Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

ஜீவநதி

நித்தம் புலரியில் விழித்தெழும் ஓட்டு வீட்டு ஐயங்கார் தெருக்கோடியில் இருக்கும் பெருமாள் கோவிலின் நடையைத் திறந்ததும் அதன் ஒலிபெருக்கியிலிருந்து கிளம்பும் சுப்ரபாதம், மாடிவீட்டு மல்லிகை மாமியை உசுப்பி சோம்பல் முறிக்கச் செய்யும். நீர் தளும்பும் அலுமினிய வாளியுடன், “அம்மா! அப்பா! ஈசுவரா!” என்று அவள் ஆடி அசைந்து நகர்ந்து வரும் ஓசைகேட்டு மெக்கானிக் சண்முகம் வளர்க்கும் நாயான டைகர் லொல்லென்று குரைக்கும். கனவுலகினுள் அதைக் கேட்கும் சண்முகத்தின் மனைவி, மூன்றாம்தரமான வசைச்சொல் ஒன்றுடன் உறக்கத்திலிருந்து மீண்டு, வாதக்கோளாறினால் அசைவிழந்த இடக்காலை இழுத்து இழுத்து நடந்து, புழக்கடையை அடைந்து, கழிவறையின் இரும்புக்கதவை படாரென அறைந்து அடைப்பாள். 

அக்கதவு எழுப்பும் உலோகக் குமுறலுடன் தாசில்தார் வீட்டு வாசலில் நிற்கும் பால்காரன் எழுப்பும் மணிச்சத்தம் கச்சிதமாய் இசைந்துபோகும். எவர்சில்வர் பாத்திரத்துடன் பாலை வாங்கவரும் அவர் வீட்டுப் பணிப்பெண், பீளைப்படிந்த தனது விழிகளை வலப்புறம் திருப்பும்போது, ராமச்சந்திரன் ஸ்டோர்ஸின் உரிமையாளர் பழனிவேல் பழைய எம்.ஜி.ஆர் பாட்டொன்றை முணுமுணுத்தபடி கடையின் ஷட்டரை உயர்த்துவார். அவரது கடை வாசலில் வழக்கமாய் இளைப்பாறும் பழுப்புநிற பசுமாடும் அதன் கன்றும் பொழுதானதைப் புரிந்துகொண்டு படபடப்புடன் இடத்தை காலிசெய்ய முற்படும். புதிதாய் போட்டிருந்த சிமெண்ட் சாலையில் அதன் குளம்புகள் உரசுவதால் எழும், “கடக்! கடக்!” சத்தத்துடனே பெரும்பாலும் எனது காலை துவங்கும். விழித்து அமர்ந்து விரல்களில் நெட்டிமுறிக்கும்போது வீட்டின் பின்புறத்தில் குடியிருக்கும் சித்த மருத்துவர் ரமேஷின் அம்மா கடுகு தாளிக்கும் சத்தமோ, அல்லது வாசல்புறம் நிற்கும் பேப்பர்காரன் அந்த மாடுகளை, “ஹை! ஹை!” என்று விரட்டும் சத்தமோ கேட்கும். 

வாசல் தெளித்து, கோலம் போட்டுத் திரும்பும் மல்லிகை மாமி, மச்சுப்படி ஓரம் இருக்கும் மோட்டார் ஸ்விட்சைத் தட்டியதும் எழும் நாராசமான இரைச்சலில் தந்தை விழித்துக்கொள்வார். கைகால் முகம் கழுவி, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு அந்நாட்களில் அவர் தினசரி படிக்க வாசல்பக்கம் வரும்போது தெருவே உயிர்பெற்றிருக்கும். அன்றும், பின்னாட்களில் அனைத்தும் மாறியபிறகு அதே தெருவைக் காணும்போதெல்லாம் அவர் எண்ணிக்கொள்வது சிவகாமி கிழவியைத்தான் என்று எனக்கு தெரியும்.

***

சில வருடங்களுக்கு முன்பு, ஒருநாள் நள்ளிரவு நேரத்தில் தடதடவென படியிறங்கி வந்த மல்லிகை மாமி எங்கள் வீட்டுக் கதவைத் தடார் தடாரென அறைந்து, “தம்பி மோகன், செத்த கதவை திறடா!” என்று கூவினாள்.

“ஏல, யாரு?” என்று அரைத்துயிலில் முனகியபடி எழுந்துகொண்ட அப்பா, மாமியின் குரல் கேட்டதும் லுங்கியை இழுத்துக் கட்டிக்கொண்டு வாசலை நோக்கிச் சென்றார்.

“என்னாச்சு மாமி? இந்த நேரத்துல?” என்று அவர் கேட்டதற்கு, “என்னென்னமோ சொப்பனம்டா மோகா!” என்றாள் மாமி.

