1
பின்னிரவு மணி 2.37
ஜன்னலில்
பரந்து விரிந்த வெளி
ஏதோ ஒரு மனிதனின்
விரயமான உழைப்பு போல
கூரிருள் எவ்வூதியத்தின்
துல்லியம் ?
கோடைக் காற்று
உக்கிர அமைதியில்
அடையாளம் காண்பிக்கிறது
உலர்ந்த துயரை
உறைந்த வறுமையை
வேடிக்கையான ஆறுதல்
நிலவு கசக்கி எறிகிறது
திட்டுத் திட்டான வெளிச்சங்களை
2
திருடு போவதற்கு முன் சேவல்
சண்டையிட்டிருந்தது
சண்டைக்கு முன்
சேவல் கலவி கொண்டிருந்தது
கலவிக்கு முன்
சேவல் கூவிக் கொண்டிருந்தது
கூவலுக்கு முன் கூடு
இருண்டிருந்தது
இருள் கவியும் முன் ஒரு பகல்
விடிந்திருந்தது
விடிந்த பின் வந்த விடியலே
நோட்டமிட்டு
சேவலைத் திருடிப் போனது
3
இருள் வானில் ஒரு வலசைப்
பறவை
இருள் வானில் ஒரு வௌவால்
இருள் வானில் ஒரு விமானம்
இருள் வானில் சில நட்சத்திரங்கள்
இருள் வானில் உறைவு
இருள் வானில் நிசப்தம்
இருள் இருள் இருள் வானில்
இருள் வானை நோக்கிக் கைகள்
நீண்ட
சில கிளைகள்
கிளை மறைவின் இருளில் ஆந்தையின்
ஒளிரும் இரு கண்கள்
4
வறண்ட ஓடைப் பாதையில்
கிடந்து தகிக்கும் ஒரு கூழாங்கல்லைச்
சீண்டுவதுபோல
நடுநிசி இரவைக் கிழித்தபடி
காற்றில் ஓங்கரித்தது
ரயிலோசை
இருள் வெளி அதிரவும்
துளி துளி வண்ணங்களாக
ஒளிர்ந்து உதிர்ந்தன
திரளாய் பற்பல சொற்கள்
தூரத்தில் ஓய்ந்து விடச் சிணுங்கியது
ரயிலோசை
நானறிவேன்
மலையளவுப் பாறையினும்
இறுகிய மனங் கொண்ட
கூழாங்கல் ஒருபோதும் தன்னை மீறி
மௌனம்
கலைத்து விடாது என்று
