உலகங்கள் ஈரேழு பதினாலு கோடி என்கின்றன நமது புராணங்கள். மனிதர்களுக்கான பூலோகம் (பூமி), அரக்கர்களின் பாதாளம், தேவர்களின் சுவர்க்கம், இன்னபிற என நாம் வகுத்துக்கொண்டவை. இவை தவிர, அறிவியலார் பரிச்சயப்படுத்திவைத்த தாவரங்களின் உலகம் (Plant world), விலங்குகளின் உலகம் (Animal Kingdom), நுண்ணுயிரிகளின் உலகம் (World of Microbes) என மேலும் பல. மற்ற கிரகங்களில் வாழும் உயிரினங்கள் (Aliens??) இன்னும் பல. ஆகக்கூடி, இந்த அத்தனை உலகங்களுக்கும் செயல்பாடுகள் ஒன்றாகவே, ஒன்றுபோலவே உள்ளன என்பது வியக்கத்தக்க உண்மை. உயிர்வாழ உணவு, இனப்பெருக்கம் செய்து தமது சந்ததியைத் தக்க வைத்துக் கொள்வது, தமக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டியது என அனைத்துயிர்களுமே தங்களுக்குண்டான உலகங்களில் ஒரு சீரான இயக்கத்தில் சுழன்றாடுகின்றன. தத்துவ வேதாந்த விசாரங்களைத் தற்போது ஒதுக்கி வைத்துவிட்டு, சில வினோதமான நிகழ்வுகளைப் பார்க்கலாமா?
நாம் இப்போது நுழையப் போவது நுண்ணுயிரிகளின் (microbes) உலகிற்குள்தான். பாக்டீரியாக்கள், வைரஸ்கள் இவை பற்றிய சில சுவையான செய்திகளைக் காணப்போகிறோம்.
பலவிதமான வாழ்க்கை மாற்றம், சுற்றுச்சூழல், அரசியல் நிர்ப்பந்தங்களால் புதிய சூழலில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் மனிதர்களாகிய நாம் நமது வாழ்க்கை முறைகளைச் சிறிதோ அல்லது பெரிதாகவோ மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது. ஒரே ஒரு ‘செல்’ (cell) எனப்படும் அலகினாலான பாக்டீரியாக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘புதியன புகுதல்’ என்பது காலச் சுழற்சியினால்தான் என ஔவையாரே சொல்லியிருக்கிறார்.
பாக்டீரியாக்கள் எங்கும் நிறைந்தவை. காற்றிலும், நம் உடலிலும், செடிகொடிகளிலும், உண்ணும் உணவிலும் கூட உண்டு. இவை வளரத் தேவையானதெல்லாம் சிறிது உணவுதான். அது சர்க்கரையாகவோ சிறிது புரதமாகவோ இருக்கும். நீர்நிலைகளிலோ, உணவிலோ, அவை இளஞ்சூடான நிலையில் இருந்தால் (மனித உடலின் சாதாரண வெப்பநிலையான 37.0 டிகிரி செல்சியஸ்) அமர்ந்து வளர ஆரம்பிக்கும். மளமளவென வளரும் இவை இருபது நிமிடங்களில் ஒன்று இரண்டாகும்,
2-4, 4-8, 8-16 என்று சில மணி நேரங்களில் பல லட்சங்களாகப் பல்கிப் பெருகிவிடும். உணவுப்பொருள் முழுமையாகத் தீர்ந்த நிலையில், “வாழ்வா, சாவா?” என முடிவுகட்ட வேண்டிய நிலையில் இவற்றில் பெரும்பாலானவை இறக்கும். இதெல்லாம் குத்துமதிப்பாகச் சொல்வதுதான். எஞ்சியுள்ள மற்றவை கொஞ்சம் சாமர்த்தியமாக தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிமுறைகளைத் தேடும். ஏனெனில் தமது இனம் நிரந்தரமாக வாழ வகை செய்ய வேண்டுமல்லவா?
நோயை உண்டுபண்ணும் பாக்டீரியாக்கள் இப்போது நோயாளியின் உடலின் சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு அங்கு வாழ ஆரம்பிக்கும். இப்போது இவற்றை வெளியேற்றுவதோ, சாகடிப்பதோ இன்றியமையாததாகின்றது.
