Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

நற்றிணை

பளிங்கு செறிந்தன்ன பல்கதிர் இடையிடை
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழிகாட்டாய்
நற்கவின் இழந்த என் தோள்போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அரி கரி பொய்த்தலின் ,ஆகுமோ அதுவே?

-வெள்ளைக்குடி நாகனார்,நற்- 196

எவ்வளவு அழகிய பாடல்.

நீள்மதியம் ஏன் அவ்வாறே நில்லாமல் தேய்ந்து தேய்ந்து பின் வளர்கிறது. உண்மையைச் சொல்லாமல் மறைத்த காரணத்தால் பெற்ற சாபம். என்ன உண்மை? யாருக்குச் சொல்லாமல் மறைத்தது மதியம்? சாபம் பெறும் அளவு பெரிய தவறா?

ஒரு இளம் பெண்ணின் சாபம். அதுவும் காதலியான இளம்பெண்ணின் சாபம். காதலனைக் காணாமல் அவன் எங்கிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வழியில்லாத ,வேறு ஒருவரின் உதவியை நாட முடியாத கையற்ற நிலையில் இருக்கும் இளம் காதலியின் சாபம். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்குப் பின் வந்த சாபம்.

பெரிதாய் அவள் என்ன கேட்டு விட்டாள்,நிலவு செய்யமுடியாதபடிக்கு ? நிலவுக்கு எளிதான உதவியைத் தான் கேட்டாள். என் காதலனைக் காணவில்லை. அவனைக் கண்டுபிடித்துத் தா என்கிறாள். சரி,அவள் காதலன் யார் என்பது நிலவுக்கு எப்படித் தெரியும்? ஏன் தெரியாது,முன்பல நாள் இரவுக் குறியில் காதலர் தனித்து சந்தித்த போதெல்லாம் உடனிருந்த நிலவு தானே அது? பால் போல வெளிச்சம் காட்டி இரவைப் பகல் போலக் காட்டினால் காதலர் எவ்வாறு இரவில் இரகசியமாய்ச் சந்தித்தல் கூடுமென ,காதலி ,நல்லை அல்லை நெடுவெண்ணிலவே எனக் கடிந்து கொண்ட நிலவு தானே அது?

அதோடு,உச்சியினின்று உலகைப் பார்க்கும், ஊர் துயில் நேரத்தும்
தான் உறங்காது உற்று நோக்கும் நிலவுக்குத் தெரியாத ரகசியம் உண்டா? அது சொல்வதில்லை என்பதால்,அது அறியாத்து ஏதும் உண்டா? நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை என்பதை உணர்ந்த நிலவல்லவா அது? அது பேசத் தொடங்கினால் உலகம் தாங்குமா? ஆனால் இங்கே அவள் ரகசியம் எதையும் கேட்கவில்லையே.

வரைவிடை வைத்துப் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து போயிருக்கிறான். வருவேன் என்று சூளுரைத்துச் சென்ற பருவங்கள் கடந்து விட்டன. “ சென்ற இடம் காணேன்,சிந்தை வாடலானேன்,சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்” என மருகும் அவளுக்கு வழி ஏதும் தெரியவில்லை. காலம் கடந்து கொண்டே செல்கிறது.எந்த சேதியும் காதலனிடமிருந்து வருவதானத் தடயமே இல்லை. வேற்று வரைவு நேர்ந்து விடுமோ என்ற அச்சமும் அவளைக் கொல்கிறது.ஊர் துஞ்சு யாம்மும் ஓர்யான் மன்ற துஞ்சாதேனே என விழித்திருந்த படி மலையுச்சியில் மலர் உதிரும் ஓசையும் கேட்பதான கற்பனையில் துயில் கொள்ளாதிருக்கிறாள்.

