Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

சிவப்பில் ஒளிரும் மண்ணின் நினைவும் மனதின் மொழியும்

சிவப்பு என்பது வெறும் நிறமல்ல; அது கற்கால மனிதன் தன் உள்ளுக்குள் புதைந்திருந்த உணர்வுகளை   ஒளியின் மூலம் வெளியில் கொண்டு வந்ததற்கான முதல் சாட்சி. நிறங்களில் சிவப்பு மட்டும் கண்ணில் விழும் முன்பே இதயத்தில் பதிந்துவிடும். அதனால்தான் என்னவோ மனித வரலாற்றின் அனைத்து காலங்களிலும் ரத்தத்தின் சுமை, நெருப்பின் நிழல், கனியின் கனிவு, மங்கலத்தின் முத்திரை, புரட்சியின் துடிப்பு, காதலின் தழல், தியாகத்தின் தீ போன்றவைகளில் சிவப்பு உணரும் பொருளாகவே இருந்துள்ளது. 

கெல்லி குரோவியரின் The Art of Colour (2023, Yale University Press என்ற சமீபத்திய நூல் கலை வரலாற்றை முதன் முதலாக காலவரிசைகளில் இல்லாமல், நிறங்களின் வழியாக சொல்ல முயல்கிறது. எழுத்தாளரின் பார்வையில், ஒவ்வொரு நிறமுமே சமூகமாகவும், வணிகப் பாதையாகவும், நம்பிக்கையாகவும், தொழில்நுட்பமாகவும், அழிவாகவும் புதுமையால் உருவாகும் ஒரு உயிர்க்கதையாகும்

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, கருப்பு, வெள்ளை, பழுப்பு, உலோக நிறம் (தங்கம், வெள்ளி) என்ற பத்து வண்ணங்களை எடுத்துக்கொண்டு அது சார்ந்த முப்பத்து ஒன்பது நிறமிகளைப் பதிவுசெய்கிறது. இந்த புத்தகத்தை பொருள் வேதியியலாளனாகவும், இந்தியக் கண்ணோட்டத்திலும் படித்த போது சிவப்பின் கதை இன்னும் ஆழமாகிறது. பீம்பேட்கா குகை ஓவியங்களின் சித்தரிக்கப்பட்ட சிவந்த மண்ணும், பண்டைய இந்தியக் கலைகளில் காணப்பட்ட மங்களச் சிவப்பு, அஜந்தாவின் கதையோவியங்களில் உருப்பெறும் சிவப்பு, எல்லோராவின் பாறைச்சிற்பத்தில் எழும் அழகியல் ஒலி தவிர்த்து, இன்றைய நவீன வேதியியலில் பேராசிரியர் எம்.ஏ. சுப்பிரமணியன் (Oregon University) தேடும் புதிய சிவப்பு ஆகியவை அனைத்தும் நீண்ட வரலாற்றின் வெவ்வேறு நிழல்கள். 

சிவப்பு என்பது உணர்வின் முதல் மொழி

மனிதர்கள் மொழியை உருவாக்குவதற்கு முன்னரே நிறங்களை உணர்ந்தார்கள். அந்த நிறங்களில் குறிப்பாக சிவப்பு முதலில் மனதில் தங்கியது போலத் தோன்றுகிறது. ஏனெனில் சிவப்பு என்பது உடலுக்குள் இருக்கும் வாழ்வின் வெளிப்புறச் சின்னம். நாம் எளிதாக உணரும்  இரத்தம், நெருப்பு, வெப்பம், உயிர்ச்சுடர், கனியின் பழுத்த தன்மை போன்ற அனைத்தும் சிவப்பைச் சூழ்ந்து நிற்கின்றன. எனவே சிவப்பு என்பது நமது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் எழுத உதவிடும் இயற்கை மொழி. கலைஞன் சிவப்பை வெறும் நிறத்திற்காக மட்டும் தேர்ந்தெடுப்பதில்லை. அவன் தனது ஓவியத்திற்கு உயிர் தர உள்மொழி ஒன்றையையும் தேர்ந்தெடுக்கிறான். அது ஓவியத்தில் மூச்சுக் காற்றை வேகப்படுத்துவதோடு, காதல், எச்சரிக்கை, போர்க் குரல் போன்றவற்றில் வடிக்கும் போது, சிவப்பு நிறம் கலை வரலாற்றில் மிகக் கண்ணியமானதாகவும், குழப்பமானதாகவும், விலையுயர்ந்ததாகவும், ஆபத்தானதாகவும் இருந்துள்ளது. அது ஒரே நேரத்தில் ஆசையையும், பொறுப்பையும் சுமந்த நிறமாகவும் இருக்கிறது.

