இரவு முழுவதும் செடிகளின் மீது படுத்துறங்கிய பனி அப்போதுதான் எழுந்திருந்தது போல செடிகளின் மீது வெண்ணிற முத்துகளாய் பனித்துளிகளின் மிச்சம் படிந்திருந்தது. அதிகாலை நேர ஆள் அரவமற்ற சாலை நிசப்தமாகக் கிடந்தது. மெல்லிய சிலுசிலுப்பான காற்றுக்கு நொய்யல் வாய்க்காலோர நாணல் செடிகள் சாய்ந்தாடிக்கொண்டிருந்தன. அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் அணைமேடு மதகு வழியாக கசிந்து கொண்டிருந்த நீர் வாய்க்காலில் கொஞ்சம் போல ஓடிக்கொண்டிருந்தது. வாய்க்காலோரத்து குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் இந்த வாய்க்காலில்தான் வந்து கலக்கும். அதனால் எப்போதும் சேறும் சகதியுமாக கலங்கிய நிலையில் கருப்பு நிறமாகவே வாய்க்கால் தண்ணீர் காட்சியளிக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கிருக்கும் சில சிறுவர்கள் தூண்டிலும் கையுமாக மீன் பிடிக்க வந்துவிடுவார்கள்.
வாய்க்காலுக்கு தென்புறம் இருக்கும் தோல்ஷாப்புக்கு போகவும் வரவும் வாய்க்காலின் மீது போக்குவரத்துக்காக ஒரு சிறு பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் சரிவு வழியாகத்தான் பசங்கள் மீன் பிடிக்க வாய்க்காலுக்குள் இறங்குவார்கள். இந்தப்பக்கத்து வாய்க்கால் தண்ணீர் கொஞ்சம் சுத்தமாக இருக்கும். ஏனென்றால் தோல்ஷாப் கழிவுகள் இங்கு கலப்பதில்லை. தோல்ஷாப்பின் பின்புற வழியாக குழாய் அமைக்கப்பட்டு காலனி வீதியின் முன்புறத்திலிருந்து ஐம்பது வீடுகள் தள்ளி கரையோரத்தில் அடர்ந்திருக்கும் நாணல் மற்றும் புதர்செடிகளுக்குள் தெரியாமல் பதிக்கப்பட்டிருக்கும் குழை வழியாகத்தான் கழிவுகள் வெளியேறி வாய்க்காலில் கலக்கும்.
வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் சாயங்காலத்துக்கு மேல் கழிவுநீரை வெளியேற்றுவார்கள். அப்போது எழும் நாத்தம் குடலைப் புடுங்கும். ”கழிவு தண்ணிய தொறந்து உட்டுட்டாங்க…ச்சை..!” காலனி மக்கள் புலம்ப ஆரம்பிப்பார்கள். இந்த நாத்தத்தை உணர்ந்தும் சுவாசித்தும் அங்குள்ள மக்கள் பழகிவிட்டார்கள் என்றாலும் கழிவுநீர் வெளியேறி வாய்க்காலில் கலந்து வரும்போது எழும் நாத்தத்தை உணரும்போதெல்லாம் புலம்புவதும் அருவருப்புடன் முகம் சுழிப்பதும் சிந்துபாத் கன்னித்தீவு போல முடிவுறாத ஒரு தொடர்கதையாக நீடிக்கிறது. அங்கு வசிக்கும் மக்களுக்கு .மட்டுமல்ல, சுற்றிலுமுள்ள குழியூர், காளவாய், குறிச்சி, நஞ்சுண்டாபுரம் இட்டேரி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது இந்த தோல்ஷாப். அதனால் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதையோ அதனால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் பற்றியெல்லாம் மக்கள் பெரிதுபடுதுவதில்லை. அந்த துர்நாற்றத்தை மட்டுமல்ல எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டார்கள். வாழ்ந்தும் வருகிறார்கள் !
