Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

பாட்ரிசியா  கவாலி கவிதைகள்

மூலம் : பாட்ரிசியா  கவாலி

தமிழாக்கம் : கு. அழகர்சாமி

1. மகிழ்ச்சியாயுள்ளவர்கள்  பெரும்பாலும் எப்போதும் பண்பாடற்றவர்கள் கூட

மகிழ்ச்சியாயுள்ளவர்கள் பெரும்பாலும்
எப்போதும் பண்பாடற்றவர்கள் கூட.
மகிழ்ச்சி ஒரு சிந்தனை முறையைக் கொண்டுள்ளது-
அவசரமாயும், கவனிக்க நேரமில்லாததாயும்,
ஆனால் அது நகர்ந்து கொண்டே –
கச்சிதமாயும், பைத்தியமாயும்-
மரணித்துக்கொண்டிருப்பவர்களுக்காக,
உம் வாழ்வைத் தொடர்ந்து வாழ்ந்து
முன் செல்க; எழுச்சி கொள்க என்று
போகிற போக்கில் இகழ்ச்சியுடன்.

வேதனையால் உறைந்து போனவர்கள்
அதே மெதுவான கதியில் நடக்கின்றவர்களோடன்றி
உற்சாகமுள்ள தன்னுறுதியுள்ள ஓட்டக்காரர்களோடு
கலந்து கொள்ள மாட்டார்கள்-
ஒரு சக்கரம் பூட்டப்பட்டு
மற்றொன்று சுற்றினால்
சுற்றுகிற ஒன்று
சுற்றுவதை நிறுத்தாது,
ஆனால், அது
ஒரு மோசமான கோணலான ஓட்டப் பந்தயத்தில்
வண்டி நின்று விடும் வரையோ
அல்லது சக்கரங்கள் துண்டு துண்டாய்
உடைந்து விடும் வரையோ
மற்றதை இழுத்துக் கொண்டு
எவ்வளவு தொலைவு செல்ல முடியுமோ
அவ்வளவு தொலைவு செல்கிறது.

Source: Poetry Foundation


2. இதயத்தின் எரிச்சலை போலச் செய்வதற்கு

இதயத்தின் எரிச்சலை, உள்ளுறுப்புகளின் அவமானத்தை-
அவை ’போலச்’ செய்வதற்கு,
சபிக்கப்பட்டதிலிருந்தும், சபிப்பதலிருந்தும்
தப்பியோடி, கற்பினைப் பதுக்கிக் கொள்வதற்கு,
அதற்காக கதறியழுவதற்கு,
மற்ற வாய்களின் அபாயகரமான ருசியின் இரசனையிலிருந்து
என் வாயை மூடிக் கொள்வதற்கு,
ஏற்கனவே வீங்கிப் போன வயிறு
தொடர்ந்து வீங்கி,
விருந்துகளின் பெருமைப்படுத்தலில் விட
உணவில் நிறைவுறுவதற்கு நிறைவுறாமல்
உள் தள்ளுவதற்கு,
அடையமுடியாத தனிமையைத் தொடுவதற்கு,
ஒரு படுக்கையின், ஒரு நாற்காலியின்
அல்லது படிக்கட்டுகளின் அடியில்
விடைபெறுகிறேன் என்று கூறுவதற்கு
என் அதீத கற்பனையிலிருந்து உன்னை
விலக்கி வைக்க முடிவதற்கு
உன் ஒளி என் பாதையை மங்கலாக்காமல்
மரணத்தை எனக்கு நினைவுபடுத்துகிற
கருத்திலில்லாத நட்சத்திரமான
எதிர்பாராத பாதையான நீ
உன்னிடமிருந்து
என் வட்டத்தைக் குழப்பியடித்து விடாமல்
முகில்களின் கூட்டம் உன்னை மூடுவதற்கு,

இவை யாவற்றுக்கும், உன்னிடமிருந்து
ஒரு முத்தத்தை வேண்டினேன் நான்
கனிவான கள்ளங்கபடமில்லாத கையாள் நீ
அதைத் தரவில்லை எனக்கு.

.