கற்கால மனிதன் சிவப்பை உருவாக்கவில்லை; அவன் அதை மண்ணில் தான் முதலில் கண்டான். காவி (ochre), இரும்புச் செறிவு கொண்ட ஹீமடைட் (hematite) கற்கள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டாலும், அந்த சிவப்பு மண்ணிலேயே மீண்டும் பொருள் பெற்றது. உலகின் பல பண்டைய குகை ஓவியங்களிலும், இந்தியாவின் பீம்பேட்கா போன்ற பாறை வாழிடங்களிலும், சிவப்பு காவி மிக முக்கியமான நிறமாகத் திகழ்ந்துள்ளது. மேலும் அந்த நீடித்த நிறம், தூரநோக்குடன் தேர்வு செய்யப்பட்டது போலவும் தெரிகிறது. பாறையின் மேற்பரப்பில் காணப்படும் வெறும் பூச்சாக இல்லாமல்,  காலத்தின் மேல் வைக்கப்பட்ட அடையாளம்போல் தென்படுகிறது.

இந்தியாவின் பல குகை ஓவியங்களில் சிவப்பு மிகத் தெளிவாகப் பேசுகிறது. பீம்பேட்காவில் காணப்படும் சிவப்பு கலந்த ஓவியங்கள், வேட்டைக் காட்சிகள், விலங்குகள், மனிதக் கூட்டங்கள், நடனங்கள், சடங்கு நிகழ்வுகள் போன்றவற்றை உயிரோட்டமாய் காட்டுகின்றன. இந்த சிவப்பு நிறம் பெரும்பாலும் இரும்பு ஆக்சைடு சார்ந்த இயற்கை கனிமங்களிருந்து வந்திருக்கலாம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சில ஆய்வுகள் அதை ஹீமடைட், கோதைட் (goethite) போன்ற நீரேற்றிய இரும்பு ஆக்ஸைடுகளாகவும் அல்லது நன்கு அரைத்த சிவப்பு மண் பொடிகளாகவும் விவரிக்கின்றன. அதாவது, அந்தப் பழங்கால கலைஞர்கள் சிவப்பை நிறத்திற்காக மட்டுமில்லாமல், தங்கள் இடத்தின் நினைவுப் படங்களாகவும் மாற்றினார்கள் என்கிறார் குரோவியர். 

பீம்பேட்கா — இந்தியக் குகை ஓவியங்களின் தொடக்கம்

பீம்பேட்கா என்பது இந்தியாவின் தொன்மையான கலைநிலப்பரப்புகளில் ஒன்று. இது மத்திய இந்தியாவின் பாறை ஒதுக்கிடங்களில் அமைந்துள்ள ஒரு பரந்த வளாகம். இங்கே காணப்படும் ஓவியங்கள் மனித வரலாற்றின் பல்வேறு படிகளைத் தாண்டி வந்துள்ளன. வேட்டைக்காலம், இடையிலான சமூக வாழ்க்கை, பிற்கால அரசியல் உருவங்கள், குதிரை படைகள், சின்னங்கள், தெய்வீகக் குறிகள் என பல அடுக்குகள் இதில் பதிவாகியுள்ளன.

பீம்பேட்காவின் மிகப் பழைய படைப்புகளில் சிவப்பு, வெள்ளை, கருப்பு, பழுப்பு போன்ற நிறங்கள் முக்கியமாகத் தோன்றினாலும், சிவப்பு முதன்மை நிறமாக விளங்குகிறது. அது மனித உருவங்களை உயிர்ப்பிப்பதுடன், விலங்குகளின் இயக்கம், வேட்டையின் அபாயம்,

நடனத்தின் நளினம் போன்ற பல அம்சங்களைக் காட்டுகிறது. அந்தச் சிவப்பு கலந்த ஓவியங்கள் பழங்காலக் கலைச்சூழல்களுடன் இணைந்த மனித வாழ்வின் அழகையும், கூட்டமாக இருந்த சமூக அமைப்புகளையும் விவரிக்கின்றன.

பீம்பேட்காவின் சிறப்பு என்னவெனில், அது கலை என்ற நவீன சொற்றொடருக்குள் அடைக்க முடியாத ஓவியம் மட்டுமல்ல; அது அக்கால வாழ்வின் அடையாளத்தை பல தகவல்களுடன் கலந்த மொழி. அந்த மொழியில் சிவப்பு நிறம் என்பது ஒரு அசைவு (syllable) என்கிறார் குரோவியர்.

