தெலுங்கில்: கே.ஏ. முனிசுரேஷ் பிள்ளை
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
லிஃப்டில் நுழைந்தான் கோபால்ராவ். இன்னொரு குமாஸ்தா ஒருவனும் உள்ளே நுழைய முனைந்தான். லிஃப்ட் பையன் விடவில்லை. ஏதோ குடிமுழுகிப் போவது போல டக்கென்று எழுந்து கையை குறுக்கே வைத்து அவனை வெளியில் நிறுத்திவிட்டான்.
“உள்ள சார் இருக்காரு. தெரியல?” என்று எரிந்து விழுந்தான். கோபால்ராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. போகவேண்டியது ஏழாவது ஃப்ளோர். இல்லாவிட்டால் அவன் லிஃப்டில் ஏறியிருக்கவே மாட்டான். வேறு வழியில்லை.
“நீங்க இருக்கையில இன்னொருத்தன் எதுக்குன்னுதான்” என்று பல்லை இளித்தான் பையன். ஆயிற்று. அவன் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டான். இனி இவன் செய்ய வேண்டியதுதான் பாக்கி. “மறுபடியும் இறங்குவேன் இல்லடா?” என்றான் சற்று நேரம் கிடைக்குமென்று.
“எனக்கு டூட்டி டைம் ஆயிடிச்சி சார்” என்றான். ரெடிமேட் பதில்.. வேறு வழி இல்லை. கோபால்ராவ் சட்டைப் பையில் கை வைத்தான் ஒரு பச்சை நோட்டின் பாரம் குறைந்தது. அவனுடைய சிறு வயதில் பச்சை நோட்டு என்ற சொல்லை நூறு ரூபாய்க்கு பயன்படுத்தினார்கள் என்று நினைவு. இப்போது அந்த நோட்டுகளைப் பையில் வைத்துக் கொண்டு வந்தால் பயன்படுவதில்லை. இப்படிப்பட்ட வீரபிச்சைக்காரர்கள் யாரும் அவற்றை இடது கையால் கூடத் தொட மாட்டார்கள். அதோடு, “என்னைப் பார்த்தா எப்படி தெரியுறேன் சார்?” என்று நேர்மையைக் காட்டினாலும் வியப்பதற்கில்லை. ஆனால் இவர்கள் புன்னகை பூக்க வேன்டியதுதான். நான் மேற்கொண்டு ஐந்நூறு நோட்டுக் கட்டுகளோடு வர வேண்டியதுதான். ஏழாவது தளம் வந்து விட்டது. கதவு திறப்பதற்குள் அவன் குனிந்து சலாம் போட்டான்.
அலுவலக ரிசப்ஷனுக்குள் நுழைந்தான். “சாரைப் பார்க்க வந்தீங்களா?” மிருதுவான விசாரிப்பு. “இல்லாட்டா இங்கே கை நீட்டுறவங்க இருக்க மாட்டாங்களே” என்று எண்ணியபடியே, “ஆமாம்” என்பது போல புன்னகைத்தான்.
“மீட்டிங்குல இருக்காரு. வெயிட்டிங் ரூம்ல உக்காருங்க. ஒரு அரைமணி, ஒரு மணில வந்திருவார்”
வெயிட்டிங் ரூம் என்றால் பயம். அங்கு ஏசி பதினெட்டில் வேலை செய்யும். ஆனாலும் கோபாலராவுக்கு நெற்றியில் வியர்வைத் துளிர்க்கும். அடுத்து ஒரு முறமளவு புன்னகை அவனைத் தேடிக் கொண்டு வந்தது. கையில் பிடித்திருந்த டிரேயில் கண்ணாடி டம்பளர்களில் ஜில்லென்று மோர் நிறைந்திருந்தது.
“நல்லாயிருக்கியா?” என்ற கேள்விக்கு பதிலாக மோரைக் குடித்து விட்டு கிளாசைத் திரும்ப டிரேயில் வைத்தான். ஆனால் முறமளவு சிரிப்பு மட்டும் உடனே வெளியில் செல்லவில்லை. நெற்றியில் வியர்வைத் துளிகள் அதிகரித்தன. துடைத்துக் கொண்ட கைக்குட்டையை ஒரு பைக்குள் வைத்துக் கொண்டே, மற்றொரு பையில் கையை விட்டான் கோபால்ராவ்.
