காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் முண்டாசுக் கவி. ஆனால் அவன் இன்றைக்கு இருந்திருந்தால் நம்மை எல்லாம் பார்த்துக் காலை எழுந்தவுடன் காபி என்றுதான் பாடியிருப்பான். அந்த அளவு காபிக்கு அடிமையாகி இருக்கிறோம். ஆனால் காபியின் வரலாறு நமக்குத் தெரியுமா? அதைக் காபியே சொல்லிக் கேட்போம்.
என் பெயர் பூனா (Buna). எனது பூர்விகம் கிழக்கு ஆப்பிரிக்கா. நான் புதர் போன்ற அமைப்புடைய ஒரு செடி. எத்தனையோ யுகங்களாக நான் இந்தப் பகுதியில் வளர்ந்து வந்தாலும் மனிதர்கள் கண்ணில் பட்டது என்னவோ அவர்களின் காலக்கணக்கின்படி பொதுயுகம் ஒன்பதாம் நூற்றாண்டில், எத்தியோப்பியா என்று வழங்கப்படும் நாட்டில்தான். என்னைக் கண்டு கொண்டது பெரிய விஞ்ஞானியோ அறிவியலாளரோ இல்லை, ஒரு ஆடுமேய்ப்பவனால்தான் நான் இந்த உலகத்திற்குத் தெரிய வந்தேன். என்னுடைய சிவப்பு நிறப் பழங்களை உண்ட ஆடுகள் மற்றவற்றைக் காட்டிலும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்த அவன், சில பழங்களைப் பறித்து உண்டான். அதுவரை இல்லாத ஓர் உற்சாகம் அவனுக்கும் வர, என் பழங்களைப் பறித்து தன் மதத் தலைவர்களோடும் மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டான். என் பழங்களை உண்பது அவர்களுக்குப் பழக்கமானது.
என்னதான் உற்சாகம் தந்தாலும் என் பழங்களின் ருசி என்னவோ கசப்புதான். இதை எப்படிச் சமாளிக்க என்று பார்த்த எத்தியோப்பியர்களுக்கு ஒரு சமயம் உற்சாகம் தருவது பழங்கள் அல்ல, அவற்றின் கொட்டைகள்தாம் எனப் புரிந்தது. கொட்டையை எடுத்துக் காய வைத்து உண்பது, பொடி செய்து உண்பது என்று மெதுவாக உண்ணும் முறை மாறத் தொடங்கியது. எதோ ஒரு சமயம் தீயில் விழுந்த கொட்டைகளை எடுத்து உண்ண அதன் ருசி இன்னும் நன்றாக இருப்பதை உணர்ந்தார்கள்.
செங்கடலைத் தாண்டி யெமன் என்ற நாட்டுக்குச் சென்றேன். அங்கே கொட்டைகளை வறுத்துப் பொடி செய்து அப்பொடியின் மேல் வெந்நீரை ஊற்றி வரும் சாற்றினை குடிக்கக் கற்றுக் கொண்டார்கள். பொதுயுகம் பதினைந்தாம் நூற்றாண்டில் அங்கு என்னை இப்படிக் குடிப்பது பரவலாகி இருந்தது. அங்குள்ள சூபிகள் இரவு முழுவதும் விழித்திருக்க என்னைக் குடிக்கத் தொடங்கினர். மயக்கம் தரக்கூடிய பானங்களை அவர்கள் காவா என்பார்கள். அந்தப் பெயரையே எனக்கு வைத்து விட்டார்கள்.
யெமனில் இருந்து நான் சுற்றி இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்குப் பரவினேன். மெக்கா, கெய்ரோ, இஸ்தான்புல் போன்ற நகரங்களில் எல்லாம் என்னைக் குடிப்பதற்கு என்றே கடைகள் தோன்றின. அங்கு அமர்ந்து என்னைக் குடித்துக் கொண்டே இலக்கியம், தத்துவம், அரசியல் பேசுவதும் ஆடுவதும் பாடுவதும் அவர்களின் பழக்கமாயின. பல நேரங்களில் என்னைக் குடிப்பது தடை செய்யப்பட்டது ஆனால் என்னைக் குடிக்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை. மறைவாகக் குடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். நான் மீண்டும் மீண்டும் துளிர்த்து எழுந்தேன்.
