முந்தைய பகுதி
உலகம் ஒன்று, நூல்கள் நூறு,
வணிகம் ஓடும், மொழிகள் கூடும்.
அறிவின் தீபம் எல்லை தாண்டும்,
அன்பின் குரல் எங்கும் ஒலிக்கும் நாளை
ஆனால், இன்றோ
காடுகள் காயும், கடல்களில் குருதி.
சமத்துவம் சிதறும் சங்கிலியில் சிக்கிய உலகம் இது. மீட்சி எது? மீட்பவர் யார்?
தன் மேன்மை சொல்லாதார் கரங்களில்
இணைப்பு நன்மை தான்;
சமநிலை தான் சாவி.
உலகம் ஒன்றாய் வாழ.
உலகமயமாக்கலின் விளைவுகளைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். எந்தவொரு பொருளாதாரக் கொள்கையும் மனித மற்றும் அனைத்து உயிர்களுக்குமான சமத்துவக் கொள்கைகளைச் செயல்படுத்தவில்லை என்பதையும் பார்த்தோம். ஏன் அப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்க்கப் போவதில்லை; அவற்றின் நிரலாக்கத்தின் மெய்ச்செயல்பாடுகள் காண்பித்த/ காண்பிக்கும் விளைவுகளே போதுமே! மாற்று வழிகளைச் சொல்வதற்கு முன்னால், லிஞ்ச் சொல்வதையும் கேட்டுவிடுவோம்.
“அமெரிக்கா, உலகமயமாக்கலுக்கு எதிராக வேறு விதமாக செயல்பட்டிருந்தால் வரலாறு மாறியிருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. உலகமயமாக்கல், உள்நாட்டிலும் பல பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கியது என்னவோ கண்கூடு; அதற்காக, அதை முழுமையாக எதிர்ப்பது சிறந்த தேர்வு என்ற முடிவுக்கு வர முடியுமா? ஏனெனில் அந்தக் கொள்கை சில சாதகங்களையும் உண்டாக்கியது, சில பல நன்மைகள் விளைந்தன.” இன்றைய ட்ரம்பின் அரசு பிடிவாதமாக அரங்கேற்றும் பொருளாதார தேசியவாதம், உலக வர்த்தகப் பின்னலை மேலும் சிடுக்குகளுக்கு உள்ளாக்குகிறது.
டிரம்பின் பாதுகாப்பு-வாத அணுகுமுறை தொடரும் நிலையில், எதிர்காலத்தில் “எதிர்-உலகமயமாக்கல்” முயற்சிகளும் தவறான பாதையில் செல்லக்கூடும்.
எழுத்தாளர் லிஞ்ச், “ஹைப்பர்-குளோபலைசேஷன்” முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும், உலகமயமாக்கல் தானாக முடிவடைவதில்லை, அது வடிவம் மாறுகிறது என்று கூறுகிறார். அமெரிக்காவை உலக பொருளாதாரத்திலிருந்து பிரிப்பது சாத்தியமற்றதும் செலவானதுமாக இருப்பதால், கடந்த பிழைகளை மீண்டும் மீண்டும் சரிசெய்ய முயல்வது ஆபத்தானது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
“இன்றைய அமெரிக்க நிலையை ‘உலகமயமாக்கல் விளைவு’ என்று குறுக்க முடியாது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உற்பத்தித் துறையில் வேலைகளை மிக அதிகமாகக் குறைத்தன; (இது ஒரு பொதுவான வாதம் மட்டுமே! தொழில் நுட்பத் துறை பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும், அவற்றில் வேலை வாய்ப்புகளுக்கும் அடி கோலியுள்ளது.) மேலும், அமெரிக்கா-ஈராக் போர், சப்-பிரைம் நெருக்கடி, எல்லைக் கொள்கை பிழைகள், பட்ஜெட் பற்றாக்குறைகள், வரி அமைப்பின் குறைபாடுகள், மற்றும் சுகாதாரத் துறையின் செயலிழப்பு போன்ற பல முக்கிய முடிவுகள் உலகமயமாக்கலால் ஏற்படவில்லை. இவை அரசாங்கத்தால் தானாக எடுக்கப்பட்டவை. இவற்றில் சில முடிவுகள் வேறுபட்டிருந்தால், அமெரிக்காவின் பொருளாதாரமும் அரசியலும் இன்று இந்தக் குழியில் விழ நேரிட்டிருக்காதோ என்னவோ?.
இப்போது கொள்கை நிர்ணயிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது முக்கியமான கேள்வி. செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் அடுத்த பெரிய பொருளாதார அதிர்வுக்கு தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். பழைய சங்கை ஊதுகிறார். அதாவது, சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்துதல், வரி அமைப்பை சீரமைத்தல், திறன் மேம்பாட்டு திட்டங்களை வலுப்படுத்துதல், மற்றும் பிராந்திய வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற நீண்ட காலமாக தவிர்க்கப்பட்ட கொள்கைகளை மீள் கொணர்தல் அல்லது புனரமைத்தல் அல்லது உருவாக்குதல் அவசியம்.”
