இந்த ஆண்டு, கோடை விடுமுறை சென்று திரும்பிய பின், என்னுடைய அமெரிக்க சக ஊழியருடன் (ச.ஊ) நடந்த உரையாடல், சுவாரசியமானது.
ச.ஊ: “Welcome back. விடுமுறைக்கு எங்க போயிருந்தீங்க?”
“யூகான் (Yukon territory) என்ற கனேடிய மாநிலத்திற்கு சென்றிருந்தேன்”
ச.ஊ: “ரொம்ப கூட்டமா இருந்ததா?”
“இந்தக் கிண்டல் வேண்டாமே!”
ச.ஊ: “என்ன சொல்றீங்க? நான் ஆர்லேண்டோவுக்கு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போனா, அங்க அப்படிக் கூட்டம்.”
”கனடாவில், ஒரு பெரிய நகரத்திலிருந்து 50 கி.மீ. தள்ளிப் போனால், அதிகமாக கூட்டத்தைப் பார்க்க முடியாது. சரி, உங்களுக்குப் புரியும்படி சொல்ல முயற்சிக்கிறேன். யூகான் மாநிலத்தின் மொத்த மக்கட்தொகை 46,000. அதில் 36,000 மக்கள், அதன் தலைநகரமான வைட்ஹார்ஸில் (Whitehorse), வசிக்கிறார்கள்.”
ச.ஊ: “யூகான் எவ்வளவு பெரியது? நீங்கள் வசிக்கும் ஊரிலிருந்து விமானத்தில் எவ்வளவு மணி ஆகும்?”
“யூகானின் பரப்பளவு, கிட்டத்தட்ட அமெரிக்காவின் கலிஃபோர்னியா அளவு. கலிஃபோர்னியாவில் 40 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு, அதே நிலப்பரப்பு அளவில், தலைநகரைத் தவிர 10,000 மக்கள் வசிக்கிறார்கள்! இப்பொழுது புரிந்திருக்கும், ஏன் நீங்கள் கிண்டலடிக்கிறீர்கள் என்று நான் சொன்னது நான் வசிக்கும் ஊரிலிருந்து விமானப் பயணம் 6 மணி நேரம்!”
ச.ஊ: “என்னது, 6 மணி நேரமா? அமெரிக்காதான் பெரிசுன்னா, உங்க ஊர் இன்னும் பெரிசு போல இருக்கே. நல்ல வேளையாக, அது ஒரு ஜி,எம். -ன் SUV என்று மட்டும் நினைத்திருந்தேன்”
கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய மாநிலம் பிரிடிஷ் கொலம்பியா. யூகான் மாநிலம், பிரிடிஷ் கொலம்பியாவின் வடக்கே உள்ளது. யூகானின் மேற்கே உள்ளது அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம். பசிபிக் நேரம் இங்கு பின்பற்றப்பட்டாலும், பசிபிக் சமுத்திரம் தொடாத ஒரு நிலப்பரப்பு யூகான். இதனுடைய ஒரே கடல் பகுதி, அதன் வடக்கே உள்ள ஆர்க்டிக் சமுத்திரம்.
சரி, ஆறு மணி நேரம் விமானப் பயணம் செய்து பார்க்க அப்படி என்ன உள்ளது? கனடா எங்கும் பரவிக் கிடக்கும் இயற்கை அழகுதான். நான் ஒரு இயற்கை படப்பிடிப்பாளன் (landscape photographer) என்பதால், இது கரும்பு தின்ன கூலி போன்ற விஷயமாகியது. இயற்கை அழகு, கனடா முழுவதும் கொட்டிக் கிடப்பதால், ஏன் யூகான் போன்ற ஆர்க்டிக் எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்? ஒவ்வொரு பகுதிக்கும் இயற்கை அழகு மாறுபடும். கனேடியக் கிழக்குப் பகுதிகளில் அதிகம் மலைகள் கிடையாது. மேற்குப் பகுதிகளில், மலைகள் அதிகம். மலைகளுடன், நதிகள், ஏரிகள் மற்றும் பள்ளத்தாக்குகள் அழகு சேர்கின்றன. அத்துடன், இது போன்ற பகுதிகளில், வன விலங்குகளும் அதிகம்.
