Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

பரகாயம்

சற்குருநாதன் வீரராகவுலு பத்மாசனத்தில் இடதுகாலை மடக்கி வலது தொடைக்கு மேல் வைக்க எத்தனித்துக் கொண்டிருந்தபோது உள் அறையிலிருந்து பாக்கியலட்சுமி குரல் கொடுத்தாள். “என்னங்க, இங்கே வாங்களேன், கொஞ்சம் சீக்கிரமா வந்து பாருங்க”. 

பதறியபடி வந்த அவரிடம், புடவைகள் அடுக்கி வைக்கப்பட்ட பீரோ கதவைத் திறந்து காட்டி  “இங்க பாருங்க. அரை அடி இருக்கு, காலியா!” என்ற சரவணா ஸ்டோர்ஸ் ஆடித்தள்ளுபடி விளம்பர டயலாக்கை அவிழ்த்து விட்டாள். வாழ்க்கையில் அவளது எல்லா உரையாடல்களும் எப்போதும் டிவி சீரியல்கள் மற்றும் அதற்கு இடையே வரும் விளம்பரங்கள், இதில் வரும் டயலாக்ஸ் தான்.

கடுப்பேறிய சற்குருநாதன் சோபா மேல் காயப்போட்டிருந்த அவரது ஜட்டி பனியன் இவற்றையெல்லாம் கொஞ்சம் அள்ளிக்கொண்டு அவள் முன் வந்து நின்று “இதெல்லாம் வைக்க இடம் இல்லாமல் தவிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த அரையடி எனக்கு தாராளமா போதும்” என்றார். “வேறென்ன செய்ய, நாம என்ன ஜெயம் ரவியா, கடைக்குக் கூட்டிட்டுப் போய் வேணும்ன்றத அள்ளிக்கோன்னு சொல்ல..” என்று தனக்குள் முணுமுணுத்தார்.

திரும்பி ஹாலுக்கு வந்து பத்மாசன போஸில் அமர்ந்து  வலதுகையில் பாபா முத்திரையுடன் சிறுவயதில் பாட்டி சொல்லித் தந்த சித்தர் மந்திர உச்சாடனையை முணுமுணுத்தபடி இடதுகையில் இரண்டு மாத்திரை, மூன்று மாத்திரை என்று அளந்து மூச்சுப் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அந்த அதிசயம் மீண்டும் நடந்தது. இதற்குமுன் பலமுறை இப்படி நடந்திருக்கிறது.

 “பாக்கி, இங்க வாயேன்” என்று முக்கி முனகலாகக் குரலெழுப்பினார். பத்மாசன இருப்பில் இருந்த அவரது உடம்பு தரையிலிருந்து கொஞ்சமாக ஒரு அரையடி அளவுக்கு  மேலெழும்பியிருப்பதை அவரால் உணர முடிந்தது. முழி பிதுங்கிய நிலையில் மூச்சு முற்றிலும் ஸ்தம்பித்து வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி நாக்குழறியது. வாய் ஒருபக்கம் இழுத்தபடி கோணியது. பாக்கியலட்சுமியை உரக்கக் கூப்பிட நினைத்தார். ஆனால் செயல்படுத்த இயலவில்லை. அதற்குள் பொத்தென்று விழுந்து தரைதட்டினார். எதேச்சையாக ஹாலுக்குள் வந்த பாக்கியலட்சுமி “என்ன? “என்றாள் கோபமான குரலில். ஏற்கனவே இப்படி போனமுறை நிகழ்ந்தபோது, அன்று அவளிடம் தவறுதலாக ‘லேசா பறக்க முடிஞ்சுது’ என்று சொல்லப்போய் குலுங்கிச் சிரித்தபடி ”முதல்ல நடக்கிற வேலையப் பாருங்க. பறக்குறாராம். காப்பித் தூள் தீர்ந்து போச்சு. அப்படியே டவுனுக்கு பறந்துபோய் பட்டுனு வாங்கியாருவிங்களாம்.” என்றாள். 