அப்பா உச்சுக்கொட்டியது அறையில் இருந்த எனக்கு கேட்டது. ஆனால் ஆபரணங்கள் ஏதும் அணிந்திராத மாமியின் செவிகளை அது எட்டியதாக தோன்றவில்லை. “எதுக்கும் ஒருதடவ பாட்டிய அவ ஆத்துல போய் பாத்துட்டா என்ன?” என்றாள்.

“மாமி, நேரம் என்ன ஆச்சுன்னு தெரியுமா? விடுங்க… எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம்” என்ற அப்பாவின் தர்க்கத்தை மாமி சற்றும் பொருட்படுத்தவில்லை. என்னை அழைத்து சட்டையை எடுத்துத்தரச் சொல்லி, அதனுள் தன் உடலை புகுத்திக்கொண்டு, “அவன் அவனுக்கு உடம்பு எப்படியெல்லாம் நோவுதுன்னு தெரியுமா மாமி? தூக்கம் போச்சுன்னா நாளைக்கு பொழப்பு எப்படி ஓடும் எனக்கு?” என்று புலம்பியபடி, சிவகாமி கிழவியின் ஒற்றை அறை மட்டுமே கொண்ட வீட்டை நோக்கி எட்டுவைத்தார் அப்பா.

அம்மா இருந்தவரை வீட்டினுள் சிவகாமி கிழவியின் புராணத்திற்கு பஞ்சமே இருந்ததில்லை. அவள் மனத்தினுள் கிழவிக்கு மிக உயர்ந்த ஸ்தானம் இருந்தது. தாத்தாவிடம் இருந்து சேகரித்திருந்த பல அரிய தகவல்களின் விளைவாக, அம்மா, சிவகாமி கிழவியை ஒரு தேவதையெனவே கருதி வாழ்ந்தாள். 

இன்று மழைக்காலத்தில் ஒழுகும் கூரைக்கு அடியே முடங்கி வாழும் ஒடுங்கிய தேகம்கொண்ட இக்கிழவி ஒருகாலத்தில் இவ்வூரில் பெரும்பகுதி நிலங்களை தன் கைவசம் வைத்திருந்த மிராசுதார் ஒருவரின் ஒரே வாரிசு என்பதையும், எண்ணிலடங்கா வசதிகளுடன் வாழ்ந்திருந்தாலும் தன்னலம் விரும்பாத கருணைத் ததும்பும் மனம் கொண்டவள் என்பதையும், பக்கத்து ஊரில் பெரும் வசதிகள் ஏதுமற்ற எளியவனைக் காதலித்து, அவனுக்காக தந்தையுடன் வாதிட்டு, மணம் செய்துகொண்ட கதையையும், பதினைந்து வருட தவத்திற்குப்பிறகு அவள் பெற்றெடுத்த குழந்தை நிலத்தில் காலூன்றும் முன்பே காதல் கணவன் காளை முட்டிச் செத்துப்போனதையும், செல்வந்தர்களை அழித்தொழிக்க அவர்கள் குருதியிலேயே உருவெடுத்து நிமிரும் அரக்க வாரிசாக அவள் மகன் பொன்னம்பலம் அமைந்ததையும், குடும்பம் குவித்த சொத்தையும், நற்பெயரையும், குடி, கூத்து, தகாத உறவுகள் என்ற முக்கரம்கொண்டு கிழித்து, உண்டு, அவன் செரித்ததையும் நான் அறிந்துகொண்டது என் அன்னையிடமிருந்துதான்.

அன்று மல்லிகை மாமியின் உந்துதலுக்கு இணங்கி கிளம்பிச் சென்றிருந்த அப்பா இடிந்துபோனவராய் திரும்பி வந்ததும், தெருவில் பரவத் துவங்கியிருந்த சலசலப்பைக் கேட்டு விரைந்தோடி வந்திருந்த தாசில்தார் மணிகண்டனின் கையைப் பிடித்துக்கொண்டு, “ஊருக்கே சோத்த போட்டவ, வாக்கரிசி போட ஆளில்லாம அனாதையா அழுகிப்போய், வாயெல்லாம் புழுத்து கடக்கா சார்! உடம்ப காண சகிக்கல!” என்று அவர் அழுததும், பெண்கள் சூழ ஒரு ஓரத்தில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த மல்லிகை மாமி, “பாட்டிக்கு ஒரு சொட்டு தண்ணி இல்லட்டி… எட்டி மல்லிகா, இந்தா பாருன்னு சொல்லி வறண்டு, வெடிச்சுப்போய் இருந்த நாக்க நீட்டி காட்டினா பாட்டி, என் கனவுல வந்து” என்று விசும்பியபோது அங்கிருந்த அனைவரது உடம்பிலும் குடிகொண்ட ஒருவிதமான நடுக்கமும் என் நினைவுகளில் நீங்காத இடம் பெற்றிருக்கின்றன.