சிறுவர்கள் விவரமாக வாய்க்காலில் கழிவுநீர் கலக்காத இடமான தோல்ஷாப் முன்புறத்திலும் அதற்கு அந்தப்பக்கம் உள்ள காளவாய், குழியூர் பக்கத்தில் ஓடும் வாய்களில்தான் மீன் பிடிப்பார்கள்..நொய்யலாற்றில் கிடைப்பது போல வாய்க்காலில் மீன் கிடைக்காதுதான். சிறிய சிறிய கெண்டை மீன்கள் தூண்டிலில் மாட்டும். சிறுவர்களுக்கு இதுவே பெரிய விஷயம். ஒரு மீன் மாட்டிவிட்டால் போதும் “ஹோய்..” என்று மகிழ்ச்சி கூப்பாடு போட்டு மீன் துள்ளுவதைப் போல துள்ளிக்குதிப்பார்கள்.!
ஒருத்தனுக்கு மீன் கிடைத்துவிட்டால் போதும், ”எங்கடா காட்டு பாக்கலாம்..” என்று எல்லோரும் அவனை சூழ்ந்துகொண்டுவிடுவார்கள். சில சமயங்களில் வெற்றிப் பெருமிதமாக அப்படி அவன் பிடித்த மீனை எடுத்துக் காட்டும்போது அது கையிலிருந்து துள்ளி வாய்க்காலில் விழுந்துவிடும். அப்போது அவன் முகம் வருந்தி சோகமாகும் போக்கைப் பார்த்து பசங்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டு சிரிப்பார்கள். அவனுக்கு கோபம் எழ அவர்களை திட்டிக்கொண்டு அடிக்க ஓடுவான். பார்க்க வேடிக்கையாக இருக்கும். ,
நொய்யலாற்றில் மீன் பிடிப்பதை ஒரு கலையாகவே கொண்டு ஒருசிலர் இருக்கிறார்கள். இரவுகளில்தான் இவர்கள் மீன் பிடிக்கச் செல்வார்கள். அதில் குறிப்பிடதக்கவர் அசன் ராவுத்தரின் மகனான மசூது. பார்க்க ஆள் நோஞ்சானாட்டம்தான் இருப்பான். ஆனால் இரவுகளில் ஆற்றின் கரையோர வங்குக்குள் கைவிட்டு மொய்மீன் (விலாங்கு மீன்) பிடிப்பதிலும் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதிலும் ஆள் மகா சூரன். . பொள்ளாச்சி ரோட்டில் முன்புறம் சைக்கிள் கடை வைத்திருக்கும் மசூது ஞாயிறுகளில் பகலிலும் சனிக்கிழமையன்று இரவிலும் ஆற்றில் மீன் பிடிக்கச் செல்வான். கல்யாணத்துக்கு முன்புவரைக்கும் மீன் பிடிப்பதே அவன் வேலையாக இருந்தது. எந்நேரமும் தூண்டிலும் கையுமாக ஆற்றின் கரையோரம் சுற்றிக்கொண்டே இருப்பான். மசூதுவுக்கு இன்னொரு பெயர் தூண்டில்காரன்.
ஞாயிற்றுக் கிழமை மதியம் வரைதான் சைக்கிள்கடை வேலை. “திங்கக் கெழம காலையிலைக்கு வண்டி வேணும்..” என்று ஓவர் ஆயிலிங்க் செய்யவும், சைக்கிளை ரிப்பேர் செய்யவும் சிலர் சனிக்கிழமையன்று சைக்கிள்களை கொண்டுவந்து விடுவார்கள். அவர்களுடைய வண்டியை சரி பண்ணுவதற்காகவே ஞாயிறு மதியம்வரை கடையை திறந்து வைத்து வேலை செய்வான் மசூது.
