Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

மதியம்

மதிய நேரக் குட்டித் தூக்கத்திலிருந்து, அம்மா ஓர் உந்துதல் உணர்வோடு கண் விழித்த போது, ஜன்னலினருகே கிடந்த அழுக்கான, கசங்கிப் போயிருந்த ஒரு துண்டுச் சீட்டைப் பார்த்தாள். மதியச் சூரியனின் புழுதி படர்ந்த காற்றின் வேகத்தில் ஒரு கடிதம் துருப்பிடித்த  ஜன்னல் கம்பிகளினூடே உள்ளே வந்து விழுந்திருந்தது.

ஹரிதாசன் வீட்டிற்கு வருகிறான்.

அந்தச் சீட்டின் மடங்கியிருந்த பகுதிகளை நீவிய போது ,அவள் கண்கள் மீண்டும், மீண்டும் அந்த வார்த்தைகளின் மீது அலைந்தன. தூக்கத்தில் நிழலாடிக் கொண்டிருந்த காட்சிகளை அம்மா நினவு கூர்ந்தாள். இரு காவலர்கள் ஓர் இளைஞனை ஒரு கல் குவாரியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அவன் கைகளையும், கால்களையும் சுற்றியிருந்த சங்கிலிகள் சூரிய ஒளியில் மின்னின. ஏதோ எண் பொறிக்கப்பட்டிருந்த கைதி உடையை அவன் அணிந்திருந்தான். ஓர் அழுக்கான தொப்பி தலையிலிருந்தது. பாதத்தின் மேல்பாகம் வீங்கியிருந்தது. கடுமையான உஷ்ணத்தால் வியர்வை வழிய, முகம் கறுத்துக் கிடந்தது. 

வேகமான புழுதிக் காற்றில் சுற்றிலும் உருவங்கள் படர்ந்தன. வானத்தை மறைக்க முயன்று கொண்டிருந்த செங்குத்தான பாறையின் கீழ் அவர்கள் நின்றனர். கைதியின் கட்டுக்களை நீக்கி விட்டு, காவலர்கள் பக்கத்திலிருந்த கற்பாறையில் உட்கார்ந்தனர். தங்கள் பீடிகளைப் பற்ற வைக்க முயன்ற போது வீசிய மலைக்காற்றின் வேகத்தைச் சபித்தனர்.

பாறைகளின் பிளவுகளிடையே பதுங்கிக் கொண்ட கைதி நம்பிக்கையின்றிச் சுற்றுமுற்றும் பார்த்தான்.. ஒருவர் கூட அருகிலில்லை. காவலர்கள் கூக்குரலிடத் தொடங்கிய போது, அவன் மெதுவாக எழுந்தான். ஒரு சுத்தியலால் அவன் பாறையை உடைக்கத் தொடங்கினான். பக்கத்தில்  நின்றிருந்த ஒரு காவலன் கம்பால் பாறையைத் தட்டினான். உடைக்கும் சத்தத்தின் வேகம் அதிகமானது. மதியச் சூரியன் ஓர் உலைக்கலம் போல தகித்துக் கொண்டிருந்தான். காவலர்களின் கண்கள் தொலைவிலுள்ள எதன் மீதோ பதிந்திருந்தன, தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனைப் புறக்கணித்தபடி நீலக் கோடுகளுள்ள ஒரு பாட்டிலிலிருந்து தண்ணீர் குடித்தனர். உஷ்ணம் தாங்க மாட்டாமல் இளைஞன் தன் கையையுயர்த்தி, அரையாகக் குரல் கொடுத்தான். சுத்தியல் பாறையின் மீது வேகமாக மோதியதால் தீப்பொறிகள் வானில் பரவின. வியர்வையும், தீப்பொறிகளும் காற்றில் கலந்து, பள்ளத்தாக்கைச் சுற்றிப், புழுதியைக் கிளப்பியது.

அந்த மனிதன் தன் முகத்தைத் திருப்பியதும், அம்மா அவனைப் பார்த்தாள்.” ஐயோ, அது என் ஹரிதாஸ்தான்!”

தூக்கக் கலக்கம் அவளை விட்டு நீங்கிய பிறகும், “ஐயோ, அது என் ஹரிதாஸ்தான்!” என்று அம்மா தொடர்ந்து முனகிக் கொண்டிருந்தாள்.

