் என்றார். அதனால்தான் நான் உடனடியாக குசுமை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவளுடைய கணவரும் மகளும் நேற்று பயணம் செய்ய இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும்”
என் வீட்டுக்கு எதிர் தெருவில் தான் குசம் வசிக்கிறாள். ஒரு மாதம் முன்புதான் அவளும் சதீஷும் இங்கு குடியேறினார்கள். அவர்களுக்கு பெரிய வீடு தேவைப்பட்டதாக கூறினார்கள். இவர்கள் எல்லோருமே – டாக்டர் ஷர்மா, அவரது மனைவி, இந்தோ கனடா சங்க நண்பர்கள் – அனைவருமே அவர்களுடைய புதுமனை புகு விழாவிற்கு வந்திருந்தார்கள். சதீஷும் குசுமும் அவர்களுடைய பெரிய கேஸ் கிரில் அடுப்பில் வீட்டிலேயே தந்தூர் உணவு வகைகளை தயாரித்தார்கள். அக்கம் பக்கத்து வீட்டு வெள்ளைக்காரர்கள் கூட தங்களுடைய தட்டுகளை செக்கச்சிவந்த, கருகிய, மிருதுவான, சாறு நிறைந்த கோழி இறைச்சியால் நிரப்பிக் கொண்டார்கள். அவர்களுடைய இளைய மகள் நடனம் ஆடினாள். எங்கள் மகன்கள் கூட ஸ்டான்லி கப் ஒளிபரப்பை விட்டு விட்டு, விருப்பமேயில்லாமல் வந்து தலை காட்டினார்கள். எல்லோரும் தங்கள் புகைப்பட ஆல்பத்துக்காகவும் சமூக நாளிதழுக்காகவும் படம் எடுத்துக் கொண்டார்கள் – நம் இன்னொரு குடும்பம் டொரன்டோவில் கொடிகட்டி பறக்கிறது – இப்போது அந்த சந்தோஷமான முகங்களில் எத்தனை முகங்கள் காணாமல் போயிருக்கும் என நான் யோசித்தேன். “திரும்பி எடுத்துக் கொள்ளத் தான் போகிறான் எனில் எதற்காக நமக்கு இத்தனை நாட்கள் இவ்வளவு கொடுக்க வேண்டும் இந்த கடவுள்?” என்று குசும் என்னிடம் கேட்டாள்.
நான் தலையசைத்தேன். கம்பளம் பொருத்தப்பட்ட மாடிப்படிகளில் நாங்கள் இருவரும் கைகளைப் பற்றிக் கொண்டு குழந்தைகளைப் போல அமர்ந்திருந்தோம். “நான் ஒரு முறை கூட அவரை நேசிப்பதாக அவரிடம் சொன்னதே இல்லை என்றேன். “நான் மிகவும் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட நல்ல பெண்ணாகவே இருந்தேன். அவருடைய முதல் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கூட சங்கடமாக உணரும் அளவுக்கு மிகவும் நல்ல பெண்ணாக வளர்க்கப்பட்டவள்.”
“அதனால் என்ன, பரவாயில்லை. அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்” என்றாள் குசும். “என் கணவருக்கும் தெரியும். அவர்களால் அதை உணர்ந்து கொள்ள முடியும். இந்த காலத்து நவீன மோஸ்தர் பெண்கள் கண்டிப்பாக சொல்லத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்கள் உணர்வது உண்மையான அன்பு இல்லை. வெறும் போலி அன்பு மட்டுமே” என்றாள்.
குசுமின் மகள் பேம், தனது மெக்டொனால்ட் சீருடையில், ஒரு சிறிய பெட்டியுடன் ஓடி வந்தாள். ” அம்மா, நீ உடனடியாக உடை மாற்றிக் கொள். பத்திரிகை நிருபர் ஒருவர் இங்கு வந்து கொண்டிருக்கிறார்” என்று பதற்றத்தில் எரிச்சலுடன் கூவினாள்.
“ஏன்?”
“நீ அவருடன் இந்த குளியல் ஆடை அணிந்து கொண்டே பேசப் போகிறாயா?” என்றபடியே தன் தாயின் நீள முடியை வார ஆரம்பித்தாள். எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் மகள். கனடா நாட்டுப் பையன்களுடன் ஊர் சுற்றுவாள், மால்களில் உடலை இறுகப் பிடிக்கும் ஸ்வெட்டர்களை வாங்குவாள். இளைய மகள், பேமின் கூற்றுப்படி, நல்ல மகள், எத்தியோப்பியாவுக்காக நிவாரண நிதி திரட்டிய போது தன் இனிய குரலில் பஜன் பாடல்களை இளைய மகள் பாடியதில், என் சிக்கனக்கார கணவர் கூட நூறு டாலருக்கு காசோலையை கையெழுத்திட்டு கொடுத்தார். அவளும் அந்த விமானத்தில் தான் இருந்தாள். பேம் போகாததால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களை அவள் தன் தாத்தா பாட்டியுடன் கழிக்க இருந்தாள். பேமுக்கு போக விருப்பமில்லை. மெக்டோனால்டில் தன் வேலையை தொடரவே விரும்பினாள். பம்பாயா அல்லது ஒண்டர்லேண்டா என்றால் நான் ஒண்டர்லாண்டையே தேர்ந்தெடுப்பேன்” என்றாள்.
“தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடு. நான் என்ன செய்ய விரும்புகிறேன் தெரியுமா? உன்னைப் பற்றிய கவலை மட்டும் எனக்கு இல்லாமல் இருந்தால் நான் இந்நேரம் தூக்கில் தொங்கியிருப்பேன்”
வலியில் இளம் பேமின் முகம் சுருங்கப் போனது.”நன்றி. நான் உன்னை தடுத்து நிறுத்த மாட்டேன்” என்றாள் அவள்.
கர்ப்பிணிப் பெண் திருமதி ஷர்மா பேமை கடிந்து கொண்டாள். ” அம்மாவை தொந்தரவு செய்யாதே. மிஸ்டர் ஷர்மா பத்திரிகை நிருபர்களை சந்திப்பார். தேவையான ஆவணங்களையும் நிரப்புவார். என்ன சொல்ல வேண்டுமோ அதையும் அவரே சொல்வார்” என்றாள்.
டேம் பிடிவாதமாக நின்று கொண்டிருந்தாள். “அம்மா என்ன நினைக்கிறாள் என்று எனக்கு தெரியாதா? அவள் ஏன் இறந்து போனாள்? அதுதானே? என் தங்கை உயிருடனிருந்து அவளுக்கு பதிலாக நான் இறந்து போய் இருக்கலாமே என்று தான் அம்மா விரும்புகிறாள்.”
என் கைக்குள் பொதிந்திருக்கும் குசு மின் கைகள் மிகவும் சூடாக இருந்தன. நாங்கள் படிக்கட்டுகளிலேயே தொடர்ந்து அமர்ந்து கொண்டிருந்தோம்.
புறப்பட்டு வருவதற்கு முன் எனக்கு ஏதேனும் தேவைப்படுமா என்று தெரிந்து கொள்வதற்காக அவள் தொலைபேசியில் அழைத்து விசாரித்தாள். அவள் பெயர் ஜூடித் டெம்பிள்டன். மாநில அரசால் பணியமர்த்தப்பட்டவள். ” பல்ல்லினப் பண்பாட்டியமா? என்று நான் அவளிடம் கேட்டேன். “ஓரளவுக்கு. ஆனால் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணி அதைவிட பன்மடங்கு அதிகம்” என்று அவள் பதிலளித்தாள். “விமானத்தில் பயணித்த பலரை உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது” என்றாள். “மற்றவர்களையும் தொடர்பு கொள்ள உங்களால் உதவ முடியுமானால்… என்று அவள் பாதியில் நிறுத்தினாள்.
தேநீருக்கு தண்ணீர் கொதிக்க வைக்கவும் முன்னறையில் ஏற்பட்டிருந்த களேபரத்தை சீர் செய்யவும் அவள் எனக்கு நேரம் அளித்தாள். குசும் வீட்டு புதுமனை புகுவிழாவின் போது தயாரிக்கப்பட்ட சில சமோசாக்கள் என்னிடம் இருந்தன. அதை சுட வைத்து கொடுக்கலாமா என ஒரு கணம் யோசித்தேன். கூடவே, இந்த சந்திப்பை இழுத்தடிப்பானேன் என்ற யோசனையும் வந்தது.
ஜூடித் தொலைபேசியில் கேட்டதை விட நேரில் மிகவும் வயது குறைந்தவளாகத் தெரிந்தாள். நீல நிற சூட்டும் வெள்ளை நிற சட்டையும் போல்கா புள்ளிகளிட்ட கழுத்தாடையும் அணிந்திருந்தாள். அவளுடைய பொன்னிற முடி சிறியதாக கத்தரிக்கப்பட்டிருந்தது. முத்துக் காதணிகளைத் தவிர வேறெந்த நகையும் அணிந்திருக்க வில்லை. பளபளக்கும் கார்டோவான் தோலாலான அவளுடைய புதிய கைப்பெட்டி விலை உயர்ந்தது போலக் காட்சியளித்தது. அவள் அதை தன் மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஜன்னல் வழியாக தெருவைப் பார்க்கும்போது அவள் அணிந்திருந்த காண்டாக்ட் லென்ஸ் அவளுடைய வெளிர் நீலக் கண்களில் மிதப்பது போலத் தோன்றியது.
“என்னிடமிருந்து எவ்வகையான உதவியை எதிர்பார்க்கிறீர்கள் ?” என்று நான் கேட்டேன். அவள் நான் அளித்த தேநீரை மரியாதை நிமித்தம் மறுத்த போதிலும், சற்றே நமுத்திருந்த பிஸ்கட்டுகளையும் தேநீரையும் எடுத்துக்கொள்ளும்படி நான் அவளை வற்புறுத்தினேன்.
