
மலையாளம் : காரூர் நீலகண்டப் பிள்ளை
ஆங்கிலம் : கீதா கிருஷ்ணன் குட்டி
தமிழாக்கம் : தி.இரா.மீனா
’சார், இங்கு வைத்திருந்த இந்தக் குழந்தையின் சாப்பாட்டைக் காணவில்லை,’ இரண்டாம் வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் சொன்னார். தலைமை ஆசிரியர் எழுதுவதை நிறுத்தி விட்டுத், தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்தார். ஏற்கெனவே குழந்தையின் கன்னங்களில் பதிந்திருந்த கண்ணீர்த் தடத்தில் மீண்டும் கண்ணீர் உருண்டு வருவதைக் கண்டார். பசியில் வாடியிருக்கும் அந்த இளம் முகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார்.
’சாப்பாட்டுப் பொட்டலத்தை எங்கே வைத்திருந்தாய்?’ பள்ளியின் மானேஜர்
கேட்டார். ’ அந்த அறையில்தான்,’ அழுகையினூடே குழந்தை சொன்னது.
’அவன் எப்போதும் எங்கே வைப்பானோ அங்கேதான் வைத்திருந்தான். இன்னொரு குழந்தை அதே இடத்தில் வைத்திருந்த அதன் சாப்பாட்டுப் பொட்டலம் பத்திரமாக இருந்தது.’ என்று வகுப்பு ஆசிரியர் விளக்கினார்.
’நீ எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து விட்டாயா ? அது எங்குமே இல்லையா?’
’எல்லா இடங்களிலும் தேடி விட்டேன். எங்குமேயில்லை.’ குழந்தை சொன்னது.
’வகுப்பு முடிந்தவுடனேயே அதை நீ பார்க்கவில்லையா? ஆசிரியர் கேட்டார்.
’நான் பார்த்தேன்.’
’இது மிகவும் வெட்கத்திற்குரியது! சாப்பாட்டைத் திருடத்தான் குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்களென்றால் அது மிகவும் வேதனையானது!’ என்றார் ஆசிரியர்.
’எல்லாக் குழந்தைகளும் வரட்டும். நான் அவர்களிடம் கேட்கிறேன். யார் அப்படிச் செய்தார்கள் என்று கண்டுபிடிப்போம். இனிமேல் இதுமாதிரி யாரும் செய்யக் கூடாது என்பதை உறுதி செய்வோம். பையா, அழாதே. உனக்குப் பசித்தால், பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போ’ தலைமையாசிரியர் குழந்தையைச் சமாதானப் படுத்தினார்.
ஆசிரியர்: தனியாகப் போய் விடுவாயா?’
குழந்தை: இப்போது நான் போக விரும்பவில்லை.’
’அப்படியானால், போய் உன் வகுப்பில் உட்கார்ந்திரு.’ தலைமையாசிரியர் சொல்ல, குழந்தை போனது.
இந்தச் சம்பவம் பற்றி வகுப்பாசிரியர், தலைமையாசிரியரிடம் மிக விரிவாகப் பேசினார், இதை மிக கவனமாக எடுத்துச் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்ள, தலைமையாசிரியர் உடன்பட்டார்.
மதிய இடைவேளை முடிந்து, மணியடித்தது. குழந்தைகள் வெளியே போயிருந்ததால், களைப்பைப் போக்கிக் கொள்ள காலியான பெஞ்சுகளில் கால் நீட்டிப் படுத்திருந்த ஆசிரியர்கள் எழுந்து, கண்களைத் தேய்த்துக் கொண்டு தம் இடங்களில் உட்கார்ந்து கொண்டனர்.
பசியையும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வியர்க்க, விறுவிறுக்க தங்கள் வகுப்பறைகளுக்குள் வந்தனர். கஞ்சி அல்லது சோறு சாப்பிட்டு விட்டு வந்திருந்த அதிர்ஷ்டவசமான குழந்தைகள், வீட்டில் எதுவும் அன்று சமைக்கவில்லை என்று தெரிந்தே வந்திருந்த அதிர்ஷ்டமற்ற குழந்தைகள் என்று எல்லோரும் உட்கார, பெஞ்சுகள் நிரம்பின. சோற்றுப் பொட்டலங்களச் சாப்பிட்ட குழந்தைகள் திருப்தியாகவும், சாப்பாடு இல்லாத குழந்தைகள் பக்கத்திலுள்ள கிணற்றுத் தண்ணீரில் வயிற்றை நிரப்பிக் கொண்டும், தங்களிடத்தில் உட்கார்ந்து கொண்டனர். சாப்பாட்டுப் பொட்டலத்தைத் தொலைத்திருந்த குழந்தையும் அவர்களில் ஒருவன்.
