Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

தீக்ஷிதர் 250!

நான் முறையாகக் கர்நாடக சங்கீதம் பயின்றவனல்லன். எனக்கு வடமொழியும் தெரியாது. ஆனாலும் வடமொழியில் புனையப்பட்ட தீக்ஷிதரின் கர்நாடக சங்கீதப் பாடல்களின் மேல் மட்டும் ஏதோ ஈர்ப்பு. அவற்றில் உள்ள எதுகை மோனை இயைபு காரணமா, அவர் எடுத்துக் கொண்ட ராகங்கள் காரணமா, அந்த ராகங்களை அவர் துளியும் அவசரமில்லாமல் நிதானமாகக் கையாண்ட விதம் காரணமா, பொதுவாக உணர்ச்சிகளே மிகுந்து இருக்கும் பாடல்களுக்கிடையே சரித்திரத் தகவல்கள் கோயில் கட்டமைப்பு தலப்புராணங்கள் என்று வித்தியாசமான உள்ளடக்கம் காரணமா என்றெல்லாம் கேட்டால் இதுதான் என்று என்னால் சொல்ல முடியாது. இவை எல்லாமும் கலந்து என்னுள்ளே எழுப்பும் கிளர்ச்சிதான் காரணம் என்பது என் முடிபு. 

வடமொழிதான் தெரியாது என்றாயே பின் அப்பாடல்களின் உள்ளடக்கம் பற்றி எப்படித் தெரியும் என்ற கேள்வி எழுவது நியாயமே. அப்பாடல்களின் பொருளை உணர்ந்து கொள்ள கொஞ்சம் மெனக்கிடுகிறேன். யாரேனும் விளக்கமாக எழுதினால் படிக்கிறேன். அதையும் விட பிறர் விளக்கிச் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு இத்துறை நிபுணர்கள் செய்யும் செய்முறை விளக்கங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன. அவர்கள் விளக்குவதில் பத்துப் பதினைந்து சதவிகிதம்தான் எனக்குப் புரியும் என்றாலும், அப்படி ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் எனக்கு அப்பாடல்கள் குறித்த புரிதல் அதிகமாகிறது என்பதால் அவற்றை விரும்பிக் கேட்பேன். முக்கியமாக என் நண்பர்கள் மூவர் பேசினால் அவற்றை எப்படியேனும் கேட்டுவிடுவேன். அம்மூவர் சென்ற வருடம் சங்கீத கலாநிதி பட்டம் பெற்ற பாடகர் டி.எம். கிருஷ்ணா, இவ்வருடம் அவ்விருதைப் பெற்ற வயலின் வித்தகர் ஆர்.கே. ஶ்ரீராம் குமார், விரைவில் இவ்விருதைப் பெற வேண்டும் என்று நான் நினைக்கின்ற மிருதங்கக் கலைஞர் கே. அருண் பிரகாஷ். என்னைப் போன்றோருக்கும் புரியும் வண்ணம் அவர்கள் எடுத்துச் சொல்வது எனக்கு இக்கலையைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. 

டிசெம்பர் மாதம் வந்தாலே சென்னையில் களை கட்டும். சீசன் எனக் கர்நாடக இசை ரசிகர்களால் அழைக்கப்படும் இக்காலத்தில் நகரெங்கும் கச்சேரிகள் நடக்கும். சென்னை, தமிழ்நாடு, இந்தியா தாண்டி உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் சென்னையை நோக்கிப் புறப்படுவர். நானும்தான். ஆனால் இந்த வருடம் சிலப்பல காரணங்களால் என்னால் செல்ல முடியவில்லை. சீசனுக்குச் செல்ல முடியவில்லை என்றாலே வருத்தம்தான் ஆனால் இந்த வருடம் செல்ல முடியாதது பெருஞ்சோகம். நண்பர் ஶ்ரீராம்குமார் சங்கீத கலாநிதி விருது பெறும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போவது ஒரு காரணம். இரண்டாவது இந்த வருடம் தீக்ஷிதரின் 250ஆவது பிறந்த நாள் விழாவை எல்லா சபாவினரும் கொண்டாடுவதுதான். 

சரி, போகத்தான் முடியவில்லை, நாம் எப்படி இந்த சீசனில் பங்கு பெறுவது என்று யோசித்தேன். மெட்றாஸ் மியூசிக் அகாதமியில் தினமும் காலையில் செயல்முறை விளக்கங்கள் நடக்கும். அவற்றை உடனுக்குடன் யூட்யூபில் வலையேற்றுவார்கள். இந்த வருடம் இந்தச் செயல்முறை விளக்கங்கள் அனைத்தும் தீக்ஷிதரைப் பற்றி என்று அறிந்து கொண்டவுடன் எனக்கு ஒரு திட்டம் தோன்றியது. அவற்றை நிதமும் பார்ப்பது. அவற்றில் எனக்குப் புரிந்தவற்றைப் பற்றி எழுதுவது என முடிவு செய்து கொண்டேன். ஆனால் நான் எடுத்துக் கொண்ட வேலை எவ்வளவு கடினமானது என்பதை அப்பொழுது நான் உணரவில்லை. கொஞ்சமேனும் யோசித்திருந்தால் இந்த வேலையில் இறங்கி இருக்க மாட்டேன். 