இந்தமுறை சுத்தம். ஆடி விளம்பர டயலாக்கை அவர் எதிர் கிண்டலடித்த காயம் இன்னும் ஆறாததால்  “என்னது, உக்காரச்சே கொஞ்சம் கேப் இருக்கா.. புட்டத்துக்கு கீழ ஒரு தலக்காணி வச்சுக்கோங்க. சரியாப் போகும்” என்று பதிலடி கொடுத்துப் பழி வாங்கினாள். “எனக்கு பொழுதன்னைக்கும் அந்த சனியன் பிடிச்ச எலியோடப் போராடுறதே பெரும்பாடாப் போச்சு. இந்த எலிப்பொட்டியெல்லாம் அதுக்கு சரிப்படாது. நான் உங்கள மாதிரி ஜீவ காருண்யம் பார்க்கிற வள்ளலார் பரம்பரை கிடையாது. எலியப் பிடிச்சு டொங்குனு போட்டுத் தள்ளுற இரும்புப் பொறி ஒண்ணு உடனடியா வாங்கனும்” என்று புலம்பினாள் சற்குருநாதன் சகதர்மினி. 

தேவையில்லாமல் உளறிக்கொட்டிவிட்டு அடி வாங்குகிறோமோ என்று சற்குருநாதனுக்குத் தோன்றியது. புவியீர்ப்பு விசைக்கு எதிராக நம்மால் தரையிலிருந்து கொஞ்சம் மேலாக சில நொடிகள் எழ முடிகிறதே, இது அதிசயமில்லையா? பாக்கி இதை அலட்சியமாகக் கடந்து செல்கிறாளே? என்று சற்குருநாதனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஒருவேளை இது  நடப்பது போல நமக்குப் பிரமையோ என்று அவர் நினைத்த மாத்திரத்தில் மேல் எழும்பிய நிலையில் இருந்து பொத்தென்று விழ பின்பக்கம் வலிப்பது எப்படி பொய்யாக இருக்கமுடியும் என்று யோசித்தார். ஒவ்வொருமுறையும் இந்த நிகழ்வின் சில வினாடிகளில் ஏதோ உயிர் போய் மீண்டு வருவது போன்ற அனுபவமாகத் தான் அவருக்குத் தோன்றியது.

எதற்கும் விஷயம் தெரிந்த தகுதி வாய்ந்த ஒரு மூன்றாம் நபரிடம் காட்டி உறுதிபடுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார் சற்குருநாதன். 

கேட்டைத் திறந்து ஸ்கூட்டியை உள்ளே நுழைத்து எப்போதும் போல காம்பௌண்ட் சுவர் ஓரமாக நிறுத்தினேன். “பேரு தான் பெத்த பேரு, ஆனா பவிசு.. இந்த ஊர்ல இதுக்கெல்லாம் அரையணாவுக்கு பிரயோசனம் உண்டா?”  புலம்பியபடி மாடிப் படிக்கட்டுக்கு ஏறுவதற்கு முன் வாசலில் வைக்கப்பட்டிருந்த மரத்திலான பெயர்ப் பலகையை கைக்குட்டையால் துடைத்தேன்.  ‘டாக்டர் பரந்தாமன், சைக்கியாட்ரிஸ்ட்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தப் பெயர்ப்பலகையைப் படித்துவிட்டு இந்த திருநெல்வேலி டவுனில் என்னை வந்து பார்த்தவர்கள் எவ்வளவு பேர் என்று கைவிரல்களை மடக்கி எண்ணி விடலாம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் குறைதீர நெல்லையப்பர் கோவிலுக்குப் போய் வேண்டிக்கொண்டு வாசலில் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக வீடு திரும்புகிறார்கள் போல. 