சிறுவர்கள் சைக்கிள் ஓட்டிப்பழக சின்ன சைக்கிள்களை ஞாயிறு காலையில்தான் வாடகைக்கு எடுக்க வருவார்கள். விடாமல் சின்ன சைக்கிள்கள் வாடகைக்கு ஓடிக்கொண்டிருக்கும். சில சமயம் சாயங்காலம் வரைக்கும் பசங்கள் வந்து சைக்கிள் கேட்டுக்கொண்டே இருப்பான்கள். அப்போது மீன் பிடிக்க போக முடியாதே என்று மசூது யோசிப்பான். சாயங்காலத்துக்குள் ஐந்து ரூபாய் வருமானம் கிடைத்துவிடும். அப்போது மட்டும் நான்கு மணிவரைக்கும் கடையை திறந்து வைத்திருப்பான்.
மதியத்திற்குள் வேலையை முடித்துவிட்டு கடையை சாத்திவிட்டு வீட்டுக்குச் சென்று ஆர அமர உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு மூணு மணிக்கு மேல் வீட்டின் பின்புற ஏரவானத்தில் சொருகி வைத்திருக்கும் தூண்டிலையும் மீன் பிடிபதற்காகவே செம்மண்ணும் களிமண்ணும் கலந்து குலைத்து சின்னத் தொட்டியில் கழிவுகளையெல்லாம் போட்டு மண் புழுக்களை வளர வைத்திருப்பான். கொஞ்சம் மண் புழுக்களை ஒரு சிறிய டப்பாவில் போட்டு எடுத்துக்கொண்டு சின்னப்பையுடன் மெல்ல ஆற்றை நோக்கி நடப்பான் மசூது. மற்றவர்கள் ஒரே இடத்தில் தள்ளித் தள்ளி நின்றவாறு தூண்டில் போடுவார்கள்.
மசூது மட்டும் தனியாக யாருமே கிட்டத்தில் வராத இடமான நாணல் புதர் மண்டிக்கிடக்கும் ஆற்றின் கரையோரம் சென்று வாகாக நின்றுகொண்டு தூண்டில் போட்டுவிட்டு கொக்கு போல அமைதியாக காத்திருப்பான். கண்கள் மட்டும் தக்கையின் மீதே நிலைத்திருக்கும். தண்ணீரின் மேல்மட்டம் மெல்லிய கோடு போல வட்டமாக மெல்ல அசையும். மசூது உசாராகிவிடுவான். தூண்டிலை சுண்டி இழுக்க கையை தயாராக வைத்துக் கொள்வான். தக்கை மெல்ல இழுபடும். வேகமாகவும் லாவகமாகவும் சர்ரென தூண்டிலை சுண்டி இழுபான். தண்ணீருக்குள்ளிருந்து வானேறும் தூண்டில். தூண்டிலில் மாட்டியிருக்கும் ஒரு பெரிய கெண்டை மீன் மசூதின் இடது கையில் வந்து தஞ்சம் புகும். தூண்டிலிலிருந்து மீனை விடுவித்து கொண்டு வந்திருக்கும் பைக்குள் போட்டுக்கொள்வான். . குறைந்தபட்சம் ஐந்தாறு மீன்கள் கிடைத்ததும் கிளம்பிவிடுவான். .
மசூது பிடிக்கும் மீன்கள் ஒருநாள் கூட்டானுக்கு ஆகும். சனிக்கிழமை இரவு பிடிக்கும் மீன் ஞாயிறு அன்று மதியம் மீன் குழம்புக்கு சரியாகிவிடும். கடையை சாத்திவிட்டு கணவர் வந்து சாப்பிட உட்காரும்போது தனியாக மசாலா புரட்டி வைத்திருக்கும் மீனை எடுத்து கணவருக்கு பொரித்துக் கொடுப்பாள் மும்தாஜ். “ம்மா எக்கு வறுத்த மீனு?” மூன்றாவது படிக்கும் கடைக்குட்டி அன்வர் ஆசையுடன் கேட்பான்.
“எம்புள்ளைக்கு இரிக்கு..இதா உம்மா பொரிச்சுத் தர்றேன்” என்று ஒரு சின்ன மீனை மும்தாஜ் காட்டுவாள். “அன்வரப்பாக்கு இந்தா” என்று பாதி மீனை பிய்த்து சிறிய தட்டை வாங்கி அதில் வைத்துக் கொடுப்பான் மசூது.
