Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

அந்த முக்கிய நபர்

மலையாள மூலம்  : டி.கே.சி. வாடுதலா

ஆங்கிலம் : எம்.வாசுதேவன் நாயர்

தமிழாக்கம் : தி.இரா.மீனா

எல்லா நாட்களிலும் அலுவலகத்திற்கு முதலாவதாக வருபவன் அவன்—’முக்கிய நபர் ’ என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் அது அலுவலகத்தின் உயர் அதிகாரியைக் குறிப்பது என்று நீங்கள் நினைக்கலாம். இந்த இடத்தில் இது அந்தப் பொருளில் இல்லை. இங்கே அலுவலகத்தின் உயரதிகாரி ’பாஸ்’ ஆவார். முதலாளியின் அந்தரங்க பியூன்தான், ’முக்கிய நபர்’ ராமன்.

அலுவலகத்திற்கு வந்தவுடன், ஒரு கோட், வெள்ளைக் கதரால் ஆன டிரவுசர்,  கோட்டின் மேல் சிவப்பு நிறப் பட்டை, ஒரு தொப்பி  என்று தன் உடைகளை மாற்றிக் கொண்டு முக்கிய நபர் என்ற ராமனாகி விடுவார்.

இந்த உடையில் ராமன் ஒரு வி.ஐ.பி ஆக , ராஜாவிற்குரிய ஒரு களையோடு, பிரகாசமான முகத்தோடு நிற்பான். இந்த உரு மாற்றத்தைப் பார்த்து அவனுடன் வேலை பார்க்கும் பியூன்கள் அதிசயப்பட்டுப் போவார்கள்.

’பாஸி’ன் அறைக் கதவை ஒட்டித்தான் ராமனின் இருக்கை. தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவன் அந்த இருக்கையில் உட்கார்ந்த பிறகு தன் மீசையின் இரு முனைகளையும் நீவும் தன் வழக்கமான செயலைத் தொடங்குவான். கால் மேல் கால் போட்டுக் கொண்டு ,அவன் உட்காரும் விதம் மனதை ஈர்ப்பதாக இருக்கும்.

’பாஸ்’ அலுவலகத்திற்குள் நுழையும் போது மட்டும்தான் அவன் எழுந்து நிற்பான். அதற்குப் பிறகு, கடவுள் காட்சி தந்தால் கூட ராமன் அவரை உதாசீனம் செய்து விடுவான்.

அவனுடைய வழிபாட்டுத் தெய்வமான ’பாஸ்’ எப்போதும் கருவறைக்குள் தான் இருப்பார். தங்களுடைய குறைகளை அவரிடம் சொல்லப் போகும் நபர்கள் முதலில் அவனுக்கு வணக்கம் செலுத்தி விட்டுத்தான் உள்ளே போக முடியும். இல்லையெனில் தலைவாசலும் திறக்காது; தெய்வத்தையும் பார்க்க முடியாது. பிறகு எந்த வரமும் கிடைக்காது.

அதனால் ,புத்திசாலிகள் முதலில் ’முக்கிய நபர் ’ராமனுக்கு வணக்கம் செலுத்தி, அவனைத் திருப்திப் படுத்தி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு போவார்கள். அதன்பிறகு விண்ணிலிருந்து பூ மாரி பொழிவது போல வேண்டுதலுக்கு ஒப்புதல் கிடைக்கும். 

இந்த அலுவலகத்தில் ’முக்கிய நபர் ’ என்ற பெயரில் கடவுள் அவதாரம் எடுத்திருக்கிறார்? உடன் வேலை செய்பவர்கள் அவனைப் பார்த்துப் பொறாமைப் பட்டாலும்– அதெல்லாம் வீண்தான். அரசாள எல்லோருக்கும் விதியிருப்பதில்லை. அவர்கள் இதை உணர்ந்திருக்க வேண்டும்.

ராமனின் உண்மைச் சக்தியை அறியாத ஒரு கண்ணியவான் ஒரு தவறு செய்து விட்டார். ’முக்கிய நபர்’ ராமனை ஒரு சாதாரணப் பியூனாக நினைத்து விட்டார்.

“நான் ’முக்கிய நபரைப் ’பார்க்க வேண்டும்” வந்தவர் வேண்டிக் கொண்டார்.

“அது முடியாது.” ராமன் வெடுக்கென்று பதில் சொன்னான்.

தன்னைத் தவிர வேறு யாரையும்’முக்கிய நபர் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுவதை அவனால் ஏற்க முடியாது.. தவிர ’பாஸ்’ பதவியிலிருந்து மாற்றி, அவரை முக்கிய நபராகக் குறிப்பிடுவது அவரைக் கீழ்மைப் படுத்துவதாகும் என்று ராமன் நினைத்தான்.

“நான் வெகு தூரத்திலிருந்து வந்திருக்கிறேன்.” என்று அவர் மென்மையாகச் சொன்னார்.