“எனக்கு அனுபவம் இல்லை” அவள் ஒப்புக்கொண்டாள். “சமூக சேவையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன். இதுவரையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களோடு மட்டுமே வேலை செய்திருக்கிறேன். ஆனால் இது போன்ற பெரிய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் இதுவரையில் வேலை செய்ததில்லை”
“யார் தான் செய்திருக்க முடியும்?” என்றேன்.
– “பண்பாடு மொழி மற்றும் பழக்கவழக்கங்கள் சார்ந்த குழப்பங்கள். திருமதி பாவே ஒரு தூணைப் போல உறுதியானவர். உங்களுடன் ஒத்துழைப்பார் என்று யாரோ கூறினார்கள். இந்த பெருந்துயரத்தை நீங்கள் மிகவும் அமைதியாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்”
இதைக் கூறுகையில் அவள் முன்பக்கம் குனிந்து கிட்டத்தட்ட என் கையைத் தொட முயற்சித்தது என்னை நெளியச் செய்தது. “நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன் திருமதி பாவே. இந்த மாநகரத்தில் உங்களைப்போல நூற்றுக்கும் மேலானோர் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. கணவன் இழந்த பல பெண்கள், இது வரை பணத்தைக் கையாண்டதோ அல்லது பேருந்தில் ஏறிச் சென்றதோ இல்லை. சில வயதான பெற்றோர்கள் தங்கள் படுக்கையறையை விட்டு கூட வெளியே வரவில்லை அல்லது இன்னமும் ஒரு கவளம் கூட சாப்பிடவில்லை. சில வீடுகளும் அப்பார்ட்மெண்டுகளும் சூறையாடப்பட்டுள்ளன. சில மனைவிகள் இன்னமும் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சில கணவர்கள் அதிர்ச்சியிலும் மன அயற்சியிலும் உழன்று கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உதவி செய்ய நினைக்கிறோம் ஆனால் எங்கள் கைகள் பல வகைகளிலும் கட்டப்பட்டிருக்கின்றன. நாங்கள் சிலருக்கு பண உதவி செய்ய வேண்டும், இதைத் தவிர சில சட்ட ரீதியான ஆவணங்கள் தேவைப்படும். அவற்றைக்கூட ஒரு வகையாக திரட்டிக் கொள்ள முடியும். எங்களிடம் மொழிபெயர்த்து சொல்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் மனிதாபிமானம் நிறைந்த அல்லது சரியான மனிதாபிமானம் நிறைந்த அணுகுமுறை இல்லை. நாங்கள் தவறிழைத்து விடக்கூடாது என்று விரும்புகிறோம். அதனால்தான், திருமதி பாவே, நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.”
“அதாவது இன்னும் மேலதிகத் தவறுகள் இழைத்து விடக்கூடாது என்கிறீர்கள் இல்லையா?”
“காவல்துறை சமாச்சாரங்கள் என் கையில் இல்லை” என்றாள் அவள்.
“நான் செய்கிற எதுவும் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை. நாம் எல்லோரும் அவரவர்க்கு தெரிந்த வழியில் துயரத்தை கையாளத்தான் வேண்டும்” என்றேன்.
“நீங்கள் மிக நன்றாக துயரத்தை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள். எல்லோருமே திருமதி பாவே மிகவும் தைரியமானவர் என்று கூறுகிறார்கள். ஒருவேளை மற்றவர்கள் உங்களைப் பார்த்தாலோ அல்லது உங்களுடன் பேசினாலோ அது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்”
“மிகுந்த மன அதிர்ச்சிக்கு ஆளானவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுபவர்களோடு ஒப்பிடுகையில் நான் மிகவும் வித்தியாசமாகவும் மோசமாகவும் நடந்து கொள்கிறேன். நானும் பெருங்கூச்சலிட விரும்புகிறேன், பட்டினி இருக்க விரும்புகிறேன், ஒன்டரியோ ஏரிக்கு செல்ல விரும்புகிறேன், அங்கு பாலத்திலிருந்து கீழே குதித்துவிட விரும்புகிறேன். அவர்கள் என்னை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நானே என்னை உதாரணமாக கருதவில்லை.” என்றெல்லாம் அவளிடம் சொல்ல விரும்பினேன்.
“நான் ஒரு வினோதமான பிறவி. என்னை நன்றாக தெரிந்தவர்கள் யாரும் நான் இப்படி நடந்து கொள்வேன் என்று நிச்சயமாக நம்ப மாட்டார்கள். இந்த மயான அமைதி என்னை விட்டு விலகாது.”
நாங்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டிய நீண்ட பயணத்துக்கு பிறகு அவள் என்னை மறுபடியும் தொடர்பு கொள்ளலாமா என்று கேட்டாள். “நிச்சயமாக. எப்போது வேண்டுமானாலும் தயக்கம் எதுவும் இன்றி அழைக்கலாம்” என்றேன்.
நான்கு நாட்கள் கழித்து அயர்லாந்தின் வளைகுடா ஒன்றை நோக்கி இருந்த பாறையின் மீது குசும் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அது அவ்வளவு ஒன்றும் பெரிய பாறை இல்லை. நீருக்கு மேல் சற்றே நீட்டிக் கொண்டிருந்தது. இதுதான் நாங்கள் அவர்களை அதிகபட்சம் நெருங்க முடிந்த அருகாமை. ஜூன் மாத காற்று பலூனைப் போல அவளுடைய புடவையை நிரப்பி முழங்கால் வரை நீண்டிருந்த முடியை அவிழத்தது. அலைகளால் ஒதுக்கி தள்ளப்பட்ட மருண்ட பறவையைப் போல அவள் காட்சியளித்தாள்.
தட்டுத் தடுமாறி உரத்த அலறலுலுடன் என் வீட்டு முன்பக்க தோட்டத்தின் வழியாக குசும் ஓடி வந்து இதோடு நூறு மணி நேரம் கடந்திருந்தது. மருத்துவமனையில் காத்திருக்கையில் நாங்கள் பல்வேறு கதைகளை கேட்டோம். காவல் அதிகாரிகளும் வெளியுறவு அதிகாரிகளும், நாங்கள் மிகவும் மன உறுதியுடன் இருக்கிறோம் என்றும், துயரத்தை கையாள தகவல்கள் உதவியாக இருக்கும் என்று கருதி எங்களிடம் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். ஒருவேளை அது சரியாககக் கூட இருக்கலாம். சிலர் ஒன்றும் தெரியாமலோ அல்லது தமக்குத் தெரிந்ததை மட்டுமே நம்பினார்கள். அவர்கள் விமானம் இரண்டாக உடைந்தது என்றார்கள். உடனடியாக நினைவிழந்தார்கள் என்றார்கள். யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றார்கள் .என் மகன்கள் காலை உணவை முடித்திருக்கக்கூடும். விமானத்தில் சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சின்ன சின்ன கத்திகளும் தட்டுகளும் முள் கரண்டிகளும் அவர்களை மிகவும் ஈர்த்தன. போன வருடப் பயணத்தின்போது உப்பையும் மிளகுத் தூளையும் தூவிக் கொள்ள விமானத்தில் தரப்பட்ட சிறிய குடுவையை அவர்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். இன்னும் அரை மணி நேரத்தில் அவர்கள் ஹீத்ரோ போய் சேர்ந்திருப்பார்கள்.
ஊழ்வினையிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்கிறாள் குசும். அவர்கள் எல்லோரும் – எங்கள் கணவரன்மார்கள், என் மகன்கள், குயில் போன்ற குரல் கொண்ட அவளுடைய மகள், விமானத்திலிருந்த அனைத்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பார்சிகள் சீக்கியர்கள், நாத்திகர்கள் – இந்த அழகான வளைகுடாவைத் தாண்டி அவர்கள் அனைவரும் ஒன்றாக மரணத்தை தழுவ வேண்டும் என்பது விதிக்கப்பட்டிருத்தது. டொரன்டோவில் இருந்த ஒரு மத குருவிடமிருந்து அவள் இதை தெரிந்து கொண்டிருந்தாள்.
நான் வாலியம் மாத்திரையை விழுங்கினேன்.
நாங்கள் – ஆறு பேர் – “உறவினர்கள்” – இரண்டு விதவைகள் மற்றும் மனைவியரை இழந்த நால்வர் – மருத்துவமனையில் இறந்தவர்களின் புகைப்படங்களை பரிசீலிப்பதற்கு பதிலாக இங்கு வளைகுடா அருகிலேயே உட்கார்ந்திருக்க முடிவு செய்தோம். “உறவினர்கள்” அப்படித்தான் அவர்கள் இப்போது எங்களை அழைத்தார்கள். இந்த இரண்டு நாட்களில் நான் 27 புகைப்படங்களை பார்த்து முடித்திருந்தேன். அவர்கள் எங்களிடம் மிகுந்த பரிவுடன் நடந்து கொண்டார்கள். ஐரிஷ்காரர்கள் நல்ல புரிதல் உள்ளவர்கள். சில சமயங்களில், புரிதல் என்பது, சுற்றுலா பேருந்தில் எங்களை வளைகுடாவுக்கு செல்ல அனுமதிப்பது, அலைகளின் கண்ணாடித் தகடு வழியாகவோ அல்லது சூரியன் மினுங்கும் மேகங்களின் ஊடாகவோ எங்களுக்கு பிரியமானவர்களைத் தேடுவதைப் போல நடிக்க அனுமதிப்பது.
நானும் இங்கேயே இறக்க நேரிட்டால் கூட திருப்தியாகத் தான் இருக்கும்.
“அங்கே தெரிகிறதே, அது என்ன?” குசும் எழுந்து நின்று கைகளை அசைத்தாள். தலை போன்ற ஏதோ ஒன்று அலைகளின் மீது அசைவது போல ஒரு நொடி எனக்குத் தெரிந்தது. அவள் நீருக்குள் நின்றிருந்தாள். நான் பாறை மீது நின்றிருந்தேன். வேகம் இல்லாமல் அலைகள் தாழ்ந்திருந்ததால், மனித தலை போன்ற உருவம் கொண்ட பாறை ஒன்று அலைகளுக்கு மேலே நீட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளது புடவை நீரில் நனைந்து குலைந்திருந்தது. சொட்டச் சொட்ட ஈரமான புடவையுடன் அவள், நம்பிக்கை இழந்த முகத்துடன் திரும்பி வந்தாள். நூறு மணி நேரங்களுக்கு முன்பு என் முகம் இருந்ததைப் போல. ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு, பெருந்துயரம் ஒன்று மட்டுமே இரண்டு பெண்களை இணைக்க முடியும் என்று உள்ளூர தெரிந்த போதிலும், சிரித்துக்கொண்டிருந்தது போல. வெறுமையில் அவளுடைய முகம் தொங்கிப்போனதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.
