Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

டாம் மோரேஸ்: இரண்டு கவிதைகளும் ஒரு குறிப்பும்

ஆங்கிலம் : டாம் மோரேஸ்
தமிழாக்கம் : நம்பி கிருஷ்ணன்

கிராக்ஸ்டன்

கண்ணில் வெய்யில் கூசுகிறது.
வசந்தம். ஜன்னல்கட்டைக்கு நத்தை எண்ணெய் பூசுகிறது..
செழித்திருக்கின்றன என் செண்பகங்கள்.
பாறைக் குவியலின் எவரெஸ்ட் மீது
பூங்குருவியின் ஆவேசத் தத்தல்கள்.
புற்களனைத்தும் ஒத்து தலைசாய்க்கின்றன.

வசந்தம். தென்றல் பயணிக்கிறது
கெண்டை குளிர்காயும் குளங்கள் மீது
அவற்றின் பிம்பங்களைக் கலைத்தபடி.
என் மேஜையிலிருந்து கவனிக்கிறேன்.
என் வயதுதான் அவற்றுக்கும்.
வெய்யில் பூத்த என் கண்கள் நோக்குமிடமெல்லாம்
பழுதடைந்த நீரூற்றுகள், மரித்த
தோட்டக்காரர்களின் கருங்கற் தூபிகள்,
மாறியபடி, அவ்வாறே இருந்தபடி.

வழக்கமான நேரம்.
ட்ரேத்தட்டு கதவில் மோதுகிறது.
என் ஆள் சேவகன் க்ராக்ஸ்டன் நுழைகிறான்,
கருப்பு மேலங்கியில் உயரமாக
தட்டில் கோப்பையுடன்.
காத்திருக்கிறான் நான் குடித்துமுடிக்கும் வரை.
வறண்ட பெரும் கட்டைவிரலால்
மைக்கிண்ணத்தை என் பக்கம்.
தள்ளுகிறான். ‘முதலாளி, எழுதுங்கள்.’

இப்போது அவன் இங்கில்லை.
காலை என்னை மெதுவாக விட்டுச் செல்கிறது.
கூனிட்ட என் கையோ சும்மா இருக்கிறது.
தூபிகளின் பீடங்களிலிருந்து
நிழல்கள் அகன்று விரிகின்றன.
பூங்குருவி படபடவென்று தத்தி
ஜன்னல் அடிக்கட்டையிலிருந்து கூன் நத்தையை தட்டிவிடுகிறது.
காற்று செம்பங்கிகளை வெட்டிச் சாய்க்கிறது.
என்ன வானிலை இது?
இலையுதிர்காலம். மாலை.

வழக்கமான நேரம்.
என் ஆள் சேவகன் க்ராக்ஸ்டன் நுழைகிறான்,
மெத்துத் திரைசீலைகளை அலையென அசைக்கிறான்
பொறி தெறிக்கும் ஓசைகளை எழுப்பியபடி.
அவன் வறண்ட பெரும் கரம்
காயத்தின் கட்டென என் கரத்தின் மீது. என்னைத் தூக்குகிறான்
படிக்கட்டுகள் க்ரீச்சிட நாங்கள் ஏறிச் செல்கிறோம்.

என்னைக் குளிப்பாட்டித் தளர்ந்த
பட்டாடைகள் அணிவிக்கிறான்.
வழவழப்பான படுக்கை விரிப்புகளுக்கிடையே
சத்தமின்றி என்னைக் கிடத்துகிறான்.
என்னை இருளில் விட்டுச் செல்கிறான்.
நான் வேண்டாதது
சிறிது நேரத்தில் நிகழ்ந்து முடியும்.

வழக்கமான நேரம்.
என் ஆள் சேவகன் க்ராக்ஸ்டன் நுழைகிறான்
செவிக்க முடியாத அளவிற்கும் மெதுவாக
கருப்பு மேலங்கியில் உயரமாக.
அவன் வறண்ட பெரும் கரங்கள்
படுக்கைக்கு எடுத்து வருகின்றன
மடிக்க்கப்பட்ட நாப்கினுடன் டிரேதட்டில்
சூப்கரண்டியையும், கிண்ணத்தில் குருதியையும்.

