ஆங்கில மூலம் : ராஹா நிக்-ஆண்டிஷ்
தமிழாக்கம் : வெங்கட ப்ரசாத்
ஜனவரி 8 அன்று, ஈரானில் நடைபெற்ற போராட்டங்களின் ஒரு வீடியோவை இங்கிலாந்தில் இருக்கும் ஒரு நண்பருக்கு நான் அனுப்பினேன். அதன் பிறகு இணையம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மறைந்த ஷாவின் மகனும் தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான ரேசா பஹ்லவி, மோசமான பொருளாதார நிலைமையையும், ஒரு வாரத்திற்கு முன்பு பஜார்களில் தொடங்கிய வேலைநிறுத்தங்களையும் எதிர்த்து, இரவு 8 மணிக்கு மக்கள் தெருக்களில் இறங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
மேற்கு தெஹ்ரானில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் நான் வசிக்கிறேன். விளக்குகளை அணைத்துவிட்டு கீழே இருந்த நகரத்தை கவனித்தேன். அது மெதுவாக தனது வடிவத்தை மாற்றிக் கொண்டிருந்தது. கடைகள் மூடப்பட்டுக் கொண்டிருந்தன. மக்கள் தெருக்களில் ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது என் போன் ஒலித்தது. அது ஒரு நண்பர்.
“நாங்கள் கெய்தரியே சதுக்கத்துக்கு போகிறோம்,” என்றார். “நீயும் வா.”
நாங்கள் காரில் வடக்கே பயணித்தோம். வழியெங்கும் கடைக்காரர்கள் தங்கள் ஷட்டர்களை இழுத்து மூடிக் கொண்டிருந்தனர். அங்கே சென்றபோது, கூடியிருந்த கூட்டத்தின் அளவை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். வசதியான, செல்வந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் பொதுவாக போராட்டங்களில் கலந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் பொருளாதார அழுத்தம் சமூக வர்க்க வேறுபாடுகளை அழித்துவிட்டது. அதிருப்தி எல்லோருக்கும் பொதுவானதாக மாறியிருந்தது.
கூச்சல்கள் கடுமையாக ஒலித்தன: “ஷா வாழ்க”; “காமெனெய் ஒழிக.” என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பி நான் முன்னே சென்ற போது நண்பர்களிடமிருந்து பிரிந்துவிட்டேன். சாலையின் நடுவில் மணல் மூட்டைகளும் குப்பைகளும் குவிக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் படைகள் நுழையாமல் தடுப்பதற்காக சாலை அடையாள பலகைகள் பிய்த்தெறியப்பட்டிருந்தன. டயர் குவியலின் மீது ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீப்பிழம்புகள் உயர்ந்து எழுந்து, தெருவை ஒளிரச் செய்தன.
எதிரே முழு கலவரக் கட்டுப்பாடு உபகரணங்களுடன் இருபது அல்லது முப்பது காவலர்களும், ஆயுதம் தாங்கிய சாதாரண உடை அணிந்த அதிகாரிகளும் நின்றிருந்தனர். என்னைச் சுற்றியிருந்த போராட்டக்காரர்களைப் பார்த்தேன். பெரும்பாலானவர்கள் மிகவும் இளம் வயதினர்—சுமார் இருபது வயது இருக்கலாம்: கருப்பு உடைகள் அணிந்த சிறுமிகள், சிறுவர்கள்; முகங்கள் முகமூடிகளால் மூடப்பட்டிருந்தன. “சந்துகளில் செல்லாதீர்கள்,” என்று மக்கள் எச்சரித்தனர். “அங்கே சிக்கிக்கொள்வீர்கள்.”
காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது. கூச்சல்கள் தொடர்ந்தன.“அவர்கள் சுடுகிறார்கள்!” என்று ஒருவர் கத்தினார். நாங்கள் எல்லோரும் ஓடினோம். ஒரு இளம் பெண், தனது கழுத்தின் பின்புறத்தைப் பார்க்கச் சொன்னாள். அவள் ஆபத்தில்லாத கலவர கலைப்பு குண்டுகளால் தாக்கப்பட்டிருந்தாள்.