உலகமயமாக்கலின் நன்மை, தீமைகளை கீழே சுருக்கமாகப் பார்க்கலாம்
| நன்மை | தீமை |
| வர்த்தகமும், சந்தையும் அதிகரித்தன. முதலீடுகள் பெருமளவில் வந்தன. | முன்னரே செயல்பட்டு வந்த நிறுவனங்களால் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியவில்லை.பொருளாதாரப் பிளவு அதிகரித்தது. |
| புதிய தொழில் நுட்பம், புதுச் சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் உலகம் முழுதும் எளிதாகப் பரவியது. | வளரும் நாடுகள், இதற்காக அதிக விலை தர நேரிட்டது. தேவையற்ற பொருட்கள் சந்தைகளில் புகுந்தன |
| பயணங்கள், புலம் பெயர்தல்கள், பலவிதமான உணவு, இசை, கலை இணைந்து கலவையான பண்பாடு உண்டானது. | வளரும் நாடுகளுக்கு தங்கள் மரபினைச் சார்ந்த அச்சம் உருவானது. உலகப் பொது மனிதன் என்பது மறைமுகமான கோட்பாடு என்று பார்க்கப்பட்டது. |
| சூழல் பாதிப்புகள், பெருந்தொற்றுக் காலத்தில் இணைந்து செயல்பட முடிந்தது சமூக மற்றும் நாடுகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது. | அதிக உற்பத்தி, அதிகளவில் வாணிக ஊர்திகள், குறைந்த வருமானம், பேரிடர் காலத்தில் செயல்படாத உலக விநியோகச் சங்கிலி. |
இதை எப்படி எதிர் கொள்ள வேண்டும்?
- உழைப்பாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும்.
- ஒரு தேசத்தின் மரபுகள், மொழிகள், அதற்கேயான தனித்த அடையாளங்கள் சிதைக்கப்படக்கூடாது.
- சூழல் சீர்கேடுகள் ஏற்படாத வண்ணம் அமைப்புகள் இயங்க வேண்டும்.
- எந்த பொருளாதாரச் சிக்கலிலிருந்தும் மீண்டுவரும் வகையில் நாடுகள் வலுப்பெற வேண்டும்.
உலகமயமாக்கல் ஒரு சிந்தனைதான்-ஆனால், இரு முனைகளும் கூராக உள்ள ஒன்று.
பொதுவாக ஜாதகம், கைரேகை, முகம் படித்தல், மன அலைகளை அறிதல் போன்ற நுட்பங்கள், ஒருவரின் கடந்த காலத்தைத் துல்லியமாகச் சொல்வதைப் போல, நிகழ் மற்றும் எதிர் காலத்தைச் சொல்வதில்லை என்பது பலருக்கும் அனுபவமாக இருக்கலாம். லிஞ்ச் அப்படி செயல்பட்டிருக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது.
~o0o~
அதீத கற்பனை என்றாலும், ஒரு உலக நாணயம், அமெரிக்க டாலர்களுக்கான உண்மையான மாற்றாக அமையும் என்ற எண்ணத்தில் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். பலர் சிரிக்கலாம், மணல் கோட்டை என்று சொல்லலாம், என்னுடைய தகுதிகளைப் பற்றிய கேள்விகள் எழலாம், ஏன், இது பிரசுரிக்கப்படாமலும் போகலாம். எனினும், சொல்ல வேண்டியதை சொல்லாமல் விடலாமா? சொல்லத்தக்க, சொல்லாமையாலும் கெடுமல்லவா?
மற்றொன்றையும் வலியுறுத்த வேண்டும். உலக நாணயம், கோட்பாட்டின் படி அற்புதமான ஒன்றுதான்; ஆனால், பொருளாதார அவ நம்பிக்கைகள்- நிலையான அரசு, பணவியல், நிதியியல் கொள்கை கட்டுப்பாடுகள், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள மனத் தடைகள் என்பவை கவனத்தில் கொள்ள வேண்டியவை.
- என் அளவில், வர்த்தகப் பற்றாக்குறை, வர்த்தக அபரிமிதம், அதன் விளைவாக எழும் பொருளாதார மாற்றங்கள், வேலையின்மை, இவற்றை சீர் செய்ய ‘உலக நாணயம்’ தேவை. இது புதுக் கருத்தல்ல. செயல்பட்டு வரும் சிலவற்றைப் பார்க்கலாம்.
- யூரோ மண்டலம்: ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது; திறமையாகச் செயல்படுகிறது. ஆனால், கடன் பெருக்கம், சீரற்ற வளர்ச்சி இவற்றையும் பார்க்க முடிகிறது.
- ஐ எம் எஃப் சிறப்பு உரிமைகள்: இது நாணயமல்ல. ஆனால், தள்ளாடும் பொருளாதார நிலையிலுள்ள அங்கத்தினர் நாடுகளுக்கு பொருளாதார நீர்மையை வழங்கும் ஒன்று.
- க்ரிப்டோ நாணயங்கள்: மையமற்ற ஒன்று, அதிகாரம் பரவலாக்கப்பட்ட இயல்பு வகை. குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்து இயங்கவில்லை என்றாலும், நிலைத்தன்மை அற்றது, அனைத்து நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்படாதது, பாதுகாப்பு கவசமற்றது- அதாவது, அதற்கென கஷ்ட காலத்திற்கான இருப்புத் தொகை இல்லாதது.
- கெய்ன்ஸ் சொன்ன ‘பேங்கோர்’ இதைப் போன்ற ஒன்று.