வெகு நேரம் கழித்து “தண்ணீர் வெதுவெதுப்பாகத் தான் இருந்தது ஷைலா” என்றாள்.
“நம்மால்முடியாது. நமது முறை வருவதற்காக நாம் காத்திருக்க வேண்டும்.”
நான்கு நாட்களாக நான் எதுவும் சாப்பிட்டிருக்க வில்லை. பற்களைக் கூட சுத்தம் செய்திருக்கவில்லை.
“தெரியும். அவர்களைக் குறித்து துக்கப்பட எனக்கு எந்த உரிமையும் இல்லை என்று நான் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறேன். “அவர்கள் நாம் இருப்பதை விட சிறந்த இடத்தில் இருக்கிறார்கள். நான் அவர்களுக்காக சந்தோஷப்பட வேண்டும் என்று என் குரு சொல்கிறார். மன அழுத்தம் என்பது நம் சுயநலத்தின் அடையாளம் என்று அவர் சொல்கிறார்.” என்றாள் குசும்.
ஒருவேளை நான் சுயநலவாதி தானோ. சுயநலத்துடன் நான் குசுமிடமிருந்து விலகி பறையின் மீது கால் செருப்புகள் ஒலிக்க நீரை நோக்கி ஓடினேன். என் மகன்கள் இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடந்தால்? அந்த கரு நீலப் பாறைக்கு கீழே ஒரு மைல் ஆழத்தில் புதைந்து கிடந்தால்? அலைகன் வேகத்தை கருத்தில் கொண்டு பார்க்கையில், ஒருவேளை….?
இப்போது என் புடவை கசங்கி பாழாகிவிட்டது. என்னிடமிருந்த மிக நல்ல புடவைகளில் ஒன்று. முழங்காலைத் தொடும் தண்ணீரில் குசும் என்னோடு வந்து நின்று கொண்டாள். நான் நீச்சல் குளத்தில் நிற்பது போல உணர்ந்தேன். எனக்கு தண்ணீரிலேயே நிரந்தரமாய் இருந்து விடலாம் போல இருந்தது. என் கணவர் என் கையை பிடித்துக் கொள்வார். மகன்கள் நான் கூச்சலிடுவதை பார்ப்பதற்காகவே என் மீது தண்ணீரை வீசுவார்கள்.
“என் மகன்கள் எவ்வளவு நன்றாக நீச்சல் அடிப்பார்கள் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா குசும்?”
“நான் பதக்கங்களை பார்த்திருக்கிறேன்” என்றாள்.
மனைவியை இழந்தவர்களில் ஒருவரான , மாண்ட்ரியாலில் வசிக்கும்டாக்டர் ரங்கநாததன் தன் செருப்புகளை ஒரு கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு எங்களை நோக்கி நடந்து வந்தார். அவர் ஒரு எலக்ட்ரிக்கல் இன்ஜினியர். அவர் ஆற்றும் பணி உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது என்ற ஹோட்டலில் யாரோ பேசிக் கொண்டார்கள். இயற்பியலும் மின்சாரமும் ஒன்று சேரும் இடம். அவர் பெரிய குடும்பம் ஒன்றை இழந்திருந்தார். அவரது இழப்பபை வார்த்தைகளால் விவரித்து சொல்லிவிட முடியாதது. “கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு நல்ல நீச்சல் காரன் ஏதேனும் ஒரு தீவை சென்றடைந்து விட முடியும்” என்று டாக்டர் ரங்கநாதன் என்னிடம் சொன்னார். “இங்கும் அங்குமாக சின்ன சின்ன தீவுகள் சிதறிக் கிடப்பதால் இது சாத்தியம்தான்”
“நீங்கள் ஒன்றும் ஆறுதலுக்காக சொல்லவில்லையே?” நான் அவரிடம்என் மூத்த மகன் வினோதைப் பற்றி கூறினேன். சென்ற வருடம் தான் அவன் நீர் மூழ்கும் பயிற்சியையும் முடித்திருந்தான்.
“நம்பிக்கையுடன் இருப்பது பெற்றோரின் கடமை” என்றார் அவர். “இதுவரை பரிசோதிக்கப்படாத சாத்திய கூறுகளை புறந்தள்ளுவது முட்டாள்தனம். நானே இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை” என்றார்.
குசும் மறுபடியும் விசும்ப ஆரம்பித்தாள். அவளது தோள் மீது கை வைத்து அவர் அவளை சமாதானப்படுத்த ஆரம்பித்தார். சற்று நேரத்தில் குசும் அமைதியானாள்.
“வினோத்துக்கு என்ன வயது” என்று அவர் என்னிடம் மிகவும் கவனமாக கேட்டார். நாங்கள் இப்போதும் நிகழ் காலத்தில் தான் இருந்தோம். இறந்த காலத்தை ஏற்கவில்லை.
“பதினான்கு. நேற்று தான் அவனுடைய பதினான்காம் பிறந்த நாள். அவனுடைய அப்பாவும் சித்தப்பாவும் அவனை தாஜ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பெரிய பிறந்தநாள் விருந்து கொடுப்பதாக இருந்தார்கள். என்னால் அவர்களோடு போக முடியவில்லை. என்னுடைய முட்டாள்தனமான வேலையிலிருந்து எனக்கு ஜூன் மாதம் இரண்டு வார விடுமுறை கிடைக்கவில்லை. பெரிய ட்ராவல் கம்பெனியில் நான் பில்களை சரி பார்க்கும் வேலை செய்கிறேன். ஜூன் மாதம் போக்குவரத்து அதிகம் இருக்கும் மாதம். டாக்டர் ரங்கநாதன் தன்னுடைய சூட்டின் பாக்கெட்டுகளை வெளியே இழுத்து தட்டி விட்டுக் கொண்டார். வாடிய ரோஜா இதழ்கள் தண்ணீரில் மிதந்தன. யாருடைய தோட்டத்து செடியிலிருந்தோ அவர்
யாருடைய தோட்டத்திலிருந்தோ அவர் ரோஜாக்களை பறித்து வந்திருந்தார். அப்பூக்களை பறிக்க அவர் யாரிடமும் அனுமதி கேட்கவில்லை. ஆனால் சமீபத்தில் உள்ளூர் நாளிதழ்களில் அது குறித்து ஒரு செய்தி வந்திருந்தது. ஒரு இந்தியரை பார்க்க நேரிட்டால் அவர்களுக்கு பூக்களைக் கொடுக்குமாறு அச்செய்தியை கேட்டுக் கொண்டது.
“பலம் பொருந்திய 14 வயது பையன் தன்னைவிடச் சிறியவனை மிக எளிதாக கரை சேர்த்துவிட முடியும்” என்றார்.
நான்கு வயது இடைவெளி இருந்த போதிலும் என் மகன்கள் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். வினோத் மிதுனை ஒருபோதும் மூழ்க விடமாட்டான். “எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்” என்று நான் நினைத்துக் கொண்டேன். அது ஒருவேளை முட்டாள்தனமாகக் கூட இருக்கலாம்; இந்த மனிதருக்கு இப் பிரபஞ்சத்தின் முக்கியமான, ஆனால் எனக்கு மறைக்கப்பட்ட, ரகசியங்கள் தெரிந்திருந்தன. ஒரு வித விடுதலை உணர்வு என்னை லகுவாக உணரச் செய்தது. அதனால் தானோ என்னவோ இறந்து போனவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த கேலரியில் என் மகன்ன்களின் புகைப்படங்கள் இன்னும் இடம்பெறவில்லை. “மிக அழகான ரோஜாக்கள்” என்றேன்.
“என் மனைவிக்கு ரோஸ் நிற ரோஜாப் பூக்கள் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் கட்டாயம் பூக்கள் வாங்கி வர வேண்டும். திருமணம் ஆகி இருபது வருடங்கள் ஆன பின்பும் உனக்கு என் அன்பிற்கான சாட்சி தேவைப்படுகிறதா என்று நான் கேட்பதுண்டு. அவர் தன் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் அடையாளம் காட்டியிருந்தார். மாண்ட்ரியாலைச் சேர்ந்த ஒருவருமே பிழைக்காத வேறு சில அதிர்ஷ்டக்கார குடும்பங்களையும் அடையாளம் காட்டி யிருந்தார். கரைக்கு திரும்பி வரும்போது அவர் என்னை பார்த்து சிரித்தார். திரும்பி என்னை பார்த்து, “திருமதி பாவே, என்னிடம் இரண்டு ரோஜாப் பூக்கள் மீதம் இருக்கின்றன. உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் அவற்றை நீரில் இட விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
ஆனால் என்னிடம் நீரில் மிதக்க விட வேறு பொருட்கள் இருந்தன – வினோதின் பாக்கெட் கால்குலேட்டர், என் மிதுனுக்காக பாதி வண்ணம் தீட்டப்பட்ட பி152 மாடல். அவர்களுடைய தீவில் அது அவர்களுக்கு தேவைப்படும். என் கணவருக்கு? அமைதியான கண்ணாடி தகடு போன்ற கடல் நீரில் நேற்று ஆஸ்பத்திரியிலிருந்து எழுதிய கவிதையை அவருக்காக மிதக்க விட விரும்பினேன். அவர் என் உணர்வுகளை இறுதியிலேனும் புரிந்து கொள்வார்.
“பாறைகள் பாசிப்பிடித்து வழுக்குகின்றன. தடுக்கி விழுந்து விடாதீர்கள்” என்று டாக்டர் ரங்கநாதன் எச்சரித்தார். நான் பிடித்துக் கொள்வதற்காக அவர் தன் கையை நீட்டினார்.