நேற்று காலை பதினோரு மணி இருக்கும். கதவு லேசாகத் தட்டும் சத்தம் கேட்டு ஆர்வத்துடன் “யெஸ், கமின்” என்ற அடுத்த நொடியில் உள்ளே நுழைந்தது பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது.  “யார் நீ? என்ன வேணும்” என்று கேட்டதும் ஒரு கசங்கிய வெள்ளைத் தாளை நீட்டினான். “அக்கா உங்க கிட்ட தரச் சொன்னாங்க”.

“இது என்னடா வில்லங்கம்” என்று திக்திக் இதயத்துடன் பிரித்துப் பார்த்தேன். என் அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை வேண்டி விண்ணப்பம். ‘உயர்திரு டாக்டர் அவர்களுக்கு’ என்று தொடங்கியது எனக்கே பெருமையாக இருந்தது. ஆளில்லாத டீக்கடையில் டீ ஆத்தும் என்னிடம் வேலை கேட்கும் அந்தப் பெண்ணை நினைத்துச் சிரிப்பு வந்தது. இப்போது நினைவுக்கு வந்தது. கீழ் போர்ஷனில் வசிக்கும் குடும்பம்.  நான் அந்தக் கடிதத்தைப் படிக்கும்வரைக் காத்திருந்து பிறகு பதில் எதுவும் எதிர்பார்க்காமல் “நான் வரேன் தாத்தா” என்று நகர்ந்தான் பொடியன். 

அடப்பாவி…தாத்தாவா? இன்னும் நான் ஐம்பது வயதை நெருங்கவில்லை. என் பெண் ப்ளஸ் ஒன் படிக்கிறாள். தலையில் கொஞ்சம் வழுக்கை விழுந்தாலே இந்த பொடியன்களும் பெண்களும் நம்மை அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். அவனது அக்கா என்னிடம் டைப்பிஸ்டாக வேலைக்கு சேர்ந்து “நீங்க தந்த லெட்டரை டைப் பண்ணிட்டேன். போய்ட்டு வரேன் தாத்தா” என்று சொல்வது போன்ற காட்சி மண்டைக்குள் ஓடியது. சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் பார்த்து தலைமுடியை கைகளால் பரபரவென்று தேய்த்து பரவலாக்கிக் கொண்டேன். ம்ம்., முன்பக்க வழுக்கையில் ஒரு பத்து சதவிகிதம் மறைந்தது. 

அன்று காலையிலிருந்து இதுவரை பேஷன்ட்ஸ் யாரும் தென்படாததால் ஏதாவது மர்மக் கதை எழுத முயற்சிக்கலாமா என்று யோசித்தபடி கம்ப்யூட்டரை ஆன் செய்தபோது, கதவைத் தட்டாமல் லேசாகத் திறந்து எட்டிப்பார்த்துப் பின் அவசரமாக உள்ளே நுழைந்தவர் என் எதிரே அமர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நேரடியாக விஷயத்துக்கு வந்தார். 

“சார், என் பேரு சற்குருநாதன், மூணாவது தெருமுக்குல பச்ச கலர் பெயிண்ட் அடிச்சிருக்குமே, அந்த வீட்டில வசிக்கிறேன். இன்சூரன்ஸ் ஏஜெண்ட்.”

“சொல்லுங்க சார், என்ன பிரச்னை?”

“கொஞ்ச நாளா நான் பத்மாசன போஸ்ல உக்காந்திட்டு யோகாசனம் செய்யுற போது உடம்பு லேசா எழும்பி மேலப் பறக்கிற மாதிரி..”

அவர் வாக்கியத்தை முடிக்கும் முன் நான் பேசத் தொடங்கினேன். “இது எவ்வளவு நாளா இருக்கு. இந்தக் கனவு தூங்கின உடனே வருதா.. இல்ல விடியக் காலைல வருதா?” 