“நீங்க சாப்பிடுங்கணு இதா அன்வருக்கு பொரிச்சாச்சு” என்பாள் மும்தாஜ். மசூது சைக்கிள் கடையை சாத்திவிட்டு வர எப்படியும் இரண்டு மணிக்கும் மேலாகிவிடும் என்பதால் பெரிய பெண்கள் இருவரும் மற்றும் அவரின் செல்ல மகனான அன்வரும் சாப்பிட்டுவிடுவார்கள். மும்தாஜ் மட்டும் கணவருடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவாள்.
அசன் ராவுத்தரின் நான்காவது மகனான மசூது இத்தனை காலமும் வாப்பா உம்மாவுடன் ஒன்றாக கூட்டுக்குடும்பத்தில்தான் இருந்து வந்தான். . மூன்றாவது மகன் அன்வர் பிறந்ததும் தரவாட்டில் இடவசதி போதவில்லை என்றும் வேறு சில பிரச்சனைகளும் எழுந்தது. ஏற்கனவே தரவாட்டில் வாப்பாவுடன் ஒரு அண்ணன் குடும்பமும் தம்பி குடும்பமும் இருக்கும் நிலையில் நான்கே அறைகள் கொண்ட அந்த வீட்டில் இடுக்குச் சந்துக்குள் மாட்டிக்கொண்ட அவஸ்தையுடன்தான் வேறு வழியில்லாமல் நான்கு குடும்பங்களும் காலத்தை தள்ளிக்கொண்டு இருந்தார்கள். எல்லோருமே வாடகை கொடுக்க வழியில்லாத அன்றாடம் காய்ச்சிகள்.
சைக்கிள் கடை வருமானத்தை வைத்துக்கொண்டு வாடகையும் கொடுத்து குடும்பத்தை ஓட்ட முடியாது என்று பல்லைக் கடித்துக்கொண்டு மசூதும் கூட்டுக் குடும்பத்தைவிட்டு வெளியேறாமலேயே இருந்துவந்தான். அண்ணனோ தம்பியோ வெளியேறுவர்கள் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவர்கள் தனிக்குடித்தனம் போற வழியே இல்லை. தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை வெடித்துக்கொண்டே இருந்தது. இரவுகளில் மும்தாஜ் அவனை குடைந்துகொண்டே இருந்தாள்.
“சைக்கிள்கட வருமானத்த மட்டும் வச்சுக்கிட்டு வாடகயும் குடுத்து குடும்பத்த ஓட்ட முடியாது. ரொம்ப கஷ்டமா இரிக்கும் ளா!” மனைவியிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தான் மசூது. மும்தாஜ் கேட்கவே இல்லை.. உம்மாவைப் பார்க்க அக்காவோ தங்கச்சியோ இரண்டொருநாள் வருவார்கள். அப்போது இன்னும் நெருக்கடியாக இருக்கும். சமைப்பது முதல் எல்லா வேலைகளையும் மும்தாஜே செய்ய வேண்டியிருக்கும். ஒத்தாசைக்கு மச்சான் பொண்டாட்டியும் வராது. கொழுந்தன் பொண்டாட்டியும் வரமாட்டாள். தனியாளாக மங்கு மங்குனு மும்தாஜ் மல்லுக்கட்டுவாள். அதுமட்டுமல்ல, மசூதுவின் தம்பி மனைவி நாத்தனார்களுக்கு அறையை ஒதுக்கிக் கொடுக்கமாட்டாள்.
மசூதுதான் வேறு வழியில்லாமல் மும்தாஜிடம் காதைக்கடித்து அறையை ஒதுக்கிக் கொடுக்கச் சொல்லுவான். மும்தாஜ் முகத்தில் கோபம் வெடித்துப் பொங்கும். வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக சம்மதிப்பாள்.. இவர்கள் முன்புறம் இருக்கும் சிறிய ஹாலில் படுத்துக்கொள்வார்கள். அடிக்கடி இது தொடர பெரிய பிரச்சனையாக வெடித்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்தது.