3. எது நீயோ அதை நான் அன்பு செலுத்த முடியாது

எது நீயோ அதை நான்
அன்பு செலுத்த முடியாது, இல்லை,
எது நீயோ அது உண்மையில் தவறானது.
ஆனால், நீ எதுவாய்ப் பிடிவாதமாயுள்ளாயோ
அதை விஞ்சிடும் ஒரு கண்ணியம் உன்னிடமுள்ளது.
உனக்கு உரிமையில்லாத உன்னுடைய ஏதோ ஒன்று,
தொடக்கத்திலிருந்து உன்னுள்
ஆனால் உன்னிடமிருந்து தனிப்பட்டதாய்
அதன் சுயமான கட்டுக்குட்படாத பேரொளிக்கு அச்சப்பட்டு
உன்னை நோக்கி எச்சரிக்கையுடன் அணுகுகிறது.


4. இப்போது எல்லா நேரமும் என்னுடையதாய்த் தோன்றுகிறது

இப்போது எல்லா நேரமும் என்னுடையதாய்த் தோன்றுகிறது.
யாரும் என்னை மதிய அல்லது இரவு உணவுக்கு அழைப்பதில்லை.
இப்போது நான் நிலைத்து கவனிக்க முடியும்-
எப்படி ஒரு மேகம் தளர்ந்து தன் நிறமிழக்கிறதென்று
எப்படி ஒரு பூனை
பெருஞ் சொகுசான வேட்டையில்
கூரை மீது நடக்கிறதென்று.
இப்போது ஒவ்வொரு நாளும்
எனக்காகக் காத்திருப்பது,
எனக்காகக் காத்திருக்கும் உடலின்
அதி இனிமையினுள்ளே ஓய்வெடுப்பதற்கு
அவசரமில்லாமல் உடைகளைக் களைவதற்கு
எந்த ஒரு அவசியமுமில்லாத
இனி எந்த ஒரு காரணமுமில்லாத
ஓரிரவின் அளவற்ற நீட்சி-
இப்போது காலைப் பொழுது
இனி தொடக்கமில்லையாய்,
அமைதியாய் என்னுடைய திட்டங்களுக்கும்
என்னுடைய குரலின் எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும்
என்னை விட்டு விடுகிறது.
இப்போது திடீரென்று நான் விரும்புவேன் சிறையை.


Source: Poetry Foundation. Translated from the Italian by Judith Baumel


இழக்கப்பட்டது திருப்பியளிக்கப்பட்டு விட்டது எனக்கு

இழக்கப்பட்டது திருப்பியளிக்கப்பட்டு விட்டது எனக்கு
தொலைவாயுள்ளது எனக்கருகில் உள்ளது இன்று.
இங்கிருக்கிறாயா நீ, எப்படி இருந்தாலும் நீ,
எனக்கு பொருட்டல்ல இன்று.
இன்று சப்தங்களின் பொங்கும் சுருள்களைத்
தணிவித்துக் கலந்திடும்
இனிமையான கவிகை மாடத்திற்குள்
பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.
நான் உட்புறம் இருக்கிறேன்.
வெளிப்புறம் என்னுள் நுழைகிறது.


Source: My Poems Won’t Change the World
-Trans. J.D. McClatchy,


குறிப்பு:  பாட்ரிசியா கவாலி(1949-2022) குறிப்பிடத்தக்க இத்தாலியப் பெண் கவிஞர். ’என் கவிதைகள் உலகத்தை மாற்றி விடாது’ (My Poems Won’t Change the World) என்ற அவருடைய முதல் கவிதைத் தொகுதி அவருடைய  பட்டவர்த்தமான, அதிகாரத்தை ஒரு பொருட்டாகக் கருதாத பார்வையை  அவருடைய கவிதைகளின் பொதுவான அடிசரடான பண்பாய் அடையாளப்படுத்தியது . அவருடைய கவிதைகள் பெரும்பாலும் புலப்படாத  மாற்றத்தை முன்தெரிவிக்கும் காலகட்டத்தின் வாழ்வின் தருணங்களையும்,  மகிழ்ச்சி மற்றும் துயரின் காரணங்களையும்,  நிலைமைகளையும் ஆய்வு செய்வதாய் அமைகின்றன.  மோகம், சலிப்பு, மாய்மை, முரண், சோகம்   ஆகியவற்றை   ஆயும் அவருடைய படைப்புகளிலுள்ள கவிதைக் குரல் அதன் கலைத்தன்மையை தவறாய்ப் பொய்யாய்த் தெரியும்படியான பிடிப்பற்ற பாணியில் அமைகிறது. அவருடைய மரணத்தில் அவருக்கு மொத்த ரோம் நகரமே அஞ்சலி செலுத்தியது. அவருடனான நேர்காணல் பாரிஸ் ரிவியூவில் வெளியாகியுள்ளது. 

Exit mobile version