துப்பாக்கிச் சத்தம் மேலும் தீவிரமானது. இருளில் மின்னல்களைப் பார்த்தேன்; அவை என்னவென்று எனக்குப் புரியவில்லை. (பின்னர், இணையம் மீண்டும் வந்தபோது சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியானதும், அதிகாரிகள் நேரடியாக கூட்டத்தின் மீது சுட்டிருந்ததை அறிந்தேன்)சுட்டிருந்ததை அறிந்தேன்)
ஏற்கனவே சுடப்பட்ட அந்த இளம் பெண்ணைப் பார்த்ததே எனக்கு போதுமானதாக இருந்தது. நான் நண்பனின் காரை நோக்கி விரைந்தேன். யாரும் எங்களை அடையாளம் காணாதிருக்க நாங்கள் எங்களின் போன்களை எடுத்து வரவில்லை. ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லை. ஆனால் என் நண்பர்கள் எனக்காக காத்திருந்தனர்.
நாங்கள் மீண்டும் மேற்கு தெஹ்ரானுக்கு, சாதெகியே சதுக்கத்தை நோக்கி ஓட்டினோம். தெருக்கள் தீயால் நிரம்பியிருந்தன. மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க பல வழிகளில் சென்றோம். சதுக்கத்திற்கு அருகில், மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் தெருக்கள் செல்ல முடியாத நிலைமையில் இருந்தன. நான் காரிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி ஓடினேன்.
திடீரென்று, ஒரு வன்முறையான மோதலின் நடுவே நான் சிக்கிக்கொண்டேன். சாதாரண உடை அணிந்த அதிகாரிகள் மக்களை லத்திகளால் தாக்கிக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சத்தம் இடைவிடாமல் ஒலித்தது. போராட்டக்காரர்கள் காயமடைந்தவர்களை தூக்கிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
சாலையின் ஓரத்தில் ஒரு சிறுவன் கிடந்தான்; அவன்மேல் ஒரு சாதாரண உடை அணிந்த அதிகாரி அமர்ந்திருந்தார். அந்த அதிகாரியிடம் லத்தி எதுவும் இல்லை ஆனால் அவருடைய கை கீழே மேலே என்று நகர்ந்துகொண்டிருந்தது. நான் சற்றே அருகே சென்றேன். அவர் கத்தியால் அந்த சிறுவனை குத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்து உடனடியாக ஓட தொடங்கினேன்.
அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்தேன். என் குடும்பத்தைக் குறித்து கவலையாக இருந்தது; ஆனால், தொடர்பு கொள்ள தொலைபேசியும் இணையமும் வேலை செய்யவில்லை. விளக்கை போட தைரியம் இல்லை . கீழே நடந்த துப்பாக்கிச் சூட்டையும், கண்ணீர்ப்புகையும் ஜன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன். இறுதியாக, காலை மூன்று மணியளவில் நகரம் அமைதியானது.
அடுத்த நாள் மாலை எட்டு மணிக்கு மீண்டும் மக்கள் தெருக்களில் திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மாலை, சுமார் ஐந்து மணியளவில், கடைகள் மூடத் தொடங்கின. பாதுகாப்புப் படைகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் களமிறங்கியிருந்தன. என் ஜன்னலிலிருந்து கலவரக் கட்டுப்பாடு மோட்டார் சைக்கிள்களையும், பின்னால் மூன்று பேர் அமர்ந்திருந்த கவச வாகனங்களையும் பார்த்தேன்; அவர்களில் ஒருவர் பொருத்தப்பட்ட மெஷின் கன்னுக்குப் பின்னால் நின்றிருந்தார். சில மணி நேரங்களில் துப்பாக்கிச் சத்தம் அத்தனை தீவிரமாக இருந்தது; அந்த இடமே போர்க்களம் போலவே காட்சியளித்தது.
ஜனவரி 10 அன்று நான் ரொட்டி வாங்கச் சென்றேன். பேக்கரிகள் பொதுவாக அமைதியான உரையாடல்களின் இடமாக இருக்கும்; ஆனால் அந்த நாளில் மக்களின் முகங்களில் கோபம் தெளிவாகத் தெரிந்தது. நீளமான வரிசை இருந்தது. ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு கடுமையான வாக்குவாதங்களைப் பார்த்தேன்.