அவள் முனகலில் பதட்டமோ, வேதனையின் சாயலோ சிறிதுமில்லை. எதிர்பாராத வகையில் அவளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கூட்டும் வகையிலான வியப்பும் கூட இல்லை. ஓர் எதிரொலி போல “ ஐயோ, அது என் ஹரிதாஸ்தான்!”என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்

காற்றாலும், சூரிய ஒளியாலும் உள்ளே தூக்கியறியப்பட்ட அந்தக் காகிதத்தின் எழுத்தக்களைச் சேர்த்துக் கொண்டு அவள், ’ஹரிதாஸ் வருகிறான்…என் ஹரிதாஸ் வருகிறான்’ என்று ஒரு கவிதை சொல்வது  போலத் திரும்பத் திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

அவனது கால்களைச் சுற்றிப் போடப்பட்டிருந்த கட்டுகள் இப்போது சிதைந்து போயிருக்கலாம், அவள் யோசித்தாள். “இத்தனை ஆண்டுகளில் காற்றும், மழையும், சூரியனும் அந்தச் சங்கிலிகளைத் துருப்பிடிக்கச் செய்து அதன் இணைப்பை அரித்திருக்கலாம். காவலர்களின் பார்வையிலிருந்து விலகி, பாறைகளுக்கிடையில் தனக்கான பாதையை உருவாக்கிக் கொண்டும், குவிந்த பாறைச் சில்லுகளைக் கடந்தும், புண்ணாகிப் போன தன் பாதங்களைச் சுட்டெரிக்கும் மண்ணில் புதைத்துக் கொண்டும் நடப்பான். என் மகனின் பொறுக்கும் திறன் காலத்தால் முறியடிக்கப்படாமல் இருக்கிறது.”

அப்போது அவளுக்கு அந்த ஞாபகம் வந்தது—இதே போன்றதொரு மதியப் பொழுதில், ஓர் இளம்பெண் ஒரு சிறுவனோடு வீட்டிற்கு வந்தாள். உள்ளே வந்தவடனேயே, “உன் பாட்டியின் கால்களில் விழுந்து வணங்கு” என்று சொன்னாள்.

சிறுவன் சுற்றுமுற்றும் கவனமாகப் பார்த்து விட்டு, தாயின் சொல்லுக்குப் பணிந்தான். தன் சிறிய கைகளால் உலர்ந்து, சுருங்கிப் போயிருந்த பாதங்களைத் தொட்டபடி கிடந்தான். குளிர்ச்சியான விரல்களால், தன் முன் நெற்றியை யாரோ வருடுவது போல உணர்ந்தாள் அம்மா. அவளது அசையாத நிலையைப் பார்த்த அந்தப் பெண்,“போதும், எழுந்திரு” என்றாள்.

அவன் எழுந்திருந்த போது இன்னமும் அவன் முகத்தில் குழப்பமிருந்தது. ஆனால் அம்மாவின் பார்வை தொலைதூரத்தில் பதிந்திருந்தது. அம்மாவின் காலில் அந்த இளம்பெண் விழுந்து வணங்கிய போதும், அவள் உணர்ச்சியற்றவளாகவே இருந்தாள் .

“எந்தக் கோடையில், எந்தக் குகையில் ஹரிதாசுடன் உன் இணைவு நிகழ்ந்தது?” என்று அம்மா கேட்க விரும்பினாள். தன் வார்த்தைகளைத் தானே முழுங்கி விட்டாள்.

ஒருவிதப் பதட்டத்தோடு அந்த இளம்பெண் காத்திருந்தாள். அம்மா நிச்சயமாக அவர்களைப் பற்றி விசாரிப்பாள். சந்தேகமின்றித் தன் பேரனை ஆசீர்வதிப்பாள்.

அவளை உட்காரச் சொல்ல வேண்டுமென்று கூட அம்மா நினைக்கவில்லை. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, சோர்வடைந்த அந்தப் பெண் தரையில் உட்கார்ந்து விட்டாள். மதியச் சூட்டினால் தளர்ந்து போன குழந்தை அம்மாவின் மடியில் சுருண்டது.

இது எதையும் அம்மா கவனிக்கவில்லை. அவள் பார்வை இன்னமும் தொலை தூரத்திலேயே பதிந்திருந்தது.

என் மகனைப் பற்றி எனக்குள் தோன்றும் காட்சிகள் என்பவை, இருண்ட தனிமையும், இரவுகளும் மட்டுமே 

ஹரிதாஸ் எங்கிருந்தாலும் குறுகிய காலத்திற்காவது என்னிடம் வருவான்.

கணக்கற்ற காட்சிகள். கணக்கற்ற ஓசைகள்.

