முந்தைய பகுதி
“ மனிதனால் களங்கப்படாத ஒரே சங்கதி மரணம். …. அதை அவனால் விஞ்ஞானமாகவோ வேதாந்தமாகவோ மாற்ற முடியாது “ என்கிறார் சுஜாதா. இது பற்றி இப்போதுகொஞ்சம் பார்ப்போம்.
எனக்கு வேதாந்தம், விஞ்ஞானம் இரண்டிலும் அதிகம் பரிச்சயமில்லை. அத்வைத வேதாந்தம் என்று பின்னர் சிலரால் வகைப்படுத்தப்பட்ட ஜே. கிருஷ்ணமூர்த்தியின் மற்றும் பகவான் ஶ்ரீ ரமண மஹர்ஷியின், நிசர்கதத்த மஹராஜின் போதனைகளை, அவர்களது வாழ்க்கை பற்றிய தகவல்களை ஓரளவு படித்ததும், பயில முயன்றதும் வேதாந்தம் பற்றிய அறிவுக்குக் கொஞ்சம் உதவுகிறது. விஞ்ஞானம் பற்றி நண்பர்கள் பகிர்ந்தவை, கொஞ்சம் படித்தவை மட்டும்தான். Negligible.
” இந்த உடல் நானல்ல, மனம் நானல்ல, புலன்கள் நானல்ல என்று ஒவ்வொன்றாய் விசாரித்துத் துறந்த பின் எது ஒளிர்கிறதோ அதுவே நான். அந்த நான் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை; அதற்கு அழிவில்லை ” என்கிறது அத்வைத வேதாந்தம்.
” எதுவும் அழிவதில்லை, ஒன்று இன்னொன்றாக தோற்றம் ஆகிறது “ என்கிறது விஞ்ஞானம்.“
எப்படிப் பார்த்தாலும் எல்லோரும் சிரஞ்சீவிதான்.
பொதுவாக இது ஒரு abstract theory, நிதர்சனம் அல்ல, கவைக்குதவாது என்றே எண்ணப்படும். ஆனால் அது ஒரு வேளை மேலோட்டமான உணர்வாக கூட இருக்கலாம்.
நம் ஒவ்வொருவருக்கும் கூட ” நாம் அழிய மாட்டோம் ” என்கிற உள் உணர்வு, அடி ஆழத்தில் இருக்கிறது போலும். அதனால் தான் பிரசவ வைராக்கியம் ( இனி பிள்ளை பெற்றுக்கொள்ள மாட்டேன், பிரசவம் தான் எவ்வளவு அபாயம், எவ்வளவு நோவு ), மயான வைராக்கியம் ( சாவு மட்டுமே நிஜம், இந்த வாழ்வில் என்ன இருக்கிறது ? ) எல்லாம் சில மணிகளில் / நாட்களில் கரைந்து விடுகின்றன. உடலுக்கு கெடுதி என்று அறிந்தும் சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. போகப் போவது உடல் தானே, நான் அல்லவே என்கிற எண்ணமோ ?
இப்போது வேதாந்தம், குவான்டம் ( Quantum ) இயற்பியல் பற்றி சிறிது பார்ப்போம்
ஃபெடெரிகோ ஃபாகின் ( Federico Faggin) இத்தாலிய – அமெரிக்க இயற்பியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் . முதல் வணிக நுண் செயலியை ( commercial micro processor ) வடிவமைத்தவர். அவர் தன் அனுபவத்தைக் கூறுகிறார்:
“ 1990 ல் எனது இல்லத்தில், கிறிஸ்துமஸ் சமயத்தில், ஓரிரவில் உறக்கம் வராமல் எழுந்து நீர் அருந்தி விட்டு உறக்கத்தை எதிர்பார்த்து படுத்திருக்கையில் என் நெஞ்சிலிருந்து ‘ ஷ் ஷ் ‘ என்கிற ஒலியோடு, ஒரு ஒளிப்பிரவாகம் வெளிப் பாய்ந்தது. அது முழுக்க முழுக்க அன்பு (Love). நானறிந்த அன்பைக் காட்டிலும் 10000 மடங்கு ஆற்றல் உள்ளது. வெள்ளை ஒளி. அது பாய்ந்து கொண்டே இருந்தது. அது ஆனந்தம் (Joy), சாந்தி (Peace).”