அதுவே தனது விருப்பம் என்று தெருவாசிகளிடம் பலமுறை பிரஸ்தாபித்திருந்ததால், மேலப்பாளையம், குறிச்சி பகுதிகளில் ஒரு காலத்தில் அவளுக்கிருந்த, தற்போது தாசில்தார் மணிகண்டனின் ஒன்றுவிட்ட சகோதரனின் கைக்கு மாறியிருந்த, நிலம் ஒன்றில் கிழவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

காரியங்கள் முடிந்தபிறகு அனைவரும் வீட்டுத் திண்ணையில் கூடி அமர்ந்திருந்தோம். காற்றின் புழுக்கம் அவ்விடத்தில் செறிந்திருந்த மௌனத்தின் அடர்த்தியை அதிகப்படுத்தியது. தாசில்தார் மணிகண்டன் மற்றும் மளிகைக்கடை பழனிவேல் மாமாவுடன் சேர்ந்து அப்பாவும் அன்று சற்று அதிகமாக மது அருந்தியிருந்தார்.

அருகில் நின்றுகொண்டு அமைதியாக நகம் கடித்துக்கொண்டிருந்த என் தோளின் மீது திடீரென கைபோட்ட பழனிவேல் மாமா, “ஆச்சிய நினைவிருக்காய்யா? பேசிருக்கியா?” என்றார்.

சிவகாமி பாட்டியுடன் நான் அத்தனை நெருக்கமாக பழகியதில்லை. அவளிடமிருந்து வெளிப்படும் அந்தக் கட்டற்ற அன்பும், குரலில் தொனிக்கும் உரிமையும் ஏனோ என்னை மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாக்கிவிடும். அதனால், என் வயதை ஒத்த பிற இளசுகளைப்போலவே நானும் அவளைத் தவிர்த்துவருவதை வழக்கமாக கொண்டிருந்தேன். தெருவில் எதிர்ப்படும்போதும், கிரிக்கெட் விளையாட்டின்போது வீட்டினுள் புகுந்துவிட்ட பந்தை எடுத்துவரச் செல்லும்போதும் என்னை அருகினில் அமர்த்தி கன்னத்தில் நறுக்கென்று கிள்ளுவாள். பிறகு கிள்ளிய இடத்தில் எச்சில் படிந்து வழியும் அளவிற்கு முத்தமிடுவாள். பொறித்த பண்டம் தருவதாகச் சொல்லி வீட்டினுள் அழைப்பாள். அப்போது விளையாட்டாக அவள் கையை உதறிவிட்டுச் சென்ற நியாபகங்கள் அனைத்தும் அவள் மரணித்த அன்று என்னை குரூரமாய் தாக்கின.

“காலேஜ் சேர்ந்தப்ப, ஆசிர்வாதம் வாங்க அப்பா கூட்டிட்டு போச்சு… அதான் கடைசியா பேசினது” என்றேன் அவரிடம்.

ஒன்றும் சொல்லாமல் என் முதுகை வருடிக் கொடுத்தார் பழனிவேல் மாமா. இதழ்களில் முறுவல் இருந்தாலும் செம்மையேறியிருந்த அவரது விழிகளில் பெரும் வேதனை பரவுவதை கவனித்தேன்.

கிழவியின் மகன் பொன்னம்பலம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கிச் செத்த தினத்திலிருந்தே ஒருவித பிறழ்வுக்குள்ளாகி, தன்னுள் முடங்கிக்கிடப்பவளாக உருமாறிப்போயிருந்தாள் அவள். அந்தக் காலகட்டத்தில்தான் நான் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருந்தேன். திருச்சியில் இருக்கும் பிரசித்திபெற்ற பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்த செய்தியை புகைப்படத்தில் இருக்கும் அம்மாவிடம் சொல்லி ஆசிபெற்ற அடுத்த நிமிடமே தந்தை என்னை கையோடு அழைத்துச்சென்று கிழவியின் முன் நிறுத்தினார்.

கிழவி என்னையும் அப்பாவையும் மாறி மாறி நோக்கினாள். அவள் பார்வையில் அந்நியரைக் கண்டுவிட்ட மலைப்பை ஒத்த ஓர் உணர்வு இழையோடியது.

“உன் பேரன் நல்ல மார்க் வாங்கிருக்கான்… மேற்கொண்டு படிக்க வெளியூர் போறான்… பெரிய காலேஜ்… நல்ல படிப்பு” என்று திக்கித்திக்கி அறிவித்தார் அப்பா.

அதை செவிமடுத்த நொடியே அவள் அகவைக்குப் பொருந்தாத வேகத்துடன் வெடுக்கென எழுந்து வந்து என்னை ஆரத்தழுவி, உச்சியில் முத்தமிட்டாள் கிழவி.