அம்மாவிற்கு ஒரு கடிதம்

I

அம்மா, தனித்திருக்கும்
உன்னிடம்தான் பேசுகிறேன்.
குப்பைக் கடலில்
ஏழு தீவுகள் குந்தியிருக்கும் இடத்தில்
ஜபமாலைகளுடன் நீ ஜபிக்கிறாய்.
சந்தையில் ஓலமிட்டவர்களின் சாவுகள் மீது
உயர்ந்தெழும் ரோமாபுரியின் ஏழு குன்றுகள் போல்
குன்றின் மீதிருக்கும் உன் வீடும்
நம்பிக்கையளிப்பதில்லை.
உடலில் சிறுத்து செல்வத்தில் செழித்த என் தாத்தா
அக்குன்றின் மீது ஒரு வீட்டைக் கட்டினார்.
நீ இன்னமும் துக்கப்படும் வகையில் அவர் மரித்தார்,
என்னிமிருந்து ரோமைக்காட்டிலும் தொலைவாக.
புனிதர், சொர்க்கத்தை சென்றடைந்திருப்பார்.
கண்ணிகள் எவரையும் பொருட்படுத்தாத என்னை
அவர் வெட்கப்பட்டிருப்பார்.
நீயோ வெட்கப்படவில்லை.
துருவேற்றும் வெய்யிலில்
உன் தேவாலயத்துடனும்
அரிதாகவே சந்திக்கும் உன் மகனின் நினைவுடனும்
நீ தனித்து அமர்ந்திருக்கிறாய்.
தோட்டத்தில் இறைவன் கற்பழித்த
நீல மனைவியின் கரங்களுக்காக
அவன் பிழைப்பதற்காக நீ பிரார்த்திக்கிறாய்.
என்னை நீ புரிந்துகொள்ளவில்லை.
சுத்தமான இக்குளிர் தேசத்தில்
என் வாழ்வை சுத்திகரித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு சிறு அலமாரியை நிரப்பிக்கொண்டிருக்கிறேன்.
என் புத்தகங்களைக் கொண்டு. குழந்தையாய் இருக்கையில்
பலமுறை நேர்ந்ததைப் போல் நான் அழுதுகொண்டிருப்பதை
நீ பார்க்க நேர்ந்தால் நீ அறிந்திருப்பாய்
கண்ணீர் சிந்த எனக்குப் பல காரணங்கள் உண்டென்று.
என்னைக் கண்டு நானே வெட்கப்படுகிறேன்
உன்னைக் கண்டு வெட்கப்பட்டதற்காக.

II

உன் கண்கள் என் கண்களை ஒத்திருகின்றன.
கடைசியாக உற்ற போது அவற்றில்
என் மொத்த தேசமும் தெரிந்தது.
ஜபங்களில் ஒளிந்து கொள்ளும்
ஒரு தோல்வியுற்ற கனவு,
பிணங்களாலான ஒரு ஜனத்தொகை,
மெதுவான ஆழ்நதிகளை நெரிக்கும்
எரிந்த உடல்கள், அழுகி நாறுவதற்க்கு முன்
நிலத்தில் புதைக்கப்படும் உடல்கள்,
அல்லது பிணந்தின்னிக் கழுகளுக்காக பளிங்கு கோபுரத்தில்
வெய்யிலில் வெந்து கொண்டிருக்கும் உடல்கள்.
நீ ஜபித்துக் கொண்டிருக்கிறாய், உன்னைச் சூழ்ந்திருக்கும்
பிணங்களை கண்டும்காணாது.
துயரம் உன் கண்களை மறைத்து விட்டது.
உன் கனவோ வெறிச்சோடிக் கிடக்கிறது.
என்னைத் தினமும் அழைத்தாலும்
அதனுள் என்னால் செல்ல இயலாது.
உனக்குத் தெரியும் நான் திரும்பிவர மாட்டேனென்று.
என் மீறல்களுக்காக என்னை மன்னித்துவிடு.