குறிப்பிட்ட மண்டலங்களுக்குள் இயங்கும் நாடுகளில் கூட இத்தகைய உலக நாணயத்தை கொண்டு வருவது எளிதல்ல
செயல்படுத்தக் கடினமானதும் கூட. தங்கள் நாட்டின் நாணயக் கொள்கையை எந்த அரசும் உலகக் கொள்கையாக விரைவாக ஏற்காது. நீண்ட கால நல் விளைவுகளுக்காக இதைப் பொறுமையாகப் பரிசீலித்து அனைத்து நாடுகளும் ஏற்க வேண்டும். அதென்ன ‘உலக நாணயம்’?
முதலில் சில வரையறைகள்:
- அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- திறந்த மனப்பான்மையும், நேர்மையும் வேண்டும்.
- எந்த நாட்டையும் இராணுவம், சுங்கவரி போன்றவற்றால் பயமுறுத்தாமல், இதன் நன்மைகளை விளக்கி அவர்களாக இணையுமாறு செய்ய வேண்டும்.
- அந்தந்த நாட்டின் நிதிக் கொள்கை மற்றும் பணவியல் கொள்கைகளை அவரவர்களே வகுத்துக் கொள்ளலாம். ஆனால், வர்த்தகங்கள் ‘உலக நாணயத்தில்’ நடக்க வேண்டும்.
- இந்த உலகப் பொது நாணயத்தின் மதிப்பு முதலில், க்ரிப்டோ நாணயங்கள் வடிவமைப்பில் பயனாகும் சங்கிலிக் கட்டங்களின் தொழில் நுட்பத்துடன், ஒவ்வொரு தேசத்தின் மொத்த உள்நாட்டு பொருட்கள், சேவைகள், வளங்கள், போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டு, அனைத்து நாடுகளின் இத்தகைய மதிப்பினைக் கூட்டி பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையால் வகுத்தால், அது அந்த நிதி ஆண்டிற்கான உலகப் பொது நாணயத்தின் மதிப்பாகும். மதிப்பீடு, நிபுணர்களால் செய்யப்படும்.
- இதற்கும், முன்னாதாக, வர்த்தக அபரிமிதம், வர்த்தக பற்றாக்குறை இரண்டையும் உலகப் பொது கணக்கொன்று தொடங்கி, அதில் நாடுவாரியாகப் பதிவிடவேண்டும். எனவே, நிதியாண்டு தொடக்கத்தில் அனைத்து நாடுகளின் பேலன்ஸ் ஆஃப் பேமென்ட்ஸ் கணக்கில் அபரிமிதம், பற்றாக்குறை இரண்டும் இருக்காது.(ஜீரோ அடிப்படையில் பட்ஜெட்டிங்)
- உலகப் பொதுக் கணக்கில் உள்ள அபரிமிதமோ, பற்றாக்குறையோ, நிதியாண்டின் முடிவில் அந்தந்த நாடுகளால் பதிவேற்றம் செய்யப்பட்டு, முன்னது அதிகரிக்கவோ, பின்னது குறையவோ செய்யலாம். அபரிமிதத்தை பயன்படுத்த ஏழாண்டுக்கால விடுமுறையும், பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்லுமானால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 0.001% வட்டியும் விதிக்கலாம். ஆனால், தங்கள் அபரிமிதத்தை, பற்றாக்குறை நாடுகளுக்கு வட்டிக்கோ அல்லது வேறு எந்த வகையிலோ அபரிமித நாடுகள் கொடுக்கக் கூடாது.
அப்படியான உலக நாணயத்தின் பலாபலங்கள் என்ன?
- உலக வர்த்தக எளிமை: நாணய மாற்று தேவை எழாது. உலக வர்த்தகம், விரைவாக நடைபெறும்; நேரடி மற்றும் மறைமுக செலவுகள் குறையும்; நாணய மாற்றிற்கான கட்டணம் குறைவதால் அல்லது இல்லாமல் போவதால், வணிகம் மற்றும் பயணச் செலவுகள் குறையும்.
- பொருளாதார நிலைத்தன்மை: திடீரென்று நிகழும் நாணய அலைப்பாய்ச்சல்கள் நின்று போக, ஊகத்தின் அடிப்படையில் மதிப்பேற்றப்படுவது குறையும்.
- ஓருங்கிணைப்பும், வெளிப்படைத் தன்மையும், வர்த்தக கூட்டு மதிப்பை முன்னேற்றும். உலகம் முழுவதிலும் ஒரே விலை என்ற நடைமுறை வரும். பொருளாதார கீழ் நிலையிலுள்ள நாடுகளில் பணவீக்கம் குறையும். அவையும் வளர்ச்சி அடையும். அங்கிருப்போரும் மனிதர்கள் தானே!
- இதை நிர்வாகம் செய்பவர்கள் அதன் செயல் திட்டத்தை வகுத்து, அதை விவாதித்து, அதன் செயல்முறைகளையும் தணிக்கை செய்து எளியோருக்கும் புரியும் வகையில், மூன்று மாதங்களுக்கொருமுறை அறிக்கைகள் வெளியிட வேண்டும். அவர்கள் பதவிக்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே.