கேட்பதற்கு முன்னமே சொல்லி விடுகிறேன் – யூகானில் குளிர் என்பது மிகச் சாதாரணம். டிசம்பருக்குப் பிறகு, -50 முதல் -60 டிகிரி செல்சியஸ் என்பது அவர்களுக்குப் புதிதல்ல. இந்தக் கடுங்குளிர்ப் பகுதியில் வேலை செய்ய, கனடாவில் தனியான ஊக்கத் தொகை உண்டு. உணவு மற்றும் அன்றாடத் தேவைகள், பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், கோடைக் காலம் மிகவும் வித்தியாசமானது. நான் சென்ற ஜூலை மாதத்தில், நாளொன்றிற்கு, 20 மணி நேர வெளிச்சம். மாறாக, குளிர்காலத்தில், சில நாட்களுக்கு தொடர்ந்து நாளொன்றிற்கு வெறும் 2 மணி நேர வெளிச்சம்தான். அத்துடன், அந்நாட்களில் அந்த 2 மணி நேரத்தில் சூரியனைப் பார்க்கக்கூட முடியாது. சும்மா பெயருக்கு 2 மணி நேர வெளிச்சம்!
யூகானில் வசிக்கும் ஒருவருடன் பேச்சு கொடுத்ததில், எப்படி அவர்கள் குளிர்காலத்தில் அங்கு வசிக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். குளிர், அனைத்து கனேடியர்களுக்கும் பரிச்சயம். ஆனால், வெறும் 2 மணி நேர வெளிச்சம் என்பது ஒரு ஆர்க்டிக் அம்சம். நீண்ட, இருண்ட குளிர்காலத்தில், வீட்டில், பல பிரத்யேக மின் விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை அவர்களுக்கு சூரிய ஒளி தரும் Vitamin D -ஐ கொடுக்கிறது. வீட்டிற்குள் பிரகாசமாக வைத்திருப்பதால், அவர்களின் மனநிலையும் ஓரளவிற்கு சரியாகிறது. சூரிய ஒளியின் மிக முக்கிய ஒரு அம்சத்தை, யூகான் பயணம் கற்றுத் தந்தது.
யூகானில் எங்கு திரும்பினாலும் மலைகள். கனடாவின் 14 மிக உயர்ந்த மலைகள் இங்குள்ள க்ளுவானே தேசிய பூங்காவில் உள்ளது (Kluane National Park). பூங்கா என்றவுடன் பொடி நடையாய் போய்விடலாம் என்று நினைக்க வேண்டாம். இந்தப் பூங்காவின் பரப்பு, 22,000 சதுர கிலோமீட்டர்கள் – அதாவது, கிட்டத்தட்ட, இந்தியாவில் உள்ள மேகாலயா (22,429) அல்லது மணிப்பூர் (22,327) மாநிலத்தின் அளவு. இந்தப் பூங்காவின் உள் பகுதிகளுக்குச் சாலைகள் இல்லாததால், (இது கனடாவின் தேசியப் பூங்காக்களில் சாதாரணம்), பல நாட்கள் கால்நடையாகப் பயணம் செய்தோ அல்லது, குட்டி விமானங்களில் பயணம் செய்தோ பார்க்க முடியும். இந்தப் பூங்காவில் கணக்கற்ற பனியாறுகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் அடங்கும். இந்த இரு முறைகளுக்கும் என்னிடம் நேரமில்லாத்தால், இந்தப் பூங்காவின் அழகை சாலைகள் இருக்கும் பகுதிகளில் மட்டுமே படம் பிடிக்க முடிந்தது.