இணையம் இன்னும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை. தொலைபேசி அழைப்புகள் செய்ய முடிந்தது; ஆனால் குறுஞ்செய்திகள் அனுப்ப முடியவில்லை. வருகிற ஒரே செய்தி அரசாங்கத்திலிருந்தே வந்தது:
பாதுகாப்பைச் சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள கூறுகள் குறித்து 114, 113 அல்லது 110 என்ற எண்களில் தகவல் தெரிவிக்குமாறு குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அன்பார்ந்த பெற்றோர்களே, திறந்த வன்முறையை அதிகரித்து, பொதுமக்கள் உயிரிழப்பை ஏற்படுத்தும் எதிரிகளின் திட்டங்களைக் கருத்தில் கொண்டு, தயவுசெய்து விழிப்புடன் இருங்கள். வன்முறை நடைபெறும் தெருக்கள் அல்லது கூடுகைகளில் இருப்பதைத் தவிர்க்கவும். மேலும், தீவிரவாதக் கூலிப்படைகளுடன் ஒத்துழைப்பதன் விளைவுகள் குறித்து உங்கள் குழந்தைகளுக்கு விளக்குங்கள்; அது நாட்டுக்கு எதிரான துரோகச் செயலாகக் கருதப்படும் – ஐஆர்ஜிசி உளவுத்துறை அமைப்பு.
சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை குறித்தும் புகாரளிக்கவும்.
முந்தைய நாள் “கலவரக்காரர்கள்” என்று அழைக்கப்பட்டவர்கள், இப்போது “தீவிரவாதிகள்” என்று குறிக்கப்பட்டனர். மேலும், வெளிநாட்டுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்வதோ, படங்களைப் பகிர்வதோ கடுமையாகத் தண்டிக்கப்படும் என்று எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.
சில நாட்களுக்குப் பிறகு, என் சகோதரர் என்னை அழைத்தார்.
“நல்ல செய்தி எதுவும் இல்லை,” என்றார். “நம் உறவினர் மகன் கைது செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்”.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறப்படும் வழக்குகளை கையாளும் இஸ்லாமிய புரட்சி நீதிமன்றங்களில் ஒன்றின் அருகே நான் வசிக்கிறேன். போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து, தினமும் இருநூறு அல்லது முந்நூறு பேர் நீதிமன்றம் வெளியே கூடிவருகிறார்கள்.
ஒருவர், தனது மகன்—ஒரு சிப்பாய்—அவனுடைய முகாமிற்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டதாக சொன்னார். விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்கினர்: அவன் வீடியோ எடுத்தானா? கற்கள் எறிந்தானா? தண்டனை அபராதமாகவோ, சொத்து பறிமுதல் செய்யப்படுவதாகவோ, சிறைத் தண்டனையாகவோ அல்லது மரண தண்டனையாகவோ இருக்கக்கூடும்.
எங்கள் உறவினர் குறித்து இன்னும் எந்தத் தகவலும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
ஜனவரி 13 அன்று, ஈரான் இன்டர்நேஷனல் தொலைக்காட்சி, வெறும் இரண்டு நாட்களில் பன்னிரண்டு ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தது. கஹ்ரிசாக் மருத்துவ மையத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக கிடடத்தப்பட்ட உடல்கள் இருந்த காட்சியை அவர்கள் ஒளிபரப்பினார்கள். பிபிசி பாரசீ சேனல் ஆயிரக்கணக்கான மரணங்கள் குறித்த தகவல்களை மிகுந்த எச்சரிக்கையோடு கையாண்டது. முதலில் இரண்டாயிரம் என்ற எண்ணிக்கையை அறிவித்த ஈரான் அரசுத் தொலைக்காட்சி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் படி 36,500-ஐ கடந்ததாகக் இருக்கக்கூடும் என்று அறிவித்தன.
நம்பகமான தகவல்கள் இல்லாத நிலையில், வதந்திகள் ஒரு இணை உண்மையாக மாறின. வரிசைகளில் எண்ணிக்கைகள் கிசுகிசுக்கப்பட்டன; உறுதியாக தெரியவில்லை என்றாலும் திடமான நம்பிக்கையுடன் அவை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டன. மரணம் தினசரி வாழ்க்கையின் அங்கம் என மாறிவிட்டது என ஒன்றை மட்டும் அனைவரும் உறுதியாக உணர்ந்திருந்தார்கள்.