பள்ளியிலுள்ள நான்கு வகுப்பறைகளிலும் சோற்றுப் பொட்டலத் திருட்டுக் கதை பரவியது. ஒவ்வொரு குழந்தையும், தனது யூகிக்கும் ஆற்றலை, மற்ற குழந்தைகளை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தது.
’சார், நான்தான் அந்தப் பொட்டலத்தை எடுத்துச் சாப்பிட்டேன் என்று பால கிருஷ்ணன் சொல்கிறான்,’ ஒரு குழந்தை புகார் செய்தது. பின் திரும்பிப் பார்த்து, ’ நீதான் திருடன், அதைத் திருடிச் சாப்பிட்டு விட்டாய்! திருடா! ’ என்று அதே மூச்சில் தன்னைக் குற்றவாளியாக்கியவனிடம் சொன்னது.
’பப்பு தான் அதைச் சாப்பிட்டிருக்க வேண்டும்,’ கோபாலன் ஜோசப்பிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
’நான் இனிமேல் என் சாப்பாட்டை இங்கே வைக்க மாட்டேன் ப்பா.’ மத்தாய் சொன்னான்.
நீண்ட நேரம் குழந்தைகளிடையே இது விவாதப் பொருளாக இருந்தது. யாராக இருக்கும் என்பதைக் கண்டு பிடிக்கும் வகையில் தங்கள் முன்னால் உட்கார்ந்திருந்த சிறுவர்களை ஆசிரியர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். உண்மையைக் கண்டறியும் செயல்பாட்டில், தலைமையாசிரியர் கையில் பிரம்போடு, சுற்றுமுற்றும் நடந்தார். எல்லா வகையான வழிகளிலும் — முதலில் அன்பான வார்த்தைகள், பிறகு கடுமையான கேள்விகள், கடைசியாக அழுத்தமான பேச்சு — ஆனால் எந்தப் பலனுமில்லை. பிறகு அவர்களுக்கு அறிவுரை சொன்னார்—திருட்டு ஒரு பாவமான காரியம். மனிதர்களின் கண்களிலிருந்து அதை நீங்கள் மறைக்கலாம், ஆனால் கடவுளிடம் எதையும் மறைக்க முடியாது. களவாடுதல் மிகக் கெட்ட பழக்கம். தெரியாமல் செய்திருந்தால் தப்பை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள், மன்னித்து விடுவேன். கடவுளும் உங்களை மன்னிப்பார். ஒரு தடவை நீங்கள் ஏதாவது தப்பு செய்து விட்டு, அதை மறைக்க முயன்றால், அதையே நீங்கள் மீண்டும் செய்ய விருப்பப் படுவீர்கள். அப்படியே திருடர்களாக மாறி விடுவீர்கள். போலீஸ்காரர்கள் திருடர்களைப் பிடித்துக் கொண்டு போவதைப் பார்த்ததில்லையா? ஏய், நீ பார்த்ததில்லையா? பார்க்காதவர்கள் யாராவது இருக்கிறீர்களா?’
’ஆமாம் சார், இல்லை சார்.’ என்றனர் குழந்தைகள்.
’உம்! உண்மையைச் சொல்ல வேண்டும், அதைத்தான் சொன்னேன்.’
தப்பு செய்ததாக யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. யாராவது ஒப்புக் கொள்கிறார்களா என்று பொட்டலத்தைத் தொலைத்த குழந்தை சுற்று முற்றும் பார்த்தது.
ஆனால் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.
’நீ எடுத்தாயா? அல்லது நீ, அல்லது நீ? நீ?’ என்று தலைமையாசிரியர் ஒவ்வொரு குழந்தையையும் கேட்டார்.
’இல்லை.’
’இல்லை.’
’இல்லை.’
’சாப்பிட நான் வீட்டிற்குப் போய் விட்டேன்.’
’நான் சாப்பாடு கொண்டு வந்தேன்.’
’ம்..இல்லை.’
