யுரோப்பின் வரலாறு, அதன் ராஜாக்கள், ராணிகள் மற்றும் அவர்களது செயல்கள் எதுவும் என் கவனத்தை ஈர்த்ததில்லை. உலகின் பல சுற்றுலா பயணிகளுடன் நான் ஒத்துப் போகாததும், பெரிதாகப் படவில்லை. வண்ணப்படக் கலையில், கட்டிடங்களைப் படம் பிடிப்பது ஒரு தனி ஆளுமை. யுரோப்பிற்கு பயணம் செய்தால், அந்த ஆளுமை தேவை என்று மட்டும் தெரிந்து வைத்திருந்தேன். அத்துடன், அங்குள்ள கோடைகாலச் சுற்றுலா கூட்டங்களையும் தாண்டி இந்த நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் புரிந்து வைத்திருந்தேன். யுரோப்பிய பயண ஆர்வலர்கள் என்னுடைய இந்த அதிகப் பிரசிங்கித்தனத்தை பொருட்படுத்தாது, மேலும் படிக்கவும்.
கோடையில், சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்ற யுரோப்பிய நாடு ஆஸ்ட்ரியா (Austria). என்னுடைய ஆஸ்ட்ரீய அனுபவங்கள் சற்று விநோதமானது. நான் முன்னமே சொன்ன வராலாற்றுப் பெருமை நிறைந்த ஒரு நாடு ஆஸ்ட்ரியா. வியன்னாவிற்கு (Vienna, ஆஸ்ட்ரியாவின் தலை நகரம்) சென்று வரலாறு அதிகம் பிடிக்காத நான், அங்கு என்ன செய்வது? எந்த சமுத்திரமும் தொடாத ஆஸ்ட்ரியாவில் கடற்கரை என்ற பேச்சே இல்லை. பெரும்பாலும் ஜெர்மன் மொழி பேசும் நாட்டில் என்னுடைய ஆங்கிலத்திற்கு அதிகப் பயன் கிடையாது. வியன்னா செல்லும் முன்பே, விமான நிலையத்திலிருந்து நான் தங்கவிருக்கும் ஹோட்டலுக்கு ஒரு டாக்சியை, இணையம் மூலம் பதிவு செய்து வைத்திருந்தேன். நேரத்திற்கு சற்று முன்பே சென்றுவிட்ட என் விமானம், இந்த ஏற்பாட்டைச் சற்று சிக்கலாக்கியது. கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு, டாக்சி ஓட்டுனருக்குச் செய்தி அனுப்பினேன். மிகத் தெளிவான ஆங்கிலத்தில், விமான நிலையத்தின், இந்தப் பகுதிக்கு வந்து விடுங்கள். இதோ என்னை அடையாளம் காண, என் வண்ணப்படம் என்று படம் அனுப்பியிருந்தார். சொன்னது போல, அந்த இடத்தில், அவர் வந்து, எங்களைத் தன்னுடைய டாக்சிக்கு அழைத்துச் சென்று, வியன்னா ஹோட்டலுக்கு பயணமானோம். வழி முழுவதும் (ஒரு 45 நிமிடப் பயணம்) அவர் பேசிய மொழி எனக்குச் சற்றும் புரியவில்லை. அவர் சற்றுத் தடுமாறி, ஆங்கிலத்தில், அவருடைய குடும்பத்தாருடன் துருக்கி மொழியில் பேசுவதாகச் சொன்னார்.
