வாளைக் கீழே வைத்து
விடுதியில் இடம் கேட்டான்
வெளியே பனிப்புயல்
ஜோசா பூசன் (1716-1784)
யாதோகசெதோ
கடானாநாகெதாசு
ஃபுபுகிகன
宿かせと
刀投げ出す
吹雪かな
யாரையும் அசைத்துப் பார்க்கும் இயற்கையைப்பேசும் ஹைக்கூ.
உடலுறுதி, பயிற்சி, அடிப்படைகளை மீறாத பிடிப்பு எதுவாக இருப்பினும் இயற்கையை எதிர்த்து நிற்கையில் ஓர் எல்லைக்கு மேல் இயலாமையால் மனிதன் சமரசம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
அந்த சாமுராய் பனிப்புயல் பருவத்தில் பயணம் செல்லவேண்டிய கட்டாயம் இருந்திருக்கலாம். பயணத்தில் தங்குவதற்கு விடுதி எதுவும் கிடைக்காததால் சோர்வுடன் நடக்கிறான். கடுமையான பனிப்புயல் வீசுகிறது. பாதையைப் பனித்துகள் போர்த்தி நிறைக்கிறது. அவனுடைய நடை தடுமாறுகிறது. சாமுராய் என்பதால் வீரத்தை முன் வைத்து சோர்வைப் பின்னுக்குத் தள்ளுகிறான். ஓர் எல்லைக்குமேல் அவனுடைய உடற்திறன் தான் இயற்கையின் முன் தோற்றுக்கொண்டிருப்பதை மூளைக்கு அறிவிக்கிறது. எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்னும் நினைப்பைத் தவிர அவன் மூளையில் வேறு எந்த நினைப்புக்கும் இடமில்லை. தூரத்தில் ஒரு விடுதியைக் காண்கிறான். விடுதியை நோக்கி நடக்கிறான்.
பனிப்புயலின் சீற்றத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள விடுதியை நோக்கி நடக்கையில் அவனுக்குத் தான் ஒரு சாமுராய், இப்போது தான் இடுப்பிலிருக்கும் தன் வாளுடன் விடுதியை நோக்கி நடப்பதை உணர்கிறான். வாளுடன் வருகின்ற சாமுராயை விடுதிக்காவலர் எப்படி எதிர்கொள்வர் என்பது தெரியாது. விடுதியை நோக்கி வாளுடன் செல்பவன் எந்த நோக்கத்துடன் வருகிறான் என்பது விடுதியில் இருப்போர்க்குத் தெரியாது. வாளுடன் வருபவன் சண்டையிட வரலாம், கொள்ளையடிக்க வரலாம், விடுதியில் தங்கியிருக்கும் யாரையோ கொலை செய்ய யாராலோ அனுப்பப்பட்ட சாமுராயாக இருக்கலாம், அல்லது சாமுராயே விடுதியில் இருக்கும் யாரையோ பழிவாங்க வந்தவனாக இருக்கலாம். வாளுடன் வரும் வீரனின் நோக்கம் தெரியாதவரையில் அவர்களுடைய எதிர்வினையைக் கணிக்க இயலாது.
ஒரு சாமுராய்க்கு முக்கியம் வாள். வாளைத் தீட்டுவதும், கூர் பார்ப்பதும், இமைக்கும் நேரத்தில் அதை உறையிலிருந்து எடுத்து வீசுவதும், பின்னர் உறையைக் கண்ணால் பார்க்காமல் கைகளால் உணர்ந்து வாளை மீண்டும் உறையில் செருகுவதும், சாமுராய் மேற்கொள்ளும் பயிற்சிகள். வாளின் திறனைப் பின்னிறுத்தி அறிவால் ஆளுமையை நிரூபித்த சாமுராய் உண்டென்றாலும், அது விதிவிலக்கு.
சாமுராய் தோகுகாவா லெயாசுவின் கூற்றின்படி ‘வாள் என்பது சாமுராயின் ஆன்மா’ (‘Sword is the soul of Samurai’ – Tokugawa Leyasu). இங்கே பனிப்புயலில் சிக்கி விடுதியை நோக்கி நடக்கும் சாமுராய் தன்னுடைய வாள் தரக்கூடிய பின்விளைவுகளை யோசிக்கிறான். போரிடுவதும் உயிர்துறப்பதும் சாமுராயின் வாழ்க்கை முறைகளுள் ஒன்று. ஆனால், இங்கு பனிப்புயலின் நடுவில் தங்குவதற்கு இடம்தேடிச் செல்லும் சாமுராயின் மனதில் போருக்கான அணுகுமுறையும் தேவையும் இல்லை. கூரைக்குள் ஒதுக்கி, பனிப்பொழிவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வது மட்டும் அவனது நோக்கம்.