“சார் ஒரு நிமிஷம்”

“இதோ பாருங்க, இதப்பத்தி, இந்த புஸ்தகத்தில இருக்கிறதப் படிக்கிறேன், கேளுங்க. பலருக்கு பறப்பதுபோல் கனவு வருவது மிகவும் இயல்பானது. கவிஞர் கண்ணதாசனுக்கு அடிக்கடி வானில் பறப்பது போன்ற கனவு வருமாம். இதுகுறித்து பலவிதமான உளவியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும் தளைகளில் இருந்து விடுபட நினைப்பது முக்கிய குறியீடாகக் கருதப்படுகிறது.”

“சார், படிச்சி முடிச்சாச்சா?” சொல்லிக்கொண்டிருந்த என்னை அவர் இப்போது இடைமறித்தார். “நான் சொல்றது கனவில்ல. நிசமாலுமே.”

“அப்படியா? பறக்குறதுன்னா பறந்து எவ்வளவு தூரம் போக முடியுது?” கிண்டலாகக் கேட்டேன். 

“நக்கலடிக்கிறீங்கன்னு புரியுது. அந்த மாதிரிப் பறக்கிறதில்ல சார். லேசா ஒரு அரை அடி தரையில் இருந்து எழும்ப முடியுது”. 

“அதுகூட கண்டிப்பா சாத்தியமில்ல. இதுவரை புவியீர்ப்பு விசைக்கு எதிராக யாரும் விஞ்ஞான பூர்வமா எதையும் செய்து காட்டியதா உலக சரித்திரத்திலேயே ஆதாரம் இல்ல.”

“உங்களால நம்ப முடியாதுன்னு தெரியும். எனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க. இங்கேயே இப்பவே செய்து காட்டுறேன்.”

சொல்லிக்கொண்டே என் அனுமதி எதுவும் எதிர்பாராமல் பட்டென்று வேட்டியை மடித்துக் கட்டி உள்ளே போட்டிருந்த பட்டாப்பட்டி டிராயர் தெரியும்படி பத்மாசன போஸில் தரையில் அமர்ந்து கொண்டார். என் கவனம் முழுவதும் திறந்திருந்த வாசல் கதவை பார்த்தபடி தான் இருந்தது. சட்டென்று யாராவது வந்துவிட்டால் இங்கே என்ன நடக்கிறது என்று சொல்லிப் புரியவைக்க முடியாதே என்ற ஆதங்கம் தான் தலை தூக்கியது. 

ஒரு உளவியல் மருத்துவராக என்னால் இதை நம்ப முடியவில்லை என்றாலும் என் கண்கள் பார்த்து மூளை உணர்ந்து பதிவு செய்த அந்த ஒரு நொடிக் காட்சி உண்மை நிகழ்வு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி அவரை இன்னொரு முறை செய்து காட்டச் சொன்னேன். கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தேன். மீண்டும் பத்மாசனம். பாபா முத்திரை. ஏதோ புரியாத தமிழில் மந்திர முணுமுணுப்பு. வலிப்பு வந்தது போன்ற முகக் கோணல். இப்போது ஓரளவு தெளிவானது. தரையிலிருந்து அரையடிக்கும் குறைவான உயரம். இரண்டு நொடி நேரம். அவ்வளவே. அந்த காட்சியை புலன் உணர்வு உள்வாங்கிக் கொள்ளும் முன்னரே லேசான தட் என்ற சத்தத்துடன் தரையை தொட்டு விடுகிறார். குழப்பத்தில் இருந்த நான் பெருமூச்சு விட்டபடி நான் என் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவரை எதிரில் உட்கார வைத்து அவரிடம் இது நிஜமாக இருக்கும் பட்சத்தில் இதனால் அவருக்கு நேரவிருக்கும் சாதக பாதகங்களை விளக்கினேன்.