அது சரி, எப்படி, இத்தனைத் தெளிவாக ஆங்கிலத்தில் செய்திகள் அனுப்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் விநோதமானது. அவருக்கு ஆங்கிலம் மிகக் கொஞ்சமே தெரியுமாம். துருக்கியிலிருந்து (Turkish) வந்த அவர், ஜெர்மன் மொழியை நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டார். ஆஸ்ட்ரியாவில், நடைமுறை வாழ்க்கைக்கு அது போதுமானது. என் போன்ற சுற்றுலா பயணிகளுடன் உரையாட, அவருடைய திறன்பேசியில், ஒரு செயலி மூலம், ஜெர்மனில் பேசினால், ஆங்கில சொற்களை உருவாக்கி, வாட்ஸ் ஆப்பில் அனுப்பி, அவர் வியாபாரத்தைப் பெருக்க வழி கண்டுள்ளார். ஆஸ்ட்ரியாவின் முதல் தொழிநுட்ப அறிமுகம், நன்றாகவே இருந்தது. நான் தங்கிய ஹோட்டல், நகரின் மையப் பகுதியில் இருந்தது. சில முக்கிய சுற்றுலா தளங்கள் அருகிலேயே நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. என்னைக் கவர்ந்த ஒரு தளம், அந்நாட்டின் பாராளுமன்றக் கட்டிடம். அங்கு சென்றால், அத்தனைக் கூட்டம். எங்கு திரும்பினாலும் மக்கள் செல்ஃபி எடுத்த வண்ணம் இருந்தனர். இந்த இடத்தில் எடுக்கும் எந்த வண்ணப்படமும், மக்கள் இல்லாமல் இருக்காது. ஓரளவு ஏமாற்றமடைந்த எனக்கு, பாராளுமன்றத்தின் வாயில் பகுதியில் கூரையில் இருந்த அழகிய ஓவியங்கள் கவனத்தை ஈர்த்தது. மேலே கூரையை நோக்கி படம் பிடித்த ஒரே ஆள், அந்நாளில் நான் மட்டும்தான் என்று காலரில்லாத டீ ஷர்ட்டைத் தூக்கி விட்டுக் கொண்டேன்!
வியன்னாவில் எங்கு திரும்பினாலும் மொசார்ட் மயம். அவருக்காக அங்கு பல மியூசியம்கள் உள்ளன. அவர் பிறந்த ஊர், சால்ஸ்பர்க் (இதை ஆஸ்ட்ரியாவின் பண்ணைப்புரம் என்று நான் சொல்வதுண்டு) என்ற நகரமாக இருந்த போதிலும், அவர், பெரும்பாலும், தன்னுடைய இசையை பெரும்பாலும் வியன்னாவில் அரங்கேற்றினார். அருங்காட்சிசாலைகளில் ஈர்ப்பு இல்லாத எனக்கு, அங்குள்ள அழகிய அரண்மனைகளைப் பார்க்க வேண்டும் என்று மட்டும் தோன்றியது. அதைப்பற்றி சொல்லுமுன், வியன்னாவின் போக்குவரத்து பற்றி சொஞ்சம் தெரிந்து கொள்ளுதல் அவசியம். வியன்னாவின் போக்குவரத்து எனக்கு கனடாவின் டொரோண்டோ நகரத்தைநினைவுபடுத்தியது. இங்கு நகர மையத்தில், பெரும்பாலானவர்கள் சைக்கிளில் பயணித்தனர். அதைத் தவிர ட்ராம்கள், சப்வே ரயில்கள் மற்றும் பஸ்கள் எங்கும் சென்று கொண்டிருந்தன. பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வது என்று முடிவு எடுத்தேன். ஆனால், மொழி தெரியாத்தால், சற்றுத் தயக்கமாக இருந்த்து. அத்துடன், டொரோண்டோவைப் போல, பல சப்வே ரயில் பாதைகள், சற்று குழப்பின. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்ல, ரயில் பாதைகளை, சில டெர்மினல்களில் மாற்ற வேண்டும்.