மறுபடியும் பஸ்ஸில் ஏறி திரும்புவதற்கான நேரம் வந்தது. மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு சென்று தத்தம் இருக்கையில் காத்திருக்க வேண்டிய நேரம் வந்தது.
குசும் அதிர்ஷ்டக்காரர்களில் ஒருத்தி. அதிர்ஷ்டம் செய்தவர்கள் இங்கு பறந்து வந்து தங்கள் அன்புக்குரியவர்களே அடையாளம் காட்டி, அவர்களின் உடல்களோடு விமானத்தில் இந்தியாவுக்கு சென்று முறைப்படி இறுதிச்சடங்குகளை செய்வார்கள். மிதந்து வந்த மிகக் குறைவான ஆண்களில் சதீஷும் ஒருவர். ஹீத்ரோவில் இருந்த அலுவலகத்திலும் இங்கு மருத்துவமனையிலும் நாங்கள் பார்த்த புகைப்படங்கள் பெரும்பாலும் பெண்களுடையவை. பெண்களின் உடல்களில் கொழுப்பு அதிகமாக இருக்கும் என்று கன்னியாஸ்திரி ஒருவர் மிகச் சாதாரணமான குரலில் என்னிடம் சொன்னார். அவர்களால் ஆண்களை விட நன்றாக மிதக்க முடியுமாம்.
இன்று நான் தெருவில் சென்று கொண்டிருக்கும்போது இளம் மாலுமி ஒருவன் என்னை நிறுத்தினான். கடலில் சுறா மீன்கள் முதலில் தென்பட்ட இடத்திற்கு சென்று உடல்களை மீட்டெடுத்தவனாம். நான் தைரியமாக இருக்கிறேனா என்று என் முகத்தை பார்த்துக்கொண்டே அவன் இதை என்னிடம் சொன்னான். நான் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தவில்லை. அவன் உடைந்து போனான். “பரவாயில்லை. மிக்க நன்றி” என்றேன். டாக்டர் ரங்கநாதன் மூலமாக நான் சுறா மீன்களை பற்றி ஏற்கனவே கேட்டிருந்தேன். அவருடைய சீரான மனதில் அறிவியல் ஒரு புரிதலை கொண்டு வருகிறது. அது எவ்விதமான பயத்தையும் தனக்குள் தங்க விடுவதில்லை. அது சுறா மீன்களின் கடமை. ஒவ்வொரு மானுக்கும் ஒரு வேடன். ஒவ்வொரு மீனுக்கும் ஒரு மீனவன்.
ஐரிஷ் காரர்கள் கூச்ச சுபாவம் கொண்டவர்கள் இல்லை. அவர்கள் என்னை பார்த்ததும் ஓடிவந்து கட்டிக் கொண்டார்கள் .சிலர் அழுததும் உண்டு. இம்மாதிரியான உணர்ச்சி வெளிப்பாடுகளை டொரன்டோ தெருக்களில் காண முடியாது. பரிச்சய மற்றவர்களாக இருந்த போதிலும் நான் நெகிழ்ந்து போகிறேன். சிலர் பூக்களை கொண்டு வருவார்கள். கண்ணில் படுகிற இந்தியனிடம் அதை கொடுப்பார்கள்.
மதிய உணவுக்கு பிறகு, அங்கிருந்த நாட்களில் எனக்கு பழக்கமாயிருந்த காவலர் ஒருவர் என்னை அணுகினார். வினோத்துடன் ஒத்துப் போவது போல ஒரு படம் கிடைத்திருப்பதற்காக சொன்னார். வினோத் எவ்வளவு திறமையான நீச்சல் காரன் என்று நான் அவருக்கு புரிய வைத்தேன்.
“புகைப்படத்தை பார்க்கச் செல்லும்போது நான் உங்களுடன் இருப்பதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டபடியே டாக்டர் ரங்கநாதன் எனக்கு முன்னால் நடக்கத் தொடங்கினார். இந்த விஷயங்களில் அவர் ஒரு விஞ்ஞானியை போல நடந்து கொள்வதால் நான் அவருக்கு நன்றி கடன் பட்டது போல உணர்ந்தேன். அனைத்தையும் புதிய கோணத்தில் பார்க்க முடிந்தது. “அவர்கள் அதிசயங்களை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள் நாம் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார் அவர்.
முதல் ஒன்றிரண்டு நாட்களில் காவலர்கள் எங்களுக்கு ஒரு சமயத்தில் ஒரே ஒரு படத்தைத் தான் காண்பித்தார்கள். இப்போது அவர்களுக்கு அவசரம். இருக்கிற எல்லா படங்களையும் எங்கள் முன் விரித்தார்கள் – எல்லா சாத்திய கூறுகளையும், ஏன் நிகழக்கூடியவைகளையும் கூட அவர்கள் எங்கள் முன் விரித்தார்கள்.
புகைப் படத்தில் இருந்த சிறுவனின் முகம் கிட்டத்தட்ட வினோதைப் போலவே இருந்தது; அதே புத்திசாலித்தனமும் தீட்சண்யமும் நிறைந்த கண்கள்: ஆங்கில எழுத்து “வி” போன்று கீழே குவிகிற அதே அடர்ந்த புருவங்கள். ஆனால் இந்த சிறுவனின் முக ஜாடையும் அவனுடைய கன்னங்களும் உப்பியும், அகலமாகவும் நெகிழ்ந்தும் காணப்பட்டன.
இல்லை என்று மறுத்தேன். என் கவனம் மற்ற புகைப்படங்களின் மீது படிந்தது. வினோதை போன்ற தோற்றம் கொண்ட ஐந்து சிறுவர்களின் படங்கள் அங்கே இருந்தன.
எனக்கு ஆறுதல் தருவதற்கு ஆக நியமிக்கப்பட்டிருந்த கன்னியாஸ்திரி முதல் புகைப்படத்தை தன் விரல் நுனியால் தடவினார். “தண்ணீரில் வெகு நேரம் இருக்க நேரிட்டதால் அவர்கள் சற்றே பருமனாக தோன்றுகிறார்கள் கண்ணே. தோலுக்கு கீழே இருக்கும் தசைகள் சிதைந்து விடும் – அவர்கள் முதல் நாள் அப்படித்தான் சொன்னார்கள் – சரியாக ஞாபகப்படுத்தி கவனமாகப் பார். அது மிகவும் முக்கியம்” என்றார்.
“இது அவன் இல்லை. நான் அவனுடைய தாய். எனக்குத் தெரியும்”
“இவனை எனக்கு தெரியும்” என்று டாக்டர் ரங்கநாதன் திடீரென கேலரியின் பின்பகுதியிலிருந்து கூச்சலிட்டார். ” இவனையும்”. என் மகன்களை அடையாளம் காண நான் விரும்பவில்லை என்பதை அவர் புரிந்து கொண்டது போலத் தோன்றியது. “இவர்கள் குட்டி சகோதரர்கள். இவர்களும் மான்ட்ரியாலைச் சேர்ந்தவர்கள் தான்”. எனக்கு அழத் தோன்றவில்லை மாறாக நான் பரவசமாக உணர்ந்தேன். ஹோட்டல் அறையில் வைத்திருந்த என் சூட்கேஸ் மகன்களின் உலர்ந்த ஆடைகளால் நிரம்பி கனத்தது.
காவலர் அழ ஆரம்பித்தார். “மன்னித்து விடுங்கள் உங்கள் மகன்களை ஒத்த உருவங்களின் புகைப்படங்கள் கிடைத்துவிட்டதென நான் தவறாக நினைத்து விட்டேன்” என்று வருத்தத்துடன் கூறினார்.
எங்களுக்கு முன்னால் கன்னியாஸ்திரியும் பின்னால் காவலரும் வர துரதிர்ஷ்டசாலியான நாங்கள் என் மகன்களின் உடலை பெற முடியாமல் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கேலரியிலிருந்து வெளியே வந்தோம்.
அயர்லாந்திலிருந்து எங்களில் பெரும்பாலானோர் இந்தியாவுக்கு சென்றோம். குசுமுடன் நானும் அவள் சுங்கச் சோதனையை விரைவாக முடிக்க உதவும் எண்ணத்துடன் நேரடி விமானத்தில் மும்பை சென்றேன். ஆனால் சீருடையிலிருந்த அதிகாரி ஒருவருடன் எங்களுக்கு வாக்குவாதம் மூண்டது. அவருடைய முகத்தில் பெரிய பெரிய கொப்பளங்கள் இருந்தன. நாங்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது கொப்பளங்கள் வேர்வையில் மினுங்கின. அவர் குசும் வரிசையில் காத்திருக்க வேண்டும் எனக் கூறினார். தனது மேலதிகாரி தேநீர் இடைவேளையில் சென்றிருக்கையில் அவர் தானாக எந்த முடிவையும் எடுக்கத் தயங்கினார். குசும் பிணப் பெட்டிகளை விட்டு நகர விரும்பவில்லை. வெளியே சுட்டுப் பொசுக்கும் வெயிலில், ஆவி பறக்கும் காருக்குள் டயாபடீஸால் பாதிக்கப்பட்ட என் பெற்றோர் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பது தெரிந்த போதிலும் என்னால் அவளை விட்டு அகல மனம் வரவில்லை.
கொப்புளங்கள் மினுமினுக்கும் முகம் கொண்ட அந்த அதிகாரியை பார்த்து நான் வேசிமகனே என்று கத்திக் கூச்சலிட்டேன். மற்ற பயணிகள் அருகே நெருங்கி வந்தார்கள். “இந்த பிணப் பெட்டிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை நாங்கள் கடத்திக் கொண்டு வந்திருக்கிறோம் என்று நினைக்கிறாயா” என்றேன்.
ஒரு காலத்தில் நாங்களும் நல்ல முறையில் வளர்க்கப்பட்ட குடும்பப் பெண்களாகத் தான் இருந்தோம்; தலையை மறைத்த முந்தானையை கீழே நழுவ விடாமல் பார்த்துக் கொண்டு கருத்துடன் கடமையாற்றும் மனைவிகளாகத்தான் இருந்தோம், எங்கள் குரல்களும் சங்கோஜம் நிறைந்த இனிய குரல்களாகவே இருந்தன.
