Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

விதைகளின் பயணம்

மூலம் : பெத் கோடர்

தமிழாக்கம் : தீபா ராம்பிரசாத்

ஆரஞ்சு நிற நுனிகளைத் தவிர, கிட்டத்தட்ட பூமியைப் போன்ற புல்வெளிகள் நிறைந்த பகுதி வழியாக, பரந்த மலைகளின் மீது ஹஜர் இயந்திரத்தை இயக்கினாள். அவள் அடர்ந்த காடுகள் மற்றும் காற்றுடன் கூடிய பனிக்கட்டிகள் வழியாக பயணித்தாள்.

அவளது உடலின் நீட்சி போல் இருந்த இயந்திரம் ஒரு போதும் சோர்வடையாது, ஒரு விதை நெற்று (seed pod) தன் சரக்குகளை பாதுகாப்பதுப் போல அவளை சுற்றி இருந்தது.

இயந்திரத்தின் கால்களால் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளிலிருந்து தரவுகளை ஹஜர் மதிப்பாய்வு செய்தாள். அந்த பகுதியில் வளமான கலவையாக இருந்தது, ஆனால் விவசாயத்திற்கு போதுமான நைட்ரஜன் இல்லை.

அவள் சட்டைப் பையில் ஒரு நீல கல் இருந்தது. 

முன்பு ஒரு நாள் பூமியில், ஹஜர்க்கு ஆறு வயதாக இருந்தப் போது, அவள் தன் தந்தையிடம் ஒரு விதையைக் காட்டி “என்ன இது?” என்று கேட்டாள்.

சமையல் மேடை மீது அவளை அமர வைத்து, அவர் அவளின் மூக்கில் முத்தமிட்டார்.

“அது ஒரு பாக்ஸெல்டர் மேப்பிள் (Boxelder maple) விதை. இந்த மெல்லிய தோலுக்குள்ளே எப்படி அது கச்சிதமாக ஒரு காகித மேலங்கி போல் வைக்கப்பட்டிருக்கிறது பார்”

“இங்கே இது எப்படி வந்தது?”

விதைகள் காற்று மற்றும் தண்ணீரின் மூலம், கொட்டைகள் மற்றும் பழங்களின் போர்வைகள் மூலம், விலங்குகளின் சருமம் அல்லது அவற்றின் செரிமானப் பாதையில் பிசைந்து பயணப்பட்டு, பூச்சிகளால் நிலத்தடிக்கு இழுக்கப்பட்டு, அணில்களால் புதைக்கப்பட்டு, அழுத்தம் மற்றும் ஈர்ப்பு சக்திகளால் சிதறடிக்கப்படுகின்றன என்று அவள் தந்தை அவளிடம் கூறினார்.

கருப்பட்டி (Blackberry) செடிகள் விரிந்த தங்கள் தவழும் கொடிகளை பூமிக்குள் மூழ்கடிக்கிறது. தேங்காய்கள் கடல் மூலம் பயணித்து தூர கடற்கரைகளின் மணல்களில் முளைக்கின்றன.

டேன்டேலியன் விதைகள் (dandelion seeds) காற்றில் நடனமாடுகின்றன, அதே நேரத்தில் பாக்ஸெல்டர் மேப்பிள் (Boxelder maple) அதன் விதைகளை மெல்லிய இறக்கைகளில் தாவச்செய்து, மெதுவாக கீழே இறக்குகிறது.

ஹாஜர் இயந்திரத்தின் இறக்கைகளைத் தூண்டி, ஒரு குன்றிலிருந்து குதித்து, சுழன்று சுழன்று தரையைத் தொட்டாள். இயந்திரத்தின் கைகள் காற்றை சுவாசிக்கும் தன்மை மற்றும் வெப்பநிலையை சோதித்த பிறகு, வித்துகளைத் தேடின.