“யய்யா ராசா… நல்லா வாழுய்யா… பெரியாளா ஊருக்கு திரும்பி வா… நான் இங்கதான் கடப்பேன்” என்று அவள் சொல்லும்போது கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோல் கொட்டிக்கொண்டிருந்தது. உள்ளங்கை நிறைய திருநீறு அள்ளி என் நெற்றி முழுக்கப் பூசிவிட்டு மீண்டும் ஒருமுறை உச்சியில் முத்தமிட்டாள்.

உணர்ச்சிப்பெருக்கில் உடல் விம்மி, வற்றிச் சுருங்கியிருந்த அவளது முலைகள் அதிர்வதைக் கண்டபோது எனக்கு என்னமோ செய்தது. மெல்ல அவள் பிடியிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு தந்தையை நோக்கியபோது புறங்கையால் வாய்பொத்தி அழுதுகொண்டிருந்தார் அவர். இச்சிறிய விஷயத்திற்கு ஏன் இத்தனை அழுகை என்று என்னால் அப்போது விளங்கிக்கொள்ள முடியவில்லை.

வீடு திரும்பியதும் அவரிடம், “ஆச்சிக்கு ஏன்ப்பா திடீருன்னு அப்படி அழுதுச்சு?” என்று சாதாரணமாக கேட்டேன்.

நீண்ட நேர மௌனத்திற்கு பிறகு, “வாழ்த்தறப்ப அவ கண்ணுக்கு நாம எல்லாரும் பொன்னம்பலம்தான்” என்றார் அவர்.

அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்துகிடந்த திகைப்பூட்டும் ஆழம் எனக்கு அப்போது புலப்படவில்லை என்றாலும் அதன் பிறகு அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி கண்ணில்படத் தொடங்கின. திருமணச் செய்தியுடன் தன் மகளை அழைத்துக்கொண்டு தாசில்தாரும், புதுமனை வாங்கியதைப் பற்றித் தெரிவிக்க பழனிவேலும், தெருமுனையிலேயே புதிதாக கிளினிக் திறக்கவிருப்பதைச் சொல்ல சித்த மருத்துவர் ரமேஷும் சென்றிருந்தபோதும் கிழவியின் கண்களில் அதே அளவு நீர் சுரந்தது. தன்னை நெடுங்காலமாக படுத்தியெடுத்த மூட்டுவலி, ரமேஷ் கொடுத்த தைலத்தினால் குணமாகிவிட்டது என்றும், இரவெல்லாம் உறங்காமல் பழந்துயர் எண்ணி துன்புற்ற காலம் இனி இல்லை என்றும் ஓட்டுவீட்டு ஐயங்கார் உணர்ச்சி மேலிடச் சொன்னபோது கோவில் வாசலிலேயே தேம்பி அழுது அவரை வாழ்த்தினாள் அவள்.

சிகரெட் புகைக்கச் சென்றிருந்த பழனிவேல் மாமாவின் இடத்தைப் பிடித்துக்கொண்ட சித்த மருத்துவர் ரமேஷ் சற்று நேரத்திற்கு எதிர்புறம் தெரிந்த கிழவியின் வீட்டையே நோக்கிக்கொண்டிருந்தார். பிறகு அவருக்கே உரித்தான அடிக்குரலில், “போன தலைமுறை வரைக்கும் இங்க எல்லா பிரசவத்தையும் பாத்தது கிழவிதான்… இங்க உன் அப்பா வயசுல இருக்கற எல்லாரும் அவ கைமேல ஏறித்தான் பூமிக்கு வந்தோம்” என்றார்.

நான் தலையை மட்டும் அசைத்தேன்.

சிக்கலான பிரவசங்களை நேர்த்தியுடன் கையாள்வதில் மட்டும் இல்லாமல், பசு, ஆடு, கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கான வைத்தியத்திலும் தேர்ந்தவளாய் கிழவி இருந்ததே என் அம்மாவின் மனதில் அவளை தேவதையென நிலைநிறுத்தியிருந்தது.