“இனியும் எத்தன காலத்துக்கு மாடு மாரி ஒங்க குடும்பத்துக்கு என்ன வேல செய்யச் சொல்றீங்க? இத்தன வருசமா மல்லுக்கட்டுனது போதும்ங்க. வேல செஞ்சு சலிச்சு வந்தா நிம்மதியா படுக்கக் கூட எடமில்ல. வாசல்ல வந்து நாயி மாரி படுக்க வேண்டியிரிக்குது” வருத்தமும் கோபமுமாக மும்தாஜ் வெடித்து புலம்புவதை மௌனமாக கேட்டுக்கொண்டிருப்பான் மசூது. அப்போது மனைவியைப் பார்க்க அவனுக்கு பாவமாக இருக்கும். இப்படியாக வேறுவழியில்லாமல் தனிக்குடித்தனம் போயே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டு .தரவாட்டிலிருந்து மனமே இல்லாமல் குடும்பத்துடன் வெளியேறி பாலக்காடு ரோட்டோரத்தில் இருந்த ஒரு குடிசை வீட்டில் குறைந்த வாடகைக்கு குடிபெயர்ந்தான் மசூது.
புளி பழுக்கும் காலங்களில் புளி அடிப்பதையும், மாங்காய் காய்க்கும் காலங்களில் மாங்காய் பறிப்பதையும் தொழிலாகக் கொண்ட கண்ணுக்குட்டி வீட்டு செய்தண்ணனுடன் அசன்ராவுத்தரும் சில சமயங்களில் அவர்களுடன் மீன் பிடிக்கச்செல்வார். சிறுவனாக இருந்த மசூதும் அப்போது வாப்பாவுக்கு துணையாக செல்வான். செய்தண்ணனின் வயதை ஒத்த அவரின் நண்பர்கள் நாலைந்து பேர் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்று சேர்ந்து மீன் பிடிக்கப் போவார்கள். இவர்கள் ஒரு வாரம் ஆற்றிலும் ஒரு வாரம் குளத்திலும் மீன் பிடிப்பதை ஒரு வழக்கமாகவும் பொழுது போக்காகவும் கொண்டிருந்தார்கள்.. வாரந்தவறாமல் இதை கடைபிடிப்பார்கள். பிடிக்கும் மீன்களை பங்கு பிரித்துக் கொள்வார்கள்.
ஒரு கட்டத்தில் அசன்ராவுத்தர் அவர்களுடன் மீன் பிடிக்கப் போவதை நிறுத்திக்கொண்டார். மசூது மட்டும் ஆர்வமுடன் அவர்களுடன் செல்ல ஆரம்பித்தான். சில சமயம் இரவுகளில் மொய்மீன் (விலாங்கு மீன்) பிடிக்கச் செல்லும்போது லாந்தர் விளக்கு பிடிக்க வேண்டி மசூதையும் அழைத்துக் கொள்வார்கள். கரிய இரவின் இருட்டில் ஆற்றின் சரிவில் அவர்களுடன் பயந்தபடியே மெல்ல இறங்குவான். ஆற்றுக்குள் இறங்கியதும் சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கும் ஒரு பெரிய இருட்டுப் பள்ளத்திற்குள் மாட்டிக்கொண்டதாக அவனுக்குத் தோன்றும். முழங்காலளவு தண்ணீரில் மெல்ல எட்டு வைத்தபடி ஐந்து பேரும் நடப்பார்கள். ‘எங்கயாச்சும் பெரிய குழியிரிந்தா உள்ள உழுந்துருவமே..’ அவனுக்குள் அச்சம் எழும் மேற்கொண்டு தண்ணீரில் நடக்கவே பயப்படுவான். கண்ட கண்ட பூச்சிகளின் சத்தம் அவன் அச்சத்தை மேலும் அதிகமாக்கும். ‘கூட ஆள் இருக்கங்கல்ல’ என்று பயத்தை உதறி மெல்ல நடப்பான்.