தொற்று பாக்டீரியாக்கள் உடலினுள் புகுந்தால், உடலில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்புச் சக்திகள் (Body’s natural immunity) அவற்றை அழித்துக் கொன்றுவிடும். நம் உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள பொழுதுகளில் அவற்றின் கை ஓங்கி அவை நம் உடலில் பல்கிப் பெருகும். சில பொழுதுகளில் அவ்வாறு அவை நம் உடலில் பெருகும்போது ஆன்டிபயாடிக்குகளை உட்கொண்டு அவற்றை அழிக்க வேண்டியிருக்கும். மருத்துவர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஆன்டிபயாடிக் (Antibiotic) மாத்திரை வீதம் ஐந்து நாட்களுக்குத் தருவார். அதைக் கட்டாயம் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதல் வேளை மருந்தில் பெரும்பாலானவை (80-90%) கொல்லப்படும். பாக்கி சிறுபான்மை (20%) அடுத்தவேளை மருந்தை நாம் உண்பதற்குள் மேற்கூறியவாறு பல்கிப் பெருகும். அடுத்தவேளை மருந்தில் இவையும் பெரும்பான்மை கொல்லப்படும். இங்கு நாம் நினைவிலிருத்த வேண்டியது இது மருந்துக்கும் பாக்டீரியாவுக்குமான போர். ஆனால் ஒவ்வொரு வேளை மருந்தாலும் கொல்லப்பட்டபின் எஞ்சியிருப்பவை தாம் உயிர்வாழத் துடிப்பதால் நம் உடலில் ஒளிந்துகொள்ள இடம் தேடும். ஆன்டிபயாடிக்கின் எதிர்ப்பிலிருந்து தப்பிக்க வேண்டுமல்லவா?
இதற்குள் நான்குவேளை ஆன்டிபயாடிக்கைச் சாப்பிட்டபின் நாம் நன்றாகிவிட்டோமென்று நினைத்துக்கொண்டு நிறுத்திவிட்டோமானால் மிச்சம் மீதி இருக்கும் பாக்டீரியாக்கள் திரும்பப் பெருகி நம்மை திரும்பவும் நோய்வாய்ப்படுத்தும். அல்லது தமது மரபணுக்களில் (genes) சில மாற்றங்களைச் செய்துகொண்டு ஆன்டிபயாடிக்கின் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைக்கத் தயாராகிவிடும். இப்போது மருத்துவர் வேறு ஆன்டிபயாடிக்கை நமக்குத் தர வேண்டிய கட்டாயத்திலிருப்பார்.
ஆன்டிபயாடிக்குகளுக்கு எதிர்ப்பு எப்படி உருவாகிறது?
இது ஒன்றும் புதிய கதையல்ல. அறிவியலார்கள் கூறுவது: எப்போது இந்த ஆன்டிபயாடிக்குகள் கண்டுபிடிக்கப் பட்டனவோ அப்போதிருந்தே இந்த பாக்டீரியாக்கள் அவற்றை எதிர்க்கவும் கற்றுக்கொண்டுவிட்டன என்பதாகும். சமீப காலமாக தொற்று ஏற்பட்டால் தரப்படும் மருந்துகளான பெனிசில்லின், ஸ்ட்ரெப்டோமைசின் முதலானவை வேலை செய்வதில்லை. ஏனென்றால் இந்த எதிர்ப்பு எனப்படும் தற்காப்பு முறையை பாக்டீரியாக்கள் தமது இனங்களுக்குள் தமது உயிரணுக்கள் மூலமாகப் பரப்பி விடுகின்றன. இதனால் ஏறக்குறைய எல்லா ஆன்டிபயாடிக்குகளுமே பிரயோசனமில்லாமல் ஆகிவிட்டன. சுருக்கமாக எவ்வாறு இவை வேலை செய்கின்றன எனப் பார்ப்போம்.
1. பாக்டீரியாக்கள் ஒரே ஒரு செல்லால் (cell) ஆனவை எனக் கூறினோம். சில மருந்துகள் (ஆன்டிபயாடிக்குகள்) இந்த செல்லின் பாதுகாப்புச் சுவரைப் பலவீனப்படுத்தித் துளைகளிட்டு அழித்துவிடும். இதன் விளைவு பாக்டீரியா இறந்தே போய்விடும்.