இயந்திரம் முன்னோக்கி சென்றது. அவள் மற்றவர்களிடமிருந்த குறுஞ்செய்திகளைப் படித்தாள். நதானியேல் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள ஒரு பாலைவனத்திலிருந்து வடக்கே சென்று கொண்டிருக்க, அதே நேரத்தில் டெனிசா பூமத்திய ரேகைக்கு அருகில் ஒரு நம்பிக்கைக்குரிய இடத்தைக்  கண்டுபிடித்தாள். அர்வா ஒரு புல்வெளி உயிரியலில் பூச்சிகள் பற்றிய கண்கவர் கணக்கெடுப்பை மேற்கொண்டாள். கீழிறங்கிவிட்டாதாகவும், ஆய்வு மேற்கொள்வதாகவும் வந்த சுருக்கமான குறுஞ்செய்தியைத் தாண்டி சுரயா குறித்து யாருக்கும் வேறெந்த தகவலும் கிட்டவில்லை – அவள் மோசமான நாட்களில் அமைதியாகிவிடுவது வழமை தான்.

எப்போது வேண்டுமானாலும் பூத்துவிடக்கூடிய ரகசிய சோகங்களை எல்லோரும் கொண்டிருந்தார்கள். யாருடைய பேச்சையுமே கேட்காத நாட்களைத் தவிர்ந்த நாட்களையும், கப்பலில் “கிளார் டி லூனின்” பாடல் ஒலிக்கும் நாட்களையும் தவிர்ந்த ஏனைய நாட்களில் தேபாஸியின் பேச்சை நதானியல் கேட்பதில்லை. அர்வாவிடம் ஒரு தேனீர் கோப்பை இருந்தது – வெளிர் பச்சை நிறத்தில், மீனால் அலங்கரிக்கப்பட்ட அதனை அவள் தனது இருப்பிடத்தில் மறைத்து வைத்திருந்தாள். கப்பலின் சிப்பந்திகள் ஒவ்வொருவரும் யாரையோ மறைத்தே வைத்தனர். அவர்கள் தங்கள் சோகங்களைப் பல வழிகளில் சுமந்தனர்: புகைப்படங்கள் மற்றும் கடிதங்கள் வாயிலாக அல்லது எழுதப்பட்ட செய்முறைகள் மற்றும் தைக்கப்பட்ட துணிகள் வாயிலாக அல்லது தேனீர் கோப்பைகள் மற்றும் துடைப்பங்கள் வாயிலாக அல்லது நீலக் கற்கள் மற்றும் உடைந்த பானைகள் வாயிலாக.

ஒரு அந்நிய சூரிய அஸ்தமனத்தின் கீழ் இயந்திரம் முன்னேறி சென்றது. பார்க்கவே  முடியாத அளவுக்கு இருளாக மாறியதும், ஹாஜர் இயந்திரத்தை நிறுத்தினாள். அவள் சட்டை பையிலிருந்த நீலக் கல்லை எடுத்துப் புரட்டினாள். அவள் பூமியை விட்டு வெளியேறும் முன் அவள் கையில் அந்த கல்லை மடித்து வைத்தபோது, மங்கலான பச்சை நிற தொப்பி பின்னால் சாய்ந்தது, விரல்களில் இலவங்கப்பட்டை வாசனை வீசியது. அந்த கல் அவரது தோட்டத்திலிருந்து தோண்டி எடுத்ததில் கிடைத்திருந்தது. வந்தனம் சொல்லும் இடத்தில், “அதற்கொரு புதிய இடம் பார்” என்ற வார்த்தைகளால் நிரப்பினார் அவர். இதைத்தான் அவள் பூமியிலிருந்து கொண்டு வந்தாள்.

இன்று, அந்த கல் அவளது விரல்களில் கரடுமுரடானதாக உணர்ந்தாள். அவள் தன் தந்தையைப் பற்றி நினைத்தாள், காலை உணவு செய்யும் போது வரும் கலப்பான் (blender) சத்தம், அவரது கிழிந்த தோல் காலணிகள், சமையலறை அலமாரியில் புவியியல் புத்தகங்கள் ஆகியவற்றை கற்பனை செய்தாள்.

இறுதியில் அந்த கல்லை கையில் வைத்தபடி உறங்கினாள்.

அவளது ஆய்வறிக்கைக்காக, ஹாஜர் கலிபோர்னியா பாலைவனங்களின் பறவை கூண்டு தாவரமான ஓனேதெரா டெல்டாய்டுகளின் (Oenothera deltoides) விதை பரவல் உத்திகளைக் கற்றாள்.