இந்திய மரபில் மங்களத்தின் நிறம் சிவப்பு

இந்திய கலாச்சாரத்தில் சிவப்பு பொருளாக இல்லாமல் பல மங்கள நிகழ்வுகளோடு இணைந்திருக்கிறது. இந்தியப் பண்பாட்டில் சிவப்பு உடலோடு மட்டும் அல்ல, சமூகத்தோடும், ஆன்மிகத்தோடும், சடங்குகளோடும்  பிணைந்த நிறமாக இருந்துள்ளது. ஆடைகள், குங்குமம், கோயில் அலங்காரங்கள், ரங்கோலிகள் போன்ற அனைத்திலும் பண்பாட்டு ஒப்பந்தமாக செயல்பட்டுள்ளது. பழங்கால கலைஞர்கள் வண்ணத்தட்டில் இயற்கை நிறங்களைத் தேர்ந்தெடுத்தது தற்செயலாக அல்ல; நிலம், கல், இலை, பூ, மரச்சாறு, விலங்கு சார்ந்த பொருட்கள் பற்றிய சூழலியல் அறிவும், உள்ளூர் விவரங்களுடன் கலந்த பண்பாட்டு உணர்வும் இணைந்த ஒன்றாகும். இந்தியக் கலை மரபு இயற்கையிலிருந்து துண்டிக்கப்படாமல் இருந்ததால் தான் நிறம் இங்கே அர்த்தமுள்ளதாயிற்று. 

சிவப்பு, இந்திய மரபில், எப்போதும் வண்ணமாக மட்டுமில்லாமல் வாக்கியமாகவும் இருந்துள்ளது.

கெல்லி குரோவியர் விவரிக்கும் மற்ற நிறங்களின் உயிர்க்கதை

கெல்லி குரோவியர் கலை வரலாற்றை 39 நிறப்பொருட்களின் வழியே சொல்கிறார். இந்த நவீன அணுகுமுறை மிகப் பழமையான உணர்வையும் வெளிப்படுத்துகிறது. ஏனெனில் நிறம் என்பது காட்சி மேற்பரப்பில் மட்டும் தோன்றாமல், பின்னணியில் இருக்கும் வரலாறு, வாணிபம், அரசியல், விஞ்ஞானம், நம்பிக்கை, நச்சுத் தன்மை, பாதுகாப்பு, கைவினை ஆகியவற்றின் சேர்க்கையாகக் காண்பிக்கிறது. 

குரோவியர் நிறங்களை கலைமொழியியல் (artymology) எனும் புதிய சொற்றொடருடன் புரிந்துகொள்ளச் சொல்கிறார். நிறங்கள் கலைமொழியின் சொற்களின் அசைவைப் போன்றவை. ஒவ்வொரு ஓவியத்திலும் சிவப்பானது ஒரே சமயம் ராணியாகவும், போராளியாகவும், பக்தையாகவும், மருத்துவராகவும், சுரங்கத் தொழிலாளியாகவும், வணிகராகவும் வெவ்வேறு கலைஞனின் கைகளில் மாறிக்கொண்டே வந்துள்ளது.

சிவப்பு நிறமியின் வரலாறு என்பது குறிப்பிட்ட சமூகத்தையும், அது எங்கிருந்து வந்தது, எவ்வாறு உருவாக்கப்பட்டது, யார் பயன்படுத்தினார்கள், எந்தச் சடங்கில், எந்தக் கலைப் பரப்பில், எந்தப் பேரரசின் வர்த்தகத்தில், எந்தத் தொழில்துறை மாற்றத்தில் என்று பல கேள்விகளை எழுப்பி உயிர் பெறச் செய்கிறது. 

https://www.winsornewton.com/blogs/articles/indian-red | Colour story: Indian Red – Winsor & Newton NA

இந்தியக் கலைகளிலும் இயற்கை நிறங்களின் பயன்பாட்டையும், அது மிக நீண்ட காலம் நீடித்திருக்கும் தன்மையையும், பாறை ஓவியங்களில், மடல் ஓவியங்களில், சுவர் அலங்காரங்களில், பழைய கையெழுத்துப் பிரதிகளிலும் காண முடிகிறது. சிவப்பு பெரும்பாலும் சிவப்பு காவி, ஹீமடைட், அரக்கு, மஞ்சிட்டிச்சாயம் (madder), சின்னபார் அல்லது மெர்குரி சல்பைடு (cinnabar, HgS) போன்ற கனிமங்களிலிருந்து வந்தது.

