மழை
மழை பெய்யும் போதே
மழையாய் இருக்கும் மழை
பெய்து கொண்டே இருக்கிறது.
மழை நிற்குமா என்று மிக அவசரமாகி விட்டது.
மழை காது கொடுத்து கேட்பதாயில்லை.
மழை நிற்கும் போது தான் நிற்குமென்று
அதற்கே கூடத் தெரியுமா என்று நிச்சயமில்லை.
மழை மெல்ல நிற்கிறது.
முழுதும் நிற்கும் முன்னே
கலையத் தொடங்கி விட்டது கூட்டம்.
உதிரி உதிரியாய்க்
கடைசியாய்
வீழும் மழைச் சொட்டுகளை
விலையில்லா மணிகளாய்ச் சேகரிக்க
குழந்தை மனம் வேண்டும்.
கடைசி மழைச் சொட்டு வீழும் வரைக்கும்
சேகரிக்க அதை
கைகளை மேனோக்கி விரித்துக்
காத்திருக்கிறது
எதிரில் தெரியும்
ஒரு மரம் மட்டும்.
வானம் அதனால் மரத்தை நம்புவதால்
பறவைகள் மரத்தை நம்புகின்றன
தாம் தங்குவதற்கு,
வானத்தை நம்புவது போல்
தாம் பறப்பதற்கு.
முதற் சொட்டிலும் கடைசிச் சொட்டிலும்
தான் சிலிர்ப்பது போல் இடையில்
மழையில் தெப்பமாய் நனையும் போது
சிலிர்ப்பதில்லையாய்த்
தெரியும் மரத்திற்கு
மழை முடிந்து
மழை நினைவாய்த் தேங்கியிருக்க
மண்ணில் மழை
தண்ணீராய்த் தேங்கியிருக்கிறது.
கவிதை
அர்த்தம்
கடல் பெருகிக்
கொந்தளிக்கிறது.
துள்ளி
மேலெழுகின்றன
சொல் மீன்கள்.
தூண்டில் போட்டு
சொடுக்கி இழுக்கிறான் அவன்
ஒரு சொல் மீனை-
அது ஒரு கவிதையை
நினைவு வைத்திருக்கிறது-
அதை நினைவுபடுத்திக் கொள்ள
அவனுள் அவன்
அழுந்த அழுந்த
கவிதை அவனுக்கு
நினைவுபடுத்தும் தன்னை.
கடைசியாய்க் கவிதை
கவிஞனை நினைவு வைத்துக் கொள்வதே
கவிஞனுக்கு கிடைக்கும் பெரும் பரிசு.
வீடு திரும்புதல்
அவசரப்படுத்தும் இரவுக்கு
அந்தி வழி விட-
பறவைகள் வீடு திரும்ப
அதைக் கண்டு நான்
வீடு திரும்ப-
எதற்கோ ஓர் இரட்டைவால் குருவி
என்னைக் கூப்பிடுவதாய்த்
திரும்பிப் பார்க்க
திரும்பிய கணத்தில்
மின்னலடித்து
உள்ளுணர்ந்தேன்
மரமும் தினம் அந்தியில்
வீடு திரும்புகிறதென்று-
தன்
வேருக்கு.
தனிமை
என் தனிமை
என் முன்னே
எழுந்துயர்கிறது மலையாய்-
ஏறிச் செல்ல சிரமமாய்த் தெரியவில்லை
உச்சியில் காத்திருக்கிறதால்
முடியாத உரையாடலுக்கு-
மெளனம்-
முதியவர்கள் மரணத்தைப் பற்றி பேசுதல்
முதியவர்கள் பெரும்பாலும்
மரணத்தைப் பற்றி
நேரடியாகப் பேசிக் கொள்வதில்லை-
ஒருவருக்கொருவர்
ஒருவரின் –
நோய்கள், மருத்துவப் பரிசோதனைகள்
மருந்து மாத்திரைகள்
என்றெல்லாம் கேட்டறிவர்.
ஒவ்வொருவரின் வயதைக் கேட்டறிந்து
தத்தமக்குள் மனதுக்குள்
ஒப்பிட்டுக் கொள்வர்.
ஒவ்வொருவருவருக்கும்
தமக்குள் இது வரை
ஒருவராய் இருந்த
ஒருவரின் மரணத்தைப் பற்றி
பேசும் போதும்
அந்த ஒருவர் தானில்லையாய்த்
தப்பித்த ஆசுவாசமும்
இனி அந்த ஒருவர் போல்
இங்கு இல்லாமலாகப் போகிறவர்
தமக்குள் யாராயிருப்பினும்
தானாயிருக்க கூடாது என்ற
விசாரமும் சேர்ந்திருக்காமல் இல்லை.
முதியவர்கள் பெரும்பாலும்
மரணம் வாசலைத் தட்டும் முன்னமேயே
மரணத்திற்கு அவசரப்பட்டு விடுகிறார்கள்
மரணத்தைப் பற்றி
நேரடியாகப் பேசிக் கொள்வதை விட
மரணத்தைப் பற்றி
நேரடியாகப் பேசிக் கொள்ளாமல்.
துண்டிக்கப்பட்ட நிழல்
நிலவு
நான்
என் நிழல்-
தற்செயலாய்ச் சந்தித்தோம்
மொட்டை மாடியில்
ஓரிரவில்-
லி பை* நினைவானார்
எனக்கு-
நிலவும் தனக்கு
நினைவாகியதாய்க் கூறியது.
என் நிழல் மட்டும்-
எனக்கும் நிலவுக்கும்
லி பை நினைவானது போல்-
லி பை நினைவாகா விட்டாலும் அதற்கு,
அதனாலோ-
லி பையின் நிழலும்
நினைவாகவில்லை என்றது.
அப்போது
ஒரு கணம்
என்னிடமிருந்து
என் நிழல்
துண்டிக்கப்பட்டது போல்
உணர்வாகியதாய்
ஒரு நினைவு
எனக்கு
ஏனோ.
*குறிப்பு: லி பை ( Li Bai(701-762) – Li Po என்றும் அழைக்கப்படுகிறார்) மகத்தான சீனக் கவிஞர்களில் ஒருவராக போற்றப்படுபவர். சீனக் கவிதையின் பொற்காலம் என்று கருதப்படுகின்ற டாங் (Tang) வம்ச காலகட்டத்தில் வாழ்ந்தவர். ஒரு தேசாந்திரி. கட்டற்ற குடிகாரர்; டாவோயிசத்தில்(Taoism) அவருக்கு இருந்த ஈடுபாடு அவரின் பல கவிதைகளில் தொனிக்கும் தியான அவதானிப்பில் தெரிகிறது. ஏராளமான அவர் கவிதைகள் நட்பு, பிரிவு, தனிமை, ஏக்கம், எக்களிப்பு போன்ற இருப்பின் நெகிழ்ச்சியான அற்புதமான தருணங்களை இயற்கையின் பின்புலத்தில் கொண்டாடுபவை. இங்கு அவருடைய புகழ்பெற்ற நிலவொளியில் தனியாகக் குடித்தல்( Drinking Alone in the Moonlight) என்ற கவிதை சுட்டப்படுகிறது.
