Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

ஸீப்ரா (Zebra)

பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஸீப்ராவின் வரிக்கோடுகள், வெண்மையில் மேவிய கருமையா அல்லது கருமையில் மேவிய வெண்மையா?

முன்பு, பதாகை இணைய இதழில் ‘பிசகு’ என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு சின்ன கவிதை எனக்கு நினைவிற்கு வந்தது.

“செம்பழுப்பும் மஞ்சளும் கலந்த புள்ளி, நீலமும் பச்சையும்
உலவும் ஒளித்தினவு, பால் வெண்ணீறின் சாயத்தில் தோய்த்த
அழகு, பறவை என்றால் இதைத்தான் நினைக்கிறாய்.
கருஞ்சிறகுகள் கவனத்திலுமா பிசகும்?”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒருமுறை சொன்னார்: உலகம் என்பது புரிந்து கொள்ள முடியாதது என்று புரிந்து இருப்பது தான் விந்தை.

நாம் யதார்த்தம் அல்லது நிதர்சனம் அல்லது மெய்மை இவை எங்கோ வெளியில் இருக்கிறது என்றும் அவை கண்டுபிடிக்கப்பட வேண்டியவை என்றும் நினைக்கிறோம். ஆனால் மெய்யியலாளர் மானுவல் டெலா ஃப்ளோர்  (Manuel Delaflor )சொல்கிறார்: அனுபவம், அர்த்தங்கள், பொருட்களின் தொடக்கம் பற்றிய ஆய்வுகள் அனைத்துமே சிறப்பாக, துடிப்பாக, அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் ; அவை, மெத்தனமாக, உலகை அறிந்து கொள்ளும் பெறுநர் இல்லை.

கட்டமைப்புகள் உண்டாக்கப்படுகின்றன என்பதும், அவை கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல என்பதும் நமக்குப் புரிந்தால், நிதர்சனம் என்பது மனித இனத்தின் பொறுப்பான தன்மைக்கு வழி வகுக்கும். அதாவது, எது எதார்த்தம் என்ற கேள்வியில் இருந்து, எதை கட்டமைக்க நாம் விரும்புகிறோம் என்பது சிறப்பான ஒரு  கேள்வி- பதிலாக அமையும்.

நம்மில் பலருக்கு நிறங்களை சரியாக வகைப்படுத்துவது சிறிது சிரமமாக இருக்கலாம். கட்டுரையாளரின் சகோதரி ஒரு வரைகலை நிபுணர். அவர் காட்டிய சட்டகத்தில் இருந்த ஆகாய நீலம், செருலியன், கோபால்ட நீலம், என்பதெல்லாம் நீலம் என்ற ஒரு வகைக்குள் இவருக்கு அடங்கி விடுகிறது. இதன் பொருள் என்ன? சகோதரியின் கண் அறிவுத்திறனா? ஒரு தொடர் நிறமாலையின் பல நீல அம்சங்களை அழகிய நீலக்கல்லாகவும், பல வண்ண நீலங்களாகவும் அறிய முடிந்திருக்கிறது அந்தச் சகோதரிக்கு. ( நீல வண்ணத்தைக் குறித்து திரு. அருணாசலம் ரமணன், சொல்வனத்தில், நீலப்ரகாசம்,, நீல நிறத்தின் நீண்ட பயணம், கலையே உன் வாழக்கையின் திசை மாறினால், நீலாம்பரி ராகம் உனக்காகவே நீலா என்று அற்புதக் கட்டுரைகள் எழுதியுள்ளார்)


இப்படிப் பார்க்க முடியாதவர்கள் எதைத் தவற விடுகிறோம்? மொழியாலும், பழக்கத்தாலும், தேவையினாலும், பயன்களாலும் ஒரு உலகை சமைத்துக் கொண்டு அதில் நடமாடிக் கொண்டு அதைக் கண்டுபிடித்து விட்டதாக சொல்லிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் நாம் அதை உற்பத்தி தான் செய்திருக்கிறோம்.
நம்மை மகிழ்விக்க நாமே ஒரு கதை சொல்லிக் கொள்கிறோம் .”பார் அங்கே இருக்கிறது ஒரு உலகு; அது பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அது என்னவென்று கண்டுபிடிப்பது தான் நமது வேலை. மலைகள், முகங்கள், நிறங்கள் என்ற அம்சங்களை நாம் வகைப்படுத்தப்பட்டவையாக எடுத்துக் கொண்டு விடுகிறோம். இதில் புதைந்திருக்கும் ஒரு மாயத்தன்மையை நாம் அறிந்து கொள்வதில்லை. அது அப்படி அமைந்திருக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறோமே தவிர நமக்குத் தான் சரியான அமைதல் தேவை என்பது புரிவதில்லை.
முக்கியமாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்- நமக்கு புரிதலை ஏற்படுத்திக்கொள்ள, நாம் அதற்கு ஒரு காரணத்தையும் கற்பித்து செயல் பட்டு வருகிறோம்.


அது சரியா என்று சிந்திக்கிறோமா? நம் வரைபடங்களுக்குள் அவற்றை அடக்கி புரிந்து கொள்கிறோம். அதனால்தான் பலவற்றை ‘நிச்சயமாக’ என்று நம்மால் சொல்ல முடிகிறது.