வந்திருப்பவர் ஒரு கண்ணியவான் என்பதை ஒரே பார்வையில் அவன் உணர்ந்து விட்டான். அது மட்டுமே போதுமானது. அவனுடைய முக்கியத்துவத்தை அவர் புறக்கணிக்கும் போக்கு அவனுக்குச் சந்தோஷம் தரவில்லை.

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” எரிச்சலோடு கத்தினான்.

“இந்த விசிட்டிங் கார்டை அவரிடம் காட்டுங்கள்” பையிலிருந்து எடுத்து அவனிடம் தந்தார். பளபளப்பான தாளில் அழகாக இருந்த அந்தக் கார்டை, முக்கிய நபர் ராமன் மிக நுணுக்கமாகப் பார்த்தான். அந்தக் கார்டோடு சேர்த்து என்ன தரவேண்டும் என்பதை அறியாதவர் அந்த மனிதர் என்பது வெளிப்படை.

“அந்தக் கார்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” அவரை ஏளனமாகப் பார்த்து விட்டு ’முக்கிய நபரான’ ராமன் சொன்னான். ஓ..பெரிய மனிதர், கார்டைக் காண்பிக்கிறார். அதோடு சேர்த்து ஒரு ரூபாயை வைத்துத் தர, இந்த மனிதருக்குத் தெரியாதா? என்ற எண்ணம் மனதில் ஓடியது. அதை வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் முகத்தில் வெளிப்படுத்துவதில் அவன் சிறிதும் தயக்கம் காட்டவில்லை.

“பாஸ் மிக மிக பிசியாக இருக்கிறார்,” கார்டை உள்ளே எடுத்துக் கொண்டு போக முடியாததற்கு அவன் சொன்ன காரணம்.

அவர் சில கணங்கள் திகைத்து நின்றார். ஏமாந்தவராய்த் திரும்பிப் போனார்.

அவர் வெளியேறிய வாசலைப் பார்த்து ’முக்கிய நபர் ’ ராமன் மிகவும் சந்தோஷம் அடைந்து மீண்டும், மீண்டும் சிரித்துக் கொண்டான்.

பத்து நிமிடங்கள் கடந்த பிறகு உள்ளே போன் அடிக்கும் சப்தம் கேட்டது. எழுந்து கதவருகே போய் நின்று எட்டிப் பார்த்தான்.

போனை எடுத்து, “ஹலோ, யார் பேசுவது? நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்?…என்ன! இங்கே வந்திருந்தீர்களா! … தயவு செய்து இப்போதே இங்கு வாருங்கள். பியூனின் அனுமதி இல்லாமல், நேரடியாக நீங்கள் உள்ளே வரலாம்.” பாஸ் வைத்து விட்டார்.

முழு உரையாடலையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

பார்வையாளர் திரும்பி வந்த போது முக்கிய நபர் ராமன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். அவர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் விட்டார்.

பியூனின் பொறுப்பற்ற தன்மைக்கு முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பாஸ் பேச்சைத் தொடர்ந்தார். தனக்கு எந்தப் பாதிப்பும் தராத ஒரு விஷயம் அது என்பதாகச் சிரித்து, கண்ணியவான் அதை ஒதுக்கி விட்டார்.

மூச்சை அடக்கிக் கொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக். கேட்க முயன்றான். அவனுக்கு எதுவும் புரியவில்லை. மிக அபூர்வமாகச் சிரிப்பினிடையே தீவிரமான விஷயம் பற்றிய முணுமுணுப்பான பேச்சாக இருந்தது.

அவர் பேசி முடித்து விட்டு புறப்படுவதற்கு எழுந்தார். பாஸூம் அவர் கூடவே எழுந்து, கதவு. வரை வந்தார். திரும்பவும் சந்திக்கலாம் என்று உறுதி சொல்லி, கை குலுக்கி அவர்கள் பிரிந்தார்கள்.

பாஸ் தன் சேரில் சாய்ந்து உட்கார்ந்து, தலையில் கை வைத்து ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். பின் பெருமுச்சோடு நிமிர்ந்து பார்த்தார். அந்தக் கணத்தில் அவர் முகம் கடுமையாக இ்ருந்தது.

“ராமன்! ” குரல் கர்ஜனையாய் வெளிப்பட்டது. பட்டனை அழுத்தும் நேரத்திற்கு முன்பே அவன் அவர் முன்னால் நின்றான். அவனுடைய செயல்கள் எல்லாம் தானியங்கி வேகத்தில் இருந்தன. பாஸ் அவனைக் கடுமையாக முறைத்துப் பார்த்தார். அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

“நீ கதவின் அருகில் இல்லையா ராமன்?”

ஆமாம். அங்குதான் இருந்தேன்.”

“இப்போது இங்கிருந்து புறப்பட்டுப் போனவரை நீ பார்த்தாயா?”

“ஆமாம். பார்த்தேன்.”