இயற்கை நிறங்கள் நடைமுறையான தேர்வாக இருந்தாலும், அதில் உள்ள உள்ளார்ந்த தத்துவம் மிக முக்கியம். கலைஞன் தனது சூழலைச் சுரண்டவில்லை. அதனுடன் உரையாடி, கற்களை பொடியாக்கி நிறமாக்கியுள்ளான். செடியிலிருந்து சாரையோ அல்லது சிறு பூச்சிகளிருந்து நிறத்தையோ, சுற்றுப்புறத்தைப்   பாழாக்காமல் உருவான பணிவான கலைச் செயல். மண் தந்ததை மண் மொழியிலேயே வெளிப்படுத்தும் பண்பு அது. 

பீம்பேட்கா, அஜந்தா, எல்லோரா, மூன்றும் குகை/பாறைச் சூழலோடு தொடர்புடையவை. ஆனால் அவற்றின் மனநிலை, பாவனை, இலக்கு, காட்சிமொழி, காலச் சூழல் ஆகியவை வேறுபடுகின்றன. பீம்பேட்கா என்பது மனிதன் இயற்கையோடு நேரடியாக வாழ்ந்த காலத்தின் கலை. வேட்டை, விலங்குகள், நடனம், குழுவாழ்வு, சின்னங்கள் ஆகியவை அனைத்தும் அங்கே நேர்மையாகப் பதிவாகியுள்ளன. இது இங்கே சிவப்பு என்பது உயிரின் அரிச்சுவடாகக் காணப்படுகிறது. அஜந்தா புத்த மதத்தின் கதை கூறும் உலகம். இங்கே மனித உருவம் மேம்படுத்தப்பட்டுள்ளது; சேர்க்கை சமநிலை, உணர்ச்சி நுணுக்கம், கதை ஆழம், சூழலின் அலங்காரம் போன்றவை அஜந்தாவின் அடையாளங்கள். இங்கு சிவப்பு ஆன்மிகப் பரப்பின் ஒளியாக மிளிர்கிறது. 

எல்லோரா மேலும் உயர்ந்த கட்டத்துக்குச் செல்கிறது. இங்கே கலை என்பது பாறையில் செதுக்கிய பிரபஞ்சத்தை சித்தரிக்கிறது; சிற்பம், இடவியல், பக்தி, கட்டமைப்பு அனைத்தும் ஒன்றாக இயங்குவதை காண முடியும். அஜந்தா ஓவியத்தின் மென்மையை எல்லோராவின் கட்டிடமயமான பெருமை மாற்றுகிறது. 

இந்த மூன்றையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும் போது, இந்திய கலை பீம்பேட்காவில் தொடங்கி அஜந்தா, எல்லோராவில் வளர்ந்தது என்பது அல்ல; அது கலை கற்கால மனிதனின் தினசரி வாழ்விலிருந்து ஆன்மீக அமைப்புகளுக்குள் எவ்வாறு விரிந்தது என்பதன் வரலாறு.

செம்மண்தான் முப்பதாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்த காட்சி மொழியின் முதல் எழுத்து என்று கூறுகிறார் குரோவியர். பழங்காலத்திலிருந்து நவீன காலம் வரை சிவப்பின் பயணம் என்பது ரசவாதம், வணிகம், நஞ்சு, விடுதலை ஆகியவற்றின் காவியம். இது பாறைகளும் தாவரங்களும் சந்திக்கும் கதை; நசுக்கப்பட்ட வண்டுகளின் முதுகில் ஏறி ஏகாதிபத்தியங்கள் எழுந்த வரலாறு; நிறப்பொருளின் வேதியியலே கலைப்படைப்பின் உணர்வு வெப்பநிலையைத் தீர்மானித்த தருணங்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சிவப்பு என்பது மண்ணோடு பிணைந்திருந்த எளிய இரும்பு ஆக்சைடுதான் நம் முன்னோர்களின் இரத்தத்திற்கும் உயிர் விசைக்கும் நேரடி இணைப்பு. ஆனால் நாகரிகம் விரிவடைந்த போது, நிறத்தட்டும் விரிவடைந்தது. மண் கொடுக்கக்கூடியதை விட அதிக ஒளிர்வுள்ள, அதிக ஆடம்பரமான சிவப்பை உலகம் நாடியது.