“இன்னொரு கிளாஸ் எடுத்துட்டு வரட்டுமா சார்?” என்று கேட்டான் அந்த முறச்சிரிப்பழகன். இவனுக்குப் பரபரப்பு அதிகமானது அவசர அவசராமாகத் தலையைக் குறுக்காக ஆட்டினான்.
எத்தனைதான் ஏசி இருந்தாலும் வியர்வை துளிர்ப்பது நிற்கவில்லை. மறுபடியும் துடைத்துக் கொண்டான். “இன்னொரு கிளாஸ் மோர் கொண்டு வா” என்று கேட்பதற்கு சாதாரண நாளில் தயங்குபவன் அல்ல கோபால்ராவ். முன்பெல்லாம் வெறும் பச்சை நோட்டு என்ன? தளதளவென்று மின்னும் சிவப்பு காகிதங்களைக் கூட அங்கும் இங்கும் தூக்கி எறிபவன் தான். ஆனால் இப்போது நிலைமை சரியில்லை.
செய்ய வேண்டியதைச் செய்தாகிவிட்டது. வர வேன்டியது நின்று போனது. எல்லா இடத்திலும் கொடுப்பதும் எப்போதோ முடிந்து விட்டது. இனி தாமதமாகும் நேரம் எல்லாம் அபாயம் தான். எல்லா விதத்திலும் குடைந்து விட்டான். பலன் இல்லை. ஃபைல் நகரவில்லை. என்ன ஆனாலும் ஆகட்டும். பிரம்மாஸ்திரத்தைப் போடுவோம் என்று இங்கு வந்தான். ஏழாவது தளத்திற்கு.
சோர்வு தீர்வதற்குள் அழைப்பு வந்தது. உள்ளே சென்றபோது அங்கே ஏசி இருபத்து நான்கில் இருந்தது. ஆனால் கோபால்ராவுக்கு வியர்த்துக் கொட்டியது.
“என்ன கோபால், என்ன விஷயம்?” கையெழுத்து போட்டுக் கொண்டே கேட்டார் சார்.
“உங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கு சார்?” என்று மென்று விழுங்கினான் கோபால்ராவ்.
“வியாபாரம் எப்படி நடக்குது?”
“சௌத்தாப்பிரிக்கால மைனிங் பரவாயில்ல சார். கரை ஏறிடுவோம். ஆனா” நிறுத்தி விட்டான். முழுவதும் கூறுவதற்கு தைரியம் போதவில்லை.
“பரவாயில்ல சொல்லு. இவ்வளவு தூரம் இங்கே வந்த பிற்பாடு வாயை மூடிகிட்டா எப்படி?”
“அதுதான் சார். அப்போ அந்த கெனால் வேலை கொடுத்தீங்க. எல்லாம் முடிஞ்சி போச்சு. முழு ரீச் கிடச்சிது. அதுதான் சார், அதைப்பத்தி” சொற்கள் சரளமாக வராமல் வாய்க்குள் அடைத்துக் கொண்டன. நாக்கு வரண்டது.
“கெனால் ரூட்டில் ராக் விழுந்திடிச்சுன்னு எஸ்ட்டிமேட் ரிவைஸ் செஞ்சோமே. அதுதானே?”
கோபால்ராவ் தன்னைக் கட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மூளையின் மட்டும் புல்லெட் ரயில் வேகத்தில் யோசனைகள் சூழ்ந்தன. எதிரில் அமர்ந்திருந்த சார் சாதாரண மனிதர் அல்ல என்று தெரியும். ஆனால் எத்தனை அசாதாரணமான மனிதர் என்று புரிந்து வியந்தான். அவர் எந்த விஷயத்தையும் மறக்க மாட்டார் போலிருந்தது. அல்லது இவன் வருவதற்கு முன்பாகவே யாராவது பி.ஏ.க்கள் இவனுடைய வரலாற்றை முழு ப்ரொஃபைலோடு அவர் முன்பாகத் திறந்து வைத்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இனம் புரியாத அச்சம் அவனைச் சூழ்ந்தது. கோபால்ராவுக்கு வியாபாரத்தில் இது போன்ற அனுபவங்கள் புதிதில்லைதான். பலவற்றைத் தாண்டி வெளிவந்திருக்கிறான். ஆனால் அவற்றை வெளியில் காட்டிக் கொண்டதில்லை. ஒரு நொடியை விடக் குறைவான நேரம் அந்த ஆலோசனைகளை எல்லாம் கடைந்து, “அதுதான் சார். அந்த ராக் தாக்குதலுக்கு கெனால் வேலைகள் வீணாயிடாம நீங்கதான் காப்பாத்தணும் சார்” என்று கூறி கைகுவித்து வணங்கினான்.
