சிநேகம்
எங்கள் தெரு நாய்கள்
இப்போது என்னைப் பார்த்து குரைப்பதில்லை.
இந்தத் தெருவில் இந்த வீட்டிற்கு
குடிவந்த புதிதில்
தெருமுனையிலிருந்து வீடுவரை
அவைகள் சதா குரைத்துக் கொண்டே
பின் தொடர்ந்து வரும்.
எனது பிஸ்கட்களை அவைகள் நுகரக்கூட இல்லை.
ஆரம்பத்தில் அந்நியமாய் இருந்த
எனது அலுவலகச் சீருடையின் நிறம்
இப்போது அவைகளால்
அடையாளம் கொள்ளப்பட்டுவிட்டன.
எனது வாசனையை
அவைகள் மோப்பம் கொண்டுவிட்டன.
இன்று வீடு திரும்பலில் தெருவோரக் கூட்டத்தில்
கல்திண்டில் அமர்ந்திருந்த நாய் ஒன்று
என்னைப் பார்த்து முறைத்தது.
பார்த்த மாத்திரத்தில் வாலாட்டிச் சிநேகம் கொள்ள
நாய்களுக்கு சிலகாலம் பிடிக்கும் போலும்.
பூத்தல்
ஐப்பசியில் அவ்வளவு அடைமழை இல்லை
சிறிய மின்னல்கள் பெரிய இடிகளுடன்
மாத இறுதியில் இரண்டு நாட்கள்
மழை பெய்து ஓய்ந்தது
இன்னமும் ஈரம் உலர்ந்திராத
கிணற்றடி நிலத்தில் பூத்திருக்கின்றன
தொட்டாற்சுருங்கிப் பூக்கள்
நடுச்சாம மழை
நடுச்சாம அடைமழையில்
கசமாசன் முற்றிலும் நனைந்துவிட்டான்.
தொப்பலாக நனைந்ததில்
வேட்டி நழுவிவிட்டது தூசிமாடனுக்கு.
எண்ணெய்ப் பிசுக்குகள் கரைந்தோடியதில்
சிரிக்கத் தொடங்கிவிட்டான் பன்றிமாடன்.
வெம்பரப்பில் குடிகொண்டிருந்த
பரிவாரத் தெய்வங்கள்
மழைக் குளிர்ச்சியில் சிலிர்த்து
நனைந்ததைக் கண்டு
கல்மண்டபக் கருவறை முப்பிடாதிக்கு
மனப்புழுக்கம் ஏற்பட்டுவிட்டது.
அர்த்தசாமப் பூஜையில் தோளில் சார்த்தப்பட்ட
செவ்வரளிகள் மடியில் உதிர
தாங்க முடியாத வெம்மையில்
பூசாரியின் விடிகாலைக் கனவில் எழுந்தருளி
அவன் தூக்கம் கலைக்கிறாள்.
கார்த்திகை மழை
விடிகாலை கார்த்திகை மழையில்
முற்றத்து கூடம் நிரம்பிவிட்டது.
மனப்பிறழ்வுற்ற அம்மா
வாரியலால் பெருக்கிக் தள்ளுகிறாள்.
பெருக்கப் பெருக்க நிறைகிறது மழை.
ஓர் கணத்தில் மழையோடு
உரையாடத் தொடங்குகிறாள்
நொடிந்த வாழ்வின் கதையைப் பிதற்றுகிறாள்.
விக்கித்த மழை
பின்பு வெறித்துச் சொட்டுகிறது.
கூதிர்காலக் குறிப்புகள்
கார்த்திகை மழையில்
பெருங்குளம் நிரம்பிவிட்டது.
மழையின் பாரம் தாளாமல் விழுந்த
கரையோர எருக்கம்பூ மொட்டுகளை
மொய்க்கின்றன குளத்துக் கெண்டைகள்.
மகரந்த துகள்கள் படிந்திருந்த
மேற்பரப்பின் மஞ்சள் திரை விலக்கி
இரு கை அள்ளி குளத்தண்ணீர்
பருகுகிறான் ஆடோடி.
கொண்டல் காற்றின் சிலிர்ப்பில்
மேய்ச்சல் முடிந்து கொட்டில் திரும்புகிற
செம்மறிகளின் வழிநெடுக
கருந்துளசிகளும் தும்பைகளும்
செழித்திருக்கின்றன.
உள்ளங்கைகள் முழுவதும் அப்பியிருக்கிற
மருதாணியின் இளஞ்சிவப்பை
முகர்ந்து முகர்ந்து மெச்சுகிறாள்
கனமழை பள்ளி விடுமுறைக்கு
வீட்டோடு ஒதுங்கிவிட்டச் சிறுமி
ஆவர்த்தம்
மாட்டுவண்டிகள் போகாத ஊருக்குள்
தனது பாட்டுவண்டியைக்
கூட்டிக் கொண்டுப்போன
இசைக்கலைஞனுக்குப் பாராட்டு விழா.
விழா மேடையில் இசைக்குழுவினர்
ஆலாபனம் செய்து
அவனைப் பாட அழைக்கிறார்கள்.
பார்வையாளர்கள் வரிசையில்
அமர்ந்திருந்த அவன் பாடத் தொடங்குகிறான்.
கச்சேரிகளில் வழக்கமாக பாடுகிற
தெய்வப்பாடலை அவன் பாடவில்லை.
தன்னை வளர்த்தெடுத்த மொழியின்
தொன்மை பேசுகிற பாடலை
ஸ்வரஸ்தானத்தில் பாடத் தொடங்குகிறான்.
ஓர் இடத்தில் கண்கள் மருக
நாதலயப் பெருக்கில்
பாடலின் இரண்டாவது சரணத்தின்
இறுதியில் வருகிற
‘இசையிருந்தால் மரணமேது’
என்ற வரியை உச்சஸ்தாயியில் பாட
அக்குரலின் நாதவழியில்
பயணிக்கத் தொடங்குகிறார்கள்
ரசிகப் பரிவாரங்கள்.