“ அதில் எத்தனை எத்தனையோ ஒளித் துளிகள். அவை அனைத்தும், ஒவ்வொன்றும் அந்த மொத்தப் பிரவாகம் என்னவோ அதுவே. நானே பார்க்கிறவன்; பார்க்கப்படும் பொருளும் நானே “
“ இந்த அனுபவத்துக்குப் பின் ஸயின்ஸ் ( விஞ்ஞானம் ) மற்றும் ஸ்பிரிச்சுவாலிட்டி ( ஆன்மிகம் ) பற்றிய என்னுடைய பார்வையும், உணர்வும் முற்றிலும் தலைகிழாய் மாறிவிட்டன. இது ஒரு குவான்டம் விஷயம். என் பிரக்ஞையில் (கான்ஷியஸ்னெஸ்ஸில்) இருந்து நிகழ்வது.
ஒரு ட்ரோன் பல விஷயங்களைப் பார்த்து எனக்கு அனுப்புகையில், அதை நான் கவனிக்கும் போது என்னுடைய பிரக்ஞை ( கான்ஷியஸ்னெஸ் ) தான் அந்த ட்ரோன் பார்க்கும் அனைத்தையும் உணர்கிறது. இந்த உணர்வுகள், இந்தப் பார்வைகள், இந்த கவனிப்புகள் என்னுடைய மூளைக்குள், என்னுடைய உடலுக்குள் நிகழ்வன அல்ல; அவை என்னுடைய பிரக்ஞைக்குள் நிகழ்கின்றன. அந்தப் பிரக்ஞை வெளி ஒன்று மட்டுமே இருக்கிறது அதிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு ட்ரோன் மாதிரி நான் இருக்கிறேன். “
மேலும் இறப்பு பற்றி பேட்டியாளர் அவரை கேட்கையில் அவர் சொல்கிறார் : “ நான் எங்கு இறக்கிறேன் ? நான் இந்த உடலுக்குள் இல்லவே இல்லையே. நான் இறப்பதில்லை. இந்த உடல்தான் இறக்கிறது “.
மேலும் பிரக்ஞை என்பது குவான்டம் சமாச்சாரம். அது கிளாசிக்கல் சமாச்சாரங்களால் அறியப்படக்கூடியதோ, அளக்கப்படக்கூடியதோ அல்ல. பிரக்ஞை என்பது எனக்கு உள் நிகழ்வது. அது ஒரு குவான்டம் விஷயம். அந்த பிரக்ஞை யிலிருந்துதான் கணிதம் வந்திருக்கிறது. எனவே கணிதத்தை வைத்துக்கொண்டு அதை உருவாக்கிய பிரக்ஞையை நாம் அளக்கவோ, அணுகவோ, அறியவோ முடியாது “ என்கிறார்.
ஃபெடெரிகோ ஃபாகின் வீடியோ லிங்க்.
இந்த வீடியோவை எனக்குப் பகிர்ந்த சகோதரர் சபாபதி இதை ‘ தூய வேதாந்தம் ‘ ( Pure Vedantha ) என்று சொன்னார்.
இந்த வீடியோதான் இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கும் காரணம்.
குவான்டம் இயற்பியல் விஞ்ஞானிகள் பலரும் வேதாந்தம் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக அணுக்கரு ( nuclear ) மற்றும் குவான்டம் இயற்பியல் பணிக்காக அறியப்பட்ட ஜெர்மானிய இயற்பியலாளர் ஹான்ஸ்-பீட்டர் டர் ( Hans Peter Dúrr ) ” குவான்டம் இயற்பியல் பற்றி உரையாற்றும் போதெல்லாம், வேதாந்தத்தைப் பற்றிப் பேசுவதாகவே உணர்கிறேன் ” என்கிறார்.
ஷ்ரோடிங்கர் இதை ” மேற்கத்திய விஞ்ஞானத்தின் ஆன்மிக இரத்த சோகையை குணமாக்க கிழக்கிலிருந்து கொடுக்கப்பட்ட இரத்த மாற்றம் ( Blood Transfusion )” என்கிறார்.
குவான்டம் இயற்பியல் சொல்லும் சில :
பிரக்ஞை ( Consciousness ) மட்டுமே நிஜம்.
நாம் காண்கின்ற, பார்த்துணர்கின்ற இவ்வுலகம் நிஜமல்ல. அது மனதிலிருந்து எழுகிற முப்பரிமாணப் புறத்தெறிவு ( 3D projection ).