நான் தங்கியிருந்த ஹோட்டல், விருந்தினர்களுக்காக, அவர்களது ரிசப்ஷனில், பொதுப் போக்குவரத்து டிக்கெட்டுகளை விற்றார்கள். நான் செல்ல வேண்டிய அரண்மனையின் பெயரைச் சொல்லி, அவர்களிடம், எப்படி அங்கு செல்ல வேண்டும் என்று விசாரித்தேன். அங்கு பணியாற்றிய இளைஞர் அழகாக வியன்னாவின் பொதுப் போக்குவரத்தைப் பற்றி எனக்குப் புரியும்படி விளக்கினார். நான் செல்ல வேண்டிய ஷான்ப்ருன் அரண்மனைக்கு (Schonbrunn Palace) எப்படிச் செல்ல வேண்டும் என்றும் விளக்கினார். இதற்கு, அந்த ஹோட்டலிலிருந்து, ஒரு பஸ், ஒரு ட்ராம், இரு ரயில்களில் பயணிக்க வேண்டும். நான் சற்று தயங்கியதை கவனித்த அவர், இன்று மாலை, நான் அங்கு செல்கிறேன். சரியாக 4 மணிக்கு இங்கு வந்து விடுங்கள். நான் உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றார்.
மாலை 4 மணிக்கு, அந்த இளைஞர், கோட் சூட்டைத் துறந்து, டீஷர்ட் மற்றும் ஷார்ட்ஸிற்குத் தாவியிருந்தார். அபுதாபியில் வாழ்ந்த அந்த இளைஞர் எங்களுக்கு வியன்னாவின் போக்குவரத்தை மிக அழகாக கூடவே பயணம் செய்து விளக்கினார். அரேபிய இளைஞரான அவர், ஏன் வியன்னாவில் வேலை செய்ய வேண்டும்? அவருடைய பள்ளிப்படிப்பு எல்லாம் அபுதாபியில். அவருடைய பெற்றோர், இன்னும் அபுதாபியில் வசிக்கிறார்களாம். 40 ஆண்டுகள் உழைத்தும், யு.ஏ.இ. –ன் (U.A.E) மொழியைப் பேசியும், எழுதியும், குடியுறிமை பெறாத தன் பெற்றோரைக் கண்ட இந்த இளைஞர், ஆஸ்ட்ரியாவிற்கு உயர் படிப்பிற்குப் வந்திறங்கியுள்ளார். ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொண்டு, அங்கு Hotel Management பட்டம் பெற்று, நான் தங்கியிருந்த ஹோட்டலில் பணி புரிகிறார். அவருக்கு, ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் அரபிக் மொழி தெரிந்திருப்பது அவருடைய தொழிலில் ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் மேலும் பேச்சு கொடுத்ததில், அவருடைய குறிக்கோள், இன்னும் 4 வருடத்திற்குள் ஆஸ்ட்ரீய குடியுரிமை பெற்று, தன் பெற்றோரை வியன்னாவிற்கு அழைத்து வருவது. இவருடன் பேசுகையில் என்னுடைய பல அரபிய பிம்பங்கள் உடைந்தன. முதல் பிம்பம், அரபு நாடுகள், மற்ற அரபு நாட்டவரை நன்றாக நடத்தும் என்பது. இரண்டாம் பிம்பம், அரபு நாட்டவர், மேலை நாடுகளுக்குச் சென்று பட்டம் பெற்று, கடும் உழைப்பை நாடாதவர்கள் என்பது. மூன்றாம் பிம்பம், பயனில்லாமல் உழைக்கும் பெற்றோருக்கு ஓய்வு கொடுத்து அவர்களை காக்காதவர்கள் என்பது.
வியன்னா மக்கள், அதிகம் தங்களது செல்வத்தை வெளிக்காட்டாதவர்கள் என்றே பட்டது. சுறுசுறுப்பாக, நகரம் எங்கும் பொதுப் போக்குவரத்தில் பயணித்த வண்ணம் இருக்கிறார்கள். ஹோட்டல் இளைஞர், எங்களுக்கு வியன்னாவின் மிக முக்கிய சப்வே ரயில் பாதைகள், ட்ராம் மற்றும் பஸ் பற்றி பயணத்தில் விளக்கிக் கொண்டே வந்தார். ஒரு முக்கிய ரயில் ஸ்டேஷனில் என்னிடம், “இங்கு இறங்கினால், டான்யூப் நதியில் படகுகள் மூலம் பயணிக்கலாம். இங்கிருந்து பக்கத்து நாடான ஸ்லோவாக்கியாவிற்குக் (Slovakia) கூடப் பயணம் செய்யலாம்” என்றார்.