இந்நாடுகளில் இருந்து, குறிப்பாகத் துருக்கி வழியாக நான் ஐரோப்பாவை பதினேழாம் நூற்றாண்டில் அடைந்தேன். துருக்கியில் காவா என்ற என் பெயர் காவே என்றானது அங்கிருந்து இத்தாலிக்குச் சென்ற பொழுது என்னைக் காபே என்று அழைத்தனர். பின்னர் ஆங்கிலத்தில் நான் காபி என்று அழைக்கப்படலானேன். ஆமாம் இன்றைக்கு உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் என் ஆதி வரலாறு இதுதான்.
முதலில் என்னைச் சந்தேகக் கண்களுடன் பார்த்த ஐரோப்பா விரைவிலேயே என்னை இரு கரம் கொண்டு அணைத்துக் கொண்டது. கொஞ்சம் கசப்பாகவே இருந்த என் ருசி அவர்களுக்குப் பிடிக்காமல் போனதால் என்னுடன் கொதிக்கும் பாலைச் சேர்த்துக்கொண்டு குடிக்கும் பழக்கத்தை அவர்கள் தொடங்கினர். அது போதது என்று சர்க்கரையையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டனர். உலகின் மற்ற பகுதிகளைத் தங்கள் காலனி ஆக்கிக் கொள்ளும் பொழுது இவர்கள் என்னையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அப்படி இவர்கள் கொண்டு சென்ற நாடுகளான பிரேசில், வியட்நாம், கொலம்பியா, இந்தோனேசியா ஆகியவற்றில்தான் நான் இன்றைக்கு அதிகம் பயிர் செய்யப்படுகிறேன்.
இதே பதினேழாம் நூற்றாண்டில் நான் நுழைந்த மற்றொரு நாடு இந்தியா. மற்ற நாடுகளுக்கு என்னைக் கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் இருந்த நேரம். பாபா புதன் (Baba Budan) என்ற துறவி தன்னுடன் ஏழே ஏழு விதைகளைக் கொண்டு வந்து சிக்மக்ளூர் குன்றுகளில் என்னை விதைத்ததாகச் சொல்கிறார்கள். இன்றைக்கு அந்தக் குன்றுகளைப் பாபா புதன் குன்றுகள் (Bababudangiri) என்றே அழைக்கின்றார்கள். இங்கிருந்து கூர்க், கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் என்னைப் பயிரிடுவது பரவலானது. வடஇந்தியாவில் தேநீர் குடிப்பது அதிகம் என்றாலும் தென்னிந்தியாவில் என்னைக் குடிப்பவர்கள்தான் அதிகம். அதிலும் பில்டர் காபி என்றாலே தென்னிந்தியா என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் பொழுது வறுத்து, பொடி செய்து, வெந்நீர் சேர்த்து வடிகட்டி என்று நிதானமாகக் காபி போட வழி இல்லாத பொழுது என்னை நேரடியாக வெந்நீரில் கலந்து குடிக்கும் படி ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் இன்ஸ்டண்ட் காபி. அந்த சமயத்தில் நான் கிடைப்பதற்கு அரிதான பொழுது என்னுடன் சிக்கரி என்ற செடியின் வேரைக் காயவைத்துப் பொடி செய்து கலந்து காபியைத் தயாரித்தனர். அந்த சுவை பிடித்த மக்கள் இன்றைக்கும் சிக்கரி கலந்த காபியைத்தான் விரும்புகிறார்கள்.
இன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் நான்தான். அராபிகா, ரொபஸ்டா என்று இரண்டு வகையில் என்னைப் பயிரிடுகிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் கலந்து காபி தயாரிப்பவர்களும் உண்டு. இவை இரண்டுதான் முக்கியமான வகைகள் என்றாலும் நான் நூற்றுக்கணக்கான வகைகளில் பயிரிடப்படுகிறேன்.