இந்தியாவில் மீண்டும் ஒருமுறை நான் பணக்கார நோய் வாய்ப்பட்ட பெற்றோர்களின் ஒரே மகளாக மாறினேன். பழைய குடும்ப நண்பர்கள் மரியாதை நிமித்தம் சந்திக்க வந்தார்கள். சிலர் சீக்கியர்கள். நான் உள்ளுக்குள் தன்னிச்சையாக நெளிந்தேன். என் பெற்றோர் முற்போக்கு வாதிகள். சில நபர்களுக்காக அவர்கள் முழு இனத்தையும் குறை கூறுபவர்கள் இல்லை.
கனடாவில் இப்போது அது வேறு விதமாக மாறி இருந்தது.
“இன்னும் கொஞ்ச நாட்கள் தங்கியிறேன்” அம்மா கெஞ்சினாள். “கனடா குளிர் பிரதேசம். நீ ஏன் அங்கு தன்னந்தனியாக இருக்க நினைக்கிறாய்?” என்னால் மறுக்க முடியவில்லை.
மூன்று மாதங்கள் கழிந்தன. பிறகு மேலும் ஒரு மாதம் கழிந்தது.
“நீ எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கியிருப்பதை விக்ரம் ஒருபோதும் விரும்பி இருக்க மாட்டான்” அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள் என் கணவரை அவர்கள்விக்ரம் என்றே அழைத்தார்கள். டொரன்டோவில் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் “ராட் “என்றோ “க்ரிஸ்” என்றோ சுருக்கி அழைக்க வசதியாக அவர் தன் பெயரை “விக்” என்று மாற்றிக் கொண்டிருந்தார். “இறந்தவர்கள் நம்மை விட்டு விலகுவதில்லை” என்றார்கள்.
பணக்கார ஜமீன்தாரின் செல்லப் பெண்ணான என் பாட்டி 16 வயதில் விதவையான போது துருப்பிடித்த பிளேடால் தன் தலையை மழித்துக் கொண்டாள். என் தாத்தா குழந்தைப் பருவ டையபடிஸ் காரணமாக 19 வயதிலேயே இறந்து விட்டாராம். பாட்டி தன்னை ராசி இல்லாதவள் எனக் கருதினாள். என் அம்மா பெற்றோர்கள் இல்லாமல் வளர்ந்தவள். அவளுடைய உண்மையான தாய் மாளிகை போன்ற பெரிய வீட்டின் பின்புறம் குடிசையில் படுத்துறங்கி வீட்டு பணியாளர்களுக்காக சமைக்கப்பட்ட உணவை உண்டு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கையில் அவளைக் குறித்த கவலை ஏதும் இல்லாத மாமனால் வளர்க்கப்பட்டவள். அம்மா பகுத்தறிவுவாதியாக வளர்ந்தாள். என் பெற்றோர் சிந்தனையற்ற வன்முறையை எதிர்த்தார்கள்.
ஜமீன்தாரின் மகள் வேதச் சடங்கு முறைகளில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தாள். என் பெற்றோர் அவற்றை எதிர்த்தார்கள். இரு வெவ்வேறு அறிவு முறைகளுக்கிடையே நான் சிக்கிக் கொண்டேன். 36 வயதில், எதையும் புதிதாக தொடங்க வயது அதிகமானவளாகவும் அதேசமயம் அனைத்தையும் கைவிட்டு விட வயது குறைந்தவளாகவும் இருந்தேன். என் கணவரின் ஆன்மாவை போலவே நானும் வெவ்வேறு உலகங்களுக்கிடையே திரிந்து கொண்டிருந்தேன்.
மறதி நோயால் பாதிக்கப்பட்டு தொண்டையில் சிக்கிக் கிடக்கும் வார்த்தைகளை வெளியில் சொல்ல முடியாதவர்கள் போல, நாங்கள் பயணங்களை மேற்கொண்டோம். இறுக்கமாக கட்டமைக்கப்பட்ட ராணுவப்படை போல வேலைக்காரர்களிடனும் ஏழை உறவினர்களுடனும் நாங்கள் பயணப்பட்டோம். மலைவாசஸ்தலங்களுக்கும் கடற்கரையை ஒட்டிய ஓய்வு விடுதிகளுக்கும். தூசி படிந்த ஜிம்கானா கிளப்பில் பிரிட்ஜ் விளையாடினோம். பருத்த குட்டையான குதிரைக் குட்டிகளின் மீதேறி மண்மேடுகளால் ஆன மலைகளில் பயணித்தோம். பால் ரூமில் நடந்த தேநீர் விருந்துகளில் எங்களை இரண்டு முறை சுழல வைக்க அனுமதித்தோம். முன்பு நேரம் இல்லாத காரணத்தால் போயிராத புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றோம். வாரணாசியிலும் காளிகாட்டிலும் ரிஷிகேஷிலும் ஹரித்வாரிலும் பண்டிதர்களும் ஜோசியர்களும் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால் எனக்கு பேரண்ட ஆறுதலை அளிப்பதாக சத்தியம் செய்தார்கள்.
எங்களில் மனைவி இழந்தவர்களுக்கு மணமகள்களை ஏற்கனவே காட்டத் தொடங்கியிருந்தார்கள். சம்பிரதாயங்களையும் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களின் வற்புறுத்தல்களையும் அவர்களால் தட்டிக் கழிக்க முடியவில்லை. அவர்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மனைவியை காப்பாற்றுவது ஒரு ஆணின் கடமை. காட்டப்பட்ட புது மனைவிகள் குழந்தைகள் இருக்கும் இளம் விதவைகள் அல்லது கைவிடப்பட்டவர்கள், ஆனால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நல்லவர்களாக இருந்திருக்கக்கூடும். ஆனால் ஆண்கள் ஏனோ அவர்களை புறக்கணித்தார்கள். விட்டு விட்டு கேட்கிற இந்திய தொலைபேசிகளில் வசதியான படித்த வெற்றிகரமான நாற்பது வயது ஆண்களிடமிருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. “என் பெற்றோர் எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். ஒரு மாதத்திற்குள் அவர்கள் ஒரு குடும்பத்தை புதைத்து விட்டு புது மணமகளுடன் அல்லது புது குடும்பத்துடன் கனடாவுக்கு திரும்புவார்கள்.
அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. இங்கு யாரும் என்னை போன்ற அதிர்ஷ்டக் கட்டைக்கு மறு மணம் செய்விப்பது குறித்து பேசவில்லை.
இவ்வாறு இந்த பயணத்தில் ஆறு மாதங்களும் மூன்று நாட்களும் கழிந்த பிறகு ஒரு நாள், ஹிமாலயத்தின் ஒரு சிறு கிராமத்தில் இருந்த ஆளரவமற்ற கோவிலில், கிராம தேவதைக்கு பூக்களையும் இனிப்புகளையும் படைத்துக் கொண்டிருந்தபோது, என் கணவர் என்னருகே இறங்கி வந்தார். இற்றுப் போன கிழிசல் ஆடையை அணிந்த சாது ஒருவரின் அருகே அவர் தரையில் கால்களை மடித்து அமர்ந்திருந்தார். நான் கடைசி முறையாக அவரைத் தழுவிய போது அணிந்திருந்த அதே வனிலா நிற சூட்டை விக்ரம் அணிந்திருந்தார். சாது நெய் விளக்கில் பூவிதழ்ளைத் தூவினார். சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தபடியே முகத்தை சுற்றிக் கொண்டிருந்த ஈக்களை விரட்டினார். என் கணவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“நீ மிகவும் அழகாக இருக்கிறாய்” என்று அவர் ஆரம்பித்தார். “இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”
“நான் இங்கேயே இருக்கட்டுமா?” என்று கேட்கிறேன். அவர் ஒன்றும் பேசாமல் வெறுமனே சிரித்தார். அதற்குள் அவருடைய உருவம் தேய்ந்து மறைய ஆரம்பித்தது. “நாம் இருவரும் சேர்ந்து ஆரம்பித்ததை நீ தனியாக முடிக்க வேண்டும்” அவருடைய வாயில் கடல்பாசி எதுவும் இருக்கவில்லை. நாங்கள் செல்வச் செழிப்புடன் பிறர் பொறாமைப்படும்படியாக வாழ்ந்த காலத்தில் பேசியதை போலவே இப்போதும் அவர் மிக வேகமாகப் பேசினார். சில நொடிகளில் அவர் மறைந்து விட்டார்.
சாம்பிராணி மற்றும் ஊதுபத்தி புகை படிந்த, நெய்விளக்குகள் எரியும் ஜன்னலற்ற கர்ப்ப கிரகத்தில், வேர்வை படிந்த கை ஒன்று என் ரவிக்கையைத் தடவியது.
நான் கூச்சலிடவில்லை. சாது தன் ஆடையை சரி செய்து கொண்டார். விளக்குகள் மெல்லிய ஓசையுடன் படபடத்தன.
கோவிலை விட்டு நாங்கள் வெளியே வந்ததும் அம்மா என்னிடம் ” நீ அங்கு ஏதாவது வித்தியாசமாக உணர்ந்தாயா?” என்று கேட்டாள்.
அம்மாவுக்கு பேய் பிசாசு, அமானுஷ்ய கனவுகள், சாதுக்கள் போன்றவைகளிலெல்லாம் நம்பிக்கை இல்லை.
“இல்லை. எதுவும் உணரவில்லை” என்று நான் பொய் சொன்னேன்.
அம்மா என்னை எப்போதைக்குமாய் இழந்து விட்டதை எப்படியோ புரிந்து கொண்டாள். இன்னும் சில நாட்களில் நான் இங்கிருந்து புறப்பட்டு விடுவேன் என்பதையும் அம்மா புரிந்து கொண்டிருந்தாள்.