ரஷ்ய பேச்சாளர்கள் இளம் நீல வர்ணத்திற்கும், அடர் நீல வர்ணத்திற்கும் இடையே சில வித்தியாசங்களைச் சொல்கிறார்கள். ஆங்கிலத்திலும் பச்சையும் நீலமும் தனித்தனியாக அறியப்பட்டாலும் சில நேரங்களில் அவைகள் குழம்பிப் போகின்றன. இது பெஞ்சமின் லீ வோர்ஃப்வின்  (Benjamin Lee Whorf) மொழி சார்ந்த தொடர்பாடல்கள் என்ற சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. நாம் நம்மையே சமாதானப்படுத்திக் கொள்ளலாம்; இவையெல்லாம் மொழிகள் ,வார்த்தைகள் அவ்வளவே! இதில் அவ்வளவு அக்கறை காட்ட வேண்டாம் .ஆனால் இந்த சமாதானமும்  நாம் ஆழ்ந்து சிந்திக்கையில் சீக்கிரமே ஆவி ஆகிவிடுகிறது. அந்த சிந்தனை நம்மை சுழற்றி அடிக்கிறது. “என் சகோதரி பார்த்த நீலம் கண்டுபிடிக்கப்பட்டதல்ல, அது உருவாக்கப்பட்ட ஒன்று. அது சொல்வளம், பயன், கவன ஈர்ப்பு இதன் மூலம் அமைக்கப்படுகிறது.” இன்னமும் கூட இதில் பார்க்க வேண்டியது இருக்கிறது. ஆய்வாளர் கேப்ரியல் ஜோர்டன் (Gabriel Jordan) மற்றும் ஜான் மோலன் (John Mollan) ‘டெட்ரா குரோமசி’  (Tetrachromacy)அமைந்துள்ள சில அபூர்வ நபர்களைப் பற்றி சொல்கிறார்கள். ஒரு வண்ணத்தின் பல கூறுகள்- 4 கூம்பு ஒளி நிறமிகள், பலராலும் அறியப்பட முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. அதன் பொருள் அந்த நிறமாலையை அவர்கள் மிகச் சரியாக பார்க்கிறார்கள் என்பதல்ல, அவர்கள் பார்ப்பது முற்றிலும் வேறு விதமான நிறமாலைகள்.

நாம் நமது எல்லை என்று கருதும் அடிப்படை கூட சிறப்பாக செயல்படும் ஒரு மாதிரியின் வெற்றி தான். இது கூட கட்டமைக்கப்பட்ட ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நிறங்களில் தான் இது தொடங்கி இருக்கிறது. கட்டுக்கதையாகக் கூட இருக்கலாம் ஆனால் இங்கே அதை நினைவிற்கு கொண்டு வரலாம். இந்தக் கதையைச் சொன்னவர் ஜோசப் பேங்க்ஸ். 1770ல் ஜேம்ஸ் குக் பயணத்தில் அவர் ஒன்றைக் கண்டார். பழங்குடி ஆஸ்த்ரேலியர்களால் அந்த HMS Endeavourஐ  இனம் காண முடியவில்லை. இதையே மார்ஷல் மெக்லூகன்  (Marshal McLuhan) ஒரு அறிவியல் கோட்பாட்டு உவமையாக எடுத்தார். இந்தக் கதை சொல்கிற செய்தி ஒன்று முக்கியமானது அதாவது நம்முடைய பிரக்ஞை எப்படி செயல்படுகிறது என்று காட்டுகிறது. அத்தனை பெரிய கப்பல், அதில் ஆயிரக்கணக்கான மனிதர்கள், ஆனால் அந்தப் பழங்குடியினருக்கு கப்பல் கட்டும் தொழில்நுட்பமும் அதில் பயணிக்கும் மனிதர்களும் அறிமுகம் இல்லை என்பதால் அவர்கள் அதை கவனிக்கத்தக்க ஒரு பொருளாக உருவாக்கிக் கொள்ளவில்லை. இல்லாத ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்பது உயிர்களுக்கு சிக்கலாகக் கூட இருக்கலாம். அவர்களும் அந்த பிரம்மாண்டத்தை பார்த்திருப்பார்கள்; அந்த வெளியில் ஏதோ நிற்பதை கவனித்திருப்பார்கள். ஆனால், ‘அது, இது’ என்று வகைப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில் அது என்ன பொருள் என்று முழுவதும் உணர்ந்து கொள்ள முடியாமல் தான் போயிருக்கும்.

மற்றொரு விசித்திரத்தையும் பார்ப்போம். இந்த வகை தான் இது என்ற அறிவு இருக்கும் ஆனால், கணக்கீடு இல்லாமல் போகும்.


மானுடவியலாளர் காலின்  டர்ன்புல், (Colin Turnbull)காங்கோ மழை காடுகளில் வசிக்கும் BaMbutiஎன்ற இனத்தைச் சேர்ந்த கென்ஜி (Kenge) என்ற இளைஞரை திறந்த வெளியான சவானாவிற்கு, அழைத்துச் செல்கிறார். அங்கே தொலைவில் எருதுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அவை என்ன பூச்சிகள் என்று கென்ஜி கேட்கிறார். அந்தப் புல்வெளியை நெருங்குகையில் முதலில் பூச்சிகளாகத் தெரிந்த எருதுகள் பிரம்மாண்டமான வடிவம் கொண்டவைகளாக இருப்பதைப் பார்த்து திடுக்கிடுகிறார். அவர் அடர்ந்த வனப்பகுதியில் அதுவரை வாழ்ந்திருந்ததால், அந்தப் பசும் அடர்த்தியைத் தாண்டி எதையும் பார்க்க நேரிடவில்லை. பெரும் தொலைவில் இருக்கும் உருவத்தைப் பற்றிய ஒரு சிந்தனை அவரிடம் முன்னமே இல்லை. அதாவது அவருக்கு இவ்வகையான புரிதலுக்கான மாடல்களின் தேவை ஏற்பட்டிருக்கவில்லை. இது முற்கால மனிதர்கள் இக்காலத்தினரை எதிர்கொள்ளும்போது ஏற்படும் பிரமிப்பு, விரோதம் இவற்றைப் பற்றிய கதை இல்லை. இது மனித மனம் இயங்கும் விதத்தை சொல்கிறது

1950 விருதுகளில் சிட்னிபிராட்போர்ட் (Sidney Bradford) கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பல வருடங்களாக பார்வை குறைபாட்டால் அவர் அல்லல் பட்டு வந்தார்.
அறுவை சிகிச்சை நடந்தது. அவரது விழித்திரையில் ஒளி விழுந்தது . அவரது காட்சிப் புறணி செயல்பட்டது. ஆனால் வியக்கத்தக்க வகையில் அவரால் பார்க்க முடியவில்லை, தொடுகையின் மூலம் அவர் நன்கு அறிந்திருந்த பொருட்களை அவரால் அடையாளம் காண முடியவில்லை; தூரங்களை கணக்கிட முடியவில்லை. அவரிடம் தேவையான கருவிகள் இருந்தன ஆனால் அவை ஒரு மாதிரியை முன்கூட்டியே அறிய முடிந்திருந்தாததால், அத்தனை தரவுகளும் வெற்று ஒலியாகி விட்டன. திகைப்பாக இருக்கிறது அல்லவா? மாதிரிகள் செயல்பட்டாலும் அனுபவம் இல்லாமல் போகிறது.