இந்தோனேசியாவில் வேறு ஒரு விந்தையான விஷயமும் உண்டு. அங்கு சிவெட் என்ற வகை பூனை போன்ற மிருகம் என் பழங்களை உண்ணும். ஆனால் அது பழத்தை உண்ணுமே தவிர என் விதைகளை அவை வெளியேற்றிவிடும். அப்படி வெளியேறிய விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கோபி லுவக் (உவ்வேக் இல்லை, லுவக்) தனித்த சுவையோடு இருப்பதால் அதை யானை விலைக்கு விற்கிறார்கள். இதே போல யானைகளை உண்ணச் செய்து அவற்றின் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் கொட்டைகளைக் கொண்டும் காபிப்பொடி தயாரிக்கிறார்கள். இதற்கும் யானை விலைதான் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை.
என் பிரத்யேகமான மணத்திற்குக் காரணம் எண்ணூறுக்கும் மேற்பட்ட ரசாயனச் சேர்வை காரணமாம். எல்லாரும் முகர்ந்து பார்த்து, பின் அருந்தும் வொயினில் கூட இவ்வளவு ரசாயனச் சேர்வை கிடையாது என்பது ஆச்சரியகரமான தகவல். இன்றைக்கு இத்தாலியின் காபிக் கலாச்சாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் உலகிலேயே தனி நபர் பயனீட்டளவில் அதிகம் என்னைக் குடிப்பவர்கள் இத்தாலியர்கள் இல்லை, அந்தப் பெருமை பின்லாந்து நாட்டுக்குத்தான். என்னைக் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்தன்மையான வழியை வைத்திருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, பிரபல இசையமைப்பாளர் பீத்தோவன் ஒரு முறை காபி அருந்த சரியாக அறுபது விதைகளை எண்ணி எடுத்துக் கொள்வாராம்.
எல்லாமே நல்லபடியாகத்தான் என்றில்லை. நான் விளைவிக்கப்பட தொழிலாளர்களின் உழைப்பு அதிகம் தேவை. ஆனால் அவர்களுக்குச் சரியான சம்பளம் தரப்படுவதில்லை, குழந்தைத் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர், இயற்கை வளங்களைப் பற்றிக் கவலைப்படாமல் காபித் தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன எனப் பலக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. இவை எல்லாம் இல்லாமல் வளம் குன்றா வளர்ச்சி (Sustainable Development), அறவழி பயிரிடுதல் (Ethical Farming) போன்ற வழிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை குறித்த சான்றுகள் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.
மேய்ப்பரால் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்தினரையே தன் கைப்பிடிக்குள் போட்டுக் கொண்டது மதம் மட்டுமல்ல, நானும் தான்!
யார் எப்படிக் குடித்தால் என்ன காபி நம் வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. எல்லாருக்கும் மனத்தில் என்றோ எங்கேயோ குடித்த ஒரு வாய் காபி நினைவில் நிற்கிறது. அதன் வாசம் பழைய நினைவுகளைக் கிளப்பி விடுகிறது. உடன் குடித்தவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அன்று இருந்த மகிழ்ச்சியோ துக்கமோ குழப்பமோ மீண்டும் நினைவுக்கு வருகிறது. எழுதத் தெரிந்தவர்கள் அதைக் குறித்து எழுதிவிடுகிறார்கள். இப்படி நனவிடை தோயாத எழுத்தாளர்கள் குறைவு. ஆனால் ஒவ்வொருவரும் எழுதும் கோணம் அவ்வளவு வித்தியாசமாக இருக்கும். அசோகமித்திரன் அவருடைய அனுபவங்களைக் குறித்து எழுதும் பொழுது காபியை அடிநாதமாக வைத்து அலுவலகப் பணிகளுக்கு நடுவே அருந்தும் காபி, அதைச் சுற்றி நடைபெறும் உரையாடல்கள் என்று நம்மை அந்தத் தருணத்திற்கே அழைத்துச் செல்வார்.