பதினைந்து நாட்கள். தினமும் சராசரியாக இரண்டு செயல்முறை விளக்கங்கள் என முப்பது நிகழ்ச்சிகள். ஒவ்வொன்றும் நாற்பத்தைந்து நிமிடங்கள், அதன்பின் அவற்றைப் பற்றிய விவாதங்களுக்கு நாற்பத்து ஐந்து நிமிடங்கள் என்ற வகையிலே ஒரு முறை கேட்கவே மூன்று மணி நேரங்கள். பல பகுதிகளைப் மீண்டும் மீண்டும் கேட்டால்தான் எனக்குப் புரியுமென்பதைக் கணக்கில் கொண்டால் கேட்டு முடிக்கவே நாலு, நாலரை மணி நேரம் ஆகி விடும். பின் ஐயங்களை எடுத்துக்கொண்டு யாரிடமேனும் சென்று அவற்றைத் தீர்த்துக் கொள்ள வேண்டும், முடிவாகப் புரிந்தவற்றை எல்லாம் எழுதி, செம்மைப் படுத்திப் போட வேண்டும். எடுத்துக் கொண்ட வேலையை முடிக்க தாவு தீர்ந்து விட்டது. 

என்னை விடுங்கள். ஒரு மனிதர். அவரின் பல பரிமாணங்களைப் பற்றிப் பேச முப்பது செயல்முறை விளக்கங்கள். ஒருவரைப் பற்றி முப்பது பேர் பேசப் போகிறார்கள். திரும்பத் திரும்ப அரைத்த மாவையேதான் அரைத்திருப்பார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை. முப்பது பேரும் முப்பது விதமாக அவரை அலசி ஆராய்ந்தார்கள். ஒருவருக்குக் கூட அவர்கள் தலைப்பில் கொடுத்த நேரத்தில் பேசி முடிக்க முடியவில்லை. அவ்வளவு விஷயங்களைக் கொட்டித் தீர்த்தார்கள். சரி, முப்பது பேர் முப்பது விதமாகப் பேசிவிட்டார்கள், அந்த மனிதரின் வாழ்வை அத்தனை கோணங்களிலும் அலசித் தீர்த்திருப்பார்கள் என்று நினைத்தீர்களானால் அதுவும் இல்லை. முடிவுரையில் இது வரை பேசியது நீரில் மிதக்கும் பனிப்பாறையில் தெரியும் பகுதிதான். இன்னும் பேச வேண்டியது தண்ணீருக்கு அடியில் இருக்கும் பாகத்தைப் போல என்றார்கள். 

ஒரு மனிதர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இருநூற்றைம்பது வருடங்கள் கழித்து அவரை இப்படிக் கொண்டாடிக் கொண்டு இருக்க முடியும். ஆனால் இதில் சோகம் என்னவென்றால் அவரைப் பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை விட அவரைப் புனிதராக்கும் கதைகள்தாம் அதிகம் உள்ளன. ஆனால் இதையும் வெளிப்படையாகப் பேச முடிந்ததுதான் இந்த சங்கீத வித்வத் சபையின் பெருமை என்றே சொல்வேன்.  

அப்படி என்னதான் பேசினார்கள்? அவர் கையாண்ட ராகங்கள் பற்றி ஓர் அமர்வு. அதிலும் எல்லா ராகங்களையும் பற்றிப் பேச முடிந்ததா என்றால் இல்லை, அதில் மாயாமாளவகௌளை ராகத் தொகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டார்கள். அவரின் வடமொழிப் புலமை பற்றி ஓர் அமர்வு. அவரது முன்னோர்களின் பாடல் புனையும் ஆற்றல், அவர் படித்திருக்கக் கூடிய புத்தகங்கள், வார கிருதிகள் என்ற பெயரில் ராகு கேது தவிர்த்த மற்ற ஏழு கிரகங்களின் மேல் இயற்றப்பட்ட பாடற் தொகுப்பு, குருகுஹ விபக்தித் தொகுப்பு, கமலாம்பா நவாவர்ணத் தொகுப்பு, வட இந்திய ராகங்களும் தீக்ஷிதரும், ஆங்கில ராணுவ பேண்ட் இசையின் பாதிப்பில் புனையப்பட்ட நோட்டுஸ்வரங்கள், அவர் மேல் இயற்றப்பட்ட பாடல்கள், அவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புத்தகங்கள், அவர் பாடல்களில் இருக்கும் லய அற்புதங்கள் என்று எத்தனை எத்தனை விதமாக அவர் குறித்த ஆராய்ச்சி. 

