Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

கவரப்பட்ட குழந்தை 

ஆங்கிலம் : வில்லியம் பட்லர் யேட்ஸ்

தமிழாக்கம் : இரா.இரமணன்

சிலு காட்டின் பாறைக்குன்று
ஏரிக்கரை தொடுமிடம்.
அங்கே இலைநிறை தீவொன்றில்
மயங்கி கிடக்கும் நீர் எலிகளை
கொக்குகளின் சிறகடிப்பு தட்டி எழுப்பும்.
திருடிய பேரிக்காய்களையும்
செவ்விளம் செர்ரிப் பழங்களையும்
அங்குதான்
மாயப் பானையில்
மறைத்து வைத்திருக்கிறோம்.
மானுடக் குழந்தாய்!
உன்னுலகம் நீ அறிவதற்கும் மேலான
அழுகையினால் ஆனது ஆகையால்
தேவதைகள் எங்களுடன் கைகோர்த்து
ஓடி வா!
ஆறுகளும் காடுகளும் நோக்கி
செல்வோம்.

அங்கே
நிலவின் கதிர்கள்
மங்கி கிடைக்கும் கருமணலை
ஒளியால் போர்த்தியிருக்கும்.
தூரத்து ஊரினும் தொலைவது.
தொல்நடனமாடி
கைகள் கோர்த்து
பார்வைகள் கலந்து
நிலவு தொலையும் வரை
இரவெல்லாம் நடப்போம்.
உறக்கத்திலும் நிம்மதியில்லாது
உலகம் துன்பத்தில் மூழ்கி இருக்கும்போது
நாங்கள்
நுரை குமிழ் துரத்தி
முன்னும் பின்னும் குதித்து ஆடுவோம்.
ஓ மானுடக் குழந்தாய் !
உன்னுலகம்
நீ அறிவதற்கும் மேலான
அழுகையினால் ஆனது ஆகையால்
தேவதைகள் எங்களுடன் கைகோர்த்து
ஓடி வா!
ஆறுகள் காடுகள் நோக்கி
செல்வோம்.

ஆடித் திரியும் ஆறு
மேலிருக்கும் மலையிலிருந்து
இறங்கி வரும் பாதையெல்லாம்
குட்டி நட்சத்திரமும் குளிக்க முடியாத
குட்டைகளாய் தேங்கும்.
அங்கு
பெரும் தூக்கத்திலிருக்கும்
மீன்களை பிடித்து
கலக்கமுறும் கனவுகள் உண்டாக
காதில் மந்திரங்கள் ஓதுவோம்.
சிற்றோடைகளில் கண்ணீர் சிந்தும்
பெரணிச் செடிகளிலிருந்து
மெதுவாய் எட்டிப் பார்ப்போம்.
ஓ மானுடக் குழந்தாய் !
உன்னுலகம்
நீ அறிவதற்கும் மேலான
அழுகையினால் ஆனது ஆகையால்
தேவதைகள் எங்களுடன் கைகோர்த்து
ஓடி வா!
ஆறுகள் காடுகள் நோக்கி
செல்வோம்.

கலக்கமுறு கண்ணினவன்
விலகி வருகிறான் எங்களுடன்.
கதகதப்பான மலைப்பகுதியில்
கன்றுகள் கத்தும் சத்தமோ
கணப்பில் கலகலக்கும்
பாத்திர ஒலியோ
அவன் இனி கேளான்.
கஞ்சி பானை
சுற்றி சுற்றி வரும்
பழுப்பு சுண்டெலியும் காணான்.
மானுடக் குழந்தை அவன்
அறிய இயலா
அழுகையினால் ஆன
உலகத்திலிருந்து
ஆறுகளும் காடுகளும் நோக்கி
தேவதையுடன் கைகோர்த்து
வருவதால்
அவனது இதயத்தில் நிம்மதி
இசைப்போம்.

வில்லியம் பட்லர் யேட்ஸ் (13 ஜூன் 1865- 28 ஜனவரி 1939) ஐரிஷ் கவிஞர். நாடக ஆசிரியர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். 20ஆம் நூற்றாண்டின் முன்னோடி இலக்கிய ஆளுமை. அப்பே நாடக இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். 1923ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார். ஐரிஷ் சுதந்திர அரசில் இரண்டு முறை செனட்டராக இருந்தார்.
இந்தப் பாடலில் யேட்ஸ் ஐரிஷ் நாட்டு மக்களின் நம்பிக்கைகளை மய்யமாக வைத்து ஒரு சித்திரம் வரைகிறார். கவிஞர் மனித இனத்தையே ஒரு குழந்தையாக பார்க்கிறார். துயரம் மிகுந்த உலகத்திலிருந்து தெரியாத ஒரு மாய உலகத்திற்கு தேவதைகள் அழைக்கின்றன. அங்கு காணக்கூடிய அழகையும் ஆபத்தையும் அவை கூறுகின்றன. அவனும் கலக்கமுறு கண்களுடன் செல்கிறான். நம்மில் பலரின் நிலை இதுதானே?

Exit mobile version