Site icon சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

ஒளியும் விழியும்

1

இலைவெளி
துவாரம் வழியாக
கோலூன்றியது ஒளி.
நிழலமைதியில்,
வேல்போல பிரகாசமாய்
வந்தூன்றியது ஒளி.
அதன் மெல்லிழையில்,
வேறு உலகங்கள்
மின்னுகின்றன,
அந்தரத்தில் மிதக்கும்
மாய தூசிகளாய்.
நிலைப்பதுவாய் இல்லை,
ஒளி – பாய்கிறது,
வழியில் பிரபஞ்சங்கள்
சிலிர்க்கின்றன.
நொடியெனும் நினைவு,
தளும்பி விரிகிறது.


2

நிலவு என்னுடனேயே
நகர்கிறது.
கடக்கும் திருப்பங்களிலிருந்து
சிரிக்கிறது.
மிதக்கும் நங்கூரமாய்
நினைவுகளுடன் இணைகிறது.
எத்தனைக் காலமாக
நம்பியிருக்கிறேன், நிலவு
என்னைத் தொடர்வதாக.
ஆழ்ந்த உறக்கத்தில்
சங்கினுள் அடங்கும்
கடலைப் போல
நிலவினுள் சுருண்டு
விழிக்கிறேன்.
உடைந்த கண்ணாடிச்
சில்லென, நிலவை
மனதில் அளக்கிறேன்.

Exit mobile version