குசும் தன்னுடைய வீட்டை விற்க விளம்பரம் செய்திருந்தாள். ஹரித்வாரில் ஒரு ஆசிரமத்தில் அவள் தங்க விரும்பினாள். அவள் ஹரிதுவாருக்கு வர வேண்டும் என்பது அவளுடைய குருவின் அறிவுரை. அவளுடைய குரு இரண்டு ஆசிரமங்களை நடத்தி வந்தார். ஹரித்வாரில் ஒன்றும் இங்கு கனடாவில் இன்னொன்றும்.
“தப்பித்து ஓடாதே” என்றேன் அவளிடம்.
“நான் எங்கும் ஓடவில்லை. நான் அக அமைதியை தேட விரும்புகிறேன்” என்றாள். அவளுடைய பங்கிற்கான இன்சூரன்ஸ் தொகை கிடைத்ததும் அதை வைத்து அவள் ஹாலிவுட்டில் யோகா மற்றும் ஏரோபிக் பயிற்சிகள் செய்யும் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகக் கூறினாள். அவள் அனுப்பும் மிகத் துணிச்சலான போஸ்ட் கார்டுகளை நான் மறந்து கூட மேஜையின் மீது விட்டுச் செல்வதில்லை. அவளுடைய அம்மா அவளிடமிருந்தும் உலக திடமிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டிருந்தாள்.
நாங்கள் மற்றவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். அதுதான் முக்கியம். இப்போது நம்மிடம் இருப்பது இந்த பேச்சு மட்டும்தான் என்றார் டாக்டர் ரங்கநாதன். அவரும் குடும்பத்தினரின் வற்புறுத்தல்களை மீறி தன் வேலையை கவனிக்க தனியாக மாண்ட்ரியாலுக்கே திரும்பி வந்துவிட்டார். மற்ற “உறவினர்களை” விட வேறு யாரிடம் இயல்பாக மனம் திறந்து பேசிவிட முடியும் என்றார். “நாம் உருக்கப்பட்டு முற்றிலும்வேறொரு நபராக மாறிவிட்டோம்” என்றார்.
வாரத்தில் இரு முறை அவர் மாண்ட்ரியாலிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமை இரவும் சனிக்கிழமை மதியமும் என்னை அழைத்துப் பேசுவது வழக்கம்.. அவர் வேலையை மாற்றிக் கொண்டு ஒட்டாவா செல்வதாக இருந்தார். ஆனால் ஒட்டாவா 100 மைல்கள் தள்ளி இருந்தது. அதனால் அவர் தினசரி 220 மைல்கள் வண்டி ஓட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம். வீட்டை விற்கும் எண்ணத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருடைய வீடு ஒரு கோவில் என்றும், வீட்டின் பெரிய படுக்கை அறையில் இருந்த பிரம்மாண்டமான கட்டில் தெய்வத்தின் சன்னதி என்றும் அவர் கூறினார். அவர் மடக்கு கட்டிலில் தனியாக உறங்க ஆரம்பித்தார். உண்மையான பக்தன்.
**********
இன்னும் சில வெறித்தனமான மனப்பிறழ்வுக்கு ஆளான ‘உறவினர்கள்’. இருந்தார்கள். ஜூடித் டெம்பிள் ரன் தயாரித்து வைத்திருந்த ‘உதவி தேவைப்படுபவர்கள்’ மற்றும் ‘ஒப்புக் கொண்டவர்களின்’ பட்டியல் கிட்டத்தட்ட சரிசமமாக இருந்தது. ‘ஒப்புக் கொள்ளுதல்’ என்றால் தங்கள் குடும்பத்தினரை ‘இறந்த காலத்தில்’ குறிப்பிடுதல் மற்றும் தன் வாழ்க்கையை மேலெடுத்துச் செல்வதில் சுறுசுறுப்பாக இயங்குதல். செனகாவிலும் ரையர்சனிலும் இருந்த கல்லூரிகளில் இதற்கான விசேஷ பாடத்திட்டங்கள் இருந்தன. ஜூடித்தின் பளபளக்கும் கைப்பெட்டிக்குள் பல கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் அடங்கிய விண்ணப்பங்களும் எங்கள் உதவி தேவைப்படும் பண்பாட்டுக் குழுக்களின் அட்டவணையும் இருந்தன. “மிகப் பிரமாதமாக வேலை செய்திருக்கிறாய்” என்று நான் அவளிடம் சொன்னேன்.
எனக்கு பதில் அளிக்கும் விதமாக “துயர மேலாண்மை குறித்த பாட புத்தகங்களில் – நான் அவளுடைய நெருங்கிய தோழியாகி விட்டேன் என்பதை உணர்ந்தேன் – துயரத்திலும் வினோதமான வெறித்தனங்களை வெளிக்காட்டாத, சிலரில் ஒருத்தி – ” பல நிலைகளை கடந்து செல்ல வேண்டும்” ஜூடித் தொடர்ந்தாள். “நிராகரிப்பு, மன அழுத்தம், ஏற்றுக்கொள்ளுதல், மறு சீரமைப்பு”. அவள் ஒரு அட்டவணையை தயாரித்திருக்கிறாள். துயரச் சம்பவம் நடந்து ஆறு மாதம் கழிந்த பின்பும் நம்மில் எவருமே உண்மை நிலையை நிராகரிக்கவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர்தான் தமது வாழ்க்கையை மறு சீரமைப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். “மன அழுத்தம் தோய்ந்த ஏற்பு” என்கிற கமவெளியைத்தான் நாங்கள் தொட்டிருந்தோம். மறுமணம் என்பது மறு சீரமைப்பில் முக்கியமான படி.(ஒரு சில ஆண்கள் வெகு சீக்கிரம் புதிய குடும்பங்களை ஏற்றுக் கொண்டதைப் பார்த்து அவள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தாள்). வீட்டை விற்பது, வேலையை மாற்றிக் கொள்வது அல்லது வசிக்கும் இடத்தை மாற்றிக் கொள்வது ஆரோக்கியமானது.
என் குடும்பம் என்னை சுற்றித்தான் இருக்கிறது என்றும் புராணங்களில் வருவது போல அவர்கள் உருமாறி விட்டார்கள் என்றும் ஜூடித்துக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்? என்னை அமைதியானவளாகவும் நிலைமையை ஏற்றுக் கொண்டவளாகவும் அவள் கருதினாலும் என்னிடம் ஒரு வேலையோ தொழிலோ இல்லாதது குறித்து அவள் கவலைப்பட்டாள். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்னை விட மோசமான நிலையில் இருந்தார்கள். என்னுடைய பகல்களும் இரவுகளும் சிலிர்ப்பூட்டுபவையாகவும் பரபரப்பானவையாகவும் இருக்கின்றன என்று என்னால் அவளிடம் ஒருபோதும் சொல்ல முடியாது.
அவளால் நெருங்கவே முடியாத குடும்பங்களுக்கு உதவும்படி என்னை கேட்டுக் கொண்டாள். வயதான தம்பதியினர். இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவர்களுடைய மகன்கள் அவர்களை பஞ்சாபில் இருந்த கிராமத்திலிருந்து இங்கு அழைத்து வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயர்களிலிருந்து அவர்கள் சீக்கியர்கள் என்று நான் தெரிந்து கொண்டேன். ஜூடித் டெம்பிள் டன், சில மொழிபெயர்ப்பாளர்களை அழைத்துக்கொண்டு அவர்களை இரண்டு முறை சந்தித்திருந்தாள். அயர்லாந்து செல்ல இலவச விமான பயணச் சீட்டுகள், வங்கி விண்ணப்பங்கள், அதிகாரப் பத்திர படிவங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் கையெழுத்திட மறுத்து அவர்களுடைய சிறிய வீட்டை விட்டு வெளியே வர சம்மதிக்கவில்லை.
அவர்களுடைய “மகன்களின்” பணம் வங்கியில் தேங்கிக் கிடக்கிறது. அவர்களுடைய மகன்கள் முதலீடு செய்த அப்பார்ட்மெண்டுகள் வாடகைக்கு குடியிருந்தவர்களால் அழிக்கப்பட்டு விட்டன. அங்கிருந்த மரச்சாமான்களும் விற்கப்பட்டு விட்டன.
ஏதேனும் காகிதங்களில் கையெழுத்திட்டாலோ அல்லது பண உதவி பெற்றுக் கொண்டாலோ, கம்பெனியோ அல்லது நாடோ அவர்களுக்கு கடமைப்பட்டிருப்பதிலிருந்து தன்னை விடுவித்து க் கொண்டு விடும் என அவர்கள் பயந்தார்கள். அவர்கள் இதுவரை பார்த்திராத இடத்துக்கு செல்வதற்கான இரண்டு விமான டிக்கெட்டுகளுக்காக அவர்கள் தங்கள் மகன்களை விற்றுவிடுவதைப் போல நினைத்தார்கள்.
அந்த உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் இந்தியர்களும், மேற்கிந்தியர்களும், கீழை நாட்டைச் சேர்ந்த சிலரும் வசித்து வந்தார்கள். அந்தக் கட்டிடத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிலையத்தில் புடவை அணிந்த பெண்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். வண்டிகளை நிறுத்துமிடத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். கட்டிடத்திற்குள்ளேயிருந்த எழுந்த வெங்காயம் வதக்கும் புகையில் எனக்கு லேசாக மூச்சு திணறியது. நெய்யில் வெங்காயம் வதங்கும்போது எழும் அதற்கே உரிய மனமும் இந்திய தன்மையும் என்னைத் தாக்கியது. ஆனால் ஜூடித் டெம்பிள் டன் தடுமாறாமல் தொடர்ந்து தகவல்களை அளித்து வந்தாள். வெகு விரைவிலேயே அவர்கள் தங்கும் இடத்தையும் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளையும் இந்த ஏழை முதியவர்கள் இழக்கவிருந்தார்கள்.
“அவர்கள் சீக்கியர்கள். அவர்கள் ஒரு இந்து பெண்மணியிடம் மனம் விட்டு பேச சம்மதிக்க மாட்டார்கள்” என்று நான் ஜூடித்திடம் சொன்னேன். நான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தாடியையும் தலையைச் சுற்றி கட்டிய டர்பனையும் பார்த்தால என் உடல் இறுகிவிடுகிறது என அவளிடம் என்னால் சொல்ல முடியவில்லை.