இரண்டு இயற்கை அம்சங்கள் ஆர்க்டிக் மாநிலங்களின் முக்கிய அம்சம்:
இங்குள்ள மலைகளில் அதிகம் மரங்கள் இருப்பதில்லை. ஆர்க்டிக் குளிருக்கு வழக்கமான மரங்கள் பிழைக்காது
இங்குள்ள நதிகள், மிகத் தூய்மையாக, அழகான நீலப்பச்சை (Teal) நிறத்தில் உள்ளன. சற்று ஆராய்ந்ததில் தெரிந்த விஷயம், அங்குள்ள மண்ணில் கலந்துள்ள கால்சியம் கார்பனேட் (Calcium carbonate deposits), நதி மற்றும் ஏரிகளை அழகாக்கி விடுகின்றன.
தலைநகரமான வைட்ஹார்ஸில், யூகான் நதி ஓடுகிறது. இந்த நதி, கிட்டத்தட்ட 4,000 கிலோமீட்டர் ஓடி, அலாஸ்கா வழியாக, பெரிங் கடலில் (ரஷ்யா அருகில் Bering Sea) கலக்கிறது. இந்த நதியின் வேகத்தைப் பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். கனடா எங்கும் கொட்டிக் கிடக்கும் நீர் மின்சார மையங்களில், இதுவும் ஒன்று, அதில் எந்தப் புதுமையும் இல்லை. ஆனால், இங்கு உள்ள அணை, மிகவும் வித்தியாசமானது. பல மில்லியன் ஆண்டுகளாக, இந்த நதி நீரில் பிரவாகத்திற்கு எதிராக, சால்மன் மீன்கள் நீந்தி, நதியின் தென்கிழக்குப் பகுதிகளில் முட்டை இடுகின்றன. பின், நதியின் பிரவாகத்தோடு கடலுக்கு 4,000 கி.மீ. நீந்திச் செல்லுகின்றன. இது இயற்கையின் நிகழ்வு.
நதியின் நடுவே அணையைக் கட்டி ராட்சச டர்பைன்களை நிறுவினால், டர்பைன்களில் அடிபட்டு மீன்கள் இறந்துவிடும். இதற்காக யூகான் மக்கள் ஒரு அருமையான தீர்வைப் பயன்படுத்துகிறார்கள். அணையின் ஒரு புறத்திலும், அதைத் தொடர்ந்து நதியின் அதே பக்கத்தில், மீன்களுக்கு என்று ஒரு ஏணியை (இது ஒரு 400 மீட்டர் நீளமுள்ள உயரத்தைப் படிப்படியாகக் குறைக்கும் ஏணி) உருவாக்கியுள்ளார்கள். இதை, Fish Ladder என்று அழைக்கிறார்கள். இதனால், சம்பந்தப்பட்ட மூன்று விஷயங்களும் வெற்றிகரமாக நடக்கிறது. மீன்களுக்கு, பல்லாயிரம் வருடங்கள் பரிச்சயமான முட்டையிடும் பாதை, நதி நீர் பயனுக்குப் பின் அதன் வழியே பயணம், யூகான் மக்களுக்கு மின்சாரம். இதைப் போன்ற சுற்றுச் சூழலை மரியாதை செய்யும் முயற்சிகள் எங்கும் பெருக வேண்டும்.
யூகானில் நான் சற்றும் எதிர்பாராத விஷயம், பாலைவனம். வருடத்தில் 10 மாதங்கள் கடும் குளிர் நடுக்கும் ஒரு ஆர்க்டிக் பகுதியில் பாலைவனம் எப்படி சாத்தியம்? பல மில்லியன் ஆண்டுகள் பனியாறுகளால் மூடியிருந்த நிலப்பரப்பு பனியை இழக்க, அதன் கீழிருந்த பாலைவனம் ஒன்று இன்றும் நமக்குப் பார்க்கக் கிடைக்கிறது. இந்தியாவில் தார் பாலைவனம் போல் பெரிதல்ல என்றாலும், இங்கு பார்க்க நேர்ந்த எதுவும் மற்ற பாலைவனங்களில் சாத்தியமில்லை. பாலைவனத்திற்கே உரிதான மணல்பரப்பு, அதன் பின், பச்சை பசேலென பெரிய மலைகள், மலைகளின் மேல் உறைந்த பனி! இந்தக் காட்சியைக் காண, அலாஸ்காவிற்கு வரும் Cruise கப்பல் பயணிகள், பஸ் மூலம் அன்றாடம் வந்து பார்க்கிறார்கள். இந்தப் பாலைவனம் அருகே உள்ள ஊரின் பெயர் கார்க்ராஸ் (Carcross, YT). கார்க்ராஸ் மக்களின் நகைச்சுவை உணர்வு அலாதியானது. அங்கு வரும் பெரும்பாலான அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்காக, “இது உங்கள் 51 –வது மாநிலமல்ல!” என்று சுற்றுலா கடைகளில் எழுதி வைத்திருந்தனர்!