Lawrence Weiskrantz ஆக்ஸ்போர்ட்டில் கண்பார்வை பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பற்றி ஆவணப்படுத்தி இருக்கிறார். அவர்கள் பார்வையில் சில இடங்களில் குறைபாடுகள் இருந்திருக்கின்றன. அவர்கள் எதையும் பார்க்கவில்லை, எதையும் அனுபவிக்கவில்லை ஆனால் அந்தக் ‘குருட்டு பகுதியில்’ என்ன பொருள் என்று ஊகிக்கச் சொன்னபோது அவர்களால் சரியாகச் சொல்ல முடிந்தது .இது ஏற்படக்கூடிய வாய்ப்பே இல்லாத ஒன்று. பார்க்க முடியாத பொருளைக் கூட அவர்களால் சுட்டிக்காட்ட முடிந்தது .இதை லாரன்ஸ் ‘குருட்டுப் பார்வை’ என்று சொல்கிறார். அதாவது இயந்திரம் இயங்குகிறது ஆனால் அனுபவம் இல்லை. கணக்கீட்டிற்கும், ப்ரக்ஞைக்கும் இடையில் ஏதோ ஒன்று வருவதற்கு தவறிவிட்டது .எனவேதான் பார்வை என்பது பெறுவதல்ல, அது ஒரு கட்டமைப்பு.

இதன் தலைகீழாக்கத்தையும் பார்க்கலாம். உள்ளீடுகள் எதுவும் இல்லாத போதும், அனுபவங்கள் பல்கிப் பெருகுகின்றன. ‘சார்ல்ஸ் போனெட்’ நோய்க்குறி(Charles Bonnet), பார்வை குறைந்து வருபவர்களை ஆக்கிரமிக்கிறது ;அவர்களுக்கு தங்கள் பார்வை சரிந்து வருகிறது என்று தெரியும்; ஆனாலும் அவர்களுக்கு விதவிதமான, விசித்திரமான, விவரம் அடங்கிய பார்வை மயக்கங்கள் உண்டாகின்றன: முகங்கள், வடிவங்கள், வரைவுகள் சில நேரங்களில் அத்தனை காட்சிகளும் அவர்களுக்கு அனுபவம் ஆகின்றது. அவர்களுக்குத் தெரியும் இது உண்மை அல்ல என்று. அவர்கள் மனநோயாளிகள் அல்ல ; ஆனால் அந்தக் காட்சி அழகாக வளப்பமாக நல்ல கட்டமைப்போடு அவர்களுக்கு உள்ளிருந்தே தான் தெரிகிறது. உணர்வுபூர்வமான பார்வைக்கு, உலகம் உங்களுக்கான சமிக்ஞைகளை அனுப்பத் தேவையில்லை. நம் ஒவ்வொருவருக்கும் இரவில் தோன்றும் கனவு போல இது. நோய்மை அல்ல

இரவில் நாம் நாம் காணும் கனவுகளில் ஒத்திசைவான ஒரு உலகத்தை பார்க்கிறோம் அல்லவா? அத்தகைய ஒரு கட்டமைப்பை  வெளி உலகம் அந்த நேரத்தில் நமக்கு தருவதில்லை .அதாவது எந்த ஒளியும் நம் விழித்திரையில் படவில்லை, எந்த வார்த்தையும் செவிகளில் விழவில்லை. ஆனாலும் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், அச்சப்படுகிறோம் ,விரும்புகிறோம். இவை அனைத்தும் உறங்குகையில் எங்கிருந்து எழுகின்றன? எதார்த்தத்தை விரும்பும் நபர்கள் அனுபவங்களுக்கென ஒரு உசாவியை கேட்கிறார்கள். ஆனால் உறங்கும் மனிதன் அதற்கு என்ன தேவை என்று கேட்கிறான். எனவே அனுபவம் உற்பத்தியாகிறது, உள்ளடக்கம் கட்டமைக்கப்படுகிறது. ஆனாலும் நீங்கள் கேட்கலாம், எதை கனவில் காண்கிறோமோ அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது அல்லவா?

நடைமுறை குழப்பங்கள் இதற்கான ஒரு பதிலைச் சொல்ல முடியும். சில முகங்களை மிகத் தெளிவாக பார்த்தாலும் நம்மால் அடையாளம் காண முடியவில்லை. கண்கள் இருக்கின்றன, ஒரு முகத்தில் சரியான கட்டமைப்பு இருக்கிறது அது ஒரு நல்ல பொருளாக உங்களுக்கு தென்படுகிறது ஆனால் அதை ஒருங்கிணைத்து அது ‘பாலாஜி’ என்று உங்களால் நினைவு கூற முடியவில்லை. முகங்கள் மாற்றக்கூடிய முகமூடிகள் ஆகி விடுகின்றன. பார்ப்பதும், அடையாளப்படுத்திக் கொள்வதும் ஒன்றல்ல. மேலும் இரண்டுமே கட்டமைப்புகள் தான்.

நிதர்சனத்தின் வலுவான தரையை காண்பதற்காக நீங்கள் வராகத்தை போல் தோண்டிக் கொண்டே போனால் அதை இயற்பியல், உயிரியல் போன்றவற்றில் பார்க்க முடியாது. அவர்கள் ‘மாதிரி’களை காட்டுவார்கள். இன்னமும் இன்னமும் அதிகமான மாதிரிகள் !ஆனால் தரை என்னவோ இல்லை!