இந்த புதிய நாட்டில் ஒரு காலத்தில் நாங்கள ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை வைத்திருந்ததை நினைவு படுத்திக் கொண்டேன். அப்போதெல்லாம் இந்த புது நாட்டை குறித்து தான் நாங்கள் அதிகம் கவலைப்பட்டோம்.
இரண்டு அறைகளும் இருட்டாகவும் புழுக்கமாகவும் இருந்தன. விளக்குகள் அணைந்திருக்க, ஒரு எண்ணெய் விளக்கு காபி டேபிளின் மீது படபடத்துக் கொண்டிருந்தது. கூனல் விழுந்திருந்த முதிய பெண்மணி எங்களை உள்ளே அழைத்தார். அவருடைய கணவர் இடுப்பு வரை தொங்கும் முடிக்கு எண்ணெய் தடவி டர்பனால் கட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி சமையலறைக்கு விரைந்தாள். என்னால் உடனடியாக இந்திய வீட்டின் பரிச்சயமானஓசைகளைக் கேட்க முடிந்தது. குழாய் நீர் தேநீர் ஜாடியை நிரப்பிக் கொண்டிருந்தது.
பயத்தினாலும் காசோலையை நிரப்ப தெரியாததினாலும் அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்தி இருக்கவில்லை. தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. மின்சாரம், கேஸ் மற்றும் தண்ணீரும் வெகுவிரைவிலேயே நிறுத்தப்படும். அவர்களுடைய மகன்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்கள். அவர்கள் மிக நல்ல மகன்கள். அவர்கள் நிறைய சம்பாதித்து பெற்றோரை மிக நன்றாக கவனித்துக் கொண்டார்கள் என்று அவர்கள் ஜூடித்திடம் சொல்லியிருந்தார்கள்.
நாங்கள் ஹிந்தியில் பேசினோம். அவர்கள் விமான விபத்து பற்றி எதுவும் கேட்கவில்லை. நான் அதைப்பற்றி பேசலாமா என நினைத்தேன். வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமே நான் அங்கு வந்திருக்கிறேன் என்று தெரிய நேரிட்டால் அவர்கள் அவமானமாக உணர்வார்கள். என்னை விட சிறப்பாக வேலை செய்ய டொரன்டடோவில் ஆயிரக்கணக்கான பஞ்சாபி பேசும் சீக்கியர்கள் இருந்தார்கள். எனவே, நான் அந்த முதிய பெண்மணியிடம் நானும் என் கணவரையும் மகன்களையும் விபத்தில் இழந்துவிட்டேன் என்று கூறினேன்.
அவருடைய கண்களில் உடனடியாகக் கண்ணீர் தளும்பியது. முதியவர் ஆசி வழங்குவதைப் போல எதையோ முணுமுணுத்தார். “கொடுப்பவன் கடவுள்; எடுத்துக் கொள்பவனும் அவனே என்றார்.
“மனிதர்கள் தான் அழிக்கிறார்கள். அவர்கள் எதையும் திரும்ப கொடுப்பதில்லை” என்று நான் சொல்ல நினைத்தேன். “என் மகன்களும் கணவரும் திரும்பி வரப்போவதில்லை. நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றேன்.
இப்போது அந்த மூதாட்டி பதிலளிக்கும் விதமாக ” ஆனால் யாரை சொல்ல முடியும்? மனிதன் மட்டுமே இவற்றையெல்லாம் முடிவு செய்வதில்லை.” என்றார். முதியவர் மனைவி சொன்வதை ஆமோதிப்பது போல தலையசைத்தார்.
ஜூடித் வங்கி ஆவணங்களைக் குறித்து கேட்டாள். ஒரே ஒரு கையெழுத்து போட்டால் போதும் அவர்களுக்கென ப்ரத்யேக மாகாண அறங்காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் அவர்களுடைய எல்லா வரவு செலவு கணக்குகளையும் கவனித்துக் கொள்வதோடல்லாமல், அவர்களுடைய பணத்தை முதலீடு செய்து அவர்களுக்கு மாதா மாதம் பென்ஷன் தொகையும் வரும்படி செய்வார்.
“உங்களுக்கு இந்த பெண்மணியை தெரியுமா?” என்று நான் அவர்களிடம் கேட்டேன்.
முதியவர் மேஜையிலிருந்து கையை எடுத்து திருப்பி பதிலளிப்பதற்கு முன் ஒவ்வொரு விரலாக பரிசீலிக்க தொடங்கினார். “இந்த இளம் பெண் எப்போதும் இங்கே வருகிறாள். அவளுக்கு நாங்கள் தேனீர் தயாரித்துக் கொடுப்போம். நாங்கள் கையெழுத்து இடுவதற்காக சில காகிதங்களை அவள் எங்களிடம் விட்டுச் செல்வதுண்டு. அறையின் மூலையில் ஒரு கோப்பில் வைக்கப்பட்டிருந்த காகிதங்களின் மீது அவரது பார்வை பதிந்தது. “வெகு சீக்கிரமே எங்களிடம் தேயிலைப் பொடி தீர்ந்துவிடும். அப்போது அவள் இங்கு வருவதை நிறுத்தி விடுவாளா?”
மூதாட்டியும் இப்போது சேர்ந்து கொண்டார். “அக்கம் பக்கத்து வீட்டாரிடம் நான் பேசிப் பார்த்தேன் அவர்களைத் தேடி எந்த ஆங்கிலேயரும் வருவதில்லை. நாங்கள் மட்டும் அப்படி என்ன செய்துவிட்டோம்?”
“அது அவளுடைய வேலை” நான் புரிய வைக்க முயற்சி செய்தேன். “வெகு சீக்கிரம் உங்களிடம் தங்க இடமோ மின்சாரமோ கேஸோ இருக்காது. அதனால் தான் அரசாங்கம் கவலைப்படுகிறது” என்றேன்.
“அரசாங்கத்துக்கு சேர வேண்டிய பணத்தை கட்டாயம் தந்து விடுவோம். அவளைக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள் நாங்களும் மதிப்புக்குரியவர்கள் தான்”
அரசாங்கம் அவர்களுக்கு பண உதவி செய்ய விரும்புகிறது. அவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க விரும்பவில்லை என்று நான் புரிய வைக்க முயற்சி செய்தேன்.
முதியவர் கையை உயர்த்தினார் “அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். எங்களுக்கு அது பழக்கம் தான். அதனால் பிரச்சனை எதுவும் இல்லை”
“நாங்கள் வலுவானர்கள். இதை அவளிடம் சொல்லிவிடு” என்றார் மூதாட்டி.
“இத்தனை கருவிகள் யாருக்கு வேண்டும்? இவை எல்லாம் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பவை. பிரகாசமான விளக்குகள், பொசுக்கி தள்ளும் நாட்களில் செயற்கை குளிர் காற்று, குளிர்ந்த உணவு, நான்கு கேஸ் அடுப்புகள். இவையெல்லாம் யாருக்கு வேண்டும்? கடவுள் பார்த்துக்கொள்வார். அரசாங்கம் எதுவும்தர வேண்டாம்”
“எங்கள் மகன்கள் திரும்பி வந்ததும்…” மூதாட்டி பேச ஆரம்பித்தார். முதியவர் பல்லை கடித்துக் கொண்டு “பேச வேண்டியதை நிறைய பேசியாயிற்று” என்றார்.
ஜூடித் இடைமறித்தாள். ” உங்களால் அவர்களுக்கு புரிய வைக்க முடிந்ததா?”. அவளுடைய கார்டோவான் கைப்பையின் மூடிகள் அந்த அமைதியான அப்பார்ட்மெண்டில் பட்டாசு போல சத்தம் எழுப்பின. சட்ட ஆவணங்களை அவள் காபி டேபிளின் மீது அடுக்கினாள். “அவர்களால் தங்கள் பெயரை எழுத முடியாவிட்டால் கூட பரவாயில்லை. X என்று பதிந்தால் கூட போதும். நான் அவர்களிடம் ஏற்கனவே இதைச் சொல்லியிருக்கிறேன்”
மூதாட்டி சமையலறைக்குச் சென்று தேநீர் கெட்டிலையும்ம் இரண்டு கோப்பைகளையும் எடுத்துக் கொண்டு வந்தார். “இந்த வேலையில் முதலில் பழுதடையப்போவது என்னுடைய சிறுநீரக்ஷப்பையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்” ஜூடித் புன்னகைத்துக் கொண்டு சொன்னாள். “இவர்களுக்கு எப்படியாவது புரிய வைத்து சம்மதிக்க வைத்தால் நன்றாக இருக்கும். தேநீருக்காக என் சார்பில் நன்றி சொல்லுங்கள். இவர்கள் மிகவும் கருணையான மனம் கொண்டவர்கள் என்றும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள்” என்றாள்.
நான் ஜூடித்தைப் பார்த்து தலையசைத்து விட்டு அவர்களிடம் ஹிந்தியில் ” தேநீருக்காக நன்றி தெரிவிக்க சொன்னாள். நீங்கள் விருந்துபசாரத்தில் மிகச் சிறந்தவர்கள் என்றும் அவள் சொல்லச் சொன்னாள்” என்றேன். ஆனால் நான் சொன்னது எதுவும் ஜூடித்துக்கு புரியவில்லை.
நான் அவர்களை சிரிக்க வைக்க விரும்பினேன். என் மகன்களும் கணவரும் முன்பிருந்ததை விட இன்னும் அதிகமாக என்னுடன் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவளிடம் சொல்ல விரும்பினேன். முதியவரின் கண்களில் தெரிந்த பிடிவாதமான செய்தியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. “என்னால் முடிந்தவரை இந்த பெண்மணியை நான் காப்பாற்றி இருக்கிறேன். என்னிடம் மிஞ்சி இருப்பது இவள் ஒருத்தி தான். என்னிடமிருந்து என்ன எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை எடுத்துக்கொள் அல்லது கொடுத்துச் செல். ஆனால் அதற்காக நான் காகிதங்களில் கையெழுத்து போட மாட்டேன். நான் ஏ’ற்றுக் கொண்டு விட்டதைப் போல’ பாசாங்கு செய்ய மாட்டேன்.