முழு நிலவு காய்கிறது. ஒரு கணம் தன் துன்ப நிலை மறந்து அதன் அழகில் மயங்கி நிற்கிறாள்.செறிந்த பளிங்கு போன்ற அழகு.பல் கதிர் இடை இடை சேர்த்தது போன்ற குளுமையான ஒளி. பால் போன்ற அப்பொழுதே மலர்ந்த மலர் போன்ற பசு வெண் ஒளி. இந்த ஒளி தானே முந்தைய காலங்களில் காதலன் முகம் பார்த்து மகிழ்ந்திருக்க உதவியது என்ற பெருமூச்சும் அவளுள் எழாமல் இல்லை. கூடவே,எந்த இடரும் இல்லாமல் உச்சியில் அது வீற்றிருக்கிறதே என்ற உணர்வும் எழுகிறது. எவ்வளவோ உயரங்களில் தான் தேனீக்கள் அபாயம் ஏதுமில்லை என நினைத்து தேன் கூட்டை அமைக்கின்றன.ஆனால் மால்பு என்ற கயிற்று ஏணியைக் கொண்டு மனிதர்கள் எவ்வளவு சுலபமாக அதனைக் கவர்ந்து விடுகிறார்கள். பாவம் தேனீக்கள். ஆனால் நிலவை எட்ட மால்பு ஏது? எட்டாத உயரத்தில் அல்லவா அது வீற்றிருக்கிறது. தன் நிலையையும் அந்தப் பேதை நெஞ்சம் ஒரு கணம் நினைத்துப் பார்த்துப் பெருமூச்செரிகிறது. இத்தகைய பாதுகாப்பு தனக்கு உண்டா? அதைத் தருவதாகச் சொன்னவனையே காணவில்லையே. பத்திரமாக இருக்கும் உணர்வால் நிறை பெற்று மிளிர்கிறது மதியம். அவளுக்கு உடனே யோசனை தோன்றுகிறது. தன் மறை பிறர் அறியாதவாறு உதவும் மாண்பும் பண்பும் நிலவுக்கு உண்டே என்ற உறுதியும் தோன்றுகிறது. சிறு புன்னகையும் வெட்கமும் அவளிடத்தில் தோன்றுகின்றன. முன்னர் எத்தனையோ நாட்களில் உதவிய நிலவிற்குத் தாம் இதுவரை ஒரு நன்றி கூட உரைத்ததில்லையே,இப்போது உதவி மட்டும் கேட்பது எங்ஙனம் என்ற கூச்சமும் எழுகிறது.

எல்லாமும் அறிந்தது நிலவு தான்.பகல் விட இரவுக்கு ஆயிரம் கண்கள். அந்தக் கண்களின் ஒளியாக இரு்பது நிலவு மட்டுமே.நிலவு நினைத்தால் தனக்கு உதவ முடியும்.எல்லா ரகசியங்களையும் அறிந்த , மாண்பும் சான்றாண்மையும் கொண்ட நிலவு மட்டுமே தனக்கு உதவ இயலும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் அவள். அவன் வரக் காலம் தாழ்ந்ததென இவ்வளவு காலம் ஆற்றியிருந்தாள்.ஆனால் ,நாட்கள் மணல் மேட்டில் சரியும் மணலாய் உதிர உதிர,அவளுக்கு இப்போது தன் காதலன் காலம் தாழ்த்தவில்லை,தன்கண்ணில் அகப்படாமல் மறைந்துறைகிறான் என்ற ஐயம் எழுந்து விட்டது. அ்அப்படி மறைந்து ஒளிந்திருப்பவனையே என் கண்களில் காட்டித் தா எனக் கெஞ்சுகிறாள்.

ஆனால்,நிலவு மௌனத்தையே பதிலாகத் தந்தது.தெரிந்த உண்மையைக் கூறாது மறைத்தல் அறமா? அது பாவத்தின் பாற்பட்டதில்லையா? பொய் சாட்சி சொல்லுதல் பாவமெனில் ,உண்மை தெரிந்தவர் அதைச் சொல்லாமல் மறைப்பதும் பாவம் தானே?நிலவே,நீ அறியாத மந்தணம் ஏதும் இவ்வுலகில் இல்லை என்கையில், என்னை நீங்கி மறைந்து உறையும் என் தலைவன் எங்கிருக்கிறான் என்பதை எனக்கு நீ காட்டலாகாதா எனக் கேட்கிறாள். ஆற்றாமை மீதூர,தன் முந்தைய அழகுக் கோலத்தை நினைத்துப் பார்க்கிறாள். இத்தலைவனைக் கண்டு காதலில் வீழும் முன் நற்கவினோடு பொலிந்தவள் அவள். ஆனால் இன்று, பெருந்தோள்கள் மெலிந்து வாடி, அழகெல்லாம் தொலைந்த நிலையில் நிற்கிறாள். அழகை மீட்டு எடுக்க அவன் துணை வேண்டும் என மறுகுகிறது பேதை நெஞ்சு. மீண்டும் வானத்தைப் பார்க்கிறாள். பூரண அழகோடு பொலியும் நிலவு, இப்போது கோபத்தைத் தூண்டுகிறது.

இனி பதிலேதும் வராது என்பது தெரிந்து விட்டது.என்னைப் போலச் சிறுகச் சிறுகத் தேய்ந்தால் தான் என் நிலை உனக்குப் புரியும் நிலவே,நீயும் தேய் .தெரிந்த உண்மையை மறைத்தால் இதுவே தண்டனை என்பதை இவ்வுலகும் உணரும் வண்ணம் இந்தச் சாபமே உனக்கானது என மறுகுகிறாள். நிலவு தேயத் தொடங்குகிறது. ஆயினும் என்ன ,அவளுக்கு விடை சொல்வார் யார்?

Exit mobile version