அப்போது பிறந்தது கருஞ்சிவப்பு அல்லது கார்மைன் (Carmine). இந்த மனதைக் கவரும் கிரிம்சன் நிறம் தென் அமெரிக்காவின் கள்ளிச் செடிகளில் வாழ்ந்த நாகதாளிகள்ளி (cochineal) பூச்சிகளின் நசுக்கப்பட்ட உடல்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. அங்கு சென்ற ஸ்பானிஷ்காரர்கள், ஐரோப்பிய பூச்சிகளால் உருவாக்க முடிந்ததை விட மிகவும் ஒளிர்வான நிறத்தைக் கண்டனர். இதுவே கார்மைன் என்பது ஏகாதிபத்தியத்தின் பொருளாக மாறி, ஐரோப்பிய செல்வந்தர்களின் சிவப்பு உடைகளையும், ராணிகளின் ஆடைகளையும் வண்ணம் தீட்டியது. ஆனால், இதன் விலையும் புகழும் இருந்தும், கார்மைன், பலி கொடுக்கப்பட்ட உயிரினத்தின் களங்கமான நினைவைத் தன்னுள் சுமந்து சென்றது.  

கார்மைன் அதிகாரத்தின் சிவப்பாக இருந்த போது, ரோஸ் மேடர் (Rose Madder) என்பது நெருக்கத்தின் நிறமாக மாறியது. Rubia tinctorum எனும் செடியின் வேர்களைக் கொதிக்க வைத்துப் பிரித்தெடுக்கப்பட்ட இந்த நிறப்பொருள், எண்ணெய் ஓவியர்களைக் கவர்ந்த ஒளி ஊடுருவும் தன்மையைக் கொண்டிருந்தது. இது செங்கல்லாக ஓவியத்தின் மீது அமரவில்லை; வண்ணக் கண்ணாடி வழியாக ஒளி செல்வது போல, உள்ளிருந்தே ஒளிர்ந்தது.

கலை வரலாற்றின் போக்கையே மாற்றிய இன்னொரு ஓவியத்தை குரோவியர் சுட்டிக்காட்டுகிறார்: யோகான்னஸ் வர்மீரின் (Johannes Vermeer) The Girl with a Wine Glass (1659–60)அமர்ந்திருக்கும் பெண்ணின் ஆடையில் பயன்படுத்தியுள்ள ரோஸ் மேடர் அல்லது அலிசரின் (alizarin) என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. அதன் நிறத்தை வெளியிட நசுக்கப்படவும், கொதிக்க வைக்கப்படவும் வேண்டிய வேர்களிலிருந்து வருகிறது. அதன் அழகில் மறைந்துள்ள வன்முறை அந்த நிறத்தைப் பிரித்தெடுக்கும் செயல்முறை, காட்சியின் பதற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இங்கே சிவப்பு என்பது வெறும் ஆடை அல்ல; அது உளவியல் நிலை. அது மயக்கத்துடன்  கொந்தளிப்பான சுயஉரிமையையும் குறிக்கிறது. அவள்  செயலற்ற பொருளாக இல்லாமல்,  மறைமுகமான ஆழங்களையும், நெருப்பு போன்ற உறுதியையும் சுட்டிக்காட்டும் நிறத்தில் போர்த்தப்பட்டிருக்கிறாள்.  நிறப்பொருளின் பிறப்பியலை, உணர்வின் பிறப்பியலாக வெளிப்படுத்தும் இதை கலைச்சொற்பிறப்பியல் (artymology) என்று குரோவியர் அழைக்கிறார். 

டிஷியனின் (Titian) The Assumptions of the Virgin என்ற ஓவியத்தில் சிவப்புச் சால்வைகள், வெனீசிய மரபுடன் இணைந்த மாந்தர் நிறங்கள், உணர்ச்சி, சூழலுடன் கலைக்கான பொருட்சார்ந்த மொழி எப்படி வளர்ந்தது என்பதையும் விளக்குகிறது.

எல்லா சிவப்புகளும் மென்மையானவை அல்ல. மறுமலர்ச்சிக் காலம் தொழில்துறை யுகத்திற்கு வழிவிட்ட போது, மாறிவரும் உலகின் தீவிரத்திற்கு ஈடுகொடுக்கும் சிவப்பைக் கலைஞர்கள் நாடினர். அவர்கள் செந்தூரத்தை (Vermilion) நோக்கித் திரும்பினர்.