அன்று கிழவியை அடக்கம் செய்த பிறகு திண்ணையில் கூடியிருந்தவர்களில் அதிகம் உருக்குலைந்து காணப்பட்டது மல்லிகை மாமிதான். தெருவெனும் தாமரை இலைமேல் நீர்போல் ஊர்ந்தோடிய எனக்கே அவளுக்கும் கிழவிக்குமான உறவின் ஆழம் பற்றிய திடமான புரிதல் இருந்தது. இளம் வயதில் கணவனை இழந்து, விவரமறியும் வயதை எட்டியிராத பெண் குழந்தையுடன் ஒற்றையாய் நின்ற மல்லிகை மாமியை அலங்கோலப்படுத்திவிடும் முனைப்புடன் காத்திருந்த ஆசாரங்களுடனும், அதை ஒருபோதும் தளர்த்தமாட்டோம் என்று கங்கணம்கட்டித் திரிந்த அதன் பிரதிநிதிகளுடனும் முரட்டுத்தனமாய் முரண்பட்டவள் சிவகாமி கிழவி. விஷக்காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பெண் குழந்தையின் கண்முன்னால் அப்படியொரு அராஜகம் அரங்கேறுவதை தன்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ரௌத்திரம் பொங்க அவள் உரைத்ததைப் பற்றி பலர் பேசிக் கேட்டிருக்கிறேன். அவமானத்திலிருந்து காத்தது மட்டுமல்லாமல் அப்பளம், ஊறுகாய், வடகம் போன்ற பதார்த்தங்களை வீட்டில் அமர்ந்தபடியே தயாரிக்கும் வசதிகளை அமைத்துக்கொடுத்து, மளிகைக்கடை பழனிவேலிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, அப்பொருட்களை அவரது கடையில் விநியோகம் செய்யவைத்து, தினசரி அடுப்பெரிவதற்கு போதுமான சில்லறை லாபத்தை ஈட்டிவிட வழிவகுத்தாள். மாமியின் மகள் படிப்பில் தேர்ந்து, தனியார் வங்கி ஒன்றில் பணிக்கு அமர்வது வரை ஏதோ வகையில் அவர்களுக்கு உறுதுணையாய் திகழ்ந்திருந்தாள் கிழவி.

அவள் சுபாவம் அது.

ஒருவீட்டின் பள்ளத்தை நிகர்செய்யும் வளமை மற்றொரு வீட்டில் இருந்தால் கூச்சப்படாமல் அவர்களை அணுகி இல்லாதோரின் பொருட்டு உதவிக் கேட்டுவிடுவாள். சம்பந்தப்பட்ட இருதரப்பினரின் விருப்பத்தைக் குறித்தெல்லாம் அவள் கவலைகொண்டதேயில்லை. ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் பிறர் கரம் நாடுவதை பெருத்த அவமானம் எனவும், சிக்கல்களை தன்னந்தனியாக எதிர்கொள்வதே மானுட உசிதம் எனவும் ஏகமனதாய் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த காலச்சூழலின் நகைமுரணென நின்றாள் அவள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினத்தில் சமைக்கப்படும் தின்பண்டங்களில் துவங்கி, நிலம், வரன் என தெருவினுள் நடந்தேறும் அனைத்துப் பரிமாற்றங்குளுக்கு பின்னும் அவள் கை இருந்தது.

அப்போது, எங்கோ தொலைதூரத்தில் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கிழவியின் மகனான பொன்னம்பலத்தின் தோள்பட்டையில் அந்த ஒற்றைத் தோட்டா மட்டும் பாயாதிருந்திருந்தால் இங்கே ஊரில் எங்களுக்கும் அவளுக்கும் இடையே நீடித்துவந்த மகத்தான உறவில் எவ்வித தடங்கலும் விழுந்திருக்காது.

***

பொன்னம்பலம் நிகழ்த்திய பெருவாரியான அசம்பாவிதங்களை வயதில் இளையவனான என்னிடமிருந்து பெரியோர்கள் தத்துரூபமாக மறைத்திருந்தபோதிலும், அவனது கட்டுப்பாடற்ற போதைப் பழக்கத்தையும், பெருமாள் கோவிலை ஒட்டினாற்போல் இருந்த பழங்காலத்துக் கல்மண்டபம் அவன் கைவண்ணத்தால் தீமையின் கூடாரமாய் மாறிப்போனதையும், வயதுபேதம் பார்க்காமல் இழிவார்த்தைகளை உதிர்த்து, கை ஓங்கும் அவனது மூர்க்கத்தையும் அறிந்துகொள்ளும் அளவிற்கு முதிர்ச்சி கொண்டிருந்தேன் நான். உடலில் கூன் விழிந்திருந்தாலும் உள்ளத்தின் நிமிர்வை இழந்திராத சிவகாமி கிழவி கொஞ்சம் கொஞ்சமாய் வாடிப்போனதையும், ஒவ்வொரு விடியலிலும் அன்றைய பொழுது தனக்கென ஒளித்துவைத்திருக்கும் அவமானத்தை எண்ணி அவள் துன்புற்றுதையும், நல்லது கெட்டதில் பங்கெடுக்கும்போதெல்லாம் எக்கணம் என்ன சச்சரவு வெடிக்கும் என அவள் விழிகள் பரபரத்ததையும் நான் கண்டிருக்கிறேன்.

துவக்கத்தில் அவனால் நேர்ந்த இன்னல்களின் பொருட்டு தெருவாசிகள் கிழவியிடம் பணிவுடன் முறையிட்டபோது அவளுள் இருந்த அன்னையே வெளிப்பட்டாள். தனது மகனை கண்மூடித்தனமாய் ஆதரித்து அவள் பாதுகாக்கவே முனைந்தாள். மரணவீட்டின் வாசல்வரைச் சென்று மீண்டவனின் சிதைவுற்ற சித்தத்தை பொறுத்துப்போக இயலாத அளவிற்கு உளம்சிறுத்தவர்களா நீங்கள் என அவள் உரிமையுடன் கேட்டதை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தாலும், புரிந்துகொள்ள முடிந்தது. 

