Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

பறவை பார்த்தல்

தொடர்ச்சி

ஆற்று பாலத்தில் நின்றுகொண்டு
ஓடும் நீரில் அப்பாயிக்கு
பொறி கலவை வீசினேன்;
அவன் அந்த கருப்பு வாகனத்தில்
என்னை பின்தொடர்ந்தான்..
நான் ஓட ஓட என்னை நெருங்கினான்
அவன் நெருங்க நெருங்க
என்னை அடையா வண்ணம்
நான் எட்டிச் சென்றேன்..
ஓரிடத்தில் நின்றுவிட்டேன்..
என் எதிரே மக்கள் திரள்;
என் அருகே ஒரு பேருந்து;
திரும்பி நின்றேன், என் எதிரே அவன்..
பத்தடி தூரம் இருவருக்குமிடையில்;
அவன் கண்களால் என்னை காண இயலவில்லை;
கத்தி அரற்றுகிறான், நான் அவனை நோக்குகிறேன்;
பேருந்து கிளம்ப ஆயத்தமாயிருந்தது!


பறவை பார்த்தல்

அவள் நடுத்தர வயதை நெருங்குபவள்
தினமும் மாடியில் நடை மேற்கொள்கிறாள்
கம்பி கதவை திறந்து மொட்டை மாடி வரும்போது
தனது வலப்பக்கம் சூரியனை கண்டு கை அசைக்கிறாள்;
பின்பு அந்த மொட்டை மாடி நடுவில் உள்ள
வீட்டு விமானத்தை பிரகாரத்தில் சுற்றி சுற்றி வருகிறாள்;
சூரிய வெளிச்சம் கூசினாலும் ஆகாயத்தை
ரசிப்பதை அவள் நிறுத்துவதில்லை;
அந்த சமயத்தில் வானில் விமானம் பார்த்தாள்;
கருநீல முகத்தில் நிலாவின் சாயல்;
உற்சாகத்தில் உடனடியாய் உயர்த்தியும், பின் இழுத்தும்,
அக்கம் பக்கம் சுற்றி பார்த்து மீண்டும் உயர்த்தியும் கை அசைக்கிறாள்
அது செல்லும் திசை நோக்கி;
பின்பு வானில் நீள அகலத்தில் காற்றில் கோடு கிழித்து,
தனக்குள்ளே திசையை உறுதிப்படுத்திக் கொள்கிறாள்;
கீழே குனிந்து உள்ளூற உவகை கொள்கிறாள்;
ஆடி காற்று அவள் உவகைக்கு இதமாய்
தென்னையின் மூச்சினை அவள் மேல் இறக்குகிறது;
அச்சமயம் அவள் தென்னைகளையும், அதனொன்றில் இருக்கும் என்னையும் பார்ப்பதுண்டு; நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது..
அவள் என்னை பார்த்து கொண்டே இருப்பாள்
நான் யார் என்று தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது..
அவள் திரும்புகையில் நான் மெளனமாய் அவள் பார்க்குமாறு பறந்து எதிர்திசைக்கு செல்வேன்.


மனம்

அந்த உயிர் இன்னும் இருக்கிறது
தூங்கியபடியே விழித்திருக்கிறது
ஒரு கணம்,
இதோடு முடிவதல்ல இதன் பயணம்
என்று நெஞ்சு தெம்புறுகிறது..
முடிந்தாலும் அது விடுதலையே என்று
அடுத்த நொடி செயலை நோக்கி
எட்டுவைக்கிறது மனம்
எங்கோ ஒலிக்கிறது அவ்வரிகள்
வரிகளில் எழுந்து வருகிறது
ஒரு பிரம்மாண்ட நிகழ்ந்த‌ காலம்
மண்ணின் வயிற்றுக்குள் அமிழும்
பல மாடி கட்டிடமாய்
குலைந்து குருணையாகிறது
மனம்!


வீடு

பிறை தெளிந்த வானத்தில்
நால்புறத்தில் இருந்தும்
பறவைகள் ஒலி எழுப்பிய வண்ணம்
அங்கும் இங்கும் பறந்து கொண்டே
இருக்கின்றன..
கூடடையும் நேரம்..
கூட பிறந்தவர்களையும்
கூட வாழ்பவர்களையும்
பெற்றவர்களையும் தேடுகின்றன
அறிவிப்பு செய்கின்றன
நடுத்தெருவில் நின்று அண்ணாந்து
பார்த்து கொண்டிருக்கிறேன்
அங்கே என் வீடு
யாருமற்று பூட்டிக்கிடக்கிறது!


தவிப்பு

அண்டாவின் விளிம்பில்
வட்டங்களிடும் நீர்த்துளிகள்;
அந்த ஒரு துளி
பெரும் பிரயர்த்தனப்படுகிறது
தன் இரு கால்களை மேல்நோக்கி
பின்னிக்கொண்டு தவிக்கிறது
எப்படியேனும் அவ்வுலகத்தில் வாழ்ந்துவிட
அடுத்த துளி
விழ இருக்கிறது!

Exit mobile version