ஒரு கையில் கேடயமும், மற்றொரு கையில் ஈட்டியும் ஏந்திய வீரனொருவன், கிழக்கு திசைக் காற்றைப் பிளந்து கொண்டு, அந்தப் பெரிய கோட்டையின் மதில்களை நோக்கிப் போனான். அவன் முன்னோக்கிப் போன போது, வலிமையான கைகளின் தசைகளும், இரும்புக் கவசமும் சூரிய ஒளியில் ஒரு சேர மின்னின. அவனுடைய ஈட்டி காற்றையும் ஒளியையும் ஊடுருவிச் சிதைத்தது.

இன்னொரு சமயத்தில், ஹரிதாஸ், தன் நான்கு கால்களையும் தரையில் ஊன்றி, ஊர்ந்த போது, நசுங்கிய இலைகளின் கீழே இரத்தத் துளிகள் சிதறின.

ஹரிதாஸின் ரத்தம்? என் ரத்தம்? தாகத்தால் அவன் வரண்டிருப்பான் கடும்பசியில் வாடியிருப்பான் !

அன்றிரவு அம்மா தூக்கத்திலிருந்து பதறியெழுந்து அழுதாள். பின்பு தன் வேதனையை அடக்கிக் கொண்டு, சமையலறைக்குள் போய் விளக்கை ஏற்றி. மீதமிருந்த சோற்றை மூன்று உருண்டைகளாக்கி, ஜன்னலின் வழியே வெட்டவெளியில் வீசியெறிந்தாள்.

சோர்ந்து போயிருந்த அந்த இளம்பெண்ணின் கண்கள் அந்த முதியவளின் முகத்திலேயே பதிந்திருந்தன. குழந்தை அவள் மடியில் தூங்கிக் கொண்டு இருந்தது.

“அவள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாள்? நான் அவளுக்கு என்ன தரவேண்டும்? கோவில்களில் செய்த பல பிரார்த்தனைகளுக்கும், படையல்களுக்கும் பின்புதான் என் மகன் பிறந்தான். குகைகளினூடே, பாறைகளுக்கு நடுவே இந்தப் பெண் அது மாதிரியான தியாகம் ஏதும் செய்தாளா? அம்மா யோசித்தாள். அவர்களுக்குக் கொடுக்க என்ன இருக்கிறது? அவர்களின் நமஸ்காரங்களுக்கான விஷேத்தையும் கூட அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

அந்த இளம்பெண் லேசாக அசைந்து பெருமூச்சு விட்டாள். களைப்பாகத் தன் மடியில் படுத்திருந்த மகனின் தலையைத் தடவியபடி, “ நாங்கள் விடியற் காலையிலேயே கிளம்பி விட்டோம். நீண்ட பயணம், தாங்க முடியாத வெயில்….”

அம்மா அதைக் கேட்டுக் கொண்டது போல இருந்தது. 

ஹரிதாஸ், இரத்தக் காயங்கள் பட்டிருந்த தன் உடலை மெல்ல நகர்த்தி அந்தக் காட்டுக்குள் ஊர்ந்து கொண்டிருந்தான். வானத்தையே மறைக்கும் அளவிற்கு உயர்ந்திருந்த மரக்கிளைகளில் தங்குவதற்காக சிறகொலிகளை ஏற்படுத்தியபடி ஒரு பறவைக் கூட்டம் வந்தது. காற்றின் உறுமல், இரவுப் பட்சிகளின் அலறல், வண்டுகளின் இரைச்சல் ஆகியவைகளோடு அந்த இரவு நகர்ந்து கொண்டிருந்தது. வாய் வரண்டிருந்த நிலையில் அருகில் எங்கோ தண்ணீர் ஓடும் சப்தம் கேட்டு, அவன் அந்த இடத்தை நோக்கி ஊர்ந்தான்.

அம்மா திடீரென எழுந்து உள்ளே போனாள். சோற்றுப் பாத்திரத்தோடும், தண்ணீர் கூஜாவோடும் திரும்ப வந்தாள்.

அந்த இளம்பெண்ணின் கண்கள் அகலமாயின. சொல்ல முடியாத பசியுணர்வு அவள் முகத்தில் வெளிப்பட்டது. தன் மகனை எழுப்பினாள். தூக்கக் கலக்கத்தில் அந்தச் சிறுவன் ஏதோ முணுமுணுக்க, அந்தப் பெண் தன் கண்ணீரை அடக்கப் பெரும்பாடு பட்டாள். அம்மாவும், பையனும் அந்தக் குளிர்ந்த நீரை வேகமாகக் குடித்து விட்டு, மீதமிருந்த சோற்றை மிக அவசரமாகச் சாப்பிட்டனர். அதைப் பார்த்த போது, முதல் முறையாகத் தன் கண்கள் கலங்கியதை அம்மா உணர்ந்தாள். 