நான் ஸ்னாப்! க்காக வண்டி ஓட்டுவதை நிறுத்திவிட்டேன். அது பாதுகாப்பானதாக தோன்றவில்லை; இரவு நேர கார் ஓட்டும் பணிக்கு மீண்டும் திரும்ப பயமாக இருந்தது. ஆனால் ஒரு நாள், ஒரு நண்பரைச் சந்திக்க ஒரு கஃபேக்கு செல்ல ஸ்னாப்! காரை அழைத்தேன். ஓட்டுநரிடம் வானொலியை இயக்க சொன்னேன். “வானொலியும் தொலைக்காட்சியும் எல்லாம் ஓரங்கட்டிவிட்டேன்” என்று அவர் சொன்னார். “நாம் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்து நம்மிடம் பொய் சொல்கிறார்கள்”.
தனது முக்கிய வேலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்றும் ஆனால் அதில் வாழப் போதுமான வருமானம் கிடைக்கவில்லை என்றார். ஜனவரி 10 அன்று அவர் பணியில் இருந்தார். “நான் மட்டும், நான் ஒருவன் மட்டும் நானூறு உடல்களை கஹ்ரிசாக்குக்கு எடுத்துச் சென்றேன்” என்றார்.
அவர் அமைதியான, உணர்ச்சியற்ற குரலில் தொடர்ந்தார். “நான் கண்ட காட்சிகள் என் வாழ்நாள் முழுவதும் என்னை விட்டு நீங்காது. அந்த இரண்டு நாட்களில்—ஜனவரி 8, 9—அவர்கள் பல பேரைக் கொன்றார்கள்; உடல்கள் மசூதிகளில் வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் தெஹ்ரான் பஜார் சுற்றுவட்டாரத்தில்தான் இயங்கினோம். வாகனங்கள் தீர்ந்தபோது, மருத்துவமனை ஆம்புலன்ஸ்களையே பயன்படுத்தினார்கள். அவர்கள் சுமார் ஒரு இலட்சம் பேரைக் கொண்டிருப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும்” என்றார்.
ஒரு பெண் தன் கணவரின் உடலை எடுக்க வந்த சம்பவத்தை அவர் விவரித்தார். அப்பெண்ணோடு வந்தவர்கள் கூறியபடி, அந்த மனிதன் என்ன நடக்கிறது என்று ஜன்னலிலிருந்து எட்டி பார்த்தபோது, தலையில் சுடப்பட்டார். தெருவில் விழுந்தது அவரின் உடலை பாதுகாப்புப் படையினர் கருப்பு பையில் வைத்து எடுத்துச் செல்வதை அவரது மனைவியும் மகளும் பார்த்துக்கொண்டிருந்தனர். அவருடைய மனைவி வேகமாக கீழே ஓடிவந்தார். நடைபாதையில் அவரது கணவரின் இரத்தம் இன்னும் சூடாகவே இருந்தது. அதிர்ச்சியில் மகள் ஊமையாகி விட்டாள்.
அந்த பெண் கணவரின் உடலை மீட்டெடுக்க வந்தபோது, குண்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டதாக ஓட்டுநர் சொன்னார். அவள், கணவரின் இரத்தத்தில் நனைந்த துணியைக் காட்டி, “இதைத்தான் நான் அடக்கம் செய்வேன்; உடலை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.
தெஹ்ரான் துக்கத்தில் மூழ்கியுள்ளது. சரிந்துபோன இந்த பொருளாதாரத்தில், இன்றும் வருமானம் ஈட்டுபவர்கள் என்றால், பேரீச்சம் பழம், ஹல்வா மற்றும் மெழுகுவர்த்தி விற்பவர்கள் மட்டுமே இருக்கலாம். ஏனெனில் துக்க நிகழ்ச்சிகளில் பேரீச்சம் பழமும் ஹல்வாவும் வழங்குவது வழக்கம்; மேலும் வீடுகளிலும் நடைபாதைகளிலும் இடைவிடாமல் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன.