குறிப்பு:

பின்காலனிய இந்திய ஆங்கிலக் கவிதை முன்னோடிகள் வரிசையில் நிசிம் எஸக்கியல், அடில் ஜுஸ்ஸாவாலா, ஏ.கே ராமானுஜன் போன்றவர்களோடு டாம் மோரேஸுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு என்பதில் சந்தேகமில்லை. அவரை வாசிப்பதற்கு முன் ஜெமினி வரிசையில் அவர் அறிமுகப்படுத்திய இளம் கவிஞர்களையே (விஜய் நம்பீஸன், ஜீத் தாயில், ஜயதீர்த் ராவ், சீ.பி. சுரேந்திரன்) நான் முதலில் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். சுவாரசியமான எழுத்தாளர்,. Green is the Grass என்ற கிரிக்கெட் குறித்த எழுத்துக்கள் 1951-இல் அவரது பதின்மூன்றாவது வயதில் புத்தகமாக வெளிவந்தது நம்மை வியக்க வைத்தால், பிரசித்திபெற்ற ஹாதோர்ண்டன் கவிதைப் பரிசை பத்தொன்பதாவது வயதிலேயே A Beginning என்ற தொகுப்பிற்காக அவர் வென்றது நம்மை அவ்வியப்பை விஞ்சும் ஒரு பேராச்சரியத்தில் ஆழ்த்துகிறது. Poems, John Nobody, Beldam etc போன்ற கவிதைத் தொகுப்புகள் அடுத்தடுத்து வந்தன. அதன்பின் ஏதோ ஒரு மனத்தடையால் ஆட்கொள்ளப்பட்டது போல், கவிதை என்று வருகையில், அவர் மௌனம் காத்தார். 1983-இல்தான் Absences என்ற அடுத்த தொகுப்பு சுய-பதிப்பில் வெளியிட்டார். 1987-இல் அவரது Collected Poems 1957-1987 வெளிவந்தது. காதல், போர், காமம், நாடுகடத்தல், வேர்கள்/ பற்றுக்கோடின்மை, ஏக்கம், வேட்கை, க்ரியாசக்தியும் அதன் முடக்கங்களும் என்று பல தளங்களில் இவர் கவிதைகள் விரிகின்றன. நமக்கு அவர் கவிதையே பிரதானம் என்றாலும் அவர் உண்மையில் ஒரு பன்முக ஆளுமை: பதிப்பாசிரியர், நிருபர் (வியட்நாம், அல்ஜீரியா, பாலஸ்டைன்-ஜெரூசலம் என்று போரால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் அவர் போர் நிருபராக பணியாற்றினார்), மிகச் சுவாரசியமான நினைவுக்குறிப்பாளர் (Gone Away, My Son’s Father, Never at Home என்ற மூன்று நினைவுக்குறிப்பு புத்தகங்களும் 2002-இல் A Variety of Absences என்ற ஒரு ஆம்னிபஸ் தொகுப்பாக வெளிவந்தன), சரிதையாளர் (இந்திரா காந்தி, சுனில் கவாஸ்கர்), மொழிபெயர்ப்பாளர், நகைச்சுவைமிக்க உரையாடல்களுக்கு பெயர்போனவர், நடிகை லீலா நாயுடுவின் கணவர்…. என்று பல பல ஆளுமைகள்.