மெர்குரி சல்பைடிலிருந்து (cinnabar) உருவாக்கப்பட்ட செந்தூரம் மிகவும் பிரகாசமானதாக இருந்தாலும்,  அதிக  விலையும், காலப்போக்கில் நிலையற்றதால் கருமையடையத் தொடங்கியது. மேலும் அதன் உற்பத்தியும்,  நச்சுத்தன்மையும் சுரங்கத் தொழிலாளர்கள், ஓவியர்கள் உயிருக்கு ஆபத்தானது. இருப்பினும் அந்த நிறம் கைவிட முடியாத அளவுக்கு மயக்கமானது.  நூற்றாண்டுகளுக்குப் பிறகு எட்வர்ட் முங்க் (Edvard Munk) தனது The Scream என்ற ஓவியத்திற்கு இந்த நிலையற்ற தன்மையைப் பயன்படுத்தினார். பாலத்திற்கு மேலே சுழலும் இரத்த நிற சிவப்பு வானம் என்பது சூரிய அஸ்தமனம் அல்ல; அது  நிலத்தார்ந்த அச்சத்தின் வெளிப்பாடு. முங்கின் தேர்வு அதற்கு நிகரான செயற்கை நிறம்  முக்கியமானது என்று குரோவியர் குறிப்பிடுகிறார். அந்த நிறப்பொருளின் உள்ளார்ந்த நிலையற்ற தன்மை, நவீன காலத்தின் பதற்றத்தைப் பிரதிபலித்தது. அது ஆபத்தானதாக உணரப்பட்டது, ஏனெனில் அது உண்மையிலேயே வேதியல் ரகசியத்தைச் (நச்சுத்தன்மையை) சுமந்து ஆபத்தைத் தெரிவிக்கிறது.

 சிவப்பு பரிணாமத்தின் இறுதி அங்கம் 19-ஆம் நூற்றாண்டு வேதியியலாளர்களுடன் வந்தது. 1868-ல், ஜெர்மன் விஞ்ஞானிகள் ரோஸ் மேடரின் செயல்பாட்டுக் கூறான அலிசரினை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கினர். ஒரே இரவில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்ட பயிர் காணாமல்  போனது. 

இதன் பிறகு மண்ணுடனோ, பூச்சிகளோடோ அல்லது வேருடனோ பிணைக்கப்படவில்லை. அதை எளிதில்  தயாரித்து, தரப்படுத்தி மலிவாக விற்க முடிந்தது. மாட்டிஸ் (Henry Matisse), டெரைன் (Andre Derain) போன்ற போவியம் (Fauvism) கலைஞர்கள் கேட்மியம் சிவப்பை (Cadmium Red) இயற்கைக்கு மாறான நெருப்புடன் எரியும் நிலப்பரப்புகளை வரைய பயன்படுத்தி,  நிறத்தை யதார்த்தத்திலிருந்து முழுமையாகப் பிரித்தார்கள். சிவப்பு என்பது இனி ஒரு பொருளின் விவரணை அல்ல, அதுவே தனி உணர்வாக மாறியது.

இன்று, மார்க் ரோத்கோ (Mark Rothko) அல்லது அனிஷ் கபூரின் (Anish Kapoor) படைப்புகளைப் பார்க்கும் போது, தொழில்நுட்பம் மாறியிருந்தாலும், மண்ணிலிருந்து சோதனைச் சாலைகள் வரையில் உருவான சிவப்பின்  உந்துதல் அப்படியே இருக்கிறது. 

கெல்லி குரோவியர் நமக்கு கூறுவது, சிவப்பு என்பது வெறும் ஒளியின் அலைநீளம் மட்டும் அல்ல; அது மனித வரலாற்றின் சுயசரிதை. குகையில் உள்ள எருமையின் இரத்தம், கப்பலில் உள்ள நசுக்கப்பட்ட வண்டு, வணிகரின் ஜாடியில் உள்ள கொதிக்க வைத்த வேர், சுரங்கத் தொழிலாளிகளின் நுரையீரலில் படிந்த  மெர்குரி, நவீனக் கலைஞரின் குழாயில் உள்ள செயற்கை மூலக்கூறு போன்றவை அனைத்தும் அவற்றின் வரலாறு. சுண்ணாம்புச் சுவரில் பதிந்த முதல் கைரேகையிலிருந்து, இன்றைய டிஜிட்டல் திரைகள் வரை, சிவப்பு எங்கும் பரிணமித்திருந்தாலும்,  நாம் இருக்கும் இடத்திலேயே நம்மை உறைய வைக்கும் தனது சக்தியை இழக்கவில்லை. 

