Site icon சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

புஷ்பால ஜெயக்குமார் நான்கு கவிதைகள்

மரம்

ஒரு காலத்தில்
அந்த மரங்களின் கீழ்
நின்றிருக்கும்போது
மரத்தின் மாற்றத்தை
நானறிந்திருந்தேன்
அதை என் மனதில்
படம் பிடித்து வைத்திருந்தேன்
சிறிய மரங்கள் என் வாழ்வை எளிமைப்படுத்தியது
பெரிய மரங்கள் என்னை மண்டியிட வைத்தது
இலைகள் அசைந்து
சூரிய ஒளி
பொற்காசுகளென மின்னியது
பாடசாலையின் ஆசிரியனாக
அது இருந்த நினைவுகள்
காற்றில் கரைந்து விடவில்லை
கடவுளர்கள் அமர்ந்த கிளைகள்
இயற்கையின் பலகணி
மரத்தால் காட்டப்பட்ட வீடு
மாற்றம் என்பது முற்றிலும்
உண்மையின் அடிப்படையில் நிகழ்வது
நான் அப்பொழுது அங்கு
எங்கு வேண்டுமானாலும்
செல்லும் சுதந்திரத்தை அடைந்திருந்தேன்
எனக்குக் கற்றுக்கொடுத்தவர்கள்
இப்பொழுதும் சரி அப்பொழுதும் சரி
உயிருடன் இல்லை


நட்பு

ஒருவரை விட்டு ஒருவர்
பிரிவதற்காகத்தான்
மனிதர்கள் ஒன்று சேர்கிறார்கள்
எது சரி எது தவறு என்று
வழக்கம்போல் யாருக்கும் தெரியாது
தவிர்க்க முடியாத சந்திப்பு
விருப்பத்துடன் பிரிதல்
இரண்டு கடிகாரங்கள்
ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை
வாழ்க்கையின் அங்கம்
நாடகத்தின் காட்சி
காய்கள் நகர்த்தப்படுகின்றன
சொக்கட்டான் உருட்டப்படுகிறது
பல காரணங்கள் இருந்தது
இப்பொழுது ஒரே ஒரு
காரணம் தான் இருக்கிறது
ஆட்டம் ஆரம்பம்
உண்மையில் சொல்லப்போனால்
இது நட்பின்
ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டது
அது தோற்றுப்போகிறது
நீடிக்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறது
நீடித்தால் அர்த்தமில்லாமல் போய்விடுகிறது
நன்கு தெரிந்தவன் என்பதைத்தவிர
வேரொன்றும் இல்லை இப்பொழுது
நலம் விசாரித்துக் கொள்ளலாம்
மரபான முறைப்படி
மற்றபடி நினைவில் இருப்பதை
எப்படி மறக்க முடியும்


அது

நான் தான் அது
அது தான் நான்
எல்லாவற்றின் மீதும்
இருக்கிறேன் நான்
அது போலவே அல்லது
அது போல் ஒன்றாகவே
இருக்கிறேன் நான்
நான் உனக்குக் கட்டுப்பட்டவன்
உன் பிரமாண்டம் ஆபத்தானது
பெரிய போர்வையை
ஷாமியானா பந்தலைப் போல்
சாவு வீடு மற்றும் விஷேசத்திற்கு
அமைத்திருந்தார்கள்
வரைந்து கொண்டிருக்கும் ஓவியம்
நடந்து கொண்டிருக்கும் வாழ்க்கை
மாறிக்கொண்டிருக்கும் மனம்
ஒரு கவிஞன்
இறந்து தூசி ஆகினான்
அவன் அப்படித்தான்
எழுதினான் அவன் கவிதையில்
இப்பொழுது இருப்பது போல்


அவள்

அவள் நோயுற்றிருந்தாள்
எல்லோரும் இருந்தும்
அவள் தனியாக இருந்தாள்
அவள் என் வருகைக்காகக் காத்திருந்தாள்
அவள் வீட்டுத் தோட்டத்தில்
பூக்கள் செடிகொடியிலிருந்து
மண்ணில் வீழ்ந்த வண்ணம் இருந்தது
நானும் அவளும் அங்கு
அமர்வதற்காக அது காத்திருந்தது
நிழலின் அமைதி ரகசியத்தைப் பேணியது
எத்தனை ஆண்டுக் காலம் அது நீடிக்கிறது
என்பதை துல்லியமாகச் சொல்ல
அவன் இருக்கும் மட்டும்
மற்றும் இப்பிரதியை முன்னிட்டு
நானும் அவளும்
அவள் வீட்டில் எங்கும் இருந்தோம்
வீடு முழுக்க பிரவேசிக்க
என்னை அவள் அனுமதித்தாள்
இத்தனை நடந்தும்
ஒன்றும் தெரியாதது போல்
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்

Exit mobile version