நீங்கள் ஒன்று சொல்லலாம்: ‘நான்’ அல்லது ‘நான் இல்லை’ என்பது அடிப்படையானது, உள்ளில் பிணைந்து இருப்பது, கேள்விகளுக்கு அப்பாற்பட்டது இல்லையா? பக்கவாதங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட தங்களுடைய கரங்களைப் பார்த்து அவை சரியாக வேலை செய்கின்றன என்று நோயாளிகள் சொன்னார்கள். அந்தக் கைகள் செயற்கையானவை அல்லது மற்றொருவருடையவை என்று ஒரு செவிலியோ அல்லது உங்கள் படுக்கைக்கு அருகே பதுங்கி வந்த உங்கள் உடன்பிறப்போ கூட சொல்லலாம். உங்கள் தோள்பட்டையில் பொருத்தப்பட்டுள்ளது உங்களுடையது அல்ல என்று சொன்னாலும் உங்கள் மனம் அதை ஏற்பதில்லை. மீண்டும் சொல்கிறேன் இது நோயியல் கூறல்ல. நல்ல ஆரோக்கியம் உடையவர்களுக்கு ஒரு ரப்பர் உறையும் தூரிகையும் கொடுத்து, ஒரு அந்நிய கை தன்னிடம் உள்ளது என்று உணரச் செய்ய முடியும் என்பதை பாட்வினிக் மற்றும் கோஹென் (Botvinic  and Cohen)1998ல் நிரூபித்தனர். அத்தகைய ரப்பர்கைக்கு ஆபத்து என்ற போது, பலர் ,அதை உண்மை என்று நம்பி கையைச் சுருக்கிக் கொண்டனர்.
உங்கள் படப்பிடிப்பு கருவியையும் தலை அணி கருவியையும் சரியான கோணத்தில் அமைத்துக் கொண்டீர்கள் என்றால் சுயம் என்பது மாறுபட்டு தெரிகிறது என்பதை உணர்வீர்கள். இது மாய மந்திரம் அல்லது வேடிக்கை விளையாட்டு இல்லை. மிக அடிப்படையான ‘தான்’ என்ற அந்த எல்லை, நாமே தீர்மானித்த அந்த எல்லை, ஒரு சாதனை இல்லை. அது சிறந்த “செயல் மாதிரியின்” சாதனை . அதாவது அது மாதிரிகளைக் கொண்டு நம்மை நம்பச் செய்கிறது.

நீங்கள் இதை ஏற்றுக் கொண்டால் நாம் உண்மையான கதைக்கு போகலாம் அதாவது திரைக்குப் பின்னால் இருக்கும் மூளை. நரம்பியல், இந்தக் கட்டமைப்பு அனுபவங்களின் பின்னால் உள்ளது. நீங்கள் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் இந்த வார்த்தைகளை இந்தக் கட்டுரையில் கடந்து வந்திருக்கிறீர்கள் அல்லவா -காட்சிப்புரணி ,சுற்றுகள், விழித்திரை, இயந்திரம் போன்ற சில. ஒருகால் உங்களுக்கு தரை தென்பட்டது போலக் காணப்படலாம். இது ஒரு புது புரிதல்  மட்டுமே என்று எடுத்துக் கொள்வோம். அனில்சேத் அண்ட் டொனால்ட் ஆஃப் மேன் போன்ற புகழ்பெற்ற ஆய்வாளர்கள் ”நாம் பார்ப்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று” என்ற இடத்திலேயே நிற்கிறார்கள்.
ஒருவர் மூளையைப் பற்றிக்கொண்டும் , மற்றொருவர் உணர்வுள்ள முகவர்களைப் பற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.
அவர்கள் புறவய உலகத்தின் மாயையை புறவயமான மூளைக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்கள் அல்லது புறவயமான மனதிற்கு. உங்களுக்கு எந்த கருத்து பிடித்து இருக்கிறதோ எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நிதர்சனத்திற்கு மறு எதார்த்தத்தை நீங்கள் பண்டமாற்று செய்திருக்கிறீர்கள்; அதுவும் அவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்பதை அறியாமலேயே.

இன்னும் சற்று நெருங்கி பார்ப்போம். நியூரான் என்பது என்ன? நியூரானை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் அந்த இணைப்புப் பகுதிதான் என்ன? ஒளி வாங்கிகள் என்பது தான் என்ன? அடிப்படை அடுக்குகளா? நாம் உயிரியல் கருவிகளைக் கொண்டு அனுபவக் கருவிகளை விளக்க முயல்கிறோம். நாம் ஒரு மாதிரியைக் கொண்டு மற்றொன்றை பரீட்சிக்க விரும்புகிறோம்.


உயிரியல் மாதிரிகள் தான் சரியானவை என்று சொன்னீர்கள் என்றால் எப்படி அது சரியானது என்று கேட்பவருக்கு, நீங்கள் உடனே வேதியலைக் காட்டுவீர்கள் அல்லது இயற்பியலை. கேட்பவர் அது ஏன் சரியான ஒன்று என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

முந்தைய மெய்யியலில் ஒரு வினா எழுந்தது அதை முஞ்சாச்சன் முக்கோணச் சிக்கல்(Munchhausen Trilemma) என்று சொல்வார்கள். சதுப்பு நிலத்திலிருந்து தன்னுடைய முடியாலேயே தன்னை வெளியேற்றிக்கொள்ள முடிந்தது என்று ஒரு பிரபு சொன்னார்.


எந்த ஒரு உண்மையையும் நிரூபிக்க முயன்றால் மூன்று பெரும் சீரழிவுகள்/எதிரிடைகள் காத்திருக்கும். முடிவற்ற பின்னடைவு, (Infinite Regress) வட்டச்சுழற்சி, தன்னிச்சையான உறுதிப்பாடு.(Arbitrary assertion)
அறிவியல் எதார்த்தவாதிகள், நியூரான், மெய்யான உண்மை என்று சொல்கிறார்கள். அவை உண்டாக்கும் நிறங்களைப் போல அல்ல; நியூரான்கள் உண்மையில் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அவர்கள் ஆதாரப்பூர்வமான ஆய்வுகளைக் காட்டுகிறார்கள் .ஏன் அந்த ஆதாரங்கள் நம்பிக்கைக்கு உரியன என்று கேட்டால், அறிவியல் பெற்ற வெற்றியை அவர்கள் சுட்டிக் காட்டுவார்கள். ஏன் ‘வெற்றி’ என்பது ‘சரி’ என்பதற்கு நிகராக கொள்ளப்படுகிறது என்று கேட்டால் அவர்கள் மற்றொரு மாதிரியை, மேலும் பல மாதிரிகளை காட்டிக் கொண்டே செல்வார்கள்.