பங்கு பெற்ற அனைவரும் சும்மா வந்தோம் பேசினோம் என்றில்லாமல் தமக்கு அளிக்கப்பட்ட தலைப்பில் முனைவர் பட்டமே பெறும் அளவிற்கு ஆராய்ச்சி செய்து கொண்டு வந்திருந்தார்கள். தங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் எவ்வளவு தகவல்களை அளிக்க முடியுமோ அவ்வளவையும் தொகுத்தளித்தனர். அவர்களின் பேச்சுக்குப் பின் நடந்த கேள்வி பதில் பகுதியில் எத்தனையோ சுவாரசியமான கேள்விகள், மேலதிகத் தகவல்கள் என்று தகவல்கள் பொழிந்தன. சங்கீத கலாநிதி விருது பெறவிருக்கும் ஶ்ரீராம்குமார் ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் தனது முடிவுரையில் அந்தந்தத் தலைப்பு குறித்து சிறு பிரசங்கமே நடத்திவிட்டார். ஒவ்வொரு தலைப்பிலும் மிகுந்த ஈடுபாட்டோடு அளப்பறிய ஞானத்துடனும் அவர் பேசியது அவரது ஆழ்ந்த புலமையையும் தீக்ஷிதரின் பால் அவர் கொண்டிருக்கும் பக்தியையும் வெளிக்கொணர்ந்தது. தீக்ஷிதரின் 250ஆவது பிறந்த நாள் கொண்டாடும் தருணத்தில் சங்கீத கலாநிதி பட்டத்திற்கு இவரைக் காட்டிலும் பொருத்தமான தேர்வு இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. 

இவ்வளவு தலைப்புகளில் அவ்வளவு ஆராய்ச்சி செய்தவர்கள் பேசினார்கள் சரி, உனக்கென்ன புரிந்தது என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் பேசியதில் பெரும்பகுதி என் புரிதலுக்கு அப்பால்தான் இருந்தது. ஆனால் ஒரு முறைக்கு இரு முறை அவர்கள் பேசியதைக் கேட்க கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது. அவர்கள் சொல்வதை எனக்குக் கொஞ்சம் பரிச்சயம் இருக்கும் தலைப்புகளோடு ஒப்பு செய்து கொண்டால் புரிவது கொஞ்சம் எளிதாகியது. அவரின் மொழிவளம் பற்றிப் பேசும் பொழுதும் விபக்தித் தொகுதிப் பாடல்கள் பற்றிப் பேசும் பொழுதும் தமிழ் இலக்கணம் கைகொடுத்தது. பிறிதொரு சமயம் வானவியல் கோட்பாடுகளைக் கொண்டு இசையில் சொல்லி இருப்பதைப் புரிந்து கொள்ள முயன்றேன். கர்நாடக இசை பற்றி நன்றாக அறிந்தவர்களிடம் அவர்கள் பணிச்சுமையைப் பற்றிக் கவலைப்படாமல் என் கேள்விகளை முன் வைத்தேன். நானே மற்றவர்கள் படிக்கும் படி எழுத வேண்டும் என முனைந்த பொழுது இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் பேசிவர்கள், கலந்து கொண்டவர்களெல்லாம் இத்துறை வல்லுனர்கள். அதனால் அவர்களைப் போலல்லாமல் ஒரு பாமரனாக எனக்கு என்ன புரிந்தது என்பதை எழுதியது என்னைப் போன்றோருக்குப் பிடித்தது போல, அதனால் பரவலான வரவேற்பு கிடைத்தது. 

எதோ ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த ஒரு கருத்தை அகாதமியின் செயலாளர் ஶ்ரீராம் அந்த அவையில் பேசும் பொழுது குறிப்பிட்டது எனக்கு எதையோ சாதித்த உணர்வைத் தந்தது. இந்நிகழ்ச்சிகளை சூட்டோடு சூடாக வலையேற்றிய அகாதமி குழுவினருக்கு என் நன்றி. அவர்களின்றி இந்த அனுபவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. தீக்ஷிதர் 250 என்ற வைபவத்தில் நானும் ஒரு பூவினைப் போட்டு அர்ச்சிக்க முடிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. 

ஓர் அமர்வில் தீக்ஷிதரின் பூர்வி ராகத்தில் அமைந்த பாடலைப் பற்றிப் பேசினார்கள். அப்பாடலின் பல்லவி “ஸ்ரீ குரு குஹஸ்ய தாஸோஹம் நசேத் சித் குரு குஹ ஏவாஹம்” என்று வரும்.  நான் குருகுஹனின் தொண்டன் இல்லையெனில், நானே சித் குரு குஹன் என்பது இந்தப் பல்லவியின் பொருள். அந்த குருகுஹ தாசனுக்குத் தாசனாக நானும் ஒரு சிறு தொண்டைச் செய்ய முடிந்தது அவரின் அருளே. 

இந்நிகழ்ச்சிகளின் காணொலிகளை மியூசிக் அகாதமியின் யூட்யூப் ஓடையில் பார்க்கலாம் – www.youtube.com/@themusicacademymadras 

ஒவ்வொரு அமர்வைப் பற்றியும் நான் எழுதிய கட்டுரைகளை என் வலைப்பக்கத்தில் படிக்கலாம் – https://elavasam.blogspot.com/ 

Exit mobile version