ஒரு நண்பரைச் சந்திக்க கஃபேக்கு செல்ல நான் பகிர்ந்து பயணிக்கும் டாக்ஸியை எடுத்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண், மெளனமாக பிராத்தனைகள் (சலாவாத்) முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். நிலைமைகள் மேம்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றாள்.
“மக்களாக நமக்குள்ள பிரச்சனை என்னவென்றால், எல்லாவற்றையும் கடவுளின் பார்த்துக் கொள்வார் என்று நம் கடமைகளை உதறிவிடுகிறோம்” என்று ஓட்டுநர் சொன்னார். “வாழ்க்கைக்குத் தேவையான கருவிகளை கடவுள் நமக்கு கொடுத்துவிட்டார். இனி அதை அறிவால் நிர்வகிக்க வேண்டியதே நாம் செய்ய வேண்டியது, அதை விடுத்து பிரார்த்தனைகளோ ஆசீர்வாதங்களோ எதுவும் நமக்கு பயனளிக்காது”.
கஃபேவில், என் நண்பரிடம் வியாபாரம் எப்படி என்று கேட்டேன். அவர் பஜாரில் பெண்கள் ஆடை கடை வைத்துள்ளார். “கடையை மூடிவிட்டேன், ஒரு விற்பனையும் இல்லை. உன்னைப் போலவே, காலை ஆறு மணிக்கே ஸ்னாப்! ஓட்டத் தொடங்கி இரவு பத்து மணி வரை வேலை செய்கிறேன். நடுவில் இரண்டு மணி நேரம் ஓய்வு கிடைத்தால் கிடைக்கும். தினமும் சுமார் 20 மில்லியன் ரியால் சம்பாதிக்கிறேன்; மாதத்திற்கு 600 மில்லியன். என் வாடகை 280 மில்லியன் ரியால். உணவுப் பொருட்களின் விலை தினமும் உயர்கிறது. எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை”
அமெரிக்கா போர்க்கப்பல்களுடன் வந்து மதகுருக்களை அகற்றப் போகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று அவர் சொன்னார். “அதற்காக அவர்கள் வரவில்லை. எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்துவதற்காகத்தான் வருகிறார்கள். நாம் எண்ணெய் விற்றாலும், பணமாகக் கொடுக்க மாட்டார்கள். சீனப் பொருட்களைத் தருவார்கள். கார்கள் எதற்கு? நமக்கு பணம் வேண்டும்; பரிமாற்றம் வேண்டாம்”.
“அமெரிக்கா ஈரானை தாக்கினால், நம் மக்கள் கொல்லப்படமாட்டார்களா?” என்று நான் கேட்டேன்
“அவர்கள் மக்களை கொல்ல மாட்டார்கள். நம்முடைய அரசுதான் கொல்கிறது. இந்த மதகுருக்கள் நமக்குச் செய்ததைப் போல நமது வரலாற்றில் எந்த எதிரியும் நமக்கு செய்யவில்லை”.
மரண தண்டனையின் அச்சத்தில், தனிப்பட்ட முறையில் பேசுவதை பொது இடங்களில் பேச முடியாமல் உள்ளது. தெஹ்ரானின் ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையின் மீது, ஒரு புதிய விளம்பர பலகை உயர்ந்து நிற்கிறது. ஒரு பக்கத்தில், புரட்சிக்குப் பின் முதல் ஜனாதிபதி ஆகி, பின்னர் 1981-ல் பதவி நீக்கம் செய்யப்பட்ட அபோல்ஹசன் பனிசத்ரின் கருப்பு-வெள்ளை புகைப்படம். மறுபுறம், 2009-ல் ஈரானை விட்டு வெளியேறி தற்போது அமெரிக்க குடிமகளாக இருக்கும், ஆட்சியின் தீவிர விமர்சகரான பத்திரிகையாளர் மசீஹ் அலினெஜாதின் வண்ணப் புகைப்படம். அப்புகைப்படங்களுக்கு இடையில், “துரோகி என்றுமே துரோகிதான்” என்று எழுதப்பட்டிருந்தது.
மூலம் : Raha Nik-Andish | In Tehran: https://www.lrb.co.uk/blog/2026/january/in-tehran