நான், முந்தைய தினம், ரயிலைப் பிடித்து, வியன்னாவிலிருந்து ஸ்லோவாக்கியாவில் (Slovakia) உள்ள ப்ராடிஸ்லாவாவிற்குச் (Bratislava) சென்று திரும்பியிருந்தேன். இந்த விஷயம் தெரிந்திருந்தால், அவசியம், டான்யூபில் படகின் மூலம் சென்றிருப்பேன். மிக அழகான பாரோக் அரண்மனை அங்கு பிரபலம். நான், டாக்சியைப் பிடித்து, ரயிலில் பயணம் செய்து, ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாய் அந்த அரண்மனையைப் பார்த்துத் திரும்பியிருந்தேன். அரண்மனையிலிருந்து டான்யூப்பை படம்பிடித்த போது, அந்தப் படகுகளைப் பார்த்திருந்தேன். ஸ்லோவாக்கியா, ஆஸ்ட்ரியாவை விடப் பின்தங்கிய நாடு. அங்கு ரயில் நிலையம், சாலைகள் மிகவும் குழப்பமானதாகப் பட்டது. மேலும், வியன்னாவைப் போல, அங்கு மக்கள் அதிகம் சுற்றுலா பயணிகளுடன் பேசுவதில்லை. ஸ்கோவேக்கியா பயணம், திடீரென்று, இரண்டு மணி நேரத்தில், ஒரு வளர்ந்த நாட்டிலிருந்து, வளரும் நாட்டிற்கு வந்த அனுபவம் யுரோப்பில் மட்டுமே சாத்தியம். இன்றுவரை, டான்யூப் படகுப் பயணத்தை மேற்கொள்ளாதது ஒரு குறையாகவே உள்ளது.
சப்வே மூலம், கடைசியாக ஊருக்கு சற்று வெளியே இருக்கும், ஷான்ப்ருன் அரண்மனை வரை வந்த இளைஞர், தன்னுடைய காதலியைச் சந்திக்கச் சென்றுவிட்டார். மிகப் பெரிய அந்த மாளிகை மற்றும் சுற்றியுள்ள பூந்தோட்டத்தை பார்த்துவிட்டு, எந்த பிரச்சினையும் இல்லாமல், சப்வே, ட்ராம் மற்றும் பஸ்ஸைப் பிடித்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம். ரயில் நிலைய பார்க்கிங்கில் எங்கும் மின்சக்தி கார்களுக்கு இலவச மின்னேற்றத் தளங்கள் என் கவனத்தை ஈர்த்தது. வட அமெரிக்காவில் வாய் கிழிய பேசும் அரசியல்வாதிகள் இதை ஏன் பின்பற்றக்கூடாது என்று மனம் ஏங்கியது. இருந்த மற்ற நாட்கள் வியன்னாவில் எங்கும் பொதுப் போக்குவரத்து வழியாக சில இடங்களைப் பார்த்தோம். ஆஸ்ட்ரியாவின் மிக முக்கிய வருமானம் சுற்றுலா பயணத் தொழில். அங்குள்ள மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு தாராளமாக உதவுகிறார்கள். பெரும்பாலும் ஜெர்மன் பேசும் நாட்டில், சுற்றுலா பயணிகளுடன், ஆங்கிலத்தில் அவர்கள் பேசுவது வரவேற்கத்தக்க ஒன்று. பாரீஸ், ரோம் மற்றும் பெர்லின் சென்றால், சுற்றுலா கூட்டம் அதிகமிருந்தும், அவர்கள் ஆங்கிலம் பேசுவதில்லை.
என்னுடைய ஆஸ்ட்ரியா பயணம், அங்குள்ள மக்களின் எளிமை, மற்றும் வளரத் துடிக்கும் அரபு இளைஞர்கள் என்று இந்நாளைய சிந்தனைகளே மிஞ்சி இருந்தது. பழைய வரலாற்றுப் பெருமைகள் எதுவும் என்னைத் தொட்டதாகத் தெரியவில்லை.
