ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆகியிருக்கும், நான் பேருந்தில் பயணம் செய்து. தற்கால நடுத்தட்டு வர்க்கத்தின் ஏகோபித்த கனவான- சொந்தமாக கார் வாங்குவது என்பது என்று எனக்கு நிறைவேறியதோ அன்றிலிருந்து எல்லா இடங்களுக்கும் என்னுடைய காரில் செல்வதையே வழக்கமாக மாற்றிக் கொண்டேன். ஆனால், பிறவியிலேயே சொகுசாகப் பயணம் செய்து திரிந்தவனன்று நான். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து அரும்பாடுபட்டே என்னுடைய காரை வாங்கினேன். கஷ்டப்பட்டு உழைத்து என்பதில் படித்ததும் சேர்த்திதான்(படிப்பென்பதே வயிற்றுப் பிழைப்புக்கு வழி வகுத்துக் கொள்ள உதவும் கருவி ஆகிவிட்டதே என்று மேதமையுடன் சில சமயங்களில் நான் வாதிப்பதும் உண்டு)
பொருளாதாரப் பரமபத ஏணியின் கீழ்நிலையில் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து நடுத்தர வர்க்கத்தின் முதல் நிலையான கீழ்நிலை நடுத்தர வர்க்கத்தை அடைந்து, அதன் பின்னர் தற்போது இடைநிலை நடுத்தர வர்க்கத்தை அடைந்திருக்கும் என்னைப் போன்றவர்களை அச்சுறுத்துவதற்காகவே- மீண்டும் பழைய நிலைகளான கீழ்நிலைக்கோ அல்லது நடுத்தர வர்க்கத்தின் கீழ்நிலைக்கோ வீழ்ந்து விடக்கூடாது என்று பீதியடைய வைக்கவே இறைவனால் படைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான- பொருளாதாரத்தில் கீழ் நிலையிலும், நடுத்தர வர்க்கத்தின் கீழ் நிலையில் உள்ள மக்களின் பிரதிநிதிகளான பலர் இன்று பேருந்து நிலையத்தில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் அவர்களை விடவும் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை இது போல் நினைத்துக் கொண்டிருக்கக்கூடும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தபோது எனக்கான பேருந்து பேருந்து நிலையத்தினுள் நுழைந்தது.
ஏன் நம்மவர்கள் ஒலிம்பிக் போன்ற உலகளாவிய தடகளப் போட்டிகளில் பதக்கங்களை அதிக எண்ணிக்கையில் பெறுவதில்லை என்று ஏங்குபவர்கள் அல்லது புலம்புபவர்கள் நான் காணும் இக்காட்சியைக் கண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஓட்டப்பந்தயத்திற்கான வீரர்கள், வீராங்கனைகள் ஒரு பத்து பேராவது இந்தப் பேருந்து நிலையத்திலேயே அவர்களுக்குக் கிடைத்திருப்பார்கள். பலாப்பழத்தை மொய்க்கும் ஈக்களைப் போல பேருந்தின் உள்ளே கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்தவாறு இருந்தனர். சிலர் உடல் பருமன் காரணமாக, தங்களின் வாரிசுகளை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்து இடம் பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். பேருந்தில் இருந்து இறங்கி வந்த நடத்துநரும் ஓட்டுநரும் தலையில் அடித்தவாறே:” இந்த வண்டி இப்போ டிப்போக்கு போகுது எல்லாரும் கீழ இறங்குங்க இன்னும் 15 நிமிஷத்துல அடுத்தடுத்து உங்களுக்கு பஸ் வருது”, என்றபடியே பொதுக்கழிவறையை நோக்கி நடந்தனர்.
இறங்கும்போதும் பல்வேறு சாகச நிகழ்வுகளை நிகழ்த்தியபடி இருந்தனர் மக்கள். நான் ஓர் ஓரமாக நிழலில் நின்றுகொண்டு இந்தத் தடகளப் போட்டியில் பங்குபெறாததை நினைத்து நிம்மதி அடைந்தேன். எனக்கான பேருந்து அவர்கள் சொன்னபடியே வந்தது. அதன் பின்னாலேயே இன்னும் இரண்டு பேருந்துகள் வந்து சேர்ந்தன. இது போட்டி உலகமாயிற்றே! ஆகவே, போராடி அடைந்தால்தான் எதிலும் சந்தோஷம் கிடைக்கிறது என்ற காரணத்தினால் மீண்டும் மக்கள் அடித்துக் கொண்டுதான் பேருந்தில் ஏறினர். இம்முறை நானும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. போட்டியில் முதல் பரிசு கிடைத்ததால் இருவர் அமரும் இருக்கையில் ஜன்னலோர இருக்கை எனக்குக் கிடைத்தது. போராடிக் கிடைத்ததாலோ என்னவோ, அதுவும் இது போன்ற கூட்ட நெரிசல் நாளில் ஜன்னலோர இருக்கை கிடைத்து விட்டதால் ஏதோ லாட்டரியில் பல நூறு கோடிகள் பரிசு விழுந்து விட்டதைப் போன்ற உணர்வு எனக்குள்ளும் ஏற்பட்டது.
