‘ரோஜா’
கிளைகளில் அறையப்பட்டு,
முள் கிரீடம் சுமந்து,
குருதித்துளி சூடிய
மொட்டுகள்
மூன்றாம் நாள்
மலர்ந்தெழுந்ததும்
முகமெல்லாம்
புன்னகை.
‘கடவுச்சொல்’
காதல் முத்தங்களா?
காதில் ரகசியமா?
தேன்துளிக்கான கடவுச்சொல்லா?
கடவுளின் சொல்லா?
ஒவ்வொரு மலரிடமும்
எதை கொடுத்து
மன்றாடுகின்றன
பட்டாம்பூச்சிகள்?
பனிமலர்
புறத்தில் மலர்ந்த யாவும்
இலைகள் உதிர்த்த பின்
இன்று
இடைவிடாத
பனிப்பொழிவு.
ஆனால்
அகம் மட்டும்
ஏதோவொரு
வசந்த காலத்துள்
உறைந்து போனதால்
அகவனத்தில் படிந்த
வெண்பனியெங்கும்
பொன்மலர்கள்.
‘இடைவெளி’
‘தண்டவாளங்கள் தலையணையல்ல’ என்று
மஞ்சள், நீலம், ஊதா, வெள்ளைப்பூக்களை
அணிந்த செடிகள்
அனுபவத்தால்
அதிர்ந்து கூவின
பக்கத்து
தண்டவாளத்தின் மீது
தலை சாய்த்தும்
தலை வைத்தும்
சிவப்பு மலர் சூடிய
சிறிய செடி
தனது சிவப்பால்
ரயிலை நிறுத்தும்
முயற்சியை தொடர
நள்ளிரவில் தடதடவென்று
ஓடிய ரயிலின்
ஒசை கேட்டு
உறக்கம் கலைந்து
கண்ட காட்சியில்
அருகருகே
இணையாமல் பயணித்த
இரு தண்டவாளங்கள்.