ஆற்றின் கரையோரம் உள்ள வங்குகளுக்குள் செய்தண்ணன் தைரியமாக கையை நுழைத்து மொய்மீனை தேடுவார். பயந்தபடியே லாந்தரை பிடித்தபடி நிற்பான் மசூது. மொய்மீன் கையில் மாட்டியதும் “டே! மாட்டிருச்சு“ என்றபடி இரண்டு கைகளிலும் அழுத்திப் பிடித்தபடி மெல்ல கையை வெளியே எடுப்பார். நீளமாக பாம்புபோல வழுவழுவென இருக்கும் மொய்மீனின் வாலைக் கண்டதும் பாம்பு என பயந்து மசூது துள்ளி விலகுவான். அப்போது அவன் கையில் இருக்கும் லாந்தர் விளக்கின் வெளிச்சம் ஆற்று நீரில் அலைபாயும். நாளடைவில் பயம் தெளிந்தது. மீன் பிடிக்கும் லாவகத்தை கற்றுக்கொண்ட பிறகு தனியாகவே மீன் பிடிக்கச் செல்ல ஆரம்பித்தான் இப்படியாக நொய்யலாற்றில் மீன் பிடிப்பதை அவனும் வழக்கமாக்கிக் கொண்டான். இரவுகளில் மட்டும் நால்வர் கூட்டணியுடன்தான் மீன் பிடிக்கச் செல்வான்.
எட்டாவதுடன் படிப்பை நிறுத்திக்கொண்ட மசூதுவை ஆத்துப்பாலத்தில் ரொம்ப காலமாக ஏஎஸ்ஏ சவுண்ட் சர்வீஸ் மற்றும் சைக்கிள் கடை நடத்தி வரும் அவருடைய நண்பரான காதர்பாயிடம் கொண்டுபோய் வேலை பழக விட்டார் அசன் ராவுத்தர். இப்படியாக சைக்கிள் ரிப்பேர் செய்வதை பழகிக்கொண்ட மசூது பெரியவனானதும் தன் பிழைப்புக்காக வாப்பாவிடம் சொல்லி வாடகைக்கு விட மூன்று பழைய சைக்கிள்களை வாங்கிக்கேட்டு சைக்கிள் ரிப்பேர் செய்வதற்கான டூல்ஸ் போன்ற பொருட்களையும் வாங்கி பொள்ளாச்சி ரோட்டில் கரிமேட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஓரமாக சிறு சாளையைப் போட்டு சைக்கிள் ரிப்பேர் கடை வைத்தான். அந்த சைக்கிள்கடைதான் நிறைய சைக்கிள்களுடன் பெரிய அளவில் வளர்ந்து இப்போது மசூதுவின் குடும்பத்தை ஓட்ட உதவிக் கொண்டிருக்கிறது. .
தனிக்குடித்தனம் வந்த பிறகு மீன் பிடிக்கும் இந்தப் பழக்கம் வாரத்தில் இரண்டு நாட்கள் கூட்டானுக்கு பெரிய உதவியாக இருந்தது. இது மசூதுக்கு மட்டுமல்ல மும்தாஜுக்கும் ரொம்ப சந்தோசத்தைக் கொடுத்தது. வாரத்தில் இரண்டு நாட்களை மீன் குழம்புடன் சிரமமில்லாமல் கடத்தி வந்தாள் மும்தாஜ். இதனால் மீன் பிடிக்கச் செல்வதை அவனால் விட முடியவில்லை. கோடை காலத்தில் ஆற்றில் தண்ணீர் வற்றிப்போகும் சமயங்களிதான் கூட்டான்பாட்டுக்கு கஷ்டபடுவாள் மும்தாஜ். மூன்று குழந்தைகளுக்கு வாரம் முழுக்க சோத்துக்கு தொட்டுக்க எதுவும் இருக்காது. சின்னவன் அன்வருக்கு மீன் இல்லாமல் சோறே இறங்காது. முட்டையை வாங்கி ஒப்பேத்துவாள் மும்தாஜ்.