2. புரதங்கள் எல்லா உயிர்வாழினங்களுக்கும் வாழவும், வளரவும் தேவையானவை. இவற்றின் தயாரிப்பைத் தடுப்பதன் மூலம் பாக்டீரியாக்களை அழிக்க இயலும்.
3. டி. என். ஏ. (DNA) எனப்படும் மூலக்கூறு அமிலத்தை அழிப்பதன்மூலம் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தை அழிக்கலாம்.
4. இன்னும் பலவிதமான செயல்பாடுகளுக்கு உண்டான ‘என்சைம்’ (enzymes) என்பனவற்றை அவை வேலைசெய்யாமல் தடுப்பதன் மூலம் பாக்டீரியாக்களை அழிக்கலாம்.
இவையெல்லாம் சில வழிமுறைகள்தாம். இவற்றில் பல சிக்கல்களும், எதிர்பாராத விளைவுகளும் உண்டு. ஆன்டிபயாடிக்குகளுக்கான சந்தை (market) மற்ற டயபடீஸ், ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கான மருந்துகள் போல நீண்டகாலம் உள்ளதல்ல. ஐந்தோ, ஏழோ நாட்கள் கொடுத்தபின், தொற்று சரியாகிவிட்டால், நிறுத்தப்பட்டுவிடும் அல்லவா? பெரும் பொருட்செலவில் இவற்றைக் கண்டுபிடித்துத் தயாரித்து விற்கும் நிறுவனங்களுக்கு (Pharmaceutical industry) மற்ற ‘கான்சர் சம்பந்தமான மருந்துகள், இன்னபிற’வை போல இவை அப்படி ஒன்றும் கொழுத்த லாபத்தைத் தரப் போவதில்லை. அதனால் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட தற்காலத்தில் எந்தப் பெரிய நிறுவனமும் முன்வருவதில்லை. ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் இந்த ஆராய்ச்சிகளை நிறுத்திக் கொண்டுவிட்டன.
இந்தச் சூழலில் மற்ற சில வழிமுறைகளைத் திரும்ப ஆராய முனைந்துள்ளனர் அறிவியல் வல்லுனர்கள். அவை வெகு சுவாரசியமானவை!
நாம் வைரஸ் (virus) தொற்றுகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். பலரும் இந்தத் தொற்றுக்களை (ஃப்ளூ, இப்போது ஒழிக்கப்பட்டுவிட்ட பெரியம்மை, போலியோ, ஜலதோஷம், சமீபத்திய கோவிட்) பற்றி அறிந்துள்ளோம்; சிலவற்றை அனுபவித்துள்ளோம். இதுபோல செடிகொடிகளுக்கும், பாக்டீரியாக்களுக்கும் வைரஸ் தொற்று உண்டு.
சில உண்மைகள்: வைரஸ்கள் தாமே இனப்பெருக்கம் செய்துகொள்ள முடியாது. அதற்குத் தேவையானவை அவற்றின் அமைப்பில் இல்லை. ஆகவே அவை தாமே தொற்றுபோல மனித உடலின், செடிகளின், அல்லது பாக்டீரியாக்களின் உள்ளே புகுந்து அங்குள்ள என்சைம்களைக்கொண்டு தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன. சிலமணி நேரங்களில் பல்லாயிரக் கணக்கில் பெருகி பாக்டீரியாக்களை உடைத்துக்கொண்டு வெளிவருகின்றன. அக்கம்பக்கத்து செல்களையும் இந்தப் புது வைரஸ்கள் தாக்கி அழிக்கின்றன. இவ்வாறுதான் வைரஸ் தொற்று (infection) பரவுகிறது. தொற்றுள்ள ஒருவரின் மூச்சுக்காற்று, தொடுதல், துணிமணிகள் போன்றவை மூலம் குடும்பத்தினர், மற்ற வெளியுலகத்தோர் அனைவருக்கும் பரவுகின்றன.
பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களைக் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் முன்பு ட்வார்ட் (Twort) எனும் ஆராய்ச்சியாளரும், டி’ஹெரெல் (D’Herelle) என்பவரும் (தனித்தனியாக) ஆய்வு செய்து (1915-ல்) கண்டறிந்தனர். வயிற்றுப்போக்கு, தீக்காயங்களால் உண்டாகும் புண்களின் தொற்றுக்கள் இவற்றைக் கட்டுப்படுத்த ‘பாக்டீரியோஃபேஜ்’ (bacteriophage; பொருள் – பாக்டீரியாக்களைச் சாப்பிடுபவன்’) உபயோகப்படுத்தப்பட்டது. இதன் பலனும் கண்டறியப் பட்டது.
இந்த ஆய்வுகள் மெல்ல முன்னேற்றம் காணும் சமயத்தில் பெனிசில்லின், ஸ்ட்ரெப்டோமைசின் ஆகிய வீரியம் வாய்ந்த ஆன்டிபயாடிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பல தொற்றுக்களையும் குணமாக்கும் வீரியம் வாய்ந்தவையாக இருந்ததனால் ‘பாக்டீரியோஃபேஜ்’ தொடர்பான ஆய்வுகள் முன்னேற்றம் காணவில்லை. இப்போது தொற்றுநோய் பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக்குகளுக்கான எதிர்ப்பு வழிகளை அமைத்துக் கொண்டுவிட்டன. ஆகவே புது மருந்துகளின் தேவை அவசியமானது. பணம் (லாபம்) ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் பெரும் நிறுவனங்கள் இதனக் கருத்தில் கொள்ளவேயில்லை. ஆனால் மனித குலத்தின் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்குமாகச் செயல்படும் சிறு ஆராய்ச்சி நிறுவனங்கள் வேறு மாற்று மருந்தைத் தேடும்போது, இந்த பாக்டீரியோஃபாஜால் குணமாக்கும் முறை திரும்பவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது! ஒவ்வொரு விதமான தொற்றுநோய் பாக்டீரியாவையும் ஆயிரக்கணக்கான பாக்டீரியோஃபேஜ் வகைகளில் ஏதாவது ஒன்றால்தான் அழிக்க முடியும் எனக் கண்டறியப்பட்டது.
வயிற்றுப்போக்கிற்குக் காரணமான பாக்டீரியாக்கள் லாபரட்டரிகளில் பரிசோதனைக் குடுவைகளில் வளர்க்கப்பட்டு, அவற்றைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பிரத்யேகமுறைகளில் அவற்றில் பெருக்கம் செய்யப்பட்டு, அறுவடை செய்யப்பட்டுப் பத்திரப்படுத்தப்பட்டன. தீவிரமான வயிற்றுப்போக்கில் தவிக்கும் நோயாளிகளுக்கு, மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பவர்களுக்கு இவை இரண்டு மில்லிலிட்டர் அளவில் கொடுக்கப்பட்டன. அடுத்தநாளே அவர்களில் பெரும்பாலோர் குணமடைய ஆரம்பித்தனர். 1919-ல் பிரேஸில், சூடான் ஆகிய நாடுகளில் இப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
1927-ல் இந்த முறையைக் கையாண்ட விஞ்ஞானி இந்தியாவிற்கு வந்து பஞ்சாபில் காலராவை (Cholera) இவ்வகையில் குணப்படுத்த முயன்றார். மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த நோயாளிகளின் உறவினர்கள் வேறுவழியின்றி இந்த முறைச் சிகிச்சையை ஒப்புக்கொண்டனர். பாக்டீரியோஃபேஜ் கொடுக்கப்பட்ட இவர்களில் பெரும்பான்மையினர் பிழைத்தனர். எடுத்துக்கொள்ளாதவர்களில் பெரும்பாலோர் இறந்தனர்.
1926-ல் எகிப்தில் ப்ளேக் (Bubonic plague) எனும் தொற்றுநோயால் தாக்கப்பட்ட நால்வரை அதற்குரிய பாக்டீரியோஃபாஜை செலுத்தி, இவ்வாறு பரிசோதனைகள் செய்து பிழைக்கவைக்க முடிந்தது.
ஸ்டாஃபைலோகாக்கஸ் (Staphylococcus) எனும் பாக்டீரியாவால் வரும் தொற்றால், அழுகும் புண்களை உடையவர்களில் 90 சதவீதம் பேர் கண்டிப்பாக இறந்துவிடுவார்கள். 1929-ல் டி’ஹெரல் மிகத்துணிவாக வேறிடங்களில் செய்ததுபோல் இங்கும் ஒரு பரிசோதனை செய்ய முற்பட்டார். அவருடைய பரிந்துரைத்தலின்படி இதற்கான பிரத்யேகமான ஒரு பாக்டீரியோஃபாஜை இந்தமாதிரியான ஒரு நோயாளிக்கு (சாவின் எல்லையில் நின்று கொண்டிருந்தவர்) சலைன் ட்ரிப்ஸ் (saline drips) வழியாகக் கொடுத்தனர். இதற்கு ஒரு மணி நேரமானது. என்ன ஆச்சரியம். அடுத்தநாள் அவர் ஜுரம் குறைந்து சிறிதுசிறிதாகக் குணமாகி ஏழெட்டு நாட்களில் வீடு திரும்பிவிட்டார். அப்போதிலிருந்து இந்த மாதிரி நோயாளிகளை இத்தகையதொரு முறையில் குணப்படுத்தலாயினர். இந்த வைத்தியமுறை பிரபலமாகிக்கொண்டு வந்தது.
மற்ற தொற்றுநோய்களான டைஃபாயிட் முதலானவைக்கும் இவ்வாறான ஃபாஜ் முறையைப் பயன்படுத்தி குணப்படுத்த முடிந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நண்பரான ஒரு பிரபல விஞ்ஞானி தாம் சொற்பொழிவாற்றிய ஒரு கான்ஃபரன்ஸில் அனைவருடனும் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். பாக்டீரியாக்களின் வைரஸான பாக்டீரியோஃபேஜ்களைப் பயன்படுத்தி தொற்றுக்களைக் குணமாக்குவது பரவலாக இருந்த அக்காலத்து சமாச்சாரம் அது; அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே புதுத் தேடல்களில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்களாலும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மருத்துவர்களாலும் இந்த நூதன முறைகள் பயன்படுத்தப்பட்டும் வந்தன. நம் விஞ்ஞானியின் தந்தையும் ஒரு மருத்துவர். அவருடைய தாய்க்கு டைஃபாயிட் தொற்றுவந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். சுரம் குறையவேயில்லை. நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. மருத்துவரான தந்தை துணிந்து ஒரு செயல்பாட்டில் இறங்கினார். சால்மொனெல்லா டைஃபி (Salmonella typhi) எனும் டைஃபாய்டு தொற்று பாக்டீரியாவினைத் தாக்கும் பாக்டீரியோஃபேஜ்களை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்களிடமிருந்து வரவழைத்தார்; தமது மனைவியின் உடலில் அவற்றைச் செலுத்தினார். மருந்துகள், சிகிச்சை முறைகள் பற்றிய கட்டுப்பாடுகள் பெரிய அளவில் செயல்படுத்தப்படாத நாட்கள் அவை! 48 மணி நேரத்தில் தாயின் சுரம் இறங்கி படிப்படியாக அவர் குணமடைந்தாராம். மிகவும் பெருமையாக பாக்டீரியோஃபேஜ் மருத்துவத்தின் மகிமை பற்றிக் கூறி இதனை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். கேட்கவே ஒரு ‘த்ரில்லர்’ செய்தி மாதிரி இருந்தது.
பாக்டீரியோஃபேஜ் கொண்டு குணப்படுத்தும் முறையை உலகளாவிய பல சிறு ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரிய அளவில் ஆராய ஆரம்பித்துப் புது மருந்துகளுக்கான (ஆன்டிபயாடிக்குகளுக்கான) தேடலில் இறங்கியுள்ளன. இது பெருமளவில் பயனளிக்க இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவை. அவை தொடங்கப்பட்டு நடந்து கொண்டுள்ளன என்பதே நமக்கு மகிழ்ச்சிதரும் ஒரு செய்தி ஆகும்.
———–
உதவிய கட்டுரைகள்:
1. Bacteriophage as a treatment in Acute medical and surgical infections- F. d’Herelle- 1931: Bulletin of the New York Academy of Medicine.
2. Phage treatment of human infections. Abedon, et al., 2011. Bacteriophage.
3. The strange history of phage therapy, Summers, 2012. Bacteriophage.