அலாஸ்கா மற்றும் யூகான் மலைப்பகுதிகள் மிகவும் அழகானவை என்பதில் புதிய விஷயமல்ல. அங்கு பஸ்ஸில் பயணம் செய்த பொழுது, ஒரு விந்தையான விஷயத்தை, மலைச்சாலைகளில் கவனித்தேன். சாலை ஓரத்தில் 200 அடிக்கு ஒரு முறை இரு பக்கங்களிலும் கம்பங்கள் இருந்தன. அந்தக் கம்பங்களின் மேல், சாலையை நோக்கி ஒரு தகடு இருந்தது. அதில் பாதி சிகப்பாகவும், மற்ற பாதி வெள்ளி நிறத்திலும் இருந்தது. இத்தகைய சாலைக் குறிகள் மற்ற மலைப்பகுதி சாலைகளில் கவனித்திருக்கிறேன். இரவில் பயணம் செய்யும் வண்டிகள், சாலையின் திருப்பத்தை அறிந்து பயணிக்க, இவ்வகை flouroscent குறிகள் இருப்பது உண்டு. ஆனால், இந்தக் குறிகள், ஏன் கம்பத்தின் மேலே இருக்கின்றன? அலாஸ்காவின் எல்லையில் பஸ்ஸை நிறுத்திய டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன்.
டி: “நீங்கள் நினைப்பது போல, இந்தக் குறிகள் கார்களுக்கு அல்ல”
“சரி, ஏன் கம்பத்தின் மேல், குறியை வைத்திருக்கிறார்கள்?”
டி: “Welcome to the Arctic. இங்கு, குளிர்காலத்தில் எங்கும் பனி, எப்பொழுதும் இரவு. எங்கு சாலை முடிகிறது, எங்கு பள்ளத்தாக்கு ஆரம்பிக்கிறது என்று கடும் இருளில், சொல்வது கடினம். இந்தச் சாலைகளில், ஒரு பெரிய பனிபொழிவுக்குப் பிறகு, முதலில் பயணம் செய்வது, பனியை அப்புறப்படுத்தும் லாரிகள் (snow ploughs). இருட்டில் மெதுவாகப் பயணம் செய்யும் இந்த லாரிகளுக்கு உதவ, இந்த ஏற்பாடு! இந்த லாரிகளின் மேல் மின்விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். லாரியை ஓட்டும் டிரைவருக்கு, ஒளியில் வெள்ளி தெரிந்தால், எல்லாம் சரி. சிகப்பு தோன்றினால், பயங்கரப் பள்ளத்தாக்கு. இந்தக் குறி ஒவ்வொரு 200 அடிக்கும் இருப்பதால், அதைப் பார்த்து, மிகவும் ஜாக்கிரதையாகப் பயணிப்பார்கள். இங்கு குளிர்காலம் வித்தியாசமானது. கொஞ்சம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.”
“மிக்க நன்றி”.
யூகான் பயணம் மிக அழகான ஒரு கனேடிய மாநிலத்தைக் காணக் கிடைத்த்து மட்டுமல்லாமல், அங்கு வாழும் மனிதர்களின் வித்தியாசமான வாழ்கை முறைகளையும் ஓரளவு புரிந்து கொள்ள உதவியது.