ஆனால் இரண்டொரு மாதத்தில், தாசில்தார் வீட்டில் பொன்னம்பலத்தால் ஏதோ பிரச்சனை நடந்து, அதன் பொருட்டு, கிழவி தனது தன்மானத்தை எல்லாம் துறந்து, ஒப்பீட்டளவில் வயதில் மிகவும் இளையவரான மணிகண்டன் மாமாவின் கால்களைப் பற்றப்போனதையும், உடைந்துபோன மணிகண்டன் மாமா, விழியோரம் நீர் ததும்ப, “ஆச்சி! என்ன ஆச்சி! உன்ன இந்த கதிக்கு ஆளாக்கிட்டு நான் உசுரு வாழ முடியுமா?” என்று சொல்லி அவளை தழுவிக்கொண்டதையும், அவர் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நான் கண்ணுற்றேன்.

ஆனால் திருக்கார்த்திகைக்கு முந்தைய இரவு எங்கள் வீட்டின் மச்சுப்படி வழியாக ஏறி, மல்லிகை மாமியின் வீட்டினுள், விடுமுறைக்கு வந்திருந்த அவளது மகள் சுபா தனித்திருந்த வேளையில், அவன் நுழைந்தபோது அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுவிட்டதாக தெருவாசிகள் உணர்ந்தனர். காட்டுப்பன்றியைப்போல் திமிறித் துடித்தவனை உடும்புப்பிடியாய் பிடித்தமுக்கிய தெருவின் ஆண்கள், அவனை தரதரவென இழுத்துச் சென்று கிழவியின் முன் நிறுத்தினர். அக்கோலத்தைக் கண்டதுமே பிரச்சனையின் தீவிரத்தை நுகர்ந்தறிந்த கிழவி, தலையில் கைவைத்தபடி தரையில் சரிந்து, கண்ணீர் மல்கும் விழிகளுடன் எதிர்நின்ற அனைவரையும் இறைஞ்சுவதைப்போல் நோக்கினாள். 

மல்லிகை மாமி சேலையால் வாய்பொத்தி விசும்பிக்கொண்டிருக்க, மெக்கானிக் சண்முகம் நெஞ்சை நிமிர்த்தியபடி முன்வந்து விஷயத்தை விளக்கினான். மிகைபோதையில் தனது மகன் செய்த அசிங்கம்பிடித்த அச்செயலை செவிமடுத்த மறுகணம் ஆற்றல் அனைத்தையும் இழந்தவளாய் துவண்டுபோனாள் அவள். கிழிபட்ட சட்டையுடன், விழிகளில் குரோதத்துடனும், உடம்பில் முறுக்கேறியும், தெருவாசிகளின் வஞ்சப்பிடியினுள் சிக்குண்டிருந்த மகனை ஏறெடுத்து நோக்கி, “ஏன்?” என்று பலவீனமாகக் கேட்டாள்.

சட்டென தன்னைப் பிடித்திருந்தவர்களை ஒரே உதறாய் உதறிவிட்டு முன்னோக்கி பாய்ந்த பொன்னம்பலம், ஒருகணம் கூட தயங்காமல் கிழவியை சப்பென்று அறைந்துவிட்டு தடதடவென வெளியேறினான்.

தெருவாசிகளால் அதன் பிறகு எதுவும் பேசமுடியவில்லை.

மறுநாள் மாலை தெருவே தீபச்சுடரின் பொன்னொளியால் மிளிர்ந்துகொண்டிருக்க, முற்றிலுமாய் இருண்டுகிடந்த கிழவியின் வீட்டுவாசலில், போதையில் நிலைமறந்து, மூச்சிழந்த எருமையைப்போல் மல்லாந்துக் கிடந்தவனை மடியில் கிடத்தி சோறூட்டிக் கொண்டிருந்த கிழவியைக் கண்டபோது அனைவரது நெஞ்சும் பிசைந்தது. மொட்டைமாடித் திண்டில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்த அப்பா, அவரிடமே பேசிக்கொள்ளும் தொனியில், “எல்லையில, கையில துப்பாக்கியோட அவன குறிபாத்தவன் கண்ணுக்கு இவனோட ஒத்த ஒடம்பு மட்டுந்தான தெரிஞ்சிருக்கும்?” என்றார்.