மேலே மொழிபெயர்ப்பில் அளிக்கப்பட்டிருக்கும் கவிதைகளுக்கு வருவோம். கிராக்ஸ்டன் கவிதையில் கவிதை எழுதுவதற்கான உந்துதல், அதற்கான ஆயத்தங்களைச் செய்வதைக் குறித்த தயக்கம், க்ரியா சக்தி, அதன் முடக்கம், போன்ற துருவங்களுக்கிடையே கவிஞன் அலைக்கழிக்கப்படுகிறான். வெய்யில், வசந்தம், செண்பகங்கள், குருவியின் தத்தல், தலைசாய்க்கும் புற்கள் என்று இயற்கையின் நம்பிக்கையில் தொடங்கும் கவிதை இரண்டாவது சரணத்தின் முடிவில் மரித்த தோட்டக்காரனின் படிமத்துடன் இருள்கிறது. இங்கு தோட்டக்காரனை கற்பனா சக்தியின் அடையாளமாக நாம் கற்பனை செய்து கொள்ளலாம் (கார்டனர் கவிதையில் இது வெளிப்படை). இந்த இருண்மைப் படிமத்துடன் (அதைக் கண்டு அஞ்சி) நாம் வெளியிலிருந்து உள்ளுக்குச் செல்கிறோம். அங்கு கிராக்ஸ்டன் என்ற ஒரு ஆளுமைப்படுத்தப்பட்ட உருவத்தைச் சந்திக்கிறோம். கவிஞனின் சேவகன். கவிஞனைக் கவிதை எழுதச் செய்வதே அவன் வேலை. கிராக்ஸ்டன் என்ற பெயர் இங்கிலாந்தில் புத்தகங்களை முதலில் பதிப்பித்த வில்லியம் கிராக்ஸ்டனையும் நினைவு படுத்தலாம். பெல்டாம், ஜேசன் போன்ற பிற கவிதைகளில் வரும் மோரேஸின் பதிலிகளுடன் இணைத்து இவனை வாசித்துப் பார்க்கலாம். இலையுதிர் காலத்தில் குருதியை அருந்தவும், வசந்தத்தில் கவிதையை எழுதவும் வற்புறுத்தும் இந்த விசித்திர சேவகனை நாம் மோரேஸ் தனக்குத்தானே செய்துகொள்ளும் ஒரு ஃபாஸ்டிய ஒப்பந்தத்தின் குறியீடாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். படைப்பாளி என்பவன் வாழ்வின் குருதியை உறிஞ்சி கலையைப் படைக்கும் ஒரு இரத்தக்காட்டேரிதான் என்று சந்தேகப்படவைக்கும் படிமத்தையும் இது உடனழைத்து வருகிறது. குருதி மையாக மாறுவதை யோசிக்கையில் கலை எனும் மாயாஜாலத்திற்காக நாம் கொடுக்க வேண்டிய விலையைப் பற்றியும் இக்கவிதை யோசிக்கத் தூண்டுகிறது.

தாயைக் குறித்த முரண் உணர்வுகளுக்கிடையே அடுத்த கவிதை ஊடுருவிச் செல்கிறது. மோரேஸின் அன்னை பெரில் டிமோண்டே தீவிரமான ரோமன் கத்தோலிக்க மதப்பற்றுள்ளவர் என்பதையும். மோரேஸின் இளம்பருவத்திலேயே மன நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதையும் கருத்தில் கொண்டால் கவிதையின் பின்புலம் நமக்குத் தெளிவாகி விடும். அம்மாவின் பிரிவால் கனிவுக்கு உட்படும் மகன் அக்கனிவை மதநிந்தையால் அடியறுக்க முயல்கிறான். அதை உணர்ந்து வெட்கப்படவும் செய்கிறான். கத்தோலிக்க தேவாலயம் அதன் உறுப்பினர்களால் ஓர் அன்னையாக உருவகிக்கப்படுகிறது (Mother Church) என்பதையும் இங்கு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்

நிந்தனையிலும் வெட்கத்திலும் தொடங்கும் கவிதை சமரசத்துக்காக ஏங்கும் மன்னிப்பு கோருதலுக்கு இரண்டாம் பகுதியில் பயணிக்க முயல்கிறது. ஆனாலும் சிந்தனையும் அறிவும் கண்டறிந்த தரிசனங்களிலிருந்து வழுவ மறுக்கின்றன. திரும்ப வேண்டும் என்று உணர்வு சில சமயங்களில் வேண்டினாலும் சிந்தனை அதை அடியறுக்கிறது. இப்பகுதியில் நாடு என்பதைத் தாய்நாடு என்ற மேலர்த்தங்களுடனேயே நாம் வாசிக்கிறோம். இறுதி வரியில் ஒரு பிரார்த்தனையைப் போல் அமைந்திருப்பது கவிதைக்கு ஒரு அபாரமான முரணழகை அளிக்கிறது.