அந்தச் சந்தோஷத்தை அனுபவிக்க விடாமல் தடுப்பதற்கு என்றே பேருந்து நிலையங்களில் அலையும் விசித்திரமான மனிதர்களுள் ஒருவகையான ” பர்ஸ் தொலைஞ்சு போச்சு நூறு ரூபாய் குடுங்க. உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்” என்று போதை வீச்சம் அடிக்க உங்கள் தோள்களைச் சுரண்டும் மனிதன் என்னையும் சுரண்டினான். ஏதோ ஒரு பெண்ணின் தோளையும் சுரண்டியதால் அவனைக் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பேருந்திலிருந்து இறக்கிவிட்டனர்.
அடுத்துப் பிச்சை எடுப்பவர்கள் வரிசையாக வந்த வண்ணம் இருந்தனர். எனக்கோ வெயில் தாங்க முடியவில்லை நிற்கும் பேருந்தில் வெயில் காலத்தில் உட்கார்ந்திருப்பது என்பது ஒருவேளை நரக தண்டனைகளில் ஒன்றாக இருக்கக்கூடுமோ என்று எனக்குத் தோன்றியது. என் சட்டைப்பையைத் துழாவிய போது டிக்கெட்டிற்கு மட்டுமே பணம் இருந்தது. சில்லறையாக ஏதுமில்லை யாசிப்பவர்களுக்குக் கொடுக்க. கடைசியாகப் பணத்தை எப்போது கைகளில் தொட்டுப் பார்த்தேன் என்று யோசிக்க வேண்டியுள்ளது. என் செல்போன் மூலமாகவே பணப்பரிமாற்றம் செய்தே பழகிவிட்டதால் கையில் காசு வைத்துக் கொள்ளும் பழக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது என்பதை உணர்ந்தேன்.
இது போன்ற தர்மசங்கடமான சமயங்களில் என்னைப் போன்றவர்களின் பாதுகாவலனாக விளங்கும் ஹெட்போன்சை அணிந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு, தலையை ஜன்னலின் மீது சாய்த்துக் கொண்டேன். விதி வலியது என்பதற்குச் சான்றாக, அதே கணத்தில், கேட்கவே சகிக்க முடியாத பாடலை அதீத ஒலியில் அலறவிட்டுத் தங்களின் இருப்பைக் காட்டினர் நடத்துநரும், ஓட்டுநரும். வேறு வழி இல்லாமல் என்னுடைய ஹெட்போன்ஸை கழற்றி வைத்தேன். நடத்துனர் பயணச்சீட்டுக் கொடுத்தபடியே வந்து கொண்டிருந்தார். நான் முன்புற கதவருகே இருந்த இருக்கையிலேயே அமர்ந்திருந்ததால், என்னிடம் டிக்கெட்டிற்காக இருந்த மொத்த பணத்தையும் கொடுத்து டிக்கெட்டை பெற்றுக் கொண்டேன். என் கால்களை யாரோ தொழுவது போல உணர்வு ஏற்பட நான் கீழே பார்த்தபோது இரண்டு கால்களையும் இழந்த முதியவர் ஒருவர் மிகவும் பரிதாபமாக என்னை நோக்கிக் கைகளை நீட்டி யாசகம் கேட்டபடி இருந்தார். என்னால் தூங்குவது போலும் நடிக்க முடியாது அவரிடம் ஆன்லைன் மூலம் பணம் பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறதா என்றும் கேட்க முடியாது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு கண்ணீர் வரத் தொடங்கிவிட்டது. என் கண்களை மூடிக்கொண்டு ஜன்னலின் பக்கம் சாய்ந்து கொண்டேன். என்னுடைய காரை அவசர வேலைக்காக வாங்கிச் சென்ற என் நண்பனின் மீது ஏனோ அதீத கோபம் உண்டாகியது. சற்று நேரம் கழித்து பேருந்து கிளம்பியது.
அரைமணி நேரத்தில் நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கினேன். அங்கே சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு வயதான பாட்டி நறுக்கப்பட்ட வெள்ளரிக்காய்களை விற்றுக்கொண்டிருந்தார். அவரிடம் யுபிஐ மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் வசதி இருப்பதை கவனித்தேன்.
” பாட்டி உங்ககிட்ட இருக்க மொத்த வெள்ளரி, நீர்மோர், கோசாப்பழம் எவ்வளவு?”
திகைத்துப்போன பாட்டி, ” எல்லாம் சேர்த்து ஒரு தொள்ளாயிரம் ருபாய் வரும் கண்ணு” என்றார்
” பாட்டி உங்களுக்கு செல்போன்ல பணம் அனுப்பிவிடுறேன். இன்னிக்கு முழுக்க யாரு கேட்டாலும், இல்ல கேட்கலனாலும் நீங்களாவே இலவசமா எல்லாருக்கும் குடுங்க. குறிப்பா யாராவது இல்லைன்னு வந்து பிச்சை கேட்கிறவங்களுக்குக் குடுங்க” இன்று பணம் செலுத்தியதை என்னுடைய செல்போனில் காண்பித்துவிட்டு அந்தப் பாட்டி ஏதும் சொல்வதற்கு முன்னரே வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.
கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே நடக்கையில், இனிமேல் சில்லறையாக கையில் பணம் கொஞ்சமாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