அந்த வாரம் முழுக்க பொன்னம்பலம் எங்கள் கண்ணில் படவேயில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் அனைவரும் ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தபோது அங்கு மதுபுட்டியுடன் வந்துசேர்ந்தான் அவன். உடல்நலம் சற்று குன்றியிருந்ததால் நான் நீரினுள் இறங்காமல், கரையில் அமர்ந்துகொண்டேன். அவ்வப்போது நிமிர்ந்து ஆற்றுப்பக்கம் பார்த்தபோது பொன்னம்பலம் ஏதேதோ புலம்பியபடி அங்கும் இங்கும் உலவிக்கொண்டிருப்பது தெரிந்தது. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் நோக்கியபோது அவன் தனது ஆடைகளைக் களைந்து, அருவருப்பூட்டும் விதமாக பெண்கள் பக்கம் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான். அவனைப் பொருட்படுத்தக்கூடாது என்று அங்கிருந்த அனைவரும் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டதைப்போல் இருந்தாலும் பழனிவேல் மாமா மட்டும் அவ்வப்போது உச்சுக்கொட்டிக் கொண்டிருந்தார்.

தோலைக் கிழித்து உள்நுழைந்திருந்த தோட்டாவினால் இடக்கையின் பெருவாரியான அசைவுகள் முடக்கப்பட்டிருந்தபோதிலும் ஆற்றின் ஒழுக்கை தடையின்றி சமாளிக்கும் திறன்கொண்டவனான பொன்னம்பலம் நீரினுள் தொப்பென குதித்து, யானையைப்போல் பிளிறிய சத்தம் கேட்டு நான் நிமிர்ந்தபோது, குளித்துக்கொண்டிருந்த தெருவாசிகள் அனைவரும் கரையேறிக்கொண்டிருந்தனர்.

வலப்பக்கம் இருந்த எருக்கஞ்செடியை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஓணான் ஒன்றை கல்லெறிந்து வீழ்த்திவிட்டுத் திரும்பியபோது வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த கழுகொன்றின் நிழல் என்னை வருடிவிட்டுச் சென்றது. மறுகணம் அவ்விடத்தில் கடும் மௌனம் சூழ்ந்தாற்போல் இருந்தது. சட்டென இடப்புறம் திரும்பியபோது தெருவாசிகளான மல்லிகை மாமியும், சுபாவும், பழனிவேல் மாமாவும், தாசில்தார் மணிகண்டனும், சண்முகமும், அப்பாவும், ரமேஷும் வரிசையாக நின்று நதியையே நோக்கிக்கொண்டிருந்தனர்.

நீர்பெருக்கின் நடுவே, அலைகளால் சுழற்றியடிக்கப்பட்ட பொன்னம்பலம் நிலைபெற இயலாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

சில நிமிட மௌனத்திற்கு பின் நெஞ்சில் கைவைத்தபடி கீழே விழுந்த மல்லிகை மாமி, “அய்யயோ, தம்பி!!!” என அலறினாள். சட்டென என்னை திரும்பிப் பார்த்த அப்பா, “வீட்டுக்கு போய்யா!” என்று உரக்கச் சொன்னார்.

நான் வீடுவந்து சேர்ந்த முப்பதாவது நிமிடத்தில் பொன்னம்பலத்தின் உடல் சிவகாமி கிழவியின் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டது. உடன் வந்த தெருவாசிகள் அனைவரும் உடைந்து, வெளிறிப்போயிருந்தனர்.

கிழவி ஒப்பாரி வைத்தாள்.

ஒருசில நிமிடங்கள் கழித்து முன்னே வந்த பழனிவேல் மாமா, “என்ன ஏதுன்னு கிரகிக்கறதுக்குள்ள ஏதேதோ நடந்துபோச்சு ஆச்சி!” என்றார்.

மல்லிகை மாமி, “நன்னாத்தான் குளிச்சுண்டு இருந்தான்… திடீருன்னு அய்யோ அம்மான்னு கூச்சல்… பட்டு பட்டுன்னு ஏதேதோ ஆயிடுத்து” என்று விசும்பியபடிச் சொன்னாள்.

பிற அனைவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் தலைகுனிந்து நின்று கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தனர்.

கிழவி எதுவும் பேசாமல் பொன்னம்பலத்தின் நெற்றியையே வருடிக்கொண்டிருந்தாள். பிறகு மெல்ல நிமிர்ந்து அங்கிருந்த அனைவரது விழிகளையும் ஒருமுறை நோக்கிவிட்டு, “சரிய்யா… சரி… பரவாயில்ல” என்றாள்.

அவளுக்கு ஒருகணம் மூச்சடைத்தது. உள்ளங்கையை மார்பின்மேல் வைத்து அழுத்திக்கொண்டபடி, “அம்மா” என்று முனங்கினாள்.

மறுநொடி அவள் முழியில் விசித்திரமான ஓர் நிதானம் குடியேறியது.

“பரவாயில்ல” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

ஒரு ஓரத்தில் என் கைபிடித்து நின்றுகொண்டிருந்த அப்பாவின் உடல் அப்போது கிடுகிடுவென அதிர்ந்தது.

