Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

இரவு

இலைச்சரம் இறக்கி
அமைதியாய்
இருக்கும் மரம்.
மின் விசிறியின்
மென் காற்று
ஜடம் உயிர் கலப்பு.
இரவு நேரக் காவலரின்
விசில் ஒலி.
தூரத்து வாகனத்தின் துரிதம்.
உறங்குவதாய்ப்
பேர் பண்ணும் ஊர்.
விழிப்பைக் கலக்கும்
நான்.


வாடும்
மலர்
வாடும்
வரை
வாழும்.


நிலவினொடு
கனவிலொரு
குளிர்ந்த
சூரியன்.


உள்ளே
எங்கேயோ
இந்தப் பிரபஞ்சத்துக்குள்
ஒரு பேனா மூடி அளவேயான
குப்பி உள்ளது.
உள்ளதா?
கடல் கொண்டும் அதை
நிரப்ப முடிவதில்லை.
கண்ணைப் பளிச்சிட்டு
அன்பில்
திருப்தி விசாரிக்கும்
பெண்கள்
அதை ஒருகால் நிரப்பாவிடினும்
அது இருப்பதை
அறிவிப்பர்,……..
மௌனமாய்…..
மர்மமாய்……..

Exit mobile version