- மிகக் குறைந்த ஆபத்துக்கள் உள்ள துறைகளிலிருந்து தொடங்கி மெதுவாக அனைத்தையும் இதனுள் கொண்டு வர வேண்டும். அதற்கான கால அவகாசம் இன்றைய விரைவு யுகத்தில் 5 ஆண்டுகள் மட்டுமே!. சாலை வரைபடத்தை பார்க்கலாமா?
உலகப் பொது நாணயம்- எப்படிச் செயல்பட வேண்டும்?
| பிரிவுகள் | காலம் (ஆண்டு) | வழங்கல் | செயல்முறை | பாதுகாப்பு |
| 1. பொதுத் தரநிலை | 0-1 | எல்லைத் தாண்டிய கட்டணங்களுக்கு திறந்த நெறிமுறை | இணக்கமான பதிவேட்டு முறைகள் | நடு நிலை நிர்வாகம் |
| முக்கிய வர்த்தக வழித்தடங்கள் | 1-2 | சிறிய/பல்தரப்பு வழித் தடங்கள் | வார/ நாள் நிகரக் கணக்கு. | பரிவர்த்தனை வரம்புகள் |
| பொருள் சார்ந்த கையிருப்பு | 2-2.5 | பல்வகை சொத்துக்கள் அடங்கிய கிடங்கு | தணிக்கைகள், சான்றுகள் | அதி கையிருப்புகளைத் தவிர்த்தல் |
| உலக க்ளியரிங் மையம் | 2.5-3.5 | சமச்சீர் கட்டண ஒழுக்கம் | BoP ஐ காலத்தில் சரி செய்தல் | ப்ளாக் செயினில் பதியப்பட்ட விதிகள் |
| துறை விரிவாக்கம் | 3.5-4.5 | கப்பல், விமான , தரை வழிகளில் எளிய பயணம் | எக்ஸ்ரோ கணக்குகள் | கொந்தர்களைத் தடுக்கும் க்ரிப்டோ செய்திகள் |
| இதர செயல்கள் | 3.5-4 | ஊதியம், கல்விக் கட்டணம் | தானியங்கி பரிமாற்ற வசதி | பணச் சலவைகளைஅகற்றும் தடைச் செயலிகள் |
| பெரிய ஒருங்கிணைப்பு | 4-5 | அதிர்வுகளைத் தாங்கும் சொத்துக்கள் | மூன்று முதல் ஏழு நாட்களுக்கு உட்பட்ட ‘ஸ்வாப்’ | முன்னறிவிப்புகள். |
| தேசிய பத்திரங்கள் | 3-4 | உலகப் பொது நாணயத்தில் | தானியங்கி கூப்பன்கள் | வெளிப்படையான தரவுகள் கொண்ட பத்திரம் |
| விரிவான இன்வாய்சிங் | 0-1 | உலகப்பொது நாணயத்தில் | தேவையான வேலிகள் | குறைந்த அளவிலாவது பொருளாதார நீர்மை (ஆபத்துக் காலங்களுக்காக) |
| பன்முகங்கள் | 4-5 | மத்திய வங்கிகள் அதிக கையிருப்பு வைத்துக் கொள்ளத் தேவையில்லை | மீள் பார்த்து சரி செய்தல் | அவசரத் தேவைகளுக்கான சுமுகமான அணுகுமுறைகள் |
இத்தகைய உலக பொது நாணயத்தில் அபாயங்கள், ஆபத்துகள் இல்லையா? அதையும் நிர்வகிக்க வேண்டுமல்லவா?
அபாய மேலாண்மை — சுருக்கம்
| பகுதி | கருவிகள் |
|---|---|
| திரவத்தன்மை | மார்க்கெட் மேக்கர்கள், ஸ்டாண்டிங் வசதிகள், சர்க்யூட் பிரேக்கர்கள் |
| அதிர்வு கட்டுப்பாடு | கையிருப்பு-சார்ந்த வெளியீட்டு உச்சவரம்புகள்; சொத்து பன்முகப்படுத்தல் |
| தகராறு தீர்வு | தொழில்நுட்ப–வாணிக–அரசு அடுக்கு |
| மென்மையான சமரசங்கள் | உத்தரவாத மாற்று சாளரங்கள்; கணிக்கக்கூடிய off-ramps |
மைல்கற்கள் — சுருக்கம்
| பகுதி | அளவுகோல் |
|---|---|
| நம்பகத்தன்மை | <0.01% தோல்வி; 99.999% uptime |
| வெளிப்படைத்தன்மை | நேரடி கையிருப்பு உறுதிப்படுத்தல்; காலாண்டு தணிக்கைகள் |
| ஏற்றுக்கொள்ளல் | எல்லைத் தாண்டிய தீர்வுகளில் பங்கு; துறை பன்மை |
| நிலைத்தன்மை | குறுகிய bid–ask; குறைந்த drawdowns |
உலகப் பொது நாணயம் ஏன் தேவைப்படுகிறது?