போரும் தற்காப்பும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கடுமையான பனியிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் தன்னுடைய ஆன்மாவைச் சிறிது நேரம் விலக்கிவைக்கத் துணிகிறான். தன்னுடைய வாளை எடுத்துக் கீழே வைக்கத் துணிகிறான்.
விடுதியை அடைந்து, தன்னுடைய ஆன்மாவான வளை எடுத்துக் கீழே வைத்துவிட்டு, விடுதியில் தங்குவதற்கு இடம்கேட்கிறான். இயற்கை யாரையும் அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டது.
முதல் அடியில் இடம்பெறுவது ஒரு வார்த்தை, 宿かせと, யாதோகசெதோ. ஜப்பானிய எழுத்துருவில் யாதோ காஞ்சி வடிவிலும், கசெதோ ஹிராகனா வடிவிலும் எழுதப்பட்டுள்ளன. 宿 யாதோ – இது காஞ்சி வரிவடிவில் உள்ளது. இதனை ஹிராகனா வரிவடிவில் விரித்து எழுதினால் や யா ど தோ (do) என்னும் இரண்டு எழுத்துகள் / அசைகள். இது விடுதி எனப் பொருள்படும். や – யா, ど – தோ(do), か – க, せ – செ, と – தோ (to), யா தோ க செ தோ – விடுதியில் இடம்கொடுங்கள்.
இரண்டாவது அடியில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. ஒரு பெயர்ச்சொல், ஒரு வினைச்சொல். 刀投げ出す கடானாநாகெதாஸ், இதில் கடைசி எழுத்தை ‘ஸ்’ என ஒலிப்பது வழக்கம். ஆனால், எழுத்தெண்ணிக்கையில் வரிவடிவில் அதன் ஒலிப்பு ‘சு’, நாகெதாசு என இங்கு குறிப்பிடப்படுகிறது. இவ்வரியில் மூன்று காஞ்சி எழுத்துருக்களும் இடையில் கெ, கடைசியில் சு என்னும் ஹிராகனா எழுத்துருக்களும் உள்ளன.
刀 – இந்த காஞ்சி வரிவடிவை விரித்து எழுதினால் か – க, た – தா, な – நா. கடானா, (கதானா – ஆங்கிலம் கலந்த ஒலிப்பில் ‘கடானா’). இதன் பொருள் வாள்.
投げ出す. 投げ இது நாகெ, 投 இந்த காஞ்சியை விரித்து ஹிராகனாவில் எழுதினால் な – ந. げ – கெ, இது ஹிராகனாவில் உள்ளது. 出 இந்த காஞ்சியை ஹிராகனாவில் எழுதினால் だ – தா (da) , す – சு, இது ஹிராகனாவில் உள்ளது. சொல்லின் கடைசியில் வந்தால் இதன் ஒலிப்பு ‘ஸ்’. மேற்சொன்னபடி இங்கு கவிதையில் அசையெண்ணிக்கைக்காக ‘சு’ என்று ஒலிக்கிறோம். நாகெ 投げ கீழே போடுதல், தாசு 出す விட்டுவிடுதல். நா கெ தா சு – கீழே போட்டுவிட்டான். க டா நா நா கெ தா சு – வாளைக் கீழே போட்டுவிட்டான்.
மூன்றாவது அடியில் இரண்டு காஞ்சி எழுத்துருக்களும், இரண்டு ஹிராகனா எழுத்துருக்களும் உள்ளன. 吹雪かな ஃபுபுகிகன, இதில் முதல் எழுத்து 吹 காஞ்சி, இதன் ஹிராகனா வடிவம் ふ ஃபு, இதன் பொருள் ஊதுவது, சுவாசிப்பது, புகைவிடுவது இப்படியாக வரும். இக்கவிதையில் கற்ரு வீசப்படுவதைக் குறிக்கிறது. இரண்டாவது எழுத்து 雪 காஞ்சி, இதன் ஹிராகனா வடிவம் ぶ பு (bu) き – கி, இதன் பொருள் பனி. அடுத்து வரும் இரண்டு ஹிராகனா எழுத்துகள் か – க, な – ன, இவையிரண்டும் அசையெழுத்துகளாக இடம்பெறுகின்றன. 吹 – ふ – ஃபு, 雪 – ぶ – பு, き – கி, か – க, な – ந, ஃபு பு கி க ன – பனிப்புயல்…ஆ!
சொல்லுக்குச் சொல் மொழிமாற்றமெனில்,
விடுதியில் இடம்கொடுங்கள்
வாளைக் கீழே போட்டுவிட்டான்
பனிப்புயல்…ஆ!
தலைப்பில் சாமுரயைக் குறிப்பிட்டுக் கவிதையாக மொழியாக்கம் செய்தால்,
வாளைத் துறந்த சாமுராய்
வாளைக் கீழே வைத்து
விடுதியில் இடம் கேட்டான்
வெளியே பனிப்புயல்
