Site icon சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

இலட்சுமணப் பிரகாசம் கவிதைகள்

சருகுகளைக் கூட்டிக் குமித்து வைத்திருக்கிறேன்
நமக்கு தேவையானதெல்லாம்
இருளை அகற்றி ஒளியை சமைக்கும்
காந்தலான கங்குகள் பொதிந்த ஒரு தீக்குச்சி.
மற்றும் ஒரு வெட்டவெளி
துளியும் வர்ணம் பூசப்படாத நிர்வாணம்.


ஒரு டிப் டிப் பறவை எல்லோருடைய கவனத்தையும்
தன் மீது திசை திருப்பிக் கொண்டிருந்தது
சதுப்பு நில கொண்டலாத்தியோ நீர்முள்ளி மீது அமர்ந்து ஊசலாடுகிறது.
என் மனம் முழுவதையும்
கரிச்சான் ஆக்கிரமித்திருந்தது
மரத்தில் எங்கோ
அப்போது ஒரு பறவை இட்ட முட்டையின்
கதகதப்பின் நெடி காந்தலாக வீசிற்று.
அது என்ன பறவையாக இருக்கும்
ஒரு பூச்சியை தின்று வாழும் உயிரி
என்பதாக மட்டும் நினைவு.

Exit mobile version