அப்படி ஒரு காரியத்தைச் செய்யவில்லை என எல்லாக் குழந்தைகளும மறுத்தார்கள். 180 குழந்தைகளையும் ஆசிரியர் தனித்தனியாக விசாரித்தார். பின் அவமானமாக உணர்ந்து அதை விட்டுவிட்டார். சக ஆசிரியர்கள் அவரை மதித்தனர். குழந்தைகள் ’நான்காம் வகுப்பு சார்’ என அவரைப் பூஜித்தனர்; கிராமம் அவரைக் கொண்டாடியது. மானேஜர் அவரை உயர்வான இடத்தில் வைத்திருந்தார். பள்ளி இன்ஸ்பெக்டருக்கும் அவர் பணியில் திருப்தி உண்டு.
தன் முயற்சியில் தோற்றுப் போன தலைமையாசிரியர், முகம் வெளுத்துப் போய், தனது உடைந்த நாற்காலியில் உட்கார்ந்தார். எதிலும் அவருக்கு உற்சாகமில்லை. கரும்பலகையில் போட்ட கணக்கு தப்பானது. பூகோளப் பாடத்தின் கேள்விகளுக்குக் குழந்தைகள் சரியான பதில்கள் கொடுத்த போது அவர் அவற்றை ஏற்கவில்லை. பள்ளி விடும் நேரம் வந்தும், பத்து நிமடங்கள் தாமதமானதை சக ஆசிரியர் வந்து சொல்ல வேண்டியிருந்தது.
எல்லோரும போய் விட்டார்கள். பள்ளியைச் சுத்தம் செய்பவன் கதவைப் பூட்டுவதற்காக காத்திருந்தான். அந்தி கடந்தும் தலைமையாசிரியர் எழுதி முடித்து விட்டு, வெளியே வந்தார்.
அன்றிரவு மானேஜர் தன் இரவு உணவை முடித்து விட்டு ரேடியோ கேட்டுக் கொண்டிருந்த போது இந்தக் கடிதம் வந்தது :
மரியாதைக்குரிய மானேஜருக்கு,
இன்று நம் பள்ளியில் ஒரு திருட்டு நடந்தது. மதியச் சாப்பாட்டிற்காக ஒரு குழந்தை வைத்திருந்த சோற்றுப் பொட்டலத்தை யாரோ எடுத்துச் சாப்பிட்டு விட்டார்கள். அது வெட்கக் கேடானது. இதற்கு முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக கேள்விப் பட்டதேயில்லை. நான் இங்கு வந்து முப்பது வருடங்களாகி விட்டன. இன்றுதான் முதல் தடவையாக இப்படி நடந்திருக்கிறது. இது திருட்டுத்தான் என்றால், திருடுவதற்கு இந்த ஒரு சோற்றுப் பொட்டலத்தை விடப், பள்ளியில் விலையுயர்ந்த பொருட்கள் எவ்வளவோ இருக்கின்றன.
பசியிலிருக்கும் யாரோ ஒருவர் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அளவில் இதை விடப் பல பெரிய சோற்றுப் பொட்டலங்கள் அங்கிருந்தன. எடுத்தது ஒரு சின்னக் குழந்தை இல்லையெனில், கண்டிப்பாக அவன் பசி அதில் தீர்ந்திருக்காது. ஆனால் ஒரு சின்னக் குழந்தை இப்படியான ஒரு காரியத்தைச் செய்யுமா? ஒரு பெரிய குழந்தையாக இருந்தாலும், மற்றவரின் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட வேண்டுமென்றால் அவன் பசி எவ்வளவு பொறுக்க முடியாததாக இருந்திருக்க வேண்டும்! காலையில் ஏதாவது சாப்பிட்டிருக்கும் குழந்தைகள் ஒரு போதும் இப்படியொரு செயலைச் செய்யத் துணியாது. காலையில் தன் குழந்தை எதுவும் சாப்பிட்டிருக்கா விட்டால், அதன் தாய் மதிய உணவு என்று ஏதாவது கொடுத்திருப்பாள். அவன் திருடத் தேவையேயில்லை. காலை,மதியம் என்று எல்லாப் பொழுதிலும் பட்டினி கிடக்க வேண்டுமென்றால், அம்மாக்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவே மாட்டார்கள்—வழியில் குழந்தைகள் மயங்கி விட்டால்! ஒரு சிலேட் அல்லது ஒரு பென்சில் அல்லது ஒரு புத்தகத்தை ஒரு குழந்தை திருடலாம்; ஒரு மாம்பழம் அல்லது ஓர் ஆரஞ்சு திருடலாம். ஆனால் சோற்றுப் பொட்டலத்தைத் திருடுவது– அதுவும், யாருக்குச் சொந்தமானது என்று கூடத் தெரியாமல்—இல்லை, ஒரு குழந்தை அதைச் செய்யும் என்று கற்பனை செய்வது கூடச் சாத்தியமற்றது. ஒரு குழந்தையின் முகத்தை நேராகப் பார்த்து, அவன் பொட்டலத்தைத் திருடினானா என்று கேட்பது ஒரு கொடூரமான அவமரியாதை. நம் ஆசிரியர்களில் சிலர், மதிய நேரங்களில் எதுவும் சாப்பிடுவதில்லை. அவர்கள் இதைச் செய்வார்கள் என்று நாம் எப்படிக் கற்பனை செய்ய முடியும்? குழந்தைகள் இல்லை. அல்லது ஆசிரியர்களில்லை. எந்த வெளியாட்களும் இங்கு வரவில்லை. பிறகு யார்? நானா?