மயங்கிய நிலையில் ஓர் ஓடையின் அருகில் ஹரிதாஸ் படுத்திருந்தான். உதடுகளிலும், நெஞ்சிலும் சோற்றுப் பருக்கைகள் ஒட்டியிருந்தன.

அம்மா அவர்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பசியடங்கிய நிலையில் இளம்பெண்ணும், சிறுவனும் அம்மாவையே நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அவர்களுக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும்? இன்னமும் ஏன் காத்திருக்கிறார்கள்?” அம்மா தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

அந்த இளம்பெண், தன் மகனின் பிஞ்சுக் கரத்தைப் பிடித்துக் கொண்டு, மங்கிய சூரிய ஒளியில் நடந்து  போனதை அம்மா நினைவு கூர்ந்தாள். அந்தப் பெண்ணிற்கு திடீரென வயதாகி விட்டதாக அம்மா நினைத்தாள்.

நரைத்துப் போன கூந்தலோடு இருந்த அந்தப் பெண்மணியின் தளர்ந்த விரல்களைப் பிடித்துக் கொண்டு ஹரிதாஸ் உறுதியாக நடந்தான்.

அவர்களிருவரும் போன பிறகும் அம்மா ஒரு வகையான திகைப்பில் ஆழ்ந்திருந்தாள். நீண்ட நேரத்திற்குக் கதவின் மீது சாய்ந்தபடி நின்றிருந்தாள். அவர்கள் யார்? ஏன் அவ்வளவு நீண்ட தூரத்திலிருந்து என்னைப் பார்க்க வந்தார்கள்? என் கையால் சாப்பிடவா? அதற்குப் பதிலாக அவர்கள் அல்லவா எனக்குச் சாப்பாடு தந்திருக்க வேண்டும்? 

காற்றாலும், சூரியனாலும் உள்ளே வீசப்பட்ட சுருங்கிய காகிதத் துண்டைப் பிடித்தபடி, அம்மா ஜன்னலருகே நின்றிருந்தாள்.

“இந்தக் காற்றையோ, சூரியனையோ நான் ஒரு சிறிதும் நம்ப மாட்டேன்.” அம்மா தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். “பல ஆண்டுகள் கடந்து விட்டன. எத்தனை தடவை இந்த மாதிரிச் செய்திகள் ஜன்னல் கம்பிகளின் ஊடே உள்ளே வந்து விழுந்திருக்கின்றன…?”

குழப்பத்துடன் அந்த எழுத்துக்களை அம்மா கூர்ந்து பார்த்தாள். அந்த எழுத்துக்கள் அவளுக்குப் பழக்கமானவையாகத் தெரிந்தன. அது அவளுடையதா? அல்லது ஹரிதாஸினுடையதா? அந்த எழுத்துக்கள் எந்த அசைவுமின்றி இருந்தன. அவ்வளவு உன்னிப்பாக அவள் பார்த்த பிறகாவது அவை சிறிதளவு அசைந்திருக்க வேண்டுமல்லவா? அவை உயிர்த்து இருக்க வேண்டுமல்லவா? அவளிடம் பேசியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அவை வெள்ளைப் பரப்பின் மீது பதிக்கப்பட்டவை போல அசைவின்றிக் கிடக்கின்றன…? 

உயிர்ப்பற்ற அந்த எழுத்துக்கள், அந்த வேதனை நிறைந்த தாயிடம் என்ன சொல்ல முடியும்? பிறகு அவள் வழக்கம் போல அந்தக் காகிதத் துண்டைக் கசக்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்தாள்.

அந்தப் பொழுதிலும் கூட, சூரியன் சுட்டெரிக்கும் பள்ளத்தாக்கில் ஹரிதாஸ் சுத்தியலை உயர்த்திப் பிடித்தபடி பாறைகளை உடைத்துக் கொண்டிருந்தான். 


Author Sethu. | Wikimedia Commons

சேது என்று எல்லோராலும் அழைக்கப்படும் சேது மாதவன் 40 க்கும் மேற்பட்ட படைப்புகளின் ஆசிரியர். அடையாளங்கள், பாண்டவபுரம், மறுபிறவி ஆகியவை அவரது படைப்புகளில் சிலவாகும். கேரள சாகித்ய அகாதெமி, விருது, வயலார் விருது ஓடக்குழல் விருது, மலயத்தூர் விருது, பத்மராஜன் விருது ,எழுத்தச்சன் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் 

நன்றி: https://scroll.in/article/1085915/afternoon-in-malayalam-writer-sethus-short-story-an-elderly-woman-awaits-her-sons-return‘Afternoon’: In Malayalam writer Sethu’s short story, an elderly woman awaits her son’s return

Exit mobile version