காரில் திரும்பும்போது ஜூடித் என்னிடம், ” எனக்கு என்ன பிடிக்கவில்ல தெரியுமா? அவர்கள் நிச்சயம் நல்லவர்கள் தான். ஆனால் அவர்களுடைய பிடிவாதமும் அறியாமையும் எனக்கு எரிச்சல் மூட்டுகிறது. காகிதத்தில் கையெழுத்திடுவதை அவர்களுடைய மகன்களின் மரண ஆணையில் கையெழுத்திடுவது என்று அவர்கள் கருதுகிறார்கள். இல்லையா?” என்றாள்.
நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு வந்தேன். “எங்கள் பண்பாட்டு முறையில் நம்பிக்கை இழக்காமல் இருப்பது பெற்றோரின் கடமை” என்று அவளிடம் கூற விரும்பினேன்.
“ஷைலா, நாம் அடுத்து சந்திக்கப் போகிற பெண்மணி உண்மையிலேயே மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். இரவும் பகலும் அழுது கொண்டே இருக்கிறார். மருத்துவ உதவிகளை மறுத்து விடுகிறார். இப்படியே இருந்தால் நாம் அவரை…..”
நான் இடைமறித்து, “நான் சப்வே அருகில் இறங்கி கொள்கிறேன்” என்றேன். “என்ன சொன்னீர்கள்?” என்றாள். அவளுடைய நீல நிற கண்கள் என்னை வெறித்துப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. நான் அவளை மதிக்கவில்லை என்று நினைக்காவிட்டாலும், அதை அவள் விரும்பவில்லை என்பது தெரிந்தது. நான் இறங்க வசதியாக வண்டியின் வேகத்தை குறைத்து மெதுவாக நிறுத்தினாள். அவளுடைய குரலில் குற்ற உணர்ச்சி தெரிந்தது “நான் ஏதேனும் தவறாக சொல்லி விட்டேனா? தவறாக செய்துவிட்டேனா?”
நான் பல்வேறு வகைகளில் அவளுக்கு பதில் அளித்திருக்க முடியும். ஆனால் நான் மௌனமாக இருக்க முடிவெடுத்தேன். “ஷைலா, நாம் இதுகுறித்து விரிவாக பேசலாம்” என்றாள். நான் காதில் வாங்கிக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கி கதவை ஓசைப்பட மூடினேன்.
ஒரு மனைவியும் தாயும் புது நாட்டில் புது வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அந்த வாழ்க்கை பாதியிலேயே நின்று விடுகிறது. இருந்த போதிலும் அவளுடைய கணவர் “நாம் தொடங்கியதை முடி” என்கிறார். அரசியல் மற்றும் மதம் சார்ந்த சச்சரவுகளை தவிர்க்க எண்ணி நாங்கள் பாதி உலகத்தை கடந்து இங்கு வந்திருந்தோம். ஆனால் அதே காரணங்களுக்காக இப்புது உலகில் நாங்கள் தான் முதலில் உயிர் துறக்க வேண்டி இருந்தது. நாங்கள் எதை ஆரம்பித்தோம் என்றோ அதை எப்படி முடிக்க வேண்டும் என்றோ எனக்குத் தெரியவில்லை. நான் உள்ளூர் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போது அது ஒரு வெடிகுண்டு விபத்து தான் என்றாவதுஅவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கருணையுடன் பதிலளித்தார். ஆனால் கூடவே ஒரு சவாலையும் முன் வைத்தார். “நீங்கள் ஏதேனும் மாற்றத்தை உண்டாக்க விரும்புகிறீர்களா? எனில், ஏதேனும் ஒரு இயக்கத்தோடு இணைந்து கொள்ளுங்கள். என்னுடைய பிரச்சார இயக்கங்களில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். இந்திய வாக்காளர்களை அரசியல் படுத்த முயற்சி செய்யுங்கள்.”
என் கணவரின் பழைய வக்கீல் அறக்கட்டளை ஒன்றை நிறுவ உதவினார். விக்ரம் அதிகம் சேமிப்பவர். கவனமாக முதலீடு செய்பவர். மகன்களின் போர்டிங் ஸ்கூல் மற்றும் காலேஜ் கட்டணத்திற்காக அவர் சேமித்து வைத்திருந்தார். நான் எங்கள் பிங்க் வீட்டை வாங்கிய விலைக்கு நான்கு மடங்கு விலையில் விற்றேன். புறநகர் பகுதியில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட்டை வாங்கிக் கொண்டேன். ஏதாவது தொண்டு நிறுவனத்துக்கு ஆதரவளிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
நாங்கள் கருத்த வானமும் பனி மூடிய நடைபாதகளும் நிறைந்த டொரன்டோவின் கடும் குளிர் காலத்தின் மத்தியில் இருந்தோம். நான் வீட்டுக்குள்ளேயே தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். எனது நிலைமையை நான் ஆராய்ந்து பார்த்தேன். முடிந்த வரை எப்படி சிறப்பாக வாழ்வது, பல வருடங்களுக்கு முன் நாங்கள் ஆரம்பித்தவற்றை எப்படி முடிப்பது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். ஹரித்வாரிலிருந்து குசும் இப்போது அவளுடைய வாழ்க்கை அமைதியாக போய்க்கொண்டிருப்பதாக எழுதி இருந்தாள். அவள் சதிஷைப் பார்த்ததாகவும், மறுபடியும் ஒருமுறை தன் மகள் பாடியதை கேட்டதாகவும் எழுதியிருந்தாள். ஒரு புனித பயணத்தில் ஏதோ ஒரு கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, அச்சசல் அவளுடைய இளைய மகளைப் போலவே இருந்த ஒரு பெண், சமையலறை கரியடுப்பை விசிறிக் கொண்டு இருப்பதைப் பார்த்ததாகவும் குசும் அவள் எதிரே சென்று நின்றதும் அவள் அம்மா என்று குரல் எடுத்து அழைத்துவிட்டு ஓடி விட்டதாகவும் எழுதி இருந்தாள். கடிதத்தில் அவள் எழுதியவற்றை பற்றி நான் என்ன பொருள் கொள்ள?
அவளைப் பார்த்து பொறாமைப்பட தோன்றியது.
பேமால் கலிபோர்னியா செல்ல முடியவில்லை ஆனால் வான்கூவரிலிருந்து எனக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். இந்திய மற்றும் கீழை நாட்டுப் பெண்களுக்கு மேக்கப் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறாள். டாக்டர் ரங்கநாதன் தினசரி பயணம் செய்வதையும் தன்னுடைய வீட்டையும் வேலையும் விட்டுவிட்டு டெக்சாஸில் கல்லூரி ஒன்றில் பாடம் கற்பிக்கும் பணியை செய்து வருகிறார். அங்கு அவருடைய கதை யாருக்கும் தெரியாது. அவரும் யாரிடமும் சொல்லப் போவதில்லை என முடிவு செய்திருக்கிறார். இப்போதெல்லாம் அவர் வாரம் ஒரு முறை அழைக்கிறார்.
நான் காத்துக் கொண்டிருக்கிறேன், கேட்டுக் கொண்டிருக்கிறேன் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் விக்ரம் என்னிடம் திரும்பி வரவில்லை. குரல்களும் உருவங்களும் இரவு நேரத்தில் தோன்றும் தோற்றங்களும் பல வாரங்களுக்கு முன்பு திடீரென நின்றுபோயின.
அதை ஒரு சமிக்ஞையாக நான் கருதினேன்.
போன வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று அதிசயமாக வெயில் அடித்தபோது, யாங் ஸ்ட்ரீட்டில் ஒரு சின்ன வேலையை முடித்துவிட்டு சப்வேயிலிருந்து பார்க் வழியாக என்னுடைய அப்பார்ட்மெண்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒன்டாரியோ பாராளுமன்றத்திற்கும் டொரன்ட்டோ யுனிவர்சிட்டிக்கும நடுவே நான் வசித்து வந்தேன். அன்று அவ்வளவு குளிராக இல்லை. ஆனால் இலைகளற்ற மரங்களில் ஏதோ ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. தரையில் இருந்து என் பார்வையை அகற்றி மரக்கிளைகளின் ஊடாக பளிச்சென்று தெரியும் நீல வானத்தை பார்த்தேன். பெரிய உருவங்கள் நகர்கிற ஓசையைக் கேட்டது போல உணர்ந்தேன். குரல்களை கேட்பதற்காக காத்திருந்தேன். ஒன்றும் கேட்கவில்லை.
“என்ன?” என்று நான் கேட்டேன்.
குயின்ஸ் பார்க்கிற்கு வடக்கிலும் யூனிவர்ஸிடிக்கு மேற்கிலும் இருந்த பாதையை பார்த்துக்கொண்டு நான் நின்றிருக்கையில் என் குடும்பத்தினரின் குரல்களை கடைசி முறையாகக் கேட்டேன். ” உனக்கான நேரம் வந்துவிட்டது. போ, தைரியமாக இரு” என்றார்கள்.
நான் ஆரம்பித்திருக்கும் இந்த பயணம் எங்கே முடியும் என்று எனக்குத் தெரியாது. எந்த திசையில் பயணிப்பேன் என்பதும் எனக்கு தெரியாது. கையில் இருந்த பையை பார்க் பெஞ்சின் மீது வைத்து விட்டு நடக்கத் தொடங்கினேன்.
மூல நூல் விவரங்கள்:
த மானேஜ்மெண்ட் ஆஃப் க்ரீஃப்
(த மிடில்மான் அண்ட் அதர் ஸ்டோரிஸ் என்ற கதைத் தொகுப்பிலிருந்து)
பாரதி முகர்ஜி
க்ரோவ் ப்ரஸ் பிரசுரம்: 1988
The Management of Grief
(From a book of short stories)
The Middleman and Other Stories
Bharati Mukherjee
Grove Press: 1988