. மகனுக்கு வேண்டி ஞாயிற்றுக் கிழமை பகல் நேரத்தில் வங்குவங்குவாகத் தேடி அலைவான். வங்குகள் எல்லாம் காய்ந்து வறண்டு கிடக்கும். சில இடங்களில் சேறும் சகதியும் வெயிலுக்கு வறண்டுபோய் பிசுபிசுபாக கையில் வெறும் மண் ஓட்டிக்கொண்டு வரும். வங்குகளுக்குள் ஒரு மொய்மீன் கூட இருக்காது. ஆற்றின் கரையோரம் முழுக்க வாங்கு வங்காக தேடித்தேடி அலைந்து வெறுப்பு மிஞ்சி சோகத்துடன் வெறுங்கையுடன் வீடு திரும்புவான். “என்ன வாப்பா ! மீம்புடிக்காமயே வர்றீங்க ?” மீன் கிடைக்காமல் வெறும் பையுடன் வரும் மசூதுவைப் பார்த்து கேள்வி கேட்பான் அன்வர். “ஆத்துல தண்ணி வத்திப் போச்சுப்பா. அதான் மீன் கெடைக்கல. அடுத்த வாரம் புடிச்சுட்டு வர்றேன்.” என்பான் மசூது
. “பத்துப்பவுனு நகையாச்சும் குடுக்க வேண்டாமாக்கும்? சிறுதன பணம் வேற குடுக்கணும் என்ன செய்வீங்களோ!” பதினஞ்சு வயது பூர்த்தியாகிவிட்ட பெரிய பொண்ணு ஆஜரா குறித்து பேசும்போதெல்லாம் மும்தாஜ் அவனிடம் இதைச் சொல்லாத நாளே இல்லை. மசூதுவுக்குள் அப்போது திடுக்கென்ற ஒரு அதிர்வு உள்ளுக்குள் எழும். “படச்சவன் ஒரு வழி காட்டுவான்” என்று ஒருமுறை மும்தாஜிடம் ஆறுதலாக பதில் சொன்னதற்கு ஒருபாட்டம் புலம்பித்தள்ளி அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டாள். அதன்பிறகு மசூது வாயைத் திறப்பதே இல்லை.சரிசரியென்று தலையாட்டிக் கொள்வான். இதற்கும் திட்டு விழுந்தது.
ரேடியேட்டர் கடை வேலையைப் பழகியிருந்தால் சித்தீக் போல சொந்தமா மெக்கானிக் கடை வச்சு சிக்கலில்லாம கை நிறைய சம்பாரிச்சிட்டிருக்கலாம் என்கிற எண்ணம்தான் மசூதுவுக்குள் அடிக்கடி ஓடும். இப்போதும் மனைவியின் பேச்சு அதையே நினைக்க வைத்தது. ‘சைக்கிள்கடைல வர்ற வருமானத்துல ஊட்டு வாடகயும் குடுத்து குடும்பச் செலவுகளையும் ஓட்டவே .காசு பத்தமாட்டேங்குது. இதுல வேற மக்களுக்கு துணிமணி எடுக்கணும். படிக்க வெக்கணும். இதுல எங்க போயி மிச்சம் புடிக்கிறது? பொண்ணுங்களுக்கு நகை நட்டு எப்பிடி வாங்கறது?’ நா எங்க போயி எச்சா சம்பாரிக்கிறது? நா என்ன வேணும்னா பண்றேன்? எந் தலைல இப்பிடி எழுதியிரிக்கிது. இனி ஒன்னும் செய்ய முடியாது. வங்கு மீன்கள் போலவே அவன் வாழ்க்கையும் ஆகிவிட்டிருந்தது. அவனுக்கு ஒருபிடியும் கிட்டவில்லை. கடைசியில் அவனுக்கு இப்படித்தான் எண்ணம் தோன்றியது. காசு வருத்தமே இவுளுக்குத் தெரியாது. எதையாச்சும் சொல்லி எரிச்சல் ஊட்டிட்டே இரிப்பா. என்று மும்தாஜ் மீதுதான் கோபம் வந்தது.