“சிறிது நேரத்திற்கு முன்னால் அவர் இங்கிருந்தார் அல்லவா?”

“ஆமாம். அவர் இருந்தார்.”

“பிறகு நீ ஏன் அவரை உள்ளே விடவில்லை?”

“பாஸ் பிசியாக இருந்ததால்.”

“யார் அப்படிச் சொன்னது?”

“எஜமானர் வேலையில் மூழ்கி இருந்ததை நான் கவனித்தேன்.”

”அவர் தன் விசிட்டிங் கார்டைக் காண்பிக்கவில்லையா?”

“உங்களிடம் அதைக் காட்டச் சொன்னார்.”

“நீ என்ன செய்தாய்?

“இப்போதைக்கு அது முடியாதென்று நான் சொன்னேன்.”

“நீ அப்படிச் சொன்னாயா?”

“ஆமாம். அப்படித்தான் சொன்னேன்.”

மேலே பாஸ் எதுவும் பேசவில்லை, ராமனும்தான். அவர் பல்லைக் கடிப்பது அவனுக்குக் கேட்டது.

“நீ ஒரு முட்டாள்!” ஏற்கவுமில்லாமலும், மறுக்கவுமில்லாமலும் ராமன் நின்றான். பாஸ் தொடர்ந்தார்:

“நான் உன்னை என்ன செய்யப் போகிறேன் என்று உனக்குத் தெரியுமா?” 

ராமனுக்குத் தெரியவில்லை. எஜமானர் மனதிலிருப்பதை அவன் எப்படி யூகிக்க முடியும்? அவன் மௌனமாக நின்றான்.

“உன் தொப்பியை கழற்றிக் கீழே வை !” பாஸ் கட்டளையிட்டார்.

அதிர்ந்தான். அவன் வேலை நீக்கம் செய்யப்படுவானா? தெரியவில்லை. ராமன் அவர் சொன்னதைச் செய்தான்.

“இங்கே வா.”

அவன் முன்னே வந்தான்.

பாஸ் தன் சேரிலிருந்து குதித்தெழுந்து மின்னல் வேகத்தில் அவனருகே வந்து வலது கையால் அவன் முகத்தில் அறைந்தார். ராமன் ஓர் எதிர்ப்பும் காட்டாமல், எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், கன்னத்தை நீவிக் கொண்டு பாஸையே பார்த்தபடி நின்றான்.

பாஸ்: ஓர் எஜமானன் தன் பணியாளரிடம் இப்படி நடந்து கொள்ளக்  கூடாது இல்லையா?”

ராமன் : ஆமாம்.

பாஸ்: அப்படியானால் ராமனின் அபிப்பிராயமும் அதுதானா?

ராமன் : ஆமாம்.

பாஸ்: சரி. இதை ஓர் அயோக்கியன் இன்னொரு அயோக்கியனுக்குச் செய்ததாக நினைத்துக் கொள்.

ராமன்: சரி.

ராமன் என்ற ’முக்கிய நபர் ’ தொப்பியை அணிந்து கொண்டு வெளியே போனான். இரண்டு, மூன்று சக பணியாளர்கள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தனர். அநேகமாக உள்ளே என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

தெரிந்து கொள்ளட்டும். அவர்கள் தெரிந்து கொள்வதால் என்ன ஆகி விடும்? ஓர் அயோக்கியன் என்று அவன் அழைக்கப்பட்டாலும் கூட பாஸ் அவனைத் தனக்குச் சமமாக நினைத்திருக்கிறார். இந்த பாதகர்களைப் பற்றி நான் ஏன் கவலைப் படவேண்டும்!

ராமன் தனது நிரந்தரமான நாற்காலியில் உட்கார்ந்தான். வாங்கிய ஓர் அடியால் சிவந்திருந்த அவன் முகத்தில் வீக்கத்தின் சாயல் தெரிந்தது. ஒரு காலை இன்னொரு கால் மேல் போட்டுக் கொண்டு அவன் மீசையை முறுக்கிக் கொள்ளும் தன் வழக்கமான வேலையைச் செய்யத் தொடங்கினான்.

“இப்போதும் கூட அந்த தோரணை மிக அசத்தலாக இருக்கிறது. ராஜாவிற்குரிய தகுதி அந்த முகத்தில் பொங்குகிறது.” என்று சக ஊழியர்கள், மற்ற பியூன்கள் முணுமுணுத்தனர்.


டி.கே.சி. வாடுதலா தலித் இலக்கியத்தின் முன்னோடி. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு, ராணுவத்திலும் பணி புரிந்தவர். கேரளாவின் தலித் மக்களின் வாழ்க்கையை முதன் முதலில் சிறுகதைகளில் வெளிக் கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு. Changalakal  Nurungunnu அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்ததாக மதிப்பிடப் படுகிறது.

நன்றி: Malayalam Short Stories ,   An Anthology

Kerala Sahithya Academy, Trichur 1960

Exit mobile version