ஒருகாலத்தில், நாடுகள் போர் தொடுத்து அரசின் எல்லையை விரிவாக்கின. பின்னர் காலனி ஆதிக்கம் ஏற்பட்டு பல நாடுகள் மிகப் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன. இன்று ‘நாணய யுத்தங்கள்’ பொருளாதாரங்களை அசைத்துப் பார்க்கின்றன. அதற்காக போரே இல்லாமல் போய்விட்டது எனச் சொல்ல வரவில்லை. பெட்ரோலியம் போன்ற எரி சக்தி பொருள், பல நாடுகளுக்குத் தேவையாக இருக்கிறது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளை, ‘பெட்ரோ டாலர்களில்’ மதிப்பீடு செய்யுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது. டாலருக்கு தங்க மாற்று இல்லை என்றான பிறகு, சாமர்த்தியமாக தன் நாணயத்தை அது முன்னிறுத்தியது. சவுதி அரேபியாவிற்கு ஒரு தேர்வினை அளித்தது. அதன்படி, எண்ணெயின் விலையை அமெரிக்க நாணயமான டாலரில் தான் நிர்ணயிக்க வேண்டும். சவுதியின் அபரிமித வர்த்தகத் தொகையினை அமெரிக்க கருவூலங்களில் முதலீடு செய்ய வேண்டும். அமெரிக்கா, சவுதிக்கு போர் தளவாடங்களும், பாதுகாப்பும் அளிக்கும். இந்த இரு தரப்பு புரிதல், விரைவில் OPECன் வழிமுறையாயிற்று. அதாவது, உங்களிடம் டாலர் இருந்தால் தான் நீங்கள் எண்ணெய் வாங்க முடியும்! எனவே, டாலருக்கான தேவை மிகுந்தது; அது உலகின் இருப்புக் கரன்சியாக அவதரித்தது. மிகுந்த பற்றாக்குறை அதன் கணக்கில் இருந்த போதிலும், தன் பொருளாதாரம் சிதைவுறாமல் பார்த்துக் கொண்டது. OPECக்கும், அமெரிக்காவிற்கும் இடையே நடக்கும் நடனம் விசித்திரமானது. அமெரிக்கா, எண்ணெய் விலையை அதிகரிக்கக் கூடாது என்று சொன்னாலும், OPEC அதிக வருவாயையும், கட்டுப்படுத்தப்பட்ட ஆயில் உற்பத்தியையும் விரும்புகிறது. அமெரிக்கா, ஷேல் ஆயிலை, விலையேற்றத்தின் போது பயன்படுத்துகிறது.
இந்த விளையாட்டில், இருவருக்காக, உலகமே பங்கேற்று, கேளிக்கை கோமாளியாக மாறிவிடுகிறது. பெட்ரோ டாலருக்கு மாற்றாக உலகளவில் ஒரு பொது நாணயம் வேண்டும் அல்லவா?
OPEC என்ன செய்தது?
தன் விநியோகத்தையும், விலையையும் அதுவே தீர்மானித்தது. 1973ல் எண்ணெய் தடை வந்த போது, அன்னியச் செலாவணி சந்தையிலும் அதன் ஆதிக்கம் புரிந்தது. இந்த ‘விலை அதிர்ச்சி’ சொல்லவொண்ணா அபரிமிதத்தை அவைகளுக்குத் தரவே, அந்த ‘பெட்ரோ டாலர்கள்’ மீண்டும் மேற்கின் வங்கிகளுக்கும், அதன் கடன் சந்தைகளுக்கும் சென்றது.
பெட்ரோ டாலர்ஸ் மற்றும் பெட்ரோ கரன்சி
பெட்ரோ கரன்சி என்பது மூன்று வகைகளில் சொல்லப்படுகிறது
- எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அபரிமித டாலர்கள்
- எண்ணெய் விலையேற்றத்தால், இறக்குமதி நாடுகளின், அமெரிக்கா தவிர, நாணயங்களின் சரியும் மதிப்பு.
- விலை, டாலர்களில் நிர்ணயிக்கப்படுவதால், ஒரு பக்கச் சாய்வு
தங்க நகை வியாபாரத்தில் நாம் ஒன்றைக் கவனிக்கலாம். அவர்கள் பழைய நகையை குறைந்த விலைக்கு வாங்கியும், புது நகைகளில் சேதாரத்திற்கான அதி மதிப்பு கூட்டியும் இலாபத்தை மேம்படுத்துவார்கள். இது ஒரு வகை சுழற்சி. அதைப்போலவே, எண்ணெய் ஏற்றுமதியாளர்கள், தங்கள் டாலர்களை அமெரிக்காவில் முதலீடு செய்து அதன் மூலதன சந்தையை வலுப்படுத்தினார்கள்.
நேர்மைத் திறனின்றி, அமெரிக்க அரசு பல நாடுகளின் கைகளைக் கட்டிப் போட்டது. மக்களாட்சி கொண்டு வருகிறோம் என்ற பெயரில், பெட்ரோ டாலர்களில் வர்த்தகம் நடத்தாத ஈராக், லிபியா, வெனிஸ்சுவேலா பல இடர்களைச் சந்தித்தன/ சந்தித்தும் வருகின்றன.
உலக பொது நாணயம் ஏன் தேவை என்று பார்ப்பதற்கு முன், சில தரவுகளைப் பார்ப்போம்.
இந்தியாவின் ஜி டி பி 2023ல், 2022ன் சரிவிலிருந்து மீண்டு மேலெழுந்ததையும், 2024ல் சரிந்ததையும் பார்த்தோம்.
இதனுடன் ஒப்பு நோக்க வேறு சில தரவுகளையும் பார்க்க வேண்டும்.