“முதலில் இது வெளி உலகுக்கு தெரிந்தால் மூன்று விஷயங்கள் நடை பெறலாம். ஒன்று ஜனங்களுக்கு தெரிஞ்சு போய் உங்களுக்கு அந்தர சாமியார் இல்லைன்னா தொங்கு சாமியார்னு பேர் வெச்சு கற்பூர ஆரத்தி எடுத்துக் கும்பிடலாம். நீங்களும் அதுக்கு ஓக்கேன்னா சில்லறை தேத்தி கல்லா கட்டலாம். அடுத்தது ஏதாவது மாஜிக் ஷோல ஜாயின் பண்ணிக்கிடடு பிரபலமாகலாம். மூனாவதா அரசாங்கம் உங்களை அள்ளிட்டுப்போய் உடம்பெல்லாம் ஊசி குத்தி ஃபிளக் பண்ணி ஆராய்ச்சி பண்ணுவாங்க. நீங்க கிட்டத்தட்ட லேப்ல ஆராய்ச்சி எலி மாதிரி ஆயிடுவீங்க. எனக்குத் தெரிந்து மூன்றாவது விஷயம் நடக்கறதுக்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகம்.”

“ஐயையோ!” என்றார் சற்குருநாதன்.

“நான் சொல்லப் போற மூன்று விஷயங்களில் ஏதாவது ஒண்ணுல முன்னேற்றம் ஏற்பட்டால் சொல்லுங்க. இந்த சிக்கலைத் தவிர்த்து நாம ரகசியமாக விஷயத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம். ஒன்று உயரம். இப்போதைய நான்கு அங்குலம், புவியீர்ப்பு எதிர்விசையை நிரூபணம் செய்ய போதுமான உயரம் இல்லை. இரண்டாவது நேரம். ஓரிரண்டு நொடிகளில் இந்நிலையிலிருந்து பொத்தென்று விழுந்து தரை தொடுவதும் நம்பகத் தன்மைக்கு சிக்கல். மூன்றாவது நகர்வு. புவியீர்ப்பு எதிர்நிலையில் ஒரு சில அடிகளாவது நகர முடிந்தால் உத்தமம்.” 

இதை விளக்கியதும் “இந்த மூன்றும் செய்ய முடிஞ்சா?” வினவினார் சற்குருநாதன்.

“அப்ப நீங்க மனிதகுல சரித்திரத்திலேயே பறக்க முடிந்த மூன்றாவது கதாபாத்திரமா இருப்பீங்க. அதுலயும் முதலாவது மனுஷன் நீங்களா தான் இருப்பீங்க.” 

“சூப்பர் மேன் தெரியும். இன்னொன்னு யார்?”

“அனுமார்.”

கன்சல்டேஷன் ஃபீஸ் எவ்வளவு என்று அவராகவே கேட்டுத் தந்துவிட்டு மேற்கொணடு எதுவும் பேசாமல் திக்பிரமை பிடித்ததுபோல் வெளியேறினார் சற்குருநாதன். 

அதற்குப்பிறகு சில நாட்கள் அந்தக் காட்சிகள் மனதில் ஓடிக் கொண்டிருந்தாலும் எனக்கு நொடிப்பொழுது நேர்ந்த மருட்சியின் வெளிப்பாடே அது என்று என்னைத் தேற்றிக் கொண்டேன். கல்லூரி நாட்களில் பேரா-சைக்காலஜி என்று சொல்லப்படும் அமானுஷ்ய  உளவியலில் ஆர்வம் இருந்ததால் ஏராளமான சித்தர்கள் குறித்த ஆராய்ச்சி நூல்கள் தமிழில் வாங்கிக் குவித்திருந்தேன். சட்டென்று நினைவு வந்து பரணிலிருந்து முனைவர் திருஞானபண்டிதன் எழுதிய ‘அஷ்டமா சித்து’ என்ற புத்தகத்தை எடுத்து தூசி தட்டிப் புரட்டினேன். அஷ்டமா சித்துக்களில் ஒன்று பரகாயப் பிரவேசம். கூடுவிட்டு கூடு பாய்வது.  அதாவது தன் உடலில் இருந்து உயிரை வெளியேற்றி அருகில் இருக்கும் இறந்து கிடக்கும் உடலிலோ அல்லது உயிரோடு இருப்பவர்கள் முழுமனதுடன் சம்மதித்து அவர்கள் உடலில் பிரவேசம் செய்வது. சரியான மந்திர உச்சாடனம், சீரான மூச்சளவு, குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்வு இதெல்லாம் இந்த சித்து நிகழ்வைத் தீர்மானிக்கும். இது மிகவும் ஆபத்தான ஒரு சித்து வேலை என்பதால் இதனைச் செய்ய பிரசித்தி பெற்ற சித்தர்களும் அஞ்சுவார்கள்.

