Site icon சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

வ ஸ்ரீ கவிதைகள்

உலகளந்தோனுக்கும்
அளக்க ஓர்
உலகு தேவை.
நமது சாபமும்
தீர்வும்
சத்ய தரிசனமும்,
அதன் மாயையும்,
பாபமும், புண்யமும்,
பரம சுகமும்
தாபமும் பொழுதெலாம்
வடித்த கண்ணீரும் – அரிதாய்
வெடித்த சிரிப்பும், வெறுமையும்
சூதும், சுதந்திரப் பேச்சும்
யாதுமே இவண்தான், யாதுமே இவண்தான்.

உலகின் முலையருந்தி
உயிர் வாழும் நம்
அழுக்கும் அழுக்கைப் போக்குமாம்
முழுக்கும்
அனைத்தும் இங்குதான், அனைத்தும் இங்குதான்.

காதல், மரணம்,
சொர்கம், நரகம், மோட்சம்
எல்லாம் இங்குதான், எல்லாம் இங்குதான்.

காலை விழித்ததும்
கண்ணைத் திறந்ததும்
துணையைப் பாரும்.
தந்தையை, தாயை
குழந்தையை
வேலைக்காரரை
எசமானரை
பக்கத்துக் குடிசைப்
பாயில் உறங்கும்
சிசுவை, மாட்டை
கோழியைப் பன்றியை
மரத்தை, காக்கையை
ஜடத்தை
தெரிவன எல்லாவற்றையும்
பாரும்.
கேட்பன எல்லாவற்றையும்
கேளும்.
அவற்றில்
உமக்குள்
போகும்
சாவி
உள்ளது.


இது எழுதும்நேரம்.
கபாலம் பிளந்து
கவிதை கொப்புளிக்கும்.
அமைதியின் வளைந்த வழி அரித்து
கடல் ஆர்பரிக்கும்.
சந்திரன் குளிர்ச்சியாய்க் காய்வான்.
மேகங்களின் வெள்ளையை
அலைகள் விழுங்கும்.
வான் நீலத்தை நீர்.
இயற்கை எண்ணம்.
எண்ணத்தால் இயற்கையை
சிருஷ்டிக்கவே முடியாது.
எண்ணத்தால் சிருஷ்டிக்கவே முடியாது.
மகா மேடை.
மைதானம்.
நீர்ப் பேரூர்.

ஜன்னல் திரைச்சீலை
காற்றைப் பிரசவிக்கும்.
பூக்கும் அன்பில்
துவைதம் மரிக்கும்.

Exit mobile version