அந்த ஞாயிறும் மீன் கிடைக்காமல் வெறுங்கையுடன் இயலாமையும் எரிச்சலுமாக வந்த மசூதுவை கண்டதும் மும்தாஜுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. மீன் கிடைக்காத கோபமும் சேர்ந்துகொள்ள அவன் சாப்பிட உட்கார்ந்ததும், “புள்ளைக்கு வயசு ஏறிட்டே போவுதுங்க. இன்னும் எத்தன நாளுக்கு இப்பிடியே மீன் புடிச்சுட்டே வாழ்க்கய ஓட்டிட்டு இரிக்கலாம்னு நெனச்சுட்டு இரிக்கீங்க? கல்யாணம் காச்சினு நாலு பக்கம் பொண்ணக் கூட்டிட்டுப் போவும்போது இப்பிடி மூளியாட்டம் கூட்டிக்கிட்டுப் போனா பாக்குறவங்க என்ன நெனப்பாங்க? யாராச்சும் பொண்ணு கேட்டு வருவங்களக்கும்? கொஞ்சமாச்சும் நகநட்டு பொண்ணு கழுத்துல வேணுமில்ல? செயிக்கிள் கடைலதா வருமானம் இல்லேனு தெரியுதுல்ல வேற ஏதாச்சும் வேலை பாக்கலாமல்ல? எவ்வளவுதா நாஞ்சொல்றது. என்ன சொன்னாலும் தலைய தலைய ஆட்டிக்கிட்டு, ஒடுக்கத்த தலயாட்டலு. பெருநா வேற வரப்போவுது மக்களுக்கு துணிமணியெல்லாம் எடுக்கணும். கொஞ்சமாச்சும் ஒங்களுக்கு பொறுப்பு இரிக்கா என்ன. சின்னப் பைய்யனாட்டம் இன்னும் மீன் புடிச்சுட்டு இரிக்கீங்களே. ஒடுக்கத்த மீம்புடி. அதுக்கு வேற ஏதாச்சும் வேலவெட்டிக்குப் போவலாமல்ல?” ஆக்ரோஷத்துடன் மனைவி கத்திய சத்தம் வழக்கத்தைவிட வீதிக்கே கேட்கும்படியாக பெரிதாக இருந்தது சத்தம். . .
எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்து போகும் மசூதுவுக்கு அன்று அமைதியாக இருக்க இயலவில்லை. மீம்புடிக்கிறதப்பத்தி என்ன தெரியும் இவுளுக்கு? அவனுக்குள் ஒருவித அவமான உணர்வு பொங்கி எழுந்தது. திடுமென அது பற்றிப் படர்ந்து தீயாகப் பரவியதை உணர்ந்தான். எங்கிருந்துதான் அவனுக்குள் அப்படியொரு ரௌத்ரம் எழுந்ததோ அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் ஒன்று திரண்டு,வர என்றும் இல்லாத வகையில் சட்டென சாப்பாட்டுத்தட்டை அப்படியே தூக்கி மனைவியின் முகத்தில் வீசி எறிந்தான் மசூது. எதுவும் புரியாமல் குழந்தைகள் மிரட்சியுடன் வாப்பாவையே பார்த்துக்கொண்டிருக்க, கடுமையான முகத்துடன் எதுவும் பேசாமல் வெடுக்கென்று எழுந்து வெளியேறிச் செல்லும் கணவனை பார்த்தவாறு அதிர்ந்துபோன மும்தாஜுக்குள் ‘கோவத்துல இருந்த சோத்தையும் இப்புடி வீணாக்கிட்டாரே. பாவம், இனி ராத்திரி வரைக்கும் மனுசன் பசியோடவே இருக்கணுமே’ கண்கள் கலங்க கணவனை நினைத்து வருத்தமும் ஏற்பட்டது.