என் அம்மாவுக்கு இதுவரையிலும் நான் ஒரு கடிதம்கூட எழுதியதில்லை. எழுதத்தூண்டுவதற்கும் எனக்கான ஆள்-சேவகனும் இதுவரையில் அமையவில்லை. என் தாத்தாவுக்கு நெல்லையில் சந்நிதித் தெருவில் ஒரு வீடிருந்தது, வைணவர் தமிழறிஞர். பிரபந்தத்தையும் கம்பனையும் ஒதிக் கொண்டே சொர்க்கத்துக்குச் சென்றிருப்பார். என் கேவலமான தமிழையும், பற்றற்றான் பற்றினை நான் பற்றாதிருப்பதையும் கண்டு அவர் வெட்கப்பட்டிருப்பார். அவர் மகளோ அவளுக்குப் புற்றுநோய் அளித்த கடவுள்களை பூஜை செய்து கொண்டிருப்பாள், என் நலத்துக்காக. நான் பிரார்த்தனை செய்யும் ஆள் இல்லை என்று அவளுக்குத் தெரியும். ஆனால், செய்யாது விட்ட என் மீறல்களை அவள் ஏற்கனவே மன்னித்திருப்பாள்.

நண்பர் நட்பாஸுடன் இக்கவிதைகளை வாட்ஸாப்பில் பேசிக்கொண்டிருந்த போது முதலில் கிராக்ஸ்டன் கவிதை புரியவில்லை என்றார். நான் மேலே என் குறிப்பில் அளித்திருக்கும் சில சுட்டுதல்களை அவருக்குச் சுட்டிக்காட்டினேன். கவிதையின் திரை அவருக்குச் சற்றே விலகியது. உரையாடலின் முடிவில் அவர் கூறியது:

சில கவிதைகள் நாம் சமைக்கும் உணவைப் போன்றவை. முதலில் கடுகு சேர்க்கிறோம், பின்னர் எண்ணெய்யில் கொஞ்சம் பருப்பு, பிறகு சிறிது உப்பு, மஞ்சள், பெருங்காயம், மிளகாய்த்தூள், இப்படி. கடுகிலிருந்து மிளகாய்த்தூள் வரை படிப்படியாக முன்னேறும் பொருட்படுத்தும் பரிமாணமேதும் இல்லை. நேர்கோட்டுத் தன்மை இல்லை, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கும் படிமத்திலிருந்து படிமத்துக்கும் பொருட்சுவை அதிகரித்து “இந்த கவிதை இதைப் பற்றியது…” என்று படிகமாகும் தர்க்கச் சங்கிலி இல்லை.

எல்லாமே மற்ற எல்லாவற்றுடனும் சேர்ந்து, ஒன்றின் மேல் ஒன்றாகவோ அல்லது ஒன்றுக்கு அருகாக வைக்கப்பட்டோ, ஒருங்கே உருவாகும் பொருளின் கலவையே இக்கவிதைகள். கவிதையை அதன் ஒட்டுமொத்த முழுமையிலேயே நாம் பொருட்படுத்திக் கொள்கிறோம். அது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க நாம் அதைப் பிரித்தெடுப்பதில்லை அல்லது அது எங்கு செல்கிறது என்று பார்க்க வரி வரியாகப் பின்தொடருவதில்லை. ஒரு படி பின்வாங்கி அதை முழுமையாகப் பார்க்கிறோம், அதற்கான நமது எதிர்வினை, நம்மிடம் பின் தங்கும் , அதை அர்த்தமுள்ளதாக்கும் வார்த்தைகளும் படிமங்களும், இதுதான் கவிதை.

அது நம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் அனுபவமாக இருக்கிறது. ஆனால் நாம் அனைவரும் வெவ்வேறு கவிதைகளைப் படிக்கும் அளவுக்கு வேறுபடுவதில்லை. நாம் ஒரே கவிதையைத்தான் படிக்கிறோம், ஆனால் பின்சுவை, அது ஒற்றிருப்பதில்லை. 

ஆசிரியரின் கூற்றுகளுக்கு எதிராகக்கூட,  நம்மை முக்கியமானவர்களாக உணர விரும்பினால்,  இந்த பின்சுவையை, நாம் ரசம் என்றோ சாரமென்றோ அழைக்கலாம். ஒரு வகையில் இதைத்தான் இக்கவிதைகளும் தேடுகின்றன. 

மொழியாக்கம் / குறிப்பு – நம்பி கிருஷ்ணன்

மூலநூல்கள் / மேலும் படிக்க:
Moraes, Dom, Selected Poems, Penguin Modern Classics, 2012

Exit mobile version