இந்த வரைபடத்தில் OPEC நாடுகளின் மொத்த ஏற்றுமதியும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், எண்ணெய் தான் முதன்மையான மதிப்புடைய சரக்கு.
| ஆண்டு | ஏற்றுமதியின் மதிப்பு ($Billion) | பெட்ரோலிய பொருட்களால் வந்த வருமானம்($Billion) |
|---|---|---|
| $2020$ | $\$774.9$ | $\$317.4$ |
| $2021$ | $\$1,108.9$ | $\$560.6$ |
| $2022$ | $\$1,430.0$ | $\$835.0$ |
| $2023$ | $\$1,130.0$ | $\$678.0$ |
| $2024$ (Est.) | $\$1,080.0$ | $\$652.0$ |
அத்தனை வருமானமும் எந்த நாணயத்தில் நடைபெறுகின்றது என்பது புரியும். இது டாலரின் மதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ள ஒன்றல்ல. பெட்ரோ கரன்சியே அது. ஏற்றுமதி செய்யும் நாடுகள் வளம் பெறவில்லையா என்றால், ஆம், வளம் பெற்றன; ஆனால், நாணயத்தின் மூலம் வளம் பெற்றது யார் எனவும் சிந்திக்கலாமே!
கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக, சீனா ஆண்டு தோரும் $3 பில்லியன் செலவழிக்கிறது. என்னதான் யுவானில் பன்னாட்டு வர்த்தகம் செய்தாலும், டாலரின் ஈர்ப்புவிசையிலிருந்து அதால் மீள முடியவில்லை. SWIFTக்குப் பதிலாக அது கொண்டுவந்துள்ள CIPS அமைப்பு ஓரளவு செயல்படத் துவங்கியுள்ளது.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி ரூபாயின் மதிப்பை பாதிக்கிறது; வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கிறது. இந்தியா அதிக அளவில், அதிக பொருட் செலவில் டாலரை கையிருப்பில் வைத்திருக்க நேரிடுகிறது. ஒவ்வொரு விலை உயர்வும், இந்தியக் கரன்சியை துன்பத்திற்கு உள்ளாக்குகிறது.
ஜப்பான், கொரியா, தாய்லாந்து போன்றவைகளும் தவிக்கின்றன. சுங்கவரி என்னும் மென்கொடுங்கையில் மூச்சுக் குழாய்கள் திணறுகின்றன.
டாலர் கரன்சி கையிருப்பு என்பதும் நகைமுரணே! இன்றைய பொருளாதாரம் எண்ணெய் இன்றி இயங்க முடிவதில்லை. அந்த சக்திக்கு, டாலருக்கான சிறப்பிடம் கட்டமைக்கப்பட்ட ஒன்று. உண்மைதான், பணம் பெருகும் நாடுதான், கண்துடைப்பாக அனைவரையும் அரவணைக்கும் அரசுதான், பலருக்கு வளமான வாழ்க்கை தந்த தேசம் தான், இராணுவ பலமும் மிகுதிதான். இவையெல்லாம் அதன் கரன்சிக்கு மதிப்பு ஏற்றுவதில் தவறில்லை-ஆனால், உலக நாடுகள் இதற்காக அதிக விலை கொடுப்பது சரிதானா? உலக இறையாண்மையை அது நிர்ணயிக்குமா? அது தன் கரன்சியை அச்சடித்து உலகத்தில் உலவ விடுகிறதே!
இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் இறக்குமதியில் 85% ,கச்சா எண்ணெய் பொருட்களுக்காக செலவிட நேர்கிறது. அந்தத் தொகையையும் டாலரில் செலுத்த வேண்டியிருப்பதால். என்ன பாதிப்புகள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போமா?
| குறியீடு | டாலரின் வலு நிலையால் ஏற்படும் விளைவு |
| GDP வளர்ச்சி | ஒவ்வொரு $10 எண்ணெய் விலை ஏற்றத்தினால், GDP 0.2-0.3% வரை குறைகிறது |
| நிதிப் பற்றாக்குறை | அதிக இறக்குமதி செலவுகளால், அரசின் உர, எரிபொருள் மான்யங்கள் அதிகரித்து நிதி நிலைபாதிக்கப்படுகிறது |
| அன்னியச் செலாவணி கையிருப்பு | கட்டுமானம் மற்றும் ஆக்கபூர்வ செயல்களுக்காக செலவிடமுடியாமல், அதிக அளவில் டாலரை ($650 பில்லியன் 2025) இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. |
| பணவியல் கொள்கை | ரிசர்வ் வங்கி,வட்டி விகிதத்தை சற்று உச்சத்தில் வைத்தால் தான், மூலதனம் இந்தியாவிலிருந்து வெளிப்போகாது. ஆனால், இது முழுமைக் கருவியல்ல. |
டாலரினால் இந்தியா அடையும் பாதிப்புகளை இவ்வாறு தொகுக்கலாம்:
- 2025ன் இறுதியிலும், 2026ன் தொடக்கத்திலும், பரிவர்த்தனை மதிப்பு 1$= ₹ 90+,
- ஓவ்வொரு ரூபாய் வீழ்ச்சியிலும், இறக்குமதி தொகை ₹10,000 கோடி அதிகரிக்கிறது.
- இதனால், உலக எண்ணெய் விலை நிலையாக இருந்தாலும் கூட , இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துவிடுகிறது. அது மட்டுமல்ல, பணவீக்கம் அதிகரிக்கிறது.
- இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் நாம், தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதால், ஆண்டொன்றிற்கு $3-$4 பில்லியன் சேமித்தோம். அமெரிக்கா நிகழ்த்தும் வர்த்தகப் போர் சிறிதும் ஏற்புடையதல்ல.
- அமெரிக்க அழுத்தம் மற்றும் கப்பல் வரத்து தடைகளால், முன்னர் கிடைத்த ஒரு பேரலுக்கு $15 தள்ளுபடி, இப்போது $4-6 என்று குறைந்து இறக்குமதிக்கு அதிக விலை கொடுக்கிறோம். இந்த அட்டவணையைப் பாருங்கள்
| ஆண்டு | ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு தோராயமான தள்ளுபடி | தோராயமான ஆண்டு சேமிப்பு |
|---|---|---|
| 2025 முதல் நிலை | $10 – $12 | ~$7 பில்லியன் |
| 2025 நடு ஆண்டில் | $6 – $8 | ~$4 பில்லியன் |
| 2025 இறுதி / ஜனவரி 2026 | $3.5 – $5 | ~$2.5 பில்லியன் |
| அளவைகள் | ரூபாய்- ரூபிள் (Russia) | ரூபாய்- திர்ஹாம்- ஐக்கிய அமீரகம் |
| முக்கியமான இயக்கி | கச்சா எண்ணெய்யில் தள்ளுபடி | விரைவு வர்த்தகம் |
| தோராய சேமிப்பு | $4.5B+ (மொத்தம்) | $400மில்- 00மில்லியன் செயல்பாட்டுச் செலவீனக் குறைப்பு |
| சிறந்த பலன் | எரி பொருளால் ஏற்படும் பணவீக்கம் முறைந்துத | டாலை கையிருப்பைக் குறைக்க முடிந்தது |
| முக்கியத் தடை | அமெரிக்காவின் இரண்டாம் அடுக்குத் தடை மற்றும் 25% வரி | வர்த்தக சமமின்மை- அதிக இந்திய ரூபாய் ஐக்கிய அமீரகத்தில் உள்ளது. |
| தற்போதைய நிலவரம் | எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன | தங்கம், மற்றும் ஆயில் வர்த்தகம் விரிவடைகிறது |
ரூபாய்- ரூபிள் வர்த்தகம் பண இடி தாங்கி போலச் செயல்படுகிறது. ரூபாய்- திர்ஹாம் வர்த்தகம், டாலர் பரிவர்த்தனை வரியை முற்றிலும் நீக்கிவிடுகிறது. முன்னது மலிவு விலையில் ஆயில் தருகிறது; பின்னது, வர்த்தகச் செலவினங்களை நீக்குகிறது.
Vostro Accounts: டாலர் பரிவர்த்தனை நடக்கும் SWIFTஐத் தவிர்த்து, 20+ நாடுகளுடன் ரூபாயில் பரிவர்த்தனை செய்கிறது இந்தியா.
இந்த நிலையில், BRICS விரிவாக்கம் நல்லதொரு செய்தி; இக்கூட்டமைப்பில், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், ஈரான், எகிப்து இணைந்திருப்பது, டாலரை மட்டுமே சார்ந்திருப்பதை மாற்றி புது வழி காண்பதற்கான சமிக்ஞை என எடுத்துக் கொள்ளலாம்.
சீன யுவானிலும், இந்திய ரூபாயிலும் வர்த்தகம் செய்யும் நாடுகள், கணக்கிலுள்ள அந்தக் கரன்சிகளை எப்படி மறுசுழற்சி செய்வது என்று திணறுவதால், உலகப் பொது நாணயம் மேலும் அவசியமான ஒன்றாகிறது.
இந்தியாவின் கௌடில்யர் எழுதிய ‘அர்த்த சாஸ்திரத்தில்’ பன்னாட்டு வர்த்தகம், உள் நாட்டு வர்த்தகம் அனைத்தையும் பற்றிச் சொல்கிறார்.
அவர் சொல்லும் முக்கிய கோட்பாடுகள்
- இருவருக்குமான நன்மைகள்: அபரிமித உற்பத்தியை ஏற்றுமதி செய்து தகுந்த விலை பெற்று, அங்கே குறைந்த செலவில் உற்பத்தியாகும் பொருளை தேவையென்றால் வாங்குங்கள்.
- இறக்குமதி ஊக்குவிப்பு: நாட்டின் செழுமைக்கு இறக்குமதியும், அதைச் சார்ந்த நுட்பமும் அவசியம். இறக்குமதி செய்வது இழிவல்ல.
- செயல்திறன் கட்டுப்பாடுகள்/ மேலாண்மை: பொருளாதாரம் சரிவுறாத வழியில் வர்த்தகம் செய்யுங்கள். எதிரிகளுக்கு உதவுவதாக அது இருக்கக் கூடாது.
- கட்டுமானங்கள் அவசியம்: சாலைகளை அமைப்பதும், நீர்வழிப் பாதையும் தொடர்பிற்கும், வாணிபத்திற்கும் அவசியம். எனவே இவை வலுப்படுத்தப் பட வேண்டும்.