அணுத்துகள்கள் ஒன்றாய் இணைந்து கோள்கள், நட்சத்திரங்களைச் செய்து, பின்னர் பிரிந்து, சிதைந்து பிரக்ஞையிலேயே கலந்துவிடுபவை. ஒவ்வொருவரும் பிரக்ஞையின் அங்கம். பின்னர் பிரிந்து மீண்டும் பிரக்ஞையில் கலப்பவர்.
தனித்தன்மை ( Individuality ) என்பது மனம் செய்த மாயை.
எல்லையற்றதை ( infinity ), வரையரைக்குட்பட்ட கருவிகளால் ( finite mediums ) அறிய முடியாது.
இப்போது வேதாந்தத்தைப் பார்ப்போம்.
ஆதி சங்கரர் :
“ பிரம்மமே ஒரே உண்மை. “
“ ஜகம் மித்யை ” ( இதில் மித்யை என்பது அசத்தியமோ, பொய்யோ அல்ல. மாறிக்கொண்டே இருக்கிற, ஒரு சமயம் இருந்து, ஒரு சமயம் இல்லாது போகிற, பிரம்மத்திலிருந்து தோன்றி, பிரம்மத்திலேயே ஐக்கியமாகுகிற தோற்றம்.)
“ ஜீவன் பிரம்மத்திலிருந்து வேறுபட்டது ( தற்சார்புடையது ) அல்ல “
“ பிரம்மத்தை புலன்களால் அறிய முடியாது, ஏனெனில் புலன்களின் ஆற்றல் வரையறுக்கப் பட்டது. “
யோக வாசிஷ்டம் : ” இந்த உலகம் மனத்தால் தோற்றுவிக்கப்படும் மாயை “
கம்ப இராமாயணம் :
கம்பர் சுந்தர காண்டத்தில் இந்தப் பிரபஞ்சத்தை,
“ அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு எனப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறு பாடுற்ற வீக்கம் “ என்கிறார். அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு – மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இது போல்
பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குக்கிறது என்கிறார். இதே பாடலில் இராமபிரானை ‘ மறைகளுக்ககிறுதியாவார் ‘ எனக் குறிப்பிடுகிறார். மறைகளுக்கு இறுதி = வேதத்தின் அந்தம் = வேதாந்தம்.
நிசர்கதத்த மஹராஜ் : ” இந்த பஞ்ச பூதங்களும் நீ மட்டுமே. உன்னுடைய பிரக்ஞையிலிருந்தே இவை அனைத்தும் நடந்தன. ‘ தனி ‘ ( individual ) என்று ஒன்றும் இல்லை. நீ மட்டுமே இருக்கிறாய், மொத்த செயல்பாடும் நீ, பிரக்ஞை நீ “.
சுஜாதா சொன்னதற்கு ஒரு பதில் கிடைக்கிற மாதிரி இருக்கிறது. மேலும் ஸ்பிரிச்சுவாலிட்டியோடு ஸயின்ஸ், வேதாந்தத்தொடு விஞ்ஞானம் கை கோர்க்க முயல்கிறது என்பது தெரிகிறது.
ஆக வேதாந்தம், விஞ்ஞானம் இரண்டும் சொல்லும் விஷயம் :
நான் தனி அல்ல. பிரம்மத்தின் / பிரக்ஞையின் ( consciousness ) தோற்றம். தனித்தன்மை ( Individuality ) என்பது மனது செய்த மாயை. பிரம்மம் / பிரக்ஞை மட்டுமே உள்ளது.
நிதர்சனம் என்ன ? சாமான்யனான எனக்கு நான் யார் ? நான் என்ன ? இந்த உடம்பு. இதுதான் நகர்கிறது, அமர்கிறது, உறங்குகிறது, உண்கிறது. இதைத்தான் நான் பார்க்கிறேன். சரி அப்போது ரமண மஹர்ஷியின் துருப்புச் சீட்டுக் கேள்விக்கு பதில் என்ன ? “ நீ கனவுகள் அற்ற ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் ஏன் இந்த உடம்பு இல்லை? உலகம் இல்லை ? கடவுள் கூட இல்லை ? “
இந்த நானின் வாழ்க்கை எப்போது துவங்கியது ? பிறர் சொல்வதை விடுத்து என் அனுபவத்தில் இந்தத் துவக்கம் எப்போது நிகழ்ந்தது ? தன் நினைவுகளைத் துழாவி, தன் முதல் நினைவு எது என்று பார்க்கையில் 3 அல்லது 4 அல்லது 5, 6 வயதில் நடந்துதான் நினைவுக்கு வருகிறது. ஏன் நாம் பிறந்தது, பிறக்கும்போது நடந்தது நமக்கு ஞாபகம் இல்லை ? பசியாறியது, ஈரத்தில் நனைந்தது, முதல் குளியல், குப்புறக் கவிழ்ந்தது, தவழ்ந்தது….. ஏன் எதுவுமே நினைவில் இல்லை ? ஏன் என் முதல் நினைவு பிறந்ததிலிருந்து சிறிது காலம் கழித்தே இருக்கிறது ?