வேறு சில எழுத்தாளர்கள் காபிக் கடைகளில் உட்கார்ந்து அதன் வாசத்தைத் நுகர்ந்து கொண்டேதான் எழுதுவார்கள். ஹாரி பாட்டர் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை எடின்ப்ரா நகரில் உள்ள ‘தி எலிபெண்ட் ஹௌஸ் காபே’ என்ற காபிக்கடையில் அமர்ந்துதான் ஜே.கே. ரௌலிங் எழுதினாராம். இதனால் புகழ் பெற்ற அந்தக் கடை சுற்றுப்பயணிகளால் மெய்க்கப்படுகிறதாம்.
எழுத்தாளர்கள் மட்டும் என்றில்லாமல் இன்றைக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது போல் அருகில் இருக்கும் காபிக்கடைகளுக்குச் சென்று அங்கிருந்து வேலை செய்யும் பழக்கம் பொதுவாகவே அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தால் தெரியும் தனிமை, இங்கு மற்றவர்களுக்கு இடையே அமர்ந்து வேலை பார்க்கும் பொழுது தெரிவதில்லை. உண்ண உணவும், குடிக்கப் பானங்களும், இலவச இணைய இணைப்பும் பலரையும் இந்தக் காபிக்கடைகளுக்கு வரச் செய்கின்றன.
சுறுசுறுப்பாக வேலை செய்யவும் காபி வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அதை சற்று நிறுத்தி ஓய்வெடுக்க நினைத்தாலும் ஒரு காபி குடிக்கத் தோன்றும். சிலருக்குக் கவனத்தைக் குவித்து யோசிக்கக் காபி வேண்டும். வேறு சிலருக்கோ, அதிகம் யோசித்துத் தலைவலிக்கிறது, ஒரு காபி குடித்தால்தான் சரியாகும் எனத் தோன்றும். இப்படி முரண்பட்டக் காரணங்களுக்காகக் காபி தேவைப்படுவது ஆச்சரியம்தான்.
உண்மையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல முறை காபி குடுத்து தூக்கத்தைக் கெடுத்துக் கொள்பவர்கள் அதிகம். காபியில் இருக்கும் கபெயின் (Caffeine) என்ற வேதிப்பொருள் நம் உடம்பு ஓய்வு வேண்டும் என மூளைக்கு அனுப்பும் செய்தியைத் தடுக்கும் வல்லமை கொண்டது. அதனால் நம் உடம்பு அயர்ந்தாலும் அது நமக்குத் தெரிவதில்லை. தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கத்தைத் தவிர்க்க காபி குடிப்பது, அதனால் தேவையான ஓய்வு கிடைக்காமல் போவது, ஓய்வினைத் தவிர்க்க மீண்டும் காபி என்ற சுழலில் நாம் மாட்டிக் கொள்கிறோம். தூங்குவதற்கு முன் கபெயின் இருக்கும் பொருட்களை உள்ளெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
எனக்குக் காபி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் என் காபி நான் நினைக்கும் ருசியில் இருக்க வேண்டுமென்பதால் நானே போட்டுக் குடித்தால்தான் எனக்குத் திருப்தி. வறுத்த கொட்டையை வாங்கி வைத்திருக்கிறேன். காலை எழுந்து கொட்டைகளைப் பொடி செய்யும் பொழுது வீடே மணக்கும். அந்தப் பொடியைப் பில்டரில் போட்டு, வெந்நீரை ஊற்றி, அது வடியும் வரை காத்திருக்கும் பொழுது அன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை மனத்தில் பட்டியல் போட்டுக் கொள்வேன். காபிக் கோப்பையைக் கையில் எடுத்து, அதன் வாசத்தை நுகர்ந்து, முதல் சொட்டு நாக்கில் படும் பொழுது எழும் ருசியில்தான் அந்த நாள் தொடங்கும்.
“ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்று கண்ணதாசன் எழுதியதைப் போல நம்மை இந்தக் காபி ஆட்டுவிக்கிறதே என்று ஒரு நாள் நினைக்கப் போக. கண்ணனையும் காபியையும் வைத்து எழுதிய சிலேடை வெண்பா
வலிகளைப் போக்கும் வலிமையைச் சேர்க்கும்
கலியில் பருகக் கசக்கும் மருந்தாகும்
வெண்ணெய்யும் சேர்த்து விளம்பிடும் இவ்வுலகே
கண்ணனுக்குக் காபியும் நேர்!