- ஏற்கத் தகுந்த வரிகள் மற்றும் பாதுகாவல்: சுங்க வரிகளை சரியாக வகுக்க வேண்டும்; இந்த வரிகள் வணிகத்தின் கழுத்தை நெரிக்கக் கூடாது. நேர்மையான / எச்சரிக்கையான மனிதர்கள் மட்டுமே சுங்க இலாகாவில் பணி அமர்த்தப் பட வேண்டும். கையாடல், கையூட்டுகளுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்படும்.
- அரசின் தலையீடு: திறந்த வணிகச் சந்தையை ஆதரித்தவர் அவர். ஆனால், நாட்டின் நலம் கருதியும், நியாயமான விலை நிர்ணயித்தும், அரசுகள் தலையிடலாம்.
- சிறப்புப் பொருட்கள்: இயற்கை வழங்கியிருக்கும் கொடைகளை சரியாக பயன்படுத்த வேண்டும்; ‘முத்து குளிப்பதொரு தென் கடலிலே; மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே, மெச்சி நமக்கினிய பொருள் கொணர்ந்தே, நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே’. அகில், சந்தனம், மிளகு, பருத்தி, கம்பளி; வளங்கள், நாட்டின் பலமாக மாற வேண்டும்.
அவர் சொன்ன செயல்முறை குறிப்புகள்:
- சந்தையை அறியுங்கள்: திறன் மிக்கவரை அயல் நாடுகளுக்கு அனுப்பி நாம் எதை அங்கே ஏற்றுமதி செய்யலாம், எதை இறக்குமதி செய்யலாம் என்று அறிய வேண்டும்..
- சாவடி கண்காணிப்பு :பட்டியல் கொண்டும், வரைவுகள் கொண்டும், பொருட்களை சோதித்து, அதைப் பதிவிட்டு, முத்திரை குத்திய பின்னரே அனுமதிக்க வேண்டும்.
- வரி வசூலித்தல்: சுங்க வரி அந்த இலாகாவால், துறைமுகங்களில் வசூலிக்கப்பட வேண்டும்; அயல் நாடு, நேரடியாக சில்லறை/ மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது.
நிதி: வணிகத்திற்கு கடன் கொடுக்கலாம்; வட்டி இயைபானதாக இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் மிகச் சிறப்பாகச் சொல்கிறார்:
“அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.”
டாலர் ஒரு தாளம் —
உலகம் முழுதும் ஆடும் நடனம்.
எண்ணெய் ஒரு ராகம் —
அதில் நாடுகள் எல்லாம்
தங்கள் சுரங்களைத் தேடுகின்றன.
மாற்றுவோம், மாறுவோம்; பொது நாணயத்தைப் பற்றி சிந்திப்போம். இதன் மூன்று தூண்கள் என்னென்ன?
- பொது நாணயம் பக்கச் சார்பில்லாமல், அரசுகளின் தலையீடு இல்லாமல், க்ரிப்டோவைப் போன்ற மறைமுகம் இல்லாமல், உலக வர்த்தகத்தை நடத்த உதவும்.
- கௌடில்யரின் ‘ஆறு மண்டலக் கொள்கையுடன்’ இயைந்து போகிறது. உலகை நிலையான, ஏற்புடைய, தேவையெனில் கொள்கையைச் சீராய்வு செய்ய, எந்த ஒரு அரசின் மேட்டிமை வாதத்தையும் ஒதுக்கித் தள்ள, மேலும் போர்களும், அதிபர்களைக் கடத்துவதையும் தவிர்க்க உதவி செய்யும்.
- பெட்ரோ டாலர்களைக் காட்டி மிரட்டுவதும், அதிலேயே ‘ஆயில்’ பெற முடியும் என்பதும், வளரும் நாடுகளின் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றுவதும் நின்றுபோகும்.
ஒற்றைத் துருவப்படுத்துதலைத் தவிர்ப்போம். மொழி, மரபு சிதையாமல், கரன்சியின் பெயரால் கட்டுக்கள் போடாமல், இயல்பான அமைதி நிலவ, மானுடம் செழிக்க பொது நாணயம் அவசரத் தேவை, அவசியத் தேவையும் கூட. இந்தக் கோட்பாட்டில் கௌடில்யரும், கெய்ன்சும் கை குலுக்குகிறார்கள், அதுதான் நன்மை.
உலகப் பொது நாணயமும், உலகப் பகுதிகளும்: இந்த மண்டலா வரைபடம் தை எடுத்துச் சொல்லும்.
21ம் நூற்றாண்டின் மனிதனுக்கு சிந்தனைச் செழுமையுண்டு, இடர்களைப் போக்கும் திறனுமுண்டு, செயல்படுத்தும் தொழில் நுட்பம் உண்டு.
ஒரு நாணயம் —
உலகம் முழுதும் ஒலிக்கும் ஓசை,
எல்லைகள் கரையும்,
மனிதம் ஒன்றாய் நிற்கும்.
அது கனவு தான் இப்போது
சமத்துவ மலர் அரும்பிவிடும்
பசியும் பிணியும் வலியும் நீங்கும்,
அன்பின் இதழ் அடுக்கடுக்காய் விரியும்.
உசாவிகள்
The World’s Worst Bet by David J. Lynch, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், திருக்குறள், பொருளாதார இதழ்கள், வலைத் தளங்கள், வினவுத் தளங்கள்