சிவப்பை நோக்கிய வேதியியல் பயணம்

நவீன காலம் சிவப்பை செயற்கை நிறங்கள், நிறக்கூறுகள் என்று பல வகைகளில் அளவில்லாத அளவிற்குப் பெருக்கி சுலபமானதும், பிரகாசமானதும், ஒரேமாதிரியானதும் ஆக்கியுள்ளது. தொழில்துறையில் இது வெற்றியாகத் தோன்றினாலும், இதற்குள் சுற்றுச்சூழல் இழப்பு, நச்சுச் செலவு, இயற்கை அழிவு போன்ற பல பிரச்சனைகள் மறைந்துள்ளன. பல ஓவியங்களில், நவீன சிவப்பு மிக அழகானதாகத் தோன்றினாலும், அது இயற்கை சுழற்சியைச் சிதைக்கும் இரசாயனச் சுமையைச் சுமந்துகொண்டு, நவீன மனிதன் நிறத்தைக் கண்டு மகிழ்கிறானா அல்லது சூழலை மறைத்துக்கொண்டு ஒளிவெறியில் குளிக்கிறானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

சிவப்பு தற்போது நெறிமுறைப் பிரச்சினையாக மாறி, கலைக்கான ரசனை, தொழில்நுட்பத்தின் வசதி, இயற்கையின் வரம்பு மூன்றிற்கும் இடையே திணறிக் கொண்டிருக்கிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஓரிகான் மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மாஸ் சுப்பிரமணியனும் அவரது பட்டதாரி மாணவரான ஆண்ட்ரூ ஸ்மித்தும், சூப்பர்கம்ப்யூட்டிங்கை மேம்படுத்துவதற்காக செய்த ஆய்வில் தற்செயலாக யின்-மின் (YInMn, இட்ரியம் இண்டியம் மாங்கனீஸ் ஆக்சைடு) என்ற நீல நிறமியைக் கண்டுபிடித்தனர். இது அஸூர், செருலியன், கோபால்ட் போன்ற நீலங்களை விட சிறப்பாக இருந்ததால், கிரையோலா அற்கு ‘ப்ளூட்டிஃபுல்’ என்று பெயரிட்டு புதிய வண்ணப்பூச்சையும் வழங்கியது. வேதியியல் அமைப்பு மற்றும் செயல்பாட்டை இலக்கு வைத்து, திட்டமிட்டு கையாளுவதன் மூலம் புதிய வண்ணங்களை உருவாக்கும் பகுத்தறிவு சார்ந்த நிறமி வடிவமைப்பு சாத்தியம் என்பதை  சுப்ரமணியன் உணர்ந்தார். 

தனது ஆரம்பக் கண்டுபிடிப்பிற்குப் பிறகு பல ஆண்டுகளாக, சுப்ரமணியன் இட்ரியம் ஆக்சைடுகளுடன் பல்வேறு உலோகங்களைச் சேர்த்து மஞ்சள், ஆரஞ்சு, ஊதா மற்றும் இளம்பச்சை போன்ற வானவில்லின் பெரும்பாலான வண்ணங்களை உருவாக்கியுள்ளார். இருப்பினும், சிவப்பு மட்டும் எப்படி உருவாக்குவது என்று யாருக்கும் சரியாகத் தெரியாததால், அது இன்னும் எட்டாக்கனியாக உள்ளது என்கிறார்.

ஏற்கனவே ஏராளமான சிவப்பு நிறமிகள் இருந்தாலும், அவை அனைத்திலும் ஏதேனும் குறைபாடுகள் உள்ளன. கரிம சிவப்பு நிறமிகளைக் கையாள்வது கடினம்; மேலும் அவை காலப்போக்கில் மங்கிவிடும். கனிம சிவப்பு நிறமிகள் ஒளியால் நிறம் மங்காதவை, ஆனால் நச்சுத்தன்மை வாய்ந்தவை. உதாரணமாக காட்மியம் சிவப்பு, ஈயச் செந்தூரம், பாதரச சல்பைடு போன்றவை.

இந்த வண்ண ஆராய்ச்சி வெறும் அறிவுசார்ந்தது மட்டுமல்ல, லாபகரமான வியாபாரமும் கூட. 

நிரந்தரமான, பாதுகாப்பான மற்றும் மலிவான ஒரு சிவப்பு நிறத்தைக் கண்டுபிடிப்பது இன்று பொருள் வேதியியலில் புதிய சவாலாக மாறியுள்ளது. சமீபத்தில், சந்திர கனிமங்களில் காணப்படும் இரு இணைதிறன் கொண்ட குரோமியம் ஆக்சைடை உத்வேகமாகக் கொண்டு ஒரு மஜந்தா நிறமியை சுப்ரமணியன் உருவாக்கினார். அது சிவப்பு நிறம் இல்லையென்றாலும், வேதியியல் மூலம் கலைஞருக்கான முழுமையான வண்ண நிறமிகளின் தொகுப்பை வடிவமைக்க முடியும் என்பது அவருடைய நம்பிக்கை. இந்தப் பணியின் முக்கியத்துவம் புதிய நெறிமுறையைக் கட்டமைத்து, பிரகாசம், நிலைத்தன்மைக்கு அப்பாற்பட்டு பாதுகாப்பு, சுற்றுச்சூழலோடு கூடிய நீடித்த பயன் இருக்க வேண்டும் என்பது. இந்த ஆய்வு தற்போதைய நிறமி அறிவியலில் மிக முக்கியமான திருப்புமுனையாகத் தெரிகிறது.