இத்தகைய தொடர் சங்கிலிகள் முடிவுக்கு வருவதில்லை என்று அவர்கள் ஒத்துக்  கொள்வார்கள். அல்லது அவர்கள் எந்த அனுமானத்தில் தொடங்கினார்களோ அதற்கு வருவார்கள்.
இந்த மூன்று எதிர் கேள்விகளும் மெய்மை என்பதை ஒரு சாதூர்யமான கேள்விகளால் மடக்க நினைக்கவில்லை
மாதிரிகளால் அமைக்கப்பட்ட ஒன்றிடம் அழைத்துச் சென்று அவர்கள்  நம்மை நம்ப வைப்பது தான் உண்மையில் சிக்கல். அந்த மாதிரிகளை எதிர் கொள்ள வேண்டுமென்றால், இந்த மூன்றும் அவசியம். ஆனால், மாதிரியற்ற ஒரு வழி இருப்பதில்லை என்பதே ஆழமான பார்வையைக் கோருகிறது. அதாவது ,எந்த மாதிரிகளும், மாதிரிகளுக்கு வெளியே இருப்பதான கருதுகோள் இல்லை. கருவிகள் இல்லாத எந்த ஒரு வழியும் இல்லை.
இயற்பியல், உயிரியல் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் தோண்டத் தோண்ட உங்களுக்கு வலிமையான, அடித்தளமான, நிதர்சனம் என்பது கிட்டாது. நீங்கள் மேலும் மேலும் மாதிரிகளை பார்த்துக்கொண்டே இருப்பீர்கள். தரை தென்படாது. ஆமைகள் தான். அடியும், முடியும் தெரியாத அண்ணாமலை ஈசன்.

சரி நாம் வேறொரு சட்டகத்தின் மூலம் பார்க்கலாமா?
உலகப் பார்வை என்பது வெறும் கருவி என்று எடுத்துக் கொள்வோம். ஒரு சுத்தியலை ஒரு பண்பாட்டிடம் கொடுங்கள் அவர்களுக்கு பார்ப்பதெல்லாம் ஆணி போலவே தோன்றத் தொடங்கும். இந்த செயல் கருவிகள் வெறும் கருவிகள் மட்டுமல்ல. இவைதான் நமக்கு எதையும் சொல்பவை; எது பொருட்படுத்தத்தக்கது, எது சாட்சியாக வருகிறது, எது வெற்றி என்று காட்டப்படுகிறது, நாம் யாராக இருக்க வேண்டும் என்று சொல்பவை இந்தக் கருவிக்கூடுகள். பொருட்களின் தொடக்கம் பற்றிய ‘மாதிரிகளைச்சார்ந்த’ ஆய்வியல், எது அடிப்படை என்று தேடுவதே தவறு என்றும், நுண்ணிய அடுக்குகள் உள்ளன என்றும் சொல்கிறது. முடிவான அடுக்கு என்று சொல்வது கூட மற்றொரு செயல்பாட்டு கருவி தான். அது வேறொரு காரணத்திற்காக வேறொரு செயலை செய்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் எது நிரந்தர உண்மை என்று கண்டுபிடிப்பதை மாற்றி , இந்த ‘மாதிரிக் கருவிகள்’ ஒரு விலையுடன் நமக்கான விருப்பத்தேர்வுகளாக அமைந்து விடுகின்றன. மற்ற கருவிகள் தவறானவை அல்ல. அவைகளும் உதவும் பொருட்கள் தான் .ஆனால் பார்வைக்கு புலப்படாத ஒன்று. தாமஸ் குன்(Thomas Kuhn) இது, அறிவியலில் செயல்படுகிறது என்பதை கண்டு கொண்டார். ஒரு ‘முன்மாதிரி’, அது ஏற்றுக்கொள்ளும் உண்மைகளின் தொகுப்பு மட்டுமல்ல, அது எது உண்மை என்றும் நிறுவுகிறது. கருவி, கதையால் தேர்வு செய்யப்படுகிறது. அந்தக் கருவியோ இந்தக் கதை எதை கவனிக்கிறது என்பதை தேர்வு செய்கிறது. ஒவ்வொரு வெற்றிகரமான செயல் விளைவுகளை இந்த ‘மாதிரிக் கருவிகள்’ கொண்டு வரும்போது நிறைவான ஒப்புதல் உள்ள ஒரு உண்மையை கண்டறிந்ததாக எடுத்துக்கொள்கிறோம். என்ன ஒரு விசித்திரம் பாருங்கள், இந்த உலகமே ஆணிகளால் அமைக்கப்பட்டுள்ளது! நாம் அதை உபயோகப்படுத்த உபயோகப்படுத்த அது மிக மிக உண்மையாகவே தோன்றத் தொடங்குகிறது. எந்த அளவிற்கு என்றால் அந்த செயல் கருவி மாதிரிகள் கண்களுக்கே புலப்படாமல் போய்விடுகின்றன. நம் கையில் ஒரு சுத்தி இருக்கிறது என்பதை நாம் மறந்து போகும் வரையாவது அவைகள் மறைவில் இருக்கின்றன. இது மிக எளிமையான வருத்தத்தை தரக்கூடிய ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது.

நம் உலகத்தை எப்போது உறைய வைக்கிறோம்? நாம் நம்முடைய மாதிரிகளை  கொண்டு இப்படித்தான் என்று தீர்மானிக்கும் போது. உலகை சரியாக நாம் புரிந்து கொள்கிறோமா என்ன? நாம் பொருளாதாரத்தை பார்க்கிறோம், எல்லைகளைப் பார்க்கிறோம், பணத்தைப் பார்க்கிறோம், அவைகள் மாற்ற முடியாத நிறங்கள் என்று அனுமானித்து செயல்படுகிறோம்.


இப்படித்தான் பொருளின் அடிப்படைத் தன்மையை அறிந்து கொள்வோர் தங்களை அதிலேயே மூழ்கடித்துக் கொள்கிறார்கள். ஏற்கனவே பகுக்கப்பட்டுள்ள உலகத்துடன் தொடர்பு கொண்டு அல்ல; ஆனால் அதிகமாக, மிக அதிகமாக, அவை தேர்வுகள் என்று புரிந்து கொள்ளாமலேயே அதில் ஈடுபட்டு விடுகிறார்கள்.


இயற்பியலாளரின் கருவிகள், துகளின் கலைப்பொருளைச் சொல்கிறது என்றால் ஒரு ஆன்ம பலம் கொண்டவர் சக்திக்கான ஒரு கருவியை சொல்வதைப் போலத்தான் அதுவும். அனுமானிக்கக் கூடிய பிடிமானம், தவறுகள் திருத்தப்படுதல் போன்ற அவர்கள் எதிர்கொள்ளும் தடங்கல்கள் வேறு மாதிரியானவை. ஆனாலும் அந்த மூன்று சிக்கல்களையும் அவர்கள் சந்திக்கிறார்கள். இருவருமே வெவ்வேறு கருவிகள் கொண்டு பயணம் செல்லக்கூடிய இடங்களை அமைக்கிறார்கள்.
நீங்கள் கருவிகளை மாற்றுங்கள் அப்போது வேறொரு நிலத்தில் இருப்பீர்கள். இந்த கருவிகள், பலப்படுத்துவதாக அமைந்து விடுகின்றன.