நான் ‘ மண்ணாங்கட்டி ‘ யாக இருக்கலாம், ‘ மகுடேஸ்வரனா’க இருக்கலாம், ‘ மார்கரெட் ‘ டாக இருக்கலாம். இந்தப் பெயர்கள் இந்த உடம்பைச் சுட்ட பிறரால் இடப்பட்ட குறி. இந்தப் பெயர்களைப் போலவே ‘ நான் ‘ என்கிற உணர்வும் நம்முள் விதைக்கப் படுகின்றது. இது என் அம்மா, இது என் அப்பா என்று எனதும். இது பூனை, இது காக்கா என்கிற பொருள் பற்றிய அறிவும். இந்த ‘ நான் ‘ உருவான பின்னர், கெட்டிப்பட்ட பின்னர் நடந்தவையே நமக்கு நினைவில் உள்ளன. இதற்கும் முன்பாக ஏதேனும் தீவிர அனுபவம் நினைவில் இருந்தால் அவ்வனுபவத்தினாலேயே, அப்போதே ‘நானு’ம் உருவாகி இருக்கும். இந்த ‘ நானே ‘ முதல் எண்ணம். இந்த நான் ஒரு எண்ணம் மட்டுமே.
நாம் நினைக்கிறோம், இந்த நான் தான் இயங்குகிறது என்று. அது ஒரு விதத்தில் நிஜம்தான். அது ஒரு விதத்தில்தான் நிஜம்.
ரமணர் “ எது பார்க்கிறதோ அதன் மீது மனதை அசையாமல் வைக்க முயல் “ ( ” Try to keep the mind unshakenly fixed on ‘ that ‘ which sees “) என்கிறார். ஜென் பெளத்தத்தில் இப்போது, இந்த நொடியில் எது பார்க்கிறது ? என்று பார் என்கிறார்கள்.
இந்தக் கண்களா ? மனம் வேறெங்கோ இருந்தால், கண்ணில் படுபவை அனைத்தையும் நாம் பார்ப்பதில்லையே. அப்போது மனமா ? மனம் பார்க்கிறது அல்லது பார்க்கவில்லை என்பது நமக்குத் தெரிகிறதே. அப்போது வேறொரு ஆற்றல் இந்த மனதையும் கவனிக்கிறது. I was lost in thought என்கிறோம். இந்த நான் வேறு, எண்ணங்களாலான மனம் வேறு என்பதால்தானே ?
எது பார்க்கிறதோ அதைத்தான் பிரம்மம் என்றும் பிரக்ஞை* என்றும், நனவு என்றும், விழிப்புணர்வு (awareness) என்றும், கடவுள் என்றும், அறிவு என்றும் விதம் விதமாகச் சொல்கிறோம். புத்தர் “ I am awareness “ என்றார். அவர் எந்த மொழியில் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. அதன் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் இதுதான்.
(* மனதின், புலன்களாலான, பிரக்ஞை அல்ல இந்த முற்று முழுமையான பிரக்ஞை, பூரண பிரக்ஞை. Absolute Consciousness. மனதளவிலாலான Consciousness ஸை பிரக்ஞை என்றும் absolute Consciousness ஸை
Awareness என்றும் சொல்லலாம். நான் awareness என்கிற வார்த்தையை ‘ அறிவு ‘ என்று கொள்கிறேன். அறிவு knowledge என்றும் நம்மால் பயன்படுத்தப் படுகிறது. Knowledge ஜை ‘ தகவல் அறிவு ‘ எனலாம். ஒருவர் இன்னொருவர் காலை மிதித்து விடுகிறார் என்கையில் வலியில் துன்புறும் மிதிபட்டவர், “ ஏன்யா ? அறிவில்லையா ? “ என்று கேட்கிறார். அதாவது awareness இல்லையா ? என்று. ‘ அறிதல் ‘ Being aware. இறைவனை ‘ அறிவு ‘ என்று வணங்குகிறோம். ‘ சுத்த அறிவே சிவம் ‘ என்கிறார் மஹாகவி பாரதி.)