‘முழி பிதுங்கி வாய் கோணி நாக்குழறி இலகுவாகி மேலெழும்பும் உடல் உயிர் பிரியும் தன்னுடல் நீங்கி பரகாயம் சேருமுன்’ என்ற பெயர் தெரியா சித்தரின் பாடல் ஒன்றும் குறிப்பில் இருந்தது. இப்போது பொறி தட்டியது. ஒருவேளை பறப்பதாக நினைத்துக்கொண்டு பரகாயப் பிரவேசப் பயிற்சியை அவரே அறியாமல் தற்செயலாகச் செய்து வருகிறாரோ. அதனால் லேசாக உடல் மேலெழுவதைப் பறப்பதாக தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ஆபத்தை உணராமல் செய்யும் அவரது நடவடிக்கையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். 

அதற்கு அடுத்த வாரம் ஒருநாள் திருநெல்வேலி டவுன் கடைத் தெருவில் நூறடி தூரத்தில் சற்குருநாதன் தள்ளு வண்டிக் கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன் அவர் அருகே நான் செல்லும்போது அவரும் என்னை கவனித்தது போல் இருந்தது. அவரை நெருங்குவதற்குள் சட்டென்று நழுவி எதிர் பக்கம் இருந்த ஒரு குறுக்கு சந்தில் நுழைந்து மாயமானார். மனுஷன் என்னைச் சந்திப்பதை தவிர்க்க முயல்கிறாரோ என்று தோன்றியது

மறுநாள் சனிக்கிழமை. காலையில் எப்போதும் போல சீக்கிரமாகவே கிளினிக் வந்துவிட்டேன். எங்கிருந்தோ சங்கு ஊதும் சத்தமும் சாவுக்கு அடிக்கும் மணியோசையும் விட்டுவிட்டுக் கேட்டது. கீழ் வீட்டுப் பையன் தான் கதவைத் தட்டி எனக்குத் தகவல் தந்தான்.  “அன்னைக்குக் கூட உங்களப் பாக்க வந்தாரே, அந்த தாத்தா தான்”. மூணாவது தெருமுக்கு பச்சை பெயிண்ட் என்று அன்றைக்கு சற்குருநாதன் சொன்னது நினைவிருந்தது. அவரது வீட்டுக் காம்பௌண்டுக்குள் ப்ரீசர் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் பலவிதமான சைஸில் ரோஜா மாலைகள். நாமும் ஒரு மாலை வாங்கி வந்திருக்கலாமோ எனறு தோன்றியது. கை கூப்பியபடி மெல்ல அருகில் சென்று எட்டிப் பார்த்தேன். ப்ரீசர் பெட்டிக்குள் சற்குருநாதன் கண் மூடி சலனமற்றிருந்தாலும் ஏதோ கலவரம் அவர் முகத்தில் லேசாகப் படிந்திருந்தது. வாய் வலதுபக்கம் சற்று வலிப்பு வந்தது போல் கோணியிருந்தது.