ஒரு அனுமானமோ அல்லது முன்கூற்றோ வெற்றியடைந்ததென்றால் நாம் நம்மையே ‘ஆஹா ‘என்று பாராட்டிக் கொள்கிறோம். ‘ஓ இப்படித்தான் உண்மையில் பொருட்கள் இருக்கின்றன’ என்று வியக்கிறோம். அந்தக் கட்டுமானம் சுதந்திர வெளிச்சத்தை பெற்று விடுகிறது.


தொடர்புடன், பயன்பாட்டைக் குழப்பிக் கொள்கிறோம்.
எந்த அடிப்படையில் நாம் நிற்கிறோமோ அதை நாம் பார்ப்பதில்லை என்பதால் அந்த மூன்று சிக்கல்களும் நம் கவனத்தில் இல்லாமல் போய்விடுகின்றன.


சரி அளவீடுகளை எடுத்துக்கொள்வோம்; நிச்சயமாக அளவீடுகள் புறநிலைத் தன்மையைத் தருகின்றன.
கடற்கரையின் நீளத்தை பற்றி இருக்கும் ஒரு சிக்கலை பார்ப்போம். பிரிட்டனின் கடற்கரையை 100 கிலோ மீட்டர் அளவுள்ள ஒரு செயல் கருவியால் அளந்தால் நமக்கு ஒரு நீளம் கிடைக்கிறது ;அதே கடற்கரையை 50 கிலோமீட்டர் அளக்கும் ஒரு ரூலரால் கணக்கிட்டால் அதன் நீளம் அதிகமாகிறது.
இதையே நீங்கள் மீட்டரில் சொல்வதென்றால் எண்கள் பெருகுகின்றன.
கீழே ஒன்றிணைவதற்கான குறிப்பிட்ட நீளம் எதுவும் இல்லை. Benoit Mandelbrot இதை ஒரு கணித வழியில் 1967ல் சொன்னார். இன்றும் இது குழப்பம் தான். அளவீடு இல்லாமல், அளத்தல் சாத்தியமில்லை-உண்மையில் சரியான நீளம் என்பதுமில்லை. கடற்கரையின் நீளம் என்பது கண்டுபிடிக்கக்கூடிய ஒன்றல்ல. இந்த சுருக்கமான வடிவியல் தத்துவத்தை நம் வாழ்க்கையில் இணைக்கும்போது எவ்வளவு கொடியதாகி விடுகிறது?

நம்முடைய சமூக அளவீடுகள் கூட இந்த வரைமுறையைத் தான் பின்பற்றுகின்றன.
பொருளாதாரத்தின் சுகநிலையை ஜிடிபி காட்டுவதில்லை அது ஒரு குறிப்பிட்ட மாதிரியை பொருளாதார சுக நிலை என்று எடுத்துக் கொள்கிறது அது சைமன்  கஸ்னெட்ஸ்(Simon Kuznets ) என்பவரால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவரே இதை மக்கள் நலம் என்று பார்க்கக் கூடாது என்று சொல்லியிருந்தார். நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதை மாற்றிப் பாருங்கள். உங்கள் நாட்டின் பொருளாதாரம் அதைப் பொருத்து மாறிவிடும்.
அதைப் போலவே அறிவுத்திறன் என்பது அறிவை கண்டுபிடிப்பதில்லை அது உணர்வு பூர்வமான, குறிப்பிட்ட பண்பாடு சார்ந்த, தற்செயலான ஒன்றின் அளவுதான்.
அளவுகோல், எதை அளக்கிறோம் என்பதை உருவாக்கிக் கொள்கிறது. அந்தப் புறவயமான விளைவுகளைப் பார்த்து நாம் அதிசயப்பட்டு போகிறோம்

இங்கே தான் உண்மையான ஆபத்து எழுகிறது. மாதிரிகளை உண்மையில் அப்படித்தான் இருக்கிறது என்று தவறாக எடுத்துக் கொள்ளும் போது நாம் உலகை உறையச் செய்து விடுகிறோம். நாம் வாழ்வதற்கு நாம் உருவாக்கிய கருவிகளே நமக்கு எஜமானர்களாக வந்துவிடுகின்றன. ஏதோ ஒரு கணக்கு பணமே இல்லை என்று சொல்லிவிட்டால் நாம் பட்டினி கிடக்கத் தொடங்குகிறோம் ; பணம் என்பது நாம் அகழ்ந்து எடுக்கும் ஒரு பொருள் என்றும் அதை பேரேட்டில் தேட வேண்டாம் என்றும் நினைத்துக் கொள்கிறோம். நாம் ஒரு சிறைக்குள் இருக்கிறோம். அந்த சிறையும் நாமே கட்டமைத்தது. மேலும் இதிலிருந்து தப்பித்தல் இயலாது என்றும் சமாதானப்படுத்திக் கொள்கிறோம் .ஆனால் ஒன்றை மறந்து விட்டோம்- நம்மிடம் தான் இதற்கான திறவுகோல் இருக்கிறது என்பதை

இ வோ வில்சன்(E.O. Wilson ) மிகச்சிறப்பாக சொல்கிறார் : நம்மிடம் மிகப் பழங்கால உணர்ச்சிகளும், நடுக்கால நிறுவனங்களும், கடவுளை ஒத்த தொழில் நுட்பமும் இருக்கின்றன. உருவாக்குவதையும் அழிப்பதையும், நம்முடைய முன்னோர்கள் தெய்வ சக்தி என்று சொன்னார்கள். நாம் முதன்மை விலங்கு அல்லது தலைமைகுரு சொல்லும் நிச்சயத் தன்மையுடன், இறுமாப்புடன் அந்த மென்பொருளை பயன்படுத்துகிறோம். நம்மால் ‘ஒன்றும் இல்லாமல் போக முடியாது’ என்ற அச்சத்தினால், நம்முடைய மாதிரிகளை பின்பற்றுகிறோம்.  வெறுமைகளை வெறுக்கிறோம்.
இறுமாப்பு, நம்மை தேங்கச் செய்து விடுகிறது. மாறுபாடுள்ள கருத்துக்களை மதங்களுக்கு எதிரான ஒன்று என்று சொல்லிவிடுகிறது.