ஆமாம். நான்தான்.
நான், இந்தப் பள்ளியை நிர்வாகம் செய்யும் நான்தான், அதைச் செய்தேன்.
நான், 180 புத்திசாலியான குழந்தைகளுக்கு, வாழ வேண்டிய வழியைக் காட்டும் பொறுப்பில் இருப்பவன்.
என்னுடன் பணி புரியும் ஐந்து ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தி வழி காட்டுபவன் நான்.
இந்தப் பள்ளியில் தவறாக நடந்து கொள்பவர்களுக்குத் தண்டனை தந்து முன்மாதிரியாக இருப்பவன் நான்.
நான், அடுத்த தலைமுறையைச் சரியாக வழி நடத்தி, அவர்களை நல்லவர்களாக உருவாக்க வேண்டியவன், ஒரு குழந்தையின் மதிய உணவைத் திருடிச் சாப்பிட்டது — அது ஒரு நாய் மட்டுமே செய்யும் இழிசெயல்.
நீங்கள் என்னை இகழ்ச்சியாக மட்டுமில்லாமல், கோபமாகவும் பார்க்கலாம். உங்களின் பள்ளிக்கு நான் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கலாம். நீங்கள் என்னை வேலையிலிருந்து நீக்க நினைத்துக் கொண்டிருக்கலாம். இவை எதுவுமே எனக்கு முக்கிய விஷயங்களாகத் தெரியவில்லை. பசி கிள்ள, தனது உணவு திருடப்பட்டதால், கண்ணீர் பெருக நின்ற,அந்த ஆறு வயதுக் குழந்தையின் முகம்தான், எனக்கு வலியைத் தருகிறது.
ஒரு நாயின் செயலை நான் ஏன் செய்தேன் என்று சிறிது கற்பனை செய்ய முயலுங்கள். நான் இதை முன்பே செய்திருக்கலாம். அப்படிச் செய்ய எனக்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. நான் அதைச் செய்யவில்லை, அவ்வளவுதான். நான் செய்ததை என் தோழர்கள் ஏன் செய்யவில்லை என்றால், அவர்கள் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது காரணமல்ல; அவப் பெயருக்கு அவர்கள் அஞ்சுவது தான் காரணம். நான் அதையெல்லாம் கடந்து விட்டேன். பிறந்து விட்டேன் ; எப்படியாவது வாழ வேண்டும் தானே? நான் முப்பது வருடங்களாக வேலை பார்க்கிறேன். நீங்கள் கொடுக்கும் அந்தப் பன்னிரண்டு ரூபாயில் நான் எத்தனை பேரைப் பாதுகாக்க வேண்டும் தெரியுமா? அது உங்களுக்கு ஏன் தெரிய வேண்டும், இல்லையா சார்? யாருக்கும் தெரிய வேண்டியதில்லை.
ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ள விருப்பப்படாவிட்டாலும் கூட, ஒரு நாள் உங்கள் அனைவருக்கும் அது தெரிய வரும்.