“ஹார்ட் அட்டாக்காம். நேற்று கூட சாயங்காலம் அவர் கிட்ட பேசினேன். நல்லாத்தான் இருந்தார். ஒரே பையன். நியூடெல்லி விஞ்ஞான் பவன்ல வேலை செய்றான். அவன் வந்து சேர்ந்ததும் ஈமக்கிரியை ஆரம்பிக்க வேண்டியது தான்” என்று ஒருவர் விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

வீட்டு ஹாலில் மூண்று பெண்கள் சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, நடுவில் புடவைத் தலைப்பால் அடிக்கடி முகத்தைப்  பொத்தியவாறு அழுதபடி இருந்தார் சற்குருநாதனின் மனைவி. என்னை அழைத்து வந்த நபர் அவர் அருகே போய் ஏதோ சொல்லத் தடுமாறியபடி எழுந்து கொண்டார். “நீங்க தான் டாக்டருங்களா? உங்களத்தான் வந்து பார்க்கனும்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தார். ஏதோ யோகாசனம் பத்தி பேசனும்னு.”. 

“எப்படி ஆச்சு இது” என்று பொத்தாம் பொதுவாக நான் அவரிடம் கேட்டு வைக்க “எப்பவும் போல காலைல ஹால்ல யோகாசனம் பண்ணிட்டு இருந்தார். நான் சமையல் ரூம்ல எலிப்பொறியில் மாட்டி செத்துப்போன எலியோட வாலை துணியில சுத்திப் பிடிச்சிக்கிட்டு ‘இதப்பாருங்க! கடைசியா சிக்கிடுச்சின்னு’ சொல்ல,  யோகாசனத்துல உக்காந்திருந்தவரு தலைய மட்டும் திருப்பிப் பார்த்து ஒருமாதிரி முழிச்சி மூச்சுத் திணறி படார்னு சரிஞ்சிட்டாரு. நானும் மயக்கமாயிட்டேன்.”

“செத்துப் போன அந்த எலி எங்கே?”

“இதோ இங்க தான் போட்டேன்” என்று சொல்லி விசும்பியபடி அவர் அமர்ந்து கொள்ள மீண்டும் பெண்கள் ஒப்பாரி தொடர்ந்தது.

 “என்ன சார் பேசுறீங்க. எலியெல்லாம் ஒரு மேட்டரா. அத்த கர்மத்தை யாராவது தூக்கிப் போட்டுட்டு அங்க சுத்தம் பண்ணி இருப்பாங்க. செத்துப் போன எலி என்ன உயிர் வந்து ஓடியா போயிருக்கும்?” என்று கூட வந்தவர் என்னைக் கோபித்துக் கொண்டார்.

இந்தக் கதையின் கடைசி வாக்கியம் ஒரு திடுக்கிடும் திருப்பம் வேண்டி இட்டுக் கட்டப் பட்டதல்ல. எந்த ஒரு உள்ளர்த்தமும் இல்லாமல் நடந்த ஒரு சம்பவத்தை அப்படியே காட்சிப்படுத்திய விவரணை மட்டுமே. அதேசமயம், படித்த மருத்துவக் கோட்பாடுகள் மற்றும் அறிவியல் விதிகளின் மீதான அசாத்திய நம்பிக்கை கொண்டுள்ள நான் பகுத்தறிவுக்கு ஒப்பாத எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று இப்போதே திட்டவட்டமாக கூறிவிடுகிறேன். 

ஈமச்சடங்குகள் முடிய எப்படியும் நேரமாகும். சாவு வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப வேண்டும் என்பது சட்டென்று நழுவ எப்போதும் ஒரு வசதியான விதியாகவே படுகிறது. செருப்பை மாட்டிக்கொண்டு காம்பௌண்டை நான் நெருங்கியபோது புழக்கடைப் பக்கம் வைத்திருந்த தட்டுமுட்டு சாமான்களிடையே இருந்து ஒரு பெருத்த எலி குறுகுறுவென்று வெளியே வந்தது. அதன் மூக்குப் பகுதியில் லேசான ரத்தக்கசிவு. கண நேரம் தாமதித்துத் தலையை உயர்த்திய அதன் குட்டிக் கருவிழிகள் ஒருமுறை என்னை உற்றுப் பார்த்தது பிரமையா நிஜமா என்று நான் யோசித்த நொடியில் அது தெருவின் வெளிப்பக்கமாக வேகமாக ஓடி மறைந்தது.

Exit mobile version