பிரம்மம் பற்றிய இவை அனைத்தையுமே நான் என் அனுமானங்களாகக் கொள்கிறேன். மாத்திரை என்று சொல்வதால், மாத்திரை என்று எழுதிப் படிப்பதால் நோவு தீருவதில்லை. மாத்திரையை வாயில் போட்டு விழுங்கவேண்டும். அதுபோல் இவையனைத்தும் உண்மையாய் உணரப்பட வேண்டும். பிரம்மம் என்கிற வார்த்தை அது சுட்டும் பொருள் அல்ல. அவ்வார்த்தையால் சுட்டா விட்டாலும் அப்பொருள் இருக்கும்.
நம் நாட்டில் ஒருவருக்கு ஒருவர் தெரியப்படுத்திக் கொள்வதற்காகப் ( communication ) பயன்படும் இந்த பிரம்மம் என்கிற வார்த்தை, நம் இலக்கியங்களிலும், சாமான்ய மக்களிடையிலும் சாதாரணமாகப் புழங்கப் பட்டதே.
‘ பிரம்மம் ஒகடே ‘ என்று அன்னமையா சுந்தரத் தெலுங்கில் பாடினால், கன்னடத்தில் புரந்தரதாசர்,
‘ அல்லிடே நம்மனே,
இல்லி பந்தே சும்மனே “
( அங்குதான் என் வீடு, இங்கு சும்மா வந்தேன் ) என்கிறார்.
வள்ளுவர் பெருமான்
“‘மலர்மிசை ஏகினான்* மானடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் “ அதாவது
பிரம்மத்தை உணர்ந்தவர்க்கு இறவாமை உண்டு என்கிறார்.
(*பரிபாடல் – 8 டில் நல்லந்துவனார் பிரம்மனை ‘ மலர்மிசை முதல்வன் ‘ என்று சொல்கிறார்.
கோளறு பதிகத்தில், பிரம்மனை ‘ மலர்மிசையோன் ‘ என்கிறார் திருஞான சம்பந்த ஸ்வாமிகள். சேந்தமங்கலம் வேங்கடரமணையரின் அற்புதமான ‘ ரமண சத்குரு ‘ பாடலில் பிரம்மனை ‘ பங்கயத் திரு வாழ்வனும் ‘ என்று குறிப்பிடுகிறார் )
சரி என்னை, அதாவது பிரம்மத்தை தெரிந்து கொள்வது எப்படி ?
பிரம்மம் ஒன்று மட்டுமே உள்ளது என்பதால் அங்கு பார்க்கப்படும் பொருள், பார்க்கும் பொருள் ( object – subject, observed-observer ) என்று இரண்டு இல்லை. எனவேதான் ரமணர், ” To see God is to be God ” என்கிறார். கடவுளைப் பார்ப்பது என்பது கடவுளாய் இருத்தலே.
தர்மம், அர்த்தம், காமம் மோட்சம் என்பதை நாம் தமிழில் அறம், பொருள், இன்பம், வீடு என்கிறோம். ‘ என்னவொரு வேதாந்தமான பாஷை ‘ என்று ஜெயகாந்தன் வியந்த, நம் தமிழ் மொழியில் இந்த பிரம்மத்தை உணர்வதை, பிரம்மமே ஆவதை, பிரம்மமாய் இருப்பதை, முக்தி, மோட்சம் என்று அழைக்கப்படுவதை, ‘ வீடு பேறு ‘ என்றே குறிக்கிறோம்.
” நம்ம வீடு அவ்விடம்,
சும்மா வந்தோம் இவ்விடம். “
வேதாந்தமும், விஞ்ஞானமும் கூறுகின்றவற்றைக் கருதுகையில், நாம் உணர்வது :
இறவாமை நம் இலட்சியம் அல்ல;
நம் இயல்பு.
*******
நன்றி : ஃபெடெரிகோ ஃபாகின் வீடியோவைப் பகிர்ந்த சகோதரர் திரு சபாபதி, சங்கரர் மற்றும் வேதாந்தம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு உதவிய தகவல்களைப் பதிந்த சகோதரர்கள் திரு S. ராஜாராமன், திரு T. R. சந்திரசேகரன், கட்டுரையைப் படித்துக் கருத்துக் கூறிய சகோதரி திருமதி சுஜாதா சஞ்சீவி ஆகியோருக்கு.