https://cen.acs.org/materials/striking-blue-made-pigment-history/103/web/2025/06 | This striking blue made pigment history. Could red be next?

பண்டைய இந்தியக் கலைஞர்கள் நிறங்கள் சூழலிலிருந்து பிரியாமல் உருவாக்க முயன்றதைப் போல, இன்றைய விஞ்ஞானம் அதே உணர்வை உயர் நுட்பத்தில் மீட்டெடுக்க முயல்வது சிறப்பாகத் தோன்றுகிறது.

சிவப்பு எப்போதும் முரண்பாடுகளைத் சுமக்கும் நிறம். அது காதல், போர்க் குரல், மங்கலத்தின் அடையாளம், புரட்சி ஆகியவற்றுடன் இணைந்திருந்தாலும், இன்றைய நவீன உலகில் எச்சரிக்கை, அவசரம், அரசியல் எதிர்ப்பு, தீவிர உணர்ச்சி ஆகியவற்றையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த இரட்டைத் தன்மைதான் சிவப்பைக் கலைக்கு மிகவும் தேவையான நிறமாக மாற்றுகிறது. சிறிய சிவப்புத் துளி கூட ஓவியத்தின்  மையத்தை மாற்றிவிடும்.

சிவப்பு மனித மனத்தின் ஆழ்ந்த பிம்பம் போன்றது. ஒரே நேரத்தில் துக்கம், துடிப்பு, தைரியம், ஆசை ஆகியவற்றைச் சொல்கிறது.

இன்றைய காலத்தில் நாம் கேட்கும் கேள்வி, நிறத்தின் அழகை சூழலுக்கு விரோதமாக இல்லாமல் உருவாக்க முடியுமா? அதுவே சிவப்பின் சமகால நெறிக் கேள்வி. பழங்கால மனிதன் மண்ணிலிருந்து சிவப்பை எடுத்தான்; நவீன மனிதன் தொழில்துறை வழியே சிவப்பைப் பெருக்கினான்; எதிர்கால மனிதன் அது இயற்கைக்கு இழப்பாக மாறாமல் சிவப்பை மீண்டும் வடிவமைக்க முயற்சி செய்கிறான்.

இங்குதான் கலை, அறிவியல், நெறிமுறை மூன்றும் ஒன்றாகச் சந்திக்கின்றன. குரோவியரின் நூல் நிறமிகளுக்கு வரலாற்றைக் கொடுக்கிறது. இந்திய மரபு நிறமிகளுக்கு பண்பாட்டுக் குரலைக் கொடுக்கிறது. சுப்ரமணியன் போன்ற வேதியியலாளர்கள் நிறமிகளுக்கு எதிர்காலத்தை அளிக்க முயல்கிறார்கள்.

எதிர்காலத்தில் சிவப்பு மீண்டும் மண்ணோடு இணைந்திருக்கும்; ஆனால் இந்த முறை அது அறிவியலின் நுண்ணறிவாலும், பொறுப்பின் நுண்மை உணர்வாலும் வழிநடத்தப்படும்.

சிவப்பின் பயணம், மனிதனின் பயணமே. குரோவியரின் நிறமிகளின் வரலாற்று மொழி, சுப்பிரமணியத்தின் நவீன கண்டுபிடிப்பு  ஆகிய அனைத்தும் ஒரே நதியின் வேறு வேறு ஓட்டங்கள்.

சிவப்பு மாறினாலும் அதன் அடிப்படை மாறவில்லை. அது இன்னும் மனிதனை தன்னுள் இழுத்துக்கொண்டிருக்கிறது. அது இன்னும் மண்ணிலிருந்து எழுந்து, மனதில் முடியும் நிறம்.

சிவப்பின் வரலாறு என்பது நிறத்தின் வரலாறு மட்டுமல்ல; மனித உணர்வின், மனித அறிவின், மனித நெறியின், மனித நினைவின் வரலாறு.

Exit mobile version