எட்டுப் பேர் கொண்ட குடும்பத்திற்கு, முப்பது நாட்களுக்குப் பன்னிரண்டு ரூபாய்— இந்த நாட்களில் விலைவாசி எல்லாம் மிக அதிகம்!
நான் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். ஒரு பள்ளியைப் பராமரிக்க வேண்டும். முடிவில்லாத பிரச்னைகளுக்காக நாள் முழுவதும் உழைக்க வேண்டும். மரியாதைக்குரிய வகையில் நான் வாழ வேண்டும். வயதான பெற்றோர் இருக்கிறார்கள். என்னைச் சார்ந்திருக்கும் மனைவியும், குழந்தைகளும்.. எனக்கும் ஆசைகளும், உணர்ச்சிகளும் உண்டு— உங்களைப் போல.
நான் ஒரு குழந்தையின் உணவை எடுத்துச் சாப்பிட்டு விட்டேன். நான் திருடினேனா? உங்களிடம் வெளிப்படையாகவே சொல்கிறேன் — நேற்றுக் காலை நான் கஞ்சி குடித்தேன், கடந்த இருபத்தியெட்டு மணி நேரமாக எதுவும் சாப்பிடவில்லை. வேலைப் பளுவால் மயங்கி விழுந்து விடுவேன் என்று நினைத்து, அந்தக் குழந்தைக்குச் சொந்தமான சோற்றுப் பொட்டலத்திலிருந்து மூன்று அல்லது நான்கு கவளம் எடுத்துச் சாப்பிட்டு விட்டேன்— அது யாருடையது என்பதெல்லாம் கவலையில்லை — யாராக இருந்தாலும்–அவர்கள் மூன்று மணி நேரத்திற்கு முன்னால் ஏதாவது சாப்பிட்டிருக்க வேண்டும். அது தவறாகவும் இருக்கலாம். அது பாவமாகவும் இருக்கலாம். அடுத்த உலகத்திற்குப் போகும் போது அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இந்த உலகத்திற்கும் நான் பதில் சொல்ல வேண்டிய தேவை ஏற்படலாம். நான் பதில் சொல்வேன்.
ஆனால் இதையும் எனக்குச் சொல்லுங்கள் ; இதைத் தவிர நான் வேறு என்ன செய்திருக்க முடியும்?
நன்றி:
The Packet of Rice [Pothichoru] Karoor Neelakanta Pillai (കാരൂർ നീലകണ്ഠപ്പിള്ള) (Translated by Gita Krishnankutty)
இலக்கியத்தின் மறுமலர்ச்சி காலத்தின் முன்னோடிகளில் ஒருவராக காரூர் விளங்கினார். தகழி, பஷீர், வர்க்கி ஆகியோருடன் சேர்ந்து, காரூர் என்று அறியப்பட்ட நீலகண்டப் பிள்ளை அந்த மறுமலர்ச்சி யுகத்தின் ஒளிவீசும் முகங்களிலொன்றாகக் கருதப்பட்டார். கரூரின் முதல் கதை 1932ஆம் ஆண்டில் வெளியானது. அது ப்ருத்ய வாட்சல்யம் எனப்பட்டது. அதன் பின் 22 தொகுதிகளில் 187 கதைகளை அவர் எழுதியுள்ளார். அதற்கு அப்பால் நாடகங்களும், சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார். அவரது ஆனகரன் மற்றும் மோதிரம் என்னும் படைப்புகளுக்காக கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
1898 பிப்ரவரி 22ஆம் தேதி கோட்டயம் ஏற்றுமானூரின் காரூர் குடும்பத்தில் பிறந்தார். ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஆசிரியராகத் தனது தொழில்முயற்சியைத் தொடங்கினார். சிறுகதை எழுத்தாளராக இருந்ததோடு, கரூரை மறக்க முடியாதவராக்கும் இன்னொரு காரணம், இலக்கியத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனர் செயலாளராக அவர் வகித்த பங்கு. சுரண்டப்பட்ட எழுத்தாளர்களுக்குத் தகுந்த கூலியை உறுதி செய்வதிலும், அந்த கூட்டுறவு சங்கத்தை ஆசியாவின் சிறந்த இலக்கிய அமைப்பாக உயர்த்துவதிலும் கரூரின் பங்கு சிறியது அல்ல. அவர் 1975 செப்டம்பர் 30ஆம் தேதி மறைந்தார்.