தனிமைக்கூட்டினுள் உடல் ஒடுக்கி வாழும் நோயுற்ற  பட்சியென பின்வந்த நாட்களில் மாறிப்போனாள் சிவகாமி கிழவி. தெருவாசிகளும் அவள் விழிகளைச் சந்திப்பதை ஏனோ தவிர்க்கத் துவங்கினர். ஆனாலும் கிழவி இறப்பது வரை அங்கு நடந்தேறிய அனைத்து சுபநிகழ்வுகளும் அவளது ஆசியுடனே துவங்கியது. அவளும் ஒவ்வொருவரையும் கண்களில் நீர் வழிய மனதார வாழ்த்தி வந்தாள்.

கிழவி காலமான பிறகு இங்குள்ள குடும்பங்களின் இடையே தன்னியல்பாக உருவான இடைவெளியை உணர்ந்தபோதுதான் அத்தனை ஆண்டுகாலமாக, வெவ்வேறு குணம்கொண்ட எங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சரடாய் அவள் வாழ்ந்திருந்தது புரிந்தது.

***

கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளை செம்மையாய் கட்டிவந்த நிறுவனம் ஒன்றில் பணிக்கு அமர்ந்தபிறகு காலம் வெகுவேகமாய் கரைந்தொழுகத் துவங்கியது.

வேளச்சேரியில் நடந்துகொண்டிருந்த கட்டுமான பணி ஒன்றை இன்று காலை பார்வையிடச் சென்றிருந்தபோது பக்கவாட்டில் இருந்த ஓடையை ஒட்டி ஒரு சிறுமி குந்தியிருந்ததைக் கண்டேன். யார் என விசாரித்தபோது, அங்கு வேலை செய்துகொண்டிருந்த வடஇந்திய சித்தாள் ஒருவனின் மகள் என தெரியவந்தது. பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்தச் சிறுமி கீழே சேற்றில் சிதைந்திருந்த பச்சிலை ஒன்றை எடுத்து, ஓடை நீரில் கழுவி, அதன் ஒழுக்குடன் மிதக்கச் செய்தாள்.

ஏனோ அப்போது சிவகாமி கிழவியின் நினைப்பெழுந்தது.

அந்த வார இறுதியில் அம்மாவிற்கு திதி கொடுக்க ஊருக்குச் சென்றிருந்தபோது பல வருடங்கள் கழித்து அந்தத் தெருவை உற்று கவனித்தேன்.

அநேக மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.

அன்று இரவு சாப்பாட்டு மேசையில் தந்தையுடன் அமர்ந்திருக்கும்போது அங்கிருந்தவர்களைப் பற்றி பேச்செடுத்தேன். அவரவர் குழந்தைகளுடன் வாழ்வதற்காக சிலரும், தண்ணீர் பிரச்சனை முற்றிவிட்டதால் பலரும் குடிபெயர்ந்துவிட்டதாக தெரிவித்தார் அவர்.

சாப்பிட்டு முடித்து கைகழுவிக் கொண்டிருந்தபோது திடீரென மனதில் ஒரு கேள்வி உதித்தது. எச்சில் தட்டுடன் அருகில் நின்றுகொண்டிருந்த அவர் முகத்தைப் பார்த்து, “ஏன்ப்பா? அதுக்கப்பறம் சிவகாமி பாட்டி ஒருதடவ கூடவா யார்கிட்டயும் பேசல?” என்றேன்.

அவர் ஓரிரு நொடிகளுக்கு என்னை வெறித்து நோக்கினார். நான் விலகிக்கொண்டதும் மெல்ல நகர்ந்து, முன்வந்து, குழாய் தண்ணீரில் கைகாட்டியபடி, “தெருவுல எப்போதும் தண்ணி பிரச்சனதான்… ஆனா என்ன மாயமோ, கிழவி வீட்டு கிணத்துல மட்டும் எப்போதும் தண்ணி கடக்கும்… அதனால நெருக்கடி உணர்ந்ததில்ல… பொன்னம்பலம் போன பிறவு வந்த கோடையில மட்டும் ஒரே ஒரு முறை மல்லிகை மாமிய கூப்பிட்டு பேசிருக்கா அவ!” என்றார்.

நான் நெஞ்சிடிப்புடன் அவரை நோக்கிச் சரிந்தேன்.

“பூச்செடியெல்லாம் வறண்டுல்லா கடக்கு… ஏன் ஒருத்தரும் தண்ணி எடுக்க வரல? நெறைய கடக்கு, வேணும்ங்கிற அளவு எடுத்துக்கிடுங்கன்னு சொல்லியிருக்கா கிழவி” என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே அவர் குரல் மங்கியது. தண்ணீரை அடைத்துவிட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டார்.

Exit mobile version