தாவரங்கள் இவ்வாறு பயணிக்கிறது : குன்றுகள் மாறும்போது, வேர்கள் வெளிப்படும். நிழல் உருகி, தாங்க முடியாத சூரியனின் ஒளியின் கீழ் தாவரத்தை விட்டுச்செல்கிறது. தாவரங்கள் வேர்களை அதன் மேல் சுருட்டிக்கொண்டு இறந்துவிடுகிறது. காற்றின் மூலம் தாவரங்கள் தொலை தூரம் இழுத்துச் செல்ல படுகிறது. மேலும் தாவரங்கள் அதற்கான இருப்பிடத்தைக் கண்டதும், விதைகள் விதைகிறது.

புதிய தாவரங்கள் உமியிலிருந்து வளர தொடர்கிறது, பீனிக்ஸ் பறவை போல் இந்த சுழற்சி தொடர்கிறது.

மூன்று இதழ்கள் கொண்ட மலர்கள் காற்றில் வளைந்தப்படி புல் போர்வையை சுத்தம் செய்ததில் இயந்திரம் வெளிப்பட்டது.

மண்ணின் அளவீடுகள் நன்றாக இருந்தன. குடிநீர்க்கு ஏற்ற நதியும் கிழக்கு பக்கம் காணப்பட்டது.

வாழக்கூடிய ஒரு மண்டலங்களில் பட்டியலில் ஒன்று கூடிவிட்டது.  ஹாஜர் மற்றவகளுக்கும் தகவல் அனுப்பினாள். புல்வெளியில் 

 நிலைத்திருக்கக்கூடிய ப்ளாஸ்டிக்குகளைக் கொண்டு, மண்ணைக் கொட்டி வீடுகள் கட்டப்படுவதாக ஹஜார் கற்பனை செய்தாள்.

அவள் இயந்திரத்திலிருந்து எழும்பினாள். முதல் முறையாக, அவள் முகத்தில் அந்த கிரகத்தின் காற்றை உணர்ந்தாள். காற்றின் மூலம் புல்வெளி மற்றும் ஈரமான மண்ணின் வாசத்தையும் உணர்ந்தாள். 

அவள் அருகில் ஒரு மரத்தைக் கண்டாள், அதன் விதைகள் பாக்ஸெல்டர் மேப்பிள் (Boxelder maple) விதை போல் தோற்றம் அளித்தது.

ஒரு முறை அவளின் தந்தை கூறிய விதைகளின் பயணம் நினைவில் வந்தது. வரண்ட பாலைவனங்கள் மற்றும் வளமான மண், வனப்பகுதிகள் வழியாக, பெருங்கடல்கள் மற்றும் ஆறுகள் வழியாக சென்டிமீட்டர்கள் அல்லது கிலோமீட்டர்கள் கணக்காக அவைகள் பயணிக்கின்றன. ஆனால், எல்லாமும் பிழைப்பதில்லை.

விதைகள் விழுந்து, நகர்ந்தும், தடுக்கியும், இனிமேல் பயணிக்க முடியாது என்ற கட்டம் வரும் வரை பயணிக்கின்றன. எங்கே பயணம் நிற்கிறதோ அந்த இடம் வீடாகிறது. அந்த இடத்தில் வேர்களை இறக்கி வளர தொடங்குகின்றன.

அவளது தந்தை அங்கிருக்க வேண்டுமென விரும்பினாள். விதைகள் பயணப்படவும், தழைக்கக்கூடிய இடங்களை நாடவும், தங்கள் முன்னோர்களை விட்டுவிட்டுப் பயணிக்கவும், அகண்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவும் விதிக்கப்பட்டிருப்பதாகத் தன் தந்தையிடம் அவள் சொல்ல விரும்பினாள்.

ஹாஜரின் சட்டைப் பையிலிருந்த நீலக் கல் நழுவி கீழே விழுந்தது. அந்த இடம் சரியானதாகப் பட்டது. ஏற்கனவே அதில் வித்து இருப்பதாகப் பட்டது. எத்தனை விதைகள் மண்ணுக்கு அடியில், வளரக் காத்திருக்கின்றனவோ?

அவள் அந்த கல்லை நெருக்கமாகப் பிடித்து, பின்பு மென்மையான பூமியில் புதைத்தாள்.

“Seeds Travel.”

Originally published in Nature

Reprinted in Small Wonders, February 2024

Podcast at Cast of Wonders, August 2024

Exit mobile version