என்னுடைய பார்வை ஒன்றே சரியானது என்று சொல்லும்போது நீங்கள் வேறு ஒரு கருவிக்கூட்டை பயன்படுத்துவதில்லை –“நீங்கள் தவறானவர் நீங்கள் பிளவுபட்டவர் நீங்கள் எதிரி’

கவனியுங்கள், இது முக்கியமானது, நான் உலகம் இல்லை என்று சொல்லவில்லை
எல்லாமே தன்னிச்சை என்று சொல்லவுமில்லை. நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்களோ அதற்கான அனுமதிச்சீட்டையும் நான் வழங்கவில்லை. 

செயல்களுக்கு விளைவு உண்டு .அதுதான் முக்கியமானது. பாலாடைக்கட்டிகளைக் கொண்டு ஒரு பாலம் அமைத்தால், வெகு விரைவிலேயே உங்கள் மாதிரியின் வலிமை என்ன என்பது புரிந்துவிடும். நீங்கள் உலகில் வழுக்கவில்லை; உங்கள் மாதிரியின் தோல்வியில் சறுக்குகிறீர்கள் .அந்தத் தோல்வி தான் நிராகரிப்பு. அதனுடன் நீங்கள் பேரம் பேச முடியாது.

நான் என்ன சொல்கிறேன் என்றால் நம்முடைய இலக்குகள் நம்முடைய கேள்விகளை தீர்மானிக்கின்றன. அந்தக் கேள்விகள் எந்த விதமான பதில்களைக் கொண்டுவருமென்றும் நம்மால் பார்க்க முடிகிறது.

நாம் பொருட்களின் தொடக்கம் பற்றி கண்டுபிடிக்கவில்லை, மாறாக உருவாக்குகிறோம். இப்படியான சில உருவாக்குதல்கள் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. நம்மால் செவ்வாய் கிரகத்திற்கு ‘ரோவர்’களை அனுப்ப முடிகிறது, நோய்களை குணமாக்க முடிகிறது, பல மொழிகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்த முடிகிறது. ஆனால், சில தோல்விகளும் இருக்கின்றன .குறிப்பிட்டுச் சொல்லப் போனால், சூனியக்காரிகளை எரிக்கிறோம், சூழலை கெடுக்கிறோம், மோசமான பானங்களை அருந்துகிறோம், முடிவற்ற போர்களில் ஈடுபடுகிறோம். மாதிரிகளை நம்பி செயல்படும் ‘ஆன்டாலஜி’ இதை நமக்கு காட்டிக் கொடுக்கிறது. ஆனால், புறநிலைத் தன்மையை மட்டுமே சொல்கிறது, பொறுப்பை பற்றி சொல்வதில்லை.
‘இதெல்லாம் இப்படித்தான் இருக்கும்’ என்ற கூற்றின் பின்னே நீங்கள் ஒளிந்து கொள்ள வசதியாக, ‘இந்த வகைமைகள் அமைக்கப்பட்டவை, கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல என்று புரிந்து கொள்ளாமல்’ இருந்துவிடலாம்.


ஒவ்வொரு வகைமையும் ஒரு தேர்வாக ஆகிவிடும். ஒவ்வொரு கருவிக்கூடும் மதிப்புக்கூட்டும் பொருளாகும்.

பார்க்கும் நிறங்கள், அடையாளம் கண்டு கொண்ட முகங்கள், உங்கள் உடல், நீங்கள் நம்பும் அளவீடுகள் அனைத்துமே செயல்படும் ஒரு அமைப்பின் சாதனைகள். இவை எங்கோ வெளியில் இருந்து வரவில்லை. நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும் கட்டமைக்கப்பட்டது. நிகழக் கூடும் என்பதையும், தடங்கல்களையும் கணிக்கக் கூடியவை.


கீழ் என்று எதுவும் இல்லை அடி காண முடியாத ஒன்று. அடுத்த அடுக்கிற்கு கீழே நிச்சயமான ஒன்று ஒளிந்திருக்கிறது என்று இறுதியாகச் சொல்ல முடியாது

இங்கேதான் இது மிகவும் அசௌகர்யத்தை தருகிறது. பகுதிகள் ஒரு முறை ஏற்படுத்தப் பட்டுவிட்டால், அதாவது அவை கண்டுபிடிக்கப்படாமல் வெறுமனே அப்படி அமைக்கப்படுகின்றன என்றால், பிறரால் இந்த உலகத்தை சரியான விதத்தில் பார்க்க முடியாமல் போவது மட்டுமல்ல அவர்களுக்கு என்று மாறுபட்ட செயல் கருவிகள் மாறுபட்ட சிக்கல்களுக்காக, வேறுபடும் தடங்கலுக்காக வருகின்றன. இதில் சிலது செயல்படும்; சிலது தோல்வியுறும்; சிலது கெடுதலை கொண்டுவரும்; சிலது செயல்பாட்டு தடங்கல்களால் வீழ்த்தப்படும். இருந்தும் அவை எப்போதுமே தவறு என்று சொல்வதற்கில்லை. அவற்றின் தோல்வி என்பது ஒரு புறவய ஒழுங்கை பிரதிபலிக்க முடியாமல் போனதே. 

அவை செயல்படவில்லை என்ற காரணத்தினால் அவர்கள் தோல்வியில் வீழ்கிறார்கள்.. 

இந்த சந்தர்ப்பத்தில் தான் ‘நிச்சயத்தன்மை’ என்பது தன்னுடைய ‘அப்பாவித்தனம்’ என்பதை நிறுத்தி விடுகிறது. 

முன்னரே புதைக்கப்பட்ட படிமங்களோ, வேறு எதுவோ ,அவற்றை தூசி தட்டி நாம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சியாளராக செயல்படுகிறோம். 

ஆனால் உண்மையில் எதுவும் புதைக்கப்படவில்லை. நாம் தோண்டும் போது சிதைவுகளை உண்டாக்குகிறோம். 

ஒவ்வொரு அறிவியலும், ஒவ்வொரு அளவீடும், ஒவ்வொரு பகுதியும், குறுக்கே புகுவன/ தலையீடு செய்வன. அவை கண்டுபிடித்தவைகள் ‘கண்டுபிடித்தல்’ இல்லை. 