சில சமயம் அதிகமாகப் புகழ்ந்தால் கூடத் திகட்டி விடும். அவனுக்கு அது தெரியாததல்ல.
“இப்போ என்ன செய்யணும்குற?” கையெழுத்து போட்டபடியே மூக்கு நுனிக்கு வந்த ரீடிக் கிளாசின் மேலிருந்து கண்களைச் சாய்த்துக் கேட்டார்.
“கால்வாய் பில் எல்லாம் நின்னுபோச்சு சார்”.
“அடடா” அவர் கண்கள் எதிர்வினை எதுவுமின்றி கீழே பார்த்தன. காதுகளும் வாயும் மட்டும் எதிர்வினையாற்றின. கை விரல்கள் தானாகவே கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தன. அவர் வேறு எதுவும் கேட்கவில்லை. “வேறே ஏதாவது சொல்றதுனா சொல்லு” என்பது போல் இருந்தது அவருடைய உடல் மொழி. அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ப்ரபோசல் ஏதாவது போடணுமா? அதைக் கேட்பதற்கும் கோபால்ராவுக்குத் துணிச்சல் போதவில்லை. ஏற்கெனவே எல்லா இடத்திலும் ஒரு தவணை கொடுத்து முடித்தாகி விட்டது. இறுதியில் வாயைத் திறக்காமல் நின்றான்.
“ஆறு மாசம் ஆயிடிச்சு சார். சௌத்தாப்பிரிக்கா மைனிங்கில் தோண்டிச் சேர்த்தது எல்லாம் இங்கே தோண்டிக் கொட்டிட்டேன். பத்து இருபதுன்னா சமாளிச்சுடுவேன். நின்னுபோனது ஒரேயடியா நூத்திஎழுபது கோடி” எதிர்பாராமல் ஒரு லயத்தோடு குரலை உயர்த்தினான். கோபால்ராவ். வேலையோடு வேலையாக முன்பாகவே திட்டமிட்டபடி தன்னுடைய ஆஃபரையும் ஹிண்ட் கொடுத்தான்.
சாருடைய கண்கள் ஒரு நொடிக்கும் குறைவாக மேலெழுந்தன. இன்டர்காமை அழுத்தி, “இந்த கோபால்ராவ் கெனால் வொர்க் முடிஞ்சி போச்சு. நாம ஒரு தடவ விசிட் பண்ணுவோம். ரெண்டு வாரத்துல ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணுங்க” என்று கூறிவிட்டு வைத்தார். கண்கள் மீண்டும் தாழ்ந்தன. கையெழுத்து வேலை தொடர்ந்தது.
மீண்டும் ஒரு முறை அவனைப் பார்த்தார். “டேட் எப்போ பிக்ஸ் செய்றாங்கன்னு ரிசப்ஷனில் கேட்டுத் தெரிஞ்சுக்க. நீ காண்ட்ராக்டர் இல்லையா? விசிட் அன்னைக்கு மிஸ் ஆகாதே. வந்திடு” என்றார். சற்று நிறுத்தி, “வேற ஏதாவது இருக்கா? என்று கேட்டார்.
“இல்ல சார்” நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கொண்டே கூறினான் கோபால்ராவ். “நீங்க அனுமதிச்சா நான் கிளம்புறேன்” என்றான்.
ரிசப்ஷனில் தேதி தெரிந்தது. வெளியில் வந்தான். லிஃப்ட் பையன் மாறியிருந்தான். அடுத்து செக்யூரிட்டி. அதுபோல் இன்னும் பல நிலைகள் இருந்தன. மேலும் சில பச்சை நோட்டுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது.
காரில் ஏசி சாதாரணமாக இருந்தது. ஆனால் கோபால்ராவின் வியர்வை யாரோ வந்து துடைத்து விட்டாற்போல் காணாமல் போயிருந்தது. உள்ளே எல்லாம் அமைதியாக இருந்தது. ஆனால் கோபால்ராவின் சிந்தனை பலவிதங்களில் ஓடியது. “முடிவு எடுப்பதற்கு இவருக்கு ஒரு நொடி நேரம் கூட ஆகாதா?” கோபால்ராவ் அந்த ஆச்சர்யத்திலிருந்து இன்னும் மீளவில்லை. வியப்போடு அவரைக் கணித்துப் பார்த்தான். “அவரும் கார்பரேட் வியாயபாத்தில் இருந்தவர்தான். வேகமா நிர்ணயம் எடுப்பது அவருக்கு அவசியம். பழகியிருக்கும். ஆனால் இத்தனை ஸ்பீடா? அதில் எத்தனை ஜிம்னாஸ்டிக்ஸ் தேவையாயிருக்கும்? எத்தனை மனக்கணக்கு வேண்டியிருக்கும்? ஆனால் சாரோட முறையே வேறே. அதுனாலதான் இங்கே செவன்த் ஃப்ளோர்ல அவரால இருக்க முடிகிறது” என்று நினைத்துக் கொண்டான்.
****
“கால்வாய்ப் பணிகளை ஆராய்வதற்கு இன்று தலைவர் வருகிறார். விரைவில் கால்வாயில் தண்ணீர் வரத்து. விவசாயிகள் பாராட்டு” என்று மாவட்டப் பத்திரிக்கைகளில் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. அனைவரும் கால்வாய் வேலைகள் பற்றி விண்ணளவு புகழ்ந்து எழுதி மகிழ்ந்தார்கள். அதற்காகும் செலவு ஒன்றும் பெரிதில்லை. ஒரு முறை அலுவலகத்திற்குச் சென்று வந்ததோடு ஒப்பிட்டால் இந்தச் செலவு ஒன்றுமில்லை.
சார் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் இடத்தில் பெரிய பெரிய பேனர்களைத் தொங்கவிட்டார்கள். கால்வாயோடு தொடர்புடைய பொறியாளர்கள் எல்லோரும் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள். அவர்களோடு கோபால்ராவும் வந்து ஒரு பக்கம் நின்று காத்திருந்தான். அதற்குள் பெரிதாக ஓசையும் தூசியும் எழுப்பிக் கொண்டு ஹெலிகாப்டர் இறங்கியது. சார் வந்துவிட்டார்.
கால்வாய்க் கரையோடு சற்று தூரம் நடந்தார். எஞ்சினியர்களோடு கொஞ்சம் பேசினார். தண்ணீர் விடுவது பற்றி கலந்தாலோசித்தார். எப்போது விட வேண்டும் என்று தீர்மானித்தார்.
“காண்ட்ராக்டர் எங்கே?” என்று தேடினார்.
கோபால்ராவ் விரைத்து அவரிடம் சென்றதும், “நல்லா செய்திருக்க கோபால். வெல் டன். நினைச்ச நேரத்துல முடிச்சிட்ட” என்றார். கோபாலராவ் புன்னகைத்து விட்டு சும்மாயிருந்தான். நிருபர்களோடு பேசினார். அந்தக் கால்வாயில் வரும் தண்ணீர் விவசாயிகளுக்கு எத்தனை நன்மை செய்யும் என்று விவரித்தார். அவருடைய விசிட் நிறைவடைந்தது. ஹெலிகாப்டரில் சென்றமர்ந்தார். மேலே இறக்கைகள் சுழலத் தொடங்கிய உடனே நின்று போயின.
செக்யூரிட்டி ஓடி வந்து, “சார் கூப்பிடுறார்” என்றான். கோபால்ராவ் விரைந்து சென்றான். சார் ஹெலிகாப்டரில் நகர்ந்து அமர்ந்து கொண்டு அவனையும், “ஏறு” என்றார். சாரோடு அந்த ஹெலிகாப்டரில் அமர்ந்து கொண்ட அனுபவம் இது வரை அவனுக்கு ஏற்படவில்லை. குழப்பத்தோடு ஏறி அமர்ந்தான். ஆனாலும் சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்ந்தான்.
“அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்டார். சாரிடமிருந்து அப்படிப்பட்ட கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை.
“நல்லா இருக்காங்க சார்” என்றான். அவன் வியப்போடு பார்த்திருக்கையில் சார் அடுத்து கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். “புள்ளைங்க என்ன படிக்குறாங்க? அவுங்களையும் வியாபாரத்துல இறக்கப் போறியா? இல்லாட்ட வேறே எந்த ஃபீல்டுல சேர்க்கப்போறே?” என்று கேட்டார். கோபால்ராவுக்கு வியப்பின் மேல் வியப்பாக இருந்தது.
“சமீபத்துல என்ன சினிமா பார்த்தே கோபால்? அந்த சேனல்ல இந்த சீரியல்ல நேத்து எபிசோட்ல என்ன நடந்திச்சி” என்பதைத் தவிர ஏதேதோ கேட்டார். ஆனால் அவன் அளித்த பதில்களை அவர் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை போலிருந்தது. அதற்குள் ஒரு பத்து மிநிடங்கள் கடந்தன. திடீரென்று கேள்விக் கணைகளை நிறுத்தி விட்டு, “சரி சரி. நீ இறங்கு” என்றார்.
கோபால்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை. தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசுகிறாரே ஏதோ இருக்கும் என்று நினைத்து ஏமாந்தான். ஏதாவது ஆணையிட்டாலும் ஏற்பதற்கு அவன் தயாராகவே இருந்தான். வேறு வழியில்லைதான். நின்று விட்ட பில் தாமதமாகிக் கொண்டே இருந்தால் குடி முழுகி விடும் என்று அஞ்சினான். “இருபது வரைக்கும் என்னால் சமாளிக்க முடியும்” என்று கொஞ்சம் குறிப்பு கொடுத்தபோது மேலும் கொஞ்சம் கூட்டி, ஏதோ ஒரு தொகையைக் கூறிவிட்டுச் செல்வார் என்று எதிர்பார்த்தான். ஆனால் அபப்டி எதுவும் நடக்கவில்லை. வெறும் நலம் விசாரித்ததோடு சரி. கோபால்ராவுக்கு ஏற்பட்ட வியப்பு கவலையாக மாறியது. சுவர்க்கம் என்று தோன்றிய ஹெலிகாப்டரில் இருந்து இறங்கினான். எத்தனை யோசித்தாலும் அவனுடைய அறிவுக்கு எதுவும் எட்டவில்லை.
****
ஏழு நாட்கள் கடந்தன. இன்றும் கோபால்ராவ் ஏழாவது தளத்தில் சாருக்கு எதிரில் தான் அமர்ந்திருந்தான்.
“நீங்க செஞ்ச உதவியை மறக்க மாட்டேன் சார். ஒரு பைசா கூட பெண்டிங் இல்லாம முழு தொகைக்கான செக்கும் வந்திட்டுது சார்” உறுதிப்படுத்துவது போல் உணர்வுபூர்வமாகக் கூறினான்.
சார் கண்களை உயர்த்திப் பார்த்தார். சிறியதாகப் புன்னகைத்தார். அதைத் தவிர பெரிதாக எந்த எதிர்வினையும் காட்டல்லை.
“இப்போ புரிஞ்சுதா உன்னை எதுக்கு கூப்பிட்டு ஹெலிகாப்டர்ல உட்கார்த்தி வெச்சு பேசிட்டிருந்தேன்னு?”
கோபால்ராவுக்கு எல்லாம் விளக்கமாகப் புரிந்தது. மீண்டும் ஒரு முறை கைகூப்பி வணங்கினான். சாரோடு ஹெலிகாப்டரில் ஏகாந்தமாகத் தனிமையில் கோபால்ராவுக்குப் பேசக் கிடைத்தைப் பார்த்து பொறியாளர்கள் எல்லாம் ஆடிப்போயிருப்பார்கள். “இவனுக்கு இத்தனை முக்கியத்துவம் இருக்கு போலிருக்கு. அதுனாலதான் தன்னுடைய பயணத்தையும் தாமதித்து பத்து நிமிஷம் பக்கத்துல உட்கார்ந்து பேசியிருக்காரு” என்று தங்களுக்குள் விவாதித்திருப்பார்கள். இல்லாவிட்டால் வேலை முடிந்து ஆறு மாதம் ஆகியும், கார் டயர் தேயும்படி அலைந்தும் வராத வங்கி காசோலை எல்லாம் ஒரே வாரத்தில் வந்துவிட்டன. கோபால்ராவின் வியப்புத் திரைகள் ஒவ்வொன்றாக விலகின.
“சார்” சொல்ல வந்ததைச் சொல்லாமல் நிறுத்தினான். “நீங்க எப்படிச் சொல்றீங்களோ அப்படியே செய்துடலாம்” என்று பொருள்படும்படி இருந்தது அந்த மௌனம்.
“இப்ப ஹாப்பி தானே?” சார் தன் வேலையிலிருந்து தலையைத் தூக்காமலே கேட்டார்.
“நீங்க தயவு வெச்ச பிற்பாடு ஹாப்பி இல்லாம எப்படி இருக்கும் சார்?” என்றான் மேலும் பணிவைக் காட்டி.
“சரி. கிளம்புவோம்” என்றார். சார் என்ன சொல்கிறார் என்று அவனுக்குச் சட்டென்று புரியவில்லை. இன்னும் ஏதோ சொல்வார் என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தான். அந்த வார்த்தை புரிந்தபோது திகைத்துப் போய் பார்த்தான்.
இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போல அவர் தன் கண்களை வேலையிலிருந்து எடுக்கவில்லை. மறுபடியும் ஏதாவது கேட்பதோ அல்லது கிளம்பலாம் என்று சொன்னபிறகும் அங்கு அமர்ந்திருப்பதோ அவனால் இயலாது. அதனால் ஒரு நொடி நேரம் அவருடைய பார்வை படும்படி நின்று மீண்டும் ஒருமுறை கைகுவித்து விட்டு வெளியேறினான்.
இது இப்படி முடியும் என்று அவன் நினைக்கவில்லை. ஒரே ஒரு முறை சாருக்குப் பக்கத்தில் ஹெலிகாப்டரில் பத்து நிமிடம் அமர்ந்ததற்கு இத்தனை தாக்கம் இருக்கும் என்று அவன் வாழ்க்கையில் நினைத்தும் பார்த்ததில்லை. உண்மையில் கோபால்ராவ் இந்த முறை மிகுந்த உற்சாகத்தோடு இருந்தான். ஒரு பாக்கெட்டில் பச்சை நோட்டுக் கட்டும், இன்னொரு பாக்கெட்டில் சிவப்பு நோட்டுக் கட்டும் திணித்துக் கொண்டுதான் வந்தான். இன்னும் சொல்லவேண்டும் என்றால், சிவப்பு நோட்டுகளைத் தெளிப்பதற்குத் தயாராகவே வந்தான். ஏனென்றால் மேல்படி வரை சென்று ஏழாவது தளத்தில் கால் வைத்த போதெல்லாம் சிவப்பு நோட்டைத் தவிர வேறு எதுவும் வேலை செய்ததில்லை. அதனால் அனாவசியமாக சுயநலம் எதற்கு என்று பச்சை நோட்டுகளை முடிந்தவரை தெளித்துக் கொண்டே அங்கிருந்து வெளிப்பட்டான். காரில் ஏறித் திரும்பிப் பார்க்கையில், அந்த ஏழுமாடி கட்டிடம், சப்தகிரி போல் அவன் கண்களுக்குக் காட்சி தந்தது.
கோபால்ராவுக்கு அத்தகைய ஆச்சர்யம் விளைவித்த அனுபவம் ஐம்பது ஆண்டு கால வாழ்க்கையில் இன்னொன்று ஏற்படவில்லை. லஞ்சம் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றியவர்களைப் பார்த்திருக்கிறான். தொகையை நீட்டினாலொழிய கோப்புகளை நகர விடாதவர்களையும் பார்த்திருக்கிறான். ஆனால் கேட்டும் கேட்காமலும் இருக்கும் போதே வேலையை முடித்து விட்டு பணத்தைப் பற்றியே பேசாமல் அனுப்பிவிட்ட மனிதரை முதல் முறையாகப் பார்த்தான். அப்படி நினைத்து மகிழ்ந்து போனான் கோபால்ராவ்.
அந்த மகிழ்ச்சியான நினைவுகள் மறந்து போவதற்கு அவனுக்கு மேலும் ஒரு ஆறுமாதம் பிடித்தது. அப்போது வந்தது தனியார் நம்பரில் இருந்து ஒரு போன் கால்.
எடுத்தவுடன், “நல்லா இருக்கியா கோபால்ராவ்?” என்று ஒரு விசாரிப்பு. “நான் …”
கோபால்ராவ் எதிர்முனையில் பேசும் மனிதரை எதுவும் பேச விடவில்லை. அந்தக் குரலை அவன் மறக்க மாட்டான். “சார், புது நம்பரா இருந்ததால கொஞ்சம் தயங்கிட்டேன். குரலைக் கேட்டதும் தெரிஞ்சு போச்சு. உங்களை நீங்க அறிமுகப்படுத்திக்கணுமா என்ன? சொல்லுங்க சார்” என்றான்.
“அதாம்ப்பா. சார் உன் பேரச் சொன்னாரு. ஃபிஃப்டி பரவாயில்லையா?” எதிர்முனையில் பேசிய மனிதர் சாதுர்யமாகக் கேட்டார். உடனடியாக சம்மதிக்க வேண்டும் என்ற குறிப்பு அதில் இருந்தது. அதைக் கூட புரிந்து கொள்ளாதவனாக இருந்தால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்திருக்க முடியாது. உடனே பதில் சொன்னான்.
“இது என்ன கேள்வி? சார் சொன்ன பிறகு பரவாயில்லையான்னு கேட்பதெல்லாம் எதுக்கு சார்? அப்படியே சார். எங்கே எப்படின்னு சொன்னால்…”
“நல்லதுப்பா. அது காகிதத்துல எழுதியிருக்கு. நான் பையன்ட்ட காகிதம் கொடுத்து அனுப்புறேன். குண்டூர்லேருந்து ஸ்ரீகாகுளம் வரைக்கும் காகித்தில் இருக்குறபடி குடுத்துகிட்டே வரணும். எங்காவது போலீஸ் நிறுத்தினால் என் பேரைச் சொல்லு போதும்”
“நிச்சயம் செய்றேன் சார்”
எதிர்முனையில் போன் நின்றுவிட்டது. அன்று மாலை அந்தக் காகிதம் வந்து சேர்ந்தது. சிவப்பு நோட்டுக் கட்டுகள் ஏற்றப்பட்ட பெரிய காருக்கு இறக்கை முளைத்தது. நிச்சயமில்லாத தவளைச் சண்டை போல, கட்சிகளின் ஒருங்கிணைப்பு மாறி மாறி நடந்து கொண்டிருந்தது. பண மூட்டைக்காக வாயைப் பிளந்து அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தைரியம் பிறந்தது.
காகிதத்தில் இருந்த பெயர்களின் மேல் குறுக்குக் கோடு போட்டு முடித்து, குண்டூரிலிருந்து ஸ்ரீகாகுளம் யாத்திரை முடிந்த போது காரும் காலியானது. கோபால்ராவ் மிகவும் திருப்தியாக உணர்ந்தான்.
உண்மையில் கால்வாய் காண்ட்ராக்ட், வந்த தொகை, போன தொகை, கூட்டல் கழித்தல் கணக்கு இதெல்லாம் பார்ப்பதற்குத் தொல்லையாக இருக்கும். எரிச்சலாக வரும். ஆனால் கோபால்ராவுடைய கணக்கே வேறு. “எல்லாம் பரவாயில்ல. பணம் சஞ்சலமானது. ஒரு இடத்துல நிக்காது. சேர்த்து வெச்சது போயிட்டே இருக்கும். ஆனால் மறுபடியும் பணம் வரும் வழியைத் தேடிகிட்டே இருக்கணும். கால்வாய் கட்டுமானம் இன்னும் நிறைய வரணும். அதில் ராக் விழணும். ரிவிஷன்கள் நடந்துகிட்டே இருக்கணும். இப்படி கார்ல வெச்ச மூட்டைங்க எத்தனை போனாலும் கவலை இல்லை. எல்லாம் சுகமா நடந்து முடியணும்னா அந்த ஏழாவது தளம் மட்டும் என்னுடைய பார்வையின் எல்லையிலேயே பாதுகாப்பா இருக்கணும்” என்று நினைத்துக் கொண்டான்.