சாத்தியங்களையும், தடைகளையும் மீறுவதற்கான ஒரு கருவியையே நாம் நிலப்பரப்பு என்று எடுத்துக் கொள்கிறோம் உண்மையில் நாம் உலகைக் காணவில்லை. பார்க்கப் போனால் அடியில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதே இல்லை. 

எங்கே இந்த அகழ்தல் முடியும், எங்கே உண்மை புலப்படும் என்பதற்கு எந்தவிதமான உறுதிப்பாடும் அடுத்தடுத்து வரும் விளக்கங்களில் கிடைப்பதில்லை. 

இது குறிப்பாக பயமுறுத்துகிறது. இதை தவிர்க்கவும் முடிவதில்லை. 

‘உண்மை’ என்பதின் இடத்தை ‘பொறுப்பு’ ஏற்றுக் கொள்வது, நன் நடத்தையின் முன்னேற்றம் அல்ல, அது கட்டமைப்பின் விளைவாக ஏற்படும் ஒன்று .

இந்த உலகம் என்ன என்பது கேள்வி இல்லை.  மாதிரி வடிவங்கள் என்ன செய்கின்றன, எங்கே நம்மை பார்வையற்றவராகச் செய்கின்றன, அதற்கான விலை என்ன, இவைதான் கேள்விகள். 

நீங்கள் கட்டமைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் மேலும் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டீர்கள் என்றால் மீண்டும் உங்களால் எளிமைக்கும் பேதமைக்கும் திரும்ப இயலாது. 

நீங்கள் முன்னரே தேர்வு செய்து விட்டீர்கள்.; அப்படி அல்ல என்று நீங்கள் நடிக்கிறீர்களா என்பதுதான் கேள்வி..

இந்தக் கட்டுரையின் முக்கியச் செய்தி உலகத்தை உள்ளவாறே நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா அல்லது கட்டமைக்கிறோமா என்பதே.  மாதிரிகளால் நிரூபிக்கப்படும் ஒன்று, எந்த அளவிற்கு மெய்மை பேசும்?

இந்தத் தருணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சூரியன்கள் ஆகாயத்தில் தோன்றிய நிகழ்வை பார்க்கலாம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னால் சீனாவில் ஒரே நேரத்தில் மூன்று சூரிய உதயம் ஒரே இடத்தில் காணப்பட்டது. 

இப்போது ரஷ்யாவில் 2 சூரியர்கள் கீழ் வானில் தோன்றினார்கள்

13ம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகர், இப்படி தோன்றும் காட்சிகளை ‘பிரதிசூரியா’ என்று யாதவாப்யுதயம் என்ற கிரந்தத்தில் அழகான சுலோகமாகச் சொல்கிறார். 

सति सूर्ये समुद्यन्त: प्रतिसूर्या इवासुरा: ।
जगद्बाधाय जायन्ते जहि तान् स्वेन तेजसा ॥६४॥

காட்சி மயக்கத்தை விளக்கும் துதி இது.

“சூரியன் உதிக்கும் போது சில நேரங்களில், அதனுடைய பிரதிபலிப்பாக மற்றொரு சூரியனும் உதிப்பது போல் தோன்றும். இதைப் போலத்தான் மனிதர்களை இம்சிக்கவென்று ராக்ஷசர்கள் தோன்றுகிறார்கள். 

சூரியனுக்கு இயல்பாகவே இருக்கக்கூடிய பிரகாசத்தினால் மாயச்சூரியன் இல்லாமல் மறைந்து விடுகிறான். அதைப்போலத்தான் ஸ்ரீ கிருஷ்ணா, நீ உன்னுடைய தெய்வீக சக்தியினால் கம்சனை வென்றெடுத்தாய்.”

ப்ரக்ஞை என்பதில் உணர்ச்சிகள், எண்ணங்கள் அனைத்தும் அடங்கும். ஆனால், அது, அவையல்ல. ப்ரக்ஞையின் உள்ளடக்கங்களாக அவை இருக்கின்றன. இந்த இருமை இருப்பது தான் மாயை என்று இந்தியர்கள் சொல்கிறார்கள்

நமக்கு சிலது தெரிவதில்லை, என்ன தெரியவில்லை என்பதை உணர்வதற்கும் வழி தெரியவில்லை. சில கேள்விகளுக்கு உள்ளார்ந்த விடை இல்லை. பொதுப் புரிதலுக்குள் அடங்காத அதை ஈஷா உபனிஷத் இவ்வாறு சொல்கிறது : ‘அது அசைகிறது, அசைவதில்லை; தொலைவிலும், அருகிலுமாக இருக்கிறது; உள்ளேயும் இருக்கிறது, வெளியேயும்’

தர்க்க நியாயத்தில், விவாதங்களில் அல்லது எண்ணப் போக்கில் ஏற்படச் சாத்தியங்களுள்ள தவறுகளையும் பற்றி இந்திய தர்க்கம் சிந்தித்திருக்கிறது. அந்தத் ‘தவறை’ ‘ஹேத்வபாஷா’ என்று அழைத்தார்கள். உண்மையான காரணமாகத் தோன்றும் ஒன்று அப்படியில்லை என்று சொல்வதில் அவர்களின் மூளைத்திறன் வெளிப்படுகிறது.

திருபுவனம், தாராசுரம், வேலூர் கோயில்களில் இந்த அற்புத சிற்பத்தைக் காணலாம். (விஸ்மயம் கலைக் குழுமம் இதை அழகான சிற்பமாக வடிவமைத்துள்ளார்கள்.  தேவையானவர்கள் அவர்களிடம் வாங்கிக்கொள்ளலாம்.)

இரு வேறு உருவங்கள்- ஒரே முகம்- காளையும், யானையும். நம் சிற்பங்கள் சொல்லாத எதையும், யார் புதிதாகச் சொல்லப் போகிறார்கள்?

நிதர்சனத்தை நாம் கண்டுபிடிப்பதில்லை; அதை உருவாக்குகிறோம். உலகை நாம் கட்டமைத்துக் கொள்கிறோம், அதன் மூடுதிரையை அகற்றுவதாகச் சொல்லிக் கொண்டு (அப்படி ஒன்று இருந்தால்) மாதிரிகளில் திருப்தி அடைந்துவிடுகிறோம்.

உசாவி:

Manuel Delaflor 

Director of the Metacognition Institute and author of the forthcoming book Model Dependent Ontology. 23/01/26

இந்திய தத்